Home Blog Page 5925

அரசியல் தீவிரமாகும் கமல் கருத்து: ஆதரவுக் குரல் எழுப்பும் அன்புமணி

சென்னை:
சென்னை வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து கமல்ஹாசன் தெரிவித்த விமர்சனக் கருத்து இப்போது தீவிர அரசியல் கருத்தாக மாறியுள்ளது. அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியுள்ளார் பாமகவின் அன்புமணி.

அரசை எதிர்த்து வினா எழுப்பியதற்காக கமல்ஹாசனை அமைச்சர் மிரட்டுவதா? என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட அறிக்கை:

சென்னையில் ஏற்பட்டுள்ள பேரழிவு நிலைக்கு செயல்படாத அரசாங்கமே காரணம் என்கிற உண்மையை வெளிப்படையாக சொன்னார் நடிகர் கமல்ஹாசன். அதற்காக அவர்மீது பாய்ந்துள்ளார் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்.

‘‘மழை வெள்ளத்தால் பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இதனை, இயற்கை பேரிடர் என்பது குறைத்து மதிப்பிடும் வார்த்தை. சென்னைக்கே இந்த நிலைமை ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளையும் கற்பனை செய்து பாருங்கள்? ஒட்டுமொத்த நிர்வாகமும் குலைந்து போய்க் கிடக்கிறது, மழை நின்றாலும் சென்னை இதிலிருந்து மீண்டு வர பல மாதங்கள் ஆகலாம். மக்களின் வரிப்பணம் எங்குச் செல்கிறது எனத் தெரியவில்லை’’ – என்று தனது நியாயமான ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் நடிகர் கமல்ஹாசன்.

இதற்காக அவரை மிரட்டுவது போன்று ‘‘கருத்து கந்தசாமி கமல்ஹாசன் குழப்பப் பிசாசின் கோரப் பிடியில் சிக்கி பிதற்றுகிறார்’’என்று அமைச்சர் பன்னீர்செல்வம் பதிலடி அறிக்கை வெளியிட்டுள்ளார். கமலின் விஸ்வரூபம் ‘படப் பிரச்னையை தீர்த்துவைத்த முதலமைச்சருக்கு கமல்ஹாசன் நன்றி கூறியதை மறந்துவிட்டு’ இப்போது அறிக்கை விடுவதாக கூறியிருப்பதன் மூலம், நடிகர் கமல்ஹாசனை மறைமுகமாக மிரட்டியுள்ளார் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்.

தமிழ்நாட்டின் குடிமகன் என்கிற அடிப்படையில், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்த நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. அதிக வரிக்கட்டும் நபர்களில் ஒருவரான நடிகர் கமல்ஹாசன், தனது வரிப்பணம் என்ன ஆனது என்று கேட்பது நியாயமானதும் கூட. நடிகர் கமல்ஹாசனின் கருத்துக்கு பதில் அளிப்பதாக இருந்தால், இந்த மழை வெள்ளத்தை தடுப்பதற்காக தமிழக அரசு என்னவெல்லாம் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது என்று பட்டியலிட்டிருக்க வேண்டும். அதைவிடுத்து, கேள்வி கேட்கும் குடிமக்களையே பதில் கேள்வி கேட்பது ஒரு நல்ல ஜனநாயக அரசாங்கமாக இருக்க முடியாது.

வாக்களித்த மக்கள் கேள்வி கேட்கும் இடத்தில் இருக்கிறார்கள். அவர்களது வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் இடத்தில் இருக்கிறார்கள். ஆனால், இந்த ஜனநாயக பண்பாட்டை நாம் அதிமுக – திமுக ஆகிய கட்சிகளிடம் எதிர்பார்க்க முடியாது. மக்களின் கருத்தை பிரதிபலித்த நடிகர் கமல்ஹாசன் கருத்தை நான் ஆதரிக்கிறேன்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக அளித்த நிவாரணம் என்ன?

தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டு இருக்கும் அதிமுக கட்சியின் சார்பில் சொந்த செலவில் வெள்ளத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு என்ன நிவாரண உதவி செய்தார்கள் எனும் கேள்வியை பலர் எழுப்பி வருகின்றனர்.

அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலிதாவின் கூட்டம் எந்த மாவட்டத்தில் நடைபெற்றாலும் அந்த மாவட்டமே ஸ்தம்பிக்கும் அளவு அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் எப்போதும் கூடுவது வழக்கமான விஷயம்தான்.

அதேபோல் எந்த கட்சியாக இருந்தாலும் அந்த கட்சியின் முக்கியமான தலைவர் கூட்டம் எந்த மாவட்டத்தில் நடந்தாலும் அந்த மாவட்டமே ஸ்தம்பிக்கும் அளவு கூட்டத்தைக்
கூட்டுவதில் எந்த கட்சியினரும் விதிவிலக்கு அல்ல .

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு ஜாதி, மத, வேறுபாடுகள் இன்றி பொதுநல நோக்கத்தில் உடனடியாக உதவி செய்ய பல மாவட்ட பொதுமக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் முன்வந்து செய்து கொண்டு உள்ளனர்.

அவ்வாறு அந்த அந்த மாவட்டத்தில் பாதிப்படைந்தவர்களுக்காக பொதுமக்கள் வழங்கிய நிவாரணப் பொருட்கள்மீதும் ஜெயலலிதா புகைப்படத்தை ஒட்டி இலவச சுய விளம்பரம் தேடுவது தொடர்ந்து அரசியல் ஆதாயம் அடையும் செயல் என தமிழக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சட்டமன்றத் தொகுதியில் நேற்று வெள்ளத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு அமைச்சர்கள் நிவாரணப் பொருட்கள் வழங்கியபோது கூட ஜெயலலிதாவின் புகைப்படத்துடன் கட்சியின் இரட்டை இலை சின்னத்துடன் கூடிய பதாகையை காட்டி நிவாரணப் பொருட்கள் வழங்கியுள்ளனர்.

மேலும் அதிமுக கட்சியை சேர்ந்த விசுவாசிகள் சமூக ஊடகங்களில் “அங்கு உதவி தேவை, இங்கு உதவி தேவை” என பொதுமக்களை உதவி செய்ய கோரிக்கை விடுத்து பதிவுகளை பதிவிடுகிறார்கள். அதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் என்ன உதவி செய்தார்கள் எனும் கேள்வியை எழுப்பியுள்னர்.

மக்களின் வரிப்பணத்தில் அரசாங்கத்தால் கொடுக்கப்படும் நலத் திட்டங்களில் எல்லாம் ஜெயலலிதாவின் புகைப்படத்தைப் போட்டு இலவசமாக சுய விளம்பரம் தேடிக் கொள்வது மிக மட்டமான வெட்கப்பட வேண்டிய கீழ்த்தரமான செயல் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பெரும்பாலோர் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

மேலும் அரசாங்கத்தால் கொடுக்கப்படும் நலத் திட்டங்களை எல்லாம் எப்போதும் “நான் செய்தேன், நான் செய்தேன்” என ஜெயலலிதாவும் , அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் “எங்கள் அம்மா செய்தார், எங்கள் அம்மா செய்தார்” என சுய புராணம் பாடுவதும் மானம்கெட்ட செயல் என அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பெரும்பாலோர் பரவலாகக் கூறுகின்றனர்.

“தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக அளித்த நிவாரணம் என்ன?” எனும் கேள்வியை பெரும்பாலோர் எழுப்பியுள்ளனர்.மேலும், “ஒருவேளை பாதிப்படைந்தவர்களுக்காக பொதுமக்கள் வழங்கிய நிவாரணப் பொருட்களை எல்லாம் அதிமுக கட்சியினர்தான் கொடுத்தோம்” என ஒரு பொய்யான அறிவிப்பைக் கொடுத்தாலும் கொடுப்பார்கள் என்றும் பலர் பேசி வருகிறார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதை தடுக்கும்  உரிமையை அதிகார வ(ர்)க்கத்தவர்களுக்கு கொடுத்தது யார்?

தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால்  பெரும்பாலோனர் பலியாகியும், லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து, உடைமைகளை இழந்து, உண்ண உணவின்றித் தவித்து வருகிறார்கள்.பச்சிளங்குழந்தைகளுக்கு பால் கூட கிடைக்காமல் மக்கள் தவிக்கும் நிலையே தற்போது நிலவுகிறது.

வெள்ளத்தால்  பாதிப்படைந்தவர்களுக்கு தமிழக அரசாங்கமும் அரசியல் கட்சியினரும் உடனடியாக எவ்விதமான உதவிகளும்  செய்ய  முன்வரவில்லை எனும் குற்றசாட்டே தமிழக மக்களால் கூறப்படுகிறது.

மேலும் ஜாதி, மத, வேறுபாடுகள் இன்றி பொதுநல நோக்கத்தில் அதிகபட்ச உடனடியாக வெள்ளத்தால்  பாதிப்படைந்தவர்களுக்கு உதவி செய்ய  தமிழக பொதுமக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் முன்வந்துள்ளன.

பொதுமக்கள் வழங்கிய நிவாரணப் பொருட்கள் மீதும்  ஜெயலலிதா புகைப்படத்தை ஓட்டி இலவச சுய விளம்பரம் தேடிக்கொள்வதற்கு என்ன உரிமையுள்ளது?  எனும் கேள்வியுடன் புகைப்பட பிரச்சனை விஸ்வரூபம்  எடுத்துள்ளது.மேலும் அரசியல் கட்சியினர் ஓட்டு கேட்டு வந்தால் செருப்பாலும், துடைப்பத்தாலும் அடிப்போம் எனும்  மக்கள்  குமுறலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அண்டை நாடான அமெரிக்கா வெள்ள பாதிப்பிற்குள்ளான தமிழக மக்களுக்கு தானாக முன்வந்து உதவத் தயாராக  இருப்பதாக  அறிவித்துள்ளது. மேலும் இந்திய அரசாங்கம் அமெரிக்காவிடம் எவ்விதமான உதவியைக் கேட்டும் கோரிக்கை  விடுக்கவில்லை என்றும் மிக வருத்தத்துடன் கூறியுள்ளது. 

மேலும் இலங்கை  வடமாகாண முதலமைச்சர் இலங்கையிலுள்ள இந்திய துணை தூதரகத்தில் வெள்ள பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் தமிழக உறவுகளுக்கு உதவிப் பொருட்களை ஒப்படைத்தால் அதனை தமிழகத்திற்கு கொண்டு சென்று சேர்ப்பிக்க இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம்  கோரிக்கை  விடுத்தாராம்.அதற்கு இலங்கையிலுள்ள இந்திய  துணை தூதரக அதிகாரிகள் தமிழக உறவுகளுக்கு எந்தவொரு உதவியும் தேவையில்லையென முகத்திலடித்தது போல பதிலளித்து, எதனையும் பொறுப்பேற்கவோ அவற்றினை தமிழ் நாட்டிற்கு எடுத்து சென்று சேர்ப்பிக்கவோ தமதுஅலுவலகம் தயாராக இல்லையென தெரிவித்துள்ளதாக வாட்ஸ் ஆப்பில்   தகவல் வைரலாக  பரவி வருகிறது.

 தமிழகத்திலேயே  பலர்  தானாக  கொடுக்கும்  வெள்ள  நிவாரண  உதவியை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கமறுத்துவருவதாக பலரால்  கூறப்படுகிறது.பொதுமக்கள் ஆட்சி அமைக்க கொடுத்த  அதிகாரத்தால் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து இருக்கிறோம் என்பதை அதிகார வ(ர்)க்கத்தவர்கள் மறந்து விடக் கூடாது .

பாதிப்படைந்த பொது மக்களுக்கு தானாக முன்வந்து உதவி செய்ய முன்வருபவர்களை  அதிகார வ(ர்)க்கத்தவர்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு  உட்பட்டு அவர்கள்  செய்யும் உதவியை  தடுக்கும்  அதிகாரம் எவருக்கும் இல்லை. உதவுவதை தடுக்கும்  உரிமையை அதிகார வ(ர்)க்கத்தவர்களுக்கு கொடுத்தது யார்? என்றும் கேள்வி  எழுப்புகின்றனர். 

மேலும்  கௌரவம்தான் எனக்கு மிக முக்கியம் என வரட்டு ஜம்பத்தில் இருக்கும் அதிகார வ(ர்)க்கத்தவர்கள் தானாகவே  பதவியை  ராஜினாமா செய்து விட்டு  முட்டையை கட்டிக்கொண்டு    பொது  வாழ்க்கையில் இருந்து  ஓடி விடுவதே சாலச் சிறந்தது என தமிழக மக்கள் பெரும்பாலானோர்  கூறுகின்றனர்.

 

 

 

செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பாக உள்ளது; நீர் திறப்பும் குறைப்பு: அதிகாரிகள்

சென்னை:

சென்னை ஏரிகளில் நீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது; செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பாக உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.

வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் குடிநீர் ஆதாரங்களான பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் 10-ந்தேதி பூண்டி ஏரியில் 160 மில்லியன் கன அடி நீர் இருந்தது. நேற்று, அது 2,609 மில்லியன் கன அடியாக இருந்தது.
சோழவரம் ஏரியில் 86 மில்லியன் கன அடியாக இருந்த நீர் இருப்பு நேற்று 809 மில்லியன் கன அடியாக அதிகரித்திருந்தது.

செங்குன்றம் ஏரியில் 408 மில்லியன் கன அடியில் இருந்து நேற்று 2,745 மில்லியன் கன அடியாக உயர்ந்தது.

செம்பரம்பாக்கம் ஏரியில் 791 மில்லியன் கன அடியாக இருந்த நீர் இருப்பு நேற்று 3,108 மில்லியன் கன அடியாக அதிகரித்தது. இதனால் உபரி நீர் திறந்துவிடப்பட்டு வந்தது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளின் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 4-ந்தேதி பூண்டி ஏரியில் 12 ஆயிரத்து 215 கன அடி வெளியேற்றப்பட்ட நீர், நேற்று 10 ஆயிரத்து 391 கன அடியாகக் குறைக்கப்பட்டது. சோழவரத்தில் 175 கன அடியில் இருந்து, நேற்று 100 கன அடியாகக் குறைக்கப்பட்டது.

செம்பரம்பாக்கத்தில் கடந்த 4-ந்தேதி 5 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்ட நிலையில், நேற்று 3 ஆயிரத்து 500 கன அடியாகக் குறைக்கப்பட்டது. செங்குன்றம் ஏரியில் மட்டும் கடந்த 4-ந்தேதி 1,894 கன அடியாக இருந்தது, நேற்று சற்று கூடுதலாக 1,967 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்த ஏரிகளின் நீர்திறப்பு படிப்படியாகக் குறைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தின் உயரம் 24 அடியாகும். அதில் தற்போது 21.95 அடி உயரம் வரை நீர் தேக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர் வரவு 3 ஆயிரத்து 493 கனஅடியாகும். நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 3 ஆயிரத்து 500 கனஅடி ஆகும். செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கம் தற்போது பாதுகாப்பாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவில் இனி அரை டிக்கெட் கிடையாது

புது தில்லி:
ரயிலில் பயணம் செய்யும் 5 வயதுக்கு மேற்பட்ட 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு முன்பதிவின்போது அரை டிக்கெட் வழங்கப்பட்டு வருகின்றது. இனி இந்த வசதி கிடையாது. அரை டிக்கெட் பெற்று வந்த சிறார்களுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் முழு டிக்கெட் வழங்கப்படும் என்று ரயில்வே தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி படுக்கை வசதி அல்லது இருக்கை வசதிக்கான டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, அதில் இடம்பெறும் 5 முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கான அரை டிக்கெட் முறை ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு முழு டிக்கெட்டே வழங்கப்படும். இதற்கான திருத்தம் முன்பதிவுக்கான விண்ணப்பப் படிவத்தில் செய்யப்பட்டுள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது. அவர்கள் தொடர்ந்து இலவசமாகவே பயணம் செய்யலாம்.

அதேநேரம் முன்பதிவில்லாத பெட்டியில் பயணிப்போர், 5 முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு அரை டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம். இதில் மாற்றம் செய்யப்படவில்லை. இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்படுகிறது. இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு இந்திய ரயில்வே துறை சார்பில் விரைவில் வெளியாக உள்ளது.

அரசியல் கட்சியினர் ஓட்டு கேட்டு வந்தால் செருப்பாலும், துடைப்பத்தாலும் அடிப்போம் : குமுறும் மக்கள்

 
 
சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஏறத்தாழ நூறாண்டு காலத்தில் கண்டிராத கடும் மழையால் ஏற்பட்ட பெருத்த வெள்ளத்தால் 269 பேர் உயிரிழந்துள்ள தாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.
 
லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து, உடைமைகளை இழந்து, உண்ண உணவின்றித் தவித்து வருகிறார்கள். பச்சிளங்குழந்தைகளுக்கு பால் கூட கிடைக்காமல் மக்கள் தவிக்கும் நிலையே தற்போது நிலவுகிறது.
 
இந்த நிலை ஏற்பட்டதிற்கு முக்கிய காரணமே பொதுநல நோக்கம் இன்றி லஞ்சம் பெற்றும் ஊழல் செய்தும், பொதுமக்களின் வரிப் பணத்தை அரசாங்க பொதுநல திட்டங்களுக்கு முறையாக செலவிடாமல் கொள்ளையடித்து சொத்து சேர்க்கும் பேராசையில் தொடர்ந்து சுற்றி திரிந்து வரும் சுயநல அரசியல்வாதி கரைவேட்டி கொள்ளையர்களே என பொதுமக்களின் குற்ற சாட்டு.
 
அரசியல்வாதிகள் பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பணத்தை கொள்ளை அடித்து சொத்து சேர்க்க செய்த அட்டகாசத்தில் ஒன்றுதான் நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு. தண்ணீர் செல்லும் பாதைகளையெல்லாம் அடைத்தும், குளங்கள், கண்மாய்களையெல்லாம் அழித்தும் பெரும் பணம் கொண்ட கூட்டத்திடம் வசூல் வேட்டை நடத்தி அந்த இடத்தை குடியிருப்பு பகுதிகளாக ஆக்க அரசாங்கத்தை ஆண்ட அதிகார வர்க்கத்தினர் அனுமதி அளித்தது முதல் தவறு. இதை விட பெரிய கொடுமை அரசாங்கமே கண்மாய்களையெல்லாம் குடியிருப்பு பகுதிகளாக ஆக்கி பொதுமக்களிடம் விற்றது.
 
தமிழகத்தில் கனிம வளங்களை தோண்டி நடைபெறும் முறைகேடுகளை கண்டும் காணாமலும் அரசாங்கம் இருந்தது போல் தண்ணீர் செல்லும், தேங்கும் இடங்களையெல்லாம் முறையாக பராமரிக்காததால் இயற்கை தற்போது ஒரு சரியான பாடத்தை தமிழக மக்களுக்கு புகட்ட காரணம் அரசியல்வாதிகள் தானாம் .
 
மேலும் தற்போது மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த அனைத்து இடங்களிலும் அதிகபட்ச உடனடியாக உதவி செய்தது யார் என்றால் ஜாதி, மத, வேறுபாடுகள் இன்றி பொது நல நோக்கத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்புகள் வெளி மாவட்டங்களில் இருந்தும் உணவு மற்றும் தேவையான அத்தியாவசிய பொருட்களை தொடர்ந்து கொண்டு சென்று இலவசமாக வழங்கி சேவை செய்து வருகின்றனர்.
 
மக்களின் வரிப்பணத்தில் தமிழக அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் அணைத்து நலதிட்டங்கள் மற்றும் அரசாங்க விளம்பரங்களில் முதலமைச்சர் ஜெயலலிதா இலவச சுய விளம்பரம் தேடிகொள்வதாக மக்களால் பரவலாக பேசப்படுகிறது. மிக கொடுரமாக மழை வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளவர்களின் துயர் துடைக்க பொதுமக்கள் வழங்கிய நிவாரணப்பொருட்கள் மீதும் கூட முதலமைச்சர் ஜெயலலிதா புகைப்படத்தை ஓட்டி இலவச சுய விளம்பரம் தேடிகொள்வதற்க்கு என்ன உரிமையுள்ளது என பொதுமக்கள் கேள்வி எழுப்பி குமுறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் அரசியல் போன்று எவ்விதமான இலவச சுய விளம்பரமும் தேடி கொள்ள ஆசைப்படாமல் இன, மத, மொழி, நிற வேறுபாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு மனித நேயத்துடன் உதவிக்கரம் கொடுத்த அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகளு தான் என்றால் மிகையல்ல.
 
தற்போது கூட பேரிடர்குழு மற்றும் முப்படையினர் கொண்டு வந்த உணவு பொருட்களைத்தான் ஹெலிகாப்டர் மூலம் கொடுத்துள்ளது. அதிகமான மழை காலங்களில் மின்சார இணைப்பைக்கூட துண்டிக்க உத்தரவிடாமல் அரசு மெத்தனமாக செயல் பட்டதால் தமிழக மக்களை பலி கொடுத்ததுதான் மிச்சம் என்றும் மக்களால் பரவலாக பேசப்படுகிறது.
 
வெளி மாவட்டங்களில் இருந்துகூட வந்து தேர்தல் நேரத்தில் முகாமிட்டு பொதுமக்களிடம் வாக்குகளை பெற தமிழகத்தில் சுற்றி திரிந்த அனைத்து அரசியல் கட்சியினரும் தற்போது எங்கே போனார்கள்? வாக்குகளை பெற சுற்றி திரியும் அரசியல் கட்சியினர் அனைவரும் தற்போது வெள்ளத்தால் பாதிப்படைந்த அனைத்து இடங்களிலும் முகாமிட்டு சேவை செய்வதுதானே? ஏன் கரைவேட்டிகள் தலைமறைவு ஆக வேண்டும் என்கிற சர்ச்சை குமுறல் தமிழகத்தில் ஒலிக்க கிளம்பியுள்ளது.
 
வானிலை ஆராய்ச்சி மையம் அடிக்கடி கனமமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்தும் மத்திய அரசிடம் உடனடியாக ராணுவ உதவியை கேட்க அரசாங்கம் தயக்கம் காட்டியது ஏன்? மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசாங்கம் ஹெலிகாப்டர் மூலம் வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றக் கூட முடியாதா? பேரிடர் படையினர் முன்கூட்டியே வருகை தந்து இருந்தால் மழை நின்ற மூன்று நாட்களில் நடைபெற்ற சில அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டு இருக்கும்.
 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக தமிழக அரசாங்கமும் அரசியல் கட்சியினரும் எந்த உதவியும் செய்யவில்லை என்பதுதான் பொதுமக்களின் குற்றச் சாட்டு. தற்போதுள்ள ஆளும் கட்சியை சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பெயர் அளவில் பொதுமக்களுக்கு உதவி செய்வதாக கூறி ஊடகங்கள் வாயிலாக தலையை காட்டிவிட்டு அவர்களும் தலைமறைவு ஆகிவிட்டனர். மேலும் முதன்முதலில் வெள்ளத்தில் சிக்கியவர்களை படகு மூலம் காக்க முயற்சி செய்ததும் தனியார் அமைப்புதான்.
 
பொதுநல நோக்கத்தைக் கருத்தில் கொள்ளாமல் கொள்ளையடிக்க சுற்றி திரியும் அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக அவர்களிடம் வாங்க வேண்டியதை வாங்கி கொண்டு கரைவேட்டி கொள்ளையர்களின் புகழை ஊடகங்களின் வாயிலாக பரப்பி வருவதாகவும் பலரால் கூறப்படுகிறது.
 
வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து, உடைமைகளை இழந்து, உண்ண உணவின்றித் பாதிப்படைந்துள்ளவர்களின் துயர் துடைக்க அரசியல் கட்சியினர் முன்வராமல் தலைமறைவு ஆகிவிட்டனர்.
 
இந்த நிலையில் வெள்ள பாதிப்படைந்து தவித்து வருவபவர்கள் அரசியல்வாதிகள் மீது வெறுப்படைந்தது அரசியல் கட்சியினர் ஓட்டுகேட்டு வந்தால் செருப்பாலும், துடைப்பத்தாலும் அடிப்போம் என்றும் காணொளி குமுறி அவர்களின் எதிர்ப்பை வெளிபடுத்தியுள்ளனர்.
 
வெள்ள பாதிப்படைந்தவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருவர் மீதும் பெருத்த கோபம் கொண்டு இந்த செய்தியில் பதிவிடமுடியாத வார்த்தை சொற்களை பயன்படுத்தி அதை காணொளியாக பதிவு செய்து வாட்ஸ்ஆப்பில் வைரலாக
பரவிட்டுள்ளனர்.
 
வைரலாக பரவிவரும் அந்த காணொளி dhinasari.com வாசகர்களின் பார்வைக்காக இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
 
 
 

 

சென்னை அழியும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

earth graphic showing sea height during an el nino spl - 2026

சென்னை:
சென்னை அழிந்துவிடும் என்பது போன்ற வதந்திகளை எவரும் நம்ப வேண்டாம் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் விளக்கம் அளித்து, வேண்டுகோள் விடுத்துள்ளது.

தற்போது இரண்டு செய்திகள் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் படிப்போர் மனதில் பீதியை ஏற்படுத்தும் விதமாக பரவிக் கொண்டிருகிறது.
முதலாவதாக, சென்னையில் பெய்து வருவது வெறும் மழை அல்ல.. NASA ரிப்போர்ட் படி இதோட பெயர் “EL Nino” சுழற்சி புயல்.. கிட்ட தட்ட 250 Cm வரைக்கும் இந்த மழைபெய்ய வாய்ப்பு உண்டு.. சென்னையே முழுகிப்போக வாய்ப்பு உண்டு.. google ல Search பண்ணி பாருங்க தெரியும்..
எப்படியாவது நம் சென்னை மக்களுக்கு தெரியபடுத்துங்க… PLZ,,,, அரசாங்கம் இத பொருட்டா எடுத்துக்கல… என்பது முதலாவது வதந்தி. ..

உண்மையில் எல் நினோ என்பது தென் அமெரிக்கா பசுபிக் கடற்பகுதியில் ஏற்படும் வானிலை மாற்றம். பசுபிக் கடல் சற்றே சூடு அதிகமாகி அதன் காரணமாக தென் அமெரிக்கா, கலிபோர்னியா முதலிய இடங்களில் மழை பொழிவு ஏற்படும்.

எல் நினோ உலக வானிலையில் தாக்கம் ஏற்படுத்தும் என்பதால் செயற்கை கோள்வழி அதனை கண்காணிக்க நாசா ஏற்பாடு செய்துள்ளது.

எல் நினோ தீவிரம் அடையும் ஆண்டுகளில் வங்காள விரிகுடாவின் கடல் நீர் வெப்பம் சற்றே உயரும். அதன் காரணமாக கூடுதல் நீராவி உயர்ந்து மழை கூடுதலாகும்.

1997 இல் உருவான தீவிர எல் நினோ போல இந்த ஆண்டும் தீவிரம் அடைந்து வருகிறது என நாசா வானிலை செயற்கை கோள்கள் கண்டுள்ளன.

இந்த ஆண்டும் இதன் தொடர்ச்சியாக 1997போல அமெரிக்கா பகுதிகளில் பெரு மழை பொழியும் என்றும்
வரும் 2016ஆம் ஆண்டு சராசரி வெப்பம் கூடுதல் கொண்ட ஆண்டாக இருக்கும் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

எல் நினோ ஒரு புயல் அல்ல; சென்னையை நோக்கி வராது; சென்னை அல்லது தமிழகம் குறித்து நாசா எந்த ஒரு முன்னறிவிப்பையும் வெளியிடவில்லை.

இரண்டாவதாக. …

Huzlers.com எனும் வலைத்தளம் விஷமத்தனமாக வேடிக்கை காட்ட பரப்பிய இந்த போலி செய்தி காட்டு தீ போல பரவி உலகெங்கும் பீதியை கிளப்பி வருகிறது. உண்மை காலில் செருப்பு போடுவதற்குள் பொய் ஒருமுறை உலகை சுற்றி வந்துவிடும் எனபதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

உண்மையில் சூரிய (காந்த) புயல் அவ்வப்போது ஏற்படும் என்பது மெய் தான். இந்த காந்த புயல் பூமியை வந்து “மோதும்”போது விண்வெளியில் சுற்றும் செயற்கை கோள்களின் தகவல் தொடர்பு முதலிய பாதிக்கப்படும்.
மிக தீவிர காந்த புயல் வீசினால் ஐரோப்பா முதலிய பகுதிகளில் குறிப்பாக துருவத்துக்கு அருகில் உள்ள பகுதிகளில் மின்தொகுப்பு கருவிகள் – ட்ரான்ஸ்பார்மர்கள் – செயலிழந்து ஐரோப்பிய நகரங்கள் “இருளில் மூழ்கலாம்” அவ்வளவு தான்.

மின்சாரம் தடை பட மின்விளக்குகள் எரியாது. அவ்வளவு தான். இது தான் “உலகமே இருன்று விடும்” என்ற சொல்லின் மெய் அர்த்தம்.
மெய்யாக உலகமே பல நாட்கள் இருண்டு விடாது. போலி செய்தி தான் இது.

தகவல்: த.வி.வெங்கடேஸ்வரன், விஞ்ஞானி

குழப்பப் பிசாசின் கோரப் பிடியில் கருத்து கந்தசாமி கமல்ஹாசன்: ஓ.பன்னீர்செல்வம் பதிலடி

images politics kamalhasan panneerselvam - 2026

சென்னை:

சென்னையில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கருத்து தெரிவித்திருந்த நடிகர் கமல்ஹாசன், ‘மக்கள் வரிப்பணம் எங்கே போனது?’ என கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவருக்கு மிகக் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:

”கடந்த 100 ஆண்டு காலம் கண்டிராத கன மழை வெள்ளத்தால் தத்தளித்து தவிக்கின்ற சென்னை மாநகரம் மற்றும் ஏனைய மாவட்ட மக்களைக் காப்பாற்றி, மீட்பு, நிவாரணம், சீரமைப்பு எனும் முப்பரிமாணத்தில், போர்க்கால நடவடிக்கை என்பதற்கும் மேலான அவசர கால அடிப்படையில் மழை வெள்ள நிவாரணப் பணிகளை முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்டுள்ளார்கள்.

இந்த அசாதாரண சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஆறுதலாகவும், கடமையே கண்ணாகக் கொண்டு செயல்படும் ஜெயலலிதா அரசுக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருக்க வேண்டியதை விடுத்து, உள்ளிருந்து கொல்லும் நோய்போல, நடிகர் கமலஹாசன், தன்னிலையும், முன்னிலையும் மறந்து, அரசு நிர்வாகம் செயல் இழந்துவிட்டதாகவும், நிவாரண நிதிக்கு அரசு அவரிடம் பணம் கேட்டது போன்றும், நிவாரணப் பணிகளைச் செய்யத்தானே அரசைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்றும், மக்களின் வரிப்பணம் எங்கே போகிறது என்று தெரியவில்லை என்றும், தனது தகுதி மீறிய, தடுமாற்றமான, தவறான கருத்துக்களை இணையதளம் ஒன்றுக்கு பேட்டியாக அளித்துள்ளதாக 4-12-2015 அன்று ஒரிரு நாளிதழ்களில் செய்தி வெளிவந்துள்ளது.

எதையும் சரியாகப் புரிந்துகொண்டு தெளிவாகப் பேசுவது போல குழப்புகின்ற கருத்து கந்தசாமியான கமலஹாசன், இந்த விஷயத்திலும் உண்மை நிலவரங்களைச் சற்றும் உணர்ந்து கொள்ளாமல், குழப்பப் பிசாசின் கோரப் பிடியில் சிக்கி, பிதற்றி இருக்கிறார்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த மாதம் தொடங்கியதிலிருந்து இன்றைய தினம் வரை, சென்னை மாநகர் மட்டுமின்றி, மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதன் பாதிப்பிலிருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற, முதலமைச்சர் மேற்கொண்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாகவும், முதலமைச்சரின் ஆணைப்படி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் துரித நடவடிக்கைகளின் காரணமாகவும், மழை வெள்ளப் பாதிப்புகளிலிருந்து தமிழக மக்களின் உயிர்ச்சேதம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு, இயல்பான நிலைக்கு மீண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். இந்தச் சூழ்நிலையில் இப்படி தரமற்ற முறையில் பேட்டி அளிப்பதற்கு முன்பாக, 1918-ம் ஆண்டிற்குப் பிறகு இதுபோன்ற கனமழை பெய்யவில்லை என்பதையும், ஒரே நாளில் 40 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்து, இந்தப் பருவம் முழுவதும் பெய்யும் மழையைவிட பல மடங்கு கூடுதலான மழை, ஒரு சில நாட்களிலேயே கொட்டித் தீர்த்தது என்பதையும் கமலஹாசன் தெரிந்து கொள்ளாமலேயே, தனது விதண்டாவாதக் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.

கமலஹாசன் எடுக்கின்ற திரைப்படத்தில் வேண்டுமானால், எவ்வளவு பெரிய இயற்கை பேரிடர் என்றாலும், அதை ஒரே காட்சியில் சீர்படுத்தி விடுவதாகவும், ஒரே பாடலில் அதை சரிப்படுத்தி விடுவதாகவும் காட்டிவிடலாம். ஆனால் யதார்த்தம் என்பது வேறு. எதிர்பாராத வகையில் இயற்கை நம்மைத் தாக்கும்போது, மீட்பு, நிவாரணம், சீரமைப்பு என படிப்படியாக நிவாரண நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொள்வதன் மூலமாகத்தான் மாநிலத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும். அதைத்தான் முதலமைச்சர் தற்போது சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். இயற்கை பேரிடர் பற்றி சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அவரது ‘அன்பே சிவம்’ திரைப்படத்தை, அவர் மீண்டும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.

போர்க்கால நடவடிக்கைகள் ஜெயலலிதா அரசால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சமயத்தில், அரசு நிர்வாகம் செயலற்று போனதாக கமலஹாசன் தெரிவித்திருப்பது என்பது உண்மைக்கு முற்றிலும் மாறானது மட்டுமல்ல, இது தமிழக மக்களையே அவமதிக்கும் செயல் ஆகும்.

இந்த இயற்கைச் சீற்றத்தினை வெற்றிகொள்ளும் வகையில் ஜெயலலிதாவின் அரசு, போர்க்கால அடிப்படையில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறித்து அவர் தெரிந்தும், தெரியாததுபோல் நடித்துள்ளார். அதனால்தான் மக்களின் வரிப் பணம் என்ன ஆனது என்றே தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கனமழை பெய்த பாதிப்பில் மக்கள் கடுமையாக அவதியுறும் நேரத்தில், அவர்களுக்கு உதவ மனமில்லாமல், எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்று அரசியல் சுயநலத்துடன் செயல்படும் சமுதாயப் புல்லுருவிகளின் கைப்பாவையாக கமலஹாசன் மாறிவிட்டார் என்பதையே அவரது வாய்மொழி வெளிக்காட்டுகிறது. மக்களிடமிருயது பெறப்பட்ட வரிப் பணம் தமிழக அரசால் தவறாக கையாளப்பட்டது போன்ற ஒரு மாயத்தோற்றத்தினை உருவாக்கி, அரசுக்கு மக்களிடம் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும், அதன் மூலம் அரசியல் சுயலாபம் பெற வேண்டும் என்று முனையும் தீயசக்திக்கு கமலஹாசன் விலைபோய்விட்டாரா என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

மக்களின் வரிப் பணம் என்ன ஆனது என்று கமலஹாசன் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் ஜெயலலிதா அரசின் கடந்த நான்கு ஆண்டுகளின் வரவு செலவுத் திட்ட அறிக்கைகளை தனது படப்பிடிப்புகளுக்கிடையே சற்று நேரம் ஒதுக்கி, அவர் படித்துப் பார்த்திருக்க வேண்டும். கல்வி, மக்கள் நல்வாழ்வு, சாலை வசதி மற்றும் இதர கட்டமைப்பு வசதிகள், வேளாண்மை உட்பட பல்வேறு முக்கியமான துறைகளில் கணிசமான அளவிற்கு கோடிக்கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, மக்கள் நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதோடு மட்டுமல்லாமல், அத்தகைய திட்டங்களை பிற மாநிலங்களும் செயல்படுத்துவதற்கான முன்னுதாரணமான மாநிலமாக தமிழகத்தினை முதலமைச்சர் ஜெயலலிதா முன்னேற்றமடையச் செய்துள்ளார் என்பதை இந்தியத் திருநாடே உணர்ந்து பாராட்டிக் கொண்டிருப்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், மக்களின் வரிப்பணத்தை வைத்துதான் சமூக நலப் பணிகளுக்கு 61,119 கோடி ரூபாயும், பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 49,930 கோடி ரூபாயும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும், உணவு மானியம் போன்ற மானியத் திட்டங்களுக்கும் 12,897 கோடி ரூபாயும் செலவிட, 2015-16 வரவு செலவுத் திட்டத்தில் சட்டமன்றத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது. மக்களின் வரிப் பணத்தை வைத்துத்தான் சாலை வசதிகள் உட்பட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. இவ்வளவு ஏன்? 2015-16-ல் மாநில பேரிடர் நிவாரணத்திற்கு ஒதுக்கப்பட்ட 679 கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம்தான், தற்போது செலவிடப்பட்டு வருகிறது. ஆகவே, வரிப்பணம் எங்கே போகிறது என்ற சந்தேகம் கமலஹாசனுக்கு எழவேண்டிய அவசியமே இல்லை.

தமிழக மக்களின் வரிப் பணம் ஒரு ரூபாய் கூட வீணாகச் செலவழிக்கப்படக் கூடாது என்பது மட்டுமல்ல, அந்த ஒவ்வொரு ரூபாயும் பயனுள்ள வகையில் மக்கள் நலப்பணிகளுக்கு மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்பதிலும் கண்ணும் கருத்துமாக இருந்து மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருபவர் முதலமைச்சர் ஜெயலலிதா.

கார்ப்பரேட் திட்டத்திற்கு 4000 கோடி ரூபாய் வரை செலவிட முடிவதாகவும், அந்த பணத்தை நாட்டில் உள்ள 120 கோடி மக்களுக்கும் ஏன் பிரித்துக் கொடுக்கக்கூடாது என்றும் கமலஹாசன் அறிவுஜீவி போன்று ஒரு வினா எழுப்பியுள்ளார். இந்த வினாவை அவர் மத்திய அரசைப் பார்த்து எழுப்பியுள்ளார் போலும்! அதை ஏன் இப்போது கேட்கிறார் என்று புரியவில்லை. மத்திய அரசின் மீது அவருக்கு என்ன கோபமோ தெரியவில்லை. ஒருவேளை, சினிமாத் துறையின் மீது மத்திய அரசு விதித்த சேவை வரி தள்ளுபடி செய்யப்படவில்லை என்கிற கோபமோ, என்னவோ! அந்தக் கோபத்தை தமிழ்நாட்டின் மீது காட்டி, தமிழக மக்களை குழப்ப வேண்டாம் என்று அவரை நான் கேட்டுக்கொள்கிறேன்.

கமலஹாசன் தனது ஒட்டுமொத்த சொத்துக்களையும் கொட்டி எடுத்ததாகச் சொல்லும் ஒரு திரைப்படம் வெளியிடப்படுவதில் அடுக்கடுக்கான சிக்கல்களை அவர் சந்தித்த நேரத்தில் சுய லாபத்திற்காக, தமிழ்நாட்டை விட்டும், இயதியாவை விட்டும் வெளியேறி விடுவேன் என்று சொன்னவர்தான் கமலஹாசன். அப்போது, அந்தப் பிரச்னையை தீர்த்துவைத்த முதலமைச்சருக்கு நன்றி கூறியதை மறயதுவிட்டு, தற்போது அவர் பேட்டி அளித்திருக்கிறார்.

ஜெயலலிதா அரசு, வெள்ள நிவாரண நிதியை வழங்குமாறு தனியாருக்கு எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை. மத்திய அரசிடம்தான் நிவாரண உதவி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுபோன்ற இயற்கைச் சீற்றங்களால் மக்கள் பாதிக்கப்படும்போது, இரக்க குணம் படைத்தவர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், முக்கிய பிரமுகர்கள், தொண்டு நிறுவனங்கள், தாங்களே முன்வந்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அவர்களாகவே நிதியுதவி செய்கிறார்கள். மக்கள் துயர் துடைக்கும் மாநில அரசின் நிவாரண நடவடிக்கைகளில் தங்களையும் இணைத்துக் கொள்வது புண்ணியமான செயலாகக் கருதி, அவர்கள் பொருள் உதவியும், செயல் உதவியும் செய்கிறார்கள். ஆனால் கடவுள் நம்பிக்கையற்ற கமலஹாசன் பாவ புண்ணியம் பற்றி கொண்டிருக்கும் கருத்தே வேறு அல்லவா? அதனால்தான் கேட்காத ஒன்றை கேட்டதாகச் சொல்லி, பேட்டி அளித்துள்ளார்.

இப்படி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தாங்களாகவே முன்வந்து வயது நிதி உதவி தருவதுடன், இத்தகைய பேரிடர் தருணங்களில் பல அமைப்புகள் நேரடியாகவும் சேவைப் பணிகளை மேற்கொள்கின்றன என்பதை கமலஹாசன் அறியமாட்டாரா? அந்த வகையில் தற்போதும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் தங்களால் இயன்ற அளவிற்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த விளம்பரமும் இன்றி நேரடியாக சேவை செய்து வருகின்றன. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமெனில் தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன், சென்னை வெள்ள நிவாரணத்திற்கு 25 லட்ச ரூபாய் வழங்குவதாகத் தெரிவித்து, தனது டுவிட்டர் தளத்தில், இன்று தன்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது, தான் 18 வருடங்கள் வாழ்ந்த சென்னை என்றும், சென்னையை தான் நேசிப்பதாகவும் கூறியுள்ளார்.

தமிழனின் பண்பாடே, யாரிடமும் யாசிக்காமல் இருப்பதும், தானமாகக் கொடுப்பதை மறுதலிப்பதும்தான்.

“”ஈ என இரத்தல் இழியதன்று, அதன் எதிர்

ஈயேன் என்றல் அதனினும் இழியதன்று

கொள் என கொடுத்தல் உயர்யதன்று, அதன் எதிர்

கொள்ளேன் என்றல் அதனினும் உயர்யதன்று””

என்பதுதான் தமிழர் பண்பாடு.

அத்தகைய தமிழர் பண்பாட்டின் இலக்கணமாய் திகழும் ஜெயலலிதா அரசு, கமலஹாசனிடம் எவ்வித யாசகமும் கேட்கவில்லை. ஆனால், அரசு நிவாரண நிதி கேட்பதாகவும், தான் மக்களை நேசிப்பதால் உதவி வழங்குவதாகவும் தேவையற்ற கருத்துகளை அவர் தெரிவித்து இருப்பது மலிவான வகையில் விளம்பரம் தேடுவதற்கான முயற்சியே ஆகும்.

இந்த வகை விளம்பரத்திற்காகத்தான், கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டபோது, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு 12 லட்ச ரூபாய் உதவி வழங்குவதாக அவர் தெரிவித்தாரா? உண்மையிலேயே அந்த உதவியை அவர் வழங்கினாரா? யாரிடம் வழங்கினார் என்பதை அவரால் தெரிவிக்க இயலுமா?

இதேபோன்றுதான், அவர் சமீபத்தில் ஒரு விளம்பரப் படத்தில் நடித்ததற்காக கிடைத்த பல கோடி ரூபாயை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கியதாக செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனம், அவ்வாறு எந்த உதவியையும் அவர் வழங்கவில்லை என மறுப்பு வெளியிட்டது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

கமலஹாசன் பெரிய நடிகர் என்பதற்காகவோ, அவர் பெரிய, பெரிய படங்களை எடுக்கிறார் என்பதற்காகவோ, அவரது பிதற்றல் மொழிகளை கேட்டுக் கொண்டிருக்க முடியாது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் மீது முழு நம்பிக்கையும், பாசமும் வைத்துள்ள தமிழக மக்கள் அதனை நிச்சயமாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவோ, நம்பவோ மாட்டார்கள் என்பதை உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன்..

 

நிவாரணப் பொருள்களில் ஜெயலலிதா படம் ஒட்டச் சொல்வது யார்?: பரபரப்புத் தகவல்

images tamilnadu chennai flood relief materials tiruppur - 2026சென்னை:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களுக்கு வெளி மாநிலம் மற்றும் தமிழ் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து வெள்ள நிவாரணத்திற்காக வந்த பொருட்களில் ஜெயலலிதாவின் படம் ஒட்டியேத் தீர வேண்டும் என அதிமுகவினர் அழிச்சாட்டியம் செய்வதாக சமூக வலைத்தளங்களில் நேற்று மதியம் முதல் செய்திகள் வரத்தொடங்கின.

 

மழை நிவாரணப் பணிகளில் ஆட்சிக்கு எதிராக பல செய்திகள் வந்த போது இது என்னடா புது தொந்தரவு என எண்ணிய அதிமுக தலைமை இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

இதை அடுத்து,
நிவாரணங்களை கொண்டு வரும் வாகனங்களை தொடர்ந்து கண்காணிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டது. வாகனங்கள் எந்த வழியாக செல்ல வேண்டும் என சொல்லுவதற்காக சில போலீசாரும் லாரிகளில் ஏறிக் கொண்டனர். மதியம் 1 மணிக்கு திருத்தணி பைபாஸ் சாலையில் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு லாரியை மடக்கிய ஒரு கும்பல், கை நிறைய திருவள்ளூர் அதிமுக எனக் கூறிக் கொண்டு சிலப் போஸ்டர்கள், பேனர்களை கட்ட வந்துள்ளனர்.

அவர்களை மடக்கிப்பிடித்து விசாரித்த போலீசார் யார் என்ன என கேள்விகள் கேட்டவுடன் முன்னுக்குப்பின் பதில் சொல்லியுள்ளனர்.

அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கும் போது சென்னையில் இருந்து ஸ்டிக்கர், பேனர்கள், கொடிகள் வந்ததாகவும், கூடவே தலைக்கு ரூ. 5ஆயிரம் பணம் கொடுத்து சென்னைக்கு வரும் வெளி மாநில லாரிகளில் இந்த பேனர்கள் கட்டினால்தான் சென்னைக்குள் செல்ல முடியும் என சொல்லி ஒட்டச் சொல்லியதாகவும் கூறியுள்ளனர்.

தொடர்ந்து சென்னையில் இருந்து தங்களுக்கு இவ்வாறு போன் வந்ததால்தான் நிவாரணப் பொருள்கள் ஏற்றி வந்த லாரிகளை வழிமறித்ததாகவும்
அவர்கள் கூறியுள்ளனர்.

அவர்கள் கூறிய செல்போன் நம்பர்களின் மூலம் சென்னையில் இருந்து அவர்களை இயக்கிய பிரமுகரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், இதே போல் செயல்பட்ட ஒரு கும்பலை சேலம் ஆத்தூர் அருகிலும் பிடித்துள்ளனர். அவர்களும் சென்னையில் இருந்து தான் பணம் வந்ததாகக் கூறியுள்ளனர். இவ்வாறு பணம் எதற்கு அனுப்பப் படுகிறது. இதில் அரசியல் இருக்குமா? முதல்வரின் பெயரால் நடப்பது போல் காட்டப்படுவதன் மர்மம் என்ன என்பது இப்போது அதிகம் விவாதிக்கப்படுகிறது.