
- கொரோனோ பரவலால்…
- கரூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா ரத்து
- கோவில் பரம்பரை அறங்காவலர் அறிவிப்பு
- பக்தர்கள் அதிர்ச்சி
கரூர் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஆகும், தமிழக அளவில் உள்ள மாரியம்மன் ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம் ஆகும். இந்த கோவிலில் வருடா, வருடம் வைகாசி மாதத்தில் ஒரு மாத காலம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கம்பம் போடுதல், பூத்தட்டு, மாவிளக்கு, அக்னிசட்டி, அலகு குத்துதல், கம்பம் ஆற்றில் விடுதல் போன்ற முக்கிய நிகழ்வால் கரூர் நகரமே திருவிழா கோலம் பூண்டிருக்கும். கம்பம் விடுதல் நிகழ்ச்சிக்காக மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அரசு சார்பிலும், மாவட்ட நிர்வாகம் சார்பிலும் அளிக்கப்படும்.

இந்நிலையில் கொரனோ 2 வது அலை பரவி வரும் இந்த சூழ்நிலையில் திருவிழாக்கள் கொண்டாட மாநில அரசு தடை விதித்துள்ளது. இதனை முன்னிட்டு கரூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
அதில் திருவிழா இந்த மாதம் 9ம் தேதி துவங்கி நடைபெற இருந்த திருவிழா கொரனோ பரவலை கருத்தில் கொண்டு இந்து அறநிலையத்துறை அறிவுறுத்தலின்படி நடைபெறவில்லை என்றும், இந்த கால கட்டத்தில் பொதுமக்கள் யாரும் கோவிலுக்கு வருகை தர வேண்டாம் என்றும், பக்தர்கள் தங்கள் வீடுகளில் மஞ்சள் நீர் வைத்த கும்பத்தில், வேப்பிளை சொருகி, இளநீர், மா விளக்கு, தேங்காய் பழம் வழிபாட்டினை, தயிர் சாத படையலுடன் பிரார்த்தனை செய்யுமாறு பரம்பரை அறங்காவலர் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டும் கொரனோவால் திருவிழா கொண்டாடப்படாத நிலையில் இந்த ஆண்டாவது நடைபெறும் என இருந்த கரூர் பொதுமக்களுக்கு திருவிழா ரத்து அறிவிப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.