
சோழவந்தான் அருகே மேட்டு நீரேத்தான் கிராமம் துர்க்கை அம்மன் கோவிலில், ஐந்தாவது முறையாக கோவில் உண்டியலை உடைத்து முகமூடிக் கொள்ளையர்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் சிசிடிவி காட்சிகள்;
போலீசார் விசாரணை !
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேட்டு நீரேத்தான் கிராமத்தில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில், நேற்றைய முன் தினம் நடு இரவில் மர்ம நபர்கள் இருவர் கோயிலுக்குள் புகுந்தனர். இதில், ஒருவர் கருப்புத் துணியால் முகத்தை மூடிக்கொண்டு வந்திருந்தார். மற்றொருவர் கோவிலில் இருந்த மஞ்சள் சேலையை கிழித்து முகத்தில் அடையாளம் தெரியாதவாறு கட்டியிருந்தார். இருவரும் சேர்ந்து உண்டியல்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, சோழவந்தான் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இக்கோவிலில், ஐந்தாவது முறையாக உண்டியல் திருட்டு மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலில் சாமி கும்பிடுவதில் இரு பிரிவினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இக்கோவிலில் திருவிழா நடைபெறவில்லை இரு தரப்பினரையும் வருவாய்த்துறை மற்றும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், சமரசம் ஏற்படவில்லை இதனால், துர்க்கை அம்மன் கோவிலில் உண்டியல் திருட்டு நடந்திருப்பதை யார் புகார் கொடுப்பது என்று கேள்விக்குறியாக இருப்பதால், நேற்று இரவு வரை சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர் .
இரு பிரிவினரும் கருத்து வேறுபாட்டால் சாமி கும்பிடாததால் இதை சாதகமாக பயன்படுத்தி உண்டியலில் அதிகமாக பணம் இருக்கும் என்று உண்டியலை திருடி சென்று விட்டார்கள் என்று இப்பகுதி பக்தர்கள் கூறுகின்றனர் .
மேலும், இக்கோவிலில் முகூர்த்த காலங்களில் திருமண விழாக்கள் நடைபெறுவது வழக்கம். ஆகையால், பெண்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐந்து முறை கொள்ளை சம்பவம் நடந்தும் இதுவரை கொள்ளையர்களை காவல்துறையினர் பிடிக்காததால் , மக்கள் ஒருவித அச்சத்துடன் உள்ளனர் .
கொள்ளை சம்பவம் நடக்கும் போது பக்தர்கள் யாரேனும் கோவிலுக்குள் வந்திருந்தால் கொலை நடந்திருக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் பொதுமக்கள் அச்சத்துடன் கூறுகின்றனர் . ஆகையால், இக்கோவில் அருகில் ரோந்து பணியை அதிகரிக்கவும் புற காவல் நிலையம் ஒன்று அமைக்கவும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.