Home Blog Page 5878

உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும்: வெள்ளையன்

மதுரை:

உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்று, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன் வலியுறுத்தியுள்ளார்.

மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுப் பேசியபோது அவர் கூறியது…

உலக வர்த்தக ஒப்பந்தம் காரணமாகவே, அனைத்துப் பொருள்களின் விலையும் உயர்ந்திருக்கிறது. மேலும், இதன் காரணமாக விவசாயம், வணிகம், சிறு தயாரிப்பு, தகவல் தொடர்பு, காப்பீடு என பல துறைகளிலும் அந்நிய முதலீடு அதிகரித்துவிட்டது. ஆன்-லைன் வர்த்தகம், விவசாயத்தில் மரபணு மாற்றம், மதிப்புக் கூட்டு வரி, சரக்கு மற்றும் சேவை வரி இவற்றுக்கெல்லாம் உலக வர்த்தக ஒப்பந்தம்தான் காரணமாக இருக்கிறது. வளரும் நாடுகளைக் கொள்ளையடிக்க வளர்ந்த நாடுகளால் வகுக்கப்பட்ட திட்டம்தான் இது. எனவே, உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா ஒட்டுமொத்தமாக வெளியேற வேண்டும் என்றார்.

ஆப்கனில் 5.8 அளவில் நிலநடுக்கம்: வட இந்தியாவிலும் நில அதிர்வு

புது தில்லி:

ஆப்கானிஸ்தானில் இன்று மதியம் ரிக்டர் அளவுகோலில் 5.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக இந்தியாவின் வட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.

ஆப்கானிஸ்தானின் இன்று மதியம் 2.07 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்துகுஷ் மலைப் பகுதியில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது. இது ரிக்டர் அளவு கோலில் 5.8 ஆகப் பதிவாகியிருந்தது. இத்தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதுமில்லை.

முகம் சுளிக்க வைக்கும் பேபிடால் போஸ்டர்

சென்னை:

சென்னை நகர் முழுவதும் ‘பேபிடால்’ என்கிற சினிமா போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருக்கிறது இந்த போஸ்டர். பேபிடால் என்ற இந்தப் படத்தை ஹாசிகா தத் என்ற நடிகைதான் இயக்கி நடிக்கிறார்.
போஸ்டரில் சரக்கு அடிக்கிற மாதிரி போஸ் கொடுத்துக் கொண்டிருப்பவரும் இவர்தான்.
இவர், 1 பந்து 4ரன் 1 விக்கெட் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவர் இந்தப் படத்தை தமிழ் தெலுங்கில் இயக்குகிறார்.

சீனாவில் புத்தாண்டு முதல் 2 குழந்தை பெற அனுமதி: புதிய திட்டம் நேற்று முதல் அமல்

சீனாவில் ஒரு குழந்தை திட்டம் முடிவுக்கு வந்தது, மேலும், புத்தாண்டு முதல் 2 குழந்தைகள் பெற அனுமதி அளித்து மக்கள்தொகை கொள்கையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, புதிய திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

உலகிலேயே மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடாக சீனா முதலிடத்தில் உள்ளது. இங்கு 2015–ம் ஆண்டு கணக்கெடுப்புபடி மக்கள் தொகை 140 கோடியே 15 லட்சமாக உள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தால் சீனா பல்வேறு நெருக்கடிக்கு ஆளானது. உணவு தட்டுப்பாடு, வாகனம் மற்றும் குடியிருப்புகள் பெருக்கம், வேலையில்லா திண்டாட்டம் போன்றவை ஏற்பட்டது.

இந்நிலையில் அரசு அங்கு ஒரு குழந்தை திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த திட்டம் அமலில் இருந்து வந்தது. இதனால் மக்கள் தொகை பெருக்கம் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் மற்ற பிரச்சினைகள் உருவானது. தொழில் வளர்ச்சியில் வேகமாக முன்னேறிய சீனாவில் வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை மற்றும் பாலியல் தொடர்பான குற்றங்கள் பெருகியது. எனவே ஒரு குழந்தை திட்டத்தை தளர்த்தி 2 குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆளும் கம்யூனிஸ்டு உயர் மட்டக்குழு 2 குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்கலாம் என்று கடந்த அக்டோபர் மாதம் ஒப்புதல் அளித்தது.

இது தொடர்பான சட்டம் தேசிய நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் நிறைவேறியது. அதில் ஜனவரி 1 ஆம் தேதி 2 குழந்தை பெற்றுக் கொள்ளும் திட்டம் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒரு குழந்தை திட்டம் முடிவுக்கு வந்து, புத்தாண்டு தினமான நேற்று முதல் 2 குழந்தை பெற்றுக் கொள்ளும் திட்டம் அமலுக்கு வந்தது. இந்த திட்டத்தை சீன தம்பதிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.

தொடர்ந்து என்னைப் புறக்கணித்து வருகிறார் மோடி: அன்னா ஹசாரே கடிதம்

புது தில்லி:

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பிரமதர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், மோடி தன்னைத் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார், மேலும் அவர் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கடந்த கால காங்கிரஸ் ஆட்சிக்கும் தற்போதைய பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு ஹசாரே எழுதியுள்ள 3 பக்க கடிதம், மும்பையில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

பிரமதர் மோடிக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து அன்னா ஹசாரே எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளான கருப்புப் பணத்தை திரும்ப கொண்டு வருதல், ஊழலற்ற இந்தியாவை உருவாக்குதல் உள்ளிட்டவைகளை மோடி மறந்துவிட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

”லோக்பால், லோக் ஆயுக்தா அமைப்புகள் சீராக செயல்படும்” என்ற தேர்தல் வாக்குறுதியை நினைவுப்படுத்தியுள்ள அன்னா ஹசாரே, கடந்த மக்களவைத் தேர்தலின்போது, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்போம், ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவோம் என்பன போன்ற பல்வேறு வாக்குறுதிகளை அளித்தீர்கள். அவற்றை, நீங்கள் மறந்திருக்கலாம். நிறைவேற்றப்படாத அந்த வாக்குறுதிகளை மீண்டும் நினைவூட்டும் வகையில் இக்கடிதத்தை எழுதியுள்ளேன். நான் ஏற்கெனவே எழுதிய பல கடிதங்கள் புறக்கணிக்கப்பட்டு விட்டன. அவை, குப்பைத் தொட்டியில் தான் வீசப்பட்டிருக்கும் என்பதை அறிவேன். எனது தற்போதைய கடிதத்துக்கும் அதே கதி ஏற்படலாம். ”பிரதமருக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு கடிதத்துக்கும் பிரதமர் பதிலளிக்க முடியாது. எனினும், நாட்டுக்காக தங்களையே அர்பணித்துள்ள சமூக ஆர்வலர்கள் அளிக்கும் கடிதங்களுக்கு பிரதமர் பதில் அனுப்பலாம்.” என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் ஹசாரே.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் அதிக அளவில் இருந்தது. லஞ்சம் வழங்கப்பட்டால் மட்டுமே வேலை நடைபெற்றது. மோடியின் வாக்குறுதியை நம்பி வாக்களித்த மக்கள் தற்போதும் அதே நிலையை தான் எதிர்கொள்கின்றனர். பணம் இல்லாமல் ஒரு வேலையும் நடைபெறுவதில்லை. பணவீக்கமும் குறையவில்லை. கடந்த காலங்களில் நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது தொலைபேசியில் என்னோடு பேசுவார். வாஜ்பாய் புணே வரும்போது, என்னைக் குறித்து விசாரிப்பார். மன்மோகன் சிங் கூட எனது கடிதங்களுக்குப் பதில் அனுப்பியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் சேஷாத்ரி எனது கிராமத்துக்கு வந்து, என்னைக் குறித்து புத்தகம் எழுதியுள்ளனர். ஆனால், பிரமதர் மோடி தன்னை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார் ஹசாரே.

பதான்கோட் தாக்குதல்: விமானப்படை அதிகாரிகள் 3 பேர் பலி

பதான்கோட்:

பஞ்சாபின் பதான்கோட் நகரில் உள்ள விமான படை தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய விமான படை அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார். இதனால் இந்திய தரப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

பதான்கோட் நகரில் இன்று அதிகாலை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதில் தாக்குதலை இந்திய விமான படை அதிகாரிகளும் தொடுத்தனர். இந்த மோதலில் 4 பயங்கரவாதிகளும் மற்றும் இந்திய விமான படையை சேர்ந்த 2 அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். வீரர்களில் 6 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், இந்திய விமான படையின் கமாண்டோ ஒருவர் பலியாகியுள்ளார். இதனால் பலியான படை வீரர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் 3 பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் பஞ்சாப் போலீசார் விமான படை தளத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

பதான்கோட் தாக்குதல்: மோடி விசாரிப்பு; பாதுகாப்பு அமைச்சர் தலைமையில்அவசரக் கூட்டம்

புது தில்லி: 

பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப்படை தளத்தில் இன்று அதிகாலையில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர் . பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் விமானப்படை வீரர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தை நிகழ்த்தியது பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள் என தெரியவந்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உயர்மட்ட அவசர ஆலோசனைக் கூட்டம் தில்லியில் மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையில் நடந்தது . இதற்கிடையில், நடந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி விவரங்களை கேட்டறிந்தார்.
பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் எச்சரித்துள்ளார்.

இந்திய எல்லையில் நுழைந்த பயங்கரவாதிகள், கடல் வழியாக வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது . போலீஸ் எஸ். பி., வாகனத்தை கடத்தி சென்று, அதுனை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலில் ஜெய்ஸ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பிற்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது .

இந்தப் புத்தாண்டு தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தக்கூடும் என கடந்த சில நாட்களுக்கு முன் உளவுத்துறை எச்சரித்திருந்தது . அத்துடன் நேற்றும், பஞ்சாப் மாநில எல்லைக்குள் 4 முதல் 5 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக எச்சரிக்கப்பட்டிருந்தது. இதனால் பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் இருந்ததால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என விமானப்படை தள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலை தொடர்ந்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கடற்படை தளபதி மற்றும் பாதுகாப்பு துறை தேசிய செயலர் அஜித் தோவல் , பாதுகாப்பு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

வாணியம்பாடியில் பாஜக., கடையடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வேலூர்:

வாணியம்பாடியில் பாஜக மாநில நிர்வாகி மீது வன்முறைக் கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் அவர் பலத்த காயமடைந்தார். இதைக் கண்டித்து பாஜகவினரும், பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவபிரகாசம் (55). பாஜகவின் இந்து அறநிலையப் பிரிவின் மாநிலச் செயலாளராகவும், மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் உள்ளார். திருமணமாகாத இவர் கட்சிப் பணியில் முழுநேரமாக ஈடுபட்டு வருகிறார். இவர் வெள்ளிக்கிழமை காலை வாணியம்பாடியில் உள்ள விநாயகர் கோயிலில் வழிபட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது 6-க்கும் மேற்பட்டோர் சிவபிரகாசத்தை வழிமறித்து இரும்புக் கம்பியால் தாக்கினர். பலத்த காயமடைந்த அவரை அருகிலுள்ள சாக்கடைக் கால்வாயில் தள்ளி விட்டனர்.

இந்த கொலைவெறித் தாக்குதலில் சிவபிரகாசத்தின் தலை, வயிறு, கால்கள் ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. பொதுமக்கள் ஓடி வந்ததைக் கண்ட மர்மக் கும்பல் அங்கிருந்து வாகனங்களில் தப்பிச் சென்றது. கால்வாயில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த சிவபிரகாசம் ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தகவலறிந்த பாஜகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் கூடினர்.

தகவலறிந்த வாணியம்பாடி டிஎஸ்பி சுப்பிரமணியம் (பொறுப்பு), காவல் ஆய்வாளர் பழனி, போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் நகர பாஜக தலைவர் சிவகுமார் தலைமையில் 25-க்கும் மேற்பட்டோர், தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.

சிறிது நேரத்தில் பாஜக மாவட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமையிலான நிர்வாகிகள், விஜயபாரத மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் கோ.ஸ்ரீ.ஜெய்சங்கர், பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பேருந்து நிலையம் அருகே திரண்டு மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். தாக்கியவர்களை கைது செய்யவேண்டும்மென கேட்டு சாலை மறியலில் ஈடுப்பட்ட இந்து அமைப்புகளை சார்ந்தவர்கள் இன்று 2ந்தேதி வாணியம்பாடி நகரில் முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். அதன்படி இன்று காலை முதலே பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விஜய பாரத கட்சி தலைவர் ஜெய்சங்கர் உட்பட இந்து அமைப்புகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 25 பேரை போலீஸார் வீட்டுக் காவலில் வைத்தனர். வாணியம்பாடி மருத்துவனையில் சரியான சிகிச்சை அளிக்கவில்லையென வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிவப்பிரகாசத்தை மாற்றியுள்ளனர். வடக்கு மண்டல ஜ.ஜீ மஞ்சுநாதா தலைமையில் ஆயிரம் போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் வாணியம்பாடி நகரமே பதட்டமாக காணப்பட்டது.

கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்

கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் கோலாகலம்
 கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில்வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு இராப்பத்து பகல் பத்து உற்சவம் நடைபெற்றது ,  நிறைவு நாளாக ஸ்ரீ ஆண்டாள் கல்யாணத் துடன் விழா சிறப்பாக முடி வுற்றது. மாலை மாப்பிளை அழைப்பு மாலை மற்று வைபவம் ஊஞ்சல், திருமாங்கல்யதாரணம், நலுங்கு ஆகியன பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் ஸ்ரீ ஆண்டாளுக்கும் நடை பெற்றது   ஸ்ரீ ராம பஜன மண்டலியினர் கல்யாண் உற்சவ கீர்த்தனை பாடல்கள் பாடி நடத்தினர். பெண்கள் பக்தியுடன் கோலாட்டம், கும்மி போன்றவை அடித்து இறைவனை மகிழ்வித்தனர்.யாஹம், வேள்வி, ஜெபம் இவைகளுக்கு வயப்பட மாட்டேன். ஆனால் எங்கு பக்தியோடு எனது  கீர்த்தனைகள் பாடபடுகிறதோ அங்கு நான் நித்யவாசம் செய்கிறேன் என்பது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின்  கூற்று.அதற்கேற்ப  பன்னிரு ஆழ்வார்கள் பாடிய திவ்யபிரபந்த சேவை மற்றும் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணா ப்ரேமி சுவாமிகள் 108 திவ்ய தேசத்தில் பெருமாளை கண்ட அனுபவத்தின் வாயிலாக வந்த  கீர்த்தனாவளி பாடல்கள் இக்கோவிலில் பாடப்பட்டன.மேற்படி உத்சவம் ஸ்ரீ ஸ்ரீ சிருங்கேரி சுவாமிகள், ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணா ப்ரேமி சுவாமிகள் ஆகியோரின்  அனுகிரகதுடன் கிராம மக்களால் அர்ச்சகர் ரவி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடை பெற்றது.

வீதிகளில் முத்தமிடும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி தாக்குதல் : 6 பெண்கள் உள்ளிட்ட 31பேர் கைது

 
கிஸ் ஆப் லவ் அமைப்பினர் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வீதிகளில் முத்தமிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த அனுமன் சேனா அமைப்பினர் முத்தம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கடுமையாக தாக்கினர். இரு அமைப்பினரும் தாக்குதலில் ஈடுபட்டதால் அந்த இடம் போர்க்களம் போல் காட்சி அளித்தது.
நடைபெற்ற தாக்குதல் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் தடியடி நடத்தி மோதலில் ஈடுபட்ட இருபிரிவினரையும் விரட்டி அடித்தனர். மேலும் மோதலில் ஈடுபட்ட கிஸ் ஆப் லவ் அமைப்பின் 6 பெண்கள் உள்ளிட்ட 15 பேரையும், அனுமன் சேனா அமைப்பின் 16 பேரையும் கைது செய்துள்ளனர்