
வக்ப் வாரிய சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் நள்ளிரவு நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்று மாநிலங்களவையில் நீண்ட விவாதத்திற்கு பின் நிறைவேறியது. மாநிலங்களவையில் நடந்த வாக்கெடுப்பில் 128 உறுப்பினர்கள் ஆதரவு அளிக்க, வக்ப் திருத்த மசோதா நிறைவேறியது. இரு அவைகளிலும் நிறைவேறிய நிலையில் மசோதா இறுதி வடிவத்துக்கு குடியரசுத் தலைவரிடம் அனுப்பப்படும்.
முஸ்லிம்களின் சமூக நலத் திட்டங்களுக்காக முஸ்லிம்கள் எழுதி வைக்கும் சொத்துகளை நிர்வகிக்க வக்ப் வாரியம் அமைக்கப்பட்டது. இதற்கென காங்கிரஸ் அரசால் ஏற்படுத்தப்பட்ட வக்ப் வாரிய சட்டத்தில், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் சில திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளது.
வக்ப் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் ஏப்.2 புதன்கிழமை நாடாளுமன்ற விவகாரம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகள் இந்த திருத்த மசோதாவை ஏற்கவில்லை. எனவே மசோதா தாக்கல் ஆனபோது இரு தரப்பு உறுப்பினர்களும் விவாதம் நடத்தினர். விவாதம் நள்ளிரவு வரை நீண்டது. பின்னர் விவாதத்தின் நிறைவில் மசோதா மீதான வாக்கெடுப்பு நடந்ததில், மசோதாவுக்கு ஆதரவாக 288 எம்பி.,க்களும், மசோதாவை எதிர்த்து 232 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதை அடுத்து மசோதா மக்களவையில் நிறைவேறியது.
தொடர்ந்து ஏப்.3 வியாழன் நேற்று மாநிலங்களவையிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற விவகாரம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மாநிலங்களவையில் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். அதன் மீது 13 மணி நேரத்திற்கும் மேலாக விவாதம் நடைபெற்று நள்ளிரவு விவாதம் நிறைவடைந்தது. பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில், மசோதாவுக்கு ஆதரவாக 128 உறுப்பினர்களும், எதிராக 88 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதை அடுத்து மசோதா நிறைவேறியது.
மாநிலங்களவையில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை 236. பெரும்பான்மைக்கு 119 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. தற்போது ஆளும் பாஜக., கூட்டணிக்கு 125 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இவர்களில் பாஜ., 98; ஜேடியூ 4; அஜித்பவார் – என்சிபி 3; தெலுங்குதேசம் 2 ஆகியோர் அடக்கம். அதுபோல், காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணிக்கு மாநிலங்களவையில் 88 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது.
எனினும், இந்த மசோதாவுக்கு ஆதரவாக 128 உறுப்பினர்களும், எதிராக 95 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இண்டி கூட்டணியில் இடம்பெறாத எதிர்க்கட்சிகளான பி.ஆர்.எஸ்., ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் வக்ப் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன. எனினும், மாநிலங்களவையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் பிஜூ ஜனதா தளம் கட்சி உறுப்பினர்கள் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க கட்சித் தலைமையால் அனுமதிக்கப்பட்டனர். எனவே ஆதரவு எதிர்ப்பு வாக்குகள் இருதரப்புக்கும் அதிகரித்தன.
இந்த மசோதா வாக்கெடுப்பில், பாமக., கலந்து கொள்ளாமல் வெளியேறியது. மசோதாவை எதிர்த்து திமுக., அதிமுக., வாக்களித்தன. ஆதரவாக தமிழ் மாநில காங்கிரஸ் வாக்களித்தது.
மக்களின் உரிமையைப் பாதுகாக்கும்!
‘இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வக்ப் திருத்த சட்ட மசோதா, மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் என்றும், வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும்’ என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் வக்ப் திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப் பட்டிருப்பது வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும். நாட்டின் சமூக பொருளாதார நீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் வக்பு மசோதா ஒரு திருப்பு முனை. பல தசாப்தங்களாக, வக்ப் அமைப்பு வெளிப்படைத்தன்மையுடன் இல்லாமல் இருந்தது. வக்ப் திருத்த சட்ட மசோதா மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும். ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்திற்கும் முன்னுரிமை அளிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதன் மூலம் நாம் இரக்கமுள்ள, வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க முடியும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
நன்றி தெரிவித்த திருச்செந்துறை மக்கள்
இதனிடையே, வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியதை தொடர்ந்து திருச்சி மாவட்டம் திருச்செந்துறை மக்கள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். வக்ப் சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட முழு கிராமமாக திருச்செந்துறை இருந்ததும், 1400 ஆண்டுகள் பழைமையான திருச்செந்துறை கோயில் மற்றும் சுற்றியுள்ள நிலங்களை வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடியதும் தேசிய அளவில் எதிரொலித்தது. நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்னையும் மசோதா விவாதத்தின் போது மேற்கோளிட்டுக் காட்டப்பட்டது.