Home Blog Page 5922

சென்னை வெள்ள பாதிப்பு இடங்களை பார்வையிடுகிறார் கருணாநிதி

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதுடன், வெள்ள பாதிப்பு இடங்களை இன்று பார்வையிடுகிறார் திமுக தலைவர் கருணாநிதி.

இதுகுறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று காலை 11 மணிக்கு சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளான சிந்தாதிரிப்பேட்டை நெடுஞ்செழியன் நகர், சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலம் மற்றும் கோட்டூர்புரம் பாலம் ஆகிய பகுதிகளைச் சார்ந்த மக்களை சந்திக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரணமாக அரசு ஊழியர்களின் ஊதியக் கொடையை ஏற்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை:

வெள்ள நிவாரணத்துக்கு அரசு ஊழியர்களின் ஊதியக் கொடையை ஏற்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகின்றன. கடலூர் மாவட்டம் கடந்த ஒரு மாதமாக மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டு வரும் நிலையில் அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் விரைவுபடுத்தப்படவில்லை.
வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் தீவிரம் காட்டாத அரசு, நிவாரணப் பணிகளுக்காக மற்றவர்கள் அளிக்கும் நிதி மற்றும் நன்கொடைகளை பெற்றுக் கொள்வதிலும் அலட்சியம் காட்டி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளும், சேதங்களும் வரலாறு காணாதவை ஆகும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகள் போதுமானவை அல்ல. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம், சேதமடைந்த பயிர்களுக்கு கூடுதல் இழப்பீடு ஆகியவற்றை வழங்க அதிக நிதி தேவைப்படும். நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு ரூ.1940 கோடியும், தமிழக அரசு ரூ.500 கோடியும் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்துள்ளன. மத்திய அரசு அடுத்தக்கட்டமாக எவ்வளவு நிதி வழங்கும் என்பது தெரியவில்லை. இத்தகைய சூழலில் நிவாரணப் பணிகளுக்காக பல்வேறு ஆதாரங்களில் இருந்து நியாயமான வழிகளில் எவ்வளவு நிதி திரட்ட முடியுமோ, அவ்வளவு நிதி திரட்டுவது தான் தமிழக மக்கள் நலனில் அக்கறையுள்ள ஆட்சியாளர்களின் முதன்மைப் பணியாகும்.
ஆனால், மற்றவர்கள் தாமாக முன்வந்து வழங்கும் நிவாரண நிதியைக் கூட பெற்றுக் கொள்ள தமிழக அரசு மறுக்கிறது. நிவாரணப் பணிகளுக்காக தமிழகத்திற்கு ரூ.5 கோடி நிதியுதவி அளிக்கத் தயாராக இருப்பதாக கர்நாடக அரசு அறிவித்து 5 நாட்கள் ஆகியும் அதை ஏற்றுக்கொள்வது குறித்த முடிவை தமிழக அரசு அறிவிக்கவில்லை. அதேபோல், தமிழ்நாட்டில் இயற்கை பேரிடர் ஏற்படும் போதெல்லாம் ஓடோடி வந்து தங்களின் ஒருநாள் ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்குவது அரசு ஊழியர்களும், பொதுத்துறை நிறுவனத் தொழிலாளர்களும் தான். முதல் கட்ட மழையால் சென்னையும், கடலூரும் பாதிக்கப்பட்ட போதே, பாட்டாளி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பொதுத்துறை தொழிலாளர்களும் தங்களின் ஒருநாள் ஊதியத்தையும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமாத ஊதியத்தையும் நிவாரண நிதிக்கு வழங்குவர் என்று கடந்த நவம்பர் 20 ஆம் தேதியே அறிவித்திருந்தேன். இதற்கான ஒப்புதல் கடிதத்தை அனைத்து பொதுத்துறை நிறுவன நிர்வாகத்திடமும் பாட்டாளி தொழிற்சங்கத்தினர் வழங்கிவிட்டனர். ஆனால், நவம்பர் மாத ஊதியத்தில் நிவாரண நிதி பிடித்தம் செய்யப்படவில்லை.
தமிழக அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனப் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் ஒரு நாள் ஊதியத்தை நிதியாக பெற்றால் சுமார் ரூ.230 கோடி கிடைக்கும். இது நிவாரணப் பணிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். ஆனால், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் ஊதியக் கொடையை பெற்றுக் கொள்ள அரசு மறுக்கிறது. இது ஆட்சியாளர்களின் பொறுப்பற்றத் தன்மையையே காட்டுகிறது. இந்த விஷயத்தில் இனியும் அலட்சியம் காட்டாமல் அரசு – பொதுத்துறை ஊழியர்களின் ஒருநாள் ஊதியத்தை தமிழக அரசு உடனடியாக பெற்றுக்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, நிவாரண நிதி வழங்கும்படி தமிழக மக்களுக்கும், பிற மாநில ஆட்சியாளர்கள் மற்றும் மக்களுக்கும் முதல்வர் ஜெயலலிதா வெளிப்படையாக வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
மழை&வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் கணிசமானவர்கள் அரசு ஊழியர்கள் ஆவர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அரசு ஊழியர்களின் வீடுகள் மழை&வெள்ளத்தில் சிக்கி பெருமளவில் பொருட்சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. அதை சமாளிக்க முடியாமல் அதிகாரிகள் தவிக்கின்றனர். கடந்த 1979 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் தமிழக அரசு ஊழியர்களில் பெரும்பான்மையானோர் பாதிக்கப்பட்டனர். அப்போது மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டதாக வட்டாட்சியரிடமிருந்து சான்றிதழ் வாங்கி வரும் அரசாங்க ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியம் வெள்ள முன்பணமாக (Flood Advance) வழங்கப்பட்டு, அடுத்த சில மாதங்களில் தவணை முறையில் பிடித்தம் செய்யப்பட்டது. அதேபோல், இப்போதும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை முன்பணமாக அரசு வழங்க வேண்டும்.

வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து விலங்கள் தப்பிக்கவில்லை: அமைச்சர் ஆனந்தன்

சென்னை:

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து எந்த விலங்கும் தப்பிச்செல்லவில்லை; சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என வனத்துறை அமைச்சர் ஆனந்தன் கூறியுள்ளார்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளத்தில் சிக்கி பல இடங்களில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்துள்ளது. விலங்குகள் பலவும் கூண்டுக்குள் முடங்கின.

பூங்காவில் 17 இடங்களில் சுமார் 400 மீட்டர் நீளத்திற்கு சுவர் உடைப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான கற்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இந்நிலையில் உடைந்த இடங்களில் முக்கியமான 5 இடங்களில் சுற்றுச்சுவர்கள் மீண்டும் கட்டி முடிக்கப்பட்டு, மீதமுள்ள 12 இடங்களில் தற்காலிகமாக கம்பி வலை தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

விலங்குகள் வசிக்கும் இருப்பிடங்களில் தேங்கி இருக்கும் மழைநீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. விலங்குகளுக்கு தொற்று நோய் பரவாமலிருப்பதற்கு அவற்றின் இருப்பிடங்களில் சுண்ணாம்பு தெளிக்கும் பணிகள், விலங்குகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது.

வனத்துறை அமைச்சர் ஆனந்தன் பூங்காவில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விலங்குகளின் இருப்பிடங்களுக்கு சென்று அவற்றுக்கு உணவு வழங்கும் முறை, பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார். அப்போது பூங்காவில் 166 இனங்களை சேர்ந்த 2,080 பாலூட்டிகளும், பறவைகளும், ஊர்வன விலங்குகளும் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,

பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளும் பாதுகாப்பாக உள்ளது. அங்கு இருந்து எந்த விலங்கும் தப்பி செல்லவில்லை. இதுதொடர்பாக சமூக வளைத்தளங்களில் வரும் தகவல்கள் ஆதாரமற்றது. அவ்வாறு பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். மழையினால் கடந்த 2–ந்தேதி மட்டும் பூங்காவுக்கு விடுமுறை விடப்பட்டது. மற்ற நாட்களில் பூங்கா தொடர்ந்து இயங்கி வருகிறது என்றார்.

குடிமைப்பணி தேர்வுகளை ஒத்திவைக்க ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை:
மழை வெள்ளத்தால் சென்னை உள்ளிட்ட தமிழகப் பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், மத்திய குடிமைப் பணி தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட 27 வகையான அனைத்திந்திய அளவிலான பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கான குடிமைப்பணித் தேர்வுகளின் முதன்மைத் தேர்வுகள் இம்மாதம் 18 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கின்றன.
குடிமைப் பணித் தேர்வுகளில் அதிக அளவில் தேர்ச்சி பெறும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்கள் இப்போது தான் மழை& வெள்ள பாதிப்புகளில் இருந்து மீண்டு வருகின்றன. கடலூர் மாவட்டத்தை கடந்த ஒரு மாதமாக மழை & வெள்ளம் பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் மழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது. புதுச்சேரி மாநிலமும், தமிழகத்தை ஒட்டிய ஆந்திர மாவட்டங்களும் மழை&வெள்ளத்திற்கு தப்பவில்லை.
சென்னையிலும், மற்ற பகுதிகளிலும் ஏற்பட்ட மழை&வெள்ளத்தில், குடிமைப்பணிக்கான முதன்மைத் தேர்வுகளுக்காக தயாராகி வந்த மாணவ, மாணவியரின் புத்தகங்கள், கடந்த கால வினாத் தாட்கள், தரவுகள் ஆகியவை அடித்துச் செல்லப்பட்டு விட்டன. தேர்வுக்கு இன்னும் 10 நாட்கள் கூட இல்லாத நிலையில் அனைத்தையும் மீண்டும் திரட்டி தயாராவது என்பது சாத்தியமானது அல்ல. அதுமட்டுமின்றி, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களால் தேர்வுக்கு தயாராவதைப் பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது.
தேர்வுக்கு தயாராவது ஒருபுறமிருக்க சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், கடலூர் பகுதியிலும் உள்ள மாணவர்கள் கடந்த ஒரு மாதமாக அனுபவித்த துயரம் மற்றும் அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். வெள்ளத்தின் கோரத் தாண்டவத்திற்கு உடைமைகள், ஆடைகள், பாட நூல்களை இழந்தது, கண் எதிரிலேயே குடும்ப உறுப்பினர்களை வெள்ளத்திற்கு பலி கொடுத்தது, வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் வீட்டை விட்டு வெளியேறி அகதிகளைப் போல முகாம்களில் தங்கியிருந்தது, உணவும், உறக்கமும் இன்றி தவித்தது உள்ளிட்ட கோர நினைவுகள் மனதை அழுத்திக் கொண்டே இருப்பதால், இவற்றை அகற்றி விட்டு பாடங்களை மனதில் நிலை நிறுத்துவது இப்போதுள்ள நிலையில் மாணவர்களுக்கு நடைமுறை சாத்தியம் அல்ல.
இந்திய குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகளை எழுதுவோரில் 15 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் மனதளவில் தயாராக நிலையில் முதன்மைத் தேர்வுகளை நடத்துவது அவர்களின் சமவாய்ப்பை பறித்து விடும். எனவே, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் சில மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் மனதளவில் தயாராக வசதியாக குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கும்படி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு மத்திய அரசு உடனடியாக அறிவுறுத்த வேண்டும்.

ஊடகங்களுக்கு சவால் விடுக்கும் தேமுதிகவினர்

தமிழக அரசாங்கத்தின் செய்திகளை ஊடகங்கள் வெளியிடும்போது முதலமைச்சரின் புகைப்படத்திற்கு பதிலாக தமிழக அரசு முத்திரையையும் அதே போல் அரசியல் கட்சியைப் பற்றிய செய்திகளை வெளியிடும்போது அரசியல் கட்சியின் தலைவர் புகைப்படத்திற்கு பதிலாக அரசியல் கட்சியின் கொடியையும் வெளியிடும் தைரியம் உள்ளதா? என அனைத்து ஊடக நிறுவனங்களிடம் தேமுதிக கட்சியை சேர்ந்த மாலிக் அன்சாரி என்பவர் அவரது முகநூல் பக்கத்தின் பதிவின் வாயிலாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் மாலிக் அன்சாரியின் முகநூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளதாவது :-

விளம்பரத்தை நம்பி பிழைப்பு நடத்தும் ஊடகங்களுக்கு சவால்…

தமிழக மக்களின் வரிப் பணத்தில், பல மனிதநேய உள்ளம் படைத்தவர்கள் தரும் முதலமைச்சர் நிவாரண நிதி பணத்தில் தமிழக அரசின் சின்னத்தை புறந்தள்ளி தன்னுடைய படத்தையே முன்னிறுத்துகிறார் ஜெயலலிதா…

ஏன் மேதகு அப்துல் கலாம் அவர்கள் பெயரில் கொடுக்கப்பட்ட விருதில் கூட ஜெயலலிதா படம்தான் பிரதானமாக பொறிக்கப்பட்டது. இதை எல்லாம் ஜெயலலிதா தவிர்க்கமாட்டார்தான்…

அரசு விளம்பரம் மற்றும் கட்சி விளம்பரம் என வருவாயை நம்பி நக்கி பிழைப்பு நடத்தும் விபச்சார ஊடகமே…

தமிழக அரசு சார்பாக கொடுக்கப்படும் நிவாரணத் திட்டங்களில் சலுகைககளில் விலையில்லா பொருள்களில் உள்ள ஜெயலலிதா படம் தெரியாதவாறு தமிழ்நாடு அரசு முத்திரையை முன்னிறுத்தி வெளியிட திராணி இருக்கிறதா ஊடகங்களுக்கு?

ஊடகங்களே! இதுதான் சரியான தருணம். உண்மையிலே அக்கரை இருந்தால் ஊடகங்கள் இதை செய்ய வேண்டும்…
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் மட்டும் இதை எல்லாம் பின்பற்றுகிறார், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும்போது கொடி தோரணமோ, அவரின் புகைப்படமோ, வாழ்க கோஷமோ எதையுமே அவர் ரசிப்பதும் இல்லை, அனுமதிப்பதும் இல்லை…

நீங்கள் சொல்லலாம், தூத்துக்குடியில் கொடுத்த நிவாரணப் பையில் கேப்டன் படம் இருந்ததே என்று, அந்த நிகழ்ச்சி பெரும் மழை சென்னையை மூழ்கடிக்கும் முன்பே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி, பெரும் வெள்ளத்தால் விமான நிலையம் மூடப்பட்டதால் நிறுத்தி வைத்திருந்தார், விமான நிலையம் செயல்பட தொடங்கிய உடனே சென்று நிவாரணத்தை அளித்தார்.

ஆனால் இன்று விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் நிவாரணம் வழங்கும்போது முற்றிலுமாக அவரின் புகைப்படத்தை தவிர்த்தார்…

உண்மையிலேயே நான்காவது தூண் ஊடகங்கள் என்றால், மற்றவர்களை விமர்சிக்கும் ஊடகமே, அரசியல் கட்சிகள், தமிழக அரசு தரும் நிவாரண பொருள்களில் உள்ள முதல்வர் புகைப்படத்தை தவிர்த்து அரசு முத்திரையை முன்னிருத்தி செய்திகளை வெளியிட தைரியம் இருக்கா உங்களுக்கு?

வெளியீடுவீர்களா? பார்ப்போம் எந்த ஊடகம் பின்பற்றுகின்றது என்று?

என தேமுதிக கட்சியை சேர்ந்த மாலிக் அன்சாரி அவரது முகநூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளார்..

குழி வெட்டியவரே குழியில் விழுந்த பரிதாபம்

பாவூர்சத்திரம் அருகே இறந்தவரை அடக்கம் செய்ய தோண்டிய போது அருகில் இருந்த கல்லறை சரிந்து விழுந்து கட்டிடத் தொழிலாளி பரிதபமாக இறந்தார்.
பாவூர்சத்திரம் அருகே கொண்டலூரை சேர்ந்த துரைசாமி மனைவி சீனியம்மாள் (88). நேற்று முன்தினம் இறந்து விட்டார். அவருக்கு சொந்தமான இடத்தில் அவரது கணவரான துரைசாமியின் கல்லறை அருகிலேயே அடக்கம் செய்திட உறவினர்கள் முடிவு செய்தனர்
அடக்கம் செய்வதற்காக கொண்டலூரைச் சேர்ந்தவர் ரத்தினசாமி மகன் மாரிச்செல்வன் (வயது 42) உட்பட 3 பேர்  குழி தோண்டும் பணியில்  ஈடுப்பட்டனர் . குழி வெட்டிகொண்டிருந்த போது  அருகில் இருந்த   கல்லறை திடீரென சரிந்து விழுந்து.
குழியில் நின்ற 3 பேரில் 2பேர் தப்பித்து வெளியேறி விட்டனர். மாரிச்செல்வன் வெளியேறுவதற்குள் கல்லறை  குழியில் நின்ற அவரை அழுத்தியது. இதில் மூச்சு திணறி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாவூர்சத்திரம் காவல் துறையினர்  ஜேசிபி இயந்திரம் கல்லறையை அகற்றி மாரிச்செல்வனின் சடலத்தை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பாவூர்சத்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் துரைசிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தமிழக வெள்ள நிவாரண நிதி எனும் பெயரில் வசூல் வேட்டை நடத்தும் கொள்ளையர்கள்

 
சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஏறத்தாழ நூறாண்டு காலத்தில் கண்டிராத கடும் மழையால் ஏற்பட்ட பெருத்த வெள்ளத்தால் 269 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
 
வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் பெருத்த சேதத்தால் லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து, உடைமைகளை இழந்து, உண்ண உணவின்றித் தவித்து வருகிறார்கள். பச்சிளங்குழந்தைகளுக்கு பால் கூட கிடைக்காமல் மக்கள் தவிக்கும் நிலையே தற்போது நிலவுகிறது.
 
இந்த நிலையில் ஏதாவது ஒரு காரணத்தை கூறி வசூல் வேட்டை நடத்தி வயிறு வளர்த்து வரும் பல பணவெறி பிடித்த வசூல் வேட்டை கொள்ளையர்கள் தமிழக வெள்ள நிவாரண நிதி எனும் பெயரில் டுபாகூர் ரசீதை அச்சடித்து அதை கையில் எடுத்துக்கொண்டு வசூல் வேட்டை நடத்தி வருவதாக பரவலாக கூறப்படுகின்றது.
 
வெள்ளம் வந்த போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யாமல் ஓடி ஒளிந்து தலைமறைவான கொள்ளையர்கள் தற்போது நாங்கள் உதவி செய்ய போகிறோம் என சொல்லுவதாக தெரிகிறது. மேலும் ஒரு சிலர் சமூக ஊடகங்கள் மூலம் ஏற்ப்பட்ட நட்பை தவறுதலாக பயன்படுத்தி வங்கி கணக்கை அறிவித்து பணம் அனுப்ப கோரிக்கை விடுத்து வசூல் வேட்டை நடத்த கூடும் .
 
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகம் முழுவதிலும் இருந்து தமிழக அரசு வழியாக நிதி உதவி செய்வதற்காகவே முதலமைச்சர் பொது நிவாரண நிதி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
 
மனித நேயத்துடன் உதவி செய்ய நினைப்போர் தமிழக அரசு அறிவித்துள்ள கீழ்கண்ட தகவல் படி அனுப்பி உதவலாம்.
 
காசோலை அல்லது வரைவேலை வழியாக பணம் அனுப்ப :-
 
‘The joint secretary & treasurer, Chief Minister’s Public relief fund, Finance department, Government of Tamilnadu, secretariat, Chennai 600009, Tamilnadu, India. எனும் முகவரிக்கு அனுப்பவும்.
 
உங்களுடைய வங்கி கணக்கை பயன்படுத்தி இணையதள (ECS) மூலமாக, தமிழக அரசு பணம் வங்கி கணக்கில் பணம் செலுத்த :-
 
Government of Tamilnadu,
S.B.A/c number: 117201000000070
Indian Overseas Bank, IFS code: IOBA0001172,
Secretariat Branch, Chennai – 600 009
CMPRF PAN: AAAGC0038F.
எனும் கணக்கில் செலுத்தலாம் .
 
நிவாரண நிதிக்கு அனுப்பப்படும் பணத்துக்கு வருமான வரியில் இருந்து 80-ஜி பிரிவின்கீழ் வரி விலக்கும் கிடைக்கலாம் .
 
தமிழக வெள்ள நிவாரண நிதி எனும் பெயரில் டுபாகூர் ரசீதை அச்சடித்து அதை கையில் எடுத்துக்கொண்டு உங்களை கட்டாயமாக பணம் கொடுத்தே ஆக வேண்டும் என்று வசூல் வேட்டை கொள்ளையர்கள் மிரட்டினால் எவ்விதமான
தயக்கமும் இல்லாமல் காவல் துறையின் அவசர தொலைபேசி எண் 100யை தொடர்பு கொண்டோ அல்லது உங்களுக்கு
அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் நேரடியாக புகார் அளிக்கவும்.

கனமழை காரணமாக 13ஆம் சென்னை சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு!

கடும் மழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக டிசம்பர் 10-ம் தேதி தொடங்குவதாக இருந்த சென்னை சர்வதேச திரைப்பட விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விழா அமைப்பினர் விடுத்துள்ள அறிக்கையில், “இந்நாள் வரை சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தாங்கள் அனைவரும் அளித்து வந்த அன்பிற்க்கும் ஆதரவிற்க்கும் நன்றி

சற்றும் எதிர்பாரா நேரத்தில் ஏற்பட்ட மழையினாலும் வெள்ளத்தினாலும், பொதுமக்கள் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இயல்பு நிலை படிப்படியாக திரும்பி கொண்டிருக்கும் இந்நிலையில் இம்மாதம் 10ஆம் தேதி நடக்கவிருந்த 13ஆம் சென்னை சர்வதேச திரைப்பட விழா தற்போதைக்கு தள்ளி வைக்கப்படுகிறது.

13ஆம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் புதிய அட்டவனை நாள், நேரம் மற்றும் இடத்தின் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

உங்கள் ஆதரவிற்க்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி.” என்று கூறியுள்ளனர்.

தயவு செய்து பணம் தராதீங்க… கார்த்தி வேண்டுகொள்!

சென்னை லேடி ஆண்டாள் பள்ளியில் இன்று நான்காவது நாளாக வெள்ள நிவாரண பொருட்களை பல்வேறு இடங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் நடிகர், நடிகைகள் மற்றும், தன்னார்வ தொண்டர்கள்.

கேரளா மற்றும் பல்வெறு இடங்களிலிருந்து வந்த வெள்ள நிவாரண பொருட்களை நடிகர்கள் மற்றும் என்.ஜி.ஓக்களின் உதவியுடன் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு பால், பிஸ்கேட், பிரட் போன்ற உணவு பொருட்களை பிரித்து அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது குறித்து நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி கூறியதாவது,

சென்னையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். தன்னார்வர்கள் மட்டுமின்றி பல நடிகர் மற்றும் நடிகைகள் இதில் கலந்து கொண்டு எங்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பாக சாந்தனு, ரமணா, சரளா அம்மா போன்றவர்கள் பொருட்களை நேரடியாக பாதிக்கப்பட்ட இடத்திற்கு கொண்டு சென்று சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தண்ணீரின் அளவு குறைய குறைய மக்களின் தேவை மாறிக் கொண்டேயிருக்கிறது. அதற்கேற்றார்போல நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம். நானும் விஷாலும் வட சென்னைக்கு சென்று அங்கிருக்கும் நிலைமையை அறிந்து அவர்களின் தேவை என்ன என்று தெரிந்து கொண்டு அதற்கேற்றவிதத்தில் நிவாரண பொருட்களை அனுப்பிக் கொண்டிருக்கிறோம்.

காவல் துறையும் எங்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் பல இடங்களில் தண்ணீர் வற்றாத நிலையில் அங்கிருக்கும் பெரும்பாலான குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர்கள் அவதிப்பட்டுக் கொண்டிருப்பது பெரிய வருத்தத்தை தருகிறது.

எம்.ஜி.ஆர் நகர், போரூர் ஆகிய இடங்களில் ரமணாவும், சைதாப்பேட்டையில் சாந்தனு, ஈ.சி.ஆரில் சந்த்ருவும் இன்னும் பல இடங்களில் பல நடிகர்கள் நிவாரண உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

பொதுமக்கள் தற்போது பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். உடனே பாதிக்கப்பட்ட ஏரியாவில் இருக்கும் மக்கள் அனைவரும் அருகில் இருக்கும் மருத்துவ முகாமிற்கு சென்று முன்னெச்சரிக்கை ஊசியை போட்டுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள் பலரும் இங்கு வந்து எங்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். ஐ.டியில் வேலை செய்பவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் என பலர் வருகிறார்கள். இன்னும் பலர் நினைத்தால் இங்கு வந்து அவர்களால் முடிந்த உதவிகளை செய்யலாம்.

விஷால் தற்போது பல நிவாரண பொருட்களுடன் கடலூர் மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார். அதுமட்டுமின்றி அகரம் பவுண்டேஷன் மூலம் சிதம்பரம் யூனிவர்சிட்டியிலிருந்தும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மூலமாகவும் பல நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட இடத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறோம்.

முழுவதுமாக வெள்ளம் வடிந்தபின் மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, உப்பு, மிளகாய், துணிகள் போன்ற பொருட்கள்தான் மிக மிக முக்கியமானது, பாதிக்கப்பட்டவர்களை சகஜ நிலைக்கு கொண்டுவர இதுதான் அடுத்து அதிகமாக தேவைப்படும் என்பதால் தற்போது அதனை முழுவீச்சில் பேக் செய்து கொண்டிருக்கிறோம்.

மக்கள் அனைவரும் களத்தில் இறங்கி வெள்ளம் வடிந்த பகுதிகளில் இருக்கும் அசுத்தங்கள் மற்றும் கழிவுகளை சுத்தம் செய்தால் மட்டுமே விரைவில் பரவயிருக்கும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். மக்கள் அனைவரும் தயவு செய்து அவரவர் தெருவை சுத்தம் செய்தாக வேண்டும். அரசாங்கத்தால் அனைத்து இடங்களிலும் விரைவாக சுத்தம் செய்ய முடியுமா என்பது சந்தேகமே.

வெள்ள நிவாரணத்துக்கு உதவி செய்ய நினைப்பவர்கள் தயவு செய்து பணமாக தரவேண்டாம். பொருட்களாக கொடுத்தால் அனைத்து இடங்களுக்கு கொண்டு சேர்க்க உதவியாக இருக்கும்.

இவ்வாறு நடிகர் கார்த்தி கூறினார்.

தமிழக அரசாங்கத்தை ஆள நேர்மையான அரசு அதிகாரிகளை ஆட்சி கட்டிலில் அமரவைக்க மாணவர்கள் திட்டம்

அதிகார வ(ர்)க்கத்த அரசியல்வாதிகள்மீது வெறுப்படைந்த தமிழக மாணவர்கள் நேர்மையான அரசாங்க ( அரசு பணி ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள) அதிகாரிகளை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க மாணவர்கள் திட்டம் போட்டு முகநூலில் “Need A Change – 2016” எனும் சமூக பக்கத்தை நேற்று
உருவாக்கியுள்ளனர்.

மக்களின் வரிப் பணத்தில் தமிழக அரசாங்கம் பொதுமக்களுக்கான அனைத்து நலத்திட்ட உதவிகளுக்காக செலவிட பெரும் தொகையை ஒதுக்குகிறது.

அவ்வாறு ஒதுக்கப்படும் பல கோடி ரூபாய்களை பெரும்பாலான அதிகார வ(ர்)க்கத்த அரசியல்வாதிகள் பொதுநல நோக்கம் இன்றி லஞ்சம் பெற்றும், ஊழல் செய்தும், பொதுநலத் திட்டங்களுக்கு முறையாக செலவிடாமல் கொள்ளையடித்து சொத்து சேர்க்கும் பேராசையில் தொடர்ந்து சுற்றி திரிந்து வரும் சுயநல அரசியல்வாதி கரைவேட்டி கொள்ளையர்கள் அரசியலை குலத் தொழிலாக செய்து வருகின்றனர்.

சாதாரணமாக சாப்பிடவே வழியின்றி பெரும்பாலானவர்கள் அதிகார வ(ர்)க்கத்த அரசியல்வாதிகளின் ஆதரவால் அவர்களுக்காக பல சமூக விரோத செயல்களை செய்து பரவலாக தமிழகத்தில் தொடர்ந்து சுற்றி திரிந்து வருவதாக தமிழக மக்களால் பரவலாக பேசப்படுகிறது.

சாப்பிடவே வழியின்றி சுற்றி திரிந்த பலர் அரசியல் கட்சியில் இணைந்து அந்த கட்சியில் வட்டம், சதுரம், முக்கோணம் என பதவிகளைப் பெற்று கட்டப் பஞ்சாயத்து செய்தும், பொதுமக்களின் வரிப் பணத்தை கொள்ளையடித்தும் அரசியலை குலத் தொழிலாக மாற்றி சொத்து சேர்த்து உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஏறத்தாழ நூறாண்டு காலத்தில் கண்டிராத கடும் மழையால் ஏற்பட்ட பெருத்த வெள்ளத்தால் 269 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் பெருத்த சேதத்தால் லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து, உடைமைகளை இழந்து, உண்ண உணவின்றித் தவித்து வருகிறார்கள். பச்சிளங்குழந்தைகளுக்கு பால் கூட கிடைக்காமல் மக்கள் தவிக்கும் நிலையே தற்போது நிலவுகிறது.

இந்த நிலை ஏற்பட்டதற்கு முக்கியக் காரணமே பொதுநல நோக்கம் இன்றி லஞ்சம் பெற்றும் ஊழல் செய்தும், பொதுமக்களின் வரிப் பணத்தை அரசாங்க பொதுநல திட்டங்களுக்கு முறையாக செலவிடாமல் கொள்ளையடித்து சொத்து சேர்க்கும் பேராசையில் தொடர்ந்து சுற்றி திரிந் து வரும் சுயநல அரசியல்வாதி கரைவேட்டி கொள்ளையர்களே என பொதுமக்களால் குற்றம் சாட்டப்படுகிறது.

அரசியல்வாதிகள் பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பணத்தை கொள்ளை அடித்து சொத்து சேர்க்க செய்த அட்டகாசத்தில் ஒன்றுதான் நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு. தண்ணீர் செல்லும் பாதைகளையெல்லாம் அடைத்தும், குளங்கள், கண்மாய்களையெல்லாம் அழித்தும் பெரும் பணம் கொண்ட கூட்டத்திடம் வசூல் வேட்டை நடத்தி அந்த இடத்தை குடியிருப்பு பகுதிகளாக ஆக்க அரசாங்கத்தை ஆண்ட அதிகார வர்க்கத்தினர் அனுமதி அளித்தது முதல் தவறு. இதை விட பெரிய கொடுமை அரசாங்கமே கண்மாய்களையெல்லாம் குடியிருப்பு பகுதிகளாக ஆக்கி பொதுமக்களிடம் விற்றது.

தண்ணீர் செல்லும் பாதைகளையெல்லாம் ஆக்கிரமிக்காமல் இருந்திருந்தால் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கடும் மழையால் ஏற்பட்ட பெருத்த வெள்ள விபத்தால் லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து, உடைமைகளை இழந்ததையும் 269 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் உயிர் பலி யையும் தவிர்த்து இருக்க முடியும்.

மேலும் தண்ணீர் செல் லும், தேங்கும் இடங்களையெல்லாம் ஆக்கிரமித்துவிட்டு இன்று குய்யோ முறையோ என்று இயற்கையின்மீது குறைசொல்வது என்ன நியாயம்? மேலும் மிகவும் திறமை வாய்ந்த பெரும்பாலான எழுத்தாளர்கள் மற்றும் பல ஊடக நிர்வாக ங்களும் பொதுநல நோக்கத்தைக் கருத்தில் கொள்ளாமல் கொள்ளையடிக்க சுற்றி திரியும் அரசியல்வாதி களுக்கு ஆதரவாக அவர்களிடம் வாங்க வேண்டியதை வாங்கி கொண்டு கரைவேட்டி கொள்ளையர்களின் புகழை ஊடகங்களின் வாயிலாக பரப்பி வருவதாகவும் பலரால் கூறப்படுகிறது.

மேலும் தற்போது மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த அனைத்து இடங்களிலும் அதிகபட்ச உடனடியாக உதவி செய்தது யார் என்றால் ஜாதி, மத, வேறுபாடுகள் இன்றி பொதுநல நோக்கத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்புகள் வெளி மாவட்டங்களில் இருந்தும் உணவு மற்றும் தேவையான அத்தியாவசிய பொருட்களை தொடர்ந்து கொண்டு சென்று இலவசமாக வழங்கி சேவை வருகின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக தமிழக அரசாங்கமும் அரசியல் கட்சியினரும் எந்த உதவியும் செய்யவில்லை என்பதுதான் பொதுமக்களின் குற்றச் சாட்டு. தற்போதுள்ள ஆளும் கட்சியை சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பெயர் அளவில் பொதுமக்களுக்கு உதவி செய்வதாக கூறி ஊடகங்கள் வாயிலாக தலையை காட்டிவிட்டு அவர்களும் தலைமறைவு ஆகிவிட்டனர்.

தமிழக அரசை நம்பாமல் தங்களால் முடிந்த உதவிகளை தாங்களாக முன்வந்து வீடிழந்து, பசி, பட்டினியால், நிம்மதியிழந்து திக்கற்று தவிக்கும் தொப்புள்கொடி உறவுகளின் துயர் துடைக்க கொடுக்கும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கிய நிவாரணப் பொருட்கள்மீதுகூட முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை ஒட்டி அயோக்கியத்தனம் செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அரசியல் போன்று எவ்விதமான இலவச சுய விளம்பரமும் தேடிக் கொள்ள ஆசைப்படாமல் பாதிக்கப்பட்டோருக்கு உதவியது இன, மத, மொழி, நிற வேறுபாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு மனித நேயத்துடன் உதவிக்கரம் கொடுத்த தனியார் அமைப்புகள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் மற்றும் மனிதநேயம் கொண்ட தனி மனிதர்களும்தான் என்றால் மிகையல்ல.

தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டு இருக்கும் அதிமுக கட்சியின் சார்பில் சொந்த செலவில் வெள்ளத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு என்ன நிவாரண உதவி செய்தார்கள் எனும் கேள்வியை பலர் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை மாநகரின் ஒரு பகுதியில் வெளி மாநிலத்தை சேர்ந்த தன்னார்வ தொண்டு அமைப்பினர் மனித நேயத்துடன் வெள்ளத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு பொதுமக்கள் இருக்கும் பகுதியிலேயே 5000 உணவுப் பொட்டலங்களை தயார் செய்தனர். அப்போது அதிமுக கட்சியை சேர்ந்த அந்த பகுதி கவுன்சிலரின் கணவர் பார்த்திபன் என்பவர் அதிமுக கட்சியின் சார்பில் வழங்க 2000 உணவு பொட்டலங்களை தன்னார்வ தொண்டு அமைப்பினரிடம் கேட்டு மிரட்டி அட்டூழியம் செய்ததாகவும் செய்திகள் வந்துள்ளன.
வெள்ளத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக தமிழக அரசாங்கமும் அரசியல் கட்சியினரும் எந்த நிவாரண உதவியும் செய்யவில்லை என்பதை உணர்ந்துள்ளனர்.

தமிழகத்தில் வரும் 2016ம் வருடம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தற்போதுள்ள அதிகார வ(ர்)க்கத்த அரசியல்வாதிகளுக்கு எதிராக வாக்களித்து ஒழித்து கட்ட வேண்டும் என தமிழக மக்கள் கங்கணம் கட்டிக் கொண்டு மனக் குமுறலுடன் உள்ளனர்.

இந்த நிலையில் அதிகார வ(ர்)க்கத்த அரசியல்வாதிகள்மீது வெறுப்படைந்த தமிழக மாணவர்கள் நேர்மையான அரசாங்க ( அரசு பணி ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள) அதிகாரிகளை ஆட்சி கட்டிலில் அமர வைக்க திட்டம் போட்டு முகநூலில் Need A Change – 2016 எனும் சமூகப் பக்கத்தை நேற்று உருவாக்கியுள்ளனர்.

மாணவர்கள் உருவாக்கிய அந்த முகநூல் சமூகப் பக்கத்தை இதுவரை 4000திற்கும் மேற்பட்டோர் விரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் அதிகார வ(ர்)க்கத்த அரசியல்வாதிகள் ஒழிந்து நேர்மையான அரசாங்க (அரசு பணி ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள) அதிகாரிகளை ஆட்சி கட்டிலில் அமரவைத்து நல்லாட்சி மலர மாணவர்கள் போடும் திட்டம் சரியானதே.

இளம் தலைமுறையினரின் பிற்கால வாழ்க்கை நலனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் நல்லாட்சி மலர நேர்மையான அரசாங்க (அரசு பணி ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள) அதிகாரிகளை ஆட்சி கட்டிலில் அமர வைக்க முன்வர வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.

தமிழகத்தில் நல்லாட்சி மலர நடைபெறவுள்ள 2016ம் வருட சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நேர்மையான அரசாங்க (அரசு பணி ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள) அதிகாரிகளுக்கு ஆதரவாக அனைவரும் வாக்களித்து கட்டாயம் வெற்றி பெற செய்வார்கள் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

எது எப்படியோ பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பொதுமக்களின் வரிப் பணத்தை ஊழல் செய்து கொள்ளையடித்து சொத்து சேர்க்கும் அதிகார வ(ர்)க்கத்த அரசியல்வாதிகள் ஒழிந்தால் சரி .

தமிழகத்தில் நல்லாட்சி மலர மாணவர்கள் எடுத்துள்ள முயற்சி வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.!