Home Blog Page 5881

தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியா ?

 
தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப்போட்டியிடவே விரும்புகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
மேலும் செய்தியாளர்களிடம் இளங்கோவன் கூறியதாவது :-
எனினும் தேர்தல் நேரத்தின் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, மதச்சார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் இளங்கோவன் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு மக்கள் ஆதரவுடன் நல்ல ஆட்சி அமையும். செம்பரபாக்கம் ஏரி திறக்கப்பட்டதற்கு நான் காரணம் அல்ல. அதிகாரிகள் தான் காரணம் என்பது போல முதலமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார். இது அப்பட்டமான பொய்.
இந்த ஏரி திறக்கப்பட்டதால் ஏராளமான பேர் இறந்து உள்ளனர். பலர் பாதிக்கப்பட்டனர். எனவே செம்பரபாக்கம் ஏரி திறக்கப்பட்டது குறித்து உடனடியாக உயர் நீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணையை ஒரு மாதத்தில் முடிக்க வேண்டும்.
இருப்பினும் இது தொடர்பாக முழுமையான விசாரணை நடக்கும் என்று தமிழக அரசு மீது நம்பிக்கை இல்லை. எனவே மத்திய அரசு குழு அமைத்து இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் காட்டு பன்றி மற்றும் மயில்களால் விவசாய பயிர்கள் நாசம் ஆகின்றன. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2004–ம் ஆண்டு விவசாயிகள் கடன் முழுவதையும் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி ரத்து செய்தது. இதுபோல போதிய விளைச்சல் இல்லாமல் பாதிக்கப்பட்டு இருக்கும் விவசாயிகளின் கடன்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
விஜயகாந்த் – ஊடக துறை யினர் இடையே நடந்த முழுமையான விவரம் எனக்கு தெரியவில்லை. எனவே இது தொடர்பாக நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. விஜயகாந்த் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது சரியானது அல்ல.
வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடவே காங்கிரஸ் கட்சி விரும்பிகிறோம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலற்ற ஆட்சி நடத்துவோம் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால் மத்திய அமைச்சர்அருண்ஜெட்லி போன்றவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளது.
ஜல்லிக்கட்டு நடப்பதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினால் போதாது. இதுதொடர்பாக பிரதமர் மோடியை அவர் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று செய்தியாளர்களிடம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறிபேசினார்.
திமுக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால், அதில் காங்கிரஸ் கட்சியும் இருக்கும் என கருணாநிதி கூறியிருந்த நிலையில், இளங்கோவனின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

புகழ் படத்தை வாங்கிய அயங்கரன் இன்டர்நேஷனல்!

ஜெய் மற்றும் சுரபி நடிப்பில் மணிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘புகழ்’ அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. பிரபல திரைப்பட விநியோக நிறுவனமான அயங்கரன் இன்டர்நேஷனல் இந்தப் படத்தை வாங்கியதன் மூலம், படத்தின் தரத்தை பற்றிய எதிர்ப்பார்ப்பு உறுதியாகிறது.

‘அயங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தை வாங்கி இருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. சர்வதேச அளவில் திரை வர்த்தகத்தில் கொடிக்கட்டி பறக்கும் இந்த நிறுவனம் எங்கள் படத்தை வாங்கியதன் மூலம் நான் தயாரித்த ‘புகழ்’ படத்துக்கு அந்தஸ்து உயர்ந்து இருக்கிறது.

வருண் மணியனின் ரேடியான்ஸ் மீடியா உடன் இணைந்து அயங்கரன் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிட உள்ளனர். 2016 ஆண்டின் துவக்கத்தில் ‘புகழ்’ வெளி வரும் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. என்னுடைய சீரிய முயற்சிக்கு உற்றத் துணையாக இருக்கும் ஊடக நண்பர்களுக்கு எங்களது குழுவின் சார்பில் புத்தாண்டு வாழ்த்துக்கள்’ எனக் கூறினார் தயாரிப்பாளர் சுஷாந்த் பிரசாத்.

நாடாளுமன்ற உணவகத்தில் உணவுகள் விலை ஏற்றம்: மானிய விலையில் கிடைக்காது

புது தில்லி,

நாடாளுமன்றத்தில் உள்ள உணவகங்களில் மானிய விலையில், உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இனி, இதற்கான மானியம் ரத்தாவதால், இன்று முதல் குறைந்த விலையில் உணவுப்பொருட்கள் கிடைக்காது என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. லாபம் நஷ்டம் இன்றி அசல் விலையில் உணவுப் பொருட்கள் விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி, 18 ருபாய்க்கு விற்கப்பட்டு வந்த வெஜ் தாலி இனி 30 ரூபாய்க்கும், நான்வெஜ் தாலி 33 ரூபாய்க்கு பதிலாக இனி 60 ரூபாய்க்கும் விற்கப்படும். 29 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த சிக்கன் கறி 40 ரூபாய்க்கும் விற்கப்படும் என விலைப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிச் சந்தையில், கடும் பணவீக்கம் நிலவி வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் எம்.பிக்களுக்கு மானிய விலையில், உணவுப் பொருட்கள் விற்கப்படுவதாக ஊடகங்களில் சர்ச்சை எழுந்து வந்தன. இதையடுத்து, இந்த விவகாரத்தை கவனிக்குமாறு, நாடாளுமன்ற உணவுக் குழுவுக்கு சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார். இதை ஆய்வு செய்த நாடாளுமன்ற உணவுக்குழு அண்மையில் அறிக்கை அளித்தது. இதையடுத்து 6 ஆண்டுகளாக அமலில் இருந்த விலையை மாற்றி அமைத்து நாடாளுமன்ற அவைத்தலைவர் சுமித்ரா மகாஜன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இனி, இந்த விலை அவ்வப்போது மாற்றியமைக்கப்படும் என்று மக்களவைச் செயலர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உள்ள உணவகத்தில், உணவு உண்ண வரும் மக்களவை, மாநிலங்களவை, ஊடகவியலாளர்கள், பாதுகாப்புப் பிரிவினர், மற்றும் பார்வையாளர்கள் உட்பட அனைவருக்கும் இந்த விலைப் பட்டியல் பொருந்தும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

காஷ்மீரில் சுரங்கப் பாதையில் தீ விபத்து 10 பேர் பலி

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் ராம்பன் மாவட்டம் சந்தர்கோடே என்ற இடத்தில் மலையைக் குடைந்து சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. நள்ளிரவிலும் சுரங்கப் பாதை அமைக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை 1 மணி அளவில் திடீரென்று சுரங்கப் பாதையில் தீ விபத்து ஏற்பட்டது. சுரங்கப் பாதைக்குள் செல்லும் மின்சார வயரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்துக் கொண்டதாகத் தெரியவருகிறது. தீ மளமளவென்று பரவியதால் தொழிலாளர்கள் தப்பிக்க முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

இந்தத் தீவிபத்தில் 10 பேர் கருகி பலியானார்கள். தகவல் அறிந்து, போலீஸார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இலங்கைப் படையினரின் அத்துமீறலை தடுக்க அவசர நடவடிக்கை தேவை: ராமதாஸ்

சென்னை:
மீனவர்கள் கைது விவகாரத்தில் இலங்கைப் படையினரின் அத்துமீறலை தடுக்க அவசர நடவடிக்கை தேவை என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

வங்கக் கடலில் மீன் பிடிப்பதற்காக சென்ற நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் 29 பேரை சிங்களக் கடற்படையினர் சட்டவிரோதமாக சிறை பிடித்துச் சென்றிருக்கின்றனர். பன்னாட்டு கடல் விதிகள் மற்றும் பாரம்பரிய நடைமுறைகளுக்கு எதிராக தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் நடத்தி வரும் தாக்குதல்களும், சிறை பிடிப்பு நடவடிக்கைகளும் கடுமையாக கண்டிக்கத்தக்கவையாகும்.

நாகை மாவட்டம் அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்நாள் மாலை வங்கக் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். கோடியக்கரைப் பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டு இருந்த போது அங்கு வந்த சிங்களப் படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த 29 மீனவர்களை அவர்களின் படகுகளுடன் சிறை பிடித்துச் சென்றனர். இலங்கை திரிகோணமலை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கூறி அவர்களை நீதிமன்றத்தில் சிங்களப்படையினர் நேர்நிறுத்தி சிறையில் அடைத்திருக்கின்றனர். உண்மையில் தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் தான் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். ஆனால், அத்துமீறி நுழைந்து மீனவர்களை கைது செய்ததுடன், அவர்கள் தான் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக சிங்களப்படை அபாண்டமாக பழி சுமத்தியுள்ளது. அண்மைக்காலமாகவே இந்திய எல்லைக்குள் சிங்களப் படை அத்துமீறி நுழைந்து மீனவர்களை கைது செய்வது அதிகரித்திருக்கிறது.

கடந்த இரு மாதங்களில் மட்டும் 47 தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்துள்ளது. அதுமட்டுமின்றி தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 57 படகுகளை பறிமுதல் செய்து வைத்துள்ள இலங்கை அரசு அவற்றை திருப்பித் தர மறுத்து வருகிறது. தவறு எதுவும் செய்யாத போது தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு சிறையில் அடைத்து வைக்கப்படுவதும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் ஆகும். தமிழத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு எதிராக இத்தகைய அட்டூழியங்கள் தொடர அனுமதிப்பது மிக ஆபத்தானது.

மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம் அதை வேடிக்கைப் பார்ப்பதையும், மீனவர்களுக்கு ஆதரவாக பெரிய அளவில் போராட்டங்கள் வெடிக்கும் போது இலங்கை அரசுடன் பேசி அவர்களை விடுதலை செய்ய வைப்பதையும் மத்திய அரசு வாடிக்கையாக வைத்துக் கொண்டிருக்கிறது. இது சரியான அணுகுமுறை அல்ல. உடலில் கட்டி வளரும் வரை பொறுத்துக் கொண்டிருந்து விட்டு, வளர்ந்த பின் அதனால் ஏற்படும் வலிக்கு மருந்து போடுவதை விட, கட்டியே வளராமல் தடுப்பது தான் சிறந்த அணுகுமுறையாகும். அதேபோல், தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் ஆன பிறகு அவர்களை மீட்க நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவர்கள் கைது செய்யப்படாமல் தடுப்பது தான் சிறப்பானதாக இருக்கும். அதைத் தான் மத்திய அரசு உடனடியாக செய்ய வேண்டும்.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகவே இருந்தாலும் அவர்களை கைது செய்ய இலங்கை அரசுக்கு அதிகாரம் இல்லை. ஏனெனில், இரு நாடுகளுக்கு இடையே கடல் எல்லை மிகவும் குறுகியதாக இருக்கும் போது, ஒரு நாட்டைச் சேர்ந்த மீனவர் இன்னொரு நாட்டின் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடிப்பது சட்டப்பூர்வமான உரிமையாகும். இதை பன்னாட்டு நீதிமன்றத் தீர்ப்புகள் பல்வேறு தருணங்களில் உறுதி செய்திருக்கின்றன. அவ்வாறு இருக்கும் போது எல்லை தாண்டினார்கள் என்ற குற்றச்சாற்றின் அடிப்படையில் தமிழக மீனவர்களை இலங்கை கைது செய்வது முறையல்ல.

இனிவரும் காலங்களில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க, பன்னாட்டு சட்டங்களின்படி வங்கக்கடல் பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை உறுதி செய்வதற்கான ஒப்பந்தத்தை இலங்கை – இந்திய அரசுகள் செய்து கொள்ளவேண்டும். அதற்கு முன்பாக இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் 76 பேரையும், மீனவர்களுக்கு சொந்தமான 61 படகுகளையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும்.

ஐசிசி தரப் பட்டியல்: முதலிடத்தைப் பிடித்து அஸ்வின் சாதனை

சென்னை:

ஐசிசி வெளியிட்ட பந்துவீச்சாளர்களுக்கான தரப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து ரவிச்சந்திர அஸ்வின் சாதனை படைத்துள்ளார். 42 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பந்து வீச்சாளர்களில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் பந்து வீச்சாளர்களி முதலிடம் மற்றும், ஆல் ரவுண்டர் வரிசையிலும் முதலிடத்தை தக்க வைத்து சாதனை படைத்துள்ளார்.

அஸ்வின் 2015ல் ஒன்பது டெஸ்டில் பங்கேற்று 62 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மட்டும் அவர் 31 விக்கெட் சாய்த்தார்.

கடந்த 1973 ல் பிஷன்சிங் பேடி மட்டுமே ஆண்டின் இறுதியில் தர வரிசைப் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருந்தார். 42 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மைல்கல்லை அஸ்வின் தற்போது எட்டியுள்ளார். மற்ற இந்திய வீரர்களில் பகவத் சந்திரசேகர், கபில் தேவ், அனில் கும்பிளே ஆகியோர் அதிகபட்சமாக ஐசிசி தர வரிசைப் பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளனர்.

அஸ்வின் 871 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஸ்டெயின் 867 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர். கடந்த 6 வருடங்களாக ஆண்டு இறுதியில் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டிருந்த ஸ்டெயின், டர்பன் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் வீழ்த்தியபோதும் அது முதலிடத்தை தக்க வைக்க உதவவில்லை. அஸ்வின் 2015ம் ஆண்டின் தொடக்கத்தில் 15வது இடத்தில் இருந்தார். படிப்படியாக முன்னேறி தற்போது முதலிடத் துக்கு வந்துள்ளார்.

இதுதொடர்பாக அஸ்வின் கூறும்போது, “ஆண்டின் இறுதியில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது எனது பந்து வீச்சுக்கு மேலும் அழகு சேர்ப்பது போல் உள்ளது. 12 மாதங்களில் என்னால் இதை உருவாக்க முடிந்துள்ளது. முதலிடத்தை பிடிக்க வேண்டும் என எப்போதும் விரும்புவேன். 2015ம் ஆண்டு இதைவிட சிறப்பானதாக இருக்க முடியாது. சுழற் பந்து வீச்சில் தலை சிறந்தவராக திகழ்ந்தவர் பேடி. அவரது பாதையில் நானும் செல்வது மகிழ்ச்சியளிக்கிறது. டெஸ்ட் கேப்டன் விராட் கோலிக்கு நன்றி கூற விரும்பு கிறேன். அணியின் சக வீரர்கள், நிர்வாகம், பிசிசிஐ ஆகியோரும் பெரிய அளவில் எனக்கு ஆதர வளித்தனர்” என்று தெரிவித்தார்.

புத்தாண்டு பிரார்த்தனைக்காக சர்ச்சுக்கு சென்ற 3 பயிற்சி நர்சுகள் வாகனம் மோதி பலி

ஸ்ரீபெரும்புதூர்:

புத்தாண்டு பிரார்த்தனைக்காக சர்ச்சுக்குச் சென்ற பயிற்சி செவிலியர்கள் நடந்து வந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி 3 நர்சுகள் பலியாயினர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மேவலூர்குப்பத்தில் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. வேலூர் மாவட்டம் வாலாஜாவை அடுத்த செங்காடைச் சேர்ந்த கலையரசி (வயது 22), மேல்விசாரை சேர்ந்த குப்பு (22), ஆம்பூரை சேர்ந்த சரஸ்வதி (22) உள்ளிட்ட ஏராளமானோர் விடுதியில் தங்கி பயிற்சி நர்சுகளாக பணியாற்றி வந்தனர்.

புத்தாண்டு என்பதால், நேற்று நள்ளிரவு மேவலூர்குப்பத்தில் உள்ள சர்ச்சு ஒன்றில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள கலையரசி, குப்பு, சரஸ்வதி ஆகியோர் உடன் பணியாற்றும் தோழியருடன் சென்றனர். அதிகாலை 1 மணி அளவில் அவர்கள் பிரார்த்தனை முடித்து திரும்பினர். அவர்கள், சென்னை – பெங்களூர் சாலை ஓரத்தில் நடந்து வந்து கொண்டு இருந்தபோது சென்னை நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் திடீரென தாறுமாறாக ஓடி நர்சுகள் வந்த கூட்டத்துக்குள் புகுந்து விபத்தை ஏற்படுத்திச் சென்றது. இந்த விபத்தில் கலையரசி, குப்பு, சரஸ்வதி ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் உடன் சென்ற குடியாத்தத்தைச் சேர்ந்த கவிதா, தூத்துக்குடியைச் சேர்ந்த சரஸ்வதி, மாலா, கலையரசி ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

விபத்து ஏற்படுத்திய வாகனத்தில் வந்தவர்கள் தப்பிச் சென்று விட்டனர். தகவல் அறிந்து ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் பாலு மற்றும் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு அவர்கள் வேலை பார்த்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. நர்சுகள் பலியானது குறித்த செய்தி அறிந்ததும் உடன் பணியாற்றுபவர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்த விபரம் தெரியவில்லை. வாகனத்தை அடையாளம் காண சுங்கச்சாவடி மற்றும் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

புத்தாண்டு பிரார்த்தனைக்கு சர்சுக்கு சென்ற 3 நர்சுகள் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்ட மன்ற தேர்தலை சந்திக்க பாஜக தயாராக உள்ளது : தமிழிசை சவுந்தரராஜன்

 
தமிழக சட்ட மன்ற தேர்தலை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க தயாராக உள்ளதாக பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார் .
சென்னையை அடுத்த பட்டாபிராமில் பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பில் 12 ஜோதிர்லிங்க தரிசனம் நிகழ்ச்சியை தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் பின்னர் செய்தியாளர்களிடம் தமிழிசை கூறியதாவது :-
தமிழகத்தின் பாஜகாவின் அடிப்படை கட்டமைப்பு உறுதிப்படுத்தும் வகையில் 60 ஆயிரம் வாக்குச்சாவடிகளை 6 ஆயிரம் பகுதிகளாக பிரித்து 600 நிர்வாகிகள் சுற்றுப்பயணம் செய்து வருவதாக கூறினார்.
சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அரசியல் கட்சி தலைவர்களை பாஜக நட்பு ரீதியில் சந்தித்து வருவதாக அக்கட்சியின் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல் சுற்று பேச்சுவார்த்தை நட்பு ரீதியில் நடைபெற்று வருவதாகவும் மேலிடத்தின் அறிவுறுத்தலின் படி அடுத்தக்கட்ட சந்திப்புகள் விரைவில் நடைபெறும் என அவர் தெரிவித்தார். ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் இருந்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் தமிழகம் வர உள்ளதாக தமிழிசை தெரிவித்தார்.
தமிழக சட்ட மன்ற தேர்தலை சட்டப் பேரவைத் தேர்தலை எப்போது வேண்டுமானாலும் எதிர்கொள்ள பாஜக தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

பிசிசிஐ.,யின் சிறந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி

புது தில்லி,

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) 2015-ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான விருது மிதாலி ராஜுக்கு வழங்கப்படுகிறது.
ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் அதிக ரன் குவித்ததற்காக வழங்கப்படும் மாதவராவ் சிந்தியா விருதுக்கு கர்நாடக வீரர் ராபின் உத்தப்பா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 11 ஆட்டங்களில் விளையாடிய அவர் 912 ரன்கள் குவித்துள்ளார்.

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியவருக்கான விருது கர்நாடகத்தைச் சேர்ந்த வினய் குமார், மும்பையைச் சேர்ந்த ஷ்ரதுல் தாக்குர் ஆகியோருக்கு வழங்கப்படுகின்றன. அவர்கள் இருவரும் தலா 48 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.

பிசிசிஐயின் ஆண்டு விருது வழங்கும் விழா வரும் 5-ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. அதில் கோலி, மிதாலி உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. 27 வயதான விராட் கோலி, தோனியின் ஓய்வைத் தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவருடைய தலைமையில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, 22 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது. இதுதவிர சமீபத்தில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. 2015-ல் 15 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கோலி 640 ரன்கள் சேர்த்துள்ளார். 20 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 623 ரன்கள் எடுத்துள்ளார்.

மிதாலி ராஜ், ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 5 ஆயிரம் ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் இந்த சாதனையை செய்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். சர்வதேச அளவில் 5 ஆயிரம் ரன்கள் எடுத்த 2-வது வீராங்கனை மிதாலி.

வாழ்நாள் சாதனையாளர் விருது சையத் கிர்மானிக்கும், சிறந்த கிரிக்கெட் சங்கத்துக்கான விருது கர்நாடக கிரிக்கெட் சங்கத்துக்கும் வழங்கப்படவுள்ளன.

வெளிநாட்டு பயணங்களைக் குறைத்துக் கொள்ள பிரதமர் மோடி முடிவு

புது தில்லி

வரும் 2016ஆம் ஆண்டில் தனது வெளிநாட்டுப் பயணங்களை குறைத்துக் கொள்ளப் போகிறார் பிரதமர் மோடி. இனி, உள்நாட்டு பிரச்சனைகளில் கூடுதல் கவனம் செலுத்த பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனது இந்த முடிவு தொடர்பாக அவர் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் ஆலோசனையும் நடத்தியுள்ளாராம். இருப்பினும், தவிர்க்க முடியாத சில சர்வதேச மாநாடுகளில் மட்டும் மோடி கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

நரேந்திர மோடி, பிரதமர் பதவிக்கு வந்த 19 மாதங்களில் 33 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். உலக நாடுகளின் தலைவர்களில் 3ல் இரண்டு பங்கு நபர்களை அவர் சந்தித்துப் பேசியிருக்கிறார்.