
திருவாவடுதுறையில் 24வது குருமகா சன்னிதானத்தின் ஜென்ம நட்சத்திரவிழா நடந்தது.
திருவாவடுதுறையில் மிகப்பழமையான திருவாவடுதுறை சைவமடம் உள்ளது இந்த மடத்தின் தற்போதைய 24வது குருமகாசன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் ஜென்ம நட்சத்திரவிழா சமுக இடைவெளியோடு அரசின் கரோனா கட்டுப்பாடு விதிகளின்படி நடந்தது.

ஜென்ம நட்சத்திர விழாவை முன்னிட்டு சிவப்பிரகாச விநாயகருக்கு கணபதிஹோமமும்,பெரிய பூஜை மடம் ஆதீன குருமுதல்வர் நமச்சிவாயமூர்த்திகள் சன்னதியில் வழிபாடும் நடந்தது தொடர்ந்து குருமகா சன்னிதானத்தின் முன்னிலையில் ஒப்பிலாமுலையம்மை சமேத மாசிலாமணிசுவரசுவாமி கோயிலில் மகாருத்ரஹோமம் அபிஷேகம்,கோபூஜை, 62 மரக்கன்றுகள் நடும் திட்டம் அன்னதானம் ஆகியன நடந்தது.

மேலும் குருமகா சன்னிதானத்தின் அருளாணைப்படி ஜென்மநட்சத்திரவிழாவை முன்னிட்டு திருவிடைமருதுார் மகாலிங்கசுவாமி கோயில் ஊழியர்களுக்கும், ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் ஊழியர்களுக்கும் சுசீந்திரம், விக்ரமசிங்கபுரம், ராமேஸ்வரம், கருர், மதுரை, திருச்செந்துார், திருவானைக்காவல், கிளை மட ஊழியர்களுக்கும் கன்னியாகுமரி அய்யாவைகுண்டர் மண்டபத்தில் அன்னதானமும்,குடந்தை ரோட்டரி சார்பில் 115 குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவியும்,மண்ணச்சநல்லுார் பூமிநாதசுவாமி கோயில் ஊழியர்களுக்கும், சங்கரன்கோயில் புளியங்குடி, கடையநல்லுார், காசிதர்மம், முறப்பநாடு, திருக்குற்றாலம், மேக்கரை, செங்கோட்டை, திருநெல்வேலி, களக்காடு ஆகிய பகுதியில் உள்ள ஆதீன கிராம பணியாளர்களுக்கும் கொரோனா நிவாரணங்கள் வழங்கப்பட்டது.

அரசின் நடைமுறை கரோனா விதிகளின்படி நடந்த விழாவின்முடிவில் குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நாட்டு மக்கள் நோய் நெடியின்றி வாழவும் விரைவில் நோய் தொற்றில் இருந்து நாடு விடுபடவும் பிரார்த்தனை செய்து ஊழியர்களுக்கு பிரசாதம் வழங்கினார்