Home Blog Page 5882

ஐ.பி.எல்.: டெல்லி அணியில் இருந்து யுவராஜ்சிங் விடுவிப்பு

புது தில்லி,

ஐபிஎல்., கிரிக்கெட் அணிகளில், டெல்லி அணி யுவராஜ் சிங், ஸ்டெய்ன், மேத்யூஸ் ஆகியோரை விடுவித்துவிட்டது.

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் யுவராஜ்சிங்கை, கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியின் போது ரூ.16 கோடிக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போனவர் இவர் தான்.

ஆனால் 8–வது ஐ.பி.எல். தொடரில் யுவராஜ்சிங் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை. 14 ஆட்டங்களில் வெறும் 248 ரன்கள் மட்டுமே (சராசரி 19.07) எடுத்தார்.

இந்நிலையில் 9–வது ஐ.பி.எல். சீஸனில், பரஸ்பர புரிந்துணர்வு அடிப்படையில் முதற்கட்ட வீரர்கள் பரிமாற்றம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதன் அடிப்படையில் யுவராஜ்சிங்கை தங்கள் அணியில் இருந்து டெல்லி டேர்டெவில்ஸ் நிர்வாகம் விடுவித்துள்ளது. இதுகுறித்து டெல்லி அணியின் தலைமை செயல் அதிகாரி ஹேமந்த் துவா கூறும்போது, ‘யுவராஜ்சிங் சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. அவர் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார். மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி இருக்கிறார். ஆனால் எங்களது பட்ஜெட்டை கருத்தில் கொண்டே அவரை விடுவித்துள்ளோம். தனிப்பட்ட முறையில் அவரிடம் பேசினேன். அவர் அதற்காக பெரிதும் வேதனைப்படவில்லை. இலங்கை வீரர் மேத்யூசையும் (ரூ.7½ கோடி) விடுவித்து இருக்கிறோம். இதனால் ரூ.23 கோடியை சிக்கனப் படுத்தியுள்ளோம்.’ என்றார்.

பெட்ரோல் 63 காசும், டீசல் 1 ரூ.6 காசும் விலைக் குறைப்பு

புது தில்லி,

பெட்ரோல் விலை லிட்டருக்கு 63 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.06ம் குறைந்தது.

பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருதடவை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அடிப்படையில், விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், நேற்று பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால், அதன் பலனை வாடிக்கையாளருக்கு அளிப்பதற்காக, இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 63 காசு குறைக்கப்பட்டது. டீசல் விலையை பொறுத்தவரை, லிட்டருக்கு ஒரு ரூபாய் 6 காசு குறைக்கப்பட்டது.

இந்த விலைக் குறைப்பு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டில் சிபிஐ சோதனை நடத்த முன் வருமா ? : விஜயகாந்த்

 
முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்த சிபிஐ முன்வருமா ? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வினா எழுப்பியுள்ளார்.
வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கு முழுமையான அளவில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்றது.
அந்த ஆர்ப்பாட்டத்தின் போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசிதாவது +-
கடலூர் மாவட்டத்தில், தற்போது கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எப்போதாவது ஜெயலலிதா நேரில் வந்தாரா? தமிழகத்தில் வெள்ள பாதிப்புக்குப் பிறகு மத்திய அரசு ஒதுக்கிய நிதி என்னவாயிற்று?
தமிழகத்தில் ஆட்சி செய்பவர்களுக்கு பணத்தாசையும், பதவி ஆசையும் தான் உள்ளது.மக்களைப் பற்றி அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை.
கடலூர் மாவட்டத்திலுள்ள வீராணம், பெருமாள் ஏரிகள் முறையாக தூர்வாரி பராமரிக்கப்படவில்லை.மேலும் கடலூர் மாவட்டஆட்சியரோ வெள்ள பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சாப்பாடு போட்டதற்கே ரூ.40 கோடி செலவாகிவிட்டது என கணக்கு காட்டுகிறார்.இவர் ஜெயலலிதாவை மிஞ்சிவிட்டாரா எனத் தெரியவில்லை.
டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியது போல், முதலமைச்சர் ஜெயலலிதா முதல் அதிமுக அமைச்சர்கள், கவுன்சிலர்கள் வரை அனைவர் வீடுகளிலும் சிபிஐ சோதனை நடத்த முன்வருமா? என விஜயகாந்த் வினா எழுப்பியுள்ளார்.

ஒற்றை இலக்க பதிவெண் வாகன கட்டுப்பாடு: தில்லியில் பைக்கில் செல்லும் அமைச்சர்கள்

 

புது தில்லி :

தில்லியில் ஒற்றை – இரட்டை இலக்க பதிவெண் கொண்ட வாகனங்களுக்கான கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் தில்லியில் மாநில அமைச்சர்கள் பலர் இருசக்கர வாகனங்களிலேயே தங்கள் அலுவலகத்திற்கு செல்கின்றனர்.

இன்று ஒற்றை இலக்க பதிவெண் கொண்ட வாகனங்கள் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்பதால், ஒற்றை இலக்க பதிவெண் கொண்ட கார்களை வைத்துள்ள அமைச்சர்கள், தங்களின் பாதுகாப்பிற்காக ஒரு பாதுகாப்பு அதிகாரியை மட்டும் பின்னால் அமர்த்திக் கொண்டு இருசக்கர வாகனங்களில் செல்கின்றனர்.

சாலைகளில் தன்னார்வலர்கள் பலர் மாசுக் கட்டுப்பாட்டை வலியுறுத்தும் வகையில், பதாகைகள், பூக்களை ஏந்திக் கொண்டு, சாலையில் செல்லும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

சேதமுற்ற 1,096 கி.மீ., நீள சாலைகள் சீரமைப்பு: தமிழக அரசு தகவல்

சென்னை:
மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த 1,096 கி.மீட்டர் நீள சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;-

மழை வெள்ளத்தினால் சேதமடைந்த சாலை மற்றும் பாலங்களை சீரமைக்க, நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒரு விரிவான செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ், 2 ஆயிரத்து 626 கி.மீ. சாலைகள், 143 தரைபாலம் மற்றும் சிறுபாலங்கள் சீரமைப்பு பணிகளுக்காகவும், 119 மண் சரிவு இடங்களில் பாதுகாப்பு கட்டமைப்புகளுக்காகவும், ரூ.150 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த நடைமுறைகளை பின்பற்றி சாலை சீரமைப்புப் பணிகளை இந்த மாதத்துக்குள்ளாகவும், 7 இடங்களில் தரைப் பாலங்கள் அமைக்கும் பணிகளை அடுத்த மாதம் பிப்ரவரியில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர ஆயிரத்து 96 கி.மீ. சேதமடைந்த சாலைகள் இதுவரை சீரமைக்கப்பட்டுள்ளன.

பெரும் மழையினால் மாநிலம் முழுவதும் சாலைகளில் ஏற்பட்ட 109 உடைப்புகளில் 107 இடங்களில் உடைப்புகள் சரிசெய்யப்பட்டு சீரான போக்குவரத்து உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அல்லாடு – மனோபுரம் சாலையில் மழைவெள்ளம் இன்னும் வடியாத நிலையில் படகு மூலம் மக்கள் போக்குவரத்து ஏதுவாக்கப்பட்டுள்ளது.

வாகன போக்குவரத்து சென்னை பழவேற்காடு சாலை வழியாக 3 கி.மீ. கூடுதல் தொலைவுடன் மாற்றுப்பாதையில் செல்கிறது. கடலூர் மாவட்டத்தில் நரிமேடு பகுதியில் அருகிலுள்ள உயர்மட்டப்பாலத்தின் வழியாக போக்குவரத்து செல்கிறது.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் வெள்ளநீர் வடிந்தவுடன் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்படும். மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 701 சிறுபாலங்கள், தரைபாலங்களிலும், மண் சரிவு மற்றும் ஆழமாக அறுந்தோடிய 254 இடங்களிலும் உடனடி சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அன்றே தடையில்லா போக்குவரத்து உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பிஞ்சிவாக்கத்தில் வெள்ளநீர் வடிந்துள்ளதால் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள், முடிக்கப்பட்டு இலகுரக வாகன போக்குவரத்து தொடங்கப்படும்.

மேலும், திருவள்ளூரில், கனகம்மாசத்திரம் – தக்கோலம் சாலை மற்றும் திருத்தணி நாகலாபுரம் சாலையில் வெள்ளநீர் வடிந்துள்ள நிலையில் தற்காலிக சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் 2 மீ விட்டம் கொண்ட குழாய்களை (ஒவ்வொன்றும் 13.5 டன் எடை கொண்டது) 25 வரிசைகளில் அடுக்கி 12 மீ அகலத்திற்கு தற்காலிக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளுக்காக, 2 பொக்லைன் எந்திரங்கள், 1 ஜே.சி.பி. எந்திரமும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பணிகள் இந்த வாரத்திற்குள் முடிக்கப்படும்.

ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ஹோட்டல் பில் பரிவர்த்தனை: `பான்’ எண் கட்டாயம் இன்று முதல் அமல்

புது தில்லி:

கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, ரூ. 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஹோட்டல் பில்களுக்கு நிரந்தர கணக்கு என் (பான்) கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தப் புது உத்தரவு ஜனவரி 1 இன்று முதல் அமலுக்கு வருகிறது.

பான் எண் பல்வேறு நிலைகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரூ. 2 லட்சத்துக்கு மேற்பட்ட மதிப்பிலான தங்க நகைகளை வாங்குவோர் கட்டாயம் பான் எண் குறித்த விவரங்களை அளிக்க வேண்டும். கடன் அட்டை மூலம் இத்தொகை செலுத்தப்பட்டாலும் கட்டாயம் பான் எண் விவரம் அளிக்க வேண்டும். அதேபோல ரூ. 10 லட்சத்துக்கு மேற்பட்ட அசையா சொத்துகளை பரிவர்த்தனை செய்தாலும் பான் எண் அவசியம். சிறிய அளவில் முதலீடு செய்து வீடு வாங்குவோருக்கு இது ஓரளவு ஆறுதல் அளிக்கும் விஷயமாகும். முன்னர் இந்த வரம்பு ரூ. 5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

குறித்த கால வரையறையுடன் கூடிய சேமிப்புத் திட்டங்களில் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 5 லட்சம் வரை முதலீடு செய்வோர் கட்டாயம் பான் எண் விவரத்தை தாக்கல் செய்ய வேண்டும். வங்கிகள், தபால் அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் இல்லாத பிற நிதி நிறுவனங்களில் (என்பிஎப்சி) முதலீடு செய்வோரும் பான் விவரத்தை அளிக்க வேண்டும்.

ரூ. 50 ஆயிரம் வரையிலான தொகையைச் செலுத்தி கேஷ் கார்டு மற்றும் முன்கூட்டி பணம் செலுத்தி பெறும் பிற வசதிகளைப் பயன்படுத்துவோரும், பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத ரூ.1 லட்சத்துக்கு மேலாக பங்குச் சந்தையில் முதலீடு செய்வோர் பான் விவரத்தை அளிக்க வேண்டும் என நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து வங்கிக் கணக்குகளுக்கும் பான் அவசியம் அளிக்க வேண்டும். பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டத்துக்கு மட்டும் இது அவசியம் இல்லை. அண்மையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, ரூ.2 லட்சத்துக்கு மேலான அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் அதாவது ரொக்கமாகவோ அல்லது கடன் அட்டை மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டால் பான் அட்டை விவரம் கட்டாயம் அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

2015-16-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வரம்பு ரூ.1 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது இது இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் நிர்ணயிக்கப்பட்ட வரம்பான ரூ. 5 லட்சத்தைவிட இது குறைவுதான். வங்கிகளில் ரொக்கமாக ரூ. 50 ஆயிரம் செலுத்துவது, காசோலை மற்றும் வரைவோலை பெற ஒரே நாளில் ரூ.50 ஆயிரமோ அதற்கு மேலோ செலுத்துபவர்கள் பான் அட்டை விவரத்தை அளிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது துபாயில் 63 மாடி கட்டடத்தில் தீ விபத்து

துபாயில் உள்ள மிக உயரமான கட்டடமான பர்ஜ் கலீஃபா 63 அடுக்கு மாடி கட்டடம் உள்ள பகுதியில் நட்சத்திர விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உலகின் மிக உயரமான கட்டடமான பர்ஜ் கலிஃபா அருகே உள்ள தி அட்ரெஸ் என்ற நட்சத்திர விடுதியில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. துபாய் நேரப்படி இரவு 9.30 மணிக்கு இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

63 தளங்கள் கொண்ட அந்தக் கட்டடத்தின் 20வது தளத்தில் ஏற்பட்ட தீ, விடுதியின் அனைத்து தளங்களுக்கும் பரவியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. உடனே, அங்கு தீயணைப்பு வண்டிகள் விரைந்து தீயை கட்டுப்படுத்த முயன்றன. அங்கிருந்தவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இருப்பினும், 16 பேருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டதாகவும், ஒருவர் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும், அங்கிருந்துவ் வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வெடிக்கப்பட்ட, வாணவேடிக்கை பட்டாசிலிருந்து வந்த தீப்பொறியின் காரணமாக தீ பற்றியிருக்கலாம் என துபாய் போலீசார் கருதுகின்றனர். தீ குபுகுபுவென எரிவது குறித்து அறிந்த மக்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் அந்த பகுதியில் உள்ள அனைத்து விடுதிகளும் மூடப்பட்டது.

2016 சிறந்ததாக அமையட்டும்

gandhiji - 2026
#image_title
2015 கூட்டினா… (2+0+1+5) 8 வருது! 2016 கூட்டினா… 9 வருது. அதனால்… 8ம் எண்ணுக்கு ஏத்த மாதிரி… பல சங்கடங்கள்.
9ம் எண் ஒழுங்கா இருக்குமாம்! அதுக்கு ஏத்த மாதிரி நம்பிக்கையோட வரவேற்கலாம்..! 

என்ன இருந்தாலும், நாம் 2016-ன்னுதான் வருடத்தை எழுதப் போறோம்.. அதன் சாதக பாதகங்களெல்லாம் எண்ணியல்ல இருக்கும்னு ஒருத்தர் சொன்னார்… ஆக… வாழ்த்துகள் நண்பர்களே! 
ஏழரையும் எட்டும் எட்டிப்போகட்டும்… நிலை மாறாத நிலை வரட்டும்!

ஒன்பது என்பதன் நிலை குறித்து விவரித்து விடுகிறேன்…
வழக்கம்போல்… என் மஞ்சரி கால அனுபவத்தைத்தான் குறிப்பிடுகிறேன்.

மஞ்சரி 1969ம் வருட ஆவணி மாத இதழில் 31, 32ஆம் பக்கங்களில் இந்தச் செய்தி இடம்பெற்றுள்ளது. அதன் சுருக்கமான தகவல்.. 

ஸ்ரீராம் நரேஷ் த்ரிபாதி என்பவர் எழுதியது. இவர், ஒரு முறை உண்ணாநோன்பிருந்த காந்திஜியை சந்தித்தபோது, ராம நாம மகிமையை வலியுறுத்தும் விதமாக, துளஸிதாசரின் ஒரு தோஹா…வை எடுத்துச் சொல்கிறார். 

போலோ ராம்; கரோ காம் – என்று, ராமன் பேரைச் சொல்லு; வேலையைப் பாரு என்று முழங்கியவர் காந்திஜி.
அந்த தோஹா.. அதாவது கவிதை இதுதான்..

துளஸீ ராம ஸ்நேஹ கரு 
த்யாகி ஸகல உபசார்;
ஜைஸே கடக் ந அங்க நௌ
நௌ கே லிகத் பஹார் 

– அதாவது நௌ என்பதன் தன்மையை காந்திஜியிடம் சொன்னார் ஸ்ரீராம் நரேஷ் த்ரிபாதி. 

மனிதன் எந்த நிலையில் இருந்தாலும் ராம பக்தியைக் கைவிடலாகாது. ராமனிடம் திடபக்தி இருந்தாலே போதும், மற்ற முயற்சிகள் தேவையில்லை. 

ஒன்பதாம் வாய்பாடில் எப்படியெல்லாம் பெருக்கம் கண்டாலும் மூல எண் ஒன்பது தன் நிலையைக் குலைத்துக் கொள்வதில்லை. மனிதனின் ராமபக்தி அப்படி நிலையானதாக, தன்மையில் பிறழாமல் இருக்க வேண்டும். 

அதாவது…
9 x 2 = 18 ; 1+8 = 9
9 x 3 = 27 ; 2+7 = 9
9 x 4 = 36 ; 3+6 = 9
… … …
9 x 8 = 72 ; 7+2 = 9
9 x 9 = 81 ; 8+1 = 9

இவ்வாறு துளசிதாசரின் கவி விளக்கத்தை அவர் சொன்னதும், காந்திஜி மேலும் தனது கருத்தை வேறு விதமாக விளக்கிச் சொன்னாராம்…

ஒன்பதைப் போல் சுயநிலையை இழக்காமல் ராம பக்தியை மேர்கொள்ல வேண்டும் என்பதற்கு அதன் வாய்ப்பாட்டைத் துளசிதாசர் எடுத்துக் காட்டியதில் இன்னொரு விசேஷம் உண்டு. 9 என்பதை முழுதும் குறைகள் கொண்ட ஒரு மனிதனாக வைத்துக் கொள். பிறகு அவனுடைய இரு தகுதிகளை அல்லது செயல்களைக் கொண்டு பெருக்கிப் பார்க்கும் போது, அந்த மனிதன் (9) தன் நிரை குறைகளைப் புலப்படுத்துகிறான்.
அதுதான் 18. அதில் 1 நிறை, 8 குறை.கள். இதைக் கண்டதும் அந்த மனிதனுக்கு புத்துணர்வு ஏற்படுகிறது. குறைகளை குறைத்துக் கொள்ள முற்படுகிறான். அடுத்த நிலையில், (2 7) குணம் 2 ஆக வளர்கிறது, குற்றம் 7 ஆகக் குறைகிறது. இப்படியே… இதற்கு அடுத்து அடுத்து முன்னேறி, குற்றமே இல்லாமல் குணமே நிறைந்த நிலையை அவன் அடைகிறான். 

ராம பக்தியை மேற்கொண்ட மனிதன் இதே போல் படிப்படியாகத் தன் குற்றங்களைக் குறைத்துக் கொண்டு குணங்களை வளர்த்துக் கொண்டு நிறை வாழ்வு எய்த வேண்டும்… 

காந்திஜியின் இந்த விளக்கம் 9ம் வாய்ப்பாட்டை முன்னிறுத்திய துளசிதாசரின் பாட்டுக்குக் கிடைத்த புது விளக்கம்.

ஆகவே, 2016 ஆம் ஆண்டு, 9ம் எண்ணின் கூட்டுத் தொகையில் முடியும் இந்த ஆண்டு, அனைவருக்கும் நிலையான தன்மையை அருளட்டும்!

 

ஆங்கிலப் புத்தாண்டு: எப்படி வந்தது?

மதச்சார்பற்றவர்கள், பகுத்தறிவாளர்கள்,அறிவு ஜீவிகள்,ஜனவரிப் புத்தாண்டு கொண்டாடுபவர்கள் கவனத்திற்கு!

இன்று அனுசரிக்கப்படும் புத்தாண்டைக் கொண்ட காலண்டரின் கதை தெரியுமா?
ரோமானியர்களால் உறுவாக்கப்பட்ட முதல் ரோமன் காலண்டரின் பெயர் ரோமலஸ். இந்த நாள் காட்டி, மார்ச் தொடங்கி, டிசம்பரில் முடியும்.பத்தே மாதங்கள் தான்.பனிக்காலங்கள் இடம் பெறாத 304 நாட்களைக் கொண்ட ஆண்டுக்கணக்கீடு. போர்க் கடவுளான செவ்வாய், அதாவது mars ஐ வைத்து மார்ச் மாதம் முதல் மாதம். இந்தப் பூக்கும் காலத்தைத் தொடர்ந்து, உதிரும் விதையை உலகம் பெருவதால், apreio என்ற சொல்லை முன்வைத்து ஏப்ரல் மாதம், அதைத் தொடர்ந்து வளரும் பருவத்தைக் குறிக்கும் கடவுளான மையா வின் பெயரில் மே மாதம், அதைத் தொடர்ந்து ஜுனியஸ் (junior) என்ற இளவலை முன்னிட்டு ஜூன் மாதம், பின் quintillis, sextillis,september, october,november, december என்று ஐந்து முதல் பத்து மாதங்கள் வரிசையில், அவைகள் காலண்டரில் அமையப்பெற்ற நிலையை வைத்துக் குறிக்கப்பட்டன. சில நூற்றாண்டுகளுக்குப் பின், கிரேக்கக் கடவுள்களின் பெயரில் ஜனவரி மற்றும் பிப்ரவரி, கடை மாதங்களாகச் சேர்க்கப்பட்டன,

ரோமப் நாகரீகத்தின் வீழ்ச்சி, கிறிஸ்தவ எழுச்சி க்குப் பின், இயேசு கிறிஸ்து பிறந்த கடக (capricon) மாதத்தை முதல் மாதமாகக் கொண்டு இந்த காலண்டர்கள் சீரமைக்கப்பட்டது (சீர் அழிக்க).
இந்த ஜனவரிக் கூத்து அரங்கேறுவதற்கு முன், சூரியனின் சஞ்சாரத்தை வைத்து, நில நடுக்கோடு, கடக ரேகை, மகர ரேகை போன்றவற்றைக் கொண்டு காலம் கணிக்கப்பட்டு வந்தது.இயேசு பிறந்த நாள், பலமுறை மாற்றப்பட்டு, டிசம்பர் 25 என்று தற்போது முடிவான capricon மாதம் முதல் மாதமாக மதத்தின் அடிப்படையில் உருவானது. இன்னும் சில ஆராய்ச்சியாளர்கள், ஜனவரி 1, டிசம்பர் 25 லிருந்து எட்டாம் நாள், அன்றுதான் ஏசுவிற்கு சுன்னத் செய்யப்பட்ட நாள் என்கிறார்கள்.
சூரியன் ராசிக்குள் பிரவேசித்து, பருவச் சுழற்ச்சி தொடங்கும் காலத்தைக் கொண்டாடிய மனித குலம், உலகம் தட்டை என்று சொன்ன கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த, அறிவியல் அடிப்படையற்ற ஒரு மூட நம்பிக்கையை, நவீனம், நாகரீகம்,உலகாதயம் மதச்சாற்பின்மை என்ற பெயரில் கொண்டாடுகிறது. இதுவும் “India is tolerant” என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு! இன்னும் அடிமையும், பேடிமையும் நம்மைவிட்டு விலகவில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்!

புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்கு முன் ஒரு கணம் நம் நிலையை யோசிப்போம்!

“நமக்கு நாமே” ஸ்டாலினையும், திமுகவையும் நையாண்டி செய்த முதலமைச்சர் ஜெயலலிதா!

சென்னை திருவான்மியூரில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா பேசிய போது, ஒரு குட்டிக்கதை கூறி ஸ்டாலினையும், திமுகவையும் நையாண்டி செய்தார்.
முதலமைச்சர் ஜெயலலிதா கூறிய குட்டிக்கதையாவது :-
”ஒரு கிராமத்தில் ஒரு பண்ணையார் வீடு. அந்த பெரிய வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்தான் ஒரு திருடன். வீட்டிற்குள் எல்லா இடங்களிலும் காவலுக்கு ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள். இந்த வீட்டில் திருட முடியாது என்று நினைத்த திருடன் மெதுவாக வந்த வழியே திரும்ப ஆரம்பித்தான். அந்த சமயத்தில் அவனுடைய காலில் ஏதோ தட்டுப்பட்டது. சற்று குனிந்து பார்த்தான். ஒரு பெரிய வெங்காய மூட்டை அங்கு இருந்தது. வந்ததற்கு இதையாவது எடுத்துச் செல்லலாம் என்று நினைத்து ஒரு பெரிய பை நிறைய வெங்காயத்தை அள்ளிப் போட்டுக் கொண்டான்.
புறப்படுகிற சமயத்தில் ‘கப்’ என்று ஒரு கை வந்து விழுந்தது. ஆள் மாட்டிக்கொண்டான். மறுநாள் காவலாளிகள் அவனை அரசன் முன் சென்று நிறுத்தி நடந்ததை கூறினர்.
அரசனும் “என்னப்பா இவர்கள் சொல்வது எல்லாம் உண்மை தானா?” என்று கேட்டார். “ஆமாம்” என்று திருடனும் ஒத்துக் கொண்டான். உடனே அரசன் திருடனைப் பார்த்து
“நீ பண்ணையார் வீட்டில் திருட வந்தது குற்றம். அதற்காக 100 ரூபாய் நீ அபராதம் செலுத்த வேண்டும். அல்லது 100 கசையடி வாங்க வேண்டும். அல்லது திருடிய வெங்காயத்தை பச்சையாக என் கண் முன்னாடி சாப்பிட வேண்டும். இதில் எந்த தண்டனை உனக்கு வேண்டும்?” என்று கேட்டார்.
சற்று சிந்தித்த திருடன், “வெங்காயத்தை சாப்பிடுகிறேன்” என்றான். வெங்காயத்தை ஒவ்வொன்றாக சாப்பிட ஆரம்பித்தான். கண்ணிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்துவிட்டது. ஒரே எரிச்சல். தாக்கு பிடிக்க முடியவில்லை. இது நமக்கு சரிபட்டு வராது என்று முடிவு பண்ணிவிட்டான்.
அரசரைப் பார்த்து ”என்னை மன்னித்து விடுங்கள். இது என்னால் முடியாது. பேசாமல் சாட்டை அடி கொடுத்து விடுங்கள்” என்றான். அரசரும் “சரி” என்றார்.
சாட்டையடி விழ ஆரம்பித்தது. 10 அடிகள் விழுகிற வரைக்கும் தாங்கினான். அதற்கு மேல் அவனால் தாக்கு பிடிக்கமுடியவில்லை. ”இதுவும் எனக்கு சரிபட்டு வராது. 100 ரூபாய் அபராதம் கட்டி விடுகிறேன்” என்று கூறினான்.
இந்த கதையைப் போல, இப்போது முதலமைச்சர் வேட்பாளர் என மனக்கோட்டை கட்டிக் கொண்டிருக்கும் ஒருவர், ஒவ்வொரு ஊராகச் சென்று ”நாங்கள் தெரியாமல் செய்த தவறுகளை மன்னித்து விடுங்கள்; இனி மேல் இது போன்று எந்த தவறையும் செய்ய மாட்டோம்” என்று பாவ மன்னிப்பு கேட்டுள்ளார்.
இவர்கள் ஆட்சியில் செய்த தவறுகள் ஒன்றா இரண்டா? காவிரிப் பிரச்சனை; முல்லைப் பெரியாறு பிரச்சனை; டெல்டா மாவட்டங்களையே பாலைவனமாக்கும் மீத்தேன் எரிவாயுத் திட்டம்; நில அபகரிப்பு; சட்டம் ஒழுங்கு சீர் குலைவு; மின்சாரம் பற்றாக்குறையால் தமிழகத்தையே இருண்ட காலத்துக்கு கொண்டு சென்றது; இலங்கைத் தமிழர்கள் மடிய காரணமாயிருந்தது என இவர்கள் தமிழர்களுக்கு இழைத்த துரோகங்களை எல்லாம் மறந்து மன்னித்துவிட தமிழர்கள் என்ன ஏமாளிகளா? அந்த நபர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அதற்கு ‘நமக்கு நாமே’ என்ற திருநாமத்தை சூட்டிக் கொண்டார்.” என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
மேலும் சட்டமன்றத்துக்கான தேர்தல் நெருங்குவதால் திமுக பல பொய்களை கட்டவிழ்த்துவிடும். எனவே, அதிமுக அமைச்சர்கள் திமுக-வின் பொய்களை தோலுரித்துக் காட்ட மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். இது போன்று எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் பொய்களுக்கு அமைச்சர்கள் உடனுக்குடன் பதில் அளிக்க வேண்டும் என்று கூறினார்.