Home Blog Page 5912

சிம்பு, அனிருத்திற்கு எதிராக கவிஞர்கள் கூட்டறிக்கை!

சமீபத்தில் அனிருத் இசையில் சிலம்பரசன் பாடியதாக வெளிவந்த ‘பீப்’ பாடலுக்கு கவிஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கவிஞர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியுள்ளதாவது,

“தமிழ்த் திரைப்படத் துறை என்ற மிகப்பெரிய ஊடகத்தில் இருந்து வெளியாகும் படைப்புகளை பெரிதும் ரசிக்கும் ரசிகர்கள் கோடிக் கணக்கான பேர். வெகுஜனங்கள் மத்தியில் விரைந்து சேர்ந்து அனைவர் இல்லங்களையும் உள்ளங்களையும் அடைந்து விடும் இப்படைப்புகள் ஒரு சமூக அக்கறையோடும் பொறுப்போடும் இருக்க வேண்டும்.

அந்த எல்லை மீறப்படும் போது, அது பலர் மனதை புண்படுத்துவதாக அமைந்து விடுகிறது. குறிப்பாக இந்தச் சர்ச்சைக்குரிய பாடல் பெண்களை இழிவுபடுத்தும் நோக்கிலும் ஒழுக்கமற்றவர்களின் ஓலக்குரலாகவும் ஒலிக்கிறது.

மக்கள் இன்னும் மழைப் பாதிப்பில் இருந்து மீளாத சூழ்நிலையில், அவர்களின் மனநிலை புரியாமல் பொறுப்பற்ற வன்செயலாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட பாடல் சிறு பிள்ளைகள் மத்தியில் பரவிவிட்டால் ஒரு நாகரீகம் இழந்த தொற்று நோய் அவர்கள் மனதில் பதிந்துவிடும். குறிப்பிட்ட பீப் சத்தம் ஏன் என்று கேட்டு மன அசுத்தம் அடைவார்கள்.

இப்பாடல் குறித்து மாணவர் அமைப்புகள், மாதர் சங்கங்கள், பல எழுத்தாளர்கள் தங்கள் எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில், இந்த கூட்டறிக்கை வாயிலாக எங்களது கண்டனத்தையும் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.

மக்களால் அங்கீகரிக்கப்பட்டு மிகப்பிரபலமாக இருக்கும் படைப்பாளிகள் – கலைஞர்கள் இப்பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஒருவேளை சிலம்பரசன், அனிருத் தரப்பில் நேற்று கூறப்பட்டது போல் அந்தச் சர்ச்சைக்குரிய பாடல் அவர்களது படைப்பாக இல்லாது இருக்குமாயின் இந்த கொடும் செயலை செய்தவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோல் சமூகத்தைச் சீரழிக்கும் பாட்டுக்கள் படைப்புகள் வெளிவராது செய்ய அனைத்து படைப்பாளிகளும், ஊடகங்களும் ஒன்று பட வேண்டும்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜா அறிவு இருக்கா ? என செய்தியாளரிடம் அநாகரீகமாக பேசி வாக்குவாதம்

 
 
இசையமைப்பாளர் இளையராஜா அறிவு இருக்கா ? என அநாகரீகமான வார்த்தையை பயன்படுத்தி செய்தியாளரை தரக்குறைவாக பேசி வாக்குவாதம் செய்ததால் அதற்க்கு ஊடகவியலாளர்கள் கண்டம் தெரிவித்துள்ளனர்.
 
சென்னையில், கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்ட இளையராஜாவிடம், தற்போது சர்சையை கிளப்பியுள்ள சிம்பு, அனிரூத்தின் “பீப் சாங்” குறித்து கருத்து கேட்டுள்ளார் தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் ஆனந்த்.
 
இதற்கு அந்த செய்தியாளரை பார்த்து “என்னை கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதியுள்ளது” உனக்கு அறிவு இருக்கா ? என்று அநாகரீகமான வார்த்தையை பயன்படுத்தி மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார் இளையராஜா.
 
இசையமைப்பாளர் அனிரூத் இசையமைத்து, நடகர் சிம்புவால் பாடப்பட்ட “பீப் சாங்”, பெண்களை மிக கேவலமாக சித்தரித்துள்ளதால், அனிரூத் மற்றும் சிம்புவை கைது செய்ய வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக சிம்புவும், அனிரூத்தும் நேரில் ஆஜராக வேண்டும் என்று கோவை மாநகர காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இந்நிலையில், திரைப்படத்துறையில் இசையமைப்பாளர் ஒருவரின் செயலால் தற்போது எழுந்துள்ள சர்சை குறித்து, செய்தியாளர் இளையராஜாவிடம் கருத்து கேட்டதில் என்ன தவறுள்ளது? அந்த கேள்விக்கு பதிலளிக் விருப்பமில்லையென்றால் அதை இளையராஜா வெளிப்படையாக தெரிவித்திருக்கலாமே?
 
அதைவிடுத்து, சமூகத்தில் அனைவராலும் மதிக்கத்தக்க இடத்தில் உள்ள இளையராஜா, கேள்விகேட்ட செய்தியாளரை பொறுப்பில்லாமல் மிகவும் தரக்குறைவாக பேசியது, தமிழ் சமூகம் அவருக்கு வழங்கியுள்ள அங்கீகாரத்தை உதாசினப்படுத்தும் செயல் என்றே மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் கருதுகின்றன்றனர்.
 
சம்பந்தப்பட்ட நபர்களிடம், துணிச்சலாக கேள்விகளை முன் வைப்பதன் மூலம், மக்களின் வாழ்நிலையை மாற்றக்கூடிய நிகழ்வுகளையும், அதற்குப்பின்னால் உள்ள அரசியலையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது செய்தியாளர்களின் சமூக கடமையாகும்.
 
அந்தவகையில், கேள்விகேட்ட செய்தியாளரை என்று அநாகரீகமான வார்த்தையை பயன்படுத்தி மிகவும் தரக்குறைவாக பேசிய இசையமைப்பாளர் இளையராஜாவின் செயலை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கின்றது. அத்துடன், தனது செயலுக்காக இளையராஜா வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
 
மக்கள் கொடுக்கும் அங்கீகாரமே, ஒருவனுக்கு கலைஞன் என்ற அந்தஸ்தை வழங்குகின்றது. அவ்வாறு, மக்களால் போற்றப்படும் கலைஞர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும் என்பதை இந்தநேரத்தில் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றனர்.

தமிழகத்தின் அனைத்து அணைகள், ஏரிகளிலிருந்து கூட தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டவர் ஜெயலலிதா : விஜயகாந்த்

 
 
 
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
 
தமிழக தலைமைச் செயலாளர் கொடுத்துள்ள விளக்கத்தில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதற்கு பொதுப்பணித்துறையின் உதவி செயற்பொறியாளருக்கே முழு அதிகாரம் உள்ளதென்றும், முதலமைச்சருக்கு எந்த தொடர்பும் இல்லையென பொருள்படும்படி கூறியுள்ளார். ஆனால் ஜெயலலிதா முதலமைச்சர் ஆனதிலிருந்து நேற்று வரை, தமிழகத்தின் அனைத்து அணைகள், ஏரிகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவதென்றால் கூட அவர் தான் உத்தரவிட்டுள்ளார்.
 
வாட்ஸ் அப் உரையில் மக்களின் துன்பங்களுக்கு அரசு என்ன செய்யபோகிறது என்பதை பற்றி கூறாமல், தான் ஒருவர் தான் மக்களை காப்பாற்ற பிறந்தவர் போல பேசியுள்ளார். இப்படியெல்லாம் பேசி மக்களை ஏமாற்றியது போதும், இனியும் தமிழக மக்கள் ஏமாற தயாராக இல்லை. இனியாவது தமிழக மக்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவே நேரடியாக பதிலளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
 
என்று விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
 
 

மீண்டும் தி.மு.க.வில் டாக்டர் சரவணன்: ம.தி.மு.க.,வில் இருந்து தாவல்

சென்னை:
மதிமுகவில் இருந்து விலகிய மாவட்ட செயலாளர்கள் திமுகவில் இணைந்து வரும் நிலையில் டாக்டர் சரவணன் மீண்டும் திமுகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதிமுக புறநகர் மாவட்ட செயலாளராக பதவி வகித்தவர் டாக்டர் சரவணன். அதற்கு முன்பு திமுகவில் இருந்தார். பின்னர் அந்தக் கட்சியில் இருந்து விலகி மதிமுகவில் இணைந்தார். மதிமுகவின் கொள்கை கோட்பாடுகளை கற்று புரிந்துகொள்வதற்குள் அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
பாஜகவில் சிறிது காலம் பணியாற்றி வந்த சரவணன், தற்போது பாஜகவில் இருந்து விலகி திமுகவில் அக்கட்சி தலைவர் கருணாநிதி முன்னிலையில் தனது ஆதரவாளர்களுன் நேற்று இணைந்தார்.
இந்நிகழ்வில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். சேலம், கரூர், மதுரை புறநகர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட செயலாளர்கள் மதிமுகவில் இருந்து கூண்டோடு விலகி திமுகவில் இணைந்துள்ளனர். தொடர்ந்து மதிமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் திமுகவில் இணைந்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள் திமுகவில் தங்களை இணைத்து கொண்டு கட்சி பணியாற்றி வருகின்றனர். சட்டசபை தேர்தலில் திமுக உடன் கூட்டணி என்று கூறிவிட்டு திடீரென கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து மக்கள் நலக் கூட்டணியை வைகோ உருவாக்கியதுதான் இதற்குக் காரணம் என பெரும்பாலானோர் கூறி வருகின்றனர்.

வெள்ளம் காரணம் கண்டறிய உயர்நிலைக் குழு அமைக்கக் கோரி மனு

சென்னை:
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கான காரணம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் உயர் நிலைக் குழுவை அமைக்க உத்தரவிடக் வேண்டும் என்று கோரி தொழிலதிபர் ராஜீவ் ராய் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி புஷ்பா சத்யநாராயணா ஆகியோர், மனு குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

வெள்ள நிவாரணப் பணியில் மத்திய, மாநில அரசுகளுக்கிடையே போதிய ஒருங்கிணைப்பு: தமிழக அரசு

சென்னை:
வெள்ள நிவாரணப் பணியில் மத்திய, மாநில அரசுகளுக்கிடையே போதிய ஒருங்கிணைப்பு உள்ளது என தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் அளிக்கப்பட்டது.
வெள்ள நிவாரணம் தொடர்பாக, வழக்குரைஞர் ஏ.பி.சூரியப்பிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி, வெள்ள நிவாரணப் பணியில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே போதிய ஒருங்கிணைப்பு உள்ளது என்று தகவல் அளித்தார்.
அதற்கு நீதிபதிகள், வெள்ள நிவாரணத்துக்காக பெறப்படும் நிதியை பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும், இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவும் நபராக மூத்த வழக்குரைஞர் யசோத் வரதனை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ராமேஸ்வரம் – இலங்கை இடையே ரூ.24 ஆயிரம் கோடி செலவில் கடல் பாலம்: கட்கரி

புது தில்லி:

ரூ.24 ஆயிரம் கோடி செலவில், ராமேசுவரத்தையும், இலங்கையையும் இணைக்கும் வகையில் கடல் பாலம் அமைக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று ஓர் அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில், இந்த அரசு பதவி ஏற்றதில் இருந்து, பிராந்திய ஒத்துழைப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. தெற்கு ஆசியாவுக்கும், தென்கிழக்கு ஆசியாவுக்கும் இடையே உறுதியான, நம்பகமான தொடர்புகளை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அந்தவகையில், ராமேசுவரத்தையும், இலங்கையையும் இணைக்க கடல் பாலம் அமைக்கப்படும். இதற்கு ரூ.24 ஆயிரம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு முழுமையாக நிதி அளிக்க ஆசிய வளர்ச்சி வங்கி தயாராக உள்ளது.
இந்த திட்டம் குறித்து சமீபத்தில் இந்தியாவுக்கு வந்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
இதுபோல், வடகிழக்கு பிராந்தியத்தில் தடையற்ற பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்காக ‘வங்காளதேசம்–பூடான்–இந்தியா–நேபாளம் மோட்டார் வாகன ஒப்பந்தம்’ திம்புவில் கையெழுத்திடப்பட்டது.
இதையடுத்து, சரக்கு வாகன சோதனை ஓட்டம், கடந்த மாதம நடத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தால், மேற்கண்ட 4 நாடுகளிடையே பயண தூரம் கணிசமாக குறையும். இந்த திட்டமும் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுடன் செயல்படுத்தப்படும்.
இந்தத் திட்டம் அமலுக்கு வந்தால், சார்க் மற்றும் ஆசியான் நாடுகளிடையே அனைத்து வகையான வாகனங்களும் தங்குதடையின்றி ஓட வேண்டும் என்ற கனவு நனவாகும். – என்று கூறப்பட்டுள்ளது.

மேகி நூடுல்ஸ் மாதிரிகளை மைசூர் ஆய்வகத்துக்கு அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவு

maggi noodles - 2026புது தில்லி:
மேகி நூடுல்ஸ் விவகாரத்தில், அதன் மாதிரிகளை மைசூர் ஆய்வகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டின் நெஸ்லே நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்சில் மோனோசோடியம் குளுட்டாமேட் என்ற வேதிபொருள் அளவுக்கு அதிகமாக இருப்பதாக கூறி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை ஒரு சில மாநிலங்களில் தற்போது விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மேகி நூடுல்சின் மாதிரிகளை சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு சோதனைக்காக அனுப்புமாறு நெஸ்லே நிறுவனத்துக்கு தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து நெஸ்லே நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்ல சி பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது குறைதீர் ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதித்த நீதிபதிகள், சென்னைக்கு பதிலாக மேகி நூடுல்சின் சில மாதிரிகளை ஆய்வுக்காக மைசூருவில் உள்ள மத்திய உணவு தொழில் நுட்ப நிறுவனத்தின் ஆய்வகத்துக்கு அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் தற்போது அனுப்ப உள்ள ஆய்வு முடிவுடன், ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வு முடிவையும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

மத்திய அரசு ஊழியர் ஓய்வு வயது 58 ஆகக் குறைக்கப் படாது

புது தில்லி: 

மத்திய அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது 58 ஆகக் குறைக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக குறைக்கப்படுமா என மக்களவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பிரதமர் அலுவலக விவகார இணையமைச்சர் ஜிதேந்திரா சிங் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியபோது, மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக உள்ளது. பெரும்பாலான துறைகளில் இதுதான் கடைபிடிக்கப்படுகிறது. எனினும், ஆசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் ஓய்வு வயது மட்டும் 62 வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது 50 லட்சத்துக்கு மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது ஓய்வுபெறும் வயதை 58 ஆக குறைக்கவோ அல்லது 33 ஆண்டுகள் சேவை என்பதை குறைக்கும் எண்ணமோ மத்திய அரசிடம் இல்லை என்றார்.

மக்களின் துன்பங்களை சுமப்பவரா ஜெயலலிதா?: இனியும் ஏமாற்ற முடியாது என்கிறார் ராமதாஸ்

சென்னை:
மக்களின் துன்பங்களை சுமப்பவரா ஜெயலலிதா, அவர் இனியும் மக்களை ஏமாற்ற முடியாது என்று கூறியுள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ்.
அவர் வெளியிட்ட அறிக்கையில்,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளையும், கடலூர் மாவட்டத்தையும் மூழ்கடித்த மழை&வெள்ளத்தில் சிக்கி அனைத்தையும் இழந்து மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், 15 நாட்களாக அவர்களை எட்டிக்கூட பார்க்காத ஜெயலலிதா இப்போது வாட்ஸ்-அப் மூலம் அவர்களின் துயரத்தை நினைத்து வருத்தம் தெரிவித்திருக்கிறார். ஜெயலலிதாவின் ஆறுதலைக் கேட்கும் போது, துக்க வீட்டில் கொலை காரன் வந்து ஆறுதல் கூறும் போது என்ன உணர்வு ஏற்படுமோ, அதே உணர்வு தான் ஏற்படுகிறது.
‘‘வெள்ளத்தால் ஏற்பட்ட பெரும் துன்பத்திலிருந்து உங்களை மீட்டு புது மலர்ச்சியும், எழுச்சியும் அடையச் செய்வேன். இது உறுதி’’ என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். துன்பத்திலிருந்து மக்களை அவர் மீட்பது இருக்கட்டும். இந்த துன்பத்தை ஏற்படுத்தியவரே அவர் தான் என்பதை ஒப்புக்கொள்வதில் தயக்கம் ஏன்? என்பது தான் எனது கேள்வி. சென்னையில் மழை இல்லாத நாட்களில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து படிப்படியாக தண்ணீரை திறந்து விட்டால், அதிக மழை பெய்யும் ஏரி நீரைக் கட்டுக்குள் வைத்து வெள்ளம் ஏற்படாமல் தடுக்கலாம் என்று கூறி, அதற்கான அனுமதி கோரி பொதுப்பணித்துறை பொறியாளர்கள் அனுப்பிய கோப்பின் மீது 4 நாட்களாக முடிவு எடுக்காமல் முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் செய்த தாமதத்தால் தானே செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இரவு நேரத்தில் வினாடிக்கு 34 ஆயிரம் கனஅடி நீரை திறக்கும் நிலை ஏற்பட்டு, அதனால் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டது. இதற்கு ஜெயலலிதா தானே பொறுப்பேற்க வேண்டும். இச்சிக்கலில் குற்றவாளி என்ற நிலையிலிருந்து தப்புவதற்காக ‘நல்ல மீட்பர்’ வேடம் போடும் ஜெயலலிதாவிடம் தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்.
‘‘போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை முடுக்கி விட்டிருக்கிறேன். உங்களுக்காக நான், உங்களோடு எப்போதும் இருக்கிறேன்’’ என்றும் ஜெயலலிதா கூறியிருக்கிறார். தமிழ்நாட்டு மக்களை எந்த அளவுக்கு முட்டாள்களாக அவர் நினைக்கிறார் என்பதற்கு இதுதான் சிறந்த உதாரணம் ஆகும். சென்னையில் வெள்ளம் ஏற்பட்டு 16 நாட்களாகிவிட்ட நிலையில் சென்னையின் பல பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. இது தான் போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும் அழகா? என்பதை ஜெயலலிதா தான் விளக்க வேண்டும். சென்னை, காஞ்சி, திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களையும் நவம்பர் 8 ஆம் தேதி முதல் 40 நாட்களாக மழை-வெள்ளம் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. உங்களுக்காக நான்… உங்களோடு நான் என்று கூறும் ஜெயலலிதா ஒரு நாளாவது பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருப்பாரா? 4 மாவட்டங்களையும் சேர்ந்த கோடிக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தில் தவித்த போதும், பசியில் துடித்த போதும், உற்றார்-உறவுகளை வெள்ளத்திற்கு பலி கொடுத்து கதறிய போதும் எட்டிக் கூட பார்க்காமல் போயஸ் தோட்டத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஜெயலலிதா, இப்போது திடீரென வாட்ஸ்&அப் வசனம் பேசி ஏமாற்ற முயன்றால், ஏமாறுவதற்கு தமிழக மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளை மாற்றி மாற்றி ஆட்சியில் அமர்த்தி ஓய்ந்து போன வாக்காளர்கள் அல்ல… அடுத்த தேர்தலில் புரட்சி படைப்பதற்காக புதுத் தெளிவு பெற்றுள்ள வாக்காளர்கள். அவர்கள் இனி நடிப்புக்கு மயங்கமாட்டார்கள்.
‘‘உங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் நானே சுமக்கிறேன். எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது. எனக்கென்று உறவினர் கிடையாது. எனக்குச் சுயநலம் அறவே கிடையாது. எனக்கு எல்லாமும் நீங்கள் தான். என் இல்லமும் உள்ளமும் தமிழகம் தான்’’ என்று தம்மை இயேசுநாதராகவே நினைத்துக் கொண்டு வசனங்களை வாரி இறைத்திருக்கிறார் ஜெயலலிதா. இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் இப்படியே வசனம் பேசியும், கிளீசரின் போடாமல் கண்ணீர் வடித்தும் மக்களை ஏமாற்றி விடலாம் என ஜெயலலிதா நினைத்துக் கொண்டிருக்கிறார் எனத் தெரியவில்லை. மக்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் தாமே சுமப்பதாக ஜெயலலிதா கூறுவது சரியல்ல… மக்கள் மீதான அனைத்து துன்பங்களையும் சுமத்துபவர் ஜெயலலிதா என்பது தான் உண்மையாகும். தமக்கென்று தனி வாழ்க்கை கிடையாது என்றால், தினம் தோறும் அமைச்சர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஊழல் பணம் வசூலிக்கப்படுவது எதற்காக? கொடநாட்டில் 898 ஏக்கரில் மாளிகை, சிறுதாவூரில் 25.4 ஏக்கரில் பண்ணை வீடு, பையனூரில் 3 ஏக்கரில் பண்ணை வீடு, கன்னியாகுமரி மாவட்டத்தில் 1190 ஏக்கர் நிலம், தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் 1167 ஏக்கர் நிலம், காஞ்சிபுரத்தில் 300 ஏக்கர் நிலம், முதல் 5 ஆண்டு ஆட்சியில் குவித்த 23 கிலோ நகைகள் ஆகியவை எதற்காக? மக்கள் குடியை கெடுத்து வருவாயை கொட்டும் மிடாஸ் உள்ளிட்ட 44 பினாமிநிறுவனங்கள் எதற்காக?
ஜெயலலிதாவுக்கு உறவினர்கள் கிடையாதாம். அப்படியானால் போயஸ் தோட்டத்தில் முகாமிட்டு, ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆட்டிப்படைப்பவர்கள் யார்? 44 நிறுவனங்களை நிர்வகிப்போர் யார்? ஆட்சியைப் பயன்படுத்தி கொள்ளையடித்த பணத்தில் திரையரங்களை வாங்கிக் குவிப்பவர்கள் யார்? என்பதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம் அளித்தால் சிறப்பாக இருக்கும். எனக்கு எல்லாமும் நீங்கள் தான் என்கிறார் ஜெயலலிதா. அதற்கு பதிலாக உங்களுடையது எல்லாமும் என்னுடையது தான் என்று கூறியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். அதேபோல், என் இல்லமும், உள்ளமும் தமிழகம் தான் என்பதற்கு பதிலாக, ஒட்டுமொத்த தமிழகத்தையும் வளைத்து போட்டு விட்டதால் தமிழகமே எனது இல்லம் தான் என ஜெயலலிதா பதிலளித்திருந்தால் சாலச் சிறந்ததாக இருந்திருக்கும்.
பெற்றோர் வைத்த ஜெயலலிதா என்ற பெயரே மறந்து போகும் அளவுக்கு தமிழக மக்கள் தம்மை ‘அம்மா’ என்று அழைப்பதாக ஜெயலலிதா கூறுவதைப் பார்க்கும் போது அவர் மாயையில் வாழ்வதை உணர முடிகிறது. எந்த தமிழனும் தாயைத் தவிர வேறு யாரையும் அம்மா என்று அழைக்க மாட்டான். அம்மா என்பதை தனது வணிகப்பெயராக (Brand Name) மாற்ற ஜெயலலிதா முயன்றார். இதற்காக மதுக்கடை தவிர மற்ற அனைத்துக்கடைகளுக்கும் அம்மா என்ற பெயரைச் சூட்டினார். போலியாக அவரது புகழ்பாடுவதையே வழக்கமாக கொண்டிருக்கும் அமைச்சர்கள் அதை வழி மொழிந்தனர். ஜெயலலிதாவைப் பற்றிய மக்களின் மன ஓட்டம் என்ன? என்பதை மக்களை நேரடியாகச் சந்தித்து , அவர்களின் கோபத்தை எதிர்கொள்ளும் போது தான் புரிந்து கொள்வார். அதேபோல், ஜெயலலிதா தங்கள் துயர்துடைக்க வேண்டும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. மாறாக இனியும் செயற்கைப் பேரிடரை ஏற்படுத்தி உயிரை எடுக்காமல் இருந்தால் போதும் என்று தான் மக்கள் கருதுகின்றனர்.
முதல்வர் என்பவர் படைத்தளபதி போரில் படையை வழி நடத்திச் செல்வதைப் போல நெருக்கடியான நேரத்தில் மக்களை வழிநடத்திச் செல்ல வேண்டும். முதலமைச்சர் என்பவர் பலம் வாய்ந்த கழுகை எதிர்த்து போராடி குஞ்சுகளைக் காக்கும் கோழியைப் போல இருக்க வேண்டும். ஆனால், ஜெயலலிதா அப்படிப்பட்டவர் அல்ல. மாறாக நெருக்கடியான நேரங்களில் மக்களை ஆபத்தில் சிக்கவிட்டு தப்பித்துக் கொள்ளும் சுயநலப்பிறவியாகவே இருக்கிறார் என்பதற்கு ஏராளமான உதாரணங்களை கூற முடியும்.
முதலமைச்சர் என்பவர் காட்சிக்கு எளியனாய், மக்கள் நினைத்த நேரத்தில் சந்திக்கக்கூடியவராக இருக்க வேண்டும். ஆனால், ஒரு நாளைக்கு 23 மணி நேரம் ஓய்வெடுக்கும் முதலமைச்சரைச் சுற்றி உடன்பிறவா சகோதரி மற்றும் அவரது உறவினர்கள் ஓர் அடுக்கு, ஓய்வு பெற்ற பிறகும் பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள் அடுத்த அடுக்கு, தலைமைச் செயலர் மற்றும் முதலமைச்சரின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இன்னொரு அடுக்கு 3 அடுக்குகள் சூழ்ந்திருக்கின்றன. இவர்கள் தான் உலகம்… இவர்கள் சொல்வதே வேதம் என்று தான் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவர்களைத் விர வேறு எவரும் அவரை அணுக முடியாது.
அப்படி இருக்கும் போது வழக்கமான வசனங்களைப் பேசி மக்களை ஏமாற்ற முயல்வது வீண் வேலை. தமிழக மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள். வரும் தேர்தலில் மக்கள் தங்களின் கோபத்தை காட்டுவர். அப்போது தான் ஜெயலலிதா கூறிய,‘‘இப்பெரும் துன்பத்திலிருந்து உங்களை மீட்டு புது மலர்ச்சியும் எழுச்சியும் அடையச் செய்வேன்’’ என்ற சொற்களுக்கு உண்மையான பொருள் விளங்கும். – என்று கூறியுள்ளார்.