வியாழன், அக்டோபர் 25, 2007
கோவை ‘சிறை’ வாசியின்(வாசகனின்) மடல்.
“மும்மைசால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தம்ர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தை, தானே
இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை, “இராமன்” என்னும்
செம்மைசேர் நாமம் தன்னை, கண்களின் தெரியக் கண்டான்!”
கோவைச்சிறை * 23.08.2006 புதன்
பேரன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய, இராஜபாளையம் கம்பன்கழகப் பொதுச் செயலாளர் அய்யா உயர்திரு. என். எஸ். முத்துகிருஷ்ணராஜா அவர்களுக்கு,
கோவைச் சிறைவாசி மு. ஏகாம்பரம் வணக்கம் கூறிப் பணிவுடன் எழுதும் நன்றி மடல்.
எனது கடித வேண்டுகோளினை ஏற்றுத் தாங்கள் பரிவுடன் கூரியர் அஞ்சலில் அனுப்பித் தந்த
1. கம்பனின் வாழ்வியல் நெறிகள்
2. இரமனைத் தரிசிப்போம்
3. சரணடைவோம்! –
ஆகிய மூன்று நூல்களும் நேற்று 22. 08. 2006 அன்று கிடைக்கப் பெற்றேன்.
தங்களுக்கும் தங்களின் கம்பன் கழகத்திற்கும் எங்களின் மனமார்ந்த நன்றியினைக் காணிக்கையாக்கிப் பெருமகிழ்வு கொள்கிறோம்.
இராமாயணம் முழுமையும் உள்ள 6 காண்டங்களில் இராமபிரானின் நிலைகளையும் செயற்பாங்கினையும் கற்றுணர்ந்த 6 ஆய்வாளர்களின் கட்டுரைகளின் வாயிலாகத் தொகுத்து அளித்துள்ள பாங்கு மிக நேர்த்தியாக உள்ளது.
இராமபிரானின் பண்புநலன் வழியே கதை முமமையும் சுருக்கித் தரப்பட்டுள்ளது. ஆங்காங்கே கம்பநாடனின் உயரிய கவிதை வரிகள் தரப்பட்டது.மேலும் கதை முழுமையும் கம்பனின் சொர்சித்திரம் வாயிலாகப் படித்து இன்புற வேண்டும் என்ற ஆவலையும் வேட்கையையும் தூண்டுகிறது.
சிறைவாழ்வுக்கும் இராமாயணத்திற்கும் ஒருவகையில் தொடர்பு உண்டு என்றுதான் ஆயுத்தண்டனை (எ) ஜென்ம தண்டனை பெற்றவர்கள் நம்புகிறார்கள்; நம்புகின்றோம்.
இராமனின் கானகவாசம் 14 ஆண்டுகள்; பாரதத்திலே பாண்டவரின் கானகவாசமும் 14 ஆண்டுகள் – இந்தியாவில் ஆயுட் தண்டனைச் சிறைவாச காலமும் 14 ஆண்டுகளே!
2
‘ஆழிசூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ போய்
தாழிரும் சடைகள் தாங்கித் தாங்களும் தவம் மேற்கொண்டு
பூழிவெங் கானம் நண்ணிப் புண்ணிய துறைகள் ஆடி
ஏழிரண் டாண்டின் வா என்றியம்பினன் அரசன் என்றாள்!’
இத்தகு ஏழிரண்டாண்டு கானக வாசத்தைத்தான் பாரதத்தில் பஞ்ச பாண்டவர்களும் பெற்றனர். அத்தகைய மறைவு சிறைவாழ்க்கையில் உள்ள எங்களுக்கு இராமாயணமும், மஹாபாரதமும் மிகவும் பிடித்த காப்பியங்கள் ஆகிவிட்டதில் வியப்பேதுமில்லை.
சர்வ வல்லமை பெற்ற கடவுளர்களே மானிட அவதாரம் எடுத்து பூமியில் பிறக்கும்போது பட்ட கஷ்டங்களும், வேதனைகளும் எவ்வளவு? எத்தகையது! என்பதை நினைத்துப் பார்க்கும்போது எங்களின் இந்த சிறைவாசம் தூசுக்குச் சமானமாகும் என்ற ஆறுதலும் தேறுதலும் அவற்றைப் படிக்கும்போது எங்களுக்கு ஏற்படுகிறது.
பாரத கதாபாத்திரப் படைப்புகளை விட இராமாயண பாத்திரப் படைப்புகள் – அதிலும் குறிப்பாகத் தமிழில் கவிச் சக்கரவர்த்தி கம்பனின் கண்ணோட்டத்தில் மிகவும் உன்னதமான நிலையிலும், முறையிலும் காட்டப்பட்டுள்ளதாக அறிகிறோம். சுவாமி விவேகானந்தரும் கூட இதே கருத்தையே சீதையையும், இராமனையும் நமது பாரத கண்டத்தின் அபிபந்த இந்து கலாச்சாரத்தின் பிரதிநிதிகளாகப் பின்பிற்றி ஒழுகிட வேண்டும் என்று தமது நூலில் பல இடங்களில் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.
மகன், மாணவன், கணவன், சகோதரன், சான்றோன், நண்பன், சக்ரவர்த்தித் திருக்குமாரன், மாவீரன், மன்னிக்கும் மாதவன் – என பல்வேறு முகங்களாய் விரிந்து காவிய முழுவதும் இராமன் காட்சி தருகிறான்!
கம்பனின் தத்துவக் கருத்துக்களும், உவமைகளும் அற்புதமாக பொருத்தமாக அமைந்துள்ளது. இலக்குவனிடம்,
“நதியின் பிழையன்று நறும்புனலின்மை; அற்ற
பதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழையன்று, மகன் பிழையன்று மைந்த!
விதியின் பிழை! நீ இதற்கென்னை வெகுண்டதென்றான்!”
எனும் இராமபிரான் கூற்று வரிகள் எம் போன்றோருக்கு மிகுந்த ஆறுதலையும் தேறுதலையும் தருவனவாகும்.
இதே கவிதை வரிகளை கவிஞர் கண்ணதாசன்,’தியாகம்’ என்னும் திரைப்படத்திற்கான பாடலில்
“நதி வெள்ளம் காய்ந்துவிட்டால், நதி செய்த குற்றம் என்ன?விதி செய்த குற்றம் அன்றி வேறு ஏதம்மா?…
என்று எடுத்தாண்டு இருக்கிறார்.
(பாடலின் முதல்வரி: ‘நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு – ஒன்று மனசாட்சி- ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா என்பது)
3
இதனையே நகர்நீங்கு படலத்தில் வசிட்டரின் வாய்மொழியாக,
“சூழ்வினை நான்முகத்து ஒருவன் சூழினும்
ஊழ்வினை ஒருவரால் ஒழிக்கற் பாலதோ?- என்றும்
நல்தவமுனி பரத்துவாசன் – வழி வனம் புகு படலத்தில் ‘அந்தோ! விதி தருநனை’ என்பான் இற்றது செயல் உண்டோ கிளி? என இடர் கொண்டான்’ – என்றும்
சடாயூ இராமனைப் பார்த்து வருத்தத்துடன்,
‘அதிசயம் ஒருவரால் அமைக்கல் ஆகுமோ?
துதி அறு பிறவியின் இன்ப துன்பம் தான்
விதிவயம் என்பதை மேற்கொளாவிடின்
மதி வலியால் விதி வெல்ல வல்லமோ?
எனும் கம்பனின் வரிகள் துயருறுவோர்க்கு அவன் தடவும் அருமருந்து!மனக் காயங்களுக்கு இதமான இன்பமளித்து ஆற்றுப்படுத்துவது.
பேராசிரியை இளம்பிறை மணிமாறன் அவர்கள்,
“There is a Divinity that shapes our ends..”
என்னும் ஷேக்ஸ்பியரின் கூற்றையும்
‘Heaven from all creatures hides the book of Fate’
என்ற அவரின் மற்றுமோர் கவிதை மூலமும்,
கெதேவின்
“All is created and goes according to order – yetover our life time rules an uncertain Fate!’
என்பதையும் எடுத்தியம்பி … இறுதியிலே,
‘Fate is the friend of the Good,
the guide of the wise,
the tyrant of the foolish
the enemy of the bad…’
எனும் W.R ஆல்ஜெர் எனும் அறிஞனின் கருத்தோடு ஒப்பிட்டு ‘கம்பனின் வாழ்வியல் நெறிகள்’ நூலில் மிக அழகாக விளக்கியுள்ளார்.
இத்தகு நூல்களை இளமையிலே படிக்கும் பாக்கியம் கிடைத்திருந்தால் நாங்கள் ஒருவரும் சிறை புகுதற்கான சந்தர்ப்பமே அமைந்திருக்காது என்பது உறுதி. எனினும், சிறைவாசத்தின் போதாவது தங்களின் உதவியினால் இத்தகு அரிய நூல்களைப் படித்துணரும் பாக்கியம் கிடைத்ததற்காக கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம்.
வாழ்வினில் ஒவ்வொரு மாந்தரும் செய்யத்தக்கவை என்ன? செய்யத்தகாதவகைகள் என்ன? எனும் அரிச்சுவடியை விளக்குகிறது.
4
அரசு அளித்த சலுகையால் நாங்கள் பலரும் கோவை பாரதியார் மற்றும் சென்னைப் பல்கலைக் கழகங்களில் அஞ்சல்வழி தொலைதூரக் கல்வியில் பல்வேறு பட்ட வகுப்புகளில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கிறோம். அதில் நாங்கள் 20 பேர் சென்னைப் பல்கலையில் B.Lit எனப்படும் ‘தமிழ் இலக்கியம்’ பாடத்தை தேர்ந்தெடுத்து தற்போது மூன்றாம் (இறுதி) ஆண்டுத் தேர்வுகளை எழுதியுள்ளோம்.
அதில் இரண்டாம் ஆண்டில்,” காப்பியங்கள் சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள்”- எனும் பாடத்தில் கம்பராமாயண – சுந்தர காண்ட ‘சூடாமணிப் படலம்’ பாடப்பகுதியாக வந்திருந்தது. அதிலே இடம் பெற்ற ‘சொல்லின் செல்வன் அநுமன் – சீதாப்பிராட்டியார்’ இடையே அசோக வனத்தில் நடைபெற்ற உரையாடல் கவிச் சக்ரவர்த்தியின் காவிய வரிகளின் வழியே படித்தறியும் பாக்கியம் கிடைத்தது. அ·தே கம்பனை மேலும் மேலும் அறிந்திட வேண்டுமென்ற வேட்கையை தூண்டியது என்பதனை மிக்கப் பணிவுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.
தாங்கள் தற்போது மனம் உவந்து அனுப்பித் தந்த மூன்று நூல்களும் முத்தானதும் சத்தானதுமாக உள்ளது. இங்கு படிப்பும் எழுத்துமே எங்களுக்கு நம்பிக்கையும் உற்சாகத்தையும் தந்து வேதனைகளை மறக்க உதவுகின்றன. நான்கு சுவர்களுக்கு மத்தியிலே ஆண்டுக்கணக்காகஅடைபட்டு, தவிக்கும் எங்களுக்கு தங்களின் இராஜபாளையம் கம்பன் கழக வெளியீடுகள் மற்றும் இதர இலக்கிய நூல்களையும் அனுப்பித் தந்தால் மிகுந்த உதவியாயிருக்கும் என நம்புகிறோம்.
இத்தகு உயரிய கைம்மாறு கருதாத ஞானக்கொடை நல்கும் கம்பன் கழகப் புரவலர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அங்கம் பெற்றுள்ள அங்கத்தினர் ஆகிய உங்கள் அனைவருக்கும் எமது சிரம் தாழ்த்திக் கரம் கூப்பிய நன்றிகளைச் சம்ர்ப்பிக்கின்றோம்.
தாங்கள் அன்புகூர்ந்து அனுமதி ஈந்தால் தொடர்ந்து தங்களுக்கு கடிதங்கள் எழுதியனுப்பிட ஆவலாயுள்ளேன்.
மற்றவை தங்களின் அன்பான பதில் பார்த்து.
இவண்,
தங்களன்புச் ‘சிறை’ வாசகன்’
மு. ஏகாம்பரம்
(மற்றும் நண்பர்கள்)
25.08.2006