spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

HomeReporters Diaryசசிகலாவை ஊடகங்கள் முன்னிறுத்தும் மர்மம் என்ன?

சசிகலாவை ஊடகங்கள் முன்னிறுத்தும் மர்மம் என்ன?

- Advertisement -

அஇஅதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவரவேண்டும் என்பதற்காக தமிழ் நாட்டில் சில முன்னணி ஊடகங்கள் ஓவர் டைம் வேலை பார்க்க ஆரம்பித்து விட்டன.

இந்த ‘திருப்பணியை’ நாளிதழ்கள், வாரமிருமுறை வரும் இதழ்கள் மற்றும் தொலைக் காட்சிகள் என்று ஜனநாயகத்தின் நான்காம் தூணின் பல தரப்பினரும் செய்யத் துவங்கி விட்டன. ஜெயலலிதா வின் மறைவுக்குப் பின்னர் சசிகலா வெளிப்படையாகவே தன்னுடைய அதிகாரத்தை காட்டத் துவங்கியிருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். குறிப்பாக ஜெ வின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த போது அங்கு நீக்கமற நின்றிருந்த சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் தெளிவாகவே ஒரு செய்தியை மக்களுக்கு உணரத்தி விட்டார்கள். இனிமேல் தமிழ் நாட்டில் அதிகாரம் யார் கையில் என்பதை அவர்கள் ஜெ உடல் வைக்கப் பட்டிருந்த அந்த 12 மணி நேரத்தில் நேர்த்தியாக வெளியுலகிற்கு காட்டி விட்டார்கள்.

ஜெயலலிதா உயிருடன் இருந்த போது அவர் முன் தலை காட்ட முடியாமல் இருந்த நடராஜன் ராஜாஜி ஹாலில் முதலில் தூணுக்கு பின்னால் நின்று கொண்டிருந்தார். பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி வந்த போது வெளிப்படையாகவே வெளியில் வந்தார். அவரை மோடிக்கும், ராகுலுக்கும் அங்கிருந்தவர்கள் அறிமுகம் செய்து வைத்தனர். அதே போலத்தான் சசிகலாவின் தம்பி திவாகரன். இவரும் ஜெ வால் ஓரங் கட்டப்பட்டிருந்தவர். நடராசன் மற்றும் திவாகரன் மீது 2011 – 2016 ஆட்சிக் காலத்தில் திரும்பத் திரும்ப நில அபகரிப்பு வழக்குகளை போட்டு பல முறை சிறையில் தள்ளியவர்தான் முதலமைச்சர் ஜெயலலிதா. இருவர் மீதும் பல நில அபகரிப்பு வழக்குகள் இன்னமும் நிலுவையில் இருந்து கொண்டிருக்கின்றன. இதே போலத்தான் சசிகலா வின் வேறு பல உறவினர்கள் மீதும் வழக்குகள் தொடர்ச்சியாக போடப்பட்டன. இன்று கிட்டத்தட்ட அவர்கள் எல்லோருமே வெளிப்படையாகவே போயஸ் தோட்டத்தில் உலா வரத் துவங்கி விட்டனர்.

நாடு விடுதலை அடைந்து இந்த 69 ஆண்டு காலத்தில் பதவியிலிருக்கும் போது ஒரு முதலமைச்சர் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டது தமிழ் நாட்டில்தான். 2014 செப்டம்பர் 27 ல் இது நடந்தது. ஜெ வைத் தவிர தண்டிக்கப்பட்ட மற்ற மூவர் சசிகலா மற்றும் அவரது உறவினர்களான சுதாகரன், இளவரசி. ஆகவே ஏக இந்தியாவிலும் இல்லாத விதமாக செந்தமிழ் நாட்டுக்கு இந்த அளப்பரிய பெருமையை தேடித்தந்ததில் நால்வரில் மூவர் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள். நாட்டைக் காக்கும் களப் போரில் விழுப்புண்களை ஏந்திய, வலுவான தியாகப் பின்புலத்தை கொண்ட, இத்தகைய ஒருவரைத்தான் இன்று தமிழ் நாட்டு ஊடகங்களின் ஒரு தரப்பினர் ஆதரிக்கின்றன. அவரை அசுர பலங் கொண்ட ஆளும் அஇஅதிமுக வின் பொதுச் செயலாளர் பதவியில் உட்கார வைப்பதற்கு கச்சைக் கட்டிக் கொண்டு களத்தில் நின்று கொண்டிருக்கின்றன.

நீதிபதி மைக்கேல் ஜான் டீ குன்ஹா வின் தீர்ப்பை ஊன்றிப் படிப்பவர்களுக்கு ஒரு விஷயம் நன்றாகப் புரியும். 66 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட அந்த சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெ குற்றவாளி என்று தீர்ப்பு உருவாவதற்கு இந்த மூவரும் செய்த காரியங்கள்தான் முக்கியமான காரணிகளாக இருந்திருக்கின்றனர். 1988 ம் ஆண்டு ஊழல் வழக்கு சட்டத்தின்படி இந்த வழக்கு நடத்துப்பட்டது. இந்த சட்டம் தெளிவாகவே ஒன்றைக் கூறுகிறது. அரசு ஊழியராக, அதாவது பொது ஊழியராக இருக்கும் ஒருவர் சட்டத்திற்கு புறம்பாக சொத்து சேர்ப்பது எவ்வளவு குற்றமோ அதற்கிணையான குற்றம்தான் அதற்கு துணை போகுபவர்கள் செய்யும் குற்றமும். அதனால்தான் ஜெ உடன் சேர்த்து மற்ற மூவருக்கும் நான்காண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யாததற்காக ஜெ மீது போடப்பட்ட வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர்தான் சசிகலா.

1996 ல் ஜெ தோற்ற பின்னர் முதலில் கைதானது சசிகலாதான். அந்நிய செலாவணி மோசடி வழக்கில் கைதாகி 1996 ஜூன் முதல் 1997 ஏப்ரல் வரையில் 10 மாதங்கள் சிறையில் இருந்தவர். மத்திய அரசின் அமலாக்கப் பிரிவால் பல வழக்குகள் அவர் மீது போடப்பட்டன. ஒவ்வோர் வழக்கிற்கும் உச்ச நீதி மன்றத்திற்கு போய் தடை வாங்கினார்கள். எல்லா வழக்குகளும் அப்படியே அமுங்கிப் போயின. சில வழக்குகள் இன்னமும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் நின்று கொண்டிருக்கின்றன.

2011 டிசம்பர் 19 ம் தேதி சசிகலா, நடராஜன் உள்ளிட்ட அவரது பல உறவினர்கள் அஇஅதிமுக விலிருந்து நீக்கப்பட்டனர். இவர்களுடன் கட்சிக்காரர்கள் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாதென்று ஜெ வே வெளிப்படையாகவே அறிவித்தார். ஆனால் நான்கரை மாதங்களில் சசிகலா மட்டும் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 2012 ஏப்ரல் 1 ம் தேதி மீண்டும் ஜெ உடன் சேர்ந்தார். அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு சசிகலா எழுதிய ஒரு கடிதத்தில் ‘எனக்குத் தெரியாமல் என்னுடைய உறவினர்கள் சிலர் துரோகம் செய்து விட்டனர். அவர்கள் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். இனிமேல் அவர்களுடன் எனக்கு எந்த உறவும் கிடையாது. என் வாழ்வை நான் அக்காவுக்கு முற்றிலுமாக அர்ப்பணித்து விட்டேன்’ என்று கூறியிருந்தார்.

இந்தக் கடிதம் எல்லா ஊடகங்களிலும் வந்து, இன்று பொது வெளியில் உள்ளது. தற்போது சசிகலாவுக்காக வெண் சாமரம் வீசிக் கொண்டு, அவருக்கு ஆதரவாக தார, தப்பட்டையுடன் கிளம்பி வந்துக் கொண்டிருக்கும் ஊடகங்கள் இந்த கடிதத்தைப் பற்றியும் சற்றே பிரஸ்தாபித்தால் அது நன்றாக இருக்கும். நாட்டின் சுதந்திர வேள்வியில் முக்கிய பங்காற்றிய அந்த நாளிதழ் சசிகலாதான் ஆளுங்கட்சியின் அடுத்த பொதுச் செயலாளராக வேண்டும் என்று தலையங்கம் எழுதுகிறது.

நிச்சயமாக அந்த நாளிதழுக்காக தங்கள் உதிரம் சிந்திய அதனுடைய முன்னாள் ஆசிரியர்கள் தங்களுடைய கல்லரையில் புரண்டு கொண்டிருப்பார்கள். மற்றோர் நாளிதழ் ஜெ வின் கடைசி நிமிடங்களில் சசிகலா எப்படித் துடித்தார் என்று அப்பல்லோவில் அருகில் இருந்து பார்த்தது போல சித்தரிக்கிறது. இன்னுமோர் வாரமிருமுறை இதழ் கடந்த 34 ஆண்டுகளில் ஜெ வுக்காக சசி எப்படியெல்லாம் துன்பங்களை அனுபவித்தார் என்று காவியம் படைக்கிறது. மற்றுமோர் காட்சி ஊடகம், முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்துக்கு கொடுக்காத முக்கியத்துவத்தை சசிகலாவுக்குக் கொடுக்கிறது. இதுவரையில் எந்த முதலமைச்சரையும் இந்தளவுக்கு அந்த காட்சி ஊடகம் இருட்டிப்பு செய்தது இல்லை. தற்பொழுது செய்கிறது.

அண்ணா திமுக வில் யார் பொதுச் செயலாளாக வர வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது அந்தக் கட்சியும், அதனது தொண்டர்களும்தான். ஒருவேளை சசிகலாவே பொதுச் செயலாளராக வந்தால் அப்போது அதனை ஆதரிக்கவும், எதிர்க்கவும் ஊடகங்களுக்கு எல்லா உரிமையும் உண்டுதான். ஆனால் அதற்கு முன்பே சசிகலாவை செல்வாக்கு மிக்க கட்சிப் பதவியில் அமர்த்தும் காரியத்தில், கூச்ச நாச்சமில்லாமல் ஈடுபடுவதும், எழுதுவதும், அதற்காக லாபி செய்வதும், பொதுக் கருத்தை ஏற்படுத்த முயற்சிப்பதும் அருவருப்பான காரியங்கள். இது குறைந்த பட்ச பத்திரிகை தர்மம், நேர்மை இல்லாத காரியமாகும். இதற்குப் பெயர்தான் பெயிட் நியூஸ் …. அதாவது காசு வாங்கிக் கொண்டு எழுதுவது, கூவுவது!

இரண்டாண்டுகளுக்கு முன்பு தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஊடகவியலாளர்களைப் பார்த்து ‘ஒரு காரியத்தை’ச் செய்தார். விஜயகாந்த் அப்படிச் செய்தது சரியானதுதான் என்ற கருத்தை 90 சதவிகித மக்களிடம் ஏற்படுத்தும் காரியத்தைத்தான் சசிகலா விவகாரத்தில் சில ஊடகங்கள் இன்று செய்து கொண்டிருக்கின்றன …. இதுதான் உண்மை.

கட்டுரை: ஆர் மணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe