Home Blog Page 5897

சவுதி மருத்துவமனையில் பயங்கர தீ: 25 நோயாளிகள் பலி, நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம்

ரியாத்:

சவுதி அரேபியாவின் ஜிஸான் நகரில் இயங்கி வரும் மருத்துவமனையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 25 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் பலர் குழந்தைகள்.

சவூதி அரேபியா தலைநகரும் முக்கிய வணிக நகருமான ரியாத்தில், ஜிஸான் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையின் முதல்தளத்தில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தளத்தில்தான் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் மகப்பேறு சிகிச்சைப் பிரிவுகள் இயங்கி வந்தன.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் 25 பேர் தீயில் சிக்கி பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைகள் உள்ளிட்ட பலர் இறந்துள்ளதாக சவூதி அரேபிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் எதுவும் தெரியவில்லை.

 

எம்.பி.க்களின் சம்பளம் இரு மடங்கு உயர்த்தப்படும்: மத்திய அரசு முடிவு

புது தில்லி:

நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப் படும் சம்பளம் இரு மடங்காக உயர்த்தப் படவுள்ளது. அவர்கள் தற்போது மாத சம்பளமாக ரூ.50 ஆயிரமும் தொகுதி படியாக ரூ.45 ஆயிரமும் பெறுகின்றனர். மேலும், உதவியாளர் மற்றும் அலுவலக படியாக கூடுதலாக ரூ.45 ஆயிரம் பெறுகின்றனர். இது மத்திய அமைச்சரவைச் செயலாளருக்கு வழங்கப்படும் சம்பளம்.

இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரைகள், வருகிற 1-ந்தேதி (ஜனவரி) முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதில் மத்திய அமைச்சரவைச் செயலாளருக்கான சம்பளம் ரூ.2.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இதற்கு இணையான சம்பளத்தை எம்.பிக்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் படி எம்.பிக்கள் தற்போது பெறும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் சம்பளத் தொகை ரூ.2 லட்சத்து 80 ஆயிரமாக அதாவது 2 மடங்காக உயருகிறது.

இது தொடர்பான பரிந்துரையை நாடாளுமன்ற கூட்டுக் குழு மத்திய நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது. இதனை நிதி அமைச்சகமும் ஏற்றுக் கொள்ளும் என்று தெரிகிறது. இதேபோல எம்.பி.க்களுக்கான ஓய்வூதியமும் 2 மடங்காக உயர்த்தப்பட உள்ளது.

முதல்வர் ஜெயலலிதா கிறிஸ்துமஸ் வாழ்த்து

சென்னை : 

முதலமைச்சர் ஜெயலலிதா, கிறீஸ்துமஸ் கொண்டாடும் கிறிஸ்துவப் பெருமக்களுக்கு தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இயேசுபிரான் பிறந்த இத்திருநாளில், அவர் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி:

கருணையின் வடிவமான இயேசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடி மகிழும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும், தமது இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“உன் மீது நீ அன்பு செலுத்துவது போல அடுத்தவர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும்” என்று எடுத்துரைத்த இயேசுபிரான் பிறந்த தினத்தை, கிறிஸ்தவ பெருமக்கள் தங்கள் இல்லங்களில் கிறிஸ்துமஸ் மரம் அமைத்து, அதனை வண்ண மின் விளக்குகளால் அலங்கரித்து, வாசலில் நட்சத்திரங்களைக் கட்டி, வீட்டினை அழகுபடுத்தி, புத்தாடை உடுத்தி, தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு, இறைவனை வழிபட்டு, விருந்தினர்களுடன் இனிய உணவு உண்டு, மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள் – கிறிஸ்தவ மக்களின் நலனில் அக்கறை கொண்ட உங்கள் அன்பு சகோதரியின் அரசு, இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவப் பெருமக்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு நிதியுதவி அளிக்கும் சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது – இதன் மூலம், ஆயிரத்து 968 கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளனர் என தனது செய்தியில் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அனைவரிடத்தும் அன்பு காட்டி, கருணையின் வடிவமாய் விளங்கிய இயேசுபிரான் பிறந்த இத்திருநாளில், அவர் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை தமது உளம் கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

ஜல்லிக்கட்டு தடை நீடிக்க அதிமுக, திமுக கட்சிகளே காரணம் : விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது முக நூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது

அதிகஅளவு எம்.பிக்களை வைத்திருக்கின்ற அதிமுகவால், ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்காக “பிராணிகளுக்கு இழைக்கப்படும் தீங்கினைத்தடுத்தல் சட்டத்தில்” திருத்தம்கொண்டுவந்து, அதை ஏன்
நிறைவேற்ற முடியவில்லை?

தமிழர்களின் பாரம்பரியமிக்க வீர விளையாட்டாம் ஜல்லிக்கட்டு, அதற்கு தடை, தடையென சுமார் பத்தாண்டுகளாக நீடிக்கிறது. அதற்கு அதிமுக, திமுக என இரண்டு ஆட்சிகளுமே காரணமாகும். ஆனால் தற்போதுதான் தடை விதித்தது போல நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தயாராகிவிட்டார் என்பதையே அவரது செயல்பாடுகள் காட்டுகிறது. பாரத பிரதமர் ரஷ்யா நாட்டிற்கு அரசு முறை பயணமாக செல்லும்போதும், பாராளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடைகின்ற நாளில் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டுமென, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பது “மக்கள் காதில் பூச்சுற்றவே” எனத்தெரிகிறது. பிரதமர் வெளிநாடு செல்வதும் மற்றும் பாராளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடைவதும் குறித்து, பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் செய்திககளை வெளியிட்டுள்ள நிலையில், மக்களை ஏமாற்றவே தற்போது பாரத பிரதமருக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நிர்பயா வழக்கிற்காக, “சிறுவர்கள் குற்ற நீதி சட்டத்தில்” திருத்தம் கொண்டுவரப்பட்டு, அந்த திருத்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதிக அளவு எம்.பிக்களை வைத்திருக்கின்ற அதிமுகவால், ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்காக “பிராணிகளுக்கு இழைக்கப்படும் தீங்கினைத் தடுத்தல் சட்டத்தில்” திருத்தம் கொண்டுவந்து, அதை ஏன் நிறைவேற்ற முடியவில்லை? “தும்பைவிட்டு வாலை பிடிப்பதுதான்” ஜெயலலிதாவிற்கு வழக்கமோ? பிரதமர் இந்தியாவில் இருக்கும்போது கடிதம் எழுதவில்லை, பாராளுமன்றம் நடைபெறும்போது அவசர சட்டதிருத்தம் கொண்டுவர முயற்சி எடுக்கவில்லை. ஆனால் எல்லாம் முடிந்தபின், தமிழக மக்களின் கடுமையான எதிர்ப்பிற்கு பிறகு ஏன் இந்த நாடகம்? ஜல்லிக்கட்டிற்காக தமிழ்நாடு சட்டமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி, அனைத்து கட்சிகளின் ஏகோபித்த ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றி இருக்கலாம், தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி அழுத்தம் கொடுத்திருக்கலாம்.

ஆனால் இதையெல்லாம் செய்யாத தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, 2014ல் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டபோது, 2015ல் ஜல்லிக்கட்டு நடத்தப்படுமென்று இறுமாப்புடன் பேசினார். ஆனால் 2016ல்கூட ஜல்லிக்கட்டை நடத்துவதற்கோ, அதன்மீதான தடையை நீக்குவதற்கோ இதுவரை எந்த ஒரு துரும்பையும் எடுத்துப்போட்டதாக தெரியவில்லை. ஜல்லிக்கட்டுக்கு தடை என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, அதற்கு மாறாக எதுவும் செய்ய இயலாது என தற்போது வியாக்கியானம் பேசுகிறார். இப்படி முன்னுக்குப்பின் முரணாக பேசி தமிழக மக்களை ஏமாற்றும் முதலமைச்சர் ஜெயலலிதா, நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை எல்லாம் உச்சந்தலையில் வைத்து கொண்டாடுபவரா? தனக்கு சாதகமான தீர்ப்பை தலையிலே வைப்பதும், பாதகமான தீர்ப்பை தரையிலே போடுவதும்தானே அவரது வழக்கம். தமிழக முதலமைச்சர் ஜெயலிதாவிற்கு திராணி இருந்தால், ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று தந்திருக்கவேண்டும். இல்லையென்றால் மத்திய அரசிடம் தனது அதிமுக எம்.பிக்கள் மூலம் வலியுறுத்தி, ஜல்லிக்கட்டுக் காளையை, “பிராணிகளுக்கு இழைக்கப்படும் தீங்கினைத் தடுத்தல் சட்டப்பிரிவு 22ன்” பட்டியலில் இருந்தாவது விடுவித்திருக்கவேண்டும். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படாமல், முடங்கிப்போய் இருப்பதால்தான், எதையுமே செயல்படுத்தமுடியாத அரசாக அதிமுக அரசு இருக்கிறது.

55 மாதம் ஆட்சியில் இருந்தும், ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு எதையும் செய்யாமல், ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பை பார்த்து பயந்துபோய், சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு, ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றவேண்டும் என்பதற்காக, “தூங்கிக் கொண்டிருந்தவர் விழித்தெழுந்தது போல்” இவர் காலம் கடந்து செய்யும் செயலை, மக்கள் நாடகமாகத்தான் பார்கிறார்கள். இந்த நாடகத்தைக்கண்டு மக்கள் இனியும் ஏமாறமாட்டார்கள். எனவே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜல்லிக்கட்டு விளையாட்டுப்போட்டியை நடத்துவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்கவேண்டும். வருகின்ற தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டியை நடத்திடவேண்டும் என்பதில் தேமுதிக உறுதியோடு இருக்கிறதென்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் முக நூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

சிம்புவுக்கு ஆதரவாக வீரலட்சுமி அதிரடி அறிக்கை!

சமீபத்தில் வெளியான பீப் பாடலான ஒட்டுமொத்த தமிழ் மக்களும் சிம்புவிற்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழர் முன்னேற்றப் படை நிறுவனத்தலைவர் கி.வீரலட்சுமி, சிம்புவிற்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நடிகர் விஷால் தாழ்த்தப்பட்ட மக்களை கொச்சை படுத்தி பேசிய போது பாயாத வன்கொடுமை தடுப்புச்சட்டம் , தமிழ் சினிமா துறையில் தனக்கென்று ஒரு நற்பெயரை தமிழர் அடையாளத்தோடு வைத்திருக்கும் அண்ணன் டி.ஆர்.ராஜேந்திரன் மகனுக்கு மட்டும் ஏன் வன்கொடுமை தடுப்புச்சட்டம் வெறித்த னமாக பாய்கிறது. அவர் தமிழன் என்பதாலா?

ஒரு வேளை தமிழக காவல் துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தால் அவர் ஜாமீனில் வெளியே வரும் பொழுது தமிழர் முன்னேற்றபடை சார்பாக எமது தலைமையில் அவருக்கு சிறை வாசலிலேயே வரவேற்பு கொடுப்பேன்.

இன்று பெண்ணியத்திற்காக குரல் கொடுக்கும் மாதர் குல மாணிக்கங்களே பெண்கள் என்ற வரையரை இந்தியாவில் இருக்கும் பெண்களை மட்டும் தான் குறிக்குமா? ஈழத்தில் இல்லையா?

ஒரு வினாடியாவது கற்பை இழந்த பல்லாயிரம் பெண்களின் கதையை கேளுங்கள். கற்பை காக்க உயிர் தியாகம் செய்த பல்லாயிரம் பெண்களின் கதைகளை படியுங்கள். பெண்களின் கண்ணியத்தை பாடல் வரிகள் மட்டும் பாதுகாக்க முடியாது.’’ என்று தெரிவித்துள்ளார்.

அனிருத்துதான் என் மானசீக ஹீரோ! – நடிகை மனீஷா கௌர் பரவசம்!

தமிழ் சினிமாவில் முதன்முதலாக ‘கிளினிக்கல் ட்ரையல்’ என்ற புதிய விஷயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “சாய்ந்தாடு” என்ற மருத்துவம் சார்ந்த திரைப்படம் ரிலீசுக்குத் தயாராக இருக்கிறது. ‘சாய்ந்தாடு’ படத்தில், பணத்துக்கு ஆசைப்படும் டாக்டர்கள் எவ்வாறு மக்களை அவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி மோசமாகச் சுரண்டுகிறார்கள், பாவப்பட்ட மக்களின் உயிரோடு விளையாடுகிரார்கள் என்ற அதிர்ச்சியூட்டும் செய்தி சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த ‘சாய்ந்தாடு’ படத்தில், இந்திய – மலேசிய கூட்டுத் தயாரிப்பான மனீஷா கௌர் என்ற அழகி நடித்து, அராபிய வகைப் பாடலுக்கு கிளாமர் நடனம் ஆடியிருக்கிறார். அவரின் நடனத்தையும், உடல் வனப்பையும் கண்டு இப்பவே தமிழ்சினிமா இயக்குனர்கள் பலர் அவரை தொடர்பு கொண்டு வருகிறார்கள். தமிழ்சினிமாவை பற்றியும், ரசிகர்கள் பற்றியும் நன்கு அறிந்து வைத்திருக்கும் இந்த பஞ்சாபி பெண்ணிடம் பேசிய போது-

உங்களைப் பற்றி…?

நான் பஞ்சாபி மலேயா பெண். நடனம் எனது பேஷன்.

‘சாய்ந்தாடு’ படத்தில் நடித்த அனுபவம் எப்படியிருந்தது…?

‘சாய்ந்தாடு’ படத்தில் ஒரு அராபிக் டைப் கிளப் பாடலுக்கு மலேசியாவில் டான்ஸ் ஆடவும், மலேசியா போர்ஷனில் நடிக்கவும் டைரக்டர் கஸாலி ஆள் தேடுவதாகக் கேள்விப்பட்டு அவரைத் தொடர்பு கொண்டேன். ஆடிஷனில் என் நடனத் திறமை அவருக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டது. அதுபோக, ‘அரபுக்குதிரை நீதானோ..’ என்ற பெப் பாடல் மிக அற்புதமாக இருந்தது. சினிமாவுக்காகக் காத்திருந்த எனக்கு ‘சாய்ந்தாடு’ படமும், ‘அரபுக்குதிரை..’ பாடலும் மிக அருமையான சந்தர்ப்பம் என்றே கருதுகிறேன். மேலும், ‘அரபுக்குதிரை’ பாட்டுக்கு நான் போட்டிருக்கிற குத்தாட்டத்துக்கு கூடிய சீக்கிரம் தமிழ்நாடே என்னோட சேர்ந்து ஆடினாலும் ஆச்சர்யமில்ல..

இதுவரை எத்தனை படங்கள் நடித்திருக்கிறீர்கள்?

தமிழில் இதுதான் எனக்கு முதல் படம். ‘சாய்ந்தாடு’ படம் முழுவதுமாக முடிந்து விட்டது. கூடிய விரைவில் ரிலீஸ் ஆகப்போகிறது. இந்தப் படம் வெளிவந்தபின் தமிழில் குத்தாட்டத்துக்கு எனக்கென்று தனியிடம் இருக்கும். இப்பவே என்னுடைய புகைப்படங்கள் எப்படி லீக் ஆனதோ தெரியவில்லை. குத்தாட்டம் போட கூப்பிட ஆரம்பித்திருக்கிறார்கள். முதலில் சாய்ந்தாடு வரட்டும். ஏனென்றால் அதில் நான் வெறும் குத்தாட்டம் மட்டும் போடவில்லை. படத்தின் முக்கியமான சில காட்சிகளிலும் நடித்திருக்கிறேன்.

இனிவரும் படங்களிலும் குத்தாட்டம் போடுவதுதான் எண்ணமா?

என் உடல்வாகுக்கு ஏற்பதான் எனக்கு ரோல் கொடுப்பார்கள். அதனால் நான் நம்புவது குத்தாட்டத்தைதான்.

தமிழ் படங்கள் பார்ப்பீர்களா? தமிழில் எந்த ஹீரோவுடன் நடிக்க விருப்பம்?

தனிப்பட்டு ஒருவரை மட்டும் சொல்ல முடியாது. அஜீத், விஜய், சூர்யா, இப்போ… அதர்வா! அதற்கப்புறம் அனிருத்தை ரொம்ப பிடிக்கும். அவர் இசை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரது தோற்றம், உடல்வாகு, சில ஆல்பங்களில் அவரது பிரசன்டேஷன்… ரியலி ஹீ இஸ் வெரி நைஸ் & ஹீ இஸ் மை சாய்ஸ்.

உங்க முதல் படமான ‘சாய்ந்தாடு’ பற்றி?

மெடிக்கல் கிரைம் கதை. சில காட்சிகளைக் கண்டேன். சூப்பர். கிராஃபிக்ஸ் நிறைய இருக்கு. ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் ட்ரீட்தான்.

‘சாய்ந்தாடு’ படத்தில் ஆதர்ஸ் & அனு கிருஷ்ணா நாயகன் நாயகியாக நடித்திருக்கிறார்கள். முக்கிய வேடத்தில் சுப்பு பஞ்சு, மனீஷாவோடு ரிமாலா பல்லன் என்ற மலேசிய பெண்மணி, கிரேன் மனோகர், காதல் சுகுமார், பாவா லக்‌ஷ்மணன், அல்வா வாசு, நெல்லைசிவா, கிங்காங் மற்றும் ஆங்கிலேயர்கள் & ஆப்பிரிக்கர்கள் பலர் நடித்திருக்கிறார்கள்.

தமிழக வெள்ள நிவாரணமாக ரூ10 லட்சம்கொடுத்த ரஜினிக்கு 10 ரூபாய் அனுப்பிய நெல்லை பிரமுகர்!

 
தமிழக வெள்ள நிவாரண ரூ10 லட்சம் கொடுத்த ரஜினிக்கு வெறும் 10ரூபாய் அனுப்பிய சம்பவம் நடைபெற்றுள்ளது .
 
திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி திருமலையப்பபுரத்தை சேர்ந்த வாஞ்சி இயக்க நிறுவனத் தலைவர் ராமநாதன். ரஜினிகாந்திற்கு காட்டமாக ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் ரஜினி பல படங்களில் மிகவும் நல்லவராக நடித்த நிலையில் வெள்ளம் சென்னையில் வந்தபோது எங்கெங்கு இருந்தெல்லாமோ தமிழக மக்களின் நிவாரண நிதிக்காக இந்தி, தெலுங்கு என சம்பந்தமே இல்லாத குறைந்த ஊதியம் பெறும் நடிகை நடிகைகள் கூட கோடி கணக்கில் வாரிக் கொடுத்திருக்கிறார்கள்.
 
ஆனால் கர்நாடகாவில் இருந்து பிழைப்பிற்காக தமிழகத்திற்கு வந்து தமிழக மக்களால் இந்திய கோடீஸ்வரர்களின் ஒருவரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாகிய நீங்கள் வெறும் 10 லட்சம் ரூபாய் கொடுத்தது ஏன் என ரசிகர்களே கேட்கும் நிலைமை உருவானதால் உண்மையிலேயே எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை என்றும், ஒருவேளை நீங்கள் கஷ்டப்படுகிறீர்களோ அதனால் தான் வெறும் 10லட்சம் கொடுத்துள்ளீர்கள். உங்களுக்கு கஷ்டம் இருப்பதால் உங்களுககு உதவும் எண்ணத்தில் 10ரூபாய் மணியார்டர் அனுப்பி வைக்கிறேன்.
 
இதுபோன்று இரக்கம் கொண்ட அனைத்து தமிழர்களும் ரஜினிக்கு 10 ரூபாய் அனுப்பி உதவுங்கள் என கோரிக்கையை விடுத்து ரஜினிக்கு ஒரு கடிதமும் எழுதி 10 ரூபாய் மணியார்டரும் அனுப்பிவைத்தார்.
 
ரஜினிக்கு பதிவுத்தபாலுடன் அனுப்பிய கடிதம் கிடைத்ததற்கான அக்னாலஜிமெண்ட் கார்டு வந்துவிட்டது. ஆனால் மணியார்டர் திரும்ப வந்து விட்டது. மணியார்டர் திரும்ப வந்ததற்கான காரணம் அப்படி ஒரு அட்ரஸ் இல்லையென ‘நாட் நோன்’ என்று குறிப்பிட்டு வந்திருந்தது. லட்டர் மட்டும் சென்ற ரஜினி முகவரிக்கு மணியார்டர் எப்படிச் செல்லாமல் திரும்ப வந்தது.
 
10கொடுத்த ரஜினிக்கு 10 ரூபாய்யை கொடுக்க நினைத்த ராமநாதனின் மணியார்டர் திரும்ப வந்ததால் ராமநாதன், ரஜினி மணியார்டரை வாங்க மறுத்துவிட்டேன் என அனுப்பியிருக்கலாம் இல்லை திருப்பி அனுப்புகிறோம் என அனுப்பியிருக்கலாம். ஆனால் தபால் துறையோ ‘நாட் நோன்’ என அனுப்பியதால் சென்னையில் ரஜினிக்கு அட்ரஸ் இல்லை என்ற அர்த்தத்துடன் தபால்துறை அனுப்பியுள்ளதாக தபால்துறை மீது புகார் செய்ய முடிவு செய்துள்ளார் என வாட்ஸ்ஆப்பில் வைரலாக தகவல் பரவிவருகிறது .

தென்காசி ஆக்ஸ்போர்டு பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிpக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவிற்கு பள்ளி முதல்வர்  திருமலை தலைமை வகித்தார் நிர்வாகி அன்பரசி திருமலை, இயக்குநர் மிராக்ளின் பால்சுகி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்  மாணவி அனிதா வரவேற்றார்
அலங்கார மின் விளக்குகளால் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டிருந்தது. மாணவ, மாணவிகள் பங்கேற்ற இயேசு பிறப்பு நாடகம், நடனம் நடந்தது. கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த மாணவர்கள் இதர மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சிகளை லீனா பென்சிங் தொகுத்து வழங்கினார்
இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் ஆசிரியை திவ்யா வரவேற்றார் ஆசிரியைகள் பங்கேற்ற இயேசு வாழ்க்கை வரலாறு வில்லிசை கச்சேரி, நடன நிகழ்ச்சி மற்றும் மேஜிக் நிகழ்ச்சி நடந்தது. கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்பட்டது. முதல்வர் திருமலை நன்றி கூறினார்

கீழப்பாவூரில் எம்.ஜி.ஆர் நினைவு தினம் மலர் தூவி மரியாதை

கீழப்பாவூர் பேரூர் கழகம் சார்பில்  முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 28வது நினைவு நாளை முன்னிட்டு மேல்வைப் பிரதிநதி ஜெ. ஜெயராமன்  .,தலைமையில் அ.தி.மு.க.,வினர் எம்.ஜி.ஆர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் நிகழ்வில் ,,சு.கணேசன் ,தலைமைக் கழக பேச்சளார் தீப்பொறி அப்பாதுரை ,பி.எஸ்.என்.எல் ஆலோசனைக் குழு உறுப்பினர் மதியழகன் ,மேலவைப் பிரதிநிதி வி.கே.கணபதி,பேரூர்  அம்மா பேரவை செயலாளர் சாமிநாதன்,ஜெ.எல்.பி.பாண்டியன்,வார்டு செயலாளர் எஸ்.வி.கப்பல்,பூ.வையாபுரி  ,கருப்பசாமி ,இசக்கியம்மாள்,விஜயா ,கஸ்தூரி ,தாமரைக்கனி உட்பட  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை ஜெயராமன் செய்திருந்தார்

கீழப்பாவூரில் எம்.ஜி.ஆர் நினைவு தினம் அனுசரிப்பு

கீழப்பாவூர் பேரூர் கழகம் சார்பில்  முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 28வது நினைவு நாளை முன்னிட்டு பி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ .,தலைமையில் அ.தி.மு.க.,வினர் எம்.ஜி.ஆர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் நிகழ்வில் ,கீழப்பாவூர் யூனியன் சேர்மன் செல்வமோகன்தாஸ் பாண்டியன் ,நகர செயலாளர் பாஸ்கர்,மாவட்ட கவுன்சிலர் முருகேசன் ,அண்ணா போக்குவரத்து தொழிற்ச்சங்க மண்டல  தலைவர் இளவரசு ,கல்லூரணி பஞ்சாயத்து தலைவர் இராமசாமி, கூட்டுறவு வங்கி துணைத்தலைவர்  ஐவராஜா ,அம்மா பேரவை இணைச்செயலாளர் வேல்முருகன்,ஊராட்சி கழக செயலளார்கள்  திருமால் முருகன் ,அமல்ராஜ் ,பேரூர் கழக பொருளாளர் முத்துசாமி சாமி ஆசாரி ,சரவணன் ,மருததுரை ,தங்கராஜா ,இராமசந்திரன் ,சுந்தர்ராஜ் ,காளிமுத்து ,சுதர்சன் ,சிவ சுப்பிரமணியன் ,கஸ்தூரி ,உட்பட  நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை நகர செயலாளர் பாஸ்கர்  செய்திருந்தார்