Home Blog Page 5913

அர்ச்சகர் நியமன வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது: தொல்.திருமாவளவன்

சென்னை:

கோயில்களில் ஆகம விதிகளின்படிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதற்கு வகை செய்து சட்டம் இயற்றப்பட்டது. அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓர் அமைப்பு வழக்குத் தொடுத்தது. அதில் உச்சநீதிமன்றம் தடையாணை பிறப்பித்திருந்தது. 7 ஆண்டுகளாக நடைபெற்ற அவ்வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆகம விதிகளின்படி செயல்படும் ஆலயங்களில் கடைபிடிக்கப்படும் வழக்கங்களுக்கேற்பத்தான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்றும், அப்படி நியமிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை நீதிமன்றம் இரத்து செய்யவில்லை என்றாலும் அதைச் செயல்படுத்த முடியாத அளவுக்குத் தடைகளை உருவாக்கியுள்ளது. எனவே, இந்தத் தீர்ப்பின்படி அர்ச்சகர்களை அவ்வளவு எளிதாக தமிழக அரசால் நியமிக்க முடியாது.
ஒருவேளை நியமித்தாலும் அதை எதிர்த்து வழக்குத் தொடர்வது தவிர்க்க முடியாதது என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். தீண்டாமையைக் குற்றமாக அறிவிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 17 இந்த வழக்குக்குப் பொருந்தாது என இந்தத் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
அதற்கான விளக்கம் எதையும் நீதிபதிகள் குறிப்பிடவில்லை. சாதிய அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்பதே அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு 17-ன் சாராம்சம். ஆகம விதிகளின்படி செயல்படும் ஆலயங்களில் ஏற்கனவே இருக்கும் நடைமுறைகளின்படிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்பது மறைமுகமாக சாதியையும் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளையும் ஏற்றுக்கொள்வதே ஆகும். எனவே, இந்தத் தீர்ப்பு அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்பதில் ஐயமில்லை.
சுதந்திரமடைந்து 68 ஆண்டுகள் ஆனபிறகும்கூட இன்னும் சமூக சமத்துவத்தை நாம் எட்ட முடியாமல் இருப்பதற்கு மரபின் பெயரிலான இத்தகைய நடைமுறைகளே காரணம். அதை நீதிமன்றம் ஞாயப்படுத்தியிருப்பது வியப்பும் வேதனையும் அளிக்கிறது. நீதித் துறையில் சமூக நீதி நிலைநாட்டப்படாத காரணத்தினாலேதான் சமூக சமத்துவத்துக்கு முரணான இத்தகைய தீர்ப்புகள் வெளிவருகின்றனவோ என்ற ஐயத்தை இந்தத் தீர்ப்பு வலுப்படுத்தியிருக்கிறது.
தற்போது, உச்ச நீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்டட, பழங்குடியின வகுப்புகளைச் சேர்ந்த நீதிபதி ஒருவர்கூட இல்லை. பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருவர் மட்டுமே உள்ளனர். ஒரே ஒரு பெண் நீதிபதிதான் இருக்கிறார். உயர் நீதிமன்றங்களிலும் இதேபோலத்தான் சமூகநீதி எட்டப்படாத நிலை உள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் 4 நீதிபதி பதவிகளும், உயர் நீதிமன்றங்களில் 400 நீதிபதி பதவிகளும் தற்போது காலியாக இருக்கின்றன. அவற்றை நிரப்பும்போது சமூகநீதியின் அடிப்படையில் உரிய பிரதிநிதித் துவத்தை வழங்குவதற்கு உச்சநீதிமன்றம் முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இந்தியாவுக்கே முன்னோடியாக, தமிழகத்தில் இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பை திருத்தியமைக்கவும் தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம். – என்று கூறியுள்ளார்.

பாஜக., அரசு இன்னும் எவ்வளவு தூரம் துன்புறுத்துமோ?: ப.சிதம்பரம்

சென்னை:
கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் மற்றும் அமலாக்கத்துறையினர் புதன்கிழமை சோதனை நடத்திய நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம், பாஜக அரசு இன்னும் எவ்வளவு தூரம்தான் கார்த்தியை துன்புறுத்துமோ என்று கூறியுள்ளார்.
அமலாக்கத்துறையினரும், வருமான வரித் துறையினரும் நடத்திய சோதனை தொடர்பாக ப.சிதம்பரம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அமலாக்கத்துறையினரும், வருமான வரித் துறையினரும் நடத்திய சோதனையில் நாங்கள் எதிர்பார்த்தபடியே எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. பாஜக அரசு இன்னும் எவ்வளவு தூரம்தான் கார்த்தியைத் துன்புறுத்தும் என்பதைப் பார்க்க விரும்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

வாசன் கண் மருத்துவமனைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை: கார்த்தி சிதம்பரம்

சென்னை:
வாசன் கண் மருத்துவமனைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,
மூன்று நிறுவனங்கள் மீதுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக சோதனை செய்வதற்கு மத்திய விசாரணைக் குழுவினர், எனது அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்தனர். குற்றச்சாட்டு கூறப்படும் இரு நிறுவனங்கள் எனது நண்பர்களுக்குச் சொந்தமானது. மூன்றாவது நிறுவனம் குறித்து எனக்குத் எந்தத் தகவலும் தெரியாது. எனது நண்பர்களின் நிறுவனத்தில் எனக்கோ, எனது குடும்பத்தினருக்கோ பங்கோ, உரிமையோ இல்லை. எனது அலுவலகத்தில் சோதனை நடத்துவதற்கும், விசாரணை செய்வதற்கும் அவர்களிடம் எந்த முகாந்திரமோ, ஆதாரமோ அவர்களிடம் கிடையாது. வாசன் கண் மருத்துவமனையில் எனக்கோ, எங்கள் குடும்பத்தினருக்கோ எந்தத் தொடர்பும் கிடையாது. எங்களது குடும்பத்தைச் சேர்ந்த யாரும் அங்கு பங்குதாரராகவோ, இயக்குநராகவோ இல்லை.
அண்மைக் காலமாக காங்கிரஸ் தலைவர், துணைத் தலைவர், இமாசலப் பிரதேச மாநில முதல்வர் ஆகியோருக்கு அடுத்தடுத்து ஏற்படுத்தப்படும் சிக்கலின் தொடர்ச்சியே, இந்த சோதனையும் என்றார் கார்த்தி சிதம்பரம்.

கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் வருமான வரி சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கின

சென்னை:
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறையினர் புதன்கிழமை 4 மணி நேரம் சோதனை செய்து, முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.
மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்த போது, ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கியது. இந்தப் பங்குகளை வாங்கியதில் விதிகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் பங்குகளை வாங்குவதற்கு ஏதுவாக அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தலைமையிலான அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியம் உதவியதாக சிபிஐ சந்தேகிக்கிறது. இந்தப் பங்குகள் கைமாறுவதற்கு முன்னதாக, கார்த்தி சிதம்பரம் முக்கியப் பங்குதாரராக இருந்த “அட்வான்டேஜ் ஸ்டிராட்டஜிக் கன்சல்ட்டிங்’ நிறுவனத்துக்கும், “ஏர்செல் டெலிவெஞ்சுர்ஸ்’ நிறுவனத்துக்கும் இடையே ரூ.26 லட்சம் பணப் பரிவர்த்தனை நடந்ததை மத்திய வருமான வரித் துறை கண்டுபிடித்தது.
இது தொடர்பாக விசாரணைக்கு வரும்படி “அட்வான்டேஜ் ஸ்டிராட்டஜிக் கன்சல்ட்டிங்’ நிர்வாகிகளுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. இந்த நிறுவனம், தமிழகத்தில் பிரபலமான தனியார் கண் மருத்துவமனையின் 1.5 லட்சம் பங்குகளை மறைமுகமாக வாங்கியதாக அமலாக்கத் துறை விசாரணையில் தெரிய வந்தது. இவை தொடர்பாக அமலாக்கத் துறை, வருமானவரித் துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் தனியார் மருத்துவமனையின் உரிமையாளர், கார்த்தி சிதம்பரத்தின் நெருங்கிய நண்பர் என்று கூறப்படுகிறது.
இந்தப் பின்னணியில் சென்னை, திருச்சி ஆகிய நகரங்களில் 15 இடங்களில் கடந்த 1-ஆம் தேதி மத்திய வருமான வரித் துறை, மத்திய அமலாக்கத் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
டிசம்பர் 1-ம் தேதி நடந்த சோதனையின் ஒரு பகுதியாக சென்னை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் கார்த்தி சிதம்பரம் அலுவலகத்துக்கு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். ஆனால், அப்போது அந்த அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால், அந்த அலுவலகத்துக்கு அவர்கள் சீல் வைத்தனர். இந்நிலையில் அந்த அலுவலகத்துக்கு மத்திய அமலாக்கத்துறையினர், மத்திய வருமானவரித் துறையினர் புதன்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் சோதனையிட சென்றனர். முன்னதாக தாங்கள் சோதனையிட வருவது குறித்து, கார்த்தி சிதம்பரத்துக்கு அவர்கள் தகவல் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் காலை 11.35 மணியளவில் தனது அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அரசு அதிகாரிகள், சீலை அகற்றி, அலுவலகத்தை திறந்தனர். சோதனையின்போது அங்கு கார்த்தி சிதம்பரத்தின் தாயார் நளினி சிதம்பரமும் இருந்தார். இச் சோதனையையொட்டி, அந்த அலுவலகத்துக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. சோதனை பிற்பகல் 2.55 மணியளவில் முடிவடைந்தது.
இந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதன் உண்மைத்தன்மையையும், விசாரணையின் தேவையைப் பொருத்தும் வழக்கில் சேர்த்துக் கொள்ளப்படும் எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறினர். இந்தச் சோதனையால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் ஆட்சியர் திட்டியதால் தாசில்தார் தற்கொலை முயற்சி

சென்னை :
சென்னையில் ஆட்சியர் திட்டியதால், தாசில்தார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதை அடுத்து, தாசில்தார்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பல பகுதிகள் மூழ்கின. இதனையடுத்து நிவாரண பணிகளில் மாநகராட்சியினரும், வருவாய் அலுவலர்களும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு வீடு இழந்தவர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படும் என அறிவித்தது. அதற்கான கணக்கெடுப்பு பணியில் சென்னை மாவட்ட வருவாய் அலுவலர்களும், ஊழியர்களும், பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தினமும் தாங்கள் கணக்கெடுத்த விவரங்களை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள வெள்ள நிவாரண தடுப்பு பணி அதிகாரிகளிடம் சமர்பித்து வருகிறார்கள்.

இந்தப் பணிகளின் ஒருங்கிணைப்பாளராக தண்டையார்பேட்டை தாசில்தார் சத்ய பிரசாத் செயல்பட்டு வருகிறார். இவர் சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்.

நேற்று முன்தினம் வெள்ள நிவாரணம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றபோது, கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி, பிற மாவட்ட ஊழியர்கள் முன்னிலையில் தாசில்தார் சத்ய பிரசாத்தை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும் பணி சம்பந்தமாக அவருக்கு நெருக்கடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த தாசில்தார், அங்கு இருந்த குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சை முடிந்து அவர் வீட்டுக்குத் திரும்பிவிட்டார். இந்நிலையில் தாசில்தாரை தரக்குறைவாக பேசிய ஆட்சியரைக் கண்டித்தும், அவரை வேறு இடத்திற்கு மாற்றக் கோரியும் நேற்று காலை சென்னை தாசில்தார்கள் 50-க்கும் மேற்பட்டோர் ராஜாஜி சாலையில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக இந்த போராட்டம் நடந்ததால், ஆட்சியர் அலுவலக பணிகள் முடங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆட்சியர் சுந்தரவள்ளி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து, சத்யபிரசாத்திடம் மன்னிப்பு கோருவதாக அவர் கூறினார். இதையடுத்து தாசில்தார்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

அருணாச்சல் அரசியல் நிலவரம்: குடியரசுத் தலைவர் தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்

புது தில்லி,

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஆளுநர் எடுத்துள்ள முடிவுகளில் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து வலியுறுத்தினர்.

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நபம் துகி, முதல்வராக உள்ளார். மாநில ஆளுநரான ஜோதி பிரசாத், மாநில அரசையோ அல்லது முதலமைச்சரையோ கலந்து ஆலோசிக்காமல், சட்டசபை கூட்டத் தொடருக்கு தன்னிச்சையாக அறிவிப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் அந்த கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலை தானே முடிவு செய்துள்ள ஆளுநர், சபை நடவடிக்கைகளுக்கு சபாநாயகர் தலைமையேற்க மாட்டார் என முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆளுநரின் இந்த தன்னிச்சையான நடவடிக்கை காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை அடுத்து, அரசை கவிழ்க்க சதி நடப்பதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்று பிற்பகலில் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றனர். அங்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்த அவர்கள், அருணாச்சல பிரதேசத்தில் ஆளுநர் மூலம், மாநில அரசை கவிழ்க்க மத்திய பா.ஜனதா அரசு முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினர். அதனால் ஆளுநரின் இந்த முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளில் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும்: ராமதாஸ்

மதுரை:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய அரசு அவசரச் சட்டத்தை பிறப்பிக்க மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு உச்ச நீதிமன்றத் தடையால் கடந்த ஆண்டு நடக்கவில்லை. ஆகவே, வரும் தைத் திருநாளையொட்டி, ஜனவரியில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும். ஆனால், அதற்குரிய நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே, அவசரச் சட்டம் பிறப்பிக்குமாறு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸும் விரைவில் மத்திய அமைச்சரைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை விடுப்பார் என்றார்.
மேலும், முல்லைப் பெரியாறில் 152 அடிக்குத் தண்ணீரைத் தேக்க நடவடிக்கை எடுக்கலாம் என ஆய்வுக் குழுத் தலைவர் நாதன் கூறியுள்ளார். ஆகவே, கேரள முதல்வர் உம்மன்சாண்டி உண்மைக்கு மாறான தகவலைக் கூறி இரு மாநில மக்களுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பது சரியல்ல என்று கருத்து தெரிவித்த ராமதாஸ், மக்கள் நலக் கூட்டணியால் பாமகவுக்கு எள்ளவுகூட பாதிப்பிருக்காது. வெள்ள பாதிப்பால் திமுகவுக்கு செல்வாக்கு கூடியிருப்பதாகக் கூறுவது தவறு. திமுக பட்டமரமாகிவிட்டது. அது இனித் துளிர்க்காது. தமிழகத்தில் அதிமுகவுக்கு அடுத்த பெரிய கட்சியாக பாமகவே உள்ளது என்றார்.

விமானத்தை இயக்கியபோது எஞ்ஜினில் சிக்கி தொழில்நுட்ப ஊழியர் பலி

மும்பை:
மும்பையில் ஏர்-இந்தியா விமான என்ஜினில் எதிர்பாராதவிதமாக சிக்கி தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
மும்பை விமான நிலையத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான ஏ.ஐ.619 விமானம், ஆந்திர மாநிலம் ஹைதராபாத்துக்குச் செல்வதற்காக புதன்கிழமை மாலை நிறுத்தப்பட்டிருந்தது. விமானம் புறப்படத் தயாராக இருந்தபோது, தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் விமானத்தைக் கடந்து சென்றார். அப்போது, விமான எஞ்ஜினின் ஈர்ப்பு விசையில் சிக்கி அவர் அதனுள் எதிர்பாராதவிதமாக உள்ளிழுக்கப்பட்டு உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து வேதனை தெரிவித்துள்ள விமான துறை அதிகாரிகள், இது குறித்து உரிய விசாரணை நடத்தப் படும் என்று கூறினர்.

அர்ச்சகர் நியமன வழக்கு: உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து யோசித்து செயல்படுவதாக கருணாநிதி பதில்

சென்னை:

ஆகம விதிகளின் படியே அர்ச்சகர்கள் நியமிக்கப் படவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், இது குறித்து கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது, ”அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக ஆவது பற்றி நாங்களும் குரல் கொடுத்தோம், கொடுத்து வருகிறோம். கி. வீரமணியும் எங்களைப் போலவே குரல் கொடுத்து வருகிறார். அவரும், நானும் மற்றும் அர்ச்சகர் சட்டத்தைப் பற்றி ஆதரவாக பேசி வருபவர்களும் கலந்து பேசி எந்த வகையிலே உச்ச நீதி மன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்த்து, அதன் பிறகு முடிவு செய்வோம்.
ஆண்டவனை வணங்குவதிலும், அர்ச்சிப்பதிலும் வேறுபாடு இருக்கக் கூடாது, உயர்வு தாழ்வு இருக்கக் கூடாது என்பதிலே தி.மு.க.வுக்கு அழுத்தமான கொள்கை உண்டு. அந்த அடிப்படையில் இந்தத் தீர்ப்பை ஆராய்ந்து பார்த்து ஆவன செய்வோம். மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்கிறீர்கள். உரிய நேரத்தில் உரிய முறையில் யோசித்து செயல்படுவோம்” என்றார் அவர்.

ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி:
ஆகம விதிகளின்படியே ஆலயங்களில் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தகுதியுடைய அனைத்து சாதியினரும் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாம் என்ற தமிழக அரசு பிறப்பித்திருந்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஆகம விதிகளின் படியே அர்ச்சகர்கள் நியமிக்கப் படவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அனைத்து சாதியினரும் அர்சகராகலாம் என்ற கடந்த 2006-ம் ஆண்டு திமுக அரசு பிறப்பித்திருந்த அரசாணையை எதிர்த்து ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நல சங்கம் மற்றும் தென்னிந்திய திருக்கோயில் நிர்வாக சபை ஆகியவை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து அப்போது உச்ச நீதிமன்றம் தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் மீதான இறுதிக் கட்ட விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகய், மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு வந்தது.
இந்த விசாரணை முடிவில் புதன்கிழமை வெளியிடப்பட்ட தீர்ப்பில், ஆலய ஆகம விதிகளைப் பின்பற்றியே அர்ச்சகர்கள் நியமிக்கப் படவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசன பிரிவு 14-ல் உள்ள சமத்துவத்துக்கான உரிமையை ஆகம சாஸ்திர விதிகள் மீறவில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு திமுக அரசு பிறப்பித்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற உத்தரவுக்கு இணங்க இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள 36,000 கோயில்களில் தகுதியும் பயிற்சியும் பெற்ற எந்த சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்று கூறப்பட்டது. மேலும், இந்து அறநிலையத்துறை 207 பேர்க்கு கோயில்களில் பூஜை செய்யும் பயிற்சி அளித்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.