Home Blog Page 5936

ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் : உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி

 
ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் மத உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
 
உச்சநீதிமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணிய சுவாமி, மன்னார் வளைகுடாவில் உள்ள ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
 
இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் உச்சநீதிமன்றத்தில், தாம் தாக்கல் செய்த மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும்; இன்னமும் மத்திய அரசு பதில் மனுவைத் தாக்கல் செய்யவில்லை என்று சுப்பிரமணிய சுவாமி முறையிட்டிருந்தார்.
 
இந்நிலையில் இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று மத்திய அரசு ஒரு பதில் மனுவைத் தாக்கல் செய்தது. அதில், மன்னார் வளைகுடாவில் உள்ள ராமர் பாலம் வழியாக சேதுக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்றமாட்டோம். மக்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து வேறுபாதையில்தான் சேதுக்கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளது.
 
இதனைத் தொடர்ந்து வரும் 26-ந் தேதி சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெறுவது குறித்து விசாரணை நடைபெற உள்ளது.

 

கூட்டுறவு வங்கியில் தீ விபத்து : ரூ.25 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

 
 
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த பசுமலையில் தோரண வாயில் அருகே பசுமலை கூட்டுறவு வங்கியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. தீயணைப்புத் துறையினரின் துரித நடவடிக்கையால் ரூ.10 கோடி நகைகள், பணம் தப்பின.
 
நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் இந்த வங்கி பூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் மதியம் 3 மணியளவில் வங்கிக்குள் இருந்து புகை வெளியேறியுள்ளது. இதனை இயேசு என்ற காவலாளி கவனித்து, உடனே வங்கியின் செயலர் மற்றம் காவல் நிலையத்தினருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக அங்கு வந்த போலீசார் தீயணைப்புத் துறையினருக்கு கொடுத்தனர். அதன் பேரில் மதுரை திடீர் நகரில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வங்கிக்குள் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முற்பட்டனர்.
 
அதற்குள் மிக வேகமாக பரவிய தீ வங்கி முழுவதும் எரிந்து வெளியேறியது. தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் மற்றும் நவீன சோப்பு நுரை கருவி மூலம் தீயை பரவ விடாமல் தடுத்து அணைத்தனர். தீ விபத்தில் வங்கியின் குளிர் சாதன கருவிகள், கணினிகள், ஆவணங்கள் உள்ளிட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்ததால் பாதுகாப்பு பெட்டக அறைக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதனால் அந்த அறையில் இருந்த ரூ.10 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் பணம் தப்பியது.
 
கூட்டுறவு வங்கியின் மிக அருகில் மண்ணெண்ணெய் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் வந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டு விட்டது. மவிற்பனை நிலையத்தில் தீ பரவியிருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும். தீ விபத்து குறித்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தினர்.வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலியை கடத்தி விடுதியில் கற்பழித்த பொறியாளர் கைது

 
 
திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி மதுரைக்கு கடத்தி வந்து காதலியை கற்பழித்து விட்டு திருமணத்துக்கு மறுத்தபொறியாளர் கைது செய்யப்பட்டார்.
 
சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்தவர் தண்டாயுதபாணி. இவருடைய மகன் கார்த்திக் (வயது 28). பொறியாளர் பட்டதாரி. கிண்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சித்ரா(24), (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
 
இந்தநிலையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி சித்ராவை கடந்த 3 நாட்களுக்கு முன்பு கார்த்திக் மதுரைக்கு அழைத்து வந்தார். மதுரையில் கோச்சடை பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து இருவரும் தங்கினார்கள். அப்போது ஆசைவார்த்தை கூறி சித்ராவை கார்த்திக் கற்பழித்ததாக தெரிகிறது. இதன்பின் ஏற்கனவே உறுதி அளித்தது போல் சித்ராவை திருமணம் செய்து கொள்ள கார்த்திக் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
 
இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் காதலர்கள் இருவரும் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் திடீரென வயிற்று வலி ஏற்பட்டதாக கூறி தன்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லுமாறு சித்ரா தெரிவித்துள்ளார்.
 
இதை நம்பி கார்த்திக்கும் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மருத்துவரிடம் நடந்த சம்பவத்தை சித்ரா கூறியுள்ளார். காதலரான கார்த்திக் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதையும் தெரிவித்து தனக்கு உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்.
 
அப்போது தான் வயிறு வலிப்பதாக கூறி சித்ரா தந்திரமாக தப்பி வந்தது கார்த்திக்குக்கு தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து கரிமேடு காவல்
நிலையத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன்படி போலீசார் அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
 
காதலர்கள் இருவரும் தங்கி இருந்த ஓட்டல் எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய சரகத்துக்குட்பட்டது என்பதால் சம்பந்தபட்ட காவல் நிலையத்தினரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து கார்த்திக், சித்ரா ஆகியோரது பெற்றோருக்கு தெரிவித்து அவர்களை போலீசார் மதுரைக்கு வரவழைத்தனர். அவர்கள் முன்னிலையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
முதலில் சித்ராவை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்த கார்த்திக், பின்னர் மறுத்துவிட்டார். இதனையடுத்து திருமண ஆசை காட்டி கடத்தி வந்து பெண்ணை பலாத்காரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்

முதலமைச்சர் ஜெயலலிதா வாய்ப்பு தந்தால் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் : சரத்குமார்

 
 
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தென்மண்டல அலுவலகம் நெல்லை மாவட்ம் பாளையங்கோட்டை புதிய பேருந்துநிலையம் அருகே உள்ள சேவியர் காலனியில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலையில் நடந்தது.
 
அந்த கட்சியின் நிறுவன தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.சரத்குமார் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். மகளிர் அணி செயலாளர் ராதிகா சரத்குமார் குத்துவிளக்கு ஏற்றினார். விழாவில் சட்டமன்ற உறுப்பினர் சரத்குமார் பேசியதாவது :–
 
ச.ம.க. தொண்டர்கள் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உழைத்தால்தான் மாற்றத்தை உருவாக்க முடியும். எல்லாவற்றிலும் மாற்றம் வேண்டும். அந்த மாற்றத்தை மக்கள் தான் உருவாக்கவேண்டும். எல்லா கட்சியினரும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கூறுகிறார்கள். அந்த அளவிற்கு பொற்கால ஆட்சியை தந்தவர் காமராஜர். அப்படி ஆட்சி அமையவேண்டுமானால் தன்னலம், சுயநலமற்ற வாழ்வு வாழ வேண்டும். அரசியல் சாக்கடை என்று நாம் பேசிக்கொண்டே இருக்கிறோம். அந்த சாக்கடையை சுத்தம் செய்ய வேண்டுமானால் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். நமக்கு ஏன் என்று விலகி செல்லக்கூடாது.
 
சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் மாதிரி தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. அதில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. வீட்டுக்கு ஒரு விவசாயியை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும். நாம் தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வருகிறோம். இருந்தாலும் ஏன் தேர்தல் அறிக்கை என்றால், நமது கட்சியின் குறிக்கோளை வெளிகாட்டுவதற்காகத்தான். இதை யாரும் தவறாக நினைக்க வேண்டாம். அடுத்த மாதம் கோபிச் செட்டிபாளையத்தில் ச.ம.க. மாநாடு நடைபெறுகிறது என
சரத்குமார் கூறினார்.
 
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் சரத்குமார் கூறுகையில், தேசிய கொடி தலைகீழாக இருந்ததை பிரதமர் கவனிக்காதது வருந்தத்தக்கதாகும். ஆனால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் இதற்கு மன்னிப்பு கேட்டு உள்ளனர். சென்னையில் அதிக அளவில் மழை பெய்து உள்ளது. இதனால் தாழ்வான பகுதியில் மழைச்சேதம் ஏற்பட்டு உள்ளது. தமிழக அரசும் நிவாரண பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கு அதிக அளவில் வெள்ள நிவாரணம் வழங்கவேண்டும்.
 
தென்காசி தொகுதியில் மீண்டும் போட்டியிட, முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் வாய்ப்பு தந்தால் போட்டியிடுவேன். பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபம் கட்டும்பணி 40 சதவீதம் முடிந்துவிட்டது. இன்னும் ஒரு வருடத்தில் திறக்கப்படும். ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் அமைப்பதற்கு நான் பல முறை சட்டசபையில் பேசி உள்ளேன். அந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியரும் , பாராளுமன்ற உறுப்பினர் பிரபாகரனும் ஆய்வு செய்து உள்ளனர். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் சங்கத்தில் 15 வருடங்களாக நாங்கள் சிறப்பான பணிகளை செய்து உள்ளோம். புதிய நிர்வாகிகள் ஆலோசனை கேட்டால் சொல்வோம் என செய்தியாளர்களிடம் சரத்குமார் தெரிவித்தார்.
 

 

இந்தியா மற்றும் மலேசியா இடையிலான பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் பிரதமர் மோடி

 
 
மலேசியா சென்று உள்ள பிரதமர் மோடி பாதுகாப்பு துறையில் இந்தியா – மலேசியா இடையே ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்
 
பிரதமர் மோடி, மலேசியா பிரதமர் நஜீப் ரசாக்கை சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்த போது பிரதமர் மோடி பேசுகையில் பாதுகாப்பு துறையில் இந்தியா – மலேசியா இடையே ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும் என்று கூறினார்.
 
சிறந்த கடல் பாதுகாப்பு மற்றும் பேரழிவு மேலாண்மையில், இருநாடுகள் இடையிலான பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவோம்,” என்றார். மேக் இன் இந்தியா மற்றும் சுமார்ட் சிட்டி திட்டங்களில் மலேசியாவின் ஒத்துழைப்பையும் இந்தியா கேட்டுக் கொண்டு உள்ளது.
 
தீவிரவாதத்திற்கு எதிராக போரிடும் நஜீப் ரசாக், தீவிரவாதம் மற்றும் மதம் இடையிலான தொடர்பை புறந்தள்ளிவிட்டு, இஸ்லாமின் உண்மையான மதிப்பை உயர்த்திஉள்ளார் என்று பிரதமர் மோடி பாராட்டிஉள்ளார். பாதுகாப்பு ஒத்துழைப்பில் உங்களுக்கு நான் கடமைப்பட்டு உள்ளேன், பாதுகாப்பு சவால்களை எதிர்க்கொள்வதில் நம்முடைய அர்ப்பணிப்பை இது கோடிட்டு காட்டுகிறது. இப்பகுதியில் நாம் தொடர்ந்து நம்முடைய பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம், என்று பிரதமர் மோடி கூறினார்.
 
மலேசியா மற்றும் இடையிலான இருநாட்டு நட்புறவை புதிய நிலைக்கு கொண்டுச்செல்லப்படும் என்று பிரதமர் மோடி தனது நம்பிக்கை தெரிவித்து உள்ளார். சைபர் பாதுகாப்பு, கலாச்சாரம் மற்றும் பொதுநிர்வாகம் ஆகியவற்றில் இருநாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிஉள்ளது.
 
நேற்று கோலாலம்பூரில் இந்தியர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, தீவிரவாதத்தை எதிர்த்து போரிட உலக நாடுகள் ஒன்றுபடவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். தீவிரவாதம் என்பது இப்போது உலகுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. தீவிரவாதத்துக்கு எல்லையே கிடையாது. தீவிரவாதம், தனக்கென ஆட்களை கூட்டிச்சேர்க்க மதத்தை பயன்படுத்துகிறது. ஆனால் எல்லா மதத்தினரையும் அது கொல்கிறது. தீவிரவாதத்தில் இருந்து மதத்தை நாம் விலக்க வேண்டும். மனித நேயத்தில் நம்பிக்கை உடையவர்கள், நம்பிக்கை இல்லாதவர்கள் என்பது மட்டும்தான் வேறுபாடு.
 
எந்த நாடும் தீவிரவாதத்தின் வளர்ச்சிக்கு துணை போவதில்லை என்பது உறுதிப்படுத்தப்படவேண்டும். தீவிரவாதிகளுக்கு புகலிடங்கள் கூடாது. நிதி கூடாது. ஆயுதங்கள் கூடாது. நான் ஏற்கனவே கூறியதையே மீண்டும் சொல்கிறேன். நமது காலத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ள தீவிரவாதத்தை எதிர்த்து போரிட உலகமே ஒன்றுபட வேண்டும். உளவுத்தகவல் பரிமாற்ற ஒத்துழைப்பை பலப்படுத்த வேண்டும். படை பலத்தை பயன்படுத்த வேண்டும். ஒத்துழைப்பை பலப்படுத்த ஏற்ற வகையில் சர்வதேச சட்ட அமைப்பினை உருவாக்க வேண்டும். என்று மோடி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

ஸ்ரீரடி சாய்பாபா கோவிலில் விஜயகாந்த் தரிசனம்

 
 
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஸ்ரீரடி சாய்பாபா கோவிலில் தரிசனம் செய்ய முடிவு செய்தார்.
 
இதன்படி விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதா, மைத்துனரும், தே.மு.தி.க. இளைஞர் அணி தலைவருமான சுதீஷ், மற்றும் 2 மகன்களுடன் நேற்று மதியம் விமானம் மூலம் மும்பை புறப்பட்டார். அங்கு தனது நண்பர் இல்ல திருமண விழாவில் பங்கேற்றார்.
 
இன்று காலை தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கொறடா சந்திரசேகர் தலைமையில் மும்பை புறப்பட்டு சென்றனர். அங்கு விஜயகாந்துடன் இணைந்து ஸ்ரீரடி சாய்பாபா கோவிலில் தரிசனம் செய்கிறார்கள்.
 
தரிசனத்தை முடித்து அனைவரும் இன்று மாலையே சென்னை திரும்புகிறார்கள்.
 
முன்னதாக நேற்று மும்பை புறப்பட்ட விஜயகாந்தை விமான நிலையத்தில் தே.மு.தி.க. சட்டமன்ற கொறடா சந்திரகுமார் உள்பட நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர்.
 
தேர்தல் நேரத்தில் விஜயகாந்த் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஸ்ரீரடி செல்வது ஏன்? என்று கேட்டபோது நிர்வாகிகள் கூறியதாவது:–
 
சட்டமன்ற உறுப்பினர்களுடன் களுடன் ஸ்ரீரடி செல்ல வேண்டும் என்று விஜயகாந்த் ஏற்கனவே முடிவு செய்து இருந்தார். அதன்படியே அவர்கள் செல்கிறார்கள். இதற்கு எந்த காரணமும் இல்லை என அவர்கள் தெரிவித்தனர்.

வெள்ள நிவாரண நிதியாக ரூ.8,481 கோடி வழங்க பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

 
 
தமிழகத்தில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.8,481 கோடி வழங்க வேண்டும் என்று கோரி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
முதலமைச்சர் ஜெயலலிதாஎழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ள தாவது :-
 
தமிழகத்தில் நவம்பர் மாதம் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கவும், சேதமடைந்த கட்டமைப்புகளை சீர் செய்யவும், மத்திய அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் நிதியுதவி அளிக்க வேண்டும்.
 
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வடகிழக்கு மாவட்டங்களும், தமிழகத்தின் பல மாவட்டங்களும் வெகுவாக பாதிக்கப்பட்டன.தமிழக அரசின் வழிகாட்டுதல்படி, அமைச்சர்களும், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் மீட்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
 
மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவும், ராணுவம், விமானப் படை, கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். தமிழகத்தில் மீட்புப் பணிகளுக்காக மேற்கண்ட படை வீரர்களை உடனடியாக அனுப்பி
உதவியமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
சுமார் 4 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டனர். போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளும், நிவாரணப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. நெய்வேலியில் கடந்த 9ம் தேதி 437 மி.மீ. மழை பதிவானது. அதே போல, சென்னையிலும், நவம்பர் 20ம் தேதிக்குள்ளாக, கடந்த 100 ஆண்டுகளில் பெய்யாத அளவுக்கு மழை பெய்துள்ளது. வடகிழக்குப் பருவ மழைக்கு தமிழகத்தில் 169 பேர் உயிரிழந்துள்ளனர். சாலைகள், பாலங்கள், நீர் நிலைகள், மின்சாரம் வழங்கும் மின் கட்டமைப்புகள் என மாநிலத்தின் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.எனவே, தமிழகத்துக்கு நிவாரண உதவியாக உடனடியாக ரூ.500 கோடியை ஒதுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
 
இதில்லாமல், தமிழகத்தில் பழுதான உள்பட்டமைப்புகளை சரி செய்யவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கவும் ரூ.8,481 கோடி தேவைப்படுகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய மத்திய அரசு குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்றும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழகத்துக்கு மத்திய அரசு உடனடியாக ரூ.2 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கனமழைக்கு வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி

 
சென்னை ஓட்டேரியில் கனமழை காரணமாக வீடு ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக பலியனார்.
 
ஓட்டேரி பரசுராமன் தெருவில் வசிப்பவர் ராதாபாய் (45). இவரது கணவர் ரவிக்குமார் (50), சில ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார். இவர்களின் மகன் ராஜூ (23). கிண்டியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
 
ராதாபாயின் வீட்டுக்கு அருகில் ஜமால் என்பவரின் வீடு உள்ளது. பாகப்பிரிவினை செய்வதில் தகராறு ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதால் வீடு பாழடைந்து கிடந்தது. பழமையான வீட்டை இடிக்க அண்டைவீட்டார் தடை உத்தரவு பெற்றதால், இடிக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
 
சென்னையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருவதால் வீடு, மேலும் பலம் இழந்து நேற்று காலை 5 மணியளவில் இடிந்து விழுந்தது.
 
கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய ராஜூ, ராதாபாய் இருவரையும் மீட்டு ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிறிது நேரத்தில் ராஜூ பரிதாபமாக உயிரிழந்து விட்டார். படுகாயம் அடைந்த ராதாபாய்க்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனவரி 22-ல் கார் இல்லா தினம் : முதலமைச்சர் அறிவிப்பு

 
 
வரும் ஜனவரி 22-ம் தேதி கார் இல்லா தினம் டெல்லி மாநகரம் முழுவதும் கடைபிடிக்கப்படும் என்றும் அன்றைய தினம் சைக்கிளில் அலுவலகம் செல்லப் போவதாகவும் முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்
 
மாசில்லா நகரமாக்கும் முயற்சியின் டெல்லியின் துவாரக ஒருபகுதியாக பகுதியில் நேற்று 2-வது கார் இல்லா தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து, செக்டார் 3 முதல் 13 மற்றும் செக்டார் 7 முதல் 9 ஆகிய பகுதிகளில் முதல்வர் கேஜ்ரிவால் தலைமையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்பகுதியில் தனியார் கார்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
 
இதுகுறித்து துவாரகா பகுதியில் கேஜ்ரிவால்செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
 
“கார் பயன்படுத்துவதை குறைத்துக் கொண்டால் டெல்லியில் மாசு அளவை கட்டுப்படுத்த முடியும். இதை அனைவரும் கடைபிடிப்பது கடினம். எனினும் 10 சதவீதம் பேராவது இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டால் அது மிகப்பெரிய சாதனையாக இருக்கும்.
 
வரும் ஜனவரி 22-ம் தேதி மாநகரம் முழுவதும் கார் இல்லா தினம் கடைபிடிக்கப்படும். அன்றைய தினம் பொதுமக்கள் சைக்கிள் அல்லது பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். நானும் அலுவலகத்துக்கு சைக்கிளில் செல்ல திட்டமிட்டுள்ளேன். இந்த முயற்சிக்கு பலன் கிடைக்கும் என்று நம்புவதாக கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மின்சாரா விபத்தில் சிக்கிய 2 குழந்தைகளை காப்பாற்றிய பெற்றோர்கள் மின்சாரம் தாக்கி பலி

 
 
சென்னை வேளச்சேரி அஷ்டலட்சுமி நகர் 6-வது தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளிகருணாநிதி(வயது 29).அவரது மனைவி சுதா(26). அவர்களுக்கு ஆர்த்திஸ்ரீ(4), திவ்யாஸ்ரீ(2) என 2 மகள்கள் உள்ளனர்.
 
மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு நேற்று இரவு 7 மணியளவில் கருணாநிதி தனது மனைவி, 2 மகள்களுடன் வீடு திரும்பினார். வழியில், வீட்டின் அருகே உள்ள மாவு கடையில், இரவு உணவு தயாரிக்க மாவு வாங்குவதற்கு நின்றிருந்தார்.அப்போது மின் கம்பத்தில் இருந்த உயர் அழுத்த மின்சார வயர் திடீரென அறுந்து கீழே விழுந்தது. இதைக் கண்டதும் பதறிய பெற்றோர்கள் இருவரும் தங்கள் குழந்தைகளை காப்பாற்ற அருகில் உள்ள மணல் பகுதியில் அவர்களை தள்ளிவிட்டனர்.
 
அப்போது அறுந்து விழுந்த உயர்அழுத்த மின்சார வயர் கருணாநிதி, சுதா ஆகியோர் மீது விழுந்தது.
இதில் பெற்றோர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர். இதைக் கண்ட 2 குழந்தைகளும் கதறி அழுதனர்.
 
உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து குழந்தைகளை மீட்டனர். பின்னர், மின் வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின்சார இணைப்பை துண்டித்தனர். காயங்களுடன் இருந்த 2 குழந்தைகளையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அஷ்டலட்சுமி நகரை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் வேளச்சேரி பைபாஸ் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
 
அப்போது சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் இந்த பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ளது.அடிக்கடி மின்சார வயர்களும் அறுந்து விழுகின்றன. இதுபற்றி மின் வாரியத்திற்கு பல முறை புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.மின் வாரியஅலட்சியத்தால் தற்போது 2 பேர் பலியாகி 2 குழந்தைகளும் அனாதையாகி விட்டனர் என்று ஆவேசத்துடன் கூறினர்.
 
இதுபற்றி தகவல் அறிந்ததும் காவல்துறை உதவி ஆணையர்கள் கண்ணன், முருகேசன், குமார், அழகு, நந்தகுமார், தன்ராஜ் மற்றும் போலீசார் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர்.
ஆனால் சாலை மறியலில் ஈடுபட்டவர்களோ, ‘‘2 பேர் பலியான சம்பவத்திற்கு காரணமான மின் வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுவரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று மறுத்தனர்.
 
இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குழந்தைகளை காப்பாற்ற தம்பதியர் தங்களுடைய உயிரை பறிகொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.நீண்ட நேரத்திற்கு பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.