spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

HomeNewsவீரன் வாஞ்சிநாதன்

வீரன் வாஞ்சிநாதன்

- Advertisement -
vanchi statue2 1
vanchi statue2 1

வீரன் வாஞ்சிநாதன்

– கட்டுரை: செங்கோட்டை ஸ்ரீராம்.  

சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு ரயில் பயணம் செய்திருக்கிறீர்களா? திருநெல்வேலிக்கு சற்று முன்னால், மணியாச்சி என்றொரு ரயில் நிலையம் வரும். இப்போது உறக்கத்தின் பிடியில் அமைதியாக இருக்கும் அந்த நிலையம், சென்ற நூற்றாண்டில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு வீர வரலாற்றைத் தன்னுள்ளே கொண்டு, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு அறைகூவல் விட்ட ஒரு ரயில் நிலையமாகத் திகழ்ந்தது.  

திருநெல்வேலியிலும் அந்த மாவட்டத்தின் இன்னும் சில பகுதிகளிலும், குறிப்பாக வீரகேரளம்புதூர் போன்ற ஜமீன் தொடர்பான சில இடங்களில் வரவேற்பு வளைவுகள் அழகு காட்டி நம்மை வரவேற்கும். அவை பார்ப்பதற்கு சாதாரணமான கல் கட்டிடம்போல் தோன்றினாலும், அதனுள்ளும் ஒரு செய்தி அடங்கியிருக்கிறது. மணியாச்சி ரயில் நிலையத்திற்கும் இந்த வரவேற்பு வளைவுகளுக்கும் ஒரு தொடர்பு உண்டு.

அது – வீர இளைஞர்களின் சுதந்திர தாகத்தால் எழுந்த தொடர்பு.   இந்த வரவேற்பு வளைவுகளில் ஒரு செய்தி காணப்படும். – ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பிரிட்டிஷ் காலனியின் ஏக சக்ரவர்த்தியாக முடிசூட்டி, அவர் இந்தியாவுக்கு வருவதை வரவேற்று, ஜமீனின் ராஜவிசுவாசத்தை வெளிப்படுத்தும் வகையில் கட்டப்பட்ட வரவேற்பு வளைவு என்பதுதான் அந்தச் செய்தி.

இதற்கும் மணியாச்சிக்கும் என்ன தொடர்பு? மணியாச்சி ரயில்நிலையத்தில் அப்போதைய திருநெல்வேலி கலெக்டராக இருந்த ஆஷ்துரையை சுட்டுக் கொன்றுவிட்டு, அங்கிருந்த கழிப்பறைக்குள் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட வாஞ்சிநாதன் என்ற வீர இளைஞனின் சட்டைப் பையில் இருந்த கடிதம் ஒரு செய்தியைச் சொல்லும்.  

“மிலேச்ச இங்கிலீஷ்காரர்கள் நம் பாரத நாட்டைக் கைப்பற்றியதோடு, நம் இந்துக்களின் சநாதன தர்மத்தை அழிக்கின்றனர். ஒவ்வொரு இந்தியனும் வெள்ளையனை வெளியேற்றி ஸ்வராஜ்யத்தையும், சநாதன தர்மத்தையும் நிலைநாட்ட முயன்று வருகிறான். ராமன், கிருஷ்ணன், சிவாஜி, அர்ஜுனன் முதலியோர் முன்பு தர்மம் வழுவாது எல்லா மதத்தினரும் போற்றும்படி இந்த நாட்டை ஆண்டார்கள். ஆனால் இப்போது பசுமாட்டை அடித்து அதன் இறைச்சியைத் தின்னும் ஐந்தாம் ஜார்ஜ் என்ற மிலேச்சரை இந்தியாவின் சக்ரவர்த்தியாக முடிசூட்டப் போகிறார்களாம். 3000 சென்னை ராஜதானியர்களை சேர்த்திருக்கிறோம். ஐந்தாம் ஜார்ஜ் இந்தியாவில் காலடி எடுத்து வைத்ததும் அவரைக் கொல்ல சபதம் செய்திருக்கிறார்கள். அவர்களுடைய எண்ணத்தைத் தெரிவிக்கும் வகையில் அவர்களில் கடையனாகிய நான் இஆன்று இந்தச் செயலைத் துணிந்து செய்து முடித்தேன். இதுவேதான் இஆந்துஸ்தானத்திலிருக்கும் ஒவ்வொருவருடைய கடமையாகக் கருதவேண்டும்.
இப்படிக்குஆர்.வாஞ்சிஐயர்,
செங்கோட்டை.  

vanchinathan
vanchinathan ஓவியம் ஜெபி ஜெபிரபாகர்

ஆம்! ஒருபுறம் தங்கள் சுயநலன்களுக்காக, பிரிட்டிஷ் காலனி அரசைத் துதி பாடி ஒரு கூட்டம் இருந்த போது, தங்கள் சொந்த பந்தங்களைத் துறந்து, வாழ்வை இழந்து, ஒவ்வொரு கணமும் அஞ்சியஞ்சி வாழ்நாட்களைக் கழித்த தேசபக்த இளைஞர்களும் இங்கேதான் இருந்தார்கள். இந்த இருபிரிவினரின் எண்ணங்களையும் வெளிப்படுத்துபவைதான் இந்த இரு செய்திகளும்! சுயநலவாதிகள் காலத்தால் காணாமல் போய்விடுவார்கள்.

ஆனால் செயற்கரிய செயல் செய்த அந்த தேசபக்த இளைஞனைத்தான் நூறாண்டுகள் கடந்தும் இன்றும் நாம் நினைவில் கொண்டுள்ளோம். அந்த இளைஞனின் வீர வரலாற்றை சிந்தித்துப் பார்ப்போம்..   சங்கரன் என்றால் ‘நலம் செய்பவன்’ என்று பொருள். வாஞ்சியின் இயற்பெயரும் சங்கரநாராயணன் என்பதுதான்! ஆனால் வாஞ்சிநாதன் என்ற பெயரால் சிறுவயது முதல் அழைக்கப்பட, அதுவே அவருக்கு நிலைத்த பெயராகிவிட்டது.

தினந்தோறும் உலக நலனையே வேண்டி தியானிக்கும் வகுப்பைச் சேர்ந்த வாஞ்சிநாதன், கலெக்டர் ஆஷ் துரையை ஏன் சுட்டுக்கொல்ல வேண்டும்? அவன் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன?

இதற்கான விடைகளைத் தெரிந்து கொள்ள நாம் நூறு வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வுகளை அலசிப்பார்க்க வேண்டும்.  

சூரத் காங்கிரஸ் மகாநாட்டிற்குப் பிறகு காங்கிரஸ் செயல்பாடுகளில் இரண்டு நிலைப்பாடுகள் தோன்றின. ஆங்கிலேயர் சொன்னதைச் செய்து நல்ல பிள்ளை பெயரெடுத்து ஆட்சி செய்ய எண்ணம் கொண்ட மிதவாத அமைப்பு ஒன்று. மற்றொன்று, ஆங்கிலேயரை இந்த நாட்டைவிட்டே துரத்தி சுயராஜ்யம் நிறுவுவது. மராட்டிய வீரர் திலகர் சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று முழங்கியது இந்தச் சிந்தனையினால்தான்!

ஒருமுறை வாஞ்சிநாதன் வக்கீல் ஒருவரைச் சந்தித்தபோது இக்கருத்தை வெளிப்படுத்துகிறான். “ஆங்கிலேயரை எதிர்த்து நிற்காதே. அது நெருப்போடு விளையாடுவதற்கு சமம்” என்று எச்சரிக்கிறார் அந்த வக்கீல். எந்தக் கஷ்டத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த அவன், தான் இம்மாதிரியான முடிவுக்கு வரக் காரணமாக அமைந்த விஷயத்தை அவரிடம் வெளிப்படுத்துகிறான்.  

“சூரத் காங்கிரஸ் மகாசபைக்குப் பின், காங்கிரஸ்காரர்களில் மிதவாதிகள் எதையுமே கெஞ்சிக் கூத்தாடிக் கேட்கும் பயங்காளிகளாக இருந்து வருகிறார்கள். இவர்கள் கோழைகள்! ஆனால் என் சங்கத்தார்கள் மிதவாதிகளிலிருந்து மாறுபட்டு துணிச்சலோடு, தேசத்தை ஆளுகிறவர்களுக்கு விரோதிகளாகி, தங்கள் சுயபலத்தையும் ஸ்வரூபத்தையும் காட்டி, இந்தியாவை உத்தாரணம் செய்து, பிறருக்குப் பாடம் கற்பிக்கவே இப்படிப்பட்ட தீர்மானம் செய்திருக்கின்றோம்” என்பது வாஞ்சிநாதன் தரப்பு சித்தாந்தம்.  

இதற்காக இவர்கள் உருவாக்கிய சங்கம்தான் பாரதமாதா சங்கம். இந்த சங்கத்தின் குறிக்கோள், பாரத தேசத்தின் ஒட்டுமொத்த இளைஞர் சக்தியை திரட்டி, ஒரே நாளில் நாடுமுழுதும் புரட்சியை ஏற்படுத்தி ஆங்கிலேயர்களை ஆயுத பலம் மூலம் அடிபணிய வைத்து நாட்டை விட்டே விரட்டுவது என்பதுதான்!

இதற்காக அவர்கள் முன்மாதிரியாக எடுத்துக் கொண்டது, சிப்பாய் கலகம் என்று ஆங்கிலேயர்களால் சித்திரிக்கப்பட்ட 1857 இல் நடந்த முதல் சுதந்திரப் போராட்டம்தான்! அது போன்றதோர் கிளர்ச்சியை நாடு முழுதும் ஏற்படுத்தும் திட்டத்துடன், 20 வயதே ஆன எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி, வாஞ்சிநாதன் போன்ற இளைஞர்களால் கிராமம் கிராமமாகச் சென்று ரகசியப் பிரச்சாரம் மூலம் தென்மாவட்டங்களில் பரந்த அளவில் அமைக்கப்பட்ட அமைப்புதான் பாரதமாதா அசோஷியேஷன்.  

ஒருபுறம் வ.உ.சி, சுப்பிரமணிய சிவா போன்றோரால் சுதேசப் பிரச்சாரத்தில் அமர்க்களப்பட்ட திருநெல்வேலிப் பகுதி, மறுபுறம் இந்த பாரத மாதா சங்க உறுப்பினர்களின் தீவிர பிரச்சாரத்தினாலும் அமர்க்களப்பட்டது. இந்த பாரதமாதா சங்கத்திற்கு மூளையாக இருந்து செயல்பட்டவர்கள், எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரியும் செங்கோட்டை வாஞ்சிநாதனும் ஆவர்.

அவர்களுடைய ரகசிய உத்தரவுகளின்படி பல்வேறு நடவடிக்கைகள் திருநெல்வேலி பகுதியில் நடந்து கொண்டிருந்தன.

தென்காசி மடத்துக்கடை சிதம்பரம்பிள்ளை வீட்டில் பாரதமாதா சங்கத்தின் ரகசியக் கூட்டம் நடைபெறும். சங்கத்தின் தீவிரமான உறுப்பினர்கள் வீட்டின் உள்ளே இருக்க, ரகசியக் கூட்டம் தொடங்கும். கூட்டத்தின் நாயகரான எருக்கூர் நீலகண்ட பிரம்மசாரி, அங்குக் கூடியிருந்தவர்கள் மத்தியில் இப்படிப் பேசினார்…  

”பாரதமாதா சபையினராகிய நாம் பாரத நாட்டிற்காக உழைக்க வேண்டும். நமது சங்கத்திற்கு திருநெல்வேலியில் மட்டுமின்றி இந்தியாவின் எல்லாப் பாகங்களிலும் கிளைகள் இருக்கின்றன. வெளி தேசத்திலிருந்து வந்த ஆங்கிலேயர் நம் பாரதமாதாவின் கைகளிலும் கால்களிலும் அடிமை விலங்கைப் பூட்டியதோடு, நம்மையும் அடிமையாக்கி நாட்டை ஆளுகின்றார். நம் நாடு சுயராஜ்ஜியம் அடைய வேண்டுமானால் இந்த வெள்ளையர்களை நாட்டை விட்டே துரத்த வேண்டும்………

வெள்ளைக்காரர்களைக் கொல்ல வேண்டுமானால், முன்பு 1857 இல் நடந்த கலகம் போல மறுபடியும் வந்தால்தான் இவர்களை ஒழித்துக்கட்ட முடியும். அப்படிப்பட்ட ஒரு கலகம் நடந்த ரகசியமான புரட்சி நடந்து வருகிறது….ஒரு தினம் குறிக்கப்பட்டு, பாரதமாதா சங்கத்தினர் அனைவருக்கும் தெரிவிக்கப்படும்.

அன்று எல்லோருமாக நாட்டின் பல பாகங்களில் இருந்து கிளம்பி வெள்ளைக்காரர்களுக்கு எதிராகக் கலகம் செய்ய வேண்டும். இதனால் ஏற்படும் கஷ்ட நஷ்டங்கள் எல்லாவற்றையும் அநுபவிக்கத் தயாராக இருக்க வேண்டும். அதோடு வீடு வாசல் உறவை இழக்கவும் துணிய வேண்டும். உங்களுக்கு வழிகாட்டியாக இருக்கவே நான் எல்லாவற்றையும் துறந்து ‘பிரம்மச்சாரி’யாகவே இருக்க முடிவு செய்துவிட்டேன். எல்லோரும் ஒற்றுமையாகப் பாடுபட்டால்தான் நாம் சுயராஜ்ஜியம் அடைய முடியும்….”

–   இப்படி நீலகண்ட பிரம்மச்சாரி வீராவேச உரை நிகழ்த்தி முடித்த பிறகு, சங்கத்து உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் வைபோகம் நடக்கும். காளி படத்திற்கு முன்னால் ஒவ்வொருவராக குங்குமம் கரைக்கப்பட்ட தண்ணீரைக் கையிலெடுத்து, வெள்ளைக்காரர்களின் ரத்தத்தைக் குடிப்பதாகச் சொல்லி, பருக வேண்டும்.

பிறகு கத்தியால் அவரவர்களின் வலது கை கட்டை விரலின் நுனியில் அறுத்துக் கொண்டு வழியும் ரத்தத்தால் அங்குள்ள வெள்ளைக் காகிதத்தில் ரேகைக் குறியிட்டு அடையாளம் செய்ய வேண்டும். என்ன பேராபத்து வந்தாலும் சங்கத்து ரகசியங்களை வெளியாட்களுக்குத் தெரிவிக்கக் கூடாது. எதிர்பாராத ஆபத்தில் சங்க உறுப்பினர்கள் சிக்கிக்கொண்டால், எதிரிகளுக்கு சங்கத்தின் ரகசியங்கள் தெரியாமலிருக்கும் வகையில், உடனே தன்னைத்தானே மாய்த்துக் கொள்ள வேண்டும். இதனையும் மீறி எவராவது ரகசியங்களை வெளிப்படுத்தினால் அவர்கள் பாபச் செயல் செய்த குற்றத்திற்காக வேதனைகளை அநுபவிக்க நரகத்திற்கு அனுப்பப் படுவார்கள்….  

இப்படி ஒரு சுய கட்டுப்பாடை பாரதமாதா சங்கத்து உறுப்பினர்கள் தங்களுக்குள்ளேயே விதித்துக் கொண்டனர். அதன்பிறகு, அவர்கள் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழியில், ”பாரத நாட்டிற்கும் பாரதமாதா சங்கத்திற்கும் என் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் பாடுபடுவேன்! இது சத்தியம்” என்று சொல்லி உறுதிமொழி எடுத்துக் கொள்வர்.

இப்படி தென்காசி தொடங்கி தூத்துக்குடி முதலான நகரங்களில் எல்லாம் பாரதமாதா சங்கத்தின் ரகசியக் கூட்டங்கள் நடந்தன. இந்த சங்கத்தில் ஒவ்வொரு வேலைக்கும் குறிப்பிட்ட, தகுதியுள்ள நபர்களை ஈடுபடுத்தினார்கள்.

தகவல்களை சேகரிக்க, உளவு பார்க்க, தகவல்களை குறிப்பிட்ட நேரத்துக்கு பரிமாறிக்கொள்ள, ஆங்கில எதிர்ப்புப் பிரசாரம் செய்ய, சுவரொட்டிகளை ஒட்ட… என்று ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு நபர்களை ஈடுபடச் செய்து, அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியிலிருந்து வேறு எதிலும் கவனம் சிதையாத வகையில் தேசப் பணியில் ஈடுபட பணிக்கப்பட்டனர்.  

சுதேசியக் கொள்கை பலமாக பிரசாரம் செய்யப்பட, தூத்துக்குடியில் புதிதாக ஒரு சுதேசிக் கப்பல் கம்பெனி வ.உ.சி தலைமையில் துவக்கப்பட்டது. இந்தியர்கள் தங்கள் வியாபார நோக்கத்திற்காக, இந்தியராலேயே நிர்வகிக்கப்படும் வண்ணம் செயல்பட்ட சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியின் வளர்ச்சி, பிரிட்டனிலிருந்து இங்கு வந்து பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியை நடத்தி வந்த ஆங்கிலேயர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

தூத்துக்குடியில் ஆங்கிலேயர்கள் கோரல் மில்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர். நிறுவனத்தின் ஏழைத் தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த ஊதியம் கொடுத்து, அவர்கள் லாபத்தில் கொழுத்து வந்தனர். விவரம் அறிந்த தொழிலாளர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வும், பணிச் சலுகைகளும் கேட்டு, கோரல் மில்ஸ் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவாக வக்கீல் வ.உ.சிதம்பரம் பிள்ளை கோரல் மில்ஸ் நிர்வாகத்தினரோடு பேச்சு நடத்தினார்.வ.உ.சி கேட்ட கேள்விகளுக்கு அவர்களால் பதிலளிக்க முடியவில்லை. இறுதியில் தொழிலாளர் கோரிக்கைக்கு நிர்வாகம் பணிந்தது. கறுப்பர்களை இந்த அளவிற்கு வளரவிடக்கூடாது, இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று மனத்திற்குள் கறுவிக் கொண்டிருந்தது அந்த நிர்வாகம்.

இந்நிலையில் தூத்துக்குடிக்கு புதிதாக சப் கலெக்டராக வந்து சேர்ந்தார் ராப்ர்ட் வில்லியம் டி. எஸ்டிகார்ட் ஆஷ்துரை. இள வயதும் சுறுசுறுப்பும் கொண்டிருந்த அவர் தங்களுக்கு மிகச் சரியான நபர் என்று எண்ணிய பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் மற்றும் கோரல் மில்ஸ் நிர்வாகம் அவரைத் தங்களுக்கு சாதகமாக செயல்படத் தூண்டியது.  

அப்போது 1908 மார்ச் 9 ஆம் தேதி பாரத தேசமெங்கும் ஸ்வராஜ்ய தினம் கொண்டாட ஏற்பாடானது. அந்த சந்தர்ப்பத்தில் தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்த சுப்பிரமணிய சிவா, பல கூட்டங்களில் ஆங்கில ஆட்சிக்கு எதிராகவும், சுயாட்சிப் பிரச்சாரமும் செய்து வந்தார்.

வ.உ.சியும் சுப்பிரமணிய சிவாவும் கைகோக்க, தூத்துக்குடி வீறு கொண்டு எழுந்தது. இதனால் ஆத்திரப்பட்ட ஆஷ்துரை, அடக்குமுறைகளைக் கையாண்டதோடு, இவர்கள் இருவரையும் பற்றி திருநெல்வேலி கலெக்டருக்கு அறிக்கை அனுப்பினார். அதைத் தொடர்ந்து திருநெல்வேலிக்கு அழைக்கப்பட்ட இவர்கள் இருவரும் வஞ்சகமாக கலெக்டரால் சிறையிலடைக்கப்பட்டனர். திருநெல்வேலி முழுதும் கலவரம் பரவியது.

கலவரத்தை அடக்க, துப்பாக்கிச் சூடும் வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன. குறிப்பாக சுதேசி என்ற பேச்செடுத்தாலே அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. இதில் மிகத் தீவிரமாக இறங்கிய தூத்துக்குடி சப்-கலெக்டர் ஆஷ்துரையின் அதிவேக செயல்பாடுகளால் திருப்தியுற்ற பிரிட்டிஷ் நிர்வாகம், அவரை திருநெல்வேலி கலெக்டராக பதவி உயர்வு அளித்து, அவர் செயல்களை நியாயப் படுத்தியது. அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி கலெக்டராக பதவி பெற்ற ஆஷ்துரை, முன்னைக் காட்டிலும் தீவிரமாக செயலில் இறங்கினார்.

எங்கெல்லாம் சுதேசிச் சிந்தனையாளர்கள் இருக்கிறார்களோ, எங்கெல்லாம் சுதேசிப் பிரச்சாரம் நடக்கிறதோ அவர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டனர். ஏற்கனவே வ.உ.சி மற்றும் சுப்பிரமணிய சிவா இவர்களின் கைதுக்கும், சுதேசிக் கப்பல் கம்பெனியின் அழிவுக்கும் காரணமாக இருந்த கலெக்டர் ஆஷ் மீது கோபத்தில் இருந்த பாரதமாதா சங்க உறுப்பினர்கள், இப்போதைய நிகழ்வுகளினால் மேலும் கொதிப்படைந்தனர். தங்களுக்குள் ரகசியக் கூட்டம் போட்டு, கலெக்டர் ஆஷைக் கொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தனர். அதுமட்டுமே அவர்களுடைய விருப்பம் இல்லை; ஆங்கில ஆட்சி அகன்று சுயாட்சி நடைபெற வேண்டும் என்பதே அவர்களின் கனவாக இருந்தது.

ஒருநாள் செங்கோட்டையில் வாஞ்சியின் இல்லத்தில் நடந்த கூட்டத்தில் இந்த எண்ணங்கள் உறுப்பினர்களிடம் விதைக்கப்பட்டன.   வாஞ்சியின் வீட்டு வாசலில் பெரிய கொடிமரத்தின் கீழே பாரதமாதா படம் வைக்கப்பட்டு, கொடி மரத்தில் பாரதமாதா கொடி பறந்தது. உறுப்பினர்களிடையே வாஞ்சி இப்படிப் பேசினார்….  

“சகோதரர்களே! இந்த பரந்த பாரத தேசத்தின் தென் கோடியிலுள்ள நமது செங்கோட்டையில் பறக்கும் பாரதமாதாவின் கொடியானது சீக்கிரத்திலேயே பாரத தேசமெங்கும் வெற்றிக் கொடியாகப் பறக்க வேண்டும். வடக்கே பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த யுத்தத்தில் சத்தியமே ஜெயித்த அந்த குருக்ஷேத்திர பூமியில், இன்று ஆங்கிலேயர்கள் நம் பாரத மாதாவையும் நம்மையும் அடிமையாக்கி ஆட்சி புரிகின்றனர். அன்று அந்த யுத்த பூமியில் தர்ம யுத்தம் நடந்தது. அதில் அதர்மம் அழிந்து தர்மம் நிலைத்தது. அன்று அது நடந்தது உண்மையானால், இன்று செங்கோட்டையில் பறக்கும் இக்கொடி வருங்காலத்தில் அங்கேயும் பறக்க வேண்டும்! இது சத்தியம்” என உணர்ச்சி கரமாகப் பேச, உறுப்பினர்கள் அனைவரும் “வந்தேமாதரம்” என்று கோஷமிட்டனர்.  

வாஞ்சி சொன்னது போல் இறுதியில் அதுதான் நடந்தது. பாரத தேசத்தின் தென்கோடியில் இருக்கும் ஒரு செங்கோட்டையில் ஏற்றப்பட்ட பாரதக் கொடி, வட பாரதத்தின் டில்லி செங்கோட்டையில் ஒரு நாள் கொடி ஏறியது. ஆனால் ஆயுதப் புரட்சி மூலம் காரியத்தைச் சாதிக்கத் திட்டமிட்ட இந்த வீர இளைஞர்களின் வழியில் அல்லாமல் காந்தியின் அஹிம்சைக் கொள்கையால் இறுதியில் ஏறியது. ஆனால் அதற்குக் கடந்து வந்த வருடங்கள் சுமார் 32.

பாரதமாதா சங்கத்தினர், அப்போதைய ஆனந்த வருடத்திற்குள், அதாவது 1915க்குள் தென்னகத்தில் ஆயுதப் புரட்சி மூலம் வெள்ளையரை விரட்டி சுயாட்சி நிலவச் செய்ய திட்டமிட்டனர். ஆனால் வாஞ்சியின் ஆஷ்கொலை முடிவுக்குப் பிறகு, பாரதமாதா சங்கம் வெள்ளையரால் நசுக்கப்பட்ட பின்னால் 32 ஆண்டுகள் கழிந்து அமைதி வழியில் டெல்லி செங்கோட்டையில் சுதந்திரக் கொடி ஏறியது.  

ஆம்! வாஞ்சியின் செயல், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இனி ஆங்கிலேயர்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பில்லை என்ற அச்ச உணர்வு தோன்றியது. அதன் காரணத்தால் முன்னிலும் வேகமாக சுதேசியம் பேசுவோர் ராணுவ பலத்தால் அடக்கி ஒடுக்கப்பட்டனர்.

இந்த அளவுக்கு ஆங்கிலேயரை ஆட்டங்காணச் செய்த வாஞ்சி என்ன செய்தார்…  

செங்கோட்டையிலிருந்து புதுவைக்குச் சென்ற வாஞ்சி, அங்கே கவிபாரதியார், வ.வே.சு ஐயர் போன்றோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டார். தனிநபர் கொலை மூலம் சுயாட்சி பெறும் சிந்தனை கொண்டிருந்த வீரசாவர்க்கரின் சித்தாந்தங்களை ஏற்று செயல்பட்டுக் கொண்டிருந்தார் வ.வே.சு ஐயர். அவர் அப்போதுதான் பிரான்சிலிருந்து திரும்பியிருந்தார்.

அவர், வீரன் வாஞ்சிக்கு துப்பாக்கி சுடப் பயிற்சி அளித்து, தன்னுடைய கொள்கைகளின் அடிப்படையில் வாஞ்சியைத் தயார் செய்தார்.

அதன் பிறகு புதுவையிலிருந்து செங்கோட்டைக்குத் திரும்பிய வாஞ்சி, தன் நண்பர்கள் துணையுடன் திருநெல்வேலிக்குச் சென்று ஆஷ் துரையை உளவு பார்க்கச் சென்றார்.   அதற்கிடையில் பாரத மாதா சங்கத்தின் பேரில் ஒரு கொலை மிரட்டல் கடிதமும் ஆஷுக்கு அனுப்பப்பட்டது. அதனால் கொதிப்படைந்த ஆஷ், திருநெல்வேலியை தீவிரமாகக் கண்காணிக்கச் சொன்னான்.

அந்த நிலையில் மனு கொடுப்பவர் போல் கலெக்டரைச் சந்தித்து அவருடைய நடவடிக்கைகளையும் அடையாளத்தையும் அறிந்து வந்தார் வாஞ்சி.

ஒரு வாரம் கழித்து ஆஷ்துரை கொடைக்கானலுக்கு ஓய்வு எடுக்கப் போவதைத் தெரிந்துகொண்டு, அந்த சந்தர்ப்பத்தையே சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள எண்ணினார் வாஞ்சிநாதன்.  

திருநெல்வேலியிலிருந்து கிளம்பி, மணியாச்சி ரயில் நிலையத்தில் வேறு வண்டி மாறக் கிடைத்த சந்தர்ப்பத்தில் சன்னல் வழியே கலெக்டர் ஆஷை துப்பாக்கியால் குறிபார்த்தார். அதனால் பதறிய ஆஷ், தன் தொப்பியை வீசியடித்தார். ஆனால் கண நேரத்தில் தன் கையிலிருந்த துப்பாக்கியால் ஆஷைச் சுட்டுவிட்டு, தப்பியோடிய வாஞ்சி, மக்களிடமிருந்தும் போலீஸாரிடமிருந்தும் தப்பிப்பதற்காக அங்கிருந்த ஒரு கழிவறைக்குள் புகுந்து கொண்டார்.

பாரதமாதா சங்கத்தில் எடுத்துக் கொண்ட உறுதிமொழிப்படி, தான் போலீஸில் சிக்கி அதன்மூலம் சங்கத்தையும் நண்பர்களையும் காட்டிக் கொடுத்து அவர்கள் கையால் இறக்கக் கூடாது என்று எண்ணினார். அதனால் தன் வாயில் அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் வாஞ்சி.  

வடநாட்டில் பகத்சிங் செய்த செயலுக்கு சுமார் 20 வருடங்களுக்கு முன் அப்படியொரு தீரச் செயல் செய்த சுதந்திரப் போராளி வாஞ்சிநாதன், எளிய குடும்பத்தில் பிறந்தவர். அவர் தந்தை ரகுபதி ஐயர் செங்கோட்டையில் உள்ள கோயிலில் பூசை செய்து வந்தார்.

வாஞ்சி புனலூரில் காட்டிலாகாவில் வேலை பார்த்து அந்த வருமானத்தில் குடும்பம் நடந்து வந்தது. ஆனால் வெள்ளையரிடம் கைகட்டி நிற்பதா என்ற எண்ணம் தோன்றி, அந்த வேலையையும் உதறிவிட்டு, நாட்டின் சுதந்திரத்தைப் பற்றிச் சிந்தித்தார் வாஞ்சி. தன் மனைவி திருவனந்தபுரத்தில் பிரசவத்துக்காகச் சென்றபிறகு மீண்டும் அவளைப் பார்ப்பதற்குக் கூடச் செல்லவில்லை. அவருக்கு நாடே வீடாக மனத்தில் தோன்றியது.

வாஞ்சிநாதன் இறந்துபோன செய்தி அவருடைய மனைவி பொன்னம்மாளுக்கு தெரிவிக்கப்படவே இல்லை. அதனால் தன் கணவர் சுதந்திரப் போராட்டத்தில் எங்கோ தலைமறைவாக இருந்துகொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறார் என்று எண்ணினார் பொன்னம்மாள்.  

ஆனால் மாதங்கள் பல கடந்த பிறகு அவருக்கு செய்தி சொன்னபோது அவர் அதை நம்பவில்லை. காரணம், அவர் வாஞ்சியின் பூதவுடலைப் பார்க்கவில்லை, மேலும் வாஞ்சியின் இறுத்தச் சடங்கிற்கு, மனைவியின் கையால் பெற்றுச் செய்ய வேண்டிய சடங்குகள் எதையும் செய்யவில்லை. அதனால் அவர் தாம் இறக்கும் வரையில் பூவும் பொட்டும் வைத்துக் கொண்டு, சுமங்கலியாகவே வாழ்ந்து முடித்தார். அதனால் எல்லோரும் அவரை சுமங்கலி மாமி என்றே அழைத்தனர்.  

நாட்டுக்காக உயிர் துறந்த வாஞ்சியின் செயலில் மரியாதை கொண்டிருந்த வீரப் பெருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், தீபாவளிக்கு புடவை எடுத்து சமர்ப்பித்து, பொன்னம்மாளின் பாதங்களில் விழுந்து வணங்கி ஆசி பெறுவதை வழக்கமாக்கிக் கொண்டார். வீரனின் மனைவியாக பொன்னம்மாளின் தியாக வாழ்வைப் போற்றியவர் பசும்பொன் திருமகனார்.  

ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். அந்தக் கனவை நிறைவேற்ற ஒவ்வொருவருமே ஏதேனும் செய்து வருகிறோம். ஆனால் நாட்டைப் பற்றிய சிந்தனையும் வீட்டைப் பற்றிய எண்ணமும் இருந்தால், அதை மீறி தம் சுயநலன் பற்றியே சிந்தித்தால் உலகு அவர்களை எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்காது. அவர்கள் வரலாற்றிலே பதியப்படாமல், பிறந்து மறைந்து போன கோடிக்கணக்கான ஜனத்திரளில் அவர்களும் சேர்ந்து விடுவர்.

வீட்டைப்பற்றி சிந்திக்காது ஒவ்வொரு கணமும் நாட்டின் நினைவாகவே இருந்த வாஞ்சிக்கும் ஆசைகள் இருந்திருக்கின்றன. அவற்றை அவரே ஒரு சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.   ஒருமுறை செங்கோட்டை அழகப்ப பிள்ளையை வாஞ்சி, திருநெல்வேலியில் வைத்து சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போது, வாஞ்சிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்து போனதை எண்ணி வருந்தி அவருக்கு ஆறுதல் சொன்னார் அழகப்ப பிள்ளை.

அதற்கு வாஞ்சி, “பிள்ளைவாள்! உலகில் பிறப்பதும் இறப்பதும் அவரவர்களுடைய கர்ம வினை. இதைப் பற்றி கவலைப்படவே கூடாது! நம் சுதேச முயற்சி எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.

“வாஞ்சி நாம் எடுத்துக் கொண்ட பிரமாண வாக்கைக் காக்க ஒவ்வொருவரும் துடிக்கிறார்கள். ஆனால் நீலகண்ட சுவாமிகளிடமிருந்தோ உன்னிடமிருந்தோ சங்கத்தாருக்கு எந்தவித உத்திரவும் வரவில்லையே என்றுதான் காத்திருக்கிறார்கள்” என்றார் அழகப்ப பிள்ளை.  

“பிள்ளைவாள்! நீலகண்டனிடமிருந்து எவ்விதமான பதிலும் வராது. அவன் வடக்கே சென்றுவிட்டான். அவன் உத்திரவுக்குக் காத்திருந்து பயன் இல்லை. நாம் பிரமாணங்கள் எடுத்துக் கொண்டதுபோல், வெள்ளையரை நாட்டை விட்டு ஒழித்துக் கட்ட அவரவர் மனச்சாட்சி படி தீவிரமாக இருக்க வேண்டும்” என்றார்.  

அதற்கு பிள்ளை, “வாஞ்சி ஆரம்பம் முதல் இன்றுவரை நாம் ஒற்றுமையாக இருந்துதான் எல்லாக் காரியங்களையும் செய்து வருகிறோம். இனியும் அப்படித்தான் நடப்போம்” என்றார்.

அப்போது வாஞ்சி செங்கோட்டை நண்பர்களைப் பற்றி, விசாரிக்கும்போது சாவடி அருணாசலம் பிள்ளையைப் பற்றி விசாரித்தார். அருணாசலம் பிள்ளை டாக்டர் படிப்பிற்காக கல்கத்தாவிற்குச் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும், தானும் பரோடா கலாபவனில் எஞ்சினீரிங் படிப்புக்குச் செல்ல விரும்புவதையும் கூறினார் அழகப்ப பிள்ளை.

மனத்திற்குள் சிரித்துக் கொண்ட வாஞ்சிநாதன்…   “எல்லோருமாகச் சேர்ந்து நம் பாரத தேசம் சுதந்திரம் அடைந்ததும் தொடர்ந்து தேசத்திற்காகப் பாடுபடுவார்கள் என்று எண்ணினேன். ஆனால் நாடு விடுதலை அடைவதற்கு முன்பாகவே நமது தோழர்கள் தனித் தனியாகப் பிரிந்து, உத்தியோகத்திற்கும் படிப்பிற்குமாகச் சென்று விட்டால், பிறகு நாட்டிற்காக யார் எப்படி உழைக்க முடியும்? ஆகவே நானும் காளிதேவியின் முன்பு எடுத்துக் கொண்ட பிரதிக்ஞைப்படி, ஆங்கிலேயர்களை ஒழித்துவிட்டு, எங்கேயாவது போய்வர முடிவு செய்யப்போகிறேன்! அது அநேகமாக அமெரிக்காவாக இருக்கும்…” என்று தன் ஆசையை வெளிப்படுத்தினார்.  

சுதேசக் கொள்கையில் பற்றுக் கொண்டிருந்த வாஞ்சிக்கு இப்படியும் ஒரு ஆசை இருந்திருக்கிறது.  

1911 ஜூன் 17 சனிக்கிழமையன்று இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் அழியாத ஒரு பக்கத்தை எழுதிச் சென்ற வாஞ்சிநாதன் போன்ற தியாக உள்ளம் கொண்டவர்களும் இந்திய விடுதலைக்கு ஒரு காரணமாக இருந்தார்கள் என்பதை நாம் நினைவில் கொள்வோம்.

2 COMMENTS

  1. மார்ச் 19, 2010இல் புதிய சட்டப்பேரவைக் கட்டடத்தில் நடந்த 2010-2011 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது, நிதி அமைச்சர் அன்பழகன், வீரவாஞ்சிநாதனுக்கு செங்கோட்டையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அரசின் இந்த அறிவிப்புக்கு நாம் நன்றி தெரிவித்துக் கொள்வோம்.

  2. Sri Ram Brother Great…,I am also from Sengottai near Muppudathi amman koil.Please go to Mani Mandapam..,Felt very sad..,there is only a statue…,If agreed we will do the needful.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe