மக்களுக்கு அடிச்சுது லக்கி பிரைஸ்! டிடிவி தினகரனுக்கு பரிசுப் பெட்டி சின்னம்! அட… டோக்கனே தேவையில்லையே…!

Published:

ttvdinakaran - 2026

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பொதுவான சின்னத்தில் போட்டியிட சின்னம் வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். அப்போது அவர், எதிரிகள் அனைவரையும் குக்கரில் போட்டு வேக வைப்பேன் என்றார். மேலும், குக்கர் விசில் சத்தம் ஊரை எழுப்பும், உங்களை எழுப்பும் என்று பிரசாரம் செய்து, பெண்களைக் கவரும் விதத்தில் தொகுதி மக்களுக்கு குக்கர்களை வழங்கினர். .அதுமட்டுமின்றி, மாபெரும் புரட்சி ஒன்றைச் செய்தார். 20 ரூபாய் நோட்டில், வாக்காளரின் எண் எழுதி அதை தங்களது ஏஜெண்டுகளிடம் கொடுத்து, அனைவரும் பத்தாயிரம் ரூபாய் பெற்றுக் கொள்ளலாம் என்று முன் வாக்குறுதி அளித்தார்.

மற்ற கட்சிகள் நேரடியாக நாலாயிரம் ஆறாயிரம் என பணமே கொடுத்துக் கொண்டிருக்க… பத்தாயிரம் ரூபாய் பின்னர் தருகிறேன் இப்போது பிடியுங்கள் இந்த இருபது ரூபாய் டோக்கனை என்று சொல்லி தினகரன் தரப்பு கொடுத்ததை நம்பி வாங்கி ஓட்டு போட்டனர் புத்திசாலியான மக்கள். இந்த டோக்கன் முறையினால், பல கட்சி கூட்டணியில் போட்டியிட்ட திமுக.,வின் வேட்பாளர் டெபாசிட்டே இழந்தார். இப்படி டோக்கன் மூலம் ஜெயித்த முதல் எம்.எல்.ஏ. என்ற பெருமையைப் பெற்றார் டிடிவி தினகரன்.

ஆனால், சொன்னபடிக்கு எவருக்கும் பின்னர் பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுக்கப் படவில்லை. மக்களும் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் பார்த்தனர்… டிடிகே தினகரன் வரும்போதெல்லாம் எதிர்ப்பு தெரிவித்துப் பார்த்தனர். எந்தப் போராட்டங்களுக்கும் விடை தெரியாமல் போனது.

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

இறுதியில் வெறுத்துப் போன ஆர்.கே.நகர் வாசிகள்… இந்தா தொலைந்து போ… என்று சாபம் இட்டு தங்களிடம் கொடுக்கப் பட்ட இருபது ரூபா டோக்கனை ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கதவு இடுக்குகளின் வழியாக உள்ளே வீசிச் சென்றனர்.

இருப்பினும் மனம் கலங்காத டிடிவி தினகரன் தொடர்ந்து அதிமுக.,வுக்கு அடிபோட்டார். அதிமுக., எப்படியாவது தன் பக்கம் வந்துவிடும் என்று பார்த்தார். இரட்டை இலை சின்னம் தங்களுக்குத்தான் சொந்தம் என்று டிடிவி தினகரன் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் அது ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையிலான அதிமுக அணிக்கு என தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டார்.

இந்நிலையில் தனிக்கட்சியாக துவக்கினால் இரட்டை இலைக்கு உரிமை கோர முடியாது என்பதால் தனி அணியாக தேர்தல் கட்சியாக பதிவு செய்யாமல் அமமுக இயங்கியது. மேலும், நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலில் தங்களுக்கு என்று தனி சின்னமாக, குக்கர் சின்னம் கேட்டு டிடிவி அணி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

ஆனால், அமமுக, ஒரு தனிக் கட்சியாக பதிவு செய்யாததால், ஒரு பொதுச் சின்னம் பதிவு செய்யப்படாத கட்சிக்கு வழங்க இயலாது என்று கை விரித்தது தேர்தல் ஆணையம். இதையடுத்து தாங்கள் தனி அணியாக ஏற்கனவே இயங்கி வருகிறோம் தங்களுக்கு குக்கர் சின்னம் ஏற்கனவே வழங்கப் பட்டுள்ளது என டிடிவி தரப்பில் கோரப்பட்டது. குக்கர் சின்னம் வழங்காவிட்டால், ஏதாவது ஒரு பொதுச்சின்னம் ஒதுக்குங்கள், தனிக் கட்சியாக பதிவு செய்ய தயார் ஆனால் கால அவகாசம் இல்லை என்று தினகரன் தரப்பு கூறியது.

இதை ஏற்றுக்கொள்ள மறுத்த உச்ச நீதிமன்றம் குக்கர் சின்னம் வழங்க உத்தரவிட முடியாது. அதேநேரம், நிலைமையை கருத்தில் கொண்டு டிடிவி தினகரன் அணிக்கு ஒரு பொதுவான சின்னத்தை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

மேலும், அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றால், சுயேச்சையாகத் தான் கருதப் படுவார்கள் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் தேர்தல் ஆணையம் தரப்பில் டிடிவி தினகரன் அணிக்கு பொதுவான சின்னம் ஒதுக்கியது. அதன்படி, டிடிவி அணிக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகள் பாண்டிச்சேரி 1 தொகுதி, தமிழகத்தில் 18 சட்ட மன்ற தொகுதிகளின் இடைத் தேர்தல் மற்றும் பாண்டிச்சேரியில் ஒரு சட்டமன்ற இடைத்தேர்தல் என மொத்தம் 59 தொகுதிகளில் டிடிவி அணிக்கு பரிசுப் பெட்டி சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

இதன்மூலம் டிடிவி தினகரன் அணி இந்த தேர்தலில் பரிசுப் பெட்டி சின்னம் மூலம் போட்டியிடுகிறது. பரிசுப் பெட்டி சின்னத்தில் தினகரன் அணியினர் போட்டியிட்டாலும் அவர்கள் சுயேச்சைகளாகத்தான் கருதப்படுவார்கள்.

இந்நிலையில் இப்போதே பரிசுப் பெட்டிகளின் ஆர்டர்கள் கடைகளில் குவியத் தொடங்கியுள்ளன. மக்களுக்கு வழங்குவதற்காகவும், பரிசுப் பெட்டிக்குள் பணம் இருக்குமா என்றும் பலர் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர். அல்லது இதிலும் ஏதாவது டோக்கன் போட்டுக் கொடுத்து ஆர்.கே.நகரில் ஏமாற்றியது போல் ஏமாற்றிவிடுவார்களோ என்ற அச்சமும் பலரிடம் ஏற்பட்டுள்ளது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img