Home Blog Page 5939

கடலூர், புதுவையில் மழை: தாழ்வான பகுதிகளில் நீர் தேக்கம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. 4 கூரைவீடுகள் இடிந்து விழுந்தன. விழுப்புரம் மாவட்டத்திலும் ஓரளவு மழை பெய்தது.

புதுவையில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. நேற்று பகலிலும் பலத்த மழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைவெள்ளம் தேங்கியுள்ளது. சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாய பயிர்களும், 10 வீடுகளும் சேதமடைந்தன.

திண்டுக்கல் பகுதிகளில் மண்சரிவு

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. கொடைக்கானலில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. கொடைக்கானல் ஏரி நிரம்பி மறுகால் பாய்வதால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர்சோழா அருவி, பாம்பார் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச்சாலையில் மண்சரிவு ஏற்பட்டதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல இடங்களில் ஏற்பட்ட மண்சரிவு உடனுக்குடன் சீரமைக்கப்பட்டது. கொடைக்கானல் சாலையில் டம்டம் பாறை உள்ளிட்ட சில இடங்களில் சாலையில் மரங்கள் விழுந்தன.

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

போடி:
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, முல்லைப் பெரியாறு அணைக்கு வினாடிக்கு 4,567 கன அடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 133.10 அடியாக இருந்தது. வைகை அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

தேனி பகுதியில் போடிமெட்டு சாலையில் மண்சரிவு

போடி:
போடி மெட்டு சாலையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று அதிகாலை வரை மழை நீடித்தது. போடிமெட்டு மலைச்சாலையில் நள்ளிரவில் மீண்டும் 2 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மூணாறுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து பிற்பகல் 2 மணியளவில் போக்குவரத்து சீரானது.

பொள்ளாச்சியில் நிரம்பும் அணைகள்

பொள்ளாச்சியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

நீலகிரியில் பெய்த மழை காரணமாக மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பவானி அம்மன், மாரியம்மன் கோவில்களை வெள்ளம் சூழ்ந்தது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மண் சரிவால் ஊட்டி மலை ரயில் 2 நாட்களுக்கு ரத்து

ஊட்டி:
மண் சரிவால், ஊட்டி மலை ரயில் இரு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவையில் நேற்று மாலை கொட்டிய மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மேட்டுப்பாளையம் – ஊட்டி மலைப் பாதையில் 6 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. தண்ணீர் வரத்து அதிகரித்ததால் குந்தா மற்றும் கெத்தை அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

அடர்லி-ல்குரோவ் ரெயில் நிலையங்கள் இடையேயும், கல்லாரிலும் மண்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்ததாலும், சில இடங்களில் மரங்கள் விழுந்ததாலும் ஊட்டி நோக்கி சென்ற மலைரெயில் கல்லாரில் நிறுத்தப்பட்டது. இதனால் ரெயிலில் இருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் கார் மற்றும் வேன் மூலம் ஊட்டி சென்றனர்.

மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரயில் போக்குவரத்து நேற்றும், இன்றும் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. குன்னூர்-ஊட்டி இடையே ஓடும் பயணிகள் ரயிலும் 2 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஊட்டி ஏரிக்கு தண்ணீர் அதிகமாக வந்ததால் படகு இல்லத்தில் படகுத்துறை உள்ளிட்ட இடங்கள் தண்ணீரில் மூழ்கின. பாதுகாப்பு கருதி காலையில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மதியத்திற்கு பின்னர் மழை நீர் வடிந்ததால் மோட்டார் படகுகள் மட்டும் இயக்கப்பட்டன. மிதி படகு, துடுப்பு படகுகளின் சவாரி முற்றிலும் ரத்து செய்யப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர்கள் திடீர் போராட்டம்

சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர்களை மத்திய பாதுகாப்பு படை போலீசார் சோதனை செய்ய கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கடந்த நவம்பர் 16ஆம் தேதி முதல் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வழங்கி இந்நிலையில், நீதிமன்றத்திற்கு வருகை தந்த வழக்கறிஞர்களை மத்திய தொழில்பாதுகாப்பு படை போலீசார் சோதனை செய்தனர். அப்போது, பெண் வழக்கறிஞரை சோதனை செய்தனர். மேலும், அவர்களை சோதனை செய்யும் போது, வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், வழக்கிஞர்களுக்கும், மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து, வழக்கறிஞர்கள் திடீர் போராடத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து, வழக்கறிஞர்கள் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தால் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

7ஆவது சம்பள கமிஷன் அறிக்கை: அதிக சம்பளம் வாங்குபவர்களுக்கு மிக அதிக உயர்வு

புதுதில்லி:

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பான 7ஆவது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அதிக சம்பளம் வாங்குபவர்களுக்கு மிக அதிக உயர்வு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், 23 சதவீதம் வரை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பட்டியலில் மிகவும் ஏற்றத்தாழ்வு இருப்பதாக அரசு ஊழியர் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.

ஐ.ஏ.எஸ். அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் முதல் நிலை ஊழியர்கள் லட்சக் கணக்கில் சம்பளம் வாங்கி வருகின்றனர். அவர்களுக்கும் கீழ்நிலை ஊழியர்களுக்கும் சம்பள வித்தியாசம் மிக அதிகமாக உள்ளது. கீழ்நிலை ஊழியர்கள் வாங்கும் சம்பளத்தை விட உயர்ந்த அந்தஸ்தில் உள்ள ஊழியர்கள் பல மடங்கு சம்பளம் வாங்கி வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கெனவே கீழ்நிலை ஊழியர்கள் வேதனை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், 7ஆவது சம்பள கமிஷனில் மேல்நிலை அதிகாரிகளுக்கு இப்போது அதிக சம்பள உயர்வு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உச்ச நிலையில் உள்ள ஊழியர்களுக்கு 28 சதவீதம் வரை ஊதிய உயர்வு அளிக்க சிபாரிசு செய்துள்ளனர். ஆனால் கீழ்நிலை ஊழியர்களுக்கு 17 சதவீதம் மட்டுமே கூடுதலாக அளிக்க பரிந்துரை செய்துள்ளனர்.

கேபினட் செயலாளர் ஒருவருக்கு தற்போது ரூ.1 லட்சத்து 97 ஆயிரம் சம்பளம் கிடைத்து வருகிறது. அவருக்கு ரூ.2½ லட்சம் சம்பளம் வழங்க சிபாரிசு செய்துள்ளனர். செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஒருவர் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார். அவருக்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரமாக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இது 28 சதவீதம் கூடுதலாகும். கூடுதல் செயலாளராக இருக்கும் ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் தற்போது வழங்கப்படுகிறது. அது ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கீழ்நிலையில் உள்ள ஊழியருக்கு ரூ.15 ஆயிரத்து 330 சம்பளம் வழங்கப்படுகிறது. அது 18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 17.4 சதவீதம் மட்டுமே கூடுதலாக சம்பளம் கிடைக்கும். இதே போல கீழ்நிலை ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய பல்வேறு அலவன்ஸ்சுகளும் ரத்து செய்யப்படுகிறது. இந்த ஏற்றத்தாழ்வு கீழ்நிலை ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.

காவல் நிலையத்தில் பெண் போலீஸ் அதிகாரியின் மடியில் அமர்ந்த தலைமைக் காவலர்

காவல் நிலையத்தில் பெண் போலீஸ் அதிகாரியின் மடியில் அமர்ந்த தலைமைக் காவலர் ஒருவர் அமர்ந்திருந்தது போன்ற இரண்டு புகைப்படங்கள் வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவி வருகிறது.

புகைப்படங்களுடன் வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவி வரும் தகவலில் கூறப்படுவதாவது :-

அந்த சம்பவம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ராஜவுரி மாவட்டத்தில் உள்ள புதால் காவல் நிலையத்தில் நடைபெற்றதாகவும் அந்த தலைமைக் காவலர் பெயர் ஜாகிர் உசேன் என்றும் கூறப்படுகின்றது.இதற்கு கண்டனங்களும் குவிந்து வருகிறதாம் .

பெண் போலீஸ் அதிகாரியின் மடியில் தலைமைக் காவலர் அமர்ந்ததை அருகில் பணியில் இருப்பதவர் இதனை கண்டுக்கொள்ளாமல் இருப்பதை பார்த்தால், இந்த நிகழ்வு பலமுறை நடந்திருக்கலாம் என்றும், அவர்கள் இருவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தனவாம் .

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இதுதொடர்பாக தங்கள் கவனத்திற்கு தெரிய வந்ததும், தலைமைக் காவலர் ஜாகிர் உசேனை பணியிடை நீக்கம் செய்துவிட்டதாகவும், டி.ஐ.ஜி. ஏ.கே.அத்ரி தெரிவித்துள்ளார். அதேபோல் பெண் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற வெட்கத்துக்குரிய செயலை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளதாக வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவி வரும் தகவலில் கூறப்படுகிறது

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைய சென்ற 2 தமிழக வாலிபர்கள் நாடு கடத்தல்

இந்தியாவில் ஐ.எஸ் இயக்கம் பாரீஸ் தாக்குதலை தொடர்ந்து இந்த வாரம் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக இந்திய உள் துறை எச்சரித்து உள்ளது.

சிரியா மற்றும் ஈராக் நாடுகளில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளுக்கு அவர்கள் சென்றுள்ளனர். இவர்களில் ஆறு பேர், மேற்கத்திய நாடுகளின் விமான தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்; ஒருவர், இந்தியா திரும்பி விட்டார். இவர்கள், மஹாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள்.சிரியா, ஈராக்கில் இயங்கி வரும் ஐ.எஸ் அமைப்பில் குறைந்தது 23 இந்தியர்கள் இணைந்து உள்ளனர்.

மேலும், இந்தியாவில் உள்ள 150 பேர் ஐ.எஸ் பிரசாரத்தை தொடர்ந்து அந்த அமைப்பின் ஆதரவாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களை இந்திய உளவுத்துறை கண்காணித்து வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் பெங்களூரில் மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் எனபவரை போலீசார் கைது செய்தனர். இவர் ஷாமி என்ற பெயரில் ஐ.எஸ் இயக்கத்திற்கான பிரசார டுவிட்டர் கணக்கை நடத்தி வந்தார்.

இஸ்லாமிய அரசின் பிரசாரத்தை தொடர்ந்து, 150 இந்தியர்கள் (இதில் அதிகமான பேர் நாட்டின் தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள்) ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்களாக இருந்து வந்து உள்ளனர் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.

ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவாக இந்தியாவில் இருந்து செயல்படுபவர்களை தேசிய தொழில் நுட்ப ஆராய்ச்சி அமைப்பு வழிகாட்டுதலின்படி உளவுத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த பட்டதாரி இளைஞர் மற்றும் கரூரை சேர்ந்த அவரது நண்பர் ஆகிய இருவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முடிவு செய்து துபாய்க்கு சென்றுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் சுற்றுலா பயணிகள் போல் பெங்களூருவிலிருந்து துபாய் சென்ற இருவரும் பின்னர் அங்கிருந்து துருக்கி சென்றுள்ளனர்.

சிரியா எல்லை பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்கி எல்லை தாண்டி செல்வது குறித்து இருவரும் விசாரித்திருக்கின்றனர். இவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த தங்கும் விடுதி ஊழியர் துருக்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். இருவரையும் பிடித்து விசாரித்த துருக்கி அதிகாரிகள் அவர்கள் இருவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்காக வந்து இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து இருவரும் துருக்கியிலிருந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

பெங்களூருவுக்கு விமானம் மூலம் வந்து சேர்ந்த அவர்களை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்திய உளவு துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்து அவர்களது குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர். இருவரையும் தொடர்ந்து கண்காணித்து வரும் உளவு துறை அதிகாரிகள் அவர்கள் துருக்கி வரை செல்ல உதவி செய்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது .