நாம் விரும்புகிறோமோ இல்லையோ சில விஷயங்களை நாம் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். அல்லது லேசாக மாற்றிப் பயன்படுத்தலாம். அவற்றை முற்றாக தவிர்ப்பது சாத்தியமில்லை. அவசியமும் இல்லை.

கி.பி. கி.மு. என்பது இத்தனை ஆண்டுகாலம் பழக்கத்தில் இருந்தது. யாராலும் அதை அப்போது மாற்ற முடிந்திருக்கவே இல்லை. இப்போது, அதை பொதுயுகத்துக்கு முன், பொது யுகம் என்று மாற்றியிருக்கிறோம். ஆனால், அப்போதும் கிறிஸ்துவின் பிறப்பை அடிப்படையாக வைத்துச் செய்யப்பட்ட அந்தக் காலப் பகுப்பை முழுவதுமாக மாற்றமுடியவில்லை. உலகம் முழுவதும் ஏற்கும் வேறொன்றை முன்னிறுத்துவது சாத்தியமில்லை என்பதால் முடிந்தவரை மட்டுமே மாற்றிக் கொண்டிருக்கிறோம்.

கோவிலுக்கு பாரம்பரிய உடையுடன் போய் வருவது தான் மரபு. ஆனால் மேற்கத்திய உடை என்பது வெகுவாகப் பரவி, பழகிவிட்டதால் அதை அணிந்த படியே கோவிலுக்கும் சென்று வருகிறோம்.

ஆங்கிலப் புத்தாண்டு என்பது நமது கொண்டாட்டமல்ல என்பது உண்மைதான். ஆனால், அதை முற்றாகத் தவிர்ப்பதும் சாத்தியமில்லை. அவசியமும் இல்லை. ஆங்கிலப் புத்தாண்டுக்கு கோவில் நடை திறக்கலாமா என்ற கேள்விக்குத் திறக்கலாம் என்பதே பதில்.

ஆனால், நமது காலக் கணிப்பின் படியும் உண்மை நிலையின் படியும் காமன் சென்ஸின் படியும் ஒரு நாள் என்பது சூரிய உதயத்தில்தான் தொடங்குகிறது. எனவே காலை 6.30க்கு நடை திறந்து புத்தாண்டைக் கொண்டாடலாம். புத்தாண்டு வாழ்த்துக்களையும் 6.30க்குச் சொல்வது, அப்போது வீட்டில் அகல் விளக்கு ஏற்றுவது, ஒரு செடிக்கு நீர் ஊற்றுவது, பசுவுக்கு புல் கொடுப்பது, பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது என இந்து மரபின்படி கொண்டாடலாம்.

கிறிஸ்மஸ் விடுமுறை, ரம்ஜான் விடுமுறை எனக் கிடைக்கும் விடுமுறையிலெல்லாம் திருப்பதி கோவிலுக்குப் போவது நம் மரபாக இருக்கையில் வாகாகக் கிடைக்கும் இன்னொரு விடுமுறை தினத்தை இந்துத் தன்மையுடன் கொண்டாடுவதில் தவறே இல்லை.

சொர்க்கவாசல் நடை திறப்புக்கு காத்திருந்து தரிசிப்பதுபோல் சரியாக சூரியனின் முதல் கிரணம் பூமியைத் தழுவுகையில் நடை திறந்து நவீன உலகுடனான வாழ்வியலில் புதியதொரு தொடக்கமாக இதைக் கொண்டாடலாம். சித்திரை ஒன்று பாரம்பரிய வாழ்க்கை முறையில் புதியதொரு தொடக்கமாக வழக்கம்போலவே தொடரும்.

கிறிஸ்தவத்தைப் போல் புத்தாண்டை நள்ளிரவில் கொண்டாடவும் வேண்டாம். இஸ்லாமைப் போல் அதை முற்றாக நிராகரிக்கவும் வேண்டாம். இந்து வழியில் அதிகாலையில் கோவிலுக்குச் சென்று அதைக் கொண்டாடலாம் என்பது தொலை நோக்குப் பார்வையில் நன்மையே தரும்.

இன்னும் சொல்லப்போனால், 12 மணிக்கு ஆங்கிலக்கணக்கின்படி புதிய வருடம் தொடங்கும் நேரத்தில் தேசியக் கொடியை ஏற்றி நாம் இந்தியர்கள், இந்தியர் அனைவரும் சகோதரர்கள் என்று கடற்கரையில் உறுதிமொழி எடுத்து அணிவகுப்பு நடத்தலாம். இந்தக் கொண்டாட்டத்தை மதத்தோடு கலாசாரத்தோடு பாரம்பரியத்தோடு இணைப்பதை விரும்பாதவர்கள் தேசத்தோடு தேசத்தின் விழாவோடு தேசப் பற்றை வெளிப்படுத்தும் விழாவாகக் கொண்டாடலாம்.

உலகம் முழுவதும் தேவாலயங்களில் புது வருடப் பிறப்பைக் கொண்டாடுவார்கள். இந்தியாவில் கடற்கரையில், பொது மைதானத்தில் தேசியக் கொடி ஏற்றி உறுதிமொழி எடுப்பார்கள் என்று ஒரு புதிய விழாவை, பாரம்பரியத்தை உருவாக்கலாம்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...