Home Blog Page 5615

கேள்விகளை முன்கூட்டியே தரக் கோரிய சசிகலா மனு தள்ளுபடி

sasikala - 2026

சென்னை:

அன்னியச் செலாவணி மோசடி வழக்கில் அமலாக்கத் துறை தன்னிடம் கேட்கவுள்ள கேள்விகளை முன்கூட்டியே தன்னிடம் அளிக்க வேண்டும் என்று கோரி சசிகலா தாக்கல் செய்த மனுவை சென்னை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஜெ.ஜெ., ‘டிவி’க்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்களை இறக்குமதி செய்ததில் அன்னியச் செலாவணி மோசடி நடந்துள்ளதாக சசிகலா மற்றும் பாஸ்கரன் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது தன்னிடம் கேட்கப்படவுள்ள கேள்விகளை தனக்கு முன்கூட்டியே அளிக்க வேண்டும் எனக் கோரி சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறி சசிகலாவின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 14)

srivaratharajar kanchi - 2026
திருத்தேர் சாத்துபடியுடன் ஸ்ரீ பேரருளாளன். பிரம்மோற்சவம் 7ம் நாள் அதிகாலைkan

வந்தான் வரதன் ( பகுதி – 14 – 1)

உன்னுடைய வடகரையில் நான் நித்தியமாக வாஸம் செய்யப் போகிறேன் என்று வேகாஸேதுப் பெருமான் சொன்னதை கவனமுடன் கேட்டான் பிரமன் !

மேலும் உனக்கான பரிசு விரைவில் என்று அவன் திருவாய் மலர்ந்தருளியதும் அவன் ( பிரமன் ) நெஞ்சில் நிழலாடின !

தேவர்களுக்கும் ரிஷி முனிவர்களுக்கும் ஏற்பட்ட ( யாக பசு ) பிரச்சினையும், தான் சாபம் பெற்றதும், ஸரஸ்வதி கோபித்துச் சென்றதும் , பூமியில் வேள்விக்குத் தகுந்த இடம் தேடி அலைந்ததும் , அசரீரி வாக்கும், அதனைத் தொடர்ந்து தான் காஞ்சிக்கு வந்ததும் , ஸரஸ்வதியினாலும் அஸுரர்களாலும் பல தடைகள் தனக்கும் யாகத்திற்கும் ஏற்பட்டதும் , ஓரோர் முறையும் எம்பெருமான் ரக்ஷித்ததும் !! பிரமன் சிந்தித்துக் கொண்டிருந்தான் !

அப்பப்பா !!!! குறைவான சமயத்தில் நிறைவாக எத்தனை நிகழ்ச்சிகள் நடந்தேறி விட்டன !

எண்ணிலாப் பெரு மாயனே ! உன்னை மறவாமையே யான் வேண்டிடும் மாடு ( = செல்வம் ) .. எனக்குற்ற செல்வம் நீயேயன்றோ !

நின் பெருமையைச் சிந்தித்திருப்பதே நமக்குச் சேமமாகும் ( நன்மையாகும் ) !

பரிசாக உனைப் பெறும் நாளை நான் ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளேன் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் !

ஸரஸ்வதியை தன்னுடன் சேர்த்துக் கொண்டு வேள்வியை குறையறச் செய்து வரலானான் !

ஒரு நன்னாளில் , உத்தர வேதி ( அக்னி ஸ்தாபனம் செய்து யாகம் செய்யுமிடம் ) நடுவில் , ஆயிரம் கோடி ஸூர்யர்கள் ஒரு சேர உதித்தாற் போல் , ஒரு மஹா தேஜஸ்ஸு தோன்றிற்று !!

வந்தான் வரதன் !!!! வந்தான் வரதன் !!!! என்று அனைவரும் ஆனந்தக் கூத்தாடினர் !!

தேவர்களும் , நித்ய முக்தர்களும் ” காளங்கள் வலம்புரி கலந்தெங்குமிசைத்து ” தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் !!

வரதனுடைய தாமரைக் கண்களோடும் ; செங்கனி வாயொன்றினோடும் ; செல்கின்ற தம் நெஞ்சங்களைத் தொலைந்து போகாது காத்திடப் பாடுபட்டுக் கொண்டிருந்தனர் அனைவரும் !!

அத்யாச்சர்யமான ப்ராதஸ் ஸவந காலத்தில் வரதன் அவதாரம் !!

அது என்ன ப்ராதஸ் ஸவந காலம் ?!

அறியக் காத்திருப்போம் !!

வரதன் வந்த கதை ( பகுதி 14-2 )

பொன்மலை உதித்தாற் போல் , புண்ணிய கோடி விமானம் தோன்ற , அதனுள் ( ஒளியில் ) ஸூர்யனும் தோற்றுப் போகக் கூடிய அளவிற்கு ; ஒளி வெள்ளமாய் வரதன் வந்துதித்தான் !!

“சைத்ர மாஸி ஸிதே பக்ஷே சதுர்தச்யாம் திதௌ முனே ..சோபனே ஹஸ்த நக்ஷத்ரே ரவிவார ஸமந்விதே |

வபாஹோமே ப்ரவ்ருத்தே து ப்ராதஸ் ஸவந காலிகே.. தாதுரத்தர வேத்யந்த : ப்ராதுராஸீத் ஜநார்த்தந : || ”

சித்திரை மாதத்தில்.. சுக்ல பக்ஷத்தில்..சதுர்தசி திதியில்..ஞாயிற்றுக் கிழமையுடன் கூடிய , மங்களகரமான ஹஸ்த நக்ஷத்ரத்தில் , “வரந்தரு மாமணி வண்ணன்” வந்து தோன்றினான் !!

ப்ராதஸ் ஸவந காலத்தில் பிரமன் கண்களுக்கு விஷயமானான் இறைவன் !!

ஒரு வேள்வி ( பசு யாகம் ) , காலை , நடுப்பகல், மாலை என த்ரி ( மூன்று ) காலங்களில் நடத்தப்பட வேண்டும் ..அவைகளுக்கு முறையே ப்ராதஸ் ஸவநம், மாத்யந்தின ஸவநம், ஸாயம் ஸவநம் என்று பெயர்கள் !

வபையை ( விலங்கின் உள் சதையை ) எடுத்துச் செய்யப்படும் யாகம் , காலையில் வேள்வியில் செய்யப்படவேண்டும் !!

அச்சமயத்தில் தான் பேரருளாளன் பெருங்கருணையுடன் வந்தருளினான் !!

அனைவருக்கும் ஒரே புகலான ஸாக்ஷாத் நாராயணன் நமக்காக வரதனாய் வந்தார் !! சங்கம் சக்ரம் கதை ஆகியவற்றை ஏந்தியுள்ள பரம்பொருள் நமக்காக இங்கு தோன்றினான் !!

வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கு , நமக்காக இங்கு ( வரதனாய் ) வந்தது !! நாம் வானேற ( வைகுந்தம் செல்ல ) வழி தருமவன் ; தானே நம் பொருட்டு வரதனாய் வந்தான் !!

இப்படிப் பலரும் , வரதனைக் கண்டு ” தொடர்ந்தெங்கும் தோத்திரம் ” சொல்லினர் !!

“மஞ்சுயர் பொன்மலை மேலெழுந்த மாமுகில் ” போன்றவனான வரதன் பேரழகில் அங்குள்ளார் அனைவரும் தங்களை மறந்திருந்தனர் !!

கண்கள் காண்டற்கரியவன் ; கண் முன்னே நிற்கக் கண்ட நான்முகன் , பித்துப் பிடித்தவனைப் போலே ஆயினன் !!

“அத்தா அரியே என்றுன்னையழைக்க பித்தாவென்று பேசுகின்றார் பிறரென்னை ” என்கிறார் திருமங்கையாழ்வார் !! பக்தியிற் சிறந்தவர்கள் ஊரார் கண்களுக்குப் பித்தர்களாகத் தான் தெரிவார்கள் !!

உந்மத்தவத் , ஜடவத், பிசாசவத் என்று பக்தியின் இயல்புகளை நாரத பக்தி ஸூத்ரம் வருணிக்கின்றது !!

பக்தி {=இறை அன்பு ) என்பதுஒருவருக்கொருவர் வேறுபடும் ! சிலரை பித்தர்களைப் போலே ஒரு இடத்திலே இருக்க விடாமல் சுற்றப்பண்ணும் !! சிலரை ஜடத்தைப் போலே ஒரே இடத்திலே வைத்திருக்கும் !! சிலரை பிசாசத்தைப் போலே ஆக்கும் !!

” மீரா ஹோ கயி மகன்.. ஓ கலி கலி ஹரிகுண் கானே லகீ ” ( மீரா ( கண்ணன் மேல் பைத்தியமானாள் ; தெருத்தெருவாக சுற்றிச் சுற்றி ஹரியின் குணங்களைப் பாடத் தொடங்கினாள் ) என்கிற பக்தை மீராவின் பஜனை ” பக்தி – உன்மத்த நிலைக்கு ஒரு எடுத்துக்காட்டு !

“ஜட பரதர் ” – பக்தியில் சிறந்தவர். ஜடத்தைப் போல் இருந்தவர் .. இது , பக்தி – ஜட நிலைக்கு எடுத்துக்காட்டு !! பக்தி எதனைத் தான் செய்யாது என்கிறார் சங்கர் பகவத் பாதர் !

வரதனைக் கண்ட பிரமன் திக்குமுக்காடிப் போனான் ! நெடுநாள் பசியுடையவன் சோற்றைக் கண்டாற் போலே , வரதனைக் கண்களால் பருகிக் கொண்டிருந்தான் அயன் ! ” ஆராவமுதே !! ஆராவமுதே !! என்று வாய் வெருவிக் கொண்டிருந்தான் !!

கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக , நடுநடுங்கின உடலோடே , என்ன செய்வதென்றறியாதவனாய் இங்குமங்கும் ஓடியோடி வரதனை ( தன் கண்களால் ) விழுங்கிக் கொண்டிருந்தான் !

சிறிது போது , தன் கைகளைத் தட்டிக் கொண்டு , ” வரதராஜா !! தேவராஜா !! தயாநிதே !! பேரருளாளா !! ” என்று சொல்லிக் கொண்டும், ஆடிக்கொண்டும் ப்ரதக்ஷிணங்களைச் செய்தான் !!

சுற்றிச் சுற்றிச் வந்தவன் , தன்னை மறந்தவனாய் அவ்வப்போது அப்ரதக்ஷிணமாகவும் சுற்றினான் !!

ப்ரதக்ஷிணம் ப்ரைதி ததாsப்ரதக்ஷிணம் ப்ரயாதி தூரம் புநரேதி ஸந்நிதிம் |

கரேண பஸ்பர்ச மமார்ஜ தத்வபு: ப்ரியேண காடம் பரிஷஸ்வஜே க்ஷணம் ||

என்று பிரமன் நிலையை வருணிக்கிறது புராணம் !!

“அத்யந்த பக்தியுக்தஸ்ய ந சாஸ்த்ரம் நைவ ச க்ரம : ”

சிறந்த பக்தியுடையவர்களை ; எந்த சாஸ்த்ரங்களும், சட்டங்களும் , நியமங்களும் கட்டுப் படுத்தவே செய்யாதன்றோ !

பிரமன் நினைத்துக் கொண்டான் ;

வரதன் பக்கத்திலிருந்து ஸேவித்தால் இத்தனை அழகாய் இருக்கிறானே ; தூரத்திலிருந்து வணங்கினால் ??

உடனே தள்ளி விலகி நின்று தரிசித்தான் !

இன்னமும் அழகனாய்த் தெரிந்தான் வரதன் .திரும்பவும் பக்கத்தில் வந்து வணங்கினான்.. மீண்டும் தள்ளிச் சென்று வணங்கினான்.. பக்கத்தில் வருவதும் , பேரருளாளனைத் தொட்டுப் பார்ப்பதும் , அவன் கன்னங்களைக் கிள்ளுவதும், அவனைக் ( வரதனை ) கட்டிப்பிடிப்பதும் ..! அதிகம் கட்டிப்பிடித்தால் குழந்தை வரதனுக்கு வலி ஏற்படுமோ என்று அஞ்சி நடுங்கி தன் கைகளை விலக்குவதும் !! ..

பிரமன் செயல்கள் பலருக்கும் ஆச்சரியமூட்டின !!

நாத்தழும்ப நான்முகன் வரதனைப் போற்றினான் !!

எங்ஙனம் ??

காத்திருப்போம் !!

மணவாள மாமுனிகள் அருளிச் செய்த தேவராஜ மங்களம்

புருஷாய புராணாய புண்யகோடி நிவாஸிநே |
புஷ்பிதோதாரகல்பத்ருகமநீயாய மங்களம் ||

வரதன் வந்த கதை ( பகுதி 14-ல் 3 )

பெருவிசும்பருளும் பேரருளாளன் புன்முறுவல் பூத்தபடி பிரமனுடைய தோத்திரங்களை ஏற்றுக் கொண்டிருந்தான் ! பெருமானுடைய பெருங்கருணையை எண்ணியபடி பிரமனும் அவனைப் போற்றிக் கொண்டிருந்தான் !

இறைவா !! ஆமுதல்வனே !! உன்னை நம்புபவர்களை நீயே வழி நடத்துகின்றாய் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி விட்டது !!

தனி நின்ற சார்விலா மூர்த்தீ !! அடியார்களிடம் உனக்குத்தான் எத்தனை அன்பு.. பக்த வத்ஸலனே ..ப்ருஹஸ்பதி சாபத்தாலும், ஸரஸ்வதி கோபத்தாலும் உடைந்து போயிருந்த நான் ; நீ அருள் செய்திருக்கவில்லை என்றால் தொலைந்தே போயிருப்பேன் .

அசரீரியாய் வந்தாய்.. ஸத்ய வ்ரத க்ஷேத்ரம் வரப் பணித்தாய் ! கச்சியைக் காட்டினாய் ! தந்தாவள கிரியாம் இவ்வானை மலையை ( வேள்விக்காகத் ) தந்தருளினாய் !

ஸரஸ்வதி மற்றும் அஸுரர்களால் ஏற்பட்ட இடர்ப்பாடுகளை தூள் தூளாக்கினாய் !! சம்பராஸுரனால் ஆபத்து வந்த போது , விளக்கொளிப் பெருமானாய் வந்தாய் !! அஸுரர்கள் திரண்டு வந்து தீமை செய்த போது ( வேளுக்கை ஆளரி ) நரஸிம்ஹனாய் வெளிப்பட்டாய் ! ஸரஸ்வதி காளியையும் அஸுரர்களையும் அனுப்பின போது , அஷ்டபுஜப்பெருமானாய் காக்ஷி தந்தாய் ! வல்வினை தொலைத்தாய் !! சயனேசனாய் ( பள்ளி கொண்டானில் ) தரிசனம் தந்தாய் !! திருப்பாற்கடலில் ரங்கநாதனாய்த் தோன்றினாய் !! வெஃகணைப் பெருமானாய் அருள் பாலிக்கின்றாய் !!

இதோ இப்பொழுது, இங்கே அக்னி மத்யத்தில் பேரருளாளனாய்ப் புன்முறுவல் பூக்கின்றாய் !!

உன் அன்பினை , உன் பண்பினை யாரால் கொண்டாட முடியும் ?! நான்மறைகள் தேடியென்றும் / எங்கும் காணமாட்டாச் செல்வனன்றோ நீ !! என் முயற்சியினால் நான் உன்னைக் காணாது தோற்ற போது ; நீயேயன்றோ நிர்க்கதியாய் நின்ற என் கண் முன்னே தோன்றினாய் !!

உலகிற்கே கண்ணான வேதத்திற்கு ; நடுவேயுள்ள கருவிழி போன்றவன் நீயே !! உனைப் போலே கருணை மழை பொழிய யாராலியலும் ?! கடலைப் போன்றவன் நீ !! உன்னை யார் முழுவதுமாகக் காண இயலும் !! நீர் ( தண்ணீர் ) இவ்வுலகினைக் காப்பது போலே காப்பவன் நீ !! அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல் எம் பிழைகளைப் பொறுப்பதில் பூமிக்கு ஒப்பானவன் நீயே !!

உன்னுடைய குணங்களை நாங்கள் ஆராய முற்பட்டால், உன்னைப் போல் ஒருவன் எங்குமில்லை என்கிற முடிவிற்கு வருகிறோம் !!

கைம்மாவுக்கு ( யானை ) அருள் செய்த கார்முகில் போல் வண்ணா !! என் கண்ணா !!

இவ்வடியவன் உன்னைத் துதிக்கின்றேனா , அல்லது பிதற்றுகின்றேனா ?! அதுவும் அறியேன்.. நான் எதுவுமறியேன் !!

கருமணியே !! உன்னை நான் கரிகிரி மேல் கண்டேன்.. கண்டவுடன் என் கடுவினைகள் அனைத்தும் தொலைந்திடக் கண்டேன்..

நானே பாக்கியசாலி.. நானே பாக்கியசாலி என்று உணர்ச்சி வசப்பட்டுப் பேசலானான் !!

காண்தகு தோளண்ணல் அத்தியூர்க் கண்ணன் ( வரதன் ) சிரித்த படி, அஞ்சல் ( அஞ்சாதே ) என்கிற அபயத் திருக்கரத்துடன் பிரமனை நோக்கி வார்த்தை சொல்லத் தொடங்கினான்..

என்ன சொன்னான் ?!

காத்திருப்போம் !!

 

எழுத்து: ஸ்ரீ உ.வே அக்காரக்கனி ஸ்ரீநிதி

குறிப்பு: இந்தத் தொகுப்பு விரைவில் நூலாக்கம் பெறுவதால், இதனை அச்சுக்கு எடுத்துக் கையாள வேண்டாமே!

Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami With his Thiruttagappanaar (in the framed photo )
Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami
With his Thiruttagappanaar (in the framed photo )

காஞ்சியில் திருத்தேர் உத்ஸவம் இன்று கோலாகலம்

kanchipuram varadaraja perumal temple therottam - 2026
திருத்தேரில் ராஜ அலங்காரத்தில் எம்பெருமாள் ஸ்ரீதேவி சமேதராக எழுந்தருளி அருள்பாலித்த காட்சி

காஞ்சீபுரத்தில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோத்ஸவம் ஜூன் 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7ஆம் நாள் உத்ஸவமான இன்று தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலை 3 மணி அளவில் ராஜ அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஊர்வலமாக வந்த எம்பெருமான் காந்திசாலை தேரடி பகுதியில் உள்ள திருத்தேரில் எழுந்தருளினார். திருத்தேரில் ராஜ அலங்காரத்தில் எம்பெருமாள் ஸ்ரீதேவி சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காலை 6 மணிக்கு மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் தேரோட்டம் துவங்கப்பட்டது. அமைச்சர்கள் சேவூர் ராமச் சந்திரன், கடம்பூர் ராஜூ, அதிமுக மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ., பழனி, வி.சோமசுந்தரம், மாவட்ட பேரவை செயலாளர் கே.யூ.எஸ். சோமசுந்தரம் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

 

பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற கோ‌ஷத்துடன் வடம் பிடித்து திருத்தேரை இழுத்தனர். காந்திசாலை, காமராஜர் வீதி, இந்திராகாந்தி சாலை, ராஜவீதிகள் வழியாக திருத்தேர் வலம் வந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் வழிநெடுக பெருமாளுக்கு நிவேதனப் பொருள்களுடன் காத்திருந்தனர். நகரின் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதி மானி தலைமையில், உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Sanskari bahus only, No mall-going Girls: Rabri devi’s matrimonial advt for her sons speaks RSS ideology

0

lalu prasad yadav 70th birthday - 2026

Patna:
Lalu prasad yadav wife Rabri devi gives matrimonial advertisement for her sons speaks RSS ideology.

Who says sanskar (tradition and culture) is the domain of the RSS and the BJP only? Even the former chief minister of Bihar Rabri Devi strongly believes in the idea of upholding Indian sanskar. That is why wife of Lalu Prasad Yadav is now looking for sanskari brides for her two bachelor sons, Tej Pratap Yadav and Tejashwi Prasad Yadav. Now they are in 20s.

Sunday Lalu’s family celebrated his 70th birthday. At that time, Rabri expressed her desire to have daughter-in-law who are well-cultured. Rabri also insisted that brides for her sons should be the one who don’t visit malls and cinema halls. Probably, Rabri thinks that girls who love to go for shopping in malls and enjoy films in theatres are not ‘cultured’.

“Cinema hall aur mall jane wali ladki nahi chahiye. Ghar chalaane wali, bade buzurg ka aadar karne wali, jaise ki hum hain, waisi ladki chahiye. (I don’t want cinema hall and mall-going girls. She should be one who can look after the house, respect elders, and manage outside work, just like me)”.

Rabri was quoted as by The Times of India. While Rabri strongly detest malls, her family is alleged to be involved in a ‘soil to mall’ scam. Obviously, the entire family denies the allegations labelled by BJP leader Sushil Kumar Modi. Now, Tejashwi Prasad Yadav is the deputy chief minister of Bihar and Tej Pratap Yadav is heading the health ministry portfolio.

நீதிபதி கர்ணன் படைத்த சாதனை: பதவிக்காலம் இன்றுடன் நிறைவு!

karnan judge - 2026

உச்ச நீதிமன்றத்தால் தண்டனை அறிவிக்கப்பட்டு தலைமறைவாக உள்ள நீதிபதி கர்ணனின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கர்ணன், இந்த தினத்தில் வித்தியாசமான சாதனைகளுக்குச் சொந்தக்காரராக பதவி ஓய்வு பெறுகிறார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் சிறைத் தண்டனை பெற்ற முதல் உயர் நீதிமன்ற நீதிபதி என்ற சாதனையுடன், தலைமறைவாக இருக்கும்போது பணி ஓய்வு பெற்ற நீதிபதி எனவும் பெயர் கிடைத்துள்ளது நீதிபதி கர்ணனுக்கு.

‘நீதிமன்ற அவமதிப்பு’ வழக்கில் தண்டனை பெற்று தலைமறைவாக உள்ளார் நீதிபதி கர்ணன். தமிழகத்தைச் சேர்ந்த இவர், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்தவர். சில மாதங்களுக்கு முன், சக நீதிபதிகள் மீது ஊழல் புகார் தெரிவித்ததையொட்டி, உச்ச நீதிமன்றம் தானே முன்வந்து விசாரித்ததில், நீதிபதி கர்ணன் மீது குற்றச்சாட்டுகள் பல சுமத்தப்பட்டன.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கே தண்டனை விதித்த நீதிபதி கர்ணன் மீது அடுக்கடுக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையொட்டி, உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், தன் பதவிக் காலத்திலேயே தலைமறைவானார். சுமார் ஒரு மாத காலம் தலைமறைவாக இருந்துவரும் நீதிபதி கர்ணனின் பதவிக்காலம் இன்று நிறைவடைகிறது. இதையடுத்து, நீதிபதி கர்ணனைத் தேடும் பணி மீண்டும் முடுக்கி விடப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஊழலைத் தடுக்க ஆதார் உதவும்; 10 லட்சம் போலி பான் கார்டுகளால் அதிர்ச்சி: உச்ச நீதிமன்றம்

supremecourt - 2026

புது தில்லி:

‘ஊழலைத் தடுக்க ஆதார் உதவும் என்றும், நாடு முழுவதும் தனிநபர் பெயரில் உள்ள 10.52 லட்சம் போலி ‘பான்’ கார்டுகளை குறைந்த எண்ணிக்கையாக எடுத்துக் கொள்ள முடியாது, அது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கக் கூடும்’ என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

வருமான வரி கணக்கு ஐ.டி., தாக்கல் செய்வதற்கும், வருமான வரி நிரந்தர கணக்கு எண் பான் அட்டை வாங்குவதற்கும், ஆதாரை கட்டாயமாக்கும் மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு அளித்தது. அதில், ‘ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் வகையில், வருமான வரிச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தம் செல்லும்’ என நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அஷோக் பூஷண் அடங்கிய அமர்வு கூறியது.

நீதிபதிகள் தாங்கள் அளித்த தீர்ப்பில் தெரிவித்ததாவது..

நாடு முழுவதும் உள்ள 11.35 லட்சம் போலி பான் கார்டுகளில், 10.52 லட்சம் போலி கார்டுகள் தனிநபர் பெயரில் வாங்கப்பட்டுள்ளன. தனிநபர்கள் தான், நிறுவனங்களை துவக்குகின்றனர். கறுப்புப் பணத்தை மாற்றுவதற்காக போலி நிறுவனங்களை உருவாக்க, இதுபோன்ற போலி பான் கார்டுகளை தனிநபர்கள் பயன்படுத்துவதாக மத்திய அரசு சார்பில் கூறப்பட்டதை ஏற்கிறோம். தனிநபர் பெயரில் உள்ள 10.52 லட்சம் போலி பான் கார்டுகள் என்பது மொத்த கார்டுகளில் 0.04 சதவீதம் என்றபோதிலும், இந்த போலி பான் கார்டுகள் நாட்டின் பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் தேவை. அதில் ஒன்றாகவே இதை பார்க்கிறோம்… என்று கூறினர்.

அப்போது, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை மேற்கோள் காட்டிய நீதிபதிகள், “ஏழைகளுக்காக அரசு செலவிடும் ஒரு ரூபாயில், 15 காசுகள்தான் ஏழைகளுக்கு சென்றடைகிறது’ என முன்னாள் பிரதமர் ராஜிவ், 1985ல் ஒரு கருத்தைக் கூறியிருந்தார். மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சியை நாடு அடைந்த போதும் ஏழை எளிய மக்களுக்கு அதன் பலன்கள் முழுமையாகப் போய்ச் சேரவில்லை. ஆதார் திட்டத்தின் மூலம், இந்தக் குறையை களைய முடியும் என முழுமையாக நம்புகிறோம். திட்டப் பலன்கள், உரியவர்களுக்கு முழுமையாகச் சென்றடைவதற்கு ஆதார் உதவுகிறது. போலிகளுக்கும் தகுதியில்லாதவர்களுக்கும் அரசு திட்டப் பலன்கள் சென்றடைவதைத் தடுக்க முடியும்” என்று கூறினர்.

ஊழலைத் தடுக்க ஆதார் உதவும். தனிநபர் பெயரில் 10.35 லட்சம் போலி பான் கார்டுகள் ! நிறுவனங்கள் பெயரில் 83,000 போலி பான் கார்டுகள்! இந்த ஊழலை வெளிக்கொணர்ந்து தடுத்து நிறுத்துவது ஆதார். அரசின் நலத் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் ஒரு ரூபாயில் 15 காசுகள் மட்டுமே பயனாளிகளுக்குப் போய் சேர்வதாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியால் அடையாளம் காட்டப்பட்ட குறையை ஆதார் போக்கும்… என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது குறிப்பிடத் தக்கது. இவ்வாறு ஊழலுக்கு எதிரான உறுதியான பயனுள்ள நடவடிக்கைகளை மோடியின் மத்திய அரசு எடுத்து வருவதை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துப் பாராட்டியதாகவே இந்தத் தீர்ப்பினைக் கருதுவதாக பொதுவெளியில் கருத்துகள் பகிரப் படுகின்றன.

கூட்டுசேந்து ஜெயலலிலாவைக் கொன்னுட்டாங்க: தம்பி தீபக், சசிகலாவை திட்டித் தீர்த்த தீபா

deepa jayakumar - 2026

சென்னை:

கூட்டுசேந்து அத்தை ஜெயலலிலாவைக் கொன்னுட்டாங்க என்று, தனது தம்பி தீபக், சசிகலா ஆகியோரை திட்டித் தீர்த்தார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. நேற்று போயஸ் கார்டன் இல்லத்துக்கு வந்திருந்து, கைகலப்பில் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது தீபா, தனது தம்பி தீபக், சசிகலா மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.

வழக்கமாக மிகவும் அமைதியாக நிதானமாகப் பேசும் தீபா நேற்று ஆவேசம் வந்தவர் போல் திட்டித் தீர்த்தபடி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியவை…

என்னை வீட்டுக்கு வரச் சொன்னார்கள். நான் வந்தேன். வந்ததும் உள்ளே வைத்து அடிக்கிறார்கள். உள்ளே ராஜாம்மா (ஜெயலலிதாவுக்கு சமையல் செய்து கொடுத்தவர்) மட்டும் இருக்கிறார். அடியாட்கள் கூட்டமும் இருக்கிறது. என்னை அடித்து வெளியே தள்ளினார்கள். என்னுடைய தம்பி தீபக்தான் இங்கே வரச் சொல்லி என்னைக் கூப்பிட்டான். வீடு பூட்டப்பட்டிருந்தது. உள்ளே யாரும் இல்லை. வீட்டை திறந்துவிடக் கூறினால், முடியாது என்று அங்கிருந்தவர்கள் கூறினார்கள். வீட்டின் சாவி பிரியா என்பவரிடம் இருப்பதாகவும் தெரிவித்தனர். அந்த பிரியா யார் என்று தெரியவில்லை. வந்த டி.வி. கேமராமேனை உள்ளே இருந்தவர்கள் அடித்தனர். ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டேன். என்னையும் அடித்து வெளியே தள்ளினார்கள். நான் இன்று இங்கே வருவதாகவே இல்லை. தீபக் தான் வரச்சொன்னான். நாளை (திங்கள்கிழமை) நான் தில்லி சென்று சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறேன். பிரதமரையும் சந்திக்க இருக்கிறேன். அதற்காக நேரம் கேட்டிருக்கிறேன்.

தீபக் எங்களை திட்டம் போட்டு வர வைத்திருக்கிறான். அம்மா (ஜெயலலிதா) படத்துக்கு பூ போட்டு விட்டுச் சென்றுவிடு. உன்னை யாரும் தடுக்க மாட்டார்கள் என்றான். நான் அவனிடம், ‘‘அங்கிருப்பவர்கள் என்னை உள்ளே விடமாட்டார்கள்’’ என்றேன். அதற்கு அவன், ‘‘நீ வா அவர்கள் கேட்டை திறந்து உள்ளே விடுவார்கள்’’ என்றான்.

நான் எதற்காக இங்கு வரவேண்டும். அவன் தான் என்னை இங்கு வர வைத்தான். காலை 5 மணியில் இருந்தே நீ வருகிறாயா என்று போன் செய்து கொண்டே இருந்தான். இப்படி ‘பிளான்’ பண்ணி வர வைத்து அடிக்கிறார்கள். சசிகலா கும்பலோடு தீபக் சேர்ந்து கொண்டு என்னை இங்கே வர வைத்து விட்டான். இங்கே பிரச்னை ஆனவுடன், நான்தான் மாதவனுக்கு போன் செய்து ‘‘என்னை உள்ளே வைத்து அடிக்கிறார்கள். எனக்கு பயமாக இருக்கிறது’’ என்று வரவைத்தேன்.

உள்ளே 4, 5 பேர் இருக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் யார், போலீசா? என்று கேட்டால், எதுவும் சொல்லவில்லை. நான் வரும்போது இங்கே எந்த போலீசும் கிடையாது. இப்போது இவ்வளவு போலீஸ் வந்திருக்கிறார்கள். உள்ளே அந்த ராஜாம்மா இருக்கிறார். 2 ரவுடிகள் இருக்கிறார்கள். சபாரி டிரெஸ் போட்டவங்க 2 பேர் இருக்கிறார்கள். உள்ளே வந்த கேமராமேனை அவர்கள் அடித்தனர்.

நான் மாதவனை வரச் சொன்னேன். ராஜா (தீபா பேரவை நிர்வாகி) என்னுடன் வந்ததால், அவர் மீது எதுவும் பொய் வழக்கு போட்டுவிடக்கூடாது என்பதற்காக, அவரை அழைத்துக் கொண்டு வெளியே வந்தேன். தீபக் மட்டும் உள்ளே நின்று கொண்டு யாரிடமோ பேசினான். ஆனால், அவன் யாரிடம் பேசினான் என்பது எனக்கு தெரியாது…. என்று தீபா கூறினார்.

செய்தியாளர்கள் அவரிடம் சில கேள்விகளைக் கேட்டனர். அதற்கு அவர் ஆக்ரோஷமாக பதிலளித்தார்.

நீங்கள் சொத்தை கைப்பற்றுவதற்காக இங்கே வந்ததாக சொல்கிறார்களே?. என்று கேட்டதற்கு, “தீபக் தான் என்னை இங்கே வரச்சொன்னான். நான் இங்கு இன்று வருவதாக திட்டமே கிடையாது. தீபக் தான் சசிகலா குடும்பத்தோடு சேர்ந்து கொண்டு, எல்லோரும் திட்டமிட்டு எங்களை வரவழைத்து அடிக்கிறார்கள். நாங்கள் இன்று வெளியே தப்பித்து வந்ததற்கு காரணமே அந்த டி.வி. கேமராமேன் தான். அவர் உள்ளே வந்ததால் தான், உள்ளே இருந்தவர்களால் எங்களை எதுவும் செய்ய முடியவில்லை. இல்லை என்றால் உள்ளேயே எங்களை ஏதாவது செய்திருப்பார்கள். பணத்துக்காக தீபக் இதை செய்தான்” என்றார்.

தீபக் இங்கே உங்களை வரவைத்து இப்படி மாட்டிவிட காரணம் என்ன? என்று கேட்டபோது, “தீபக் சசிகலா ஆள். அம்மாவை சசிகலாவோடு, தீபக்கும் சேர்ந்துதான் கொன்றுவிட்டான். சொந்த அத்தையை, பெத்த தாய் மாதிரி இருந்தவங்களை கொன்று விட்டான். பணத்துக்காக அவர்களோடு சேர்ந்து தீபக் இதை செய்து விட்டான்…” என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு, “ பிரதமர் இந்த ஆட்சியை கலைக்க வேண்டும். இதெல்லாம் ஒரு ஆட்சியே கிடையாது. இவர்கள் எல்லாம் (சசிகலா குடும்பத்தினர்) மனிதர்களே கிடையாது. சட்டம் இவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். தீபக்குக்கும் சேர்த்து தண்டனை கொடுக்க வேண்டும். நீங்கள் எல்லாம் மீடியாக்கள். உங்களை எப்படி அடிக்கலாம்? ஆரம்ப காலத்தில் நான் கூட மீடியாவில் தான் இருந்தேன். எப்படி அடிக்கலாம்? ஏற்கனவே கடந்த 4 நாட்களாக போலீசார் எங்களை கைது செய்ய முயற்சிக்கிறார்கள். வீட்டிற்கு வந்து நீங்கள் எப்படி பேரவை நடத்தலாம்?, எப்படி அறிக்கை விடலாம்? தினகரனுக்கு எதிராக எப்படி பேசலாம்? என்று மிரட்டுகிறார்கள். நான் எவனை பற்றி வேண்டுமானாலும் பேசுவேன். இவர்கள் யார் அதை கேட்பதற்கு?” என்றார்.

பிரதமரை இன்று சந்திக்கப் போவதாகக் கூறிய தீபா, “பிரதமரை சந்திக்க முன் அனுமதி கேட்டிருக்கிறேன். மாதவனை கொல்ல பார்க்கிறார்கள். ராஜா மீது வழக்கு போட பார்க்கிறார்கள். முதலில் என்னை ஏமாற்றி கூப்பிட்டு வந்த தீபக் மீது வழக்கு பதிவு செய்யுங்கள். சசிகலா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சட்டமும், கோர்ட்டும் அவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டும். என்னை கைது செய்ய வேண்டும் என்றால் செய்யுங்கள். ஆட்சி போனால் என்ன செய்வீர்கள்?” என்றார் ஆக்ரோஷமாக!

பிரதமரிடம் என்ன கோரிக்கை வைக்கப்போகிறீர்கள்? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “அதிமுக.,வை இந்த அராஜக கூட்டத்திடம் இருந்து காப்பாற்ற வேண்டும். எனக்கும், என்னை சார்ந்தவர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். என்னுடைய தம்பியாலேயே (தீபக்) எங்களுக்கு ஆபத்து இருக்கிறது. அதிமுக., தொண்டர்களிடம் கேட்கிறேன், இந்தக் கட்சியை காப்பாற்றுங்கள். தமிழ்நாட்டு மக்களிடம் கேட்கிறேன், இந்தக் கூட்டத்திடம் இருந்து நாட்டை காப்பாற்றுங்கள்” என்றார் தீபா.

 

அதிமுக., அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக் குழு கலைப்பு: ஓபிஎஸ்

0

panneerselvam tn - 2026

சென்னை:
அதிமுக., இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை குழு கலைக்கப்படுகிறது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். சென்னை திருவேற்காட்டில் நடந்த அதிமுக., புரட்சித் தலைவி அம்மா அணியின் சார்பில் நடைபெற்ற மாவட்ட செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஓபிஎஸ்., இதனைத் தெரிவித்தார்.

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகளாகப் பிளவுபட்ட அதிமுக., மீண்டும் இணைவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. சசிகலா குடும்பம் ஓரங் கட்டப்பட்டதை அடுத்து இப்போது ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணிகள் அடுத்தடுத்து அணிகளை இணைக்கும் முயற்சிகளை செய்து வந்தன. இதற்காக இருதரப்பிலும் பேச்சுவார்த்தை குழுக்கள் அமைக்கப்பட்டன.

சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளையும் ஏற்றால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ஓ.பி.எஸ். அணி சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக இரு அணியைச் சேர்ந்த நிர்வாகிகளும் மாற்றி மாற்றி கருத்துக்களை தெரிவித்ததால் பேச்சுவார்த்தை தொடங்குவதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில் அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை குழு கலைக்கப்படுகிறது என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

ஓபிஎஸ் பேசுகையில், அதிமுக இணைப்பு அணிகள் இணைப்பு தேவையில்லை என்று மக்கள் விரும்புகின்றனர். நான் செல்லுகிற இடமெல்லாம் தாய்மார்கள், மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் கட்சி இணைப்பு தேவையில்லை என்று கூறுகின்றனர். அதனால் அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்குழு கலைக்கப்படுகிறது என்றார்.

கர்நாடகாவில் முழு அடைப்பு: பெங்களூரில் பலத்த பாதுகாப்பு

karnataka bus strike - 2026

பெங்களூர்:

கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்புப் போராட்டம் இன்று காலை 6 மணி முதல் தொடங்கியுள்ளது. இதனால், தலைநகர் பெங்களூருல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் விவசாயிகளின் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், மகாதாயி நதிநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. கன்னட அமைப்புகள் இந்த முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்புப் போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வாட்டள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்புகள் கர்நாடகா சட்டப்பேரவையை நோக்கி பேரணி நடத்துவதால், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை பெங்களூரு நகர காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்ட வாகனங்களில் காலை முதலே போலீசார் ரோந்து வருகின்றனர். ரயில் நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்பட்டுத்தப் பட்டுள்ளது. அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர். அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இன்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல், குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி ஆகியோர் பெங்களூருக்கு வருகின்றனர் என்பதால், பாதுகாப்பு நடவடிக்கைகளில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

திருப்பம் தரும் திருப்பட்டூர் பிரம்மா!

 

thiruppattur temple - 2026

படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருந்த பிரம்மனுக்கு அகந்தை குடிகொண்டது. காரணம், சிவபெருமானைப் போல் தனக்கும் ஐந்து தலைகள் என்பதாலும், தான் படைப்புத் தொழிலில் இருப்பதாலும் கர்வம் எட்டிப் பார்த்தது. சிவனையும் தன்னையும் ஒன்றாகக் கருதிக் கொண்டார். இதையறிந்த சிவனார் தகுந்த பாடம் கற்பிக்க எண்ணினார். “தலை ஐந்து இருப்பதால்தானே இப்படி ஓர் எண்ணம்…’ என்று எண்ணிய சிவனார், பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கிள்ளி எறிந்தார். மேலும் பிரம்ம தேவனின் படைப்புத் தொழிலும் பறிபோனது. இதனால் பெரிதும் வருந்திய பிரம்ம தேவன், தன்னை மன்னித்து அருளும்படி சிவனாரை வேண்டினார்.

 

சிவனாரும் அவருக்கு சாபத்தில் இருந்து விடுபடும் வழியைக் கூறினார். அதன்படி, இந்தத் தலத்துக்கு வந்த பிரம்ம தேவர், அங்கே சிவரூபமாக இருந்த 12 லிங்கங்களையும் (த்வாதச லிங்கம்) வழிபட்டு, சாபம் நீங்கப் பெற்றார். பிரம்ம தேவனின் படைப்புத் தொழிலும் அவருக்கு மீண்டும் வந்தது. பிரம்மனின் தலை எழுத்து மாற்றப்பட்டு, மீண்டும் சக்தி பெற்றார் பிரம்மன். இதை அடுத்து இறைவன் அளித்த வரத்தின் படி, பிரம்மன் தன்னை நாடி வரும் பக்தர்களின் தலையெழுத்தை மங்களகரமாக மாற்றியருள்கிறார்.

கோயிலில் மூலவராகத் திகழ்பவர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர். அம்பிகை ஸ்ரீபிரம்மநாயகி. இங்கே சிறப்பாகத் திகழ்வது பிரம்ம தீர்த்தம். திருப்பிடவூர், திருப்படையூர் என்றெல்லாம் அழைக்கப்பட்டு தற்போது திருப்பட்டூர் என்று அழைக்கப்படுகிறது.

பிரம்மன் இங்கேயுள்ள சிவபெருமானை வழிபட்டதால் மூலவருக்கு பிரம்மபுரீஸ்வரர் எனப் பெயர். அம்பாள் பிரம்மநாயகி. அப்பர், சுந்தரர் வாக்கில் இடம்பெற்ற வைப்புத் தலமாகத் திகழும் இந்தத் தலம் புராதனத் தலமே.

சந்நிதி வலம் வரும்போது, மூலவர் சந்நிதி கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். ஒட்டினாற்போல், தனி சந்நிதியில், பிரம்மா மிகப் பெரிய திருமேனியில் அமர்ந்த நிலையில் அருள்கிறார். இங்கே, பிரம்மபுரீஸ்வரர் சந்நிதி கோஷ்டத்தில் ஸ்ரீவிஷ்ணுவும் திகழ்வதால், மூன்று தேவர்களையும் ஒரே சுற்றில் தரிசித்துவிடும் பாக்கியம் கிடைக்கிறது.

அட்சமாலை மற்றும் கமண்டலத்துடன் பிரம்மா இங்கே மங்கல ரூபியாகக் காட்சி தருகிறார். மனிதர் வாழ்வை சிறக்கச் செய்யும் பிரம்மாவுக்கு மஞ்சள் காப்பிட்டு புளியோதரை படைத்து, மஞ்சள் பிரசாதத்தை பக்தர்களுக்குத் தருகின்றனர். மஞ்சள் காப்பு அலங்காரத்தில் வியாழக் கிழமைகளில் பிரம்மாவைக் காண்பது சிறப்பு. இங்குள்ள சந்நிதிகளில் மஞ்சள் நிற வஸ்திரத்தையே பயன்படுத்துகின்றனர். பிரம்மன் வழிபட்ட பழமலைநாதர், கந்தபுரீஸ்வரர், பாதாள ஈஸ்வரர், தாயுமானவர், மண்டூகநாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணாசலேஸ்வரர், கைலாசநாதர், ஜம்புகேஸ்வரர், காளத்தீஸ்வரர், சப்த ரிஷீஸ்வரர், தூயமாமணீஸ்வரர் ஆகிய லிங்கங்கள், சிவன் சந்நிதி எதிரிலுள்ள நந்தி உட்பட பெரும்பாலான பரிவார மூர்த்திகளுக்கும் மஞ்சள் ஆடையே அணிவித்து பூசிக்கின்றனர்.

thiruppattur bramma - 2026

குரு பகவானுக்கு அதிதேவதையாகத் திகழ்பவர் பிரம்மா. பிரத்யதி தேவதை தட்சிணாமூர்த்தி. இருவரையும் ஒருசேர இங்கே தரிசிக்கலாம். எனவே, வியாழக் கிழமை சிறப்பான நாள். தலையெழுத்து மாறும் விதி உள்ளவர்களே இங்கே பிரம்மனின் பார்வையில் படுவர் என்பது நம்பிக்கை. எத்தனையோ பக்தர்களின் நோய் ஆச்சரியப் படும் விதத்தில் குணமாகியிருக்கிறதாம். பெண்களுக்கு சுகப் பிரசவம், வியாபாரத்தில் வீழ்ச்சி கண்ட நிலை மாறுதல், மாணவர்களுக்கு கல்வியில் திடீர் முன்னேற்றம், திடீர் பணி உயர்வு, பணி மாற்றல், திருமணத் தடை அகன்று ஆச்சரியப் படும் விதத்தில் நல்ல வரன் அமைதல் என்று பல அனுபவங்கள் இங்கே பக்தர்களுக்கு உள்ளது.

பதஞ்சலி சந்நிதி: பதஞ்சலி முனிவர் பத்து தலங்களில் ஐக்கியம் ஆனதாகக் கூறப்படுகிறது. அவற்றில் இந்தத் தலமும் ஒன்று. இவர் ஐக்கியமான இடத்தில் சிறிய லிங்கம் உள்ளது. அருகே பதஞ்சலி முனிவரின் படங்கள் பூஜைக்கு வைக்கப்பட்டுள்ளன. பிரம்மா சந்நிதியின் வலப்புறம் உள்ள மேடையில் சப்தமாதர் விக்ரகங்களும் வரிசையாக உள்ளன. ஒவ்வொரு அமாவாசைகளிலும் இந்த லிங்கத்துக்கு தயிர் சாதம் படைத்து பூஜை செய்கின்றனர். வைகாசி சதய நட்சத்திரத்தில் குரு பூஜை நடைபெறும். மன அமைதி கிடைக்க, எலும்பு தொடர்பான நோய் நீங்க, கல்வி, கலைகளில் சிறப்பு பெற, குருவருள் கிடைக்க இவரை வழிபடுகின்றனர். தியான மண்டபம் போல் இருப்பதால் பலரும் அமர்ந்து தியானிப்பதைக் காணலாம்.
இங்கே பிரம்மன் வழிபட்ட சோடச லிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது.

பிரம்மனுக்கு 36 தீபம் (27 நட்சத்திரம், 9 கிரகம்) ஏற்றி, 108 புளியோதரை உருண்டைகளை படைத்து வழிபடுவது சிறப்பாகக் கருதப்படுகிறது. மேலும், பிரம்மனை ஒன்பது முறை வலம் வர வேண்டுமாம்.

சந்நிதியை வலம் வரும்போது, கால பைரவர், சூரியன் ஆகியோரையும் அடுத்தடுத்து காணலாம். இவர் முன் தியானத்தில் அமர்ந்து, சிறுவர்களின் பயம் போக்கவும், வீடு வாகனம் வாங்கி சுக வாழ்க்கைக்கும் வேண்டிக் கொள்கின்றனர்.

பன்னிரு லிங்கங்கள்:
ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் சந்நிதி, அம்பிகை சந்நிதியை அடுத்து இடப்புறம் வெளியே பிரம்மா வழிபட்ட பன்னிரு லிங்கங்களுக்கும் தனித் தனி சந்நிதிகள் உள்ளன. பழைமையான காஞ்சி கைலாசநாதர் கோயிலை நினைவூட்டும் ஸ்ரீகாசிவிஸ்வநாதர் கோயிலும் இங்கே உள்ளது.

வற்றாக் குளம்:
இந்திரன் கயிலாயத்தில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து திருவானைக்கா ஜம்புகேஸ்வரரை வழிபடுவானாம். ஒருநாள் திருப்பட்டூரில் உள்ள ஸ்ரீகாசிவிஸ்வநாதரை வழிபடும் வியாக்ரபாதர் இந்திரனைத் தடுத்து நிறுத்தி தீர்த்தம் கேட்டார். இந்திரன் மறுத்துவிட்டான். வியாக்கிரபாதர் சினமடைந்து, உடனே புலிபாச்சிக் குளம் என்ற குளத்தை உருவாக்கினார். அதன் தீர்த்தம் கொண்டு காசி விஸ்வநாதரை வழிபட்டாராம். வியாக்கிரபாதர் உருவாக்கிய புலிபாச்சிக் குளத்தில் கோடைகாலத்திலும் நீர் வற்றுவதே இல்லையாம்.

திருவிழா:
பங்குனி மாத பத்து நாள் திருவிழா.

சிறப்பம்சம்:
குரு பகவானுக்கு அதிதேவதை பிரம்மா. எனவே, ஜாதகத்தில் குரு தொடர்பான தோஷம் இருப்பவர்களுக்காக வியாழக் கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. திங்கள்கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் அவரவர் பிறந்த நாளில் (நட்சத்திரப்படி) பிரம்மாவை வணங்குவது நல்ல பலனைத் தரும்.

திருமணத் தடை விலக, பிரிந்த தம்பதியர் சேர்க்கைக்கு, தொழில், வியாபார, பணி வளர்ச்சி அடைய என்று பிரம்மாவிடம் கோரிக்கை விடுத்து வேண்டுவோர் பலர். படைத்தலுக்கான தேவதை என்பதால், பிரம்மனிடம் புத்திரப் பேறு வேண்டித் தொழுகின்றனர். சந்தானப் பிராப்திக்கான பிரார்த்தனை தலமாகவும் திருப்பட்டூர் திகழ்கிறது.

இருப்பிடம்
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே உள்ள சிறுகனூரில் இருந்து 4 கி.மீ. தொலைவு.

தரிசன நேரம்:
காலை 7.30-12, மாலை 4-8. (வியாழக் கிழமைகளில் காலை 6-12.30 வரை)