Home Blog Page 5916

அசாமில் கோயிலுக்குள் நுழைய விடாமல் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தடுத்தனர்: ராகுல்

புது தில்லி:

தனது அசாம் சுற்றுப் பயணத்தின் போது, தன்னை கோவிலுக்குள் நுழைய விடாமல் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தடுத்ததாக ராகுல் காந்தி நேற்று குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி அசாம் மாநிலத்தில் கடந்த வாரம் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டார். அப்போது பர்பட்டா மாவட்டத்தில் உள்ள கோவில் ஒன்றில் அவரை நுழைய விடாமல், பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தடுத்ததாக முதல்வர் தருண் கோகோய் நேற்று முன்தினம் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாகக் கூறி, தில்லியில் பாராளுமன்றத்துக்கு வெளியே காங்கிரசார் நேற்று போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, நான் அசாம் சென்றிருந்த போது, பர்பட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு செல்ல முயன்றேன். ஆனால் என்னை கோவிலுக்குள் செல்லவிடாமல் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தடுத்து விட்டனர். எனக்கு முன்னால் பெண்களை நிறுத்திய அவர்கள், என்னிடம், ‘நீங்கள் கோவிலுக்குள் செல்ல முடியாது’ என்றனர். அவர்கள் அங்கிருந்து வெளியேறியபின், மாலையில்தான் அந்த கோவிலுக்கு நான் சென்றேன். பா.ஜ.க.வின் சிந்தனை எவ்வாறு இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. ஒரு கோவிலுக்குள் என்னை நுழைய விடாமல் தடுக்க அவர்கள் யார் என்று கேள்வி எழுப்பினார் ராகுல்.

கனமழையால் உயிரிழந்த 25 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவி: முதல்வர் உத்தரவு

சென்னை:

கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்த 25 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பெய்த கன மழையினால் சென்னை, எழும்பூர் வட்டம், கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் ரவிக்குமார்; காஞ்சீபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம், வேளூர் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் பாக்கியராஜ்; ஆலந்தூர் வட்டம், நந்தம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணனின் மனைவி சுசீலா; மகள் விஜயலட்சுமி மற்றும் மகன் வெங்கடேஷ். சென்னை, மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் தயாளன்; புரசைவாக்கம் வட்டம், ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த பலராமன் மகன் லட்சுமிபதி; கிண்டி வட்டம், ஈக்காட்டுத்தாங்கல் பகுதியைச் சேர்ந்த பாலசந்திரனின் மனைவி சங்கராந்தி மற்றும் மகன் சீனிவாஸ்; விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், ஏமப்பேர் கிராமத்தைச் சேர்ந்த காமதேனு மகன் பிரபு; காஞ்சீபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம், பெரியகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் சாமிநாதன்; கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கெல்லன் மகன் சின்னத்தம்பி. திருப்போரூர் வட்டம், சிறுங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணனின் மனைவி சரஸ்வதி; மதுராந்தகம் வட்டம், கெண்டரைச்சேரி கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன் மகன் நொச்சிலி; சென்னை, மயிலாப்பூர், கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த மாரி மகன் பாஸ்கர்; தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்தையாவின் மனைவி கிருஷ்ணம்மாள்; திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், புங்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் பரசுராமன் ஆகியோர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், மகனூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்த கவுண்டர் மகன் பெரியதம்பி; விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வடகுச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பரந்தாமன் மகன் அகிலன்; மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சொக்கலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி மகன் சசிக்குமார்; திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், காரங்காடு கிராமத்தைச் சேர்ந்த பிறவிப் பெருமாள் மகன் ஆறுமுக நயினார். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், முத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டையன் மகன் முனியன் ஆகியோர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், ஈச்சங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரனின் மனைவி மாரியம்மாள்; விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், செம்பொன் நெறிஞ்சி கிராமத்தைச் சேர்ந்த மூக்கையா மகன் பழமுதிர்சோலை; திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், வேலப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் செல்வம் ஆகியோர் மழையின் காரணமாக மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தனர்.

இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
– என்று கூறப்பட்டுள்ளது.

மூன்று தென் மாவட்ட மதிமுக., செயலர்கள் கருணாநிதி முன்னிலையில் திமுக.,வில் ஐக்கியம்

சென்னை:

தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட செயலாளர்கள் மதிமுக.,வில் இருந்து விலகி கருணாநிதி முன்னிலையில் திமுக.,வில் இணைந்தனர்.

தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜோயல் தலைமையில் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன், மாநகர் மாவட்ட செயலாளர் பெருமாள், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் தில்லை செல்வம் ஆகியோர் மதிமுக.,வில் இருந்து விலகி திமுக.,வில் இணைந்தனர். நேற்று மாலை 6.45க்கு திமுக., தலைவர் கருணாநிதி அண்ணா அறிவாலயம் வந்தார். தொடர்ந்து மதிமுக., மாவட்ட செயலாளர்கள் 4 பேரையும் மு.க.ஸ்டாலின் கருணாநிதி இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்கள் கருணாநிதிக்கு மாலை அணிவித்து கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

பின்னர் ஜோயல், சரவணன், பெருமாள், தில்லை செல்வம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசியபோது, மதிமுக., பொதுச்செயலாளர் வைகோ கட்சி தொண்டர்களின் கருத்தை ஒரு போதும் கேட்பதில்லை. அவர் எண்ணியதைத்தான் கட்சிக்குள் திணிக்க முயல்வார். கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலை மதிமுக., புறக்கணித்தது. அதற்கு ஒரு காரணம் இருந்தது. அதன் பிறகு கடந்த 4 ஆண்டுகளாக அரசியல் களத்தில் மதிமுக., தொண்டர்கள் பம்பரமாய் சுற்றி களப் பணியாற்றினர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இம்முறை திமுக.,வுடன் கூட்டணி சேருவோம் என்று கூறி வந்தார். திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி மக்கள் நல கூட்டு இயக்கம் கூட்டணியாக மாறும் என்றார். அ.திமுக.,வை வீழ்த்துவோம் என்று சொல்லி வந்தவர் மறைமுகமாக அ.திமுக.,விற்கு உதவும் வகையில் செயல்பட தொடங்கினார். எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நாங்கள் இன்று தாய்க் கழகத்தில் இணைந்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

தமிழகத்தில் விரைவில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஒரு மாற்று அணியாக மக்கள் நல கூட்டு இயக்கத்தை மக்கள் நல கூட்டணியாக மாற்ற வைகோ முடிவு எடுத்தபோது, அக்கட்சியில் இருந்து முன்னணித் தலைவர்கள் விலகினர். அக்கட்சியின் மாநில பொருளாளர் மாசிலாமணி, காஞ்சீபுரம் மாவட்ட செயலாளரும், வைகோவின் தீவிர விசுவாசியுமான பாலவாக்கம் சோமு, சேலம் மாவட்ட செயலாளர் தாமரைக்கண்ணன், மதிமுக., மாநில மகளிர் அணி செயலாளர் விஜயகுமாரி உள்பட பலர் மதிமுக.,வில் இருந்து விலகி கட்சி தலைமைக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தினர். திமுக.,வில் இணைந்த அவர்களுக்கு திமுக., தலைமை பதவிகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் தென்மாவட்ட செயலாளர்கள் 4 பேர் தங்கள் ஆதரவாளர்களுடன் திமுக.,வில் ஐக்கியமாகியுள்ளனர்.

வெடிகுண்டு மிரட்டலால் விடுமுறை: மதுரையில் 20 பள்ளிகளில் சோதனை

மதுரை:

மதுரையில் வெடிகுண்டு மிரட்டலால் 20 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மதுரை மாநகர் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறைக்கு திங்கள் நேற்று காலை தொலைபேசியில் பேசிய மர்ம நபர் ஒருவர், அண்ணாநகர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும், அது எந்தப் பள்ளி என்பதை நீங்களே கண்டுபிடியுங்கள் என்று கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார்.

உடனே இதுகுறித்து காவல் துறை ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில், அண்ணாநகர் போலீஸார் உடனடியாக வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் தடுப்புப்பிரிவு போலீஸாரை வரவழைத்து சோதனை மேற்கொண்டனர். அண்ணாநகர் மற்றும் வண்டியூர் பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் சொக்கிக்குளம் பகுதியில் உள்ள பள்ளியிலும் வெடிகுண்டு கண்டறியும் கருவிகளுடன் சென்று சோதனை நடத்தியும், பள்ளிகளில் எந்த வெடிபொருள்களும் கண்டறியப்படவில்லை.

வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த வதந்தியால் 20க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. காலையில் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் அனைவரும் பள்ளி வாகனங்களில் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். மற்ற மாணவர்களின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக அண்ணாநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடடே… தனியார் டிவி திருவிளையாடலால் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்த முன்னாள் டிஜிபி நடராஜ் நீக்கம் ரத்து

 

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தமிழக காவல்துறை முன்னாள் இயக்குநர் ஆ.நடராஜ் நீக்கி வைக்கப்படுகிறார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அதிரடியாக நேற்று அறிவித்துள்ளார். ஆனால், இது தவறான தகவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று தெரியவந்ததால், அவரது நீக்கத்தை இன்று ரத்து செய்தார்.

சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நடராஜ் அளித்த பேட்டியின்போது, வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள் மீது அவர் குற்றம்சாட்டி இருந்தார். இதன் எதிரொலியாகவே அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் ஜெயலலிதா அதிமுகவில் இருந்து தமிழக காவல்துறை முன்னாள் இயக்குநர் ஆ.நடராஜை அதிரடியாக நீக்க முக்கிய காரணம் தனியார் தொலைக்காட்சியே என்று அந்த தொலைக்காட்சியின் பெயருடன் சமூக ஊடகங்களில் வைரலாக தகவல் பரவியது.

டிவி நிகழ்ச்சியில் தொலைபேசி மூலம் தமிழக அரசை விமர்சித்து பேசியது மூத்த பத்திரிகையாளர் ’இந்து’ ஆர்.நடராஜன். தவறுதலாக காவல்துறை முன்னாள் இயக்குநர் ஆர்.நட்ராஜ் புகைப்படத்தை காட்டிவிட்டனர் என்று பரவிய தகவல், அதிமுக தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பதவி உள்பட பல்வேறு பதவிகளில் இருந்தவர் ஆ.நடராஜ்.நேர்மையான அதிகாரி என்று பொதுவாக கூறப்பட்டாலும் கூட அதிமுக அனுதாபி என்று அனைவராலும் பேசப்பட்டவர். கடந்த 2012ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இவர் தமிழக காவல்துறை முன்னாள் இயக்குநர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரலில் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் நடராஜ். இணைந்து கொண்டார்,

இந்நிலையில், நடராஜை அதிமுகவில் இருந்துஅதிரடியாக ஜெயலலிதா நீக்கி அறிவிப்பு வெளியிட்டார். அதில்…

கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும், முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை மாவட்டத்தை சேர்ந்த தமிழக காவல்துறை முன்னாள் இயக்குநர் ஆர்.நடராஜ் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் அ வருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் மேற்கண்ட நடவடிக்கை தவறானது என்பதை நிரூபிக்கும் வகையில், இன்று அவர் இன்னொரு அறிக்கை விடுத்தார். அதில், கடந்த 13ம் தேதி வெளியிட்ட அறிக்கையை ரத்து செய்தும், ஆர்.நட்ராஜ் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் தொடர்கிறார் என்றும் கூறியுள்ளார்.

பெண் உதவி ஆய்வாளருக்கு செக்ஸ் டார்ச்சர்: காவல் உதவி ஆணையர் மீது புகார் கொடுக்க வராதீங்க என்று உளவு!

திருச்சி:
திருச்சி மாநகர காவல் துறையில் பணியாற்றும் காவல் உதவி ஆணையாளர் ஒருவர் அவருக்கு கீழ் நிலை பதவியில் உதவி ஆய்வாளராக பணியாற்றும் 3க்கும் மேற்பட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பல மாதங்களாக ‘செக்ஸ்’ டார்ச்சர் கொடுத்து வந்ததாக புகார் எழுந்துவருகிறது.

பல மாதங்களாக பெண் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு ‘செக்ஸ்’ டார்ச்சர் கொடுத்து வரும் உதவி ஆணையாளரின் பெயர் சிறப்பாக பணியாற்றிய காவலருக்கான விருது பெறுவோர் பட்டியலிலும் உள்ளதாம். பாதிக்கப்பட்ட பெண் உதவி ஆய்வாளர் பெயரும் விருது பெறுவோர் பட்டியலில் பட்டியலில் உள்ளதாம். இந்த நிலையில் உதவி ஆணையாளர் நகரின் மையப் பகுதியில் பணியாற்றும் ஒரு பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு கைபேசி மூலம் கொடுத்த ‘செக்ஸ்’ டார்ச்சரை சமாளிக்க முடியாமல் அவரது கணவரிடம் கூறி கண்ணீர் விட்டாராம். மேலும் உதவி ஆணையாளர்ஆபாசமாகப் பேசியது முழுவதையும் பெண் காவல் உதவி ஆய்வாளர் உயர் அதிகாரிக்கு தெரியாமல் பதிவு செய்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த கணவர் அவரது மனைவிக்கு காவல் உதவி ஆணையாளர் கைபேசி மூலம் பேசி ‘செக்ஸ்’ டார்ச்சர் கொடுத்ததை சி.டி.யாக தயார் செய்து புகார் மனுவுடன் திருச்சி மாநகர காவல் ஆணையாளர் சஞ்சய் மாத்தூரிடம் இன்று 14-12-2015 காலை 11.00 மணிக்கு கொடுக்க இருப்பதாக தகவல் பரவியது. தகவல் அறிந்த ஊடகத் துறையினர் உடனடியாக காவல் ஆணையாளர் அலுவலகம் முன்பு குவிந்தனர். ஆனால் பெண் காவல் உதவி ஆய்வாளரின் கணவர் வரவில்லை. அவர் பிற்பகலில் புகார் கொடுக்க வருவதாகக் கூறப்பட்டது.

ஊடகத்துறையினர் காவல் ஆணையாளர் அலுவலகம் முன் குவிந்த நிலையில் காவல் ஆணையாளர் சஞ்சய் மாத்தூர் அலுவலகத்திற்கு வந்தார். அதன் பின்னர் சஞ்சய் மாத்தூரிடம் ‘செக்ஸ்’ டார்ச்சர் புகார் அளிக்க வருவதாக சொல்லப்பட்டவருக்கு, ஊடகத்தினர் அதிகம் இங்கே இருப்பதால் புகார் கொடுக்க நேரடியாக வரவேண்டாம் என யாரோ தகவல் சொன்னதாக கூறப்படுகிறது .

சென்னையில் காவல் உதவி ஆணையாளர் ஒருவர் பெண் ஏட்டுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அதே போன்றதொரு புகார் திருச்சியில் எழுந்திருப்பது தமிழக காவல்துறையில் நேர்மையுடன் பணியாற்றும் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமலரில் “தப்பிலித்தனமான” புளுகு செய்தி : தி.மு.க. தலைவர் கருணாநிதி

தி.மு.க. தலைவர் கருணாநிதி மந்திரிக்கப்பட்ட சிவப்பு கயிற்றை கட்டியிருப்பதாக வெளியிட்டுள்ள செய்தி குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி அளித்துள்ள பதில்கள் :-

கேள்வி :- கடவுள் மீது உங்களுக்கு நம்பிக்கை வந்து விட்டது என்றும், அதன் காரணமாக ஆந்திராவிலிருந்து யாரோ அனுப்பிய மந்திரிக்கப்பட்ட சிவப்பு கயிற்றை கையிலே கட்டியிருப் பதாகவும் ஒரு செய்தி “தினமலர்” நாளேட்டில் முதல் பக்கத்தில் வெளி வந்துள்ளதே?

கருணாநிதி:- “தினமலர்” புளுகுகளில் இதுவும் ஒன்று! 13-12-2015 அன்று “வேலூரில் உள்ள பிரபல மடாதிபதி அறிவுரையைக் கேட்டு, சிவப்பு நிற பட்டையுடன் கூடிய, கைக்கடிகாரத்தை கருணாநிதி அணிந்துள்ளார். இக் கடிகாரத்தை சிறப்பு பூஜை செய்து அணிந்துள்ளார்” என்று வெளியிட்டதோடு, யார் யாரையோ ஜோதிடர்களை யெல்லாம் சந்தித்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றெல்லாம் வெளியிட்டிருந்தது. அதே நாளேடு, இன்று அந்தச் செய்தியில் மாற்றம் செய்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி , தன் இடது கையில் ஒரு வாரமாக சிவப்பு பட்டையுடன் கூடிய கைக்கடிகாரத்துடன், ஆந்திர மாநில தர்காவில் இருந்து வந்த மந்திரிக்கப்பட்ட சிவப்பு கயிறையும் சேர்த்துக் கட்டி யிருப்பதாகவும், அதைப் பற்றி தி.மு.க. வட்டாரங்கள் கருத்து கூறியதாகவும் வெளியிட்டுள்ளது.

என் கையில் எந்தக் சிவப்பு கயிறும் கிடையாது. கையிலே உள்ள சிவப்பு நிறப் பட்டையுடன் கூடிய கைக்கடிகாரம் நான் ஓராண்டிற்கு மேலாக கையிலே அணிந்திருக்கும் அதே கடிகாரம் தான்! அதற்கும் எந்த முக்கியத்துவமும் கிடையாது.

யாரோ ஒரு சிலர் இதனை நம்பக் கூடும் என்பதற்காக “தினமலர்” இப்படிப்பட்ட செய்தியை வெளியிடுகிறதோ, என்னவோ? “தினமலர்” ஆசிரியர், கிருஷ்ணமூர்த்திக்குத் தெரியாமல் இப்படிப்பட்ட செய்தி வெளி வந்திருக்காது என நினைக்கிறேன். “நமது நிருபர்” என்ற பெயரால் இப்படிப்பட்ட “தப்பிலித்தனமாக” செய்திகளை வெளியிடுவோர் மீது இனியாவது “தினமலர்” ஆசிரியர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.’’ என கருணாநிதி பதில் அளித்துள்ளார்.

ஜெயலலிதா முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் : மக்கள் நலக்கூட்டணி

 
 
 
ஜெயலலிதா முதலமைச்சர் பதவியில் நீடிக்கும் தார்மீகத் தகுதியை இழந்துவிட்டதால் முதலமைச்சர் பதவியிலிருந்து அவர் உடனடியாக விலக வேண்டும் மக்கள் நலக்கூட்டணியினர் கூறியுள்ளனர்.
 
மக்கள் நலக்கூட்டணியினர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:-
 
தமிழ்நாட்டில் அரசு நிர்வாக இயந்திரம் ஒட்டுமொத்தமாக முடங்கிப் போனதால், மழை வெள்ளம் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. செம்பரம்பாக்கம் ஏரியை நவம்பர் 26 ஆம் தேதிக்குப் பின்னர் வெள்ள அபாயம் கருதி, படிப்படியாகத் திறந்து விடாமல், கனமழையும், நீர்வரத்தும் அதிகமான பின்னர், ஒன்றாம் தேதி திடீரென்று அதிக அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், தலைநகரமே மூழ்கி தத்தளிக்கும் விபரீதம் ஏற்பட்டது.
 
தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளச் சேதத்தின் மதிப்பு ரூ. ஒரு லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. மத்திய அரசு குறைந்த பட்சம் ரூ. 50 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்தி வருகிறோம். ஆனால் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரூ.10,560 கோடி மட்டும் தேவை என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறார். மழை வெள்ளச் சேதத்தை முறையாகக் கணக்கெடுத்து மதிப்பீடு செய்ய முடியாத அளவுக்கு அரசு நிர்வாகம் முடங்கி விட்டது.
 
இயற்கைப் பேரிடர் தாக்கியபோது, ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் செயல் இழந்து கிடப்பதால், முதலமைச்சர் பதவியில் நீடிக்கும் தார்மீகத் தகுதியை ஜெயலலிதா இழந்துவிட்டார். எனவே முதலமைச்சர் பதவியிலிருந்து அவர் உடனடியாக விலக வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
 
மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஒருங்கிணைப்பாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் கூட்டாக அறிக்கையில் வெளியிட்டனர்.

 

ஜெயலலிதா முதலமைச்சரா வரும்போதெல்லாம் ‘தண்ணி’ல தமிழகம் தத்தளிக்குது: விஜயகாந்த்

முதலமைச்சராக ஜெயலலிதா வரும்போதெல்லாம் தமிழகம் தண்ணீரில் தத்தளிக்கிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பண்டைய காலத்தில் பஞ்சம், பசி, பட்டினி கொடுமைகளால் உணவுப்பொருட்களை பறித்துக்கொள்ளும் நிலை இருந்ததுபோல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும்போது, ஒரு சிலரால் நிவாரண பொருட்கள் பறித்துக்கொள்ளப்பட்டதாக தன்னார்வலர்கள் கூறினார்கள். ஆனால் தற்போது வரும் செய்திகள் அதையும் மிஞ்சியுள்ளது. தமிழகம் முழுவதிலுமிருந்து தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் பலதரப்பட்ட உதவியாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்திட நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லும்போது காவல்துறையின் துணையோடு அதிமுகவினர் அடாவடி செய்து அதை பறித்துக் கொள்வதாகவும், அப்பகுதியில் உள்ள திருமண மண்டபம், பள்ளிக்கூடம் போன்ற இடங்களில் குவித்து வைத்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தையும், அதிமுக கட்சி சின்னத்தையும் நிவாரணப் பொருட்களின்மீது ஒட்டி, அமைச்சர், எம்.எல்.ஏ, எம்.பி போன்றவர்களை வைத்து, அதிமுக கட்சியின் சார்பில் உதவி செய்வதைப் போன்ற போலியான நாடகத்தை அரங்கேற்றுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகிறார்கள்.

images tamilnadu dmdk leader vijayakanth - 2026“எரிகின்ற வீட்டில், பிடுங்கிய வரை லாபம்” என்பதைப்போல, அதிமுகவினர் இவ்வளவு தரம்தாழ்ந்து நடந்துகொள்ளலாமா? ஆட்சி அதிகாரத்தை பதினைந்து ஆண்டுகாலம் அனுபவித்து, அதன் மூலம் வரைமுறையே இல்லாமல் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொண்ட அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும் அந்த பணத்தில் நிவாரண உதவிகளை வழங்கலாம் அல்லவா? அதிமுக நகர செயலாளரே நூறு கோடிக்கு சொத்து வைத்திருக்கிறார், அப்படி இருக்கையில் அம்மா ஆயிரம் கோடிக்கு சொத்து வைத்திருப்பதில் என்ன தவறு இருக்கிறதென, அதிமுக அமைச்சரே பொதுமேடையில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இவ்வளவு வசதி வாய்ப்புகளை கொண்டுள்ள அதிமுக அமைச்சர்கள்,

எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், மாவட்ட, ஒன்றிய, நகர செயலாளர்கள் பிற பதவிகளில் இருப்பவர்கள், தாங்கள் பதுக்கி வைத்துள்ள பணத்தை எடுத்து, நிவாரண உதவிகளுக்கு செலவு செய்யலாம் அல்லவா? அதை விடுத்து அடுத்தவர் சொத்துக்கு உரிமை கொண்டாடுவது கேவலமாக இல்லையா?

மேலும் தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வணிகர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் என அனைத்து தரப்பினரையும், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உருட்டல், மிரட்டல் மூலம் பேசி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை இலவசமாவே பெறுவதாகவும், ஆனால் பணம் கொடுத்து நிவாரணப் பொருட்களை வாங்கியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதாகவும் சம்பந்தபட்டவர்கள் புகார் கூறுகின்றனர்.

தமிழகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த விஷன் 2023ல் பல திட்டங்கள் போடப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார். ஆனால் தற்போது சென்னை மாநகரமே தண்ணீரில் தத்தளிக்கிறதே, விஷன் 2023 என்னவானது? தென்பெண்ணையாறு, பாலாறு நிரம்பி வழிந்து மழைநீர் வீணாக கடலில் கலந்தது. அதை தடுத்திட ஏதேனும் திட்டம் இருந்ததா? எந்த திட்டமும் போடாமல், போட்ட திட்டங்களையும் கிடப்பில் போட்டு, தமிழகத்தை நிர்மூலமாக்கியதுதான் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின் சாதனை.

அவர் ஆட்சி காலத்தில் 1992ல் கும்பகோணத்தில் நடைபெற்ற மகாமகத்தில் 48 பேர் பலியாகினர். 2004ல் சுனாமியால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். 2005ல் மழை வெள்ளத்தால் உயிரிழப்பும், பலத்த பொருட்சேதமும் ஏற்பட்டது. 2012ல் தானே புயலால் உயிரிழப்பும், கடும் பொருட்சேதமும் ஏற்பட்டது. முதலமைச்சராக ஜெயலலிதா வரும்போதெல்லாம் தமிழகம் தண்ணீரில் தத்தளிக்கிறது. அதனால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பதும், கடும் சேதம் ஏற்பட்டு மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதும், அதன்பின் நடைபெறும் தேர்தலில் ஜெயலலிதா ஆட்சியை இழப்பதும் வாடிக்கையாக நடந்துவருகிறது.

தற்போது 2015லும் கடந்த காலங்களில் ஏற்பட்டது போன்றே மழை வெள்ளத்தால், உயிரிழப்பும், பலத்த சேதமும், பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால், சுமார் 15 லட்சம் வீடுகள் பாதிக்கப்பட்டு, சேதமடைந்து, உடைமைகளையும், பொருளாதாரத்தையும் இழந்து அதிலிருந்து மீண்டுவர வழிதெரியாமல் பாதிக்கப்பட்ட மக்கள் தடுமாறுகின்றனர். விவசாய பயிர்கள் நீரில் மூழ்கியதால், விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தையே தொலைத்து நிற்கிறார்கள். வணிக நிறுவனங்களில் தண்ணீர் புகுந்து, பொருளாதாரம் ஸ்தம்பித்து, மீண்டும் தொழில் செய்ய இயலாமல் வணிகர்கள் செய்வதறியாது திகைத்துப்போய் உள்ளனர். ஆனால் சுமார் ஒருவார காலம் சென்னை முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டும், அதிமுக அரசின் டாஸ்மாக் மதுக்கடைகளில் மட்டும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மது வியாபாரம் கனஜோராக நடந்தேறிய கொடுமையும் நிகழ்ந்துள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு கூடுதல்நிதி வேண்டுமென, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசை கேட்கிறார். ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள், விவசாயிகள், வணிகர்கள் போன்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பிற்கும், சேதத்திற்கும் அவர்கள் யாரிடம் சென்று நிதி கேட்பார்கள். உண்மையான பாதிப்பு அப்பாவிகளான இவர்களுக்கு தானே தவிர வேறு யாருக்கும் இல்லை. கடந்த பதினைந்து ஆண்டுகளாக மழை வெள்ளத்தால் கடும் பாதிப்புகளை தமிழகம் அடைந்தாலும், ஒவ்வொரு முறையும் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியை இழந்தும், அதிமுக அரசு இதில் பாடம் கற்றுக்கொள்ளாமல், பாதிப்பையும், சேதத்தையும் நிரந்தரமாக தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையையும் இதுவரையிலும் எடுக்கவில்லை. இது தொடர்ந்தால் வரலாறு காணாத மழை வெள்ளம், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வரலாற்றையே அழித்துவிடும் என மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

–  என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

சென்னை உள்பட 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு

சென்னை:

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை – வெள்ளத்தால், நீண்ட விடுமுறைக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் திங்கள்கிழமை இன்று திறக்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகமாக நெடுநாட்களுக்குப் பின்னர் பள்ளிகளுக்கு வந்தனர்.

தீபாவளிப் பண்டிகை, தொடர் மழை காரணமாக கடந்த நவம்பர் 6-ஆம் தேதிக்குப் பிறகு பள்ளிகளுக்கு நீண்ட விடுமுறை விடப்பட்டது. இடையில் 3 நாள்கள் பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டன. வடகிழக்குப் பருவ மழையின் தீவிரத்தால் சென்னை, அதன் சுற்றுப்புறங்களில் மழை, வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடப்பட்ட விடுமுறை டிசம்பர் 13-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை இன்று முதல் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் வகையில் தூய்மைப்படுத்தும் பணிகள், ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை மாவட்டத்தில் 29 பள்ளிகளைத் தவிர மீதமுள்ள பள்ளிகள் அனைத்தும் திங்கள்கிழமை வழக்கம்போல் செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிவித்தார்.

மழை, வெள்ளம் காரணமாக சென்னை, அதன் சுற்றுப்புறங்களில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான புத்தகங்கள் வழங்கப்பட உள்ள நிலையில், சீருடைகள் விதிகள் தளர்த்தப்படுமா என மாணவர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.

விடுமுறை விடப்படும் 29 பள்ளிகள் விவரம்:

சென்னையில் 29 பள்ளிகளைத் தவிர மீதமுள்ள பள்ளிகள், கல்லூரிகள் திங்கள்கிழமை வழக்கம்போல் செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். இந்த 29 பள்ளிகளுக்கும் திங்கள்கிழமை மட்டும் ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிகளின் விவரம்:-

அரசுப் பள்ளிகள்:

அரசு மேல்நிலைப் பள்ளி, சிட்கோநகர், வில்லிவாக்கம், சென்னை.
அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை, சென்னை.

அரசு உதவிப்பெறும் பள்ளிகள்:

 ஒய்.எம்.சி.ஏ. காலேஜ் ஸ்போர்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி, நந்தனம், சென்னை.
 அரசு உதவிப்பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகள்: அம்பத்தூர் அரிமா சங்கம் நடுநிலைப் பள்ளி, இராஜாமன்னார் சாலை, சாலிகிராமம், சென்னை லயன்ஸ் கிளப் தொடக்கப் பள்ளி, கிண்டி, சென்னை.
 திருவள்ளுவர் குருகுலம் நடுநிலைப் பள்ளி, சைதாப்பேட்டை, சென்னை.
 புனித அந்தோணியார் தொடக்கப் பள்ளி, ஆயிரம் விளக்கு, சென்னை.
 சி.எஸ்.ஐ. தொடக்கப் பள்ளி, ஆயிரம் விளக்கு, சென்னை.
 சி.எஸ்.ஐ. நடுநிலைப் பள்ளி, சைதப்பேட்டை, சென்னை.
 புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப் பள்ளி, சின்னமலை, சென்னை.
 சென்னை பள்ளிகள்: சென்னை தொடக்கப் பள்ளி, அம்மையம்மாள் தெரு, புளியந்தோப்பு , சென்னை.
 சென்னை உயர்நிலைப் பள்ளி, அம்மையம்மாள் தெரு, புளியந்தோப்பு , சென்னை.
 சென்னை நடுநிலைப் பள்ளி, மாடல் பள்ளி, ஆயிரம் விளக்கு, சென்னை.
 சென்னை உயர்நிலைப் பள்ளி, 10, ஜோன்ஸ் சாலை, சைதாப்பேட்டை, சென்னை.
 சென்னை தொடக்கப் பள்ளி, பஜார் ரோடு, சைதாப்பேட்டை, சென்னை.
 சென்னை தொடக்கப் பள்ளி, 10, ஜோன்ஸ் சாலை, சைதாப்பேட்டை, சென்னை.
 சென்னை மேல்நிலைப் பள்ளி, சி.ஐ.டி. நகர், நந்தனம், சென்னை.
 சென்னை தொடக்கப் பள்ளி, சி.ஐ.டி. நகர், நந்தனம், சென்னை.
 சென்னை உருது தொடக்கப்பள்ளி, பஜார் ரோடு, சைதாப்பேட்டை, சென்னை.
 சென்னை நடுநிலைப் பள்ளி, திடீர் நகர், சைதாப்பேட்டை, சென்னை.
 சென்னை மேல்நிலைப் பள்ளி, புலியூர், வடபழனி, சென்னை.
 சென்னை தொடக்கப் பள்ளி, புலியூர், வடபழனி, சென்னை.
 சென்னை மேல்நிலைப் பள்ளி, மேற்கு மாம்பலம், சென்னை.
 சென்னை தொடக்கப் பள்ளி, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை.
 சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை, சென்னை.
 சென்னை தொடக்கப் பள்ளி, காமராஜர் நிழற்சாலை, அடையாறு, சென்னை.
 சென்னை உயர்நிலைப் பள்ளி, காமராஜர் நிழற்சாலை, அடையாறு, சென்னை.
 சென்னை மேல்நிலைப் பள்ளி, தரமணி, சென்னை.
 சென்னை தொடக்கப் பள்ளி, கோட்டூர்புரம், சென்னை.