Home Blog Page 5915

கேஜ்ரிவால் அலுவலகத்தில் சிபிஐ சோதனை இல்லை: அதிகாரி விளக்கம்

புது தில்லி:
தில்லி முதல்வர் அலுவலகத்தில் இன்று காலை சி.பி.ஐ திடீர் என சோதனை நடத்தியதாக செய்தி வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து சி.பி.ஐ. அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது முதல்வர் அலுவலகத்தில் சோதனையிடவில்லை. தில்லி தலைமை செயலகத்தின் மூன்றாம் மாடியில் உள்ள முதல்வரின் தலைமைச் செயலர் ராஜேந்தர் குமாரின் அலுவலகம் மற்றும் அவரது வீட்டிலேயே சிபிஐ சோதனை நடத்தப்பட்டிருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜேந்தர் குமார், பல்வேறு நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாக வந்த புகார்களை தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்றிருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் சிபிஐ விளக்கத்தை ஏற்க மறுத்து, கேஜ்ரிவால் இதுகுறித்து கூறும் போது சி.பி.ஐ பொய் சொல்லுகிறது. எனது அலுவலகத்தில்தான் சிபிஐ சோதனை நடத்துகிறது. சில கோப்புகளை எடுத்து பார்த்துள்ளனர். என்னிடம் எந்த கோப்பு வேண்டும் என்று கேட்டிருந்தால் நானே எடுத்து கொடுத்திருப்பேன் சி.பி.ஐ மூலம் பிரதமர் மோடி, தன்னை அரசியல் ரீதியாக பழிவாங்க நினைக்கிறார். இது அவருடைய கோழைத்தனத்தை காட்டுவதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

சிபிஐ சோதனை விவகாரத்தில் பிரதமர் தலையீடு இல்லை: வெங்கய்ய நாயுடு

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அலுவலகத்தில் சிபிஐ சோதனை என்று பரவிய தகவலுக்கு பதில் அளித்த வெங்கய்ய நாயுடு, தில்லி தலைமைச் செயலகத்தில் நடக்கும் சிபிஐ சோதனைக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “சிபிஐ தன்னிச்சையாக செயல்படும் அமைப்பு. அதன் செயல்பாடுகளில் அரசின் தலையீடு இல்லை. இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் மத்திய அரசையும் எப்படி ஒருவர் விமர்சிக்க முடியும்?” என்றார்.

சிபிஐ சோதனை: மோடியின் கோழைத்தனம் என்கிறார் கோஜ்ரிவால்

புது தில்லி:

தன் அலுவலகத்தில் சிபிஐ சோதனை மேற்கொண்டதாக தெரிவித்த தில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், இது ‘கோழைத்தனமான செயல்’ என்று பிரதமர் மோடியை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் அதிகம் தகவல்களை பதிவு செய்தார் கேஜ்ரிவால்.

மத்திய அரசுக்கும் தில்லி அரசுக்கும் இடையே தொடர்ச்சியாக மோதல் போக்கு வலுத்து வரும் நிலையில், அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஆவேசமாக கருத்துகளைப் பதிந்தார்.

முதலில் “என் அலுவலகத்தில் சிபிஐ சோதனை மேற்கொண்டுள்ளது” என்று அவர் ட்விட்டரில் தெரிவித்ததுடன், “மோடியால் என்னை அரசியல் ரீதியில் எதிர்கொள்ள முடியாத நிலையில், அவர் இந்தக் கோழைத்தனத்தைக் காட்டியுள்ளார். மோடி ஒரு கோழை; மனநலம் பாதித்தவர்” என்று கடுமையாக சாடினார்.

 

புரோஹிதம் செய்து வந்த 500 வேட்டிகளை வெள்ள நிவாரணத்துக்கு அளித்த அர்ச்சகர்

தேனி:
தாம் இது வரை புரோஹிதம் மூலம் சேகரித்து வைத்திருந்த சுமார் 500 வேட்டிகளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கினார் அர்ச்சகர் ஒருவர்.

தேனி மாவட்டம் குச்சனூர் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோவில் அர்ச்சகரான சீனிவாச கண்ணன், சென்ற வாரம் சுமார் 300க்கும் மேற்பட்ட வேஷ்டிகளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கினார்.
தொடர்ந்து, தாம் புரோஹிதம் மூலம் சேர்த்து வைத்திருந்த துண்டுகள், ரவிக்கை, காடா துணி உள்ளிட்ட மேலும் சிலவற்றையும், 200 வேஷ்டிகளையும் சேகரித்து, செவ்வாய்க்கிழமை இன்று மீண்டும் சேவாபாரதி தொண்டர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தேனி ஜில்லா பிரசாரக் முருகசேனிடம் வழங்கினார்.
ஜோதிடரும் அர்ச்சகருமான மேற்படி சீனிவாச கண்ணன் (9042265732) இது குறித்து நம்மிடம் கூறியபோது, வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் பல ஏழைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழைகள் படும் துயரம் ஏழைகளான நமக்குத்தான் தெரியும். அதனால், இதுவரை நான் சேர்த்து வைத்திருந்தவை, மற்றும் நண்பர்கள் இல்லங்களில் இருந்து பெற்று அவற்றை மொத்தமாக வெள்ள நிவாரணப் பணிகளை சிறப்பாக செய்து வரும் சேவாபாரதி தொண்டர்களிடம் வழங்கினேன் என்று கூறினார்.

ஜெர்மனியில் பேஸ்புக் அலுவலகம் மீது தாக்குதல்: ‘டிஸ்லைக்’ என எழுதிய மர்ம நபர்கள்

ஜெர்மனியில் உள்ள பேஸ்புக் அலுவலகத்தை மர்ம கும்பல் ஒன்று அடித்து நொறுக்கியது. மேலும், அலுவலக சுவரில் ‘பேஸ்புக் டிஸ்லைக்’ என எழுதிவிட்டுச் சென்றுள்ளது.

ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் பேஸ்புக் அலுவலகம் செயல்படுகிறது. இங்கு ஞாயிறு அன்று இரவு கறுப்பு உடையணிந்த சுமார் 20 பேர் நுழைந்து அலுவலக ஜன்னல்களை சூறையாடியதாகக் கூறப்படுகிறது. மேலும், பேஸ்புக் பேனர்களை மறைக்கும்படியாக கருப்பு மை ஊற்றியும் சுவரில் ‘ஃபேஸ்புக் டிஸ்லைக்’ என்று எழுதியதாக அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

அலுவலகம் மீதான இந்தத் தாக்குதலில் பணியாளர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

அமெரிக்காவில் முஸ்லிம் குடியேற்றத்துக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்ற குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டோனால்டு டிரம்ப்பின் பேச்சைத் தொடர்ந்து, மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் அண்மையில் தெரிவித்திருந்தார்.

‘நிர்பயா’ குற்றவாளி சிறுவனை விடுவிப்பதற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புது தில்லி:
நிர்பயா வழக்கில் குற்றவாளியான சிறுவனை விடுவிப்பதற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தில்லி உயர்நீதிமன்றத்தில் பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணையில் மத்திய அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், நிர்பயா வழக்கில் குற்றவாளியான சிறுவனின் விடுதலை தொடர்பாக எந்த உத்தரவும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், விடுதலைக்குப் பிறகு சிறுவனை எப்படி கண்காணிப்பது என்பது குறித்து மத்திய அரசிடம் திட்டம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை மற்றும் சட்ட அமைச்சகங்கள் தாக்கல் செய்த இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது.

நிர்பயா வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி சிறுவனின் தண்டனைக் காலம் வரும் 16-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

உதவி! உதவி!

அம்மா, அம்மா, நான் கிளம்பிட்டேன். டிபன் ரெடியா? என்று கேட்டுக்கொண்டே அம்மாவை நோக்கி போனான் ஜார்ஜ் ஸ்டீபன். 

இதோ! ரெடியாகிவிட்டது. சாப்பிட்டு கிளம்புப்பா என்று அம்மா சொன்னார்கள்.
ஜார்ஜ் ஸ்டீபன் அவசர அவசரமாக சாப்பிட்டான்.
அப்பொழுது அம்மா ஜார்ஜிடம், இந்த வேலையாவது உனக்கு கிடைக்கும்படி நடந்துக்கோ. உதவி செய்வது நல்லதுதான். அதற்காக உன் வாழ்க்கையை இழந்துவிடாதே என்று சொன்னார்கள்.
அம்மா, அப்படி சொல்வதிலும் ஒரு காரணம் உண்டு. ஏனெனில் அவன் மிகவும் இரக்ககுணம் நிறைந்தவன். மற்றவர்களுக்கு உதவுவதில் முன் நிற்பான். இதற்குமுன் இரண்டு தரம் அவனுக்கு கிடைக்க இருந்த வேலையை மற்றவர்களுக்கு உதவ போக அந்த வேலையை இழந்துவிட்டான். அதனால் தான் அம்மா அப்படி சொன்னார்கள்.

ஜார்ஜ் ஸ்டீபன், ராமதூதன் ஆஞ்சநேயரின் பெயரில் மிகவும் நம்பிக்கையுள்ளவன். ஏனெனின் ஆஞ்சநேயர், தன்னை வருத்திக் கொண்டு, மற்றவர்களுக்கு உதவி செய்து, ராம தாசனாக இருப்பவர். ராமனின் பக்தர்களைக் காக்க எந்த வித சிரமத்தையும் அவர் தன்னில் ஏற்பார். எனவே ஆஞ்சநேயர் தனக்கு நிச்சயம் ஒரு நல்ல வேலையை தருவார் என்று ஜார்ஜ் மிகவும் நம்பிக்கையோடு இருந்தான்.

இரண்டு தரம் அவனுக்கு கிடைக்க இருந்த வேலை பறிபோனதை நினைத்து சிறிது கலங்கினாலும் ஆஞ்சநேயர் தன்னை கைவிட மாட்டார் என்று உறுதியாக எண்ணினான். அன்று அவன் ஸ்தோத்திரம் சொன்ன பொழுதுகூட, ஒருவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன். சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைகளுக்கு ஒப்பாயிருக்கிறான். சோதனையை சகிக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் உத்தமன் என்று விளங்கியபின் கர்த்தர் அவரிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைத் தருவார் (யாக்கோபு 1: 6,12) என்ற வசனத்தை வாசித்தான். அப்போது அவனுக்கு ஆஞ்சநேயர் நினைவுதான் வந்தது. கடலைத் தாண்டி, எவ்வித சோதனையைக் கடந்து அவர் உதவினார். அதனால் ஜார்ஜ்ஜுக்கு இன்னும் நம்பிக்கை அதிகமானது. நம்பிக்கையோடு அம்மாவிடம் விடைபெற்று கிளம்பி சென்றான்.

10 மணிக்கு நேர்முகத்தேர்வு ஆரம்பிக்கும். அதற்குள் அவன் அங்கு செல்ல வேண்டும். அதனால் ஒரு ஆட்டோ எடுத்துக்கொண்டு போனான். போகும் வழியில் ஒரு கார் பிரேக்டவுன் ஆகி நின்றது. எல்லோரும் அவரவர் வேலையின் அவசரத்தின் காரணமாக போய்கொண்டு இருந்தார்கள். ஆனால் அவனால் அப்படி போகமுடிய வில்லை. ஏனெனில் அவன் ஆஞ்சநேயரின் செய்கைக்கு உட்பட்டு நடக்கணும் என்று நினைப்பவன் ஆயிற்றே. அருகில் சென்று என்ன ஆயிற்று என்று கேட்டான். காரில் இருந்தவர் என்னவென்று தெரியல? திடீர் என்று நின்று விட்டது என்று சொன்னார். ஜார்ஜுக்கு கார் சம்பந்தமாக சில வேலை தெரியும் என்பதால் அதை ஆராய்ந்து பார்த்து சரிசெய்து காரை இயக்கினான். உடனே அது இயங்கியது. அவருக்கு ரொம்ப சந்தோஷம். நன்றி தம்பி என்று சொன்னார். பரவாயில்லை சார். என்னால் முடிந்த ஒரு சின்ன வேலை என்று சொல்லிவிட்டு கடிகாரத்தைப் பார்த்தான். இன்னும் அரைமணி நேரம் மாத்திரம் இருந்தது. அவன் அவசரமாக கிளம்பி சென்றான். அவனால் சரியான நேரத்துக்கு செல்ல இயல வில்லை. 10 நிமிஷம் தாமதம் ஆனதால் அவனை உள்ளே விடமுடியாது என்று சொல்லி விட்டார்கள்.

அம்மா கேட்டால் என்ன சொல்வது என்று யோசித்துக்கொண்டே ஆஞ்சநேயரே உமது சித்தம் நடக்கட்டும் என்று வேண்டிய ஜார்ஜ் சிறிது சோர்வுடன் வெளியே வந்தான். பின்னால் ஒரு குரல் கேட்டு திரும்பிப் பார்த்தான். உங்களை முதலாளி கூப்பிடுகிறார் என்று சொல்லி அழைத்துப் போனார்கள். உள்ளே போன ஜார்ஜுக்கு ஒரே ஆச்சரியம்!! ஏனெனில் அவன் கார் பழுதுபார்த்துக் கொடுத்த அந்த மனிதர் அங்கே இருந்தார். அவர் அவனைப் பாராட்டி, எல்லோரும் அவரவர் வழியில் தங்கள் வேலையே முக்கியம் என்று போனபொழுது நீ நின்று எனக்கு உதவி செய்தாயே. அதனால் இன்று முதல் இந்த கம்பெனி முழு பொறுப்பையும் உன்னிடம் கொடுக்கிறேன். நீதான் இனி இந்த கம்பெனியை நிர்வாகிக்க வேண்டும், என்று சொன்னார்.

மற்றவர்களைப்போல் ஜார்ஜும் தன் வேலையே முக்கியம் என்று போயிருந்தால் அவனுக்கு இந்த கம்பெனியில் ஒரு சாதாரண வேலையே கிடைத்திருக்கும். ஜார்ஜின் பொறுமையும், இரக்ககுணமும் இன்று அவனை ஒரு பெரிய பதவியில் அமர்த்தி உள்ளது.

நாமும் துன்பங்களின் மத்தியில் செல்லும் பொழுது பொறுமையோடு, நம்பிக்கையோடு இருப்போமானால் ஆஞ்சநேயர் நாம் விரும்புவதற்கும், நினைப்பதற்கும், வேண்டிக்கொள்வதற்கும் அதிகமாகவே செய்வார். ஹே ராம் ஜெய் ராம் சீதா ராம்.
deivatamilteam@gmail.com. Visit us @ www.deivatamil.com

ரூபாய் நோட்டுகளில் கிறுக்கினாலும் செல்லும்; ஆனா கிறுக்காதீங்க

மும்பை:

ரூபாய் நோட்டுகளில் கிறுக்கியோ எழுதியோ இருந்தால் ஜன. 1 முதல் செல்லாது என சமூக ஊடகங்களில் அதிகம் வெளியாகி பொதுமக்களை ஒரு தகவல் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. இதனால், இப்போதிருந்தே கிறுக்கல் நோட்டுகளை பொதுமக்கள் வாங்குவதைத் தவிர்த்து வருகின்றனர். இதனால் பலருக்கு சிக்கல் எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்தத் தகவல்களை ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் மறுத்துள்ளார். கிறுக்கல் ரூபாய் நோட்டுகள் செல்லும். அவை பணப் பரிவர்த்தனையில் இருக்கும். எந்தப் பிரச்னையும் இல்லை. இருந்தாலும் ரூபாய் நோட்டுகளில் எழுதுவதைத் தவிர்த்திடுங்கள். அவற்றின் பயன்பாட்டு காலம் குறைவதுடன் நோட்டுகள் சேதமடைகின்றன என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராகுல் காந்தி இன்னும் சின்னப் புள்ளதான்! : கிண்டலடிக்கிறார் கேஜ்ரிவால்

புது தில்லி:
ராகுல் காந்தி இன்னமும் சின்னப் புள்ளையாகத்தான் இருக்கிறார் என்று கிண்டலடித்துள்ளார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.

மேற்கு தில்லியில் உள்ள சக்கூர் பஸ்தி பகுதியில் நேற்று முன்தினம் சுமார் 500 குடிசை வீடுகள் ரயில்வே துறையால் இடித்துத் தள்ளப்பட்டது. நேற்று காலை அந்த இடத்துக்கு கட்சி நிர்வாகிகளுடன் சென்ற ராகுல் காந்தி குடிசைகளை இழந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் பேசிய போது,

‘‘மோடியின் மத்திய அரசும், கேஜ்ரிவாலின் மாநில அரசும்தான் இதற்குக் காரணம். குடிசைவாசிகளின் பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்.’’ என்றார்.

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த தில்லி முதல்வர் கேஜ்ரிவால், ‘‘ராகுல்காந்தி இன்னும் சிறு குழந்தையாகத்தான் இருக்கிறார். அவருடைய கட்சியினர், முதலில் அவருக்கு ரயில்வே துறை மத்திய அரசின் கீழ் உள்ளது; தில்லி மாநில அரசின் கீழ் இல்லை என்பதை எடுத்துச் சொல்லி விளக்க வேண்டும்’’ என்று கிண்டலடித்தார்.

டாஸ்மாக் விபரீதம்: ‘தண்ணி’ அடிக்க பணம் தர மறுத்த தாயைக் கொன்ற மகன்

தருமபுரி:
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் தண்ணி அடிப்பதற்கு பணம் கொடுக்க தாய் மறுத்ததால் அவரைக் கொன்று, காதில் இருந்த தோடை திருடிச் சென்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த சீகலஹள்ளியைச் சேர்ந்த வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளி சின்னம்மாள்(85). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரது காது அறுக்கப்பட்டு, காதில் கிடந்த தோடு மர்ம நபர்களால் திருடப் பட்டிருந்தது.
இந்நிலையில், இது குறித்து விசாரித்து வந்த போலீஸாருக்கு, சின்னம்மாளின் மகன் ரங்கசாமி மீது சந்தேகம் ஏற்பட்டது. சந்தேகத்தின் பேரில், காரிமங்கலம் போலீசார் அவரைப் பிடித்து விசாரித்தனர். இதில், தனக்கு குடிக்க பணம் தர மறுத்ததால், தனது தாய் சின்னம்மாள் தூங்கிக் கொண்டிருந்த போது அவரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, அவரது காதை அறுத்து, அரை பவுன் தோடை திருடிச் சென்றதாகக் கூறியுள்ளார். இதை அடுத்து ரங்கசாமியை போலீசார் கைது செய்தனர்.