Home Blog Page 5896

ஜனவரி மாதம் தமிழகம் வருகிறார் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி சட்டப்பேரவை தேர்தல்

 
 
தமிழகத்தில் 2016 ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி ஜனவரி 2வது வாரம் தமிழகம் வருகிறார்.
 
சென்னை வரும் அவர், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்த உள்ளார். வாக்காளர் பட்டியல், வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து தமிழக தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் நஜீம் கேட்டறிவார் எனத் தெரிகிறது.
 
தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியுடன், தேர்தல் ஆணையர்களான ஏ.கே.ஜோதி, ஓம்பிரகாஷ் ராவா ஆகியோரும் சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

அரசாங்கம் விதித்துள்ள தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் : சீமான்

 

 

தமிழகத்தில்  ஜல்லிக்கட்டு நடத்த அரசாங்கம்  விதித்துள்ள தடை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழர்களின் தொன்ம வீரவிளையாட்டுகளில் முதன்மையானது ஜல்லிக்கட்டு. மாட்டின் கொம்பின் மீது ஒரு துணியில் சல்லிக்காசுகளைக் கட்டித் தொங்கவிட்டு, மாட்டை அடக்குவோருக்கு அந்தக் காசுகள் சொந்தம் என விளையாடப்பட்டதால் இது ‘ஜல்லிக்கட்டு’ எனப்பட்டது.

நம் முன்னோர்களால் ஏறு தழுவுதல் என்று விளையாடப்பட்ட இவ்விளையாட்டு பெயர் மருவி இன்று ‘ஜல்லிக்கட்டு’ எனப்படுகிறது. உலகத்தில் எந்த இன மக்களும் மாடுகளுக்கு எனப் பண்டிகை வைத்துக் கொண்டாடியதில்லை. ஆனால், தமிழர்கள்தான் உழவுக்கு உதவி செய்ததற்காக நன்றிப்பெருக்கோடு மாட்டுக்குப் பொங்கல் வைத்துப் படையலிட்டு, மாட்டுப்பொங்கல் கொண்டாடுகிறார்கள். அந்த மாட்டோடு கட்டித்தழுவி விளையாடும் வீரம்செறிந்த விளையாட்டுதான் இது. காரணத்தோடே எப்போதும் பெயரிடும் பழக்கமுடையத் தமிழர்கள் அதனாலேயே இதற்கு ‘ஏறு தழுவுதல்’ என்று பெயரிட்டார்கள்.

இது எதுவோ காலப்போக்கில் காட்டுமிராண்டித்தனமாக தோன்றிய விளையாட்டு அல்ல! காதலையும், வீரத்தையும் பின்னிப்பிணைத்து தமிழர்களின் பண்பாட்டை உலகுக்குச் சொல்லும் ஆதியில் விளையாட்டாகும். பழங்காலத்தில் மாட்டை அடக்குவோருக்கே தங்கள் பெண்ணை நம் முன்னோர்கள் மணமுடித்துக் கொடுத்தார்கள். இப்படி, தமிழர்களின் வாழ்வியலைச் சொல்லும் ஏறு தழுவுதலானது, சங்கக்காலத்திலேயே இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் நம்மிடையே இருக்கின்றன. மிக மூத்த நாகரீகம் எனச் சொல்லப்படும் சிந்துசமவெளி நாகரீகத்தில்கூட ‘ஏறு தழுவுதல்’ தொடர்பான கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.அதனால், ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பண்பாட்டோடும், வாழ்வியலோடும் தொடர்புடைய தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாகும்.

அரசின் தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம்.- சீமான் திட்டவட்டம்எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி, ஆரத்தழுவி நேசித்து ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்ற பண்பாட்டைக் கொண்டு, பன்னெடுங்காலமாக அரிசி மாவில் கோலமிட்டு ஈ, எறும்புக்குக்கூட இரையிட்டவர்கள் தமிழர்கள் அப்படி, அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் பேரன்பையும், பெருங்குணத்தையும் உடைய உயிர்நேயர்களான தமிழர்களா ஒரு உயிரை வதைத்து அதில் இன்பம் காண்கிறார்கள்? அதனால், தமிழர்கள் மாட்டைத் துன்புறுத்துகிறார்கள் என்பதே முற்றிலும் தவறானக் கூற்று. ஜல்லிக்கட்டு என்பது ஆதிமனிதனான தமிழன் மாட்டை உழவுக்குப் பழக்கிய உறவைச்சொல்லும் விளையாட்டு.அதனால், ஜல்லிக்கட்டுக்குத் தடை என்பது தமிழர்களின் அடையாளத்தையும், தொன்மையையும் அழித்துச் சிதைப்பதற்கு நடக்கும் திட்டமிட்ட சதி. அதனை ஒருபோதும் நாம் அனுமதிக்க முடியாது. அதனால், இவ்வாண்டு ஜல்லிக்கட்டுக்கு அரசு தடைவிதித்தாலும் தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்தி தமிழனின் தொன்மையையும், பெருமையையும் உலகுக்கு நிலைநாட்டுவோம். என்று சீமான் விடுத்துள்ள அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

ரயில் தட்கல் முன்பதிவு கட்டணம் உயர்வு: மக்கள் அதிர்ச்சி

புது தில்லி:
ரயில்களின் தத்கல் வகையில் முன் பதிவு செய்வதற்கான கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.இதை அடுத்து, பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரயில்களில் தட்கல் பயணச் சீட்டுக் கட்டணத்தை ரயில்வே உயர்த்தி அறிவித்துள்ளது. இந்தக் கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்துள்ளது.
படுக்கை வசதி கொண்ட பயணச் சீட்டுக்கான தட்கல் கட்டணம் 175 ரூபாயில் இருந்து 200 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான குறைந்தபட்சக் கட்டணம் 90 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஏசி மூன்றாம் வகுப்புக்கான குறைந்தபட்ச தட்கல் கட்டணம் 250 ரூபாயில் இருந்து 300 ஆகவும், அதிகபட்ச கட்டணம் 350 ரூபாயில் இருந்து 400 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

எனினும், இரண்டாம் வகுப்பு அமரும் வசதிக்கான தட்கல் கட்டணம் குறைந்தபட்சம் 10 ரூபாயாகவும், அதிகபட்சம் 15 ரூபாயாகவும் நீடிக்கும் என்றும் ரயில்வே அறிவித்துள்ளது. குளிர்ச்சாதன முதல்வகுப்புக்கு அதிகபட்ச தட்கல் கட்டணம் 500 ரூபாயாகியுள்ளது. ரயில்வேயின் வருவாயை அதிகரிக்க தட்கல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

அநாகரிகமே இந்திய அரசியலின் புதிய வடிவமா?: அருண் ஜேட்லி

புது தில்லி:

அநாகரிகமே இந்திய அரசியலின் புதிய வடிவமா என்று கேள்வி எழுப்பியுள்ள நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, அப்படி என்றால் அதன் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளார்.

நாடாளுமன்ற செயல்பாடுகள் குறித்து சமூக வலைதளத்தில் அருண் ஜேட்லி ஒரு சிறிய கட்டுரை எழுதி வெளியிட்டுள்ளார். அதில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் காங்கிரஸ் கட்சியினரின் செயல்பாடுகளைக் கடுமையாக கண்டித்துள்ளார். கடந்த இரண்டு கூட்டத் தொடரிலும் நாடாளுமன்றத்தை நடத்தவிடக் கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருந்தது என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “சில மாதங்களுக்கு முன்பாக பா.ஜ.க., தலைவர்கள் சிலர் தெரிவித்த கருத்துக்கள் கட்சியே பாராட்டக் கூடிய வகையில் இல்லை. அவ்வாறு தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பவர்களுக்கு கட்சியின் தலைவர் ஆலோசனை வழங்கினார். மேலும் கருத்துக்களை முறைப்படுத்தி வெளிப்படுத்த வேண்டும். தில்லி முதல்வர் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தப்பட்ட போது பிரதமர் குறித்து அரவிந்த் கேஜ்ரிவால் கூறியிருந்த கருத்தினை சுட்டிக் காட்டிய ஜேட்லி, முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கேலும், “இந்திய அரசில் உள்ள ஒருவர் கேஜ்ரிவாலை போன்று கருத்து தெரிவித்தால், அது தேசிய அளவிலான சீர்கேட்டுக்கு அடையாளமாக மாறிவிடும்” என்றும் கூறியுள்ளார்.

மணிமுத்தாறு அணை திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணையிலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு நாளை (25-ம் தேதி) முதல் தண்ணீர் திறந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

“திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணையிலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணையிலிருந்து மணிமுத்தாறு பிரதானக் கால்வாயின் 1, 2, 3 மற்றும் 4 வது பிரிவு பாசன நிலங்களுக்கு பிசான பருவ சாகுபடிக்கு 25.12.2015 முதல் தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ராதாபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் மற்றும் சாத்தான்குளம் ஆகிய வட்டங்களிலுள்ள 22,852 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்”

 

 

ஒட்டன்சத்திரம் அருகே இரு கார்கள் மோதி விபத்து: 5 பேர் பலி

திண்டுக்கல்:

ஒட்டன்சத்திரம் அருகே இரண்டு கார்கள் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணி (40). இவரது மனைவி (35). இவர்களின் குழந்தைகள் அஞ்சலி (3), அஞ்சனா (2). இந்நால்வரும் கோவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.
திருப்பூரில் இருந்து சிவகாசி நோக்கி சுப்பிரமணியன் (60) அவரது மனைவி ருக்மிணி (57) அவரது மகன் மணிகண்டன் (32) மனைவி ராதா, இரண்டு குழந்தைகளுடன் காரில் வந்து கொண்டிருந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அம்ளிகை என்ற இடத்தில் இரு கார்களும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் சுப்பிரமணியம், ருக்மிணி, மணிகண்டன், ராதா, சிவசுப்பிரமணி ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 5 பேர் காயமடைந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து, சம்பவ இடத்துக்கு வந்த அம்ளிகை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திமுக கூட்டணிக்கு வருக: விஜயகாந்துக்கு கருணாநிதி அழைப்பு

சென்னை:

திமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற வேண்டும் என்று கருணாநிதி, அக்கட்சித் தலைவர் விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

கேள்வி: விஜயகாந்த்தை மக்கள் நலக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்தித்துள்ளனரே?

பதில்: அந்தச் சந்திப்பு தொடர்பாக விஜயகாந்த் எந்தக் கருத்தையும் கூறியதாகத் தெரியவில்லை. அந்த நிலையில் நானும், அது பற்றி எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை.

கே: இன்றைய ஆலோசனை கூட்டத்தில், திமுக கூட்டணியில் தேமுதிகவைச் சேர்ப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டதா?

ப: திமுக சார்பில் கூட்டணியை உருவாக்கும்போது, விஜயகாந்தும் அந்தக் கூட்டணியில் இருக்க வேண்டுமென்ற விருப்பம் எங்களுக்கு உண்டு. அது தொடர்பாக அவர் (விஜயகாந்த்) என்ன நினைக்கிறாரோ தெரியவில்லை.

கே: இதை நீங்கள் விஜயகாந்துக்கு விடுக்கும் அழைப்பாக எடுத்துக் கொள்ளலாமா?

ப: நான் சொல்வதே அழைப்புதான்.

இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி பேட்டி அளித்தார்.

தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கிறிஸ்துமஸ் வாழ்த்து

சென்னை:
கிறிஸ்துமஸ் கொண்டாடும் கிறிஸ்துவ மக்களுக்கு, தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துக் கொண்டுள்ளார்.
அவரது வாழ்த்துச் செய்தி:
“தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கான மாநிலங்கள் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு என்னுடைய இதயபூர்வமான, மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இயேசு பிறந்த இத்திருநாளில், உலக சகோதரத்துவத்தை மேம்படுத்தவும், சேவை நோக்கத்தை வெளிப்படுத்தவும், உண்மையான வாழ்வியல் தத்துவத்தை முன்னிறுத்த நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.”

 

கிறிஸ்துவர்களுக்கு கருணாநிதி கிறிஸ்துமஸ் வாழ்த்து

கிறிஸ்துமஸ் கொண்டாடும் கிறிஸ்துவ மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
அவரது வாழ்த்துச் செய்தி:
கிறிஸ்தவ சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்.

ஏழை எளியவர்பால் இரக்கம் கொண்டு அன்பையும், கருணையையும் பொழிந்த திருமகன் இயேசு பெருமான் பிறந்த பொன்னாளாகிய டிசம்பர் 25ஆம் நாளை கிருஸ்துமஸ் திருநாளாகக் கொண்டாடி மகிழும் கிருஸ்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் தான் ஆட்சியில் இருந்த காலத்தில் மட்டுமல்லாமல், ஆட்சியில் இல்லாத காலத்திலும் தமிழகத்தில் வாழும் கிருஸ்துவ சமுதாய மக்களின் நலன் காப்பதில் மிகுந்த முன்னுரிமை தந்து வந்துள்ளது.

பேரறிஞர் அண்ணா அவர்களைத் தொடர்ந்து 1969இல் நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர், மதம் மாறிய ஆதிதிராவிட கிருஸ்துவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுச் சலுகையை 1974ஆம் ஆண்டில் வழங்கி நடைமுறைப்படுத்தினேன். 1975ஆம் ஆண்டில் மதம் மாறிய ஆதிதிராவிடர் கிருஸ்துவர்களின் அனைத்துத் தலைமுறைகளுக்கும் அச்சலுகையை நீட்டித்து வழங்கி ஆணை பிறப்பித்தேன்.

2001-2006 அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட “தமிழ்நாடு கட்டாய மதமாற்ற தடைச் சட்டம்”இந்திய அரசியல் சாசனத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையைப் பெரிதும் பாதித்தது. அச்சட்டத்தினை ரத்து செய்ய வேண்டுமென திராவிட முன்னேற்றக் கழகமும், கிருஸ்துவ, இஸ்லாமியத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் போராட்டங்கள் நடத்தியும், எவ்விதப் பயனும் ஏற்படவில்லை. ஆனால், 2006ல் முதலமைச்சராக நான் மீண்டும் பதவி ஏற்ற 18ம் நாளிலேயே, அதாவது 31.5.2006 அன்று சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றி, மதமாற்றத் தடைச் சட்டத்தை ரத்து செய்தேன்.

இப்படிப் போராடியும் கிடைக்காத பல உரிமைகளைத் திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்தவுடன் கிறித்தவர்களுக்கும், சமுதாயத்தில் பல்வேறு பிரிவினருக்கும் வழங்கியது – தொடர்ந்து துணை நிற்பது திராவிட முன்னேற்றக் கழகமே என்பதை நினைவுபடுத்தி, இப்பெரு நாளில் கிறித்தவ சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்.

எம்.ஜி.ஆரின் 28 வது ஆண்டு நினைவு நாள்: நினைவிடத்தில் ஜெயலலிதா அஞ்சலி

சென்னை :

அ.தி.மு.க. நிறுவனத் தலைவர், எம்.ஜி.ஆரின் 28-வது ஆண்டு நினைவு நாளை யொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில்,.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, ,மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் தொடர்ந்து நல்லாட்சி அமைந்திட, தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெற முழு அர்ப்பணிப்போடு களப்பணியாற்றுவோம் என்பது உள்ளிட்ட 14 உறுதிமொழிகளை, அதிமுக நிர்வாகிகளும், பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் எடுத்துக் கொண்டனர்.

அதிமுக நிறுவனத்தலைவர் எம்.ஜி.ஆர்., அமரர் ஆகிய நாள், 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ம் தேதியாகும். அவரது, 28-வது ஆண்டு நினைவு நாளான நேற்று , சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில், அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான. ஜெயலலிதா நேற்று காலை 10 மணி அளவில் மலர்வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்தில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில், அதிமுக பொருளாளரும்,நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் உறுதிமொழியை வாசிக்க, அங்கு கூடியிருந்த அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகளும், பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். விரைவில் நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெற்று, எம்.ஜி.ஆர். நல்லாசியோடு, முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நல்லாட்சி அமைந்திட முழு அர்ப்பணிப்போடு களப்பணியாற்றுவோம் என்பது உள்ளிட்ட 14 உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன.

உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கழக அவைத் தலைவர் இ. மதுசூதனன் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அமரர் எம்.ஜி.ஆருக்கு மரியாதை செலுத்தும் வகையில், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் 2 மணித்துளிகள் மவுன அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன்,வைத்திலிங்கம், பழனியப்பன்,எடப்பாடி பழனிச்சாமி, வளர்மதி,கோகுலஇந்திரா, எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி, கே.டி.ராஜேந்திரபாலாஜி. ஆர்.பி. உதயகுமார், செல்லூர் கே.ராஜூ உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களும், எஸ்.ஆர்.விஜயகுமார், டி.ஜி.வெங்கடேஷ்பாபு, ஜெ.ஜெயவர்தன்,உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைப்புசெயலாளர் சி.பொன்னையன், அனைத்துலக எம்.,ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் அலெக்சாண்டர்.மகளிர்அணி செயலாளர் சசிகலாபுஷ்பா எம்.பி. , , அண்ணா தொழிற்சங்க செயலாளர் சின்னசாமி எம்.எல்.ஏ , வழக்கறிஞர் பிரிவு,செயலாளர் நவநீதக்கிருஷ்ணன், எம்.பி. , விவசாயப் பிரிவுச்செயலாளர் துரை. கோவிந்தராஜன், , மீனவர் பிரிவுத்தலைவர் கலைராஜ், மருத்துவ அணிசெயலாளர் வேணுகோபால் எம்.பி., அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி,செயலாளர் கமலக்கண்ணன் இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் பி.குமார். எம்.பி மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் சாமிநாதன் உள்ளிட்ட அதிமுக பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

மேலும் தமிழக சட்டமன்ற பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், மேயர் சைதை துரைசாமி, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், செந்தில் பாலாஜி, அரசு கொறடா மனோகரன், அரசு கேபிள் டி.வி. வாரிய தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஜி.செந்தமிழன் எம்.எல்.எ., கே.எஸ்.சீனிவாசன், பி.வெற்றிவேல், சத்யா, சட்டமன்ற உறுப்பினர்கள் வி.பி.கலைராஜன், கே.பி.கந்தன், கே.குப்பன், கடம்பூர் ராஜு, கோபாலசாமி, சமூகநல வாரிய தலைவர் சி.ஆர்.சரஸ்வதி, முன்னாள் மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா, நடிகர் ஜெயகோவிந்தன், வடசென்னை தெற்கு மாவட்ட துணை செயலாளர் ஆர்.எம்.டி.ரவீந்திர ஜெயன், மாவட்ட கழக பொருளாளர் வி.கிரிநாத், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் எம்.இஸ்மாயில்கனி, பெரும்பாக்கம் ராஜசேகர், பகுதி செயலாளர்கள் எம்.கே.அசோக் எம்.எல்.ஏ., நுங்கை மாறன், வி.கே.பாபு, ஜெயச்சந்திரன், ஏழுமலை, அபிராமி பாலாஜி, கொளத்தூர் கணேஷ், மாநகராட்சி சுகாதார நிலைக்குழு தலைவர் ஆ.பழனி, மாமன்ற உறுப்பினர்கள் பி.சின்னையன் ,டி.சிவராஜ், புஷ்பாநகர் ஆறுமுகம், , பி.சந்தானகிருஷ்ணன், வீடியோ சரவணன், மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் சரஸ்வதி ரங்கசாமி, வேளாங்கண்ணி என்ற கஸ்தூரி, அஞ்சுலட்சுமி, வத்சலா, மாவட்ட தொழிற்சங்க பொருளாளர் இ.எஸ்.சதீஷ்பாபு, இணை செயலாளர் சத்திய நாராயணன், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ஏ.ஏ.அர்ஜுனன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் பி.குணராஜ், மாவட்ட பேரவை செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், பி.இளையமாறன், என்.சேதுராஜன்,பேராசிரியர் பிரபாகரன், ஆனைக்குட்டி ஆனந்தன், பிரிதிவிராஜன், திருச்சி மாநகராட்சி துணை மேயரும், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான ஜெ.சீனிவாசன், டி.யூ.சி.எஸ். பி.சீனிவாசன், சைதை ஜி.சாரதி, லயன் வீராசாமி, ராமமுருகன், மயிலை ராஜேஷ்கண்ணா, தி.நகர் ஆறுமுகம் உட்பட ஏராளமானபேர் கலந்து கொண்டனர். மாநகர போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.எஸ்.அஸ்லாம் தலைமையில் ஏராளமான போக்குவரத்து ஊழியர்கள் சீருடையுடன் கொடி ஏந்தி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி முடிந்து அங்குள்ள கூட்டம் வெளியே செல்ல பல மணிநேரம் பிடித்தது. அந்த அளவுக்கு அங்கு கடல் அலையென மக்களும், தொண்டர்களும் திரண்டிருந்தனர்.