முதலமைச்சர் ஜெயலலிதா பூரணகுணமடைய வேண்டி, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கோவில்களில் வழிபாடு செய்துவருகின்றனர் இதையடுத்து திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூரில் தெப்பக்குளம் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது,கோவிலில் 108 அகல்விளக்கு தீபம் ஏற்றி அதிமுகவினர் வழிபட்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை மாவட்டசெயலாளரும், நெல்லை எம்.பி யுமான கே.ஆர்.பி.பிரபாகரன் செய்திருந்தார் ,இதில் பெத்தநாடார்பட்டி பஞ்சாயத்து தலைவர் ராதா, பேரூர் செயலாளர் பாஸ்கர், மேலவை பிரதிநிகள் ஜெயராமன், கணபதி, அதிமுக பிரதிநிதிகள் கணேசன் ,சரண் டைல்ஸ் சரவணன் ,கூட்டுறவு சங்க தலைவர் சுரேஷ் லிகோரி ,இராமசாமி ஒன்றிய கவுன்சிலர்கள் தியாகராஜன்,ஆண்டபெருமாள் அம்மாபேரவை சாமிநாதன்,கப்பல்,வையாபுரி மகளிரணி இசக்கியம்மாள்,விஜயராணி ,விஜயாஅன்பரசு,இராமலட்சுமி மற்றும் பெண்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
திமுகவில் இணைந்த அதிமுகவினர்
அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் முதல்வர் நலம் பெற வேண்டி பால்குடம்,தீச்சட்டி ,மண்சோறு,மற்றும் விளக்கு பூஜை ஆகிவற்றை செய்துவருகின்றனர் இந்நிலையில் திருநெல்வேலி புறநகர் மேற்கு மாவட்டம் கடையநல்லூர் ஒன்றிய அதிமுக இலக்கிய அணிச்செயலாளர் ராசையா மற்றும் அதிமுக ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறியாளர் கலைவாணி ஆகியோர் தலைமையில் 250 அதிமுகவினர்கள் நெல்லை புறநகர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் தலைமையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். இது நெல்லை அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது
காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.,காலமானார்
திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.ஆர் நவநீதகிருஷ்ணபாண்டியன் அவரது சொந்த ஊரான கீழப்பாவூரில் காலமானார் அவருக்கு வயது(77) இவர் 1967-70 இளைஞர் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வந்தார் பின்பு 1970-79 கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவராக இருந்து வந்தார் 1980ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினராக 1980-1984 வரை பதவி வகித்தார்
விவசாயப்போராட்டத்தில் சிறை சென்றவர் இவர் பெருந்தலைவர் காமராஜரரின் தீவிர விசுவாசி ஆவார் இவர் உடல் நலக்குறைவால் இன்று மாலை அவரது இல்லத்தில் காலமானார்
ஆன்மாவில் இருந்து தோன்றுவது இசை!

22.11.2006ல் தென்காசி – சுரண்டையை அடுத்த வீரகேரளம்புதூரில் இருந்த இரா.உ. விநாயகம் பிள்ளை என்பார் எழுதிய கடிதம்.
பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு முறை தாத்தாவின் ஊரான வீ.கே.புதூருக்குச் சென்றிருந்தபோது, இந்த உ.விநாயகம் பிள்ளைவாளைச் சந்தித்தேன். அவரிடம் பேசிக் கொண்டிருந்த சிறிது நேரத்தில், ஊத்துமலை ஜமீன் குறித்த பல கதைகள்; இருதாலய மருதப்ப தேவர் குறித்த சங்கதிகள்; அவருடன் அவைப்புலவராக இருந்த ‘காவடிச் சிந்து’ புகழ் அண்ணாமலை ரெட்டியார் குறித்த தகவல்கள் என பலதும் பகிர்ந்து கொண்டார். அவற்றில் ஓரிரண்டை அப்போது நான் மஞ்சரி இதழின் தீபாவளி மலரில் எழுதியிருந்தேன்.
அதன் பின்னர் ஒரு கடிதம் எழுதினார். இன்று யதேச்சையாக புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது இந்தக் கடிதம். பத்திரமாக வைத்திருந்தது…
என் சிறிய தாத்தா, சேஷ ஐயங்கார் அருமையாகப் பாடுவாராம். என் அம்மாவும் சொல்லியிருக்கிறார்: ‘திருமணமாகி வந்த புதிதில் என்னை பாடச் சொல்லிக் கேட்பார். கர்நாடக சங்கீதத்தில் அவ்வளவு பிரியம் அவருக்கு..’ என்று!
இவரது கடிதம் படித்தபோது பிரமிப்பாக இருந்தது….
அவரது கடிதத்தில் இருந்து…
22.11.2006
இரா.உ. விநாயகம் பிள்ளை
சந்நிதித் தெரு, வீரகேரளம்புதூர், 627861
அன்பும் பண்பும் மிக்க ஸ்ரீராம் அவர்களுக்கு. நமது ஆண்டுமலரில் பிரசுரமானதில் இருந்து இசையைப் பற்றி எழுத தூண்டுகிறது.
உங்கள் தாத்தா திரு சேஷ ஐயங்கார் அவர்கள், நான் வேண்டும் போது பாடுவார்கள்.
பாடும் சுதியோ ராகலட்சணங்களோ ஸ்வர சஞ்சாரங்களோ ஒன்றும் பயின்றதில்லை.
அவர்களுக்கு மிக நன்றாய் பயின்று பயிற்சியான ராகம் காம்போதிதான். அதை பார்வார்கள். தேவார்மிர்தமாய் இருக்கும். கர்நாடக சங்கீதத்தில் ஒரு முதல் நிலை வித்துவான் பாடும் காம்போதி… அவர் பாடும் காம்போதியின் கால் தூசிக்கு காணாது.
மேல் ஸ்தாயி பஞ்சமம், கீழ் ஸ்தாயி பஞ்சமம், ஆதாரம் இப்படி மூன்று ஸ்தாயி, அனாயாசமாக சஞ்சரித்து ஓடும். அப்படிப்பாடுவார். இவர் எப்படிப் பாடுகிறார்… மற்றக் கலைகள் அறிவில் இருந்து தோன்றுகிறது, இசைக்கலை ஆன்மாவில் இருந்து தோன்றுகிறது. இதை கட்டுரையாக எழுதினால் பிரசுரிப்பீர்களா. எழுத வேண்டுகிறேன்.
இரா. உ. விநாயகம்பிள்ளை
***
பின்குறிப்பு:
அதன் பின்னர் அவரும் எழுதி அனுப்பவுமில்லை; நானும் எதுவும் எழுதவுமில்லை! நான் சந்தித்த பத்து வருடங்களுக்கு முன்பேயே தள்ளாத நிலையில் இருந்தார்….!
14.10.2016 இன்று பேசிய நண்பர் கழனியூரான், மேற்படி விநாயகம் பிள்ளை காலமாகிவிட்டதாகக் கூறினார்.
மேலும், அவர் குறித்த அபூர்வமான தகவல் ஒன்றையும் சொன்னார்.
எல்லோரும் திருக்குறளைத்தான் மனனம் செய்து சொல்வார்கள், ஆனால், வினாயகம் பிள்ளைவாள் ஒவ்வொரு குறளுக்குமான பரிமேலழகர் உரையினை மனனம் செய்தவர். எந்தக் குறள் குறித்துக் கேட்டாலும், அதற்கான பரிமேலழகர் உரையினை அட்சரம் பிசகாமல் சொல்வார்… என்று கூறினார்.
இவர் போன்றவர்கள் என்றென்றும் நம்மால் நினைவுகூரத்தக்கவர்கள்!
சூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா ஹேப்பி அண்ணாச்சி
ஹீரோக்கள் தான் உடலை இளைக்கவும் ஏற்றவும் ரிஸ்க் எடுப்பார்கள். ஹீரோயின்கள் அப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்க தயங்குவார்கள் என்ற எழுதப்படாத விதியை சமீபகாலமாக இந்திய நடிகைகள் உடைத்துவருகிறார்கள். அந்த வரிசையில் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும் நடிகை நமீதா கடந்த ஆண்டு தனது ரீ எண்ட்ரிக்காக சுமார் 20 கிலோ அளவுக்கு தனது உடலை இளைத்து ஆச்சர்யப்படுத்தினார். ’இனி படங்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த கவனத்துடன் இருப்பேன்’ என்று சொன்னவர் தேர்வு செய்து நடித்த படம் தான் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் ”புலிமுருகன்”. நேற்று வெளியான ”புலிமுருகன்” இதுவரை மலையாள திரையுலகமே பார்த்திராத வகையில் மிகப்பெரிய வெற்றிப்படமாகி உள்ளது. தனது ரீ எண்ட்ரி படம் தான் நினைத்தது போலவே அமைந்த உற்சாகத்தில் இருந்த நமீதாவிடம் பேசினோம்.
” புலிமுருகன்” படம் பற்றி…
கடந்த ஆண்டு ரீ எண்ட்ரிக்காக கதைகள் கேட்டபோது இந்த படத்தின் இயக்குனரிடமும் கேட்டேன். நம் தென்னிந்திய மொழிகளில் இதுவரை வந்திராத அளவுக்கு அட்வென்சர் வகை கதையாக இருந்தது. மிகவும் வித்தியாசமான இந்தக் கதையை எப்படி எடுக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகமானது. படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் ஜுலி. ஒரு பணக்கார குடும்பத்தில் இருப்பவள். புலிமுருகனின் குணத்தைப் பார்த்து அவர்மீது காதல்வயப்படும் கேரக்டர். படம் முழுக்கவே புலிமுருகனுடனேயே இருந்து அவருக்கு ஆதரவாக இருக்கும் வேடம். ஒரு சூப்பர்ஸ்டார் படத்தில் இடம் கிடைப்பது பெரிய விஷயம் அல்லவா? உடனே ஓகே சொல்லிவிட்டேன். பொதுவாக மலையாள படங்கள் என்றாலே குறைவான பட்ஜெட்டில் தான் எடுப்பார்கள் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் இந்த படம் சுமார் 25 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. நான் எப்போதுமே பட்ஜெட், ஹீரோ ஆகியவற்றை பார்ப்பவள் இல்லை. ஆனால் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு அமைந்தது சந்தோஷமாகத் தான் இருக்கிறது.
மோகன்லாலுடன் நடித்த அனுபவம்…
அவர் ஒரு சூப்பர் ஸ்டார் என்பது நமக்கு தெரியும். ஆனால் நமக்கு அதிகம் தெரியாத அவரது இன்னொரு முகம் இண்டெலெக்சுவல். ஆமாம், அத்தனை புத்தகங்கள் படிக்கிறார். அவரது வாசிப்பு என்னை ஆச்சர்யப்படுத்தியது. புலிமுருகன் கேரக்டரில் மோகன்லால் தவிர வேறு ஒருவரை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு அந்த பாத்திரமாகவே மாறினார். படப்பிடிப்பில் திடீரென்று ஒரு ஆசை வந்தது. அவருடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ள வேண்டும். கேட்டவுடனேயே ஓ… தாராளமா… என்று எடுத்துக்கொண்டார். அந்த படம் அத்தனை பெரிய வைரலாகும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.
நீங்கள் பிராணிகளை அதிகம் நேசிப்பவர். உங்களுக்கு இந்த படம் அமைந்தது தற்செயலானதா?
ஆமாம். என் வீட்டில் நான் இப்போது மூன்று சிட்சு வகை நாய்க்குட்டிகளை வளர்க்கிறேன். அவை நாய்கள் அல்ல, என் குழந்தைகள். என் குடும்பத்தில் அவர்களும் இணைந்துவிட்டார்கள். இந்த கதை சொல்லும்போது ஆரம்பத்தில் இது வேட்டை கதை போல உள்ளதே என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் போக போக வன விலங்குகள் பாதுகாப்பை வலியுறுத்தும் ஒரு படம் என்பது புரிந்தது.
அரசியல் சினிமா இரண்டையும் எப்படி சமாளிக்கிறீர்கள்?
ஏன் இதில் என்ன கஷ்டம்? இரண்டும் வேறு வேறு. மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். சத்தமில்லாமல் செய்துகொண்டும் இருக்கிறேன். அதற்காக மக்கள் நலனில் அக்கறை உள்ள கட்சியான அதிமுகவில் இணைந்தேன். அதற்கும் சினிமாவுக்கும் தொடர்பு இல்லை.
பரத்துடன் நடிக்கும் ”பொட்டு” படம் அல்மோஸ்ட் ஓவர். ஜானி என்பவர் சொன்ன கதை நன்றாக உள்ளது. அடுத்த நகர்வுக்கு காத்திருக்கிறேன். இன்னும் சில படங்களின் அறிவிப்பும் வரும். மலையாளம் போலவே தமிழ், தெலுங்கிலும் பெரிய ஹீரோக்கள் படங்களில் நடிக்கவும் ஆர்வமாக இருக்கிறேன்.
முதல்வர் உடல்நலம் பற்றி…
மாண்புமிகு அம்மா அவர்கள் இதற்கு முன்பு எத்தனையோ சோதனைகளை தாண்டி வந்திருக்கிறார். அம்மாவுக்கு கடவுளின் ஆசி எப்போதுமே உண்டு. இத்தனை கோடி மக்கள் அம்மாவுக்காக பிரார்த்திக்கிறோம். அவர்கள் மீண்டு வருவார்கள் என தீர்க்கமாக சொல்லி முடித்தார் நமீதா
குவைத் மனித உரிமை அமைப்பில் தமிழர்
குமரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ள செம்பருதிவிளையை சேர்ந்தவர் ஆல்வின் ஜோஸ் ராஜப்பன் இவர் கடந்த 10 வருடங்களாக குவைத்தில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்,குவைத்தில் உள்ள தமிழர்களுக்கு தன்னாலான உதவிகளை செய்து வந்தார் நாளைடவில் பெரிய பெரிய நற்பணிகளாக மாறியது ,அண்மையில்
குவைத்தில் 11 மீனவர்கள் பிரச்சனையை கையில் எடுத்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து இந்தியா அனுப்ப பெரும் முயற்சி எடுத்து அதில் வெற்றியும் கண்டார் இந்நிலையில்
குவைத் நாட்டின் மனித உரிமைக்கான இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பதவியும், புலம் பெயர்ந்த மக்களுக்கு இந்தி பேசுபவர்களுக்கும், ஆங்கிலம் பேசுபவர்களுக்கும் குவைத்தில் உள்ள வெளிநாடு வாழ் தொழிலாளர்களுக்கு இருக்கும் சட்டத்தை விளக்கவும் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு அதற்கான அடையாள அட்டையும் வழங்க பட்டுள்ளது,குவைத்நாட்டில் தமிழருக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது இவரை தொடர்பு கொள்ள விரும்புவோர் கீழ் காணும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
00965. 97295435
உத்தம துதிகள் மூன்று : நவராத்திரி சிறப்புக் கட்டுரை
ஜகன்மாதாவை லலிதாம்பிகை என்ற ரூபத்தில் அநேக மஹான்களும் கவிகளும் ஸ்தோத்ரம் பாடி ஆராதித்திருக்கிறார்கள். துர்க்கை, காளி, அன்னபூர்ணேச்வரி, புவநேச்வரி, இன்னும் பல ரூபங்களும் அவளுக்கு உண்டு. லலிதாம்பாள் விஷயமாக மட்டுமே இப்போது சொல்கிறேன்.
ராஜராஜேச்வரி, காமாக்ஷி, காமேச்வரி, த்ரிபுரஸுந்தரி என்ற பெயர்களில் சொல்லப்படும் ஸ்ரீவித்யா தந்த்ர ப்ரதிபாத்யமான [ஸ்ரீவித்யை எனும் வழிபாட்டு நெறிமுறைப்படி ஆராதிக்கப்படும்]தேவதை இந்த லலிதாதான். லலிதா ஸஹஸ்ரநாமம், லலிதா த்ரிசதி, லலிதா அஷ்டோத்தரம் என்றெல்லாம் அந்தப் பேரில்தான் ஸ்ரீவித்யையின் அதிதேவதைக்கு நாமாவளிகள் இருப்பதைப் பார்க்கிறோம்.
அவளைப் பற்றிய ஸ்தோத்ர நூல்களில் மூன்று மிகவும் ச்ரேஷ்டமானவை:துர்வாஸர் பண்ணிய ‘ஆர்யா த்விசதி’, மூகர் பண்ணிய ‘பஞ்ச சதி’, ஆசார்யாளுடைய ‘ஸெளந்தர்ய லஹரி’என்று மூன்று. கால க்ரமத்தில் வரிசைப்படுத்தினால் முதலில் துர்வாஸர் பண்ணியது, அப்புறம் ஆசார்யாள் பண்ணியது, கடைசியில் மூகருடையது. மூன்றுக்கும் நடுவாக, நடுநாயகம் என்று சொல்லும்படியாக ‘ஸெளந்தர்ய லஹரி’இருக்கிறது.
அந்த மூன்று ஸ்தோத்ர கர்த்தாக்களும் [சிரித்து]’நம்மவர்’கள்;நமக்கு ரொம்ப ஸொந்தமானவர்கள்! நம்முடைய பீட அதீச்வரியாக இருக்கப்பட்ட காமாக்ஷியிடம் மூன்று பேருக்கும் விசேஷ ஸம்பந்தமுண்டு. துர்வாஸர்தான் [காமாக்ஷிஆலயமாகிய] காமகோஷ்டத்திற்கான பூஜா கல்பத்தைப் பண்ணிக் கொடுத்தவர். அந்தப் பிரகாரந்தான் இன்றைக்கும் அங்கே அம்பாளுக்குப் பூஜை நடக்கிறது. ஆசார்யாளுக்கு காமாக்ஷியிடம், அங்கேயுள்ள காமகோடி பீடத்திடம் உள்ள ஸம்பந்தம் எல்லாருக்கும் தெரிந்தது. மூகர் கவியானதே காமாக்ஷிஅநுக்ரஹத்தில் தான்;அவர் ‘பஞ்சசதி’யில் ஸ்தோத்திரித்திருப்பதும் அவளைத்தான்.
மூன்றில் ‘ஆர்யா த்விசதி’தான் மிகவும் புராதனமானது. த்வி-சதம் என்றால் இருநூறு. ‘ஆர்யா த்விசதி’யில் இருநூறு ச்லோகங்கள் இருப்பதால் அப்படிப் பெயர். ‘ஆர்யா’என்ற அபூர்வமான சந்தஸில் (மீட்டரில்) அது பண்ணப்பட்டிருக்கிறது. அதோடு அது ஸ்தோத்ரிப்பதும் ‘ஆர்யா’என்ற அம்பாள்.
இப்படிச் சொன்னால் அம்பாள் ஆர்யக் கடவுள், திராவிடக் கடவுளில்லை என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளக் கூடாது!ஆர்யர் என்றால் உயர்வு பொருந்தியவர் என்று அர்த்தமேயழிய, அப்படி ஒரு ரேஸுக்கும் பேரில்லை. வெள்ளைக்காரர்கள் பண்ணிய விபரீதந்தான் ‘ஆர்யன் ரேஸ்’என்று ஆக்கியது. அம்பிகை உயர்ந்ததிலெல்லாம் உயர்ந்தவளாதலால் ஆர்யா. தமிழ்மொழி வழக்கில் ‘ஆர்யை’. பழந்தமிழில் அதை இன்னும் நன்றாகத் தமிழ் பாஷை விதிகளின்படி ரூபம் கொடுத்து ஐயை என்று சொல்லியிருக்கிறது. ஆர்யன்-ஐயன்;ஆர்யை-ஐயை.
ஆர்யா என்று அம்பாளின் பேர். ஆர்யாம்பா என்றே ஆசார்யாளின் தாயாருக்குப் பேர். துர்வாஸர் பண்ணிய இருநூறு ச்லோக ஸ்தோத்ரம் ஆர்ய மீட்டரில் இருப்பதோடு ஆர்யா என்ற அம்பாளைக் குறித்ததாக இருப்பது. அதனால் இருபொருள்பட ‘ஆர்யா த்விசதி’என்று அதற்குப் பெயரிருக்கிறது. அதற்கே இன்னொரு பேர் ‘லலிதா ஸ்தவ ரத்னம்’என்பது. ஸ்தவம் என்றாலும் ஸ்துதிதான். லலிதாம்பாளைப் பற்றிய ஸ்துதிகளுக்குள் ரத்னம் போலிருப்பது ‘லலிதா ஸ்தவ ரத்னம்’.
பட்டாரிகா என்று அம்பிகையைச் சொல்வது வழக்கம். தமிழில் பட்டாரிகை என்று ஆகும். பட்டாரகர் என்றால் பூஜிக்கத் தக்கவர். அதற்குப் பெண்பால் பட்டாரிகா. பட்டாரர், பட்டாரி என்றே சொன்னாலும் போதும். பழைய காலத்தில் இந்தத் தமிழ் தேசத்தில் பிடாரி கோவில்களுக்குச் செய்யப்பட்ட ‘என்டோமென்ட்’களை ‘பட்டாரிகா மான்யம்’என்றே சாஸனங்களில் குறித்திருக்கிறது. இதிலிருந்து பட்டாரிதான் பிடாரி ஆகியிருக்கிறதென்று தெரிகிறது.
க்ரோத பட்டாரகரான துர்வாஸர்தான் முதன் முதலில் அம்பாளை ஸ்துதித்த பூலோகவாஸி. அவர் ‘த்விசதி’பாடினதோடு ‘சக்தி மஹிம்ந ஸ்தோத்ரம்’என்றும் அம்பாள் மஹிமை பற்றி ஒரு உத்தமமான ஸ்துதி செய்திருக்கிறார். இவற்றுக்கு அப்புறந்தான் மற்றக் கவிகளின் வாக்குகள் உண்டாயின. அவர் வாக்கிலேயே அம்பிகை ஆவிர்பாவித்திருப்பது ‘த்விசதி’யை அநுபவித்துப் படிப்பவர்களுக்குத் தெரியும்.
ஒரு மையப் புள்ளியைச் சுற்றி அடுக்கடுக்காக நாற்பத்து மூன்று கோணங்கள் கம்பாக – cone shape ல் – எழும்பி அமைந்த ஸ்ரீசக்ரம் என்ற யந்த்ரத்தில், ‘ஆவரண’ங்கள் என்னும் சுற்றுக்களில் (மூல ஸ்தானத்தைச் சுற்றி பஞ்ச ப்ராகாரம், ஸப்த ப்ராகாரம் என்றெல்லாம் இருப்பதுபோல ஸ்ரீசக்ரத்தில் உள்ள சுற்றுகளில்) அநேக தேவதைகள் சூழ்ந்திருக்க, அதன் உச்சியாக உள்ள மையப் புள்ளியான பிந்து ஸ்தானத்தில் காமேச்வரனுடைய வாம பாகத்தில் எழுந்தருளியிருக்கிற காமேச்வரியான ராஜராஜேச்வரியை அந்த எல்லா முக்கோணங்களையும், ஆவரண தேவதைகளையும் விவரமாகச் சொல்லி துர்வாஸர் ஸ்தோத்திரித்திருக்கிறார். இந்த உத்க்ருஷ்டமான கிரந்தத்தைப் பாராயணம் பண்ணினால் நல்ல அநுக்ரஹம் உண்டாகும்;குறிப்பாக நல்ல வாக்கு, கவித்வ சக்தி உண்டாகும்.
அம்பிகை பண்ணுகிற பெரிய அநுக்ரஹம் அவளை வர்ணித்து வர்ணித்து ஸ்துதிக்கிற ஆனந்தத்தைத் தரும் உயர்ந்த வாக்கு விசேஷம்தான். இந்த வாக்குதானே ஒரு பக்தர் பெற்ற அநுபவத்தை மற்றவர்களுக்கும் தெரிவித்து, அவர்களும் அதைப் பகிர்ந்து கொள்ளும்படிச் செய்கிறது? அதுதான் வாக் சக்தி அருள்வதன் விசேஷம்.
ஒரு ஊமைக்கு இப்படிப்பட்ட அபார வாக்குச் சக்தியை அவள் அநுக்ரஹம் பண்ணினாள். காஞ்சீபுரத்தில் காமாக்ஷிகோயிலில் இருந்த அவருக்கு [இயற்]பெயர் என்னவென்றே தெரியவில்லை. ‘மூகர்’என்று சொல்கிறோம். ‘மூகர்’என்றால் ஊமை என்று அர்த்தம். அந்த ஊமைக்கு அம்பாளின் அநுக்ரஹம் கிடைத்ததுதான் தாமதம், த்வி-சதி இல்லை, பஞ்ச-சதியாகவே ஐநூறு ச்லோகங்களை வர்ஷித்துவிட்டார்!துர்வாஸர் பண்ணினது ‘ஆர்யா த்விசதி’என்றால், மூகர் பண்ணின ‘பஞ்ச-சதி’யில் முதலாவதாக ‘ஆர்யா சதகம்’என்ற நூறு ச்லோகங்கள் இருக்கின்றன. இதுவும், ஆர்யா வ்ருத்தத்தில் [மீட்டரில்]தான் அமைந்தது. அடுத்ததாக அவளுடைய திருவடிகளின் அழகை மட்டுமே நூறு ச்லோகங்களில் சொல்கிற ‘பாதார விந்த சதகம்’, மூன்றாவதாக அவளுடைய பலவித மஹிமைகளைத் துதிக்கும் ‘ஸ்துதி சதகம்’, அதற்கப்புறம் அம்பாளின்கடாக்ஷவீக்ஷண்யத்தைப் பற்றி மாத்திரம் ‘கடாக்ஷசதகம்’என்று நூறு ச்லோகங்கள், கடைசியில் அவளுடைய மந்தஹாஸத்தைப் பற்றியே ‘மந்தஸ்மித சதகம்’என்று நூறு – இப்படிப் ‘பஞ்ச சதி’யை மூகர் பண்ணியிருக்கிறார்.
‘ஆர்யா த்விசதி’யும் ‘மூக பஞ்சதி’யும் ஒரு நல்ல சைத்ரிகன் அம்பிகையின் ஸ்வரூபத்தை எழுதிகாட்டுகிற மாதிரி அவளை மனகண்ணுக்கு முன் தோன்றும்படிச் செய்கின்றன. கண்ணுக்கும் மனஸுக்கும் எட்டாதவளைக் கிட்டத்தில் காட்டிக் கொடுக்கின்றன.
மூன்றாவதான ‘ஸெளந்தர்ய லஹரி’யைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். பூலோகம் ஏற்பட்ட நாளாக இதற்கு முந்தியோ பிந்தியோ இவ்வளவு பூர்ணமான ஸெளந்தர்யம் உள்ள வாக்கு தோன்றியதுமில்லை, தோன்றப்போவதுமில்லை என்று சொல்லும்படி, எத்தனை தரம் சொன்னாலும் கேட்டாலும் அலுக்காத அழகு வாய்ந்ததாக, தெவிட்டாத மாதூர்யமுள்ளதாக இருப்பது ‘ஸெளந்தர்ய லஹரி’. மூக பஞ்சசதியிலும் மாதுர்யம் இருக்கிறதென்றாலும், அதைவிட இதில் காம்பீர்யமும் சேர்ந்திருக்கிறது!மார்த்வத்து
ஆசார்யாளின் ஸ்தோத்ரங்களுக்குள் மிகவும் எளிமையானது ‘பஜ கோவிந்தம்’. இது அப்படியில்லை. கொஞ்சம் கஷ்டமான வார்த்தைகள் இருக்கத்தான் செய்யும். நுட்பமாக அநேக விஷயங்களை வர்ணிக்கும்போது precise -ஆக [அதை மட்டுமே குறிப்பாகச் சுட்டுவதாக]உள்ள வார்த்தையைப் போடவேண்டும் என்பதால் கஷ்டமான வார்த்தைகளையும் கொஞ்சம் போட்டிருக்கிறார். புரியாததால் கஷ்டம் என்றாலும், வாய்க்கு மதுரமாகத்தானிருக்கும். புரிந்தவிட்டபின் ‘இந்த வார்த்தையைத்தான் இங்கே போட முடியும்’ என்று கவிதை நயத்தைக் கொண்டாடுவோம். ஆத்மிகத்துக்கு அரிச்சுவடி போல தர்மங்களை, தத்வங்களை ‘பஜ கோவிந்த’த்தில் எளிதாகச் சொல்லிக் கொண்டு போகிறபோது வர்ணனை, உவமை மற்ற அலங்காரங்கள் அவ்வளவாக இல்லாமல் ஸிம்பிள் மீட்டரில், வார்த்தையில் பண்ணினார். இங்கே அம்பாளின் ரூப லாவண்யத்தைச் சொல்ல வந்தபோது, கவிதா ப்ரதிபையில் எப்படியெல்லாம் ஜோடனை செய்ய முடியுமோ அப்படிச் செய்யும்போது ‘ஸ்டைல்’மாறிற்று;மீட்டரும் மாறிற்று. வரிக்குப் பதினேழு எழுத்துக் கொண்ட நாலு வரி ச்லோகங்களாக ‘சிகரிணி’என்ற மீட்டரில் ‘ஸெளந்தர்ய லஹரி’யைப் பண்ணியிருக்கிறார். அம்பாளின் அழகை வாயாரச் சொல்லிக்கொண்டு ஆனந்தப்படுவதற்கு ஏற்ற விதத்தில் ‘சிகரிணி’சந்தஸை சிகரமாக்கிக் கையாண்டிருக்கிறார்.
நாற்பத்திரண்டாவது ச்லோகத்திலிந்து ஆரம்பித்து நூறு முடியப் பண்ணியிருக்கிற ஸ்வரூப வர்ணனையில், அம்பாளே நம் நேரே தரிசனம் கொடுத்தால் எந்த மாதிரி ஆனந்தமாயிருக்குமோ அந்த மாதிரி ஆனந்தப்படும்படியாக வார்த்தைகளையும், வர்ணனைகளையும் ரஸபாவங்களையும் பொழிந்து அநுக்ரஹித்திருக்கிறார்.
ஒரு பெரிய சில்பி அர்ப்பண புத்தியோடு ஒரு தெய்வச் சில்பத்தைப் பண்ணுகிறபோது அதிலே எப்படி அந்த தெய்வமே வந்து குடிகொண்டு விடுகிறதோ, அப்படி உயர்ந்த நிலையில் அநுபவித்து அநுபவித்து, அந்த அநுபவமும் வாக்கும் அவளே கொடுத்தது என்ற அர்ப்பண புத்தியோடு ஆசார்யாள் இதைப் பண்ணியிருப்பதால் ஸ்தோத்திரமே ஸ்தோத்திரிக்கப்படுகிற அம்பாளின் ஸ்வரூபமாக இருக்கிறது.
கொண்டைமாலை கட்டும்போது பூ பூவாக ஸரம் கோத்து, அந்த ஸரங்களை ஒன்றோடொன்று முறுக்கிச் சேர்த்து ஜரிகை, ஜிகினா தைக்கிறதுபோல, அக்ஷரங்களைப் பதமாகத் தொடுத்து, பதங்களை வாக்கியமாகத் தொடுத்து ஒவ்வொரு ச்லோகத்தையும் பண்ணி, ச்லோகத்துக்கு ச்லோகம் ஸம்பந்தப்படுத்தி முழு ஸ்தோத்திரமாகப் பண்ணியுள்ள கலைஞராக, கவியாக ஆசார்யாள் இங்கே தர்சனம் தருகிறார். பூமாலை – பாமாலை என்று சொல்கிறோமல்லவா?பூ மாலை கண்ணுக்கு அழகான ரூபமாகத் தெரிகிறது என்றால், பாமாலை காதுக்கு அழகான சொல்லும் சந்தமுமான ரூபத்தில் இருக்கிறது. பூமாலைக்கு வாஸனை மாதிரிப் பாமாலைக்கு அதன் அர்த்தம். பூவிலிருந்து தேன் வருகிறதென்றால் பாவிலிருந்து கிடைக்கிற ரஸாநுபவம்தான் மனஸுக்குத் தேன். ஒரு பெரிய வித்யாஸம் – பூமாலை வாடிப் போவது;பாமாலை லோகமுள்ள அளவும் வாடாது!
– ஏ.பி. ராமன், சிங்கப்பூர்
வண்ண புகைப்படத்துடன் வாக்காளர் அடையாள அட்டை வேண்டுமா?
தமிழகத்தில் உள்ள, 300க்கும் மேற்பட்ட, ‘இ – சேவை’ மையங்களில், கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டை, உடனுக்குடன் கிடைக்கும்; அதில், தேவைப்பட்டால், உங்கள் அழகான முகத்தைப் பதிந்து பெற்றுக் கொள்ளலாம்.
இது குறித்து, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள, இ – சேவை மையங்களில், தற்போது, 100 வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன; இந்த ஆண்டுக்குள், சேவைகளின் எண்ணிக்கை, 300 ஆக உயர்த்தப்படும். அதன் ஒரு பகுதியாக, வண்ண வாக்காளர் அடையாள அட்டை, வழங்கப்பட உள்ளது. அரசு கேபிள், ‘டிவி’ நிறுவனத்தின் கீழ், 486 இ – சேவை மையங்கள் உள்ளன. இந்த நிறுவனத்தின் சார்பில், சென்னையில், சில இடங்களில், இந்த சேவை நேற்று துவங்கியது.
அதற்காக, வாக்காளர்களின் புகைப்படம் உள்ளிட்ட முழு விபரங்கள், தகவல் தொழில்நுட்ப துறையிடம், தேர்தல் துறை வழங்கி உள்ளது.வாக்காளர்கள் மையங்களுக்கு சென்று, வாக்காளர் அட்டை எண்ணை கூறியதும், கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வாக்காளர் அடையாள அட்டை, அச்சிட்டு தரப்படும்; 25 ரூபாய் செலுத்த வேண்டும். வாக்காளர் அட்டை தொலைந்தாலும், இந்த மையத்தில், அடையாள அட்டை எண்ணை தெரிவித்து, புதிய அட்டை பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாக்காளர் அடையாள அட்டையில் புகைப்படங்கள், மிக மோசமாக தெரிவதாக புகார்கள் உள்ளன. இ – சேவை மையங்களில், வாக்காளர்களை புகைப்படம் எடுத்து, அதை, வண்ண அடையாள அட்டையில் பதிந்து தர வசதிகள் உள்ளன. தேர்தல் கமிஷன் தந்த அட்டையில் உள்ள புகைப்படத்தை, விருப்பம் உள்ளோர், இந்த மையங்கள் வாயிலாக மாற்றிக் கொள்ளலாம்.
தொடரும் தாக்குதல்கள்; காவல்துறையும் அரசும் என்ன செய்கிறது?: ராம.கோபாலன் கேள்வி
சென்னை:
இந்து அமைப்பினர்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அரசும் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் கேள்வி எழுப்பியுள்ளார்
இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
வேலூரில் துவங்கிய தாக்குதல் திண்டுக்கல், கோவை, திருப்பூர், சென்னை என நீண்டு கொண்டே போகிறது. நேற்று சென்னையில் ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் நரஹரி தாக்கப்பட்டுள்ளார். இவை எல்லாம் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள தாக்குதல் என்பது சம்பவங்களிலிருந்து ஒரு சிறுவனால் கூட யூகித்துவிட முடியும். இதனை செய்பவர்கள் யார் என்பது உலகமே அறிந்த விஷயம்தான்.
மதவாதம் என கூக்குரலிடுபவர்கள் இது பற்றி வாய் திறப்பதில்லை, காரணம் இவர்கள் ஓட்டு வங்கி அரசியலில் நம்பிக்கைக் கொண்டவர்கள். கொன்றவன் இஸ்லாமியனாக இருந்து செத்தவன் இந்துவாக இருந்தால் வாய் திறக்க மாட்டார்கள். இந்துக்களுக்கு ஏற்படும் பாதிப்பைவிட இவர்களுக்கு ஓட்டுத்தான் முக்கியம் என நினைக்கும் கேவலமான அரசியல்வாதிகள். பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு.
வேலூரில் அரவிந்த ரெட்டி படுகொலை செய்யப்பட்டபோது, காவல்துறை போலி குற்றவாளிகளை கொண்டு வராமல், உண்மையான குற்றவாளிகளான இஸ்லாமிய பயங்கரவாதிகளை பிடித்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என்பதை காவல்துறை இப்போதாவது உணர வேண்டும். காவல்துறை, தனது தவறை திருத்திக்கொள்ள முனைய வேண்டும் என எதிர்பார்க்கிறோம். நீதித்துறையும் உண்மையான குற்றவாளிகளுக்கு எத்தகைய தண்டனையை வழங்குகிறதோ, அதேபோல உண்மையை திசைத்திருப்ப தானே வந்து சரணடையும் குற்றவாளிகளுக்கு அதே தண்டனையை வழங்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் உண்மை குற்றவாளிகளைவிட அதிக தண்டனை வழங்க வேண்டும் என்பதே நடுநிலையாளர்கள் கருத்தாக இருக்க முடியும்.
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், காவல்துறை இன்னமும் அதிக கவனமுடன் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட கடுமையாக பணியாற்றியிருக்க வேண்டும். முதல்வர் குணமாகி வரவேண்டும் என நாமும் நினைக்கிறோம், பிரார்த்திக்கிறோம். முதல்வர் உடல்நிலை சரியில்லாத நிலையில் அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காவல்துறை நடந்துகொள்வது துரதிருஷ்டவசமானது.
ஆகவே, இப்படி தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெறுவது முதல்வர் கவனத்திற்கு செல்ல தற்போது வாய்பில்லை என்பதால் தமிழக அமைச்சர்கள் இதனைத் தடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்த வேண்டும். இல்லையேல் மத்திய அரசு தலையிட்டு குற்றவாளிகள் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
பல ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தை குறிவைக்கிறது பாகிஸ்தான் எனவும், மும்பையை போல கடற்கரை வழியாக தாக்குதல் நடத்தவும், அதற்கு தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் உள்ள இஸ்லாமிய பயங்கரவாதிகள் துணைபோகலாம் எனவும் வந்த செய்தியினை தமிழக உளவுத் துறையும் தமிழக மக்களும் மறந்திருக்க மாட்டார்கள் என நம்புகிறோம்.
தொடர்ந்து இதுபோல தாக்குதல் நடைபெற்றால் மக்கள் கலவரத்தில் ஈடுபடலாம், இதனை தங்களுக்கு சாதகமாக கொண்டு தமிழகம் முழுவதும் கொலைவெறி தாக்குதல் நடத்தவும் முஸ்லீம் பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருக்கலாம். இதனாலேயே முஸ்லீம்கள் கணிசமாக வாழும் பகுதிகளில் உள்ள இந்து அமைப்புகளைச் சார்ந்தவர்களை இஸ்லாமிய பயங்கரவாதிகள் குறிவைக்கிறார்கள் என கருதுகிறோம்.
கோவையைப் போல மக்கள் வெகுண்டெழுந்தால் அப்போது பங்களாதேஷ் ஊடுருவக்காரர்களைக் கொண்டு கடைகளை உடைப்பது, பொருட்களை கொள்ளையடிப்பது போன்ற கீழ்த்தரமான செயல்களை செய்து, அதனை சமூக ஊடகங்கள் மூலமும், அவர்களுக்குத் துணைபோகிற அமைப்புகளை, கட்சிகளை கொண்டு பிரச்சாரம் செய்து பயங்கரவாதத்தை திசைத்திருப்பவும் செய்யலாம்.
நடுநிலையாளர்கள் தமிழகத்திற்கு வந்துள்ள ஆபத்தை உணர வேண்டும். இதே நிலை தொடர்ந்தால், இங்கு ஆட்சி ஒன்று இருக்கிறதா என்ற எண்ணம் மக்களிடையே ஏற்படும். மக்கள் பொறுமை இழந்தால் சட்டம் ஒழுங்கு கெடும் என்பதை அரசு உணர வேண்டும்.
இந்நிலையில் தமிழக உள்ளாட்சி தேர்தலை உயர்நீதிமன்றம் தள்ளி வைக்க உத்திரவிட்டுள்ளது. தேர்தல் பரபரப்பு தற்போதைக்கு இல்லை என்ற நிலையில் தமிழக காவல்துறை இஸ்லாமிய பயங்கரவாதிகள் குறித்த முறையான விசாரணையை செய்வதோடு, தொடர்ந்து ரோந்து சுற்றி சந்தேகத்திற்கு இடமானவர்களை கைது செய்து விசாரணை நடத்தி பயங்கரவாத செயல்களை செய்யும் தேசவிரோத குற்றவாளிகளை பிடித்து நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற வைக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை! : உயர் நீதிமன்றம்
சென்னை:
உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை விதித்து உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது
முன்கூட்டியே தகவல் இல்லாமல் திடீரென தேதி அறிவித்த காரணத்தால் இந்த உத்தரவினை உயர் நீதிமன்றம் அறிவித்தது.
திமுக அமைப்பு செயலாளர் R.S. பாரதி தொடர்ந்த வழக்கில் இந்தத் தீர்ப்பு அளித்த உயர்நீதிமன்றம், தேர்தல் தொடர்பான 3 அரசாணைகளும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்தது.
திமுக தொடர்ந்த வழக்கில், தமிழக உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடம் ஒதுக்கப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அரசாணையில் உள் நோக்கம் உள்ளது. எனவே உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான 3 அரசாணைகளை ரத்து செய்வதாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் உள்நோக்கம் கொண்டவை. எனவே, இது தொடர்பான 3 அரசாணைகளும் ரத்து செய்யப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், டிசம்பர் 30ம் தேதிக்குள் தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டுள்ளது.

