January 23, 2025, 5:57 AM
23.2 C
Chennai

கலைமகளில் வெளியான என் முதல் முத்திரைக் கதை: நிஜமனம்

2001 கலைமகள் தீபாவளி மலரில் நான் எழுதிய கதை.
இந்தக் கதையின் பின்னணியில் ஓர் உண்மைச் சம்பவமே உள்ளது. அப்படி நான் பார்த்து அனுபவித்த ஒரு சம்பவத்தை பெயர்களை மட்டும் மாற்றி, ஒரு கதையாக்கினேன். கலைமகளில் சிறுகதைகள் சிலவற்றை அவ்வப்போது எழுதியிருக்கிறேன். ஆனால், இதுதான் கலைமகளுக்காக நான் எழுதிய முதல் சிறுகதை. இந்தக் கதையில் வரும் காதர் என்ற பாத்திரம் இப்போது எப்படி இருக்கிறானோ தெரியாது! கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து மீண்டும் படித்துப் பார்த்தபோது, ஏனோ இதை இப்போது இங்கே பகிர வேண்டும் என்று தோன்றியது.
நம் ஒவ்வொருவருக்கும் உலக நிகழ்வுகளைப் பார்த்து கொதிப்படைந்த ஒரு மனம்  இருக்கும். ஆனால் அதையும் மீறி, நம் மண்ணுக்கே உரிய இயல்புடன் ஒரு கருணை மனமும் இருக்கும். இதை என்னில் நான் உணர்ந்து எழுதிய உண்மைச் சம்பவம் இது.
=======================
நிஜ மனம்
—————–
செப்.11. பயங்கரவாதத்தின் கொடூரத்தைப் பற்றி அலறிக் கொண்டிருந்தது உலகம். ‘எப்பேர்ப்பட்ட அமெரிக்காவே இப்படி ஆடிப் போயிடுச்சே!” குரல்கள் என் காதுகளில் ரீங்காரமிட்டன. டி.வி. முன் உட்கார்ந்தேன். தரைமட்டமாகிவிட்ட கட்டிடங்கள், அதிக உஷ்ணத்தை என் மனதில் ஏற்றிக் கொண்டிருந்தது.
மற்ற எல்லோரையும் போலவே எனக்கும் அந்த மத வெறியர்கள் மீது கோபம் கோபமாய் வந்தது. காஷ்மீர் தொடங்கி இஸ்லாமிய பயங்கரவாதத்தின் வலியை மும்பையிலும் கோவையிலும் நெல்லையிலும் என்று வரிசையாகக் கண்டுவிட்டதால், என் மனம் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தது….
குல்லாவையும் குறுந்தாடியையும் முட்டுக்கு மேல் ஏற்றிக் கட்டிய கைலியையும் கண்டபோதெல்லாம் என் கண்கள் சந்தேகப் பார்வை வீசியது…
நாட்கள் கழிந்தன. சென்னையிலிருக்கும் என்னைப் பார்க்க அப்பா வந்திருந்தார். வந்த கையோடு மறுநாளே ஊருக்குக் கிளம்பிவிட்டார்.
அன்று ஞாயிற்றுக் கிழமை. ஊர் வெறிச்சோடிக் கிடந்தாலும் பஸ் ஸ்டாண்ட் மட்டும் பரபரப்பாக இருந்தது. இரவு மணி எட்டு. அப்பாவை செங்கோட்டை பஸ்ஸில் ஏற்றிவிட்டு அவருக்கு வசதியான சீட்டாகப் பார்த்து உட்கார வைத்தேன். புழுக்கமாக இருந்தது. கீழே இறங்கி நின்றேன். பஸ் கிளம்பட்டும் என்று காத்திருந்தேன்.
அரக்கப்பறக்க மூன்று சிறுவர்கள் அந்த பஸ்ஸைப் பார்த்து ஓடி வந்தார்கள்.
“சார் இந்த பஸ் தென்காசி போகுமா?” என்ற சிறுவர்களின் கேள்விக்கு “ம்… போகும்… போகும்… ஏறிக்கிங்க..” என்றார் கண்டக்டர்.
வேகவேகமாக ஏறிய அம்மூவரில் ஒருவன், அப்பாவைப் பார்த்துக் கேட்டான்… “தாத்தா… நீங்க தென்காசி வரைக்கும் போறீங்களா?”
அப்பா ஒரு ‘உம்’ போட்டார்.
“டேய் காதர், இந்த சீட்ல உட்காருடா…” என்றான் அவன்.
அப்பா சீட்டுக்கு அடுத்த சீட்டில் பத்து பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க அந்தச் சிறுவன் காதர் வந்து உட்கார்ந்தான்.
காதரின் சூட்கேஸை கவனமாக மேலே வைத்தான் ஒருவன். அதற்குள் இன்னொருவன் அதை எடுத்துக் கொண்டே அப்பாவை நோக்கி, “தாத்தா இந்த சூட்கேஸை ரொம்ப ஜாக்கிரதையா பாத்துக்குங்க. இந்தப் பையன் தூங்கிடுவான். யாராவது எடுத்துட்டுப் போயிட்டா கஷ்டம்..” என்று சொல்லியவாறே, அப்பாவின் பெட்டியை ஒட்டி, அதை வைத்தான்.
கொஞ்சம் விவரமாகத் தெரிந்த ஒரு பையன் கண்டக்டரிடம் போய் டிக்கெட் வாங்கி வந்தான். வாங்கிய டிக்கெட்டை காதரிடம் கொடுக்காமல், நேரே அப்பாவிடம் கொடுத்தான். “தாத்தா இதை நீங்களே வெச்சிருங்க.. இவன் தொலைச்சிடுவான்” என்றான்.
அப்பா மறுப்பேதும் சொல்லவில்லை.
வேகமாக பஸ்ஸை விட்டு இறங்கிய ஒருவன், கடையை நோக்கி ஓடினான். அடுத்த ஐந்து நிமிடத்தில் கையில் உணவுப் பொட்டலத்துடன் திரும்பினான். காதரிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னான்.
கீழே நின்று கொண்டு இதையெல்லாம் நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அப்பாவைப் பார்த்துக் கேட்டேன்… “அப்பா… என்னவாம்?”
அப்பாவிற்கு இயல்பிலேயே எல்லோரிடமும் சிநேகமாய்ப் பழகும் சுபாவம். அதிலும் அவரிடம் அறிமுகமாகிற யாராயிருந்தாலும் சரி… “எலேய்.. நீ அவன் மகன்தானலே…” என்று தனக்குத் தெரிந்தவரைப் போல் கேட்பார். அவ்வாறு காட்டிக் கொள்வதில் அவருக்கு அவ்வளவு அலாதிப் பிரியம்.
இப்பவும் அப்படித்தான்… “ஒண்ணுமில்லடா… சம்பங்குளம் சாய்பு பையன்!” என்றார். காதர் என்னைப் பார்த்து புன்னகைத்தான்.
காதரைப் பற்றி தெரிந்து கொள்ள என் மனம் அலைபாய்ந்தது. இந்தப் பையன் ஏன் தனியாக ஊருக்குப் போகணும்? கூட வந்திருக்கும் பசங்க யார்? யோசித்தேன்.
பஸ் டிரைவர் சீட்டில் உட்கார்ந்தார். இரண்டு சிறுவர்களும் பஸ்ஸை விட்டு கீழே இறங்கினர். நான் மெதுவாக அவர்களிடம் பேச்சுக் கொடுத்தேன். ஒருவன் பெயர் யூசுப் என்றும், மற்றவன் மதன் என்றும் இருவரும் சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிந்தது. நான் காதரைப் பற்றி விசாரித்தேன்…
யூசுப் சொன்னான்… “அண்ணே… காதர் பயலோட அப்பாவுக்கு ரெண்டு பொண்டாட்டிங்கண்ணே.! மூத்தவங்க பையந்தான் காதரு. அந்த ஆளு… அதான் காதரோட அப்பா, இவன் அம்மாவ வூட்டவுட்டு தொரத்திட்டாரு. அப்பால அந்த அம்மா செத்துட்டாங்க… அதுக்கப்புறம் காதர் அவன் சித்திகிட்டதான் இருந்தான். அவுங்க சரியான ராட்சசி. ரொம்ப கொடுமைப்படுத்துவாங்க!”
மதன் இடைமறித்தான்.. “பக்கத்து வூட்டுக்காரங்கதான் பாவப்பட்டு எழும்பூர்ல இருக்கற குழந்தைங்க ஆஸ்பத்திரியில வேலைக்கி சேத்து விட்டாங்க… அவன் சித்தியும் அங்கதான் வேலை பாக்குது. காதர் வேலைக்கி சேந்து பத்து நாள்தான் ஆச்சி. அதுக்குள்ள நீ இங்க வேல பாக்கக்கூடாதுன்னு, சித்தி அவனைத் தொரத்தி விட்டுட்டுது. பாவம்ணே காதரு. அழுதுக்கிட்டிருந்தான். நாங்கதான் அவனைக் கூட்டியாந்து அவனோட தாத்தா ஊருக்கு அனுப்பிச்சிடலாம்னு நெனச்சி இங்க பஸ் ஏத்தி விட வந்தோம்” என்றான்.
“சரி.. காதருக்கு அவன் தாத்தா ஊருக்குப் போகிற வழி தெரியுமா?” நான் கேட்டேன்.
அதுவரை எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காதர் என்னைப் பார்த்து “சம்பங்குளம் போய்ட்டேன்னா எனக்கு தாத்தா வூட்டுக்குப் போகிற வழி தெரியும்” என்றான்.
“அதுசரி, சம்பங்குளம் தென்காசிலேர்ந்து 25 கிலோ மீட்டருக்கும் மேல இருக்குமே… அதுவும் பஸ் வேற அதிகம் கிடையாதே” என்று நான் சொல்லிக் கொண்டிருந்தேன்.
மதனும் யூசுப்பும் பதறிப் போனார்கள். “தாத்தா, இவன எப்படியாச்சும் சம்பங்குளம் பஸ்ஸில் ஏத்தி விட்டுடுங்க.. ப்ளீஸ்…” கெஞ்சினார்கள். அவர்களின் பரிதவிப்பு என் மனதை என்னவோ செய்தது.
“எலேய்… எனக்கு தென்காசி பஸ் ஸ்டாண்ட் டைம் கீப்பரை நல்லாத் தெரியும்லே. அவன்ட பத்திரமா ஏத்தி விடச் சொல்றேன்.. ஒண்ணும் கவலைப் படாதீங்க” தேற்றிக் கொண்டிருந்தார் அப்பா.
நான் கீழிருந்தபடியே.. காதரின் முதுகைத் தட்டிக் கொடுத்து “பாத்து ஜாக்கிரதையாப் போ.. வழியில் எங்கயும் இறங்கினா தாத்தாவோட சேந்துதான் இறங்கணும். என்ன!” என்றேன் கனத்த இதயத்துடன்!
பஸ் கிளம்பியது. யூசுப்பும் மதனும் டாட்டா காட்டினார்கள். “காதரை ஜாக்கிரதையா பஸ்ஸில் ஏத்தி விட்டுடுங்கோ” அப்பாவிடம் கூறினேன்.
அன்று இரவு கனவில் காதர் அடிக்கடி வந்து போனான். மறு நாள் இரவு அப்பாவுக்கு போன் செய்தேன். பிரயாணம் நல்லபடியாக இருந்ததா, வண்டி சரியான நேரத்தில் போய்ச் சேர்ந்ததா… பாவம் அப்பா என்ன செய்தாரோ… அப்பாவிடம் கேட்கவேண்டும்… வழக்கம்போல் மனதில் யோசனை ஓடிக் கொண்டிருந்தது. மறுமுனையில் அப்பா போனை எடுத்தார். எடுத்த வேகத்தில் அப்பாவிடம் கேட்டேன்… “அப்பா.. காதரை சம்பங்குளம் பஸ்ஸில் ஏத்தி விட்டேளா?”
===================
ALSO READ:  Thejas foundation arranged for a Gana and Jata parayanam in Chennai on Dec. 10th

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதக் கலவரத்தை தூண்டும் திமுக.,? இந்து முன்னணி கண்டனம்

தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டுகிறதா திமுக. இன்று கேள்வி எழுப்பி, திருப்பரங்குன்றத்தில் திமுக...

கோமியம்… கோமூத்ரா… இன்னா மேட்டரு பா!

Amazon போன்ற பல இணையதளங்களில் கோமூத்ரம் விற்பனை செய்யப்படுகிறது.

விக்கிரமங்கலம் அங்காள ஈஸ்வரி கருப்புசாமி கோவில் மகா கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக ஏற்பாடுகளை திருப்பணிகுழு மற்றும் விக்கிரமங்கலம் எட்டூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

பஞ்சாங்கம் ஜன.21- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்!

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திர பொருளை உபதேசம் செய்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த முருகன் மந்திரத்தை கேட்டுவிட்டார்.