மயிலாப்பூரில் இருக்கும் ஸ்ரீமாதவப் பெருமாள் கோயிலில் அருளும் மாதவரை ஸேவித்திருக்கிறீர்களா? அப்படி ஸேவித்திருந்தால் அப்படியே அசந்துபோவீர்கள். அவ்வளவு அழகு! ஸ்ரீமத் ராமானுஜர் தன் சிஷ்யர்களுக்கு எப்படி அர்ச்சையில் ருசியை உண்டாக்கினாரோ அதுபோல், தன்னை வந்துதரிசித்தவர்களுக்கு தானாகவே அர்ச்சையில் ருசி ஏற்படுமாறு செய்பவர் இந்த மாதவப் பெருமாள்.
உண்மையில் இவர் அழகிய மணவாளர்தான்! இவர் விக்ரஹ அழகைப் போன்று வேறு எங்கும் காண முடியாது. திவ்ய தேச எம்பெருமான்கள் உள்பட பல பெருமாள்களை ஸேவித்திருக்கிறேன். இவரைப் போன்ற பெரும் உருவம், திருத்தமான முகம், அழகு கொஞ்சும் கண்கள், புன்னகை பூக்கும் வதனம் என எல்லாப் பொருத்தமும் அமைந்த விக்ரஹத்தை வேறெங்கும் பார்க்க முடியாது.
அர்ச்சையில் உண்டான ருசியால், அடியேனும் சிறு வயதில் பெருமாள் விக்ரஹத்துக்கு கண் மை இட்டு, வதனத்துக்கு குங்குமச் சாயம் பூசி அழகு பார்த்து ரசித்திருக்கிறேன். இப்போதான் கணினி இருக்கே. அதான், ஒரு 20 வருடங்கள் பின்னோக்கிப் போய், இந்த மாதவப் பெருமாளுக்கு கண் மையும் உதட்டுச் சாயமும் பூசி விட்டேன். என்னமாய் ஜொலிக்கிறார் பாருங்கள் இந்த மாதவர் !?