Home Blog Page 5920

தே.மு.தி.க. சார்பில் துப்புரவு பணிகள் : விஜயகாந்த்

சென்னை:

தே.மு.தி.க. சார்பில் சென்னையில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப் படும் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

சென்னை மாநகராட்சியின் பெரும்பாலான பகுதிகள் குப்பை கூளங்களும், சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன. அ.தி.மு.க. அரசோ ஆயிரக்கணக்கான துப்புரவு பணியாளர்களைக் கொண்டு, சென்னையை சுத்தம் செய்வதாக வெற்று அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. ஆனால் பல இடங்களில் சுகாதார சீர்கேட்டால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

இனியும் அ.தி.மு.க. அரசையோ, சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையோ நம்பி பிரயோஜனம் இல்லை. கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆர்.கே.நகர் தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அதுபோன்று சென்னை மாநகராட்சியிலுள்ள 200 வட்டங்களிலும் தே.மு.தி.க. மக்களுடன் இணைந்து, மக்களுக்காக மக்கள் பணியை செய்ய திட்டமிட்டுள்ளது. அதனடிப்படையில் 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு மக்களுடன் இணைந்து தே.மு.தி.க.வினர் துப்புரவு பணியில் ஈடுபட உள்ளனர். அரசியலுக்கு அப்பாற்பட்டு, மனித நேயத்தோடு பொதுமக்களும், இளைஞர்களும், மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் தே.மு.தி.க.வினருடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

– என்று கூறியுள்ளார்.

திமுக பக்கம் சாய்கிறாரா செந்தில் பாலாஜி ?

 
 
அ.தி.மு.க-வை சேர்ந்த தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தி.மு.க வில் விரைவில் இணைய திட்டம் போட்டு வருவதாக சமூக ஊடகங்களில்செய்தி வைரலாக
பரவிவருகிறது.
 
மேலும் வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் தகவலில் தெரிவித்துள்ளதாவது :-
 
அ.இ.அ.தி.மு.க கரூர் தலைமைக் கழக பேச்சாளர் ஜெயம் மூர்த்தி தலைமையில் மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி தி.மு.க விற்கு தாவ இருப்பதாக தகவல்.
 
ஜெயம் டி.வி யை காப்பாற்றவும், மீண்டும் தி.மு.க ஆட்சி தான் வர இருப்பதாகவும், அதில் கேபிள் டி.வி கார்ப்பேரஷன் தலைவராக ஜெயம் மூர்த்தியும், தமிழக போக்குவரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜியும் பணி நிரந்தரம் கொடுப்பதாக தி.மு.க நம்பக வட்டாரம் தெரிவித்துள்ளதாகவும் இரகசிய தகவல், இத்தகவலையடுத்து மு.க.ஸ்டாலினுடைய மருமகன் சபரீஸன், என்னுடைய மாமனாராவது தாத்தா கலைஞரை முதல்வராகவும், எனது மாமனார் துணை முதல்வராகவும் கனவு கண்டார், ஆனால் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்கள் இருக்கும் போதே தமிழக முதல்வர் சீட்டிற்கு ஆசை பட்டுள்ளார் என்பதை எண்ணி இரகசிய ஆலோசனை நடத்துவதாகவும் தகவல்.
 
என்று வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

குமரி கடல் பகுதியில் புதிய மேலடுக்கு சுழற்சி: தென்மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

சென்னை:

குமரி அருகே மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் சனிக்கிழமை இன்று சில இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஒன்று புதிதாக உருவாகி உள்ளது.

புதிதாக உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென் மாவட்டங்களில் குறிப்பாக ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று சில இடங்களில் கனமழை பெய்யும். தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மேலும் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை இருக்கும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுய சிந்தனையுடன் செயல்படும் பிரதமரை சோனியா விரும்பவில்லை: சரத் பவார்

மும்பை :

சுய சிந்தனையுடன் செயல்படும் ஒருவர் காங்கிரஸ் சார்பில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவதை சோனியா குடும்பம் விரும்பவில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் தனது 75-வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதை ஒட்டி, அவர் எழுதிய “’Life on my terms-From the Grassroots and Corridors of Power.” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

அந்த புத்தகத்தில், ‘சுய சிந்தனையுடன் செயல்படும் ஒருவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவதை சோனியா குடும்பம் விரும்பவில்லை. நேரு குடும்ப விசுவாசிகள், எனக்குப் பதிலாக பி.வி. நரசிம்மராவை பிரதமராகத் தேர்ந்தெடுக்க சோனியாவுக்கு ஆலோசனை வழங்கினர்.

ராஜீவ் மறைவுக்குப் பிறகு, மகாராஷ்டிர காங்கிரஸில் மட்டுமல்ல, பிற மாநிலங்களிலும் எனது பெயர் பிரதமர் பதவிக்கு ஆலோசிக்கப்பட்டது. ஆனால், சோனியா வீட்டில்தான் அம்முடிவு எடுக்கப்படும் என்பதால் நான் தனிப்பட்ட முறையில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தேன். மூத்த தலைவராக இருந்தாலும் பி.வி. நரசிம்மராவ் உடல் நலம் காரணமாக தீவிர அரசியலில் இருந்து தேர்தலுக்கு முன்பே ஒதுங்கியிருந்தார். ராஜீவ் காந்தி இல்லாத நிலையில் நரசிம்ம ராவின் நீண்ட அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, அவரை மீண்டும் அழைத்து வர ஆலோசிக்கப்பட்டது.

நேரு குடும்ப விசுவாசிகள் நடத்திய அந்தரங்க ஆலோசனையில், சரத் பவார் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது சோனியா குடும்பத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நீண்ட காலத்துக்கு கடிவாளம் அவர் கையில் இருக்கும் நேரிடும் என விவாதித்தனர். அவர்களில் எம்.எல். போடேடர், ஆர்.கே. தவண், அர்ஜுன் சிங், வி. ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள்.

நரசிம்ம ராவை மீண்டும் கொண்டு வருவது நல்லது. ஏனெனில் அவருக்கு வயதாகி விட்டது. அத்துடன் உடல் நலக் குறைவுடன் உள்ளார் என சோனியாவை சம்மதிக்க வைத்தனர். நரசிம்ம ராவுக்குப் பிறகு, விரைவிலேயே பிரதமர் பதவியைக் கைப்பற்றலாம் என அர்ஜுன் சிங் நம்பினார். எனினும், 1991-ல் ராவை மீண்டும் தீவிர அரசியலுக்கு அழைத்து வரும் சோனியாவின் முடிவு எனக்கு எதிராகத் திரும்பியது. -என்று அவர் தெரிவித்துள்ளார்.

சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளர் பணி

தென்காசி:
திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளர் பணி இடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அக்கல்லூரி முதல்வர் சார்பில் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.

அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது..

கல்லூரி கல்வித் துறை அரசாணை நிலை எண் 458 உயர்கல்வி ஜி1 துறை நாள் 28.10.2015 ந் படி சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர் சுழற்சி 1 பணியிடங்களுக்கு தமிழ், கணிதம், வேதியியல், நுண்ணுயிரியல், பொருளியல் மற்றும் மின்னணுவியல் & தொடர்பியலுக்கான ஏழு பாடப் பிரிவுகளுக்குத் தகுதியுடயவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று கல்லூரி முதல்வர் மு.லதா தெரிவித்துள்ளார்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 15.12.2015
நேர்காணல்: 17.12.2015 காலை 10 மணி

புதிய காலத்தின் பிறப்பை அறிவித்த ஒளிமிக்க யுகப்புருஷன் பாரதி..!

‘எமக்குத்தொழில் கவிதை, நாட்டுக் குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்!’

தமிழ் மகாகவி பாரதியின் பிரகடனம் இதுவென்று சொல்லத்தேவையில்லை. தான் சொன்னதுபோல் நடந்து கொண்டவன் அவன். எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் எந்த வித வித்தியாசமும் இன்றி வாழ்ந்தவன் மகாகவி பாரதி. தமிழன்னையின் ஈராயிரமாண்டுத் தவப்பயன் அவனை அவள் புதல்வனாகப் பெற்றது என்று சொன்னால் அது மிகையல்ல.

‘இயன்றவரை தமிழே பேசுவேன், தமிழே எழுதுவேன், சிந்தனை செய்வது தமிழிலே செய்வேன்’ – என்று தனது உறுதிமொழிதனை எழுதிவைத்தவன் பாரதி.

பாரதியின் பன்முக ஆளுமை என்பது இன்றைக்கும் தமிழுலகத்தை வியப்பில் ஆழ்த்துகின்ற ஒன்றுதான். தமிழ்மொழிக்கு புத்தம்புதிய ரத்தம் பாய்ச்சிய அவனது இலக்கியப் பங்களிப்பு மகத்தானது. பக்திமயமாகவும், சிற்றரசர்களை – பிரபுக்களை ஏற்றிப்பாடிப் பரிசில்கள் வேண்டிநின்ற சிலேடைகளுமாகவும் நோய் பீடித்து இளைத்துக்கிடந்த தமிழன்னைக்குப் புத்துயிர்கொடுத்த தனயன் பாரதிதான். அவனால் தமிழுக்குப் புதிய ஞானமும், ஒளியும் தோன்றிற்று, இது மறுக்க முடியாத உண்மை.

வெறும் வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலைமட்டும் அவனது தேசியப்பார்வை கொண்டிருக்கவில்லை. மாறாக, தேசத்தின் அரசியல் விடுதலையோடு சமூக விடுதலையையும் இணைத்தே நோக்குகிற தெளிவு அவனுக்கு இருந்தது.

“இந்நாட்டவன் என்ற நாட்டுரிமை உணர்வு இல்லாமல் அரசியல் உணர்வு இருக்கமுடியாது. எங்கே சாதி அமைப்புமுறை பரவி இருக்கிறதோ, அங்கே நாட்டுரிமை உணர்வு இருக்காது…” – ‘இந்து’ பத்திரிகையிலே அவன் எழுதிய ஆங்கிலக் கடிதங்களில் ஒன்று இவ்வாறு தொடங்குகிறது. அதில் பாரதி மேலும் சொல்கிறான்:

“இங்கிலாந்தில் உரிய தகுதிகள் வாய்க்கப்பெற்ற, அந்நாட்டுக் குடிமகனாகிய சக்கிலியின் மகன் ஒருவன் பிரதம மந்திரியாவதற்கு எவ்விதத் தடைகளும் கிடையாவென்பதைப் பற்றி அங்குள்ள மக்களில் எவனும் ஐயப்படமாட்டான். சமஸ்கிருத சாஸ்திரங்களில் ஈடு இணையற்ற அறிவும், விழுமிய ஒழுக்கப் பண்பும், பக்தியும் கொண்ட சூத்திரன் ஒருவன் சிருங்கேரி மடத்தின் பீடாதிபதியாக வரமுடியும் என இந்தியாவில் எவனாவது நம்பினால், அது தேசத்துரோகமாகக் கருதப்படும் அல்லவா? (சூத்திரனே வர முடியாது என்றால், பஞ்சமனைப் பற்றிச் சொல்லவே வேண் டாம்.) மக்கள் ஏன் வேண்டுமென்றே தம் கண்களை இறுக மூடிக்கொள்கிறார்கள்? மலைக்கும் மண் புற்றுக்கும் உள்ள வேறுபாட்டை அவர்கள் கண்டுணர மறுப்பது ஏன்? மகத்தான இங்கிலாந்துப் பேரரசு எங்கே? அந்தோ, இந்தியா எங்கே?”

– இப்படிக்கூறுகிற துணிவு இன்றைக்கு நமக்கு இருக்கலாம். இது கணினியுகம், 21ஆம் நூற்றாண்டின் அறிவியல் யுகம். ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன்பு – சமுதாயத்தில் இருள் மண்டிக்கிடந்த அன்றைய அடிமைத் தேசத்தில், சாதியத்தின் பிடிப்பு இறுகிக் கிடந்த காலத்தில் இதைச் சொல்ல எவ்வளவு ஆன்மபலம் தேவைப்பட்டிருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

வெறும் அரசியல் விடுதலை கோரி நின்றவர்களும், சமூக சீர்திருத்தம் மட்டுமே போது மென்றிருந்தவர்களும் எதிரெதிர் முகாம்களாகப் பிரிந்து நின்று, ஒருவரை ஒருவர் பலவீனப்படுத்திக்கொண்டிருந்த சூழலில், பாரதியின் சிந்தனை மட்டுமே அரசியல் விடுதலையைச் சமூக விடுதலையோடு இணைக்க முயன்றது. அவன்தான் விடுதலை என்பதை பறையருக்கும், புலையருக்கும், பரவருக்கும், குறவருக்கும், மறவருக்குமானது என்று ஓங்கி முழங்கினான். “முப்பது கோடியும் வாழ்வோம்! வீழின், முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்!” – என்றவன் அவனல்லவா?

ஏற்றத்தாழ்வின் அடிப்படைகளைக் கிள்ளி எறியச் சொன்னான். மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம், மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனி இருத்தலாகாது என்றவன், சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி – உயர்ச்சி சொல்லல் பாவம் என்றான். சாதியால் ஒருவனைத் தாழ்வாகப் பேசுவதுமட்டும் பாவமல்லவாம்!. உயர்ந்தவன் என்று தண்டனிட்டு அடிமை செய்வதும்கூடப் பாவமாம்! இப்படியொரு முழுமையான சீர்திருத்தக் கோட்பாட்டினை அழுத்தமாக முன்வைத்த முன்னோடி பாரதி. ‘காக்கை, குருவி எங்கள் சாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்!’ – என்று ஒரு பிரபஞ்ச தரிசனத்தை முன் மொழியும் தகுதியை அதனாலேயே அவன் பெறுகிறான்.

சமூக விடுதலையின் பிரிக்கமுடியாத அம்சங்களான தலித் விடுதலை, பெண் விடுதலை ஆகியவற்றை அந்த நாளிலேயே இவ்வளவு துணிவுடனும், நேர்படவும் பாரதி மட்டுமே பேசி, அந்த மரபைத் துவக்கி வைக்கிறான்.

சாதிய அமைப்புக்கு எதிரானது சாதியக் கலப்பு. சாதியக் கலப்புக்கு வழிவகுப்பது காதல். எனவே காதலுக்கு மரியாதை செய்தவன் பாரதி. “காதல் செய்வீர் உலகத்தீரே! அதுவன்றோ தலைமை இன்பம்!” என்று அறை கூவி அழைக்கிறான் பாரதி. இளம் விதவைப் பெண்களை இந்நாட்டு இளைஞர்கள் மனமுவந்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவன் வேண்டுகிறபோது, அவனது மனம் இன்னும் விசாலமானதென்று புரிகிறது.

அதேபோலத்தான் ஆண் – பெண் சமத்துவம் கோரித் தடம்பதிக்கிறது அவனது பெண் விடுதலைக்கான பயணத்தின் பாதையும். கற்பு என்று ஒன்று வலியுறுத்தப்படுமாயின் அதனை ஆண் – பெண் இருபாலருக்கும் பொதுவானதாக வைக்கவே வலியுறுத்துகிறான் அவன். அதாவது, வரலாற்றில் முதன் முதலாக கற்பென்ற கருதுகோளை ஆணுக்கும் வலியுறுத்திய தலையாய ஆண்மகன் அவனே!

பாரதியின் இத்தனை சிறப்புகளுக்கெல்லாம் சிகரம் எது தெரியுமா? அவன் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே துவக்கிவைத் திட்ட சுயசாதி விமர்சனம். ஆம்! இன்று வரையில் அவனளவுக்கு வேறு ஒருவர் தம்சாதி குறித்து இத்தனை தெளிவாகப் பேசியிருக்கிறாரா?

‘பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே!’ என்று விடுதலை பெற்ற புதிய காலத்தைக் கும்மி கொட்டிக் குதூகலித்து வரவேற்க அன்று எவ்வளவு தைரியம் வேண்டும்? எண்ணிப் பார்த்தால் மலைப்பாகத்தானே இருக்கிறது! அது மட்டுமா? ‘பேராசைக்காரனடா பார்ப்பான்!’ – என்று, தான் பிறந்த சாதியின் மீதே தயங்காமல் குற்றம் சுமத்த வேறு எவரால் இன்று வரையில் இயன்றிருக்கிறது?

இப்படியும் அவன்தானே சொன்னான்:

‘சூத்திரனுக்கு ஒரு நீதி – தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி
சாத்திரங்கள் சொல்லுமாயின் அவை
சாத்திரங்கள் அல்ல சதியென்று கண்டோம்!’

பாரதி தன்னலத்தோடு சற்றே நினைத்திருப்பானேயானால், அவனது சுடரொளி வீசிய அறிவுக்கும், அவன் பிறந்த சாதிக்கு அன்று இருந்த செல்வாக்கிற்கும் ஆங்கில அரசிடம் எத்தனை பெரிய பதவியை அடைந்திருக்க முடியும்? இப்படியா பெண்டு, பிள்ளைகளைப் பட்டினி போட்டுவிட்டு, ஒரு பரதேசிபோல அலைந்திருக்க வேண்டும்? அவனிடம் சுய நலமும் இருந்ததில்லை! சுயசாதிப் பற்றும் இருந்ததில்லை! இதுதானே உண்மை? நிலைமை இப்படியிருக்க, ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்துவிட்ட காரணத்தினாலேயே அவனை வெறுத்து ஒதுக்க நினைப்பதுவும் இன்னொரு வகை வர்ணாசிரமம் ஆகாதா?

இன்றைய நம் சமூகத்தில் பெருநோயாகப் புரையோடிக்கிடப்பது சாதிய ஏற்றத்தாழ்வு அல்லவா? அதனை அன்றைக்கே சாடத் துணிந்த பாரதி நமக்கெல்லாம் என்ன செய்தியை விட்டுச்சென்றிருக்கிறான்? நாம் ஒவ்வொருவரும் நாம் சார்ந்திருக்கும் சாதியை அவனைப்போல விமர்சனப்பூர்வமாக அணுகியிருக்கிறோமா? இப்படி நம்மை நாமே கேட்டுக் கொள்வது, இன்றைய நம் சமுதாயச் சிக்கல்களைக் களைவதற்கான ஒரு துவக்கமாக இருக்கும்தானே?

இந்திய சமூகத்தில் சாதிய முறையானது படிநிலை – ஏணிப்படி போன்ற அமைப்பாகத்தானே இருக்கிறது! கடைக்கோடியில் எல்லா சாதிகளும் அமுக்கி அழுத்திக்கொண் டிருக்கும் தலித்துகளை தவிர, மற்ற எல்லா சாதியினரும் தமக்குக் கீழே ஏறி மிதிக்க ஒரு சாதி உண்டு என்ற நினைப்பில் அல்லவா வாழ்கின்றனர்? இந்தப் பெருமித நினைப்பைக் கேள்விக்குள்ளாக்காமல் எப்படி சாதிய ஏற்றத்தாழ்வு ஒழியும்?

வரலாற்றின் அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற நியாயமான ஏற்பாட்டை ஒட்டி மட்டுமே சாதி என்ற அடையாளம் தேவைப்படுகிறது. இந்த ஒரு தேவையைத் தாண்டி, சாதியின் நீடிப்புக்கு வேறு எந்தக் காரணமும் இருக்க நியாயம் இல்லை. எனவே, உயர்சாதி தொடங்கி எந்தச் சாதியானாலும் சாதியப் பெருமிதம் என்பது நாகரிக சமுதாயத்தில் வெட்கக்கேடான ஒன்றல்லவா?

ஒரு புதிய காலத்தின் பிறப்பை அறிவிக்கிற ஒளிமிக்க யுகப்புருஷனாகத் தோன்றியவன் பாரதி. அவனுள் நிறைய முரண்களும் இருக்கவே செய்கின்றன. கூர்ந்து நோக்கினால் அந்த முரண்கள் அவன் தோன்றிய சாதி – சமூக – கால சூழ்நிலைமைகளின் பிரதிபலிப்புகள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். அவன் காலத்து மனிதர்களில் ஆகப் பெரும்பாலானவர்களிடத்தில் மண்டிக்கிடந்த இருளுடன் புழங்கிய பாரதிதான் அதனைக் கிழித்துக்கொண்டு ஒளிமிக்க ஞானச்சுடராகக் கிளம்பிவந்தான் என்ற நேர்மறை அணுகுமுறையுடன் அவனைப் பார்ப்பதே மிகச்சரியான அறிவியல் பார்வையாக இருக்கமுடியும்.

பாரதியின் மகத்தான அறிவு, அவனது உழைப்பு, எதிலும் ஊடுருவி நின்ற அவனது பார்வை, அவன் பேணிய மனிதநேயம், அதனடிப்படையிலான சமூகநீதியை முன்மொழியும் அவனது தேசபக்தி இவை எல்லாமே இன்றைக்கும் நமக்கு வியப்பையும், வழிகாட்டுதலையும் தரக்கூடியனவாகவே திகழ்கின்றன.

– சோழ. நாகராஜன் – எழுத்தாளர்

ராக்கெட்டை கட்டமைத்த இந்தியாவிற்கு சாக்கடையை கட்டமைக்க முடியாதா? : அறிவியல் அறிஞர் பொன்ராஜ்

ராக்கெட்டை கட்டமைத்த இந்தியாவிற்கு சாக்க டையை கட்டமைக்க முடியாதா?  என்று அறிவியல் அறிஞர்  பொன்ராஜ் கேள்வி எழுப்பி அவரது முகனூல் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.

மேலும் பொன்ராஜ் அவரது முகனூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது :-  

கழிவு நீர் கலக்காத கால்வாய் வெட்டி, அதி திறன், வழிச்சாலை உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் மழைவெள்ள பிரச்சனைக்கு தீர்வு காண லாம் என இந்திய குடியரசு முன்னாள் தலைவர்மறைந்த  அப்துல் கலாம் கூறியதை குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றுமே இல்லாத குறைந்த மழைக்கு இத்தனை பாதிப்பா? ஏன் இந்த நிலைமை?மழை நீரை கடத்தி ஏரிகளுக்கு கொண்டு செல்ல சரியான மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு எங்கும் கிராமத்திலும் இல்லை, நகரத்திலும் இல்லை. ஏரிகள், குளங்கள் மக்களாலும் அரசாலும் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளன. ஏரிகள், குளங்கள்,கண்மாய்கள் தூர்வாரப்படவில்லை. தமிழக நதிகளை இணைக்க எந்த ஒருமுயற்சியும் எடுக்கப்பட வில்லை. அதிதிறன் நீர்வழிச்சாலை ஏற்படுத்தப் படவில்லை.

2005ல் 130 செ.மீ மழை பெய்தது. அது சராசரி மழையின் அளவான 95செ.மீ மழையை விட 36.1 சதவீதம் அதிகம். அப்பொழுது 26 மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்தது. சென் னையில் மட்டும் 235 செ.மீ மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் தான் 67 செ.மீ மழை பெய்தது. அப்போது மிகப்பெரிய பொருள் சேதமும், உயிர் சேதமும் ஏற்பட்டது. அது மட்டுமல்ல, அனைத்து மழை நீரும் கடலில் சென்று கலந்து விட் டது.அந்த மழையில் 2005ல் தமிழக நதி களை இணைப்பதற்கும், தமிழகத்தில் அதி திறன் நீர் வழிச்சாலை அமைக்க வேண்டும் என்று சென்னை ராஜ் பவனில் அப்போதைய தமிழக முதல மைச்சர் ஜெயலலிதாவிடம் டாக்டர் அப்துல்கலாமும், அவரோடு நானும் அதிதிறன் நீர்வழிச்சாலை அமைப்பதின் தேவையை பற்றி ஆய்வறிக் கையை சமர்பித்தோம். அடுத்த முதலமைச்சர் கருணாநிதியிடமும் இதை தொடர்ந்து வலி யுறுத்தினோம். ஆனால், இதுவரை நதிகள் இணைக்கப்படவில்லை. மழைநீர்சேகரிப்பு கட்டமைப்பு எங்கும் உருவாக்கப்படவில்லை.அதி திறன் நீர் வழிச்சாலை உருவாக்கப்படவில்லை. இதுகுறித்து நதிகள் இணைப்பின் வல்லுநர் குழு உறுப்பினராகவும், நபாடுடெக் தலைவரும் பேராசிரியருமான ஏ.சி.காமராஜ் பார்க்காத அரசியல் தலைவர்கள் இல்லை.

அவரும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வருகிறார்.10 வருடம் கடந்து விட்டது. அனை வரும் நிறைவேற்றவில்லை.2005ல் 130 செ.மீ மழை சென்னை யில் பெய்த பொழுது ஏற்பட்ட வெள்ள சேதத்தை காட்டிலும், இன் றைக்கு 10 வருடம் கழித்து 2015ல் பெய்த15 செ.மீ. மழைக்கு தாங்காத சென் னையும் கடலூரும்தான் நமது ஆட்சி முறை நிர்வாகத்தின் அடையாளமாக விளங்குகிறது.விவசாய வளர்ச்சிக்கு அடிப்படை கட்டமைப்பு நீராதாரம், தொழில் முறை வளர்ச்சிக்கும் அடிப்படைத் தேவை தண்ணீர். ஆனால் இந்த சோத னையை தாண்டி நாம் வரமுடியுமா.ஆம், இப்படிபட்ட சோதனை களை தாண்டி தமிழகம் வரமுடியும் என்பது எனது நம்பிக்கை.இது ஒன்றும் ராக்கெட் சயின்ஸ் இல்லை. ராக்கெட்டை கட்டமைக்க தெரிந்த இந்தியாவிற்கு சாக்கடையை கட்டமைக்க முடியாதா. முடியும் ஆனால் லஞ்சம், ஊழல் அற்ற, தைரியமான அரசியல் தலைமையால் மட்டும்தான் இது சாத்தியம்.இதை தமிழ்நாட்டின் நகராட்சி, மாநகராட்சிகளில் செயல்படுத்த முடியாதது என்றில்லை. தமிழ்நாட்டை சிங்கப்பூராக்குவேன் என்ற கோஷங் களைக் கேட்டு கேட்டு ஓய்ந்து விட் டோம்.

சிங்கப்பூரில் ஏற்படுத்தப்பட்ட மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு எப்படி இருக்கிறது என்று பாருங்கள். சிங்கப்பூரில் கழிவுநீர் கலக்காத மழை நீர் சேகரிப்பு உரு வாக்கப்பட்டுள்ளது. ஒரு சொட்டு மழைநீரும் விரையம் இல்லை. கழிவு நீரும் மழைநீரும் கலக்கவும் இல்லை.இப்படி மழை நீரை சேமிப்போம். மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை உரு வாக்கி காட்டுவோம் என்று சொல் பவர்கள் இனி மேல் பஞ்சாயத்து நக ராட்சி, மாநகராட்சி தலைவர்களாக சட்டமன்ற உறுப்பினர், நாடாளு மன்ற உறுப்பினர்களாக வரட்டும் அப்படிப்பட்ட இலட்சியம் கொண்ட இளைஞர்கள் இந்த பதவிகளுக்கு வரவேண்டும். அதை மக்கள் உறுதி செய்தால் மட்டுமே தமிழக தண்ணீர் பிரச்சனைக்கு விடிவு காலம் பிறக்கும்.இதை செய்ய மக்கள் தயார் என்றால்தான் இந்தபிரச்சனைக்கு வழி பிறக்கும். என்று  வெ.பொன்ராஜ் அவரது முகனூல் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்!

சில படங்கள் அறிவிக்கப்படும் போதே பெரும் அதிர்வை ஏற்படுத்தும். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் அறிவிப்பிலேயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘தனி ஒருவன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மோகன் ராஜாவுடன் இணைந்து அவர் நடிக்கும் அடுத்த படம் என்பதால் இன்னமும் கூடுதல் கவனத்தை ஈர்க்கிறது இந்தப் படம்.

மோகன் ராஜாவின் அடுத்த படம் இவருடனா, அவருடனா என்று திரை உலகமும், ரசிகர்களும் உன்னிப்பாக கவனித்து வருகையில் சிவகார்த்திகேயனுடன் அவர் இணைந்து பணியாற்றுவது, எதிர்பார்ப்பின் உச்சக்கட்டம் என்றே சொல்லப்படுகிறது.

இப்படம் பற்றி தயாரிப்பாளர் R.D.ராஜா கூறும்போது, ‘எங்களுடைய நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக உருவாக இருக்கும் இந்தப்படத்தில் இயக்குனர் மோகன் ராஜாவுடன் பணியாற்றுவதில் எங்களுக்கு பெருமை. இதுவரை அவர் இயக்கிய படங்கள் எல்லாமே ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை. இதுவே ஒரு சிறந்த இயக்குனருக்கு தர சான்றிதழ் என சொல்லலாம்.

குடும்பத்தோடு படம் பார்க்க ரசிகர்களை திரை அரங்குகளுக்கு சுண்டி இழுப்பதிலும், வந்த ரசிகர்களை திருப்தி படுத்துவதிலும் அவருக்கென்று ஒரு தனி தன்மை உண்டு. ஒரு தயாரிப்பு நிறுவனமாக எங்களுடைய 24 AM STUDIOS நிறுவனமும், நாயகனாக சிவகார்த்திகேயனும் இயக்குனர் மோகன் ராஜாவுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகுந்த பெருமிதம் கொள்கிறோம்’ என்றார் தயாரிப்பாளர் R.D.ராஜா.

தேமுதிக சமூக வலைதள ஒருங்கிணைப்பளராக எல்.கே.சுதீஷ்

உலகையே ஒரு நொடிக்குள் உள்ளங்கையில் பார்க்க வைக்கும் மாபெரும் சாதனையை பேஸ்ஃபுக், வாட்ஸ்ஆப், டுவிட்டர் மற்றும் பல்வேறு சமூக வலைதளங்கள் செய்து வருகின்றன. சமுதாயத்தின் பல்வேறு நற்செயல்களுக்கு இன்றியமையாதவையாக இருக்கின்றன. தேமுதிகவில் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரை ஒருங்கிணைக்கும் வகையில் தேமுதிக சமூக வலைதள அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் ஒருங்கிணைப்பாளராக திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள் இன்று (11.12.2015) முதல் நியமிக்கப்படுகிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

அதிமுக ஆட்சி செயலிழந்த ஆட்சியா? முடிந்துபோன ஆட்சியா? காலாவதியான ஆட்சியா? : விஜயகாந்த்

 
அதிமுக ஆட்சி செயலிழந்த ஆட்சியா? முடிந்துபோன ஆட்சியா?  காலாவதியான ஆட்சியா? என்று தமிழக மக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஜெயலலிதா பதில் சொல்லவேண்டும் என்று தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் ஜெயலலிதாவுக்கு அறிக்கை மூலம் கோரிக்கை விடுத்ததுள்ளார்.
 
மேலும் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-.
 
அதிமுக, திமுக ஆட்சியில் சீர்மிகு சென்னையாக்குகிறேன், சிங்கார சென்னையாக்குகிறேன் என்று வார்த்தை ஜாலம் பேசி, உலக நாடுகளிடம் கையேந்தி பெற்ற நிதியெல்லாம் வீணாகிப்போய், இன்று தமிழகம் சுமார் 4 லட்சம் கோடிக்கு மேல் கடனில் சிக்கித்தவிப்பதுதான் மிச்சம். இரண்டு ஆட்சியிலும் கூவம் ஆறு, அடையார் ஆறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவை முழுமையாக தூர்வாரப்பட்டதாகவோ, சுத்தம் செய்யப்பட்டதாகவோ தெரியவில்லை.
ஆட்சியாளர்கள் செய்யத் தவறியதை சென்னைவாழ் மக்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்திய மழை வெள்ளம் செய்துள்ளது. மூன்று ஆறுகளையும் சுத்தப்படுத்தி, கரையோரமிருந்த ஆக்கிரமிப்புகளை கபளீகரம் செய்துள்ளது. சோகமான நிலையில் இயற்கை கொடுத்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாத வகையில் தடுக்கவேண்டிய பொறுப்பும், கடைமையும் அதிமுக அரசுக்கு இருக்கிறது.
 
சென்னை மாநகரத்திற்குள் அரசுக்கு சொந்தமான பல இடங்கள் உபயோகமற்று இருக்கிறது. ஆற்றங்கரையோரம் வசித்த ஏழை மக்களை அந்த இடத்திற்கு மாற்றம் செய்து, அவர்களுக்கு அரசு சார்பில் வீடுகளை கட்டிக் கொடுக்கவேண்டும்.
 
மேலும் சென்னையை சுற்றி ஓடுகின்ற ஆறுகளில் சேறுகளும், சகதிகளும் சுமார் ஐந்து முதல் பத்தடி வரை தேங்கியுள்ளன. அவற்றை போர்க்கால அடிப்படையில் தூர்வாருதல் மூலம் அகற்றி, ஆற்றின் இரு கரையோரமும் தடுப்புச் சுவர்களையும், ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளையும் அமைத்து, அதில் கழிவுநீர் கலப்பதையும் தடுக்கவேண்டும். இதைச் செய்வதால் வரும் காலங்களில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் மக்களை காப்பாற்ற முடியும். சென்னையின் குடிநீர் தேவையும் தீரும்.
 
பசியோடு இருப்பவருக்கு மீனை உணவாக கொடுப்பதைவிட, மீன் பிடிக்க கற்றுக்கொடுப்பதே அவருக்கு செய்யும் உதவி என்பார்கள். அதுபோல பாதித்த பிறகு நிவாரணம் வழங்குவதை விட, பாதிப்பே இல்லாமல் செய்வதுதான் மக்கள் நலனை விரும்பும் அரசுக்கு அடையாளமாகும்.
 
தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சாலைகள் முற்றிலும் சேதமடைந்து, போக்குவரத்திற்கு ஏற்றதாக இல்லை. நிவாரண பணிகளில் விநியோகம் செய்யும் முறை சீராக இல்லை. பல இடங்களுக்கு நிவாரண உதவிகள் இன்னும் போய்ச்சேரவில்லை. எனவே உடனடியாக சீர்படுத்த அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
சென்னைக்கு கப்பலில் வந்துள்ள நிவாரண பொருட்களை எடுத்துச்செல்வதற்கு ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும், தமிழகத்திற்கு உதவி செய்ய வந்துள்ள இராணுவத்தினரை ஒருங்கிணைத்திடவோ வழிகாட்டிடவோ ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும் செய்திகள் வருகின்றன. இவ்வளவு மோசமான நிர்வாக சீர்கேட்டை தமிழகம் பார்த்ததில்லை. முதலமைச்சர் – அமைச்சர், மேயர் – கவுன்சிலர் என ஒருவருக்கு ஒருவர் தகவல் தொடர்பில்லாமல் இருப்பதாகவும், அதனால் அதிகாரிகள் செய்வதறியாது திணறுவதன் வெளிப்பாடே இந்த நிலைக்கு காரணமென மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
 
பல்வேறு துன்பங்களை மக்கள் அனுபவித்து வரும் இந்த வேளையில்கூட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவோ, அமைச்சர்களோ நிவாரண பணிகளில் மெத்தனமாக இருந்துகொண்டு, மக்களிடத்தில் பேசமறுத்து, மௌனம் காப்பது ஏன்?
 
சென்னை மேயரும் பேசமறுகிறார், மேயருக்கு அதிகாரம் இல்லையா? மேயருக்கு பதிலாக வேறு நபர் அதிகாரத்தில் இருக்கிறாரா? இவர்கள் அனைவருமே மௌனமாக இருந்துவிட்டால், அனைத்து பிரச்சனைகளும் முடிந்துவிடும் என்று நினைத்துவிட்டார்களா? அப்படியானால் அதிமுக ஆட்சி செயலிழந்த ஆட்சியா? முடிந்துபோன ஆட்சியா? காலாவதியான ஆட்சியா?
என்று தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் இதற்காவது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பதில் சொல்லவேண்டு என்று கேட்டுக்கொள்வதாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.