Home Blog Page 5923

ரூ.1 லட்சம்  தமிழக வெள்ள நிவாரண நிதியாக  வழங்கிய பாலியல் தொழிலாளர்கள்

 

 தமிழகத்தில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலியல் தொழிலாளர்கள் தமிழக வெள்ள நிவாரண பணிகளுக்காக சினேகாலயா’ என்ற தொண்டு நிறுவனம், அகமதுநகரில் நேற்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை அந்த மாவட்டத்தின் ஆட்சியர் அனில் கவடேவிடம் அவர்கள் வழங்கியுள்ளனர்.

 பாலியல் தொழிலாளர்கள் வெள்ள நிவாரண நிதி அளித்தது குறித்து   சினேகாலயா’ நிறுவனர் கிரிஷ் குல்கர்னி செய்தியாளர்களிடம்  கூறியதாவது :-

 தமிழக வெள்ள பாதிப்பைப் பற்றி கேள்விப்பட்டு, கடந்த 4 நாட்களாக பாலியல் தொழிலாள  பெண்கள் மன உளைச்சலில் இருந்தனர். மாவட்டத்தில் மொத்தம் உள்ள 3 ஆயிரம்  பாலியல் தொழிலாளர்களில் 2 ஆயிரம் பேர், இந்த நிதியில் தங்கள் பங்கை கொடுத்துள்ளனர். மேலும், கடந்த 4 நாட்களாக தினமும் ஒருவேளை மட்டுமே அவர்கள் சாப்பிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது என கிரிஷ் குல்கர்னி செய்தியாளர்களிடம்  கூறினார்.

பெத்தநாடார்பட்டியில் மண்வள தினம்

பாவூர் சத்திரம் அருகேயுள்ள பாரளுமன்ற உறுப்பினரின் லட்சிய கிராமமான பெத்தநாடார்பட்டியில் உலக மண் வள தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராதா  முன்னிலை வகித்தார்  ,வேளாண்மை உதவி இயக்குநர். நல்லமுத்துராஜா வரவேற்புரையாற்றினார் விழாவில்   வேளாண்மை இணை இயக்குநர் பெருமாள் விவசாயிகளுக்கு  மண்வள அட்டையினை வழங்கி பேசினார் அவர் பேசுகையில் விவாசாயத்தின் அவசியம் குறித்தும் ,மண்வளத்தை பரிசோதிப்பதின் மூலம் மண்ணின் உள்ள தரத்திற்க்கேற்ப்ப என்னென்ன பயிர்கள் பயிரிடலாம் ,தேவையான ஊட்டசத்துக்கள் என்னென்ன என்பது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார்   .விழாவில் ஏராளமான விவசாயிகள்  கலந்துகொண்டனர்

மதுரை அரசு மருத்துவமனை பிரேத அறை ஊழியர் விஜயனின் மனித நேயம்

மருத்துவமனையில் பிரேதங்களை பரிசோதனை செய்யும் பகுதி பக்கம் செல்லவே பெரும்பாலோர் சங்கடப்படுவார்கள்.

இந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிரேத அறையில், பிரேதத்தை பரிசோதனை செய்யும் ஊழியர் விஜயன், அவரது 1 மாத சம்பளம் 13 ஆயிரம் மற்றும் வீட்டில் வைத்திருந்த 7 ஆயிரம் ஆக மொத்தம் ரூ. 20 ஆயிரத்தை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்து நேற்று ஒப்படைத்துள்ளார்.

மிக கஷ்டமான வேலையை செய்யும் பிரேத அறை ஊழியர் விஜயனிடம் அவர் வெள்ள நிவாரண நிதி அளித்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது கூறியதாவது :-

“தமிழகத்தில் சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் கடும் மழை வெள்ளத்தால் மக்கள் படும் துன்பங்களை பார்த்து என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நானும் ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தேன். என்னுடைய குடும்ப உறுப்பினர்களிடம் இந்த மாத வீட்டு செலவை எப்படியாவது சமாளித்து கொள்வோம் என்றும் இந்த மாதத்தின் சம்பளத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொடுக்கப் போகிறேன் என்றும் சொன்னேன். அவர்கள் ஒத்துக் கொண்டார்கள்.
இப்போதுதான் எனக்கு சம்பளம் ரூ.13 ஆயிரம் வந்தது.

எனது மகள் சேமித்து வைத்து கொடுத்த பணத்தையும் சேர்த்து ரூ. 20 ஆயிரத்தை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்து கொடுத்துள்ளேன்” என மனிதநேயம் கொண்ட பிரேத அறை ஊழியர் விஜயன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததார் .

மக்களின் வரிப் பணத்தில் தமிழக அரசாங்கம் பொதுமக்களுக்கான அனைத்து நலத்திட்ட உதவிகளுக்காக செலவிட பெரும் தொகையை ஒதுக்குகிறது.

அவ்வாறு ஒதுக்கப்படும் பல கோடி ரூபாய்களை பெரும்பாலான அதிகார வ(ர்)க்கத்த அரசியல்வாதிகள் பொதுநல நோக்கம் இன்றி லஞ்சம் பெற்றும் ஊழல் செய்தும், பொதுமக்களின் வரிப் பணத்தை பொதுநல திட்டங்களுக்கு முறையாக செலவிடாமல் கொள்ளையடித்து சொத்து சேர்க்கும் பேராசையில் தொடர்ந்து சுற்றி திரிந்து வரும் சுயநல அரசியல்வாதி கரைவேட்டி கொள்ளையர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மனமின்றி உள்ளனர்

இந்த நிலையில் தற்போது சென்னை மீளக் காரணம் அரசியல் போன்று எவ்விதமான இலவச சுய விளம்பரமும் தேடிக் கொள்ள ஆசைப்படாமல் இன, மத, மொழி, நிற வேறுபாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு மனித நேயத்துடன் உதவிக்கரம் கொடுத்த தனியார் அமைப்புகள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் மற்றும் மனிதநேயம் கொண்ட தனி மனிதர்களும்தான் என்றால் மிகையல்ல.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு மனித நேயத்துடன் உதவிக் கரம் கொடுத்த, கொடுத்துக் கொண்டுள்ள அனைவருக்கும் தினசரி இணைய தமிழ்ச் செய்தித் தளம் நிறுவனம் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

பாவூர்சத்திரம் அருகே ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கொடிக்கம்பங்கள் அகறம்

பாவூர்சத்திரம் அருகே கொடிகம்பங்கள் அகற்றம்  பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமம் நாட்டார்பட்டி   தற்போது பெய்து வரும் கனமழையால்   ஊர் அருகே உள்ள குளங்கள் பெருகி அதன் உபரி நீர்  மற்றும்  வயல்களில் ஊற்று தண்ணீர்  ஊர் பகுதியில் உள்ள வாறுகால் வழியாக வரத் தொடங்கியது . இந்நிலையில் நாட்டார்பட்டி பூவனூர் சாலையில் உள்ள வாறுகாலில் நேற்று தண்ணீர் அதிகரிக்க ,அதிகரிக்க கழிவுகள் போய் அடைத்துக்கொண்டு நீர் செல்ல முடியாமல் ஊருக்குள் வரத்தொடங்கியது ,சென்னை நிலை  இங்கும் ஏற்றப்பட்டு விடக்கூடாது என்று அப்பகுதி கிராமமக்கள்   அனைவரும் ஒன்று சேர்ந்து, தண்ணீர் ஊருக்குள் வந்து விடாமல் இருக்க அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற முன்வந்தனர்.   இதையடுத்து  ஆக்கிரமிப்பு பகுதிகளை அதன் உரிமையாளர்களே முன்வந்து எடுத்து கொள்வதாக முடிவுஎடுத்து திப்பணம்பட்டி பஞ்சாயத்திற்கு எழுத்து பூர்வமாக தெரிவித்தனர். பின்னர் ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகளின் முன்பகுதி மற்றும் தெருவோரக் கடைகள்  மற்றும் ஆக்கிரமித்து கொட்டப்பட்ட கழிவுகள் மற்றும் ரேசன்கடை அருகில் இருந்த அனைத்து கொடிகம்பங்களை அந்தந்த கட்சியினரே முன்வந்து அகற்றினர். பின்னர் கொடிகம்பம் அமைக்கபட்டிருந்த கான்கிரீட் மேடைகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது மேலும் வாறுகாலில் ஆங்காங்கே இருந்த அடைப்புகளையும் சரிசெய்தனர். இதனால் நாட்டார்பட்டி, பூவனூர் சாலை சிலமணிநேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.கடலூர் மற்றும் சென்னை மழை நல்ல பாடம் கற்றுத்தந்தது ,மக்களும் பாடம் கற்றுக்கொண்டனர் ,இனியாவது அனைத்துஊர்களிலும் இது போன்ற ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்து நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்களை அரசு அகற்ற முன்வரவேண்டும் மக்களும் அரசையே எதிர்பார்க்காமல் ஆக்கிரமிப்பு என தெரிந்தால் இயற்கையை எதிர்க்காமல் உரியவர்களே முன்வந்து அகற்றினால் பேரழிவுகளை தவிர்க்கலாம்

உள்ளங்களைக் காட்டிக் கொடுத்த வெள்ளம்!

தனி ஒருவனாய் என்ன செய்துவிட முடியும்?

ஊரே தவிக்கிறது. முடங்கிப் போன பொதுப் போக்குவரத்து. ஆட்டோ, கார், டாக்ஸி இத்யாதிகள் எல்லாம் முடக்கிப் போட்டுவிட்டார்கள். ஒன்றிரண்டு ஆட்டோக்காரர்களும்கூட ஐநூறும் ஆயிரமும் வசூலித்து தங்கள் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்திக் கொண்டார்கள்.

டிச.1 இரவு முழுவதும் தாம்பரம் – பொத்தேரி நடந்து சென்றதில், மக்களின் தவிப்பைப் புரிந்து கொண்டிருந்தேன். எப்படியாவது சுற்று வட்டத்தில் உள்ள தங்கள் கிராமங்களுக்கு, ஊர்களுக்கு சென்று சேர்ந்துவிட வேண்டும் என்று துடியாய்த் துடித்தார்கள் ஒவ்வொருவரும்.

எதிர் ப்ளாட் பையனை செங்கல்பட்டில் இருந்து அழைத்து வந்து விட்டதும் எண்ணம் தீவிரமடைந்தது. வண்டியில் பெட்ரோல் குறைவாக இருந்தது. பங்க் போனால்… கயிறு கட்டப்பட்டிருந்தது. வேறு வழி… மறைமலைநகருக்கு ஓட்டினேன். இல்லை… சிங்கப்பெருமாள் கோவிலுக்கு முன்னுள்ள பங்க்கில் கிடைத்தது. 5 லிட்டர் போட்டுக் கொண்டு வெளியில் வந்தேன்.

அருகில் கிராமத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கையை நீட்டினார். தம்பி… என்னை கூடுவாஞ்சேரியில் விட்டுடுங்களேன்…

அதில் இருந்து துவங்கிய பயணம்… அடுத்த நாள் மதியம் வரை தொடர்ந்தது. சின்னச் சின்ன இடைவேளைகளைக் கடந்து!

எஸ்.ஆர்.எம். பல்கலை விடுதி மூடப்படுவதாக வந்தது அறிவிப்பு! வாட்ஸ் அப் மெசேஜ் வந்தது. நெடுஞ்சாலை வழியாகச் செல்பவர்கள் தங்குவதற்கு எஸ்.ஆர்.எம். பல்கலை திறந்துவிடப்பட்டிருக்கிறது என்று. ஆனால்… பாவம்… தங்கியிருந்த மாணவர்கள் வெளியே துரத்தியடிக்கப்பட்டிருந்தார்கள். தவித்து நின்றனர் மாணவர்கள். முதல்முறையாக போக்குவரத்து விதியை மீறி மூன்று பேர், நான்கு பேர் என மாணவர்களுடன் பெருங்குளத்தூருக்கும் செங்கல்பட்டுக்கும் நாலைந்து முறை சென்று வந்தேன்!

தனி ஒருவனால் உடனடியாகச் செய்யமுடிந்தது இதுதான்!

அடுத்த நாள் தொடங்கி ஊரெல்லாம் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப் பட்டிருந்தன. உதவும் உள்ளங்கள் வெளியூர்களில் இருந்தெல்லாம் அனுப்பி வைக்க, கடைகளில் இருப்பில் இருந்த பொருள்கள், காய்கறிகளை அநியாய விலைக்கு விற்றுக் கொண்டிருந்தனர் அடையாறு ஆற்றின் கரையோர கடைக்காரர்கள் பெரும்பாலோர்… பால் பாக்கெட் ஒரு நாளில் கெட்டுப் போய் விடும்தான்! ஆனால் கிடைத்ததை நேர்மையாக விற்க இந்தக் கடைக்காரர்களுக்கு மனசில்லை! அரை லிட்டர் நூறு ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தார்கள். தயிர், பிஸ்கட், கறிகாய் எல்லாம் விலை எகிறிக் கொண்டிருந்தது.

வெவ்வேறு ஊர்களில் இருந்து வரும் நிவாரணப் பொருள்களில் அம்மா படம் ஒட்டுவதில் அக்கறையாய் அதிமுக.,வினர்.

டிவி கேமராக்களையும் ஸ்டூடியோக்களையும் ஆக்கிரமிக்கும் ஒரே நோக்கத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள்!

குட்டியானை வண்டியில் இரண்டு அண்டாக்களில் உணவைக் கொண்டு வந்து… அதில் இயக்கத்தின் கொடியை ஏழு அடிக்குப் பறக்கவிட்டபடி அண்ணாசாலையில் அங்கும் இங்கும் அலைபாய்ந்தவர்கள்…

மதம் கடந்த மனிதம் என்று எப்படியாவது ஒரு காட்சியைக் காட்டி, அழ வைத்து விட வேண்டும் என்ற நோக்கில் சீரியல் இயக்குனர்களாகிவிட்ட டிவி செய்தியாளர்கள்…

பின்னணியில் சோகம் இழையோடும் அழுகை இசையைக் கொடுத்து காட்சித் தொகுப்புகளை அளித்து… சோகத்தில் தவிக்கும் மக்களை மேலும் சோகத்தில் அழ வைத்து விடும் ஒரே நோக்கத்தில் செய்தி சேனல்கள்…

இயல்பு நிலைக்கு திரும்பியது என்று ஒரு சேனல்… சென்னையே இடுகாடாகிவிட்டதாக ஒரு சேனல்…

ஆனால்…

ஜாபர்கான்பேட்டை, எம்.ஜி.ஆர்.நகர், சைதை, கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில்… நான் கண்ட காட்சி பெரும் நம்பிக்கையைத் தந்தது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை. விளையாடிக் கொண்டிருக்காமல்… கிரிக்கெட்டும் சினிமாவும்தான் எங்கள் அடையாளம் என்று வைத்திருந்த அடையாளங்களை உடைத்துக் கொண்டு… 20 வயதுக்குக் குறைந்த இளைய திலகங்கள் அங்கும் இங்கும் பரபரப்பாய் ஓடி ஓடி… சாப்பாட்டுப் பொட்டலங்களையும் பாய், போர்வை, நாப்கின், கொசுவர்த்தி, தீப்பெட்டி, மெழுகுவர்த்தி இத்யாதிகளை வாங்கிக் கொண்டு… வயதானவர்களுக்குக் கொண்டு சென்று கொடுத்துச் சென்ற உற்சாகக் காட்சிகள்…

டி.வி. கேமராக்களை ஒரு பொருட்டாக மதிக்காமல்… தங்கள் போக்கில் உதவிகளைச் செய்து கொண்டிருந்த முகம் காட்ட விரும்பாத தன்னார்வ மனிதர்கள்…

எல்லாம்தான் பார்த்தாயிற்று!

சென்னை வெள்ளம், பல உள்ளங்களை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது!

பேனர் கலாசாரத்தை வளர்த்து… கட் அவுட் கலாசாரத்தை வளர்த்து… சுவர் விளம்பர கலாசாரத்தை வளர்த்து… சுவர்களில் பஞ்ச் டயலாக் பட கலாசாரத்தை வளர்த்து… இப்போது ஸ்டிக்கர் கலாசாரத்தையும் வளர்க்கின்ற தமிழ் நாட்டில்…

எனக்கும் கூட ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு இந்தப் பணிகளை செய்ய உந்துதலை ஏற்படுத்திவிட்டார்கள்! சற்று குனிந்து பார்த்தேன்… என் பைக்கிலும்கூட ஒரு ஸ்டிக்கர் ஒட்டப் பட்டிருக்கிறது! அது PRESS !

தேமுதிக ஆலோசனைக் கூட்டம்

தேமுதிக தொழிற்ச்சங்க ஆலோசனைக் கூட்டம்
பாவூர்சத்திரத்தில் தேமுதிக தொழிற்ச்சங்க ஆலோசனைக் கூட்டம் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அந்தோணிராஜ் தலைமையில் நடைபெற்றது ,காமராஜ்,கொம்பையாபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட துணைத்தலைவர் முருகன் வரவேற்புரையாற்றினார் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தொழிற்ச்சங்க துணைச்செயலாளர் ஆதிலிங்க பெருமாள் ,மாவட்ட கழக செயலாளர் அய்யம்பெருமாள் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினர் கூட்டத்தில் ஒன்றியம் ,பேரூர் பகுதிகளில் தொழிற்ச்சங்க உறுப்பினர்களின் முகாம் நடத்தி நல வாரிய உறுப்பினர் அட்டை பெற்றுத்தருதல் வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் 10 தொகுதியிலும் தேமுதிக வின் வெற்றிக்கு உழைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன கூட்டத்தில்  சுரக்குடையான் ,சரவணன் ,ஒன்றிய செயலாளர் டி.ஆர்.முருகன் ,பேரூர் கழக செயலாளர் சேர்மக்கனி,மகளிரணி செயலாளர் செல்வமேரி உட்பட பலர் கலந்துகொண்டனர் முடிவில் துணைச்செயலர் கலையரசன் நன்றி கூறினார்

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டிருப்பது அரசியல் தலைவர்களின் துர்நாற்றம்

 
 
அரசியல் என்பது ஒரு சேவை என்பதை மறந்து அதை பணம் சம்பாதிக்கும் ஆயுதமாக பயன்படுத்தியதின் விளைவாக ஏற்பட்ட துயரநிகழ்வுதான் இது!!
 
நம் நாடு, நம் மக்கள், நம் இனம்-இன்று உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி, இருக்க இடமின்றி தவிப்பதை அறிவோம்!!
 
இன்று நாமும் அங்கு இருந்திருந்தால் நம் நிலமை என்ன? நம் ஏக்கம் என்ன ?
நமக்கும் யாரேனும் உதவிட மாட்டார்களா? என்ற எதிர்பார்ப்பு கண்களில் குருதி புரண்டோடச் செய்திருக்கும் என்பதை உணர்கிறேன்!!
 
நாம் உழைத்து பெறும் பணத்தின் மதிப்பு என்னவென்று தெரிந்துகொள்ள முயற்சிப்போம்!!
நம் மக்களின் கரம் பிடித்து கரைசேர்க்க முன்வருவோம்!!
 
நாம் வீணென்று நினைத்து தூக்கி எறியும் பழைய செய்தித்தாள்கூட அவர்களுக்கு படுக்கையாய் பயன்படும் என்பதை இன்று நாம் அறிவோம்!!
 
நம்மால் முடிந்ததை பணமாகவோ, பண்டமாகவோ நாம் அறிந்தவர்கள் மூலமாக கொண்டுசேர்க்க முயற்சிப்போம்!! நம் உறவுகளின் உயிர் காப்போம்!!
 
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டிருப்பது இயற்கைச் சீற்றம் அல்ல!!
நம் அரசியல் தலைவர்களின் துர்நாற்றம்!!
 
என்பதை மக்களுக்கு புரியவைத்து அரசியலில் விழிப்புணர்வை அனைவரும் ஏற்படுத்துவோம்!!
 
வருங்காலங்களில் இலவசத்திற்கும் பணத்திற்கும் பலியாகாமல் இருக்க இந்த நிகழ்வு நமக்கெல்லாம் ஓர் நல்ல பாடமாக அமையுமென நம்புகிறேன்!!
 
நல்ல பாரதம் அமைத்திட, உயர்த்திட இன்றைய சூழலில் படிப்பு எவ்வாறு இன்றியமையாததோ, அதுபோல அரசியல் விழிப்புணர்வும் அவசியமானது!!
 
நமது உரிமைகளை நாம் கேட்டால் மட்டுமே பெறமுடியும் என்பதையும் அறிந்துகொள்வோம்!!
 
அரசியல் நமது உரிமை!! அது சாக்கடையல்ல!!
உதவிடு!! உயர்த்திடு!!
 
– வசந்த் குமார் –
தினசரி இணைய தமிழ்ச் செய்தித் தள வாசகர்

தமிழக வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி : முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

தமிழக வெள்ள நிவாரணத்துக்கு ரூ.25 கோடி நிதி உதவி வழங்கப்படும் உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.மேலும், தமிழகத்தில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் அனைத்தும் பாராட்டுக்குறியது என்றும் கூறியுள்ளார்.

கடந்த 100 ஆண்டுகளில், முன்னெப்போதும் இல்லாத வகையில் பெய்து வரும் வரலாறு காணாத பலத்த மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

லட்சக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை இழந்து பரிதவிக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு நிறுவனங்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தனிமனிதர்களும் தங்களின் உதவிகளை வழங்கி வருகின்றனர்.

தமிழகத்தின் துயரத்தில் பங்கேற்கும் வகையில் கர்நாடகா, பிகார், ஒரிசா மாநில முதலமைச்சர்கள் தலா ரூ.5 கோடி வெள்ள நிவாரண நிதியாக வழங்கி உள்ளனர்.

இந்நிலையில், உத்தரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கனமழையால் பாதிக்கபட்டுள்ள தமிழகத்திற்கு ரூ.25 கோடி நிதி உதவி வழங்கி உத்தரவிட்டுள்ளதாக அந்த மாநில அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நிவாரண நிதி வழங்குவோருக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் : கி.வீரமணி

 
தமிழக வெள்ள நிவாரண நிதி வழங்க முன் வருபவர்களுக்கு 100 சதவீத வரிவிலக்கு பெற்றுத்தர தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரகணி அறிக்கையின் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.
 
மேலும் கி.வீரகணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: –
 
கர்நாடக அரசு முதலமைச்சர் தமிழ்நாடு துயர் துடைப்பு நிவாரண நிதிக்காக 5 கோடி ரூபாய் அளித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. அண்டை மாநிலத்தின் நல்லுறவுக்கு ஒரு அடையாள அறிகுறி. காவிரி நதி நீர் பிரச்சினை வேறு, இந்த மனிதநேயம் வேறு.
 
பணம் அனுப்புவதற்காக கர்நாடக அரசு அதிகாரிகள் தமிழக அரசு அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயன்றுள்ள நிலையில் தமிழக அரசின் தரப்பிலிருந்து சரியான விடை கிடைக்கவில்லை என்று ஊடகங்களில் செய்தி வந்துள்ளன. இதுபோலவே பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் 5 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க முன் வந்துள்ளதும் வரவேற்கத்தக்கதே.
 
ஏற்கனவே முதன் முதலில் தி.மு.க. சார்பில் அதன் தலைவர் கருணாநிதி அறிவித்து, அதைப்பெறுவதற்கு முதலமைச்சரோ, நிதி அமைச்சரோ, தலைமைச்செயலாளரோ கிடைக்காத நிலையின் காரணமாக 2 நாள் முயற்சிக்குப்பின் நிதித்துறை செயலாளரிடம் தி.மு.க. பொருளாளரும், திமு.க. சட்டமன்றத் தலைவருமான மு.க.ஸ்டாலின் கொண்டு போய் கொடுத்துள்ளார்.
 
எனவே தனியே வெள்ள நிவாரண துறை ஒன்றை அதிகாரிகள் பொறுப்புக்குரியவர்களைக் கொண்டு உருவாக்கப்பட வேண்டும். தமிழ்நாடு பேரிடரைச் சந்தித்துக் கொண்டுள்ள நிலையில் நன்கொடை வழங்கிட முன் வருவோருக்கு 100 சதவீத நன்கொடை வரி விலக்கினை மத்திய அரசிடம் கேட்டுப்பெற்று, உடனடியாக அறிவித்தால் மேலும் மேலும் நிதி தமிழக அரசுக்குக்குவியும் என்பது உறுதி. எனவே உதவும் கரங்களை மட்டும் பாருங்கள், அது யாருடைய கரங்கள் என்று நிமிர்ந்து கூட பார்க்க வேண்டாம் என கி.வீரகணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

புதன், வியாழன் இருநாள் சென்னையில் கனமழை இருக்குமாம்: சொல்வது பிபிசி

சென்னை:

கனமழை பெய்து சென்னையைப் புரட்டிப் போட்டுள்ள நிலையில், அங்கங்கே வெள்ள நீர் ஓரளவு வடிந்து வருகிறது. சென்னை இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. கடந்த 2 நாட்களாக பெரிய அளவில் மழைப் பொழிவு இல்லாமல் இருந்ததால், மீட்புப் பணிகள் தடங்கலின்றி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வரும் டிச.9, 10 இரு தினங்களில் கன மழை சென்னையில் இருக்கும் என்று பிபிசி வானிலை அறிக்கை குறிப்பிடுவது, பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதன், வியாழன் இரு தினங்களில் சென்னையிலும், சுற்றுப் புறங்களிலும் கனத்த மழை பெய்யக்கூடும் என்று பிபிசி வானிலை அறிக்கையின் படம் காட்டுகிறது. இது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகிறது.
இந்நிலையில் இந்த படங்களை மையமாக வைத்து, மழை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நம் செயற்கைக்கோள் படங்களை வைத்து, இன்று இரவுதான் துல்லியமாக கணித்து நாளை கூற முடியும்” என்று சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மீட்புப் பணிகள் பரவலாக நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு, உடை கொடுக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் வெள்ளம் வடிந்துள்ளதால், வீடுகளை சுத்தம் செய்யும் பணிக்காக தங்கள் இருப்பிடங்களுக்கு சிலர் திரும்பியுள்ளனர். மேலும், செம்பரம்பாக்கம் ஏரி நீர் அடையாற்றில் திறந்து விடுவது குறைக்கப் படவில்லை. இந்நிலையில், மேலும் கன மழை பெய்தால், மீண்டும் வெள்ள அபாயம் ஏற்படும் என்று சென்னை வாசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.