Home Blog Page 5917

முடங்கிய அதிமுக அரசு நிர்வாகம்..!! : பகல் கனவில் திமுக..!!

 
 
தமிழகத்தில் கொட்டிய பேய் மழையின்போது, அதிமுக அரசு சரியாக செயல்படவில்லை. தமிழக அரசு நிர்வாகம்முடங்கி போய்விட்டது என்பதே பொதுவாக தமிழக மக்களால் சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டு.
 
இந்த குற்றச்சாட்டில் எந்த ஒரு மாறுபட்ட கருத்தும் இல்லை.கனமழை, வெள்ள நேரத்தில் அதிமுக அரசின் நிர்வாகம் உண்மையாகவே சரியாக இயங்கவில்லை.நிர்வாகம் முழுமையாக முடங்கி கிடந்தது.
 
இதனால் மக்கள் பல துன்பங்கள், துயரங்களுக்கு ஆளானார்கள்.இதன் காரணமாக தீபாவளிக்கு முன்பு மக்களிடையே அதிமுகவிற்கு இருந்த செல்வாக்கு, கனமழை, வெள்ளத்திற்கு பிறகு கிடுகிடுவென சரிந்தது.
 
அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது.இதனால், சுறுசுறுப்பு அடைந்துள்ள திமுக, மழை, வெள்ளத்தில் தற்போது அரசியல் நடத்தி வருகிறது என்பது மிகத் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
 
கனமழைக்கு அதிமுகவே காரணம் என்ற ரீதியில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.மழை, வெள்ளத்தை பயன்படுத்தி அதிமுக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது திமுக. இதனால், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று எப்படியும் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி விடுவோம் என திமுக தரப்பு பகல் கனவு கண்டு வருகிறது.ஆனால், ஒன்றை மட்டும் திமுக தலைமை மறந்துவிட்டது என்றே கூறலாம்.
 
தமிழக மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், அதிமுக மீது எந்த அளவுக்கு கோபத்துடன் இருக்கிறார்களோ, அதே அளவுக்கு திமுக மீதும் வெறுப்புடன் இருக்கிறார்கள்.பொதுமக்களிடையே கலந்து பேசும்போது இது மிக நன்றாக தெரிய வருகிறது.
அதிமுக, திமுக இரண்டும் தேவையில்லை என்ற நிலைக்கு தமிழக மக்கள் தற்போது வந்துவிட்டார்கள்.
 
இதன் காரணமாகதான், இதுவரை திமுகவுடன் கூட்டணி அமைக்க தயாராக இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், திடீரென தற்போது தமது தொண்டர்கள் திமுக வேண்டாம் என கூறுவதாக தெரிவித்துள்ளார்.மக்கள் நலக் கூட்டணியை பாராட்டியுள்ளார்.
இதன்மூலம் மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியிலும் அவர் இறங்கி விட்டார் என்றே கூறலாம்.ஆனால், அதிமுக, திமுகவை வீழ்த்த வலுவான அணி இருந்தால்தான் முடியும்.
 
மக்கள் நலக்கூட்டணி இனி எப்படி செயல்பட போகிறது. அந்த கூட்டணியில் தேமுதிக இணைந்து புதிய புரட்சியை ஏற்படுத்துமா.?
அதற்கு மக்களிடையே வரவேற்பு இருக்குமா.?
 
இவையெல்லாம், அதிமுக, திமுக கட்சிகளின் அடுத்த நகர்த்தலை வைத்துதான் தெரியவரும்.
 
ஆனால் ஒன்று மட்டும் உறுதி, மழை, வெள்ளத்தை மட்டும் வைத்துக் கொண்டு அதிமுகவை வீழ்த்திவிடலாம் என்ற திமுகவின் பகல் கனவு நிச்சயம் நிறைவேறாது.
 
அதிமுக அளவுக்கு திமுகவையும் தமிழக மக்கள் புறக்கணிக்க தயாராக இருக்கிறார்கள் என்பதே அதற்கு காரணம்.
 
– எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் –
    பத்திரிகையாளர்.

 

மாணவர்களை பூட்ஸ் காலால் மிதித்து கொடூரமாக தாக்கி அவமானப்படுத்திய பள்ளியின் தாளாளர்

 
திருச்சி மாவட்டம் உறையூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் தாளாளர் அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களை தொடர்ந்து வெகு நாட்களாக மிகக் கொடூரமாக தாக்கி அவமானப்படுத்தி கொடுமைப்படுத்தி வருவதாக வாட்ஸ் ஆப் பதிவின்மூலம் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
தாளாளர் மாணவர்களை கொடுமைப்படுத்துவதை காணொளியாக பதிவிட்டு பள்ளியில் பயிலும் மாணவர்களின் உயிரைக் காப்பாற்ற கோரிக்கை விடுத்து வாட்ஸ் ஆப்பில் அந்த
மாணவர்கள் வைரலாக பரவ விட்டுள்ளனர்.
 
அந்த பள்ளியின் தாளாளர் இரு மாணவர்களை ஒருவருக்கு ஒருவர் மற்றொருவரின் இரு காதுகளைப் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போடச் சொல்லியும், மாணவர்களின் தலை முடியை இழுத்தும், அவரது பூட்ஸ் காலால் மிதித்தும் மிகக் கொடூரமாக தாக்கியுள்ளார்.
 
மேலும் அந்த இரு மாணவர்களுடன் பயிலும் சக மாணவர்களை அழைத்து அவர்கள் இருவர் தோள்மீதும் ஏறி நிற்கச் சொல்லி கட்டளையிடுவதும் காணொளி பதிவின் மூலம் அறியமுடிகிறது.
 
மாணவர்களை மிகக் கொடூரமாக தாக்கி, கொடுமைப்படுத்தி, அவமானப்படுத்திய அந்த பள்ளியின் தாளாளர்மீது மாவட்ட கல்வி அதிகாரி சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு .
 
வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவிவரும் அந்த காணொளி இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ரொம்ப பிஸி… பீப்…பீப்… பாடல் கேட்க ஆர்வமும் இல்லை.! நேரமும் இல்லை.! : குஷ்பூ

பெண்களை மிக கேவலமாக சித்தரித்துபீப்…பீப்… பாடல். இயற்றி உள்ளதாக கோவை மாவட்ட ஜனநாயக சங்கத்தினர் அளித்த புகாரின் பேரில் நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத 3 பிரிவுகளின் கீழ் சட்ட ஆலோசனைகள் பெற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் சிம்புவின் நெருங்கிய வட்டத்தில் உள்ள குஷ்பூவிடம் பீப்…பீப்…பாடல் பற்றி கருத்தை சமூக ஊடகங்கள் வாயிலாக கேட்டு வருகிறார்கள்.

பீப்…பீப்…பாடல் குறித்து குஷ்பூவின் ட்விட்டர் பக்கதில்
நான் வெள்ள நிவாரணப் பணிகளில் இருக்கேன். அந்தப் பாடல் கேட்பதற்கெல்லாம் எனக்கு ஆர்வமும் இல்லை நேரமும் இல்லை. இதுக்கெல்லாம் நான் நேரத்தை வீணடிக்க முடியாது என அவரது கருத்தை பதிவு செய்துள்ளார்.

பாவூர்சத்திரம் அருகே சண்டைக்கோழி திருடிய மூவர் கைது

பாவூர்சத்திரம் அருகே கோழிப்பண்ணையில் கோழிகளைத் திருடிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பாவூர்சத்திரம் அருகேயுள்ள வெள்ளைப்பனையேறிப்பட்டியைச் சேர்ந்தவர் கராத்தே ராஜேந்திரன்(35). தோரணமலை அருகேயுள்ள கானாவூரில் உள்ள இவரது கோழிப்பண்ணையில் சண்டைக்கோழி உள்பட பல்வேறு தரப்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார்.
சனிக்கிழமை இரவு இவரது கோழிப்பண்ணையில் 32 கோழிகள் திருட்டுப்போனது. இதுகுறித்து கராத்தே ராஜேந்திரன் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
 இதுகுறித்து பாவூர்சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் பாவூர்சத்திரம் பழைய சந்தையில் பலதரப் பட்ட கோழிகளை 4 பேர் விற்பனைக்கு கொண்டு வந்திருப்பது குறித்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு போலீசார் விரைந்து சென்றனர்.
 போலீசைப்  பார்த்ததும் ஓட முற்பட்ட 4 பேரில் 3 பேரைப் போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கோழிப்பண்ணை அமைந்துள்ள கானாவூரைச் சேர்ந்த அந்தோணி(25), குத்தாலிங்கம்(30), மாரியப்பன்(31) என்பது தெரியவந்தது.
 இதையடுத்து அவர்களைக் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 32 கோழிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய செந்தில்க் குமார் என்பவரைத் தேடி வருகின்றனர்.

தமிழக அமைச்சர்கள் தான் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர் : மு.க.ஸ்டாலின்

 
தமிழக அமைச்சர்கள் தமிழக அமைச்சர்கள் தான் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர் ஆனால் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
 
கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை இன்று ஸ்டாலின் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
 
மழை வெள்ளத்தால் சென்னை, கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணியில் மத்திய அரசுடன் மாநில அரசு ஒருங்கிணைந்து செயல்படவில்லை. இதனை நீதிமன்றம், ஊடகங்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் மட்டுமின்றி அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களும் தெரிவித்துள்ளனர்.
 
வெள்ள நிவாரணத்தில் அரசின் செயல்பாடு குறித்து வெளிப்படியாக தனது தருத்தை பதிவு செய்த முன்னாள் காவல்துறை அதிகாரி நட்ராஜ் அதிமுகவை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.
 
அந்த நிலையில் தான் இன்று நிவாரண பணிகள் நடைபெறுகிறது. கனமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காதது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கருணாநிதி ஆளுனரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
 
அப்போது தமிழக அரசாங்கம் மக்களுக்கு செய்துள்ள அக்கிரமங்களை எடுத்து சொல்லி, நடந்தது இயற்கை பேரிடரில்ல, செயற்கை பேரிடர் என கூறியுள்ளார்.
 
மேலும் மழை வெள்ள பாதிப்பு குறித்து பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தும், கேள்விகள் எழுப்பிய பிறகும் கூட ஜெயலலிதா இதுவரை ஒருமுறை கூட ஊடகங்கத்தினரை சந்தித்து விளக்கம் அளிக்கவில்லை. ஒருவேளை சட்டமன்றத்தை கூட்டி மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிப்பார் என எதிர்பார்த்தோம். ஆனால் அதையும் செய்திட முன்வரவில்லை. என்று மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

 

தமிழகம் தண்ணீரில் தத்தளிக்கிறது தேமுதிக தலைவர் விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த தனதுமுக நூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்

முதலமைச்சராக ஜெயலலிதா வரும்போதெல்லாம்
தமிழகம் தண்ணீரில் தத்தளிக்கிறது!

பண்டைய காலத்தில் பஞ்சம், பசி, பட்டினி கொடுமைகளால் உணவுப்பொருட்களை பறித்துக்கொள்ளும் நிலை இருந்ததுபோல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும்போது, ஒரு சிலரால் நிவாரண பொருட்கள் பறித்துக்கொள்ளப்பட்டதாக தன்னார்வலர்கள் கூறினார்கள். ஆனால் தற்போது வரும் செய்திகள் அதையும் மிஞ்சியுள்ளது. தமிழகம் முழுவதிலுமிருந்து தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் பலதரப்பட்ட உதவியாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்திட நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லும்போது காவல்துறையின் துணையோடு அதிமுகவினர் அடாவடி செய்து அதை பறித்துக் கொள்வதாகவும், அப்பகுதியில் உள்ள திருமண மண்டபம், பள்ளிக்கூடம் போன்ற இடங்களில் குவித்து வைத்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தையும், அதிமுக கட்சி சின்னத்தையும் நிவாரணப் பொருட்களின்மீது ஒட்டி, அமைச்சர், எம்.எல்.ஏ, எம்.பி போன்றவர்களை வைத்து, அதிமுக கட்சியின் சார்பில் உதவி செய்வதைப் போன்ற போலியான நாடகத்தை அரங்கேற்றுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகிறார்கள்.

“எரிகின்ற வீட்டில், பிடுங்கிய வரை லாபம்” என்பதைப்போல, அதிமுகவினர் இவ்வளவு தரம்தாழ்ந்து நடந்துகொள்ளலாமா? ஆட்சி அதிகாரத்தை பதினைந்து ஆண்டுகாலம் அனுபவித்து, அதன் மூலம் வரைமுறையே இல்லாமல் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொண்ட அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும் அந்த பணத்தில் நிவாரண உதவிகளை வழங்கலாம் அல்லவா? அதிமுக நகர செயலாளரே நூறு கோடிக்கு சொத்து வைத்திருக்கிறார், அப்படி இருக்கையில் அம்மா ஆயிரம் கோடிக்கு சொத்து வைத்திருப்பதில் என்ன தவறு இருக்கிறதென, அதிமுக அமைச்சரே பொதுமேடையில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இவ்வளவு வசதி வாய்ப்புகளை கொண்டுள்ள அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், மாவட்ட, ஒன்றிய, நகர செயலாளர்கள் பிற பதவிகளில் இருப்பவர்கள், தாங்கள் பதுக்கி வைத்துள்ள பணத்தை எடுத்து, நிவாரண உதவிகளுக்கு செலவு செய்யலாம் அல்லவா? அதை விடுத்து அடுத்தவர் சொத்துக்கு உரிமை கொண்டாடுவது கேவலமாக இல்லையா?
மேலும் தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வணிகர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் என அனைத்து தரப்பினரையும், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உருட்டல், மிரட்டல் மூலம் பேசி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை இலவசமாவே பெறுவதாகவும், ஆனால் பணம் கொடுத்து நிவாரணப் பொருட்களை வாங்கியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதாகவும் சம்பந்தபட்டவர்கள் புகார் கூறுகின்றனர்.

தமிழகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த விஷன் 2023ல் பல திட்டங்கள் போடப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார். ஆனால் தற்போது சென்னை மாநகரமே தண்ணீரில் தத்தளிக்கிறதே, விஷன் 2023 என்னவானது? தென்பெண்ணையாறு, பாலாறு நிரம்பி வழிந்து மழைநீர் வீணாக கடலில் கலந்தது. அதை தடுத்திட ஏதேனும் திட்டம் இருந்ததா? எந்த திட்டமும் போடாமல், போட்ட திட்டங்களையும் கிடப்பில் போட்டு, தமிழகத்தை நிர்மூலமாக்கியதுதான் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின் சாதனை. அவர் ஆட்சி காலத்தில் 1992ல் கும்பகோணத்தில் நடைபெற்ற மகாமகத்தில் 48 பேர் பலியாகினர். 2004ல் சுனாமியால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். 2005ல் மழை வெள்ளத்தால் உயிரிழப்பும், பலத்த பொருட்சேதமும் ஏற்பட்டது. 2012ல் தானே புயலால் உயிரிழப்பும், கடும் பொருட்சேதமும் ஏற்பட்டது. முதலமைச்சராக ஜெயலலிதா வரும்போதெல்லாம் தமிழகம் தண்ணீரில் தத்தளிக்கிறது. அதனால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பதும், கடும் சேதம் ஏற்பட்டு மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதும், அதன்பின் நடைபெறும் தேர்தலில் ஜெயலலிதா ஆட்சியை இழப்பதும் வாடிக்கையாக நடந்துவருகிறது.
தற்போது 2015லும் கடந்த காலங்களில் ஏற்பட்டது போன்றே மழை வெள்ளத்தால், உயிரிழப்பும், பலத்த சேதமும், பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால், சுமார் 15 லட்சம் வீடுகள் பாதிக்கப்பட்டு, சேதமடைந்து, உடைமைகளையும், பொருளாதாரத்தையும் இழந்து அதிலிருந்து மீண்டுவர வழிதெரியாமல் பாதிக்கப்பட்ட மக்கள் தடுமாறுகின்றனர். விவசாய பயிர்கள் நீரில் மூழ்கியதால், விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தையே தொலைத்து நிற்கிறார்கள். வணிக நிறுவனங்களில் தண்ணீர் புகுந்து, பொருளாதாரம் ஸ்தம்பித்து, மீண்டும் தொழில் செய்ய இயலாமல் வணிகர்கள் செய்வதறியாது திகைத்துப்போய் உள்ளனர். ஆனால் சுமார் ஒருவார காலம் சென்னை முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டும், அதிமுக அரசின் டாஸ்மாக் மதுக்கடைகளில் மட்டும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மது வியாபாரம் கனஜோராக நடந்தேறிய கொடுமையும் நிகழ்ந்துள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு கூடுதல்நிதி வேண்டுமென, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசை கேட்கிறார். ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள், விவசாயிகள், வணிகர்கள் போன்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பிற்கும், சேதத்திற்கும் அவர்கள் யாரிடம் சென்று நிதி கேட்பார்கள். உண்மையான பாதிப்பு அப்பாவிகளான இவர்களுக்கு தானே தவிர வேறு யாருக்கும் இல்லை. கடந்த பதினைந்து ஆண்டுகளாக மழை வெள்ளத்தால் கடும் பாதிப்புகளை தமிழகம் அடைந்தாலும், ஒவ்வொரு முறையும் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியை இழந்தும், அதிமுக அரசு இதில் பாடம் கற்றுக்கொள்ளாமல், பாதிப்பையும், சேதத்தையும் நிரந்தரமாக தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையையும் இதுவரையிலும் எடுக்கவில்லை. இது தொடர்ந்தால் வரலாறு காணாத மழை வெள்ளம், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வரலாற்றையே அழித்துவிடும் என மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்

அடடே… தனியார் தொலைக்காட்சி செய்த திருவிளையாடல் தான் நடராஜை ஜெயலலிதா நீக்க காரணமா?

 
 
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தமிழக காவல்துறை முன்னாள் இயக்குநர் ஆ.நடராஜ் நீக்கி வைக்கப்படுகிறார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அதிரடியாக இன்று அறிவித்துள்ளார்.
 
சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நடராஜ் அளித்த பேட்டியின்போது, வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள் மீது அவர் குற்றம்சாட்டி இருந்தார். இதன் எதிரொலியாகவே அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பரவலாக கூறப்பட்டது.
 
 
இந்த நிலையில் ஜெயலலிதா அதிமுகவில் இருந்து தமிழக காவல்துறை முன்னாள் இயக்குநர் ஆ.நடராஜை அதிரடியாக நீக்க முக்கிய காரணம் தனியார் தொலைக்காட்சியே என்று அந்த தொலைக்காட்சியின் பெயருடன் சமூக ஊடகங்களில் வைரலாக தகவல் பரவிவருகிறது.
 
வைரலாக பரவிவரும் தகவலில் தெரிவித்துள்ளதாவது :-
 
முன்னாள் டிஜிபி நடராஜ் நீக்கத்திற்கு இதுதான் காரணமா..?
 
அதிமுகவில் இருந்து காவல்துறை முன்னாள் இயக்குநர் ஆர்.நட்ராஜ் நீக்கத்தில் நடந்த குளறுபடி
 
டிவி நிகழ்ச்சியில் தொலைபேசி மூலம் தமிழக அரசை விமர்சித்து பேசியது மூத்த பத்திரிகையாளர் ’இந்து’ ஆர்.நடராஜன்.
 
அவர் தான் முன்னாள் டி ஜி பி ஆர் நடராஜ் என்று ஸ்க்ரோலர் போடுகிறது அந்த டிவி …. சரமாரியாக அரசாங்கத்தை விமர்சித்து அந்தக் குரல் பேசுகிறது ….
 
அந்த டிவி போன்ற நம்பகத் தன்மை வாய்ந்த நிறுவனம் மேற்கொள்ளும் செய்தி என்பதற்கு மதிப்பு கொடுத்து , அந்தத் தகவல் உண்மைக்குப் புறம்பானது என்பதை ஊர்ஜிதம் செய்யும் வகையில் திரு. நடராஜ் அவர்கள் மீது அ தி மு க தலைமை நடவடிக்கை எடுக்கிறது ….
 
ஆனால் பின்னர் தான் தெரிய வருகிறது அது நடராஜ் குரல் இல்லை என்று … கமுக்கமாக ஒரு மன்னிப்புக் கடிதத்தை நட்ராஜுக்கு அனுப்பி வைக்கிறது அந்தடிவி நிறுவனம் ….
 
அவர் பட்ட அவமானத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறது அந்த டிவி நிறுவனம் ?
 
டிவி நிகழ்ச்சியில் தொலைபேசி மூலம் தமிழக அரசை விமர்சித்து பேசியது மூத்த பத்திரிகையாளர் ’இந்து’ ஆர்.நடராஜன். தவறுதலாக காவல்துறை முன்னாள் இயக்குநர் ஆர்.நட்ராஜ் புகைப்படத்தை காட்டிவிட்டனர்.
 
என்று வைரலாக பரவிவரும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

குப்பைகளை அகற்றும் பணியில்தேமுதிக தலைவர் விஜயகாந்த்

சென்னையில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரிடையாகவே களம் இறங்கினார் . மாநகராட்சியிலுள்ள 200 வட்டங்களில் தேமுதிக துப்புரவு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.விஜயகாந்த் வெறியை மடித்து கட்டிக்கொண்டு மண்வெட்டி சகிதம் தானே குப்பைகளையும் ,கழிவுகளையும் அள்ளினார் ,ஒருபுறம் அவரது மனைவி பிரேமலதாவும் இப்பணியில் ஈடுபட்டார் தற்போது வலைத்தளங்களிலும்,வாட்ஸ் அப்பிலும் விஜயகாநத் குப்பையை அள்ளும் படம் தான் வலம் வந்துகொண்டிருக்கிறது ,மேலும் தலைவன் என்பவன் தொண்டருக்கு வழி கட்டுபவன் என் வாசகத்தோடு இவரின் படங்கள் வந்துகொண்டிருக்கின்றான

ஆந்திரா பாடகர்களின் தமிழக மழை வெள்ளம் பற்றிய கண்ணீரை வரவழைக்கும் இசைப் பாடல் காணொளி

 
 
 
சிம்பு அனிருத்தின் “அந்தப்” பீப்.. பீப்.. பாடல் வெளியான அதே நாளில் தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்துக்காக அர்பணித்து அண்டை மாநிலமான ஆந்திராவில் பாடகர்கள் அனைவரும் உணர்ச்சி கொப்பளிக்க ஒருமித்து பாடி நம் இதயம் உடைத்து கண்ணீரை வரவழைக்கும் இசைப் பாடல் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவிவருகிறது .
 
ஆந்திரா பாடகர்களின் தெலுங்கு இசைப் பாடல் வரிகளின்  தமிழாக்கம் :
 
இவைகள் தண்ணீரா இல்லை கண்ணீர் துளிகளா? நம்மை மூழ்கடிக்கும்போது இதை எப்படி எதிர்கொள்வது?
நீர் மேலிருந்து கீழ்வரை முழுங்கிவிடுவேன் எனச் சொல்லும்போது எப்படி எதிர்கொள்வது?
உயிர்கள் எல்லாம் இழக்கப்படும்போது சப்தமின்றி (நமக்கு நாமே) சமாதானம் சொல்லிக்கொண்டிருக்கப் போகிறோமா?
இறந்தவர்களுக்கான தீ மூட்டலினால் மனதில் ஏற்படும் பாரத்தை சுமந்துகொண்டு சூனியத்தை திட்டிக்கொண்டிருக்கப்போகிறோமா?
அடிக்கும் பேய்மழையில் ஏற்பட்ட கோபத்தை தொண்டைவரை வைத்துக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா?
ஒவ்வொருகணமும் நீரில் மூழ்கி பெருந்துயரில் இருக்கும் மக்களுக்கு உங்கள் ஆக்ரோஷம் மட்டும் இருக்கும் நிலையை மாற்றிவிடுமா?
 
மனிதனுக்கு மனிதனாக உடன் வாருங்கள்..
மனது வைத்து (எல்லோரும்) வாருங்கள்,
இதைப் பார்க்கும் பேரழிவும் (நம்மைப்பார்த்தால்) பாவமாக உணரும்.
 
உயிர்களின் மதிப்பு உங்களுக்கு தெரிந்து (இந்த அழிவைக்கண்டு) ரத்தம் கொதிக்கும் நிலையில், நீங்கள் உங்கள் கையைக் கொடுக்க மாட்டீர்களா?
 
ஒவ்வொரு கணத்தையும் ஒரு யுகமாகக் கழிக்கும் உதவிக்காக காத்திருக்கும் மக்களின் குரல் கேட்கவில்லையா?
 
இரவும் பகலுமாக இருட்டும் கஷ்டமுமாக இருக்கும் இவர்களுக்கு கஷ்டத்தை நீக்க விளக்காக நீங்கள் வாருங்கள்.
அவர்களை உயிர்ப்புடன் வைத்திருங்கள்.
அவர்களுக்கு சுவாசம் தாருங்கள்.
கோரமான வெள்ளத்தில் நசுக்கப்பட்டோருக்கு உதவச் செல்கையில் அவர்களுக்கு மகிழ்ச்சியையும், அன்பையும் தருவோம்.
 
கண்களில் கடல் போன்ற நீருடன் நகர தெருக்களில் பசியால் அலறும் சப்தம் உனக்கு கேட்கவில்லையா?
நம்பிக்கையையே அழித்துவிட்ட வெள்ளத்திலிருந்து உதவி கோரி அழைப்பதை நீ பார்க்கவில்லையா? குழந்தைகளின் எதிர்காலம் பாழாகாமல் பார்த்துக்கொள்ளும் உன் பொறுப்பை நீ செய்.
இருளே கவிழ்ந்தாலும் திசைகள் மாறுவதில்லை, (பாதிக்கப்பட்டோருக்கு) வருடும் நம்பிக்கையாய் நீ அத்திசையை நோக்கி எழு.
 
மனிதன் மனிதனுக்கு உதவி.
மனிதன் மனிதனுக்கு தைரியம்.
மனிதர்கள் ஒன்றாக இணைந்திருந்தால் கடவுள் (நமக்காக) கீழிறங்க மாட்டாரா?
நான் அல்ல, நாம் என்று நாம் அனைவரும் ஒன்றென்று உதவி தேவைப்படுபவனுக்காக (பிறருடன் கைகோர்த்து) ஒன்றினைந்து நடக்கும் ஒருவன் வெறும் மனிதனல்ல, அவன் தெய்வம்.
சினிமா நட்சத்திரங்களுக்கும் நம்மைப்போலவே மனது உண்டு, அவர்களும் கஷ்டத்தை உணர்ந்திருக்கிறார்கள்.
சினிமா நட்சத்திரங்களும் நீயும் நானும் ஒன்றே, நாம் என்றே சொல்லி ஆதரவுக்கு சேர்ந்து நிற்கின்றனர்.
ஒவ்வொரு கிராமத்திலும் தொழில் செய்வோரும், கற்றவர்களும் கொடையாளிகளாக இன்று உருமாறி இருக்கின்றனர். உங்களின் சிறு கொடையும் நமது உதவியை அன்புடன் செய்ய இயலும்.
 
அடிக்கும் பேய்மழையில் ஏற்பட்ட கோபத்தை தொண்டைவரை வைத்துக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா?
ஒவ்வொருகணமும் நீரில் மூழ்கி பெருந்துயரில் இருக்கும் மக்களுக்கு உங்கள் ஆக்ரோஷம் மட்டும் இருக்கும் நிலையை மாற்றிவிடுமா?
 
மனிதனுக்கு மனிதனாக உடன் வாருங்கள்..
மனது வைத்து (எல்லோரும்) வாருங்கள்,
இதைப் பார்க்கும் பேரழிவும் (நம்மைப்பார்த்தால்) பாவமாக உணரும்.
உயிர்களின் மதிப்பு உங்களுக்கு தெரிந்து (இந்த அழிவைக்கண்டு) ரத்தம் கொதிக்கும் நிலையில், நீங்கள் உங்கள் கையைக்கொடுக்க மாட்டீர்களா? என்று அந்த இசைப் பாடல் முடிகிறது .
 
இசைப் பாடல் வரிகளின் தமிழாக்கம் :-
ஜெயக்குமார் ஸ்ரீநிவாசன், தினசரி இணைய தமிழ்ச் செய்தித் தளத்தின் வாசகர்
 
 

தமிழக காவல்துறை முன்னாள் இயக்குநர் நடராஜ் அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்

 
 
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தமிழக காவல்துறை முன்னாள் இயக்குநர் ஆ.நடராஜ் நீக்கி வைக்கப்படுகிறார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அதிரடியாக அறிவித்துள்ளார்.
 
சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நடராஜ் அளித்த பேட்டியின்போது, வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள் மீது அவர் குற்றம்சாட்டி இருந்தார். இதன் எதிரொலியாகவே அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பரவலாக கூறப்படுகின்றது.
 
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பதவி உள்பட பல்வேறு பதவிகளில் இருந்தவர் ஆ.நடராஜ்.நேர்மையான அதிகாரி என்று பொதுவாக கூறப்பட்டாலும் கூட அதிமுக அனுதாபி என்று அணைவராலும் பேசப்பட்டவர்.
 
கடந்த 2012ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இவர் தமிழக காவல்துறை முன்னாள் இயக்குநர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரலில் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் நடராஜ். இணைந்து கொண்டார்,
 
இந்நிலையில், நடராஜ் அதிமுகவில் இருந்துஅதிரடியாக ஜெயலலிதா நீக்கியுள்ளார் .
 
இது தொடர்பாக அதிமுகவின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்தெரிவித்துள்ளதாவது :-
 
கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும், முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை மாவட்டத்தை சேர்ந்த தமிழக காவல்துறை முன்னாள் இயக்குநர் ஆர்.நடராஜ் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
 
கழக உடன்பிறப்புகள் யாரும் அ வருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளார்.