Home Blog Page 5921

கீழப்பாவூரில் பாரதியார் பிறந்தநாள்விழா

கீழப்பாவூரில் பாரதியார் பிறந்தநாள் விழா

கீழப்பாவூரில் ஒன்றிய பாரதியார் மன்றத்தின் சார்பில் மகாகவி பாரதியாரின்  134 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.  ஒன்றிய தலைவர் தீப்பொறி அப்பாத்துரை தலைமை வகித்தார். , ஆசிரியர் சந்தாணம், ,பாஸ்கர்,அருள்செல்வன், மதியழகன்,பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் தங்கச்சாமி,சிங்ககுட்டி என்ற குமரேசன் ,ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்ற செயலாளர்  செல்லப்பா மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஜெயராமன், ராஜகோபால் ,கணபதி,சாமிநாதன்,இராமராஜா ,சாமி,ராஜ்,ரமேஷ் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். சுரேஷ் முருகன் நன்றி கூறினார்

ஶ்ரீரங்கம் பகல்பத்து உற்ஸவம் – முதல்நாள்

நாளை தொடங்கும் பகல் பத்து -முதல் திருநாள் …(விவரம்)

அரங்கன் ஆலயத்தில் ஒவ்வொருவருடமும்,அரங்கன் கண்டருளும்,”அத்யயனஉற்சவம்” என்று அழைக்கப்படக்கூடிய
பகல்பத்து(பகலில் 10 நாட்களும்)இராப்பத்து
(இரவில் 10 நாட்களும்) மொத்தம் 20 நாட்கள் நடைபெறும்,
வைகுண்ட ஏகாதசி திருவிழாவினையும்,இந்த உற்சவங்கள் நடைபெறும் விதத்தையும்,அரங்கன் அடியார்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் பொருட்டு இங்கே பதிவிட முயற்சி செய்கிறேன்.

சிலர் அரங்கத்தில் வந்து இருந்து இந்த திருநாட்களை சேவிக்கிறார்கள்.பலருக்கு அந்த பாக்கியம்கிடைப்பது இல்லை.அப்படி வெளியூரில்இருந்தாலும்,அடியார்களின் மனதில்அரங்கன் நினைவுஎன்றும்இருக்கும் என்பது உண்மை.

அரங்கன் அடியார்கள் அனைவரும் அரங்கனையும்,அத்யயன உற்சவத்தினையும் அனுபவிக்கும் பொருட்டே இந்த உற்சவங்களின் நிகழ்வுகளை ,இந்த பதிவில் எழுதுகிறேன்.

திருமங்கையாழ்வார் காலத்திற்கு பிறகு,நாதமுனிகள்
காலம்வரை இராப்பத்து திருநாளாகிய
“திருவாய்மொழித் திருநாள்” மட்டுமே நடைபெற்று வந்தது.

நாதமுனிகள் யோகக்கலை பயின்றவர்.ஆகவே அந்த யோகக்கலையின்மூலம்,நம்மாழ்வாரை யோகதசையில் கண்டு,நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களையும், அவரிடம்
கேட்டு அதைத் தொகுத்தார்.

நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு அமைந்து உள்ள, ஏற்றம் போலே,மற்றைய ஆழ்வார்கள் அருளிச்செய்த,திவ்ய பிரபந்தங்களுக்கும்,ஏற்றம்அளித்திடும் வகையில்,
நாதமுனிகளின் காலம் தொடங்கி,”பகல்பத்து”திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.நாதமுனிகளின் காலத்திற்கு முன்புவரை,இராப்பத்து திருநாளாகிய
“திருவாய்மொழித் திருநாள்” மட்டுமே நடைபெற்று வந்தது.

இந்த பகல் பத்து உற்சவம்நடைபெறும் பத்து நாட்களும், நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில்,ஆழ்வார்கள் மற்றும்ஆச்சாரியர்கள் புடைசூழ,நாலாயிரம் திவ்ய பிரபந்தங்களில்,முதலாயிரம் மற்றும் இரண்டமாயிரம் ஆகியவற்றில் அமைந்து உள்ள,947 +1134=2081 பாசுரங்களை,அரையர்கள் இசையுடன் பாடக்கேட்டு மகிழ்வார்.

பகல்பத்து திருநாளின் முதல்திருநாளில் நடைபெறும் நிகழ்வுகள்

images events spiritual srirangan - 2026

பகல்பத்து முதல்திருநாள்….

காலை,பெரியபெருமாளின் (அரங்கனின்) திருமுன்பு, கர்பகிருஹத்தில் (மூலஸ்தானத்தின் முன்பு) திருப்பல்லாண்டு, அரையர்களால்,தாளத்துடன் இசைக்கப்படும்.

நம்பெருமாள் திருவாபரணங்கள் பலவற்றை ,இந்த உற்சவத்தின் ஒவ்வொருநாளும் சாற்றிக்கொண்டு,சிம்ம கதியில் கருவறையில்(காயத்ரி மண்டபத்தில்) இருந்து புறப்பாடு கண்டருளுவார்.

அவ்வாறு புறப்பாடு கண்டு வெளியில் வரும் சமயம், சந்தனமண்டபத்திற்கு,எழுந்தருளியவாறே,இரண்டடி ஒய்யார நடையிட்டு,தன்னுடைய பரத்வத்தை வெளிபடுத்துகிறார்…

ஸ்ரீரங்கநாதன் தான்,வராஹ மற்றும் வாமன,திரிவிக்கிரம அவதாரங்களை எடுத்தவன் என்பதை இந்தப்புறப்பாடு உணர்த்துகிறது.

மேலைப்படியில் கோயிலின் ஸ்தலத்தார்களுக்கும்,தீர்த்த மரியாதை உரிமை உடையவர்களுக்கும்மரியாதைகள் நடைபெறும்.(இந்த மரியாதைகள் கீழைப் படியின் அருகில் தான் சில காலங்கள் முன்புவரை நடைபெற்றுவந்தது.இந்த மரியாதைகள் மேலைப்படியில் நடைபெறுவது தவறான செயலாகும்.காரணம் சேனைமுதலியாருக்கு மரியாதை செய்த பிறகே,ஸ்தலத்தார்கள் மரியாதை பெற வேண்டும்..ஆனால் அரங்கத்தில் மட்டுமே இந்த அவலங்கள் தொடருகின்றன.)

மேலைப்படியை விட்டு நம்பெருமாள் இறங்கியபிறகு,உத்தமநம்பிக்கும்,தேவஸ்தான அதிகாரிகளுக்கும்,சந்தன உருண்டை சாதிக்கப்படும்.இந்தச்செயல்கள் மூலம்,இவர்கள் அனைவரும்
ஸ்ரீ ரங்கநாதருடைய கைங்கர்யங்களை, சரிவர செய்வதாகப் ப்ரமாணம் (உறுதி) செய்து கொடுக்கிறார்கள்..

(ஆனால் இன்று ஸ்தலத்தார்கள்,தீர்த்த மரியாதை பெறுபவர்கள் தங்களின் கைங்கர்யங்களை செய்வதே இல்லை..ஆனால் மரியாதைமட்டும்பெற்றுக்கொள்கிறார்கள்..அதைப்பற்றி
விவரமாக எழுதுகிறேன்)

இதன்பிறகு,நம்பெருமாள் சேனைமுதலியார் சந்நிதியின்முன்புறம்எழுந்தருளி, சேனை முதலியாருக்கு மரியாதைகள் நடைபெறும்.பிறகு பகல்பத்து (அர்ஜுன)மண்டபத்தின் முன் பகுதியில் உள்ள,
கிளிமண்டபத்தில் நம்பெருமாள் படியேற்ற சேவை ஆகும்.

அப்போது அரையர்கள் தாளமிசைப்பர்.இந்தப் படியேற்றம்ஸுஷும்நா நாடியில் குண்டலினி சக்தி ஆறு ஆதாரங்களையும் கடந்து,ஸஹஸ்ரார சக்ரத்தினை
அடைவதைக் குறிக்கிறது.ஆறாவது மற்றும் ஏழாவது படிகளில்,நம்பெருமாள் ஒருபுறம் இருந்து,மற்றொருபுறம்
திரும்பி சேவைசாதிப்பதால்,திருமங்கையாழ்வார் பாசுரமாகிய,
“நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்.காணுமோ கண்ணபுரமென்று காட்டினாள்” என்பதின் அர்த்தம் குறிப்பிட்டுக் காட்டப்படுகிறது.

அதன்பிறகு நம்பெருமாள் “சுரதானி” என்னும் துலுக்க நாச்சியார் சந்நிதிக்கு எதிரில்,படியேற்றசேவை சாதித்து,அரையர்கள் கொண்டாட்டம் ஆனபிறகு,பகல்பத்து உற்சவம் நடைபெறும் அர்ஜுனமண்டபத்திற்கு ,நம்பெருமாள் எழுந்தருளியிருப்பார். ஆழ்வார் ஆச்சாரியர்களுக்கு மரியாதைகள் நடைபெறும்.

அதன் பிறகு திருப்பல்லாண்டு பாசுரங்களின் முதல்இரண்டு பாசுரங்களான,”பல்லாண்டுபல்லாண்டு” மற்றும்
“அடியோமோடும்” ஆகிய இரண்டு பாசுரங்களுக்கு,
அரையர்களின் அபிநயங்கள் நடைபெறும்.

அதன் பிறகு பெரியாழ்வார் திருமொழியில் இருந்து,பாசுரங்கள் சேவிக்கப்பட்டு,”வெண்ணெய்விழுங்கி” பதிகம் ஈறாக,மொத்தம் அன்றைய தினம்(பகல்பத்து உற்சவத்தின் முதல்நாள் )224 பாசுரங்கள் அரையர் ஸ்வாமிகளால் அரங்கனின் முன் சேவிக்கப்படும்.

அரையர்களின் தாளத்துடன் ,அரங்கன் பாசுரங்களைக் கேட்டுமகிழ்ந்த பிறகு, அரங்கனுக்கு நிவேதனம் நடைபெறும்.நிவேதன விநியோகங்களும் நடைபெறும்.
அர்ஜுன மண்டபத்தில்(பகல்பத்து) ஆழ்வார்
ஆச்சாரியர்களுக்கு மரியாதை.அதன் பிறகு,ஆழ்வார் ஆச்சாரியர்கள் ஸ்தோத்திரபாட கோஷ்டிகளுடன்,
தங்களுடைய சந்நிதிகளுக்கு எழுந்தருளுவார்கள்.

பிறகு,நம்பெருமாள்(அர்ஜுனமண்டபத்தில்இருந்து) பகல்பத்து மண்டபத்தில் இருந்து,புதிய திருவாபரணங்கள் மற்றும்
கொண்டை சாற்றிக்கொண்டு புறப்பாடு கண்டருளுவார்.

நம்பெருமாள் வழி நடை உபயங்கள் கண்டருளி,
ராஜமஹேந்திரன் திருச்சுற்றில் உள்ள
“மீனாட்சி மண்டபத்தில்” தீர்த்த கோஷ்டி நடைபெறும்.

சிறிது நேரம்நம்பெருமாள்,”பத்தி உலாத்துதல்” ஆகி,
மேலப்படியில் படியேற்றம் ஆகி,திருவந்திக்காப்பு
(ஒருவித ஆரத்தி) கண்டருளுவார்.

பிறகு நம்பெருமாள் ஸர்ப்ப கதியில், கருவறைக்குள்(காயத்ரிமண்டபம்) எழுந்தருளுவார்.

இந்த முறைப்படியே,பகல்பத்துதிருநாளின்,பத்துநாட்களும் நிகழ்வுகள் நடைபெறும்.அத்யயன உற்சவத்தில் அரங்கனை,ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்கள் கூடவே அரையர்களின் தாளத்துடன் கூடிய திவ்ய பிரபந்த பாசுரங்கள் அரங்கனை மட்டும்அல்ல அவன் அடியார்களையும் ,அவர்களின் உள்ளங்களையும் கொள்ளை கொள்ளும் என்றால்அதுமிகையாகாது.

ரங்கா ரங்கா ரங்கா…..

(பகல் பத்து இரண்டாம் திருநாள் விவரம் நாளை தொடரும்)

 

கட்டுரை: மாலு, ஶ்ரீரங்கம்

ஶ்ரீரங்கம் அத்யயன உற்ஸவ தொடக்கம்

அரங்கனின் அத்யயன உற்சவம்.(வைகுண்ட ஏகாதசி)
(இன்று அரங்கத்தில் திருநெடுந்தாண்டகம் தொடக்கம்)
திருமங்கையாழ்வார் தொடங்கிய திருவிழா…
தமிழ்மொழிக்கு என்றே ஏற்பட்ட ஒருபெருவிழா…
அரையர்ஸ்வாமிகளால் அரங்கன் நடத்தும் பெருவிழா….

தமிழ் மொழிக்கு ஒரு விழாவா? என்றால் ஆம் அதுவும்
ஸ்ரீ ரங்கம் பெரிய கோவிலில் என்றால் ஆச்சர்யமாக உள்ளதா? எட்டாம் நூற்றாண்டில் திருமங்கை ஆழ்வார் காலத்தில் ஏற்பட்டது “அத்யயன உற்சவம்” இது தமிழ் பாசுரத்துக்கான விழா தமிழ் மொழிக்கான விழா. நம்மாழ்வார் அருளிய “திருவாய்மொழி”
என்னும் திவ்ய ப்ரபந்ததிற்கான உற்சவம்.

அரங்கனின் பெரிய திருநாளும்,முக்கிய திருவிழாவுமான,
தமிழ் மொழியில் ஆழ்வார்களால் பாடப்பட்ட பாசுரங்களை,
அரங்கன் கேட்டு மகிழும் திருவிழா,ஸ்ரீவைகுண்ட ஏகாதசி
திருவிழா ஆகும்.இந்த உற்சவத்தை “அத்யயன உத்சவம்” என்றும்அழைப்பர்.

அரங்கன் தமிழ் வேதமாம் “நாலாயிர திவ்ய பிரபந்தம்”
கேட்டருளும் சிறப்பான திருநாளாகும்.தமிழில் உள்ள
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை 247.
அரங்கனுக்கு ஆழ்வார்களால் பாடப்பட்ட பாடல்களும் 247.

“பகல்பத்து” மற்றும் “இராப்பத்து” நாளை தொடங்குவதை
முன்னிட்டு, இன்று மாலை அரங்கனின் முன்பு “திருமங்கையாழ்வாரின்” “திருநெடுந்தாண்டகம்”
தொடங்கப்படும்.

திருவரங்கத்தில் நடைபெறும் திருநெடுந்தாண்டகம், பகல்பத்து, இராப்பத்து, இயற்பா சாற்றுமறை பற்றி இன்றுமுதல் பதிவிட முயற்ச்சிக்கிறேன்…

இந்த திருநெடுந்தாண்டகம் திருமங்கையாழ்வாரால் பாடப்பட்டது.திருமங்கையாழ்வாராலேயே,திருவரங்கத்தில்
இந்த “அத்யயனஉத்சவம்” தொடங்கப்பட்டது.அதன்
வரலாற்றை நாமும் கொஞ்சம் அனுபவிப்போம்..

images events spiritual srirangam uRchavam - 2026

பெரிய திருநாள் என்று அழைக்கப்படுகின்ற,பகல் பத்து,
இராப்பத்துதிருநாட்கள்,தமிழ் மொழிக்கு ஏற்றம் அளித்திடும்
ஒரு மாபெரும் சிறப்பான விழாவாகும். ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள்,நித்ய சூரிகள்,முமுக்ஷுக்கள் ஆகியோர்
புடைசூழ,பரம பதத்தில் எம்பெருமான் ,நாலாயிர
திவ்ய பிரபந்தத்தை கேட்டு மகிழும் விழாவே ,அரங்கத்தில் நடைபெறுகின்ற இந்த வைகுண்ட ஏகாதசி திருவிழா என்னும் “அத்யயன உத்சவம்” ஆகும்.

திருமங்கையாழ்வார் தம்முடைய வாழ்நாளின் பிற்பகுதியில்,திருவரங்கத்தில்,திருவரங்கனுக்கு சிறப்பான பல கைங்கர்யங்களை செய்துகொண்டு எழுந்தருளி இருந்தார்.

ஒரு கார்த்திகைத் திருநாளில்,நம்பெருமாள் உபய நாய்ச்சிமார்களுடன் திருமஞ்சனம்கண்டருளிய பிறகு,திருமங்கையாழ்வார் ,திருநெடுந்தாண்டகம் என்கின்ற பிரபந்தத்தை தேவகானத்தில் பாடி நம்பெருமாளை
மகிழ்வித்தார்.அதன் பிறகு திருவாய்மொழி
பாசுரங்களைக்கொண்டு பாடி நம்பெருமாளை உகப்பித்தார்.

இதனால் பெரும்மகிழ்ச்சிகொண்ட நம்பெருமாள்,
“ஆழ்வாரே நாம் உமக்கு என்ன செய்ய வேண்டும்” என்று வினவினார். அதற்கு திருமங்கையாழ்வார் “மார்கழிமாதம்
சுக்லபக்ஷ ஏகாதசி தொடங்கி கொண்டாடப்படும்
வேதத்திற்க்கான ஏற்றமிகு விழாவில்,அந்த வேதங்களுடனே நம்மாழ்வார் அருளிச்செய்த,”திருவாய்மொழியையும்”கேட்டு, வடமொழி வேதத்திற்கு நிகரான பெருமையை ,நம்மாழ்வார் தமிழில் அருளிச்செய்த,”திருவாய்மொழிக்கும்” தந்தருள
வேணும் என்று விண்ணப்பித்தார்.

நம்பெருமாளும் பெரிதும் உகந்து,தேவகானத்தில் பாடிய திருமங்கையாழ்வார் “திருமிடர் நோவும்” என்று, திருமங்கையாழ்வாரின் தொண்டையிலே,தைலக்காப்பை
தடவச் செய்து,ஸ்வாமி நம்மாழ்வாரை “ஆழ்வார்திருநகரியில்” இருந்து,அழைத்து வருவதற்கான, ஸ்ரீமுகப்பட்டயம், மாலை,பரியட்டம்,சந்தனம் ஆகியவற்றை அனுப்பி
கௌரவித்தார்.

(இந்த அத்யயனஉத்சவத்திற்க்காக ,ஆழ்வார் திருநகரியில் இருந்து,திருவரங்கத்திற்கு ,ஒவ்வொரு வருடமும்,
நம்மாழ்வார் எழுந்தருளினார் என்று அரங்கன்
ஆலய வரலாறு கூறுகிறது.தற்பொழுது, நம்மாழ்வார்
ஆழ்வார் திருநகரியில்இருந்து எழுந்தருளுவது இல்லை..).

திருமங்கையாழ்வார் ,நம்மாழ்வாருடைய நான்கு பிரபந்தங்களாகிய,திருவிருத்தம்,பெரிய திருவந்தாதி,திருவாசிரியம்,திருவாய்மொழி ஆகியவற்றிற்கு அங்கங்கள் போல,ஆறு திவ்ய பிரபந்தங்களை அருளிச்செய்துள்ளார்.அவற்றில் ஒன்றுதான் இந்த திருநெடுந்தாண்டகம்…

இவர் அருளிச் செய்த பிரபந்தங்கள்” பனுவல்” என்று கூறப்படுகின்றன. இந்த ஆறு பிரபந்தங்களுள் சிகரமாக
விளங்குவது திருநெடுந்தாண்டகம்.

இவர் திருவரங்கத்தில் இருந்தபோது இதனை அருளியுள்ளார். “தாண்டகம்” என்பது மலை ஏறுவதற்கு உதவியாக இருக்கும்
ஒரு ஊன்றுகோல். மனித ஆன்மாவின் கடைத்தேற்றத்துக்கு கடவுள் ஒருவர் தான் ஊன்றுகோல் என்பதை, இப்பாசுரங்கள்
விளக்குகின்றன . திருநெடுந்தாண்டகம் முப்பது பாசுரங்கள் கொண்டது.

தாண்டகம் என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது “திருநெடுந்தாண்டகம்” என்றும் அழைக்கப் படுகிறது.

திருநெடுந்தாண்டகத்தில் முதல் 10 பாசுரங்கள், ஆழ்வார்
தாமான தன்மையிலும்,அடுத்த 10 பாசுரங்கள்,
ஒரு தாய் தன்னுடைய மகளைப் பற்றி சொல்வது போலவும். மூன்றாவது 10 பாசுரங்கள்தலைமகள் என்னும் நிலையில், திருமங்கையாழ்வார், பெண்ணான தன்மையில் பாடிய
சிறப்புமிக்க பாசுரங்களாகும்.

திருநெடுந்தாண்டகம் வேதக்கருத்துக்களை கொண்ட,
வேதத்திற்கு ஒப்பான பாசுரங்கள் ஆகும்.

இந்த திருநெடுந்தாண்டகத்தின் 21 வது பாசுரமான,

“மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின் தாழ
மகரம்சேர் குழையிருபா டிலங்கி யாட,
எய்வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே
இருவராய் வந்தாரென் முன்னே நின்றார்
கைவண்ணம் தாமரைவாய் கமலம் போலும்
கண்ணிணையும் அரவிந்தம் அடியும் அதே,
அவ்வண்ணத் தவர்நிலைமை கண்டும் தோழீ.
அவரைநாம் தேவரென் றஞ்சி னோமே.”

என்ற பாசுரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ,ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் ,மிகவிரிவானதொரு விளக்கவுரையினை அருளிச்செய்துள்ளார்.

ஸ்ரீ பராசர பட்டரின் காலத்தில்,இன்றைய கர்நாடக மாநிலத்தின் மேல்கோட்டையில் இருந்த”வேதாந்தியான மதவாச்சாரியாரை”
இந்த திருநெடுந்தாண்டகத்தின் விளக்கவுரை கொண்டு,
ஸ்ரீபராசர பட்டர் வெற்றிகொண்டு,அந்த வேதாந்தியை
தம்முடைய சீடராக்கிக்கொண்டார்.இந்த வேதாந்தியே
“நஞ்சீயர்” என்று அழைக்கபடுகிறார்.

ஸ்ரீபராசர பட்டர்,”வேதாந்தியான மதவாச்சாரியாரை”இந்த திருநெடுந்தாண்டகத்தின் விளக்கவுரை கொண்டு, திருத்திப்பணிகொண்ட நிகழ்ச்சியே இன்றும்,அரங்கன் முன்பு ,
இந்த பகல்பத்து மற்றும்இராப்பத்து திருவிழாவின் முதல் நாள்(இன்று) “அரையர் ஸ்வாமிகளால்” ,அரங்கன் முன்பு
அபிநயித்துக் காட்டப்படுகிறது.

இயல் இசை நாடகம் என்னும் மூன்று கூறுகளைக் கொண்டது நம்முடைய தமிழ் மொழியாகும்.அந்த தமிழில் ஆழ்வார்கள்
பாடிய பாசுரங்களே” நாலாயிர திவ்ய பிரபந்தமாகும்”.

இந்த நாலாயிர திவ்ய பிரபந்தங்களை,நாதமுனிகளின் வழித்தோன்றல்களான,அரையர்கள் கைகளில் தாளத்தோடும்,இசையோடும் திவ்ய பிரபந்த பாசுரங்களை,
பெரிய பெருமாளின் திருமுன்பு இசைத்து,தமிழுக்கு ஏற்றம் அளிக்கும்,பகல் பத்து இராப்பத்து விழாவை,”அத்யயன உத்சவத்தினை” இந்த திருநெடுந்தாண்டக தினத்தன்று” (இன்று)
தொடங்குவார்கள்.
(தொடரும்)

கட்டுரை: மாலு, ஶ்ரீரங்கம்

அரங்கனின் அரையர்களும் அத்யயன உற்சவமும்: 1000 ஆண்டுகளாய் பாதுகாக்கப்பட்டு வரும் பாரம்பரியம்!

 

அரையர்களின் பாடல்களும்,அபிநயங்களும் தாளங்களும்,தம்பிரான்படி வியாக்கியானங்களும் அரையர் ஸ்வாமிகளால், அரங்கனுக்காக ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாக்கப்படும் விரிவுரைகள். அரையர்கள் நாதமுனிகளின் வழித் தோன்றல்கள்.

வைகுண்ட ஏகாதசி விழாவின் போது பகல்பத்து, இராப்பத்து என இருபது நாட்களும் ஆழ்வார்களின் நாலாயிர திவ்யப்
பிரபந்தப் பாடல்கள்,அரங்கன் ஆலயத்தில் தேவகானமாய் ஒலிக்கும். பக்திரசம் சொட்டும் அந்தப் பாடல்களின் குரல்களுக்கு சொந்தக்காரர்கள் அரையர்கள்.நாலாயிர திவ்ய பிரபந்தங்களை, மரபாகப் பயின்று வருபவர்கள்தான் அரையர்கள்.

வைகுண்ட ஏகாதசியின்போதான 20 நாள் விழாவில் ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்களைப் பாட,அரையர் ஸ்வாமிகளைக் கோயிலில் இருந்து,அரங்கனின் கைங்கர்யபரர்கள் வந்து அழைத்துச் செல்வார்கள்.

இதுதான் மரபு. இந்த அரையர்களின் பாடல்களைக் கேட்டு பெருமாள் தன்னுடைய பரிவட்டத்தையும், குல்லாவையும் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அதனால், பாடலைப் பாடும்போது குல்லா அணிந்துகொண்டு பாடுவார்கள்.
அரையர் ஸ்வாமிகளின் கைகளில் இருக்கும் இரண்டு தாளங்களில் ,ஒன்று நம்மாழ்வார் என்றும் ,மற்றொன்று நாதமுனிகள் என்றும் அழைக்கப்படுகிறது. .

பகல்பத்து விழாவின் முதல் ஐந்து நாளில் பெரியாழ்வார் திருமொழி, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி பாடுவோம். வைகுண்ட ஏகாதசி முதல் நம்மாழ்வார் மோட்சம் வரைக்கும் திருவாய்மொழி பாடுவார்கள். இயல், இசை,
நாடகம் என்கிற அடிப்படையில் பாடல்களைக் காட்சிகளாக்க அபிநயமும் செய்வார்கள்..அதற்கு அடுத்த நாள் இயற்பா என நாலாயிரம் பாடல்களையும் பாடி முடிப்பார்கள். இதைத்தவிர அரங்கனின்அனைத்து உற்சவ காலங்களிலும் அரங்கன்முன்பு,நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடுவார்கள்.

தம்பிரான் படி வியாக்கியானம், பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை போன்றவர்களின் வியாக்கியானப் படிகள் வழிவழியாக இந்த அரையர் ஸ்வாமிகளின் திருவம்சத்தில் மட்டுமே இருக்கிறது. இதை அரையர்ஸ்வாமிகளின் குடும்பங்களுக்கு மட்டுமே தெரிந்துகொண்டு அரங்கனுக்கு கைங்கர்யம்செய்கிறார்கள். வேறு யாருக்கும் கற்றுக்கொடுப்பது இல்லை.

ஆழ்வார்களின் இனிமையான பக்திப் பாசுரங்களால் அரங்கனையும், கோயிலையும் மந்திர கனத்திற்கு ஒப்பான அதிர்வைத் தந்து வரும் அரையர்களின் சேவை ஒரு நீண்ட பாரம்பரியமாக தொடர்ந்து வந்திருக்கிறது.இவ்வளவு பெருமைமிக்க இந்த நாதமுனிகளின் திருவம்சத்தின், வழி வந்த அரையர் ஸ்வாமிகள் இன்று அரங்கன் ஆலயத்தில் “திருநெடுந்தாண்டகம்” பாடல்களைப்பாடி,அபிநயங்கள் மற்றும் வியாக்கியானங்கள் (விரிவுரைகள்) சாதித்து அரங்கனின் வைகுண்ட ஏகாதசி உற்சவத்தினை தொடர்ந்து நடத்துவார்கள்…

இன்று மாலை,அரையர்கள் தங்களின் திருமாளிகையில் (வீடுகளில்) இருந்து,குல்லாய் தரித்துக் கொண்டு,பெரிய பெருமாளின் காப்பந்தம்,திருச்சின்னம்,ஆகியவற்றுடன் புறப்பட்டு,கோயிலின் உள்ளே உள்ள,உடையவர் சந்நிதி(ராமானுஜர்),திருவரங்கப் பெருமாள் அரையர் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ பார்த்தசாரதி சந்நிதி,நம்மாழ்வார் சந்நிதி முதலிய சந்நிதிகளுக்குச்சென்று,சேவித்த பிறகு,சந்தனமண்டபத்தில் உள்ள,கருடன் சந்நிதியின் அருகில் அமர்ந்து இருப்பார்கள்.

பெரிய பெருமாளுக்கு,(நம்பெருமாளுக்கு) வெள்ளைச்சரம்,மாலைகள் சாற்றப்பட்ட பிறகு,தேங்காய்த்துருவல் அமுது(நிவேதனம்)செய்யப்படும்.

“கோயிலுடைய பெருமாளரையர்” என்றோ, 
“வரந்தரும் பெருமாளரையர்” என்றோ,
“மதியாத தெய்வங்கள் மணவாளப்பெருமாளரையர்” என்றோ.
“நாத விநோத அரையர்” என்றோ அரங்கனின் கைங்கர்யபரர்களால் ,அரையர் ஸ்வாமிகளுக்கு அருளப்பாடு சாதிக்கப்படும்.

(பகல்பத்து ,இராப்பத்து விழாக்காலங்களில்,அரையர் ஸ்வாமிகளுக்கான அருளப்பாடு,மேற்சொன்னவாறே சாதிக்கப்படும்)

அரையர் ஸ்வாமிகளின் திருக்கரங்களில் இருக்கும்,இரண்டு தாளங்களில்,”நாதமுனி” என்று அழைக்கப்படும் தாளங்கள், அரங்கனின் திருவடியில் சேர்ப்பிக்கப்படும்.

அரையர்களுக்கு ஸ்தாநீகர் ,தீர்த்தம், சந்தனம், தொங்குபரியட்டம்,மாலை ஆகியவற்றை சாதிப்பார்…

பிறகு அரங்கன் பள்ளிகொண்டு இருக்கும் கர்ப க்ருஹத்தின் (மூலஸ்தானத்தின்) மேற்கு பகுதியில்,அரையர் ஸ்வாமிகள் இருந்துகொண்டு,

“பொங்குசீர் வசனபூடணமீந்த உலகாரியன் போற்றிடத் திகழும் பெருமாள்”
“போதமணவாள மாமுனி ஈடுரைப்பது கேட்டுப் பூரித்து நின்ற பெருமாள்”

என்ற கொண்டாட்டங்களைச் சொல்லி,திருநெடுந்தாண்டகத்தின் முதல் பாட்டு “மின்னுருவாய்” என்பதை பலதடவை இசைப்பர்.

பிறகு,அரையர்கள் சந்தனமண்டபத்திற்கு எழுந்தருளி, திருநெடுந்தாண்டகத்தின் முதல் பாட்டு “மின்னுருவாய்” என்று தொடங்கும் முதல் பாசுரத்தினை இசையுடன் அபிநயம் செய்வர்.

பிறகு முதல் பாட்டிற்கு ,”ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை” சாதித்த,வ்யாக்யான(விரிவுரை) அவதாரிகைகளும்,இரண்டாம் பாட்டிலிருந்து,11 பாட்டான,”பட்டுடுக்கும்”என்னும் பாசுரம் வரை,”தம்பிரான்படி” வியாக்யானமும் சேவிக்கப்டும்.

images events spiritual araiyar sevai - 2026

திவ்ய பிரபந்த பாசுரங்களுக்கு, நாதமுனிகள் தொடங்கி, அவரின் வம்சத்தில் உதித்த, அரையர் ஸ்வாமிகள் (இன்றைய அரையர் ஸ்வாமிகளின் முன்னோர்கள்) எழுதி வைத்த, வ்யாக்கியானங்களுக்கு (விரிவுரை) “தம்பிரான் படி வியாக்யானம்” என்று பெயர். இந்த தம்பிரான்படி வியாக்கியானம் ஓலைச் சுவடிகளில் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, பரம்பரையாக பாதுகாக்கப் பட்டு வருகிறது. இந்த தம்பிரான்படி வியாக்கியானம் அச்சு வடிவில் இல்லை. தற்பொழுது அரையர் கைங்கர்யம் செய்யும், அரையர் ஸ்வாமிகளிடம் உள்ள ஓலை ச்சுவடிகளில் இருந்து இந்த தம்பிரான்படி வியாக்கியானம் சேவிக்கப்படும்.

இந்த தம்பிரான் படி விரிவுரை, சொல்லழகும், பொருளழகும் கொண்ட, கருத்தாழமிக்க, சொற்றொடர்களாகும். இவற்றை கேட்கக் கேட்க, பக்தர்களின் உள்ளத்திலே பக்தியும், மகிழ்ச்சியும் பொங்கும்.

திவ்யப் பிரபந்தச் சொற்கள் பின்னிப்பிணைக்கப்பட்டு, சந்தத்தோடு அவைகள்,அரையர் ஸ்வாமிகளால் சேவிக்கப்படும் போது, அதைக் கேட்போரின் உள்ளத்தில், நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் சொல்லழகு புலப்படும்…..

அரங்கனின் அத்யயன உற்சவத்தின் (பகல்பத்து, இராப்பத்து) முதல் நாள் நாளை வெள்ளி அன்று தொடங்குகிறது.

கட்டுரை: மாலு, ஶ்ரீரங்கம்

டிசம்பர் 24ம் தேதி வெளியாகிறது விமலின் அஞ்சல

மிக சிறந்தக் கதை என அனைவராலும் பாராட்டப்படும் ‘அஞ்சல’ வருகின்ற 24ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. புதிய இயக்குனர் தங்கம் சரவணன் இயக்கத்தில், பிரபல இசை அமைப்பாளர் கோபி சுந்தர் இசை அமைக்க, விமல் ஜோடியாக நந்திதா நடிக்கும் இப்படத்தில் முக்கியக் கதா பாத்திரத்தில் நடித்து உள்ளார் பசுபதி.

அரசாங்கம் சாலையை விஸ்தரிக்க முயலும் போது, அதனால் பாதிக்க படும் ஒரு பரம்பரை சொத்தான டீ கடையைக் காப்பாற்ற முயலும் ஒரு கவிதைதான் ‘அஞ்சல’. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற விவாதம் பரவலாக இருக்கும்போது, சரியான நேரத்தில் சரியான படமாக வருகிறது ‘அஞ்சல’. ரசிகர்களின் ரசனைக்கேற்ப ருசியான படமாக இருக்கும் ‘அஞ்சல’.

பதில் கொடுக்கும் துணிச்சல் உண்டா மு.க. ஸ்டாலினுக்கு?

சமூக ஊடகத்தில் பொதுமக்கள் முன் வைக்கும் கேள்விக்கு பதில் அளிக்கும் துணிச்சல் மு.க. ஸ்டாலினுக்கு உள்ளதா? என தமிழகமே வினா எழுப்புகிறது.

சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஏறத்தாழ நூறாண்டு காலத்தில் கண்டிராத கடும் மழை வெள்ளத்தால் கொடூரமாக பெரும்பாலானோர் பாதிப்படைந்துள்ளனர்.

தமிழக அரசை நம்பி தங்களால் முடிந்த உதவிகளை தாங்களாக முன்வந்து வீடிழந்து, பசி, பட்டினியால், நிம்மதியிழந்து திக்கற்று தவிக்கும் தொப்புள்கொடி உறவுகளின் துயர் துடைக்க பொதுமக்கள் வழங்கிய நிவாரணப் பொருட்கள்மீது முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை ஒட்டியது அயோக்கியத்தனம் என பொதுமக்கள் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளப்பிய பிரச்சினை தற்போது தமிழகத்தில் ஒரு பக்கம் விஸ்ரூபமெடுத்து ஓடிக்கொண்டு உள்ளது.

images politics 20151207220742 - 2026ஜெயலலிதாவின் புகைப்படத்தை ஒட்டியது குறித்து திமுக பொருளார் மு.க. ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவை நக்கல், நையாண்டி செய்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திமுக கட்சியின் தலைவர் மு.கருணாநிதி முதலமைச்சராக ஏற்கெனவே கடந்த பல ஆண்டுகளில் பலமுறை தமிழகத்தை ஆட்சி செய்துள்ளார்.

அப்போதும் மு.கருணாநிதி மக்களின் வரிப் பணத்தில் தமிழக அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் அனைத்து நலத் திட்டங்கள் மற்றும் அரசாங்க விளம்பரங்களில் அவரது புகைப்படத்தை ஒட்டி இலவச சுய விளம்பரம் தேடிக் கொண்டார். அவ்வாறு மு.கருணாநிதி புகைப்படத்தை ஒட்டி இலவச சுய விளம்பரம் தேடிக் கொள்வதற்கு என்ன உரிமையுள்ளது? என பொதுமக்கள் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளவர்களின் துயர் துடைக்க பொதுமக்கள் வழங்கிய நிவாரணப் பொருட்கள்மீது ஜெயலலிதா புகைப்படத்தை ஒட்டியதிற்கு மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்ததையும் கண்டித்துள்ளனர்.

பொதுமக்கள் பெரும்பாலோனர் சமூக ஊடகங்களில் மு.கருணாநிதி, மு.க. ஸ்டாலின் ஆகியோரின் பழைய புகைப்படங்களை நக்கல், நையாண்டி செய்து பதிவிட்டு அவர்களுக்கு பல்வேறு கேள்விகளை முன் வைத்து பல பதிவுகளை வைரலாகப் பரப்பி வருகின்றனர்.

ஏற்கெனவே திமுக ஆட்சியின் போது வழங்கப்பட்ட தமிழக நலத் திட்டங்களில் மு.கருணாநிதி புகைப்படம் பதிவிடப்பட்டதை பாலாஜி இராமச்சந்திரன் என்பவர் அவரது முகநூல் பதிவில் மு.க. ஸ்டாலினுக்கு சுட்டிக்காட்டி, “அரசு வரிப் பணத்துல போட்டோ போடலாமா ஸ்டாலின்? இதுமட்டும் உங்க அப்பன் வீட்டு பணமா?” என மு.க. ஸ்டாலினை கேள்வி எழுப்பும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

திமுக கட்சியின் “நமக்கு நாமே” எனும் திட்டத்தின் பெயரால் கடந்த சில வாரங்களுக்கு முன்வரை தமிழகத்தை வலம் வந்து பொதுமக்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதில் அளித்த மு.க. ஸ்டாலினுக்கு சமூக ஊடகத்தில் பொதுமக்கள் முன்வைக்கும் கேள்விக்கு பதில் அளிக்கும் துணிச்சல் உள்ளதா? என தமிழகமே வினா எழுப்புகிறது.

images politics 20151209224854 - 2026

செய்தியாளர்களை விரட்டியடித்த தமிழக அரசு பி.ஆர்.ஓ.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அதிகாரியாக பணியாற்றும் பாரதிதாசன் செய்தியாளர்களை விரட்டியடித்ததாகவும் மேலும் அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டுள்ளது.

பாரதிதாசன்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவிவரும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-

செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்களுக்கு பாலமாக செயல்பட வேண்டியவர்கள். அமைச்சர்கள், அதிகாரிகளின் அடிமையாக மாறிப் போனது வேதனையாக உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட பி.ஆர்.ஒ பாரதிதாசனின் அட்டகாசம் எல்லைமீறி போய்க் கொண்டு இருக்கிறது. பாரதிதாசன் என்று மகனுக்கு ஏன் பெயர் வைத்தோம் என அவரது தந்தை வாகை. முத்தழகன் புலம்பிக் கொண்டு இருக்கிறார்.

இரவு திமுக பொதுக்கூட்ட மேடைகளில் ஜெயலலிதாவையும், அதிமுகவையும் விமர்சனம் செய்து பேசினால்தான் அடுத்த நாள் வீட்டில் அடுப்பெறியும். அதாவது திமுகவின் தலைமைக் கழக பேச்சாளர் வாகை. முத்தழகனின் மகன்தான் பாரதிதாசன்.

திமுக ஆட்சியில் முதல்வர் கருணாநிதி
செய்த புண்ணியத்தில் பாரதிதாசன், உதவி பி.ஆர்.ஓ.வாக நியமிக்கப்பட்டார். 2006-11 திமுக ஆட்சியில் தலைமைச் செயலகத்தில் உதவி பி.ஆர்.ஓ.வாகப் பணியாற்றும்போதே திமிராகப் பேசுவது வாடிக்கையாக இருந்தது. பலமுறை அதிகாரிகள் எச்சரித்தும் பாரதிதாசன் கவலைப்படவில்லை. அதிகப்பிரசங்கி என்று பெயரும் எடுத்தார் பாரதிதாசன்.

பாரதிதாசனின் தந்தை வாகை.முத்தழகனின் செயல்பாடுகள் சரியில்லை என்று மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் திமுகவில் ஓரங்கட்டப்பட்டார். கலைஞர் காலில் விழுந்து கெஞ்சி, மீண்டும் மேடையில் பேசத் தொடங்கினார். “கனிமொழி முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவர், அவர் ஏன் தமிழக முதலமைச்சராக வரக்கூடாது” என்று பேச, திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

திமுக.விலிருந்து நீக்கப்பட்ட வாகை. முத்தழகன், மதிமுகவில் ஐக்கியமானார். மதிமுகவில் தற்போது டம்மியாக முடங்கி உள்ளார். திமுக பேச்சாளர் மகன் பாரதிதாசன், அதிமுக ஆட்சியில் அதிகார மையத்தில் வலம் வருவதுதான் வேடிக்கையாக உள்ளது. பாரதிதாசனுடன், உதவி பி.ஆர்.ஓ., பி.ஆர்.ஓ., உதவி இயக்குநர்கள் இப்படி யார் பேசினாலும், அவர்கள் பேச்சை பதிவு செய்து கொள்வார்.

அதை உயர் அதிகாரிகளுக்கு போட்டு காட்டுவார். அதாவது செய்தித் துறை உயரதிகாரிகளுக்கு மாமா வேலை பார்க்கிறார். பாரதிதாசனுடன் தப்பித் தவறி உளறிய பி.ஆர்.ஓ.க்கள் டம்மி பதவியில் தூக்கியடிக்கப்பட்டதன் பின்னணி இதுதான்.

சேலத்தில் உதவி பி.ஆர்.ஓ. வாக பணியாற்றியபோது, சேலம் மாநகராட்சி துணை மேயர் மகளுடன் திருமணம் நடந்தது. அதைத் தொடர்ந்து, மனசாட்சியை விலைக்கு விற்று பணம் சம்பாதிப்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறார் அண்ணன் பாரதிதாசன்.

தாம்பரம் நகராட்சியில் வெள்ளப் பகுதிகளை பார்வையிட்டு வந்த பிறகு, அமைச்சர்கள் பேட்டி என்று நிருபர்கள் அழைக்கப்பட்டார்கள். நிருபர்கள் தாம்பரம் நகராட்சிக்கு சென்றவுடன் பார்த்தால், ஜெயா டிவி, தந்தி டிவிக்கு மட்டும் அமைச்சர்கள் பேட்டி கொடுத்துவிட்டார்கள்.

மற்ற நிருபர்கள் காத்திருந்தார்கள். பி.ஆர்.ஓ. பாரதிதாசனிடம், “என்ன சார் பேட்டின்னு வர சொன்னீங்க… ஒரு மணி நேரமாக நிற்கிறோம்” என்றவுடன் திமிராக “உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஜெயா டிவிக்கு பேட்டி கொடுத்தாச்சு” என்று அலட்சியமாகக் கூறியபடி, “பேட்டி எல்லாம் கிடையாது. போங்க” என்று விரட்டியடித்தார் ஜால்ரா பாரதிதாசன்…

என வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவி வரும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ள நிவாரணப் பணி நடவடிக்கை குறித்து அரசு தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:

வெள்ள நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க குழுக்கள் அமைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், அரசு பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இது தொடர்பாக, காங்கிரஸ் வழக்கறிஞர் ஏ.பி.சூரியப்பிரகாசம் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில்,

வடகிழக்குப் பருவமழை கொட்டித் தீர்த்ததால் தமிழ்நாடே வெள்ளத்தில் மிதக் கிறது. வரலாறு காணாத வெள்ளத்தால் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ள னர். 60 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதித்துள்ளது. சென்னையில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் குடிநீர் கிடைக்க வில்லை. மின் விநியோகமும் கிடையாது. உணவு இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர். சொந்த வீட்டிலேயே அகதிகளாக இருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

நல்லெண்ணம் கொண்டவர்களிடம் இருந்து நிவாரணப் பொருட்கள் குவி கின்றன. உரிய வழிகாட்டுதல் இல்லாததால் அவை மக்களைச் சென்றடையவில்லை. வெள்ள நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கவும் ஆளில்லை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களை மீட்பதில் அரசு நிர்வாகம் முற்றிலுமாகத் தவறிவிட்டது. நிவாரணப் பணிகள் தொடர்பாக கடந்த 4-ம் தேதி அரசிடம் மனு கொடுத்தேன். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, எனது மனுவைப் பரிசீலித்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்க உத்தரவிட வேண்டும். நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க சிறிய அளவில் குழுக்களை அமைக்கவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் இந்த மனுவை நேற்று விசாரித்து, “அடுத்த விசாரணையின்போது, தமிழகத்தில் கடந்த சில நாட்களில் எடுக்கப்பட்ட வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து அட்வகேட் ஜெனரல் அல்லது கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவிக்க வேண்டும். வழக்கு விசாரணை டிசம்பர் 11-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.

ஜார்கண்டில் கார் மீது ரயில் மோதல்: 13 பேர் பலி

ஜார்கண்ட் மாநிலம், ராம்கர் மாவட்டம், பர்குந்தா ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற கார் மீது ஹவுரா-போபால் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 குழந்தைகள், 4 பெண்கள், 3 ஆண்கள் என மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்று காலை இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒரு குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. இதன் மூலம் ரயில் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. ரயில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என ஜார்கண்ட் மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

அரியானாவில் ஹரித்வார் எக்ஸ்பிரஸ் விபத்து: ஓட்டுநர் பலி

பால்வால்: அரியானாவில் லோக்மன்ய திலக் ஹரித்துவார் எக்ஸ்பிரஸ் ரயில் மீது புறநகர் ரயில் மோதியதில் ரயில் ஓட்டுனர் பலியானார். மேலும் 2 பேர் காயமடைந்தனர். அரியானா மாநிலம், பால்வால் மாவட்டம், பபோலா கிராமம் அருகே லோக்மன்ய திலக் ஹரித்துவார் எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில் மோதியதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் புறநகர் ரயில் ஓட்டுனர் உயிரிழந்தார். மேலும் மின்சார ரயில் உதவி ஓட்டுனர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயிலின் கார்டு ஆகியோர் படுகாயமடைந்தனர். அதிக பனிப்பொழிவு காரணமாக புறநகர் ரயில் ஓட்டுனர் சிக்னலை கவனிக்காமல் வந்துள்ளார் என தெரிகிறது. பால்வால் ரயில்வே நிலையத்தில் சிக்னல் கிடைத்ததால் ஹரித்துவார் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. ஆனால் பனியின் காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில் மெதுவாக சென்றதாக தெரிகிறது. அப்போது வந்த புறநகர் ரயில், எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்புறத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்து நடந்த இடத்தில் ரயில்வே துறை சார்பில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த விபத்தில் ரயில் பயணிகள் யாரும் பாதிக்கப்படவில்லை.