Home Blog Page 5940

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜயகாந்த் மீண்டும் நடிக்க வருகிறார்

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தன் மகன் கதாநாயகனாக நடிக்கும், தமிழன் என்று சொல்லடா படம் மூலம், மீண்டும் நடிக்க வருகிறார்.

விஜயகாந்த் கடைசியாக, விருதகிரி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

அதன் பின் தீவிர அரசியலில் ஈடுபட்ட விஜயகாந்த் சினிமா பக்கம் திரும்பாமல் சமீபத்தில், அவரது மகன் சண்முக பாண்டியன் நடித்த, சகாப்தம் படத்தில், சில காட்சிகளில் மட்டும் நடித்தார்.

எதிர்பார்த்த அளவுக்கு அந்தப்படம்,ஓடவில்லை.தற்போது முன்னணி நடிகராக உள்ள விஜய்க்கு, ஆரம்ப கட்டத்தில் தோள் கொடுத்து உதவிய விஜயகாந்த், தன் மகனுக்கும் தோள் கொடுக்க தயாராகி விட்டார்.

சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் தமிழன் என்று சொல்லடா என, பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தை புதுமுக இயக்குனர் அருண் இயக்குகிறார். படத்தை, விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் தயாரிக்கிறார். படத்தின் மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.

மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடிக்க உள்ளார்.

விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், படத்தில் அரசியல் ‘பஞ்ச்’ வசனங்கள் மற்றும் புரட்சிகர பாடல்கள் இடம் பெறும் என தே.மு.தி.க., வட்டாரங்களால் கூறப்படுகின்றது.

தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு குறித்து ஓரிரு நாளில் அறிக்கை : பாஜக குழு இன்று ஆய்வு

 

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, மத்திய அமைச்சர்கள் பொன் ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் அடங்கிய குழு இன்று 21-11-2015ஆய்வு செய்கிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ஆய்வினைத் தொடங்குகிறது. இதன்பின், சென்னை தாம்பரம் உள்ளிட்ட மழையால் பாதிப்படைந்த பகுதிகளில் நேரில் ஆய்வு செய்யவுள்ளளனர்.

தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள சேத பாதிப்புகள் குறித்த அறிக்கையை தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைக்குள் இந்த அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து, ஆய்வுக் குழுவினை மத்திய அரசு அனுப்பவுள்ளது. தமிழகத்தில் கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பருவமழையால் ஏற்பட்ட சேத விவரங்களைத் தொகுக்கும் பணியில் வருவாய் நிர்வாக ஆணையரகம் ஈடுபட்டிருந்தது.

இந்த சேத விவரங்களைத் தொகுத்து அவற்றை அறிக்கையாகத் தயாரிக்கும் பணி இப்போது நடந்து வருகிறது. இந்த அறிக்கையானது ஓரிரு தினங்களில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று வருவாய்த் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், மத்திய அரசின் அதிகாரப்பூர்வ குழு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வினை மேற்கொள்ளும் என தெரிகிறது

 

நடிகையுடன் செல்பி எடுத்த முதலமைச்சர் : காங்கிரஸ் கண்டனம்

பிரபல நடிகையான கரீனா கபூர் யூனிசெப்அமைப்பின் கவுரவ தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று யூனிசெப் அமைப்பு சார்பில் சத்தீஷ்கர் மாநில தலைநகர் ராயப்பூரில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் மாநில முதலமைச்சர் ராமன்சிங் (பா.ஜனதா), நடிகை கரீனா கபூர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழா மேடையில் இருவரும் அருகருகே அமர்ந்து இருந்தனர்.

அப்போது முதலமைச்சர் ராமன்சிங் தனது செல்போனில் கரீனாவுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டார். உடனே கூட்டத் தினர் கரகோஷம் எழுப்பினர்.பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களையும் முதல்-மந்திரி ராமன்சிங் தனது செல்போனில் படம் எடுத்தார்.

ராமன்சிங் கரீனாவுடன் செல்பி எடுத்துக் கொண்ட காட்சி உள்ளூர் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பானது. இதைப்பார்த்த மாநில காங்கிரஸ் தலைவர் புபேஷ் பகேல் முதலமைச்சர் ராமன் சிங்குக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

காங்கிரசின் குற்றச்சாட்டு பற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில், முதலமைச்சர் செல்பி எடுக்கவில்லை. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களைத்தான் படம் பிடித்தார். அதை செல்பி எடுத்ததாக கூறுவது தவறு. முதலமைச்சர் தான் பங்கேற்கும் நிகழ்ச்சியில் இதுபோல் படம் எடுப்பது வழக்கம் என்றார்.ஆனால் காங்கிரஸ் தரப்பில் கூறும்போது, முதலமைச்சர் செல்பி எடுப்பது டி.வி.க்களில் ஒளிபரப்பாகியுள்ளது. நாங்கள் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினர் .

முதலீடு செய்து நன்மை பெற இந்தியா வாருங்கள் : மோடி அழைப்பு

 

பிரதமர் நரேந்திர மோடி இன்று மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் வர்த்தக முதலீட்டு உச்சி மாநாட்டில் உரையாற்றினார்.

அப்போது நரேந்திர மோடி கூறியதாவது:-

இந்தியாவுக்கும் ஆசிய நாடுகளுக்கும் உள்ள கூட்டுறவு மிகப் பழமையானது. தொழில் முனைவோருக்கு இந்தியா சிறந்த களமாக இருக்கிறது இங்கு முதலீடு செய்து நன்மை பெற வாருங்கள் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். மேலும் அவர் பேசும் போது தென் கிழக்கு ஆசியாவின் வளர்ச்சி, மற்றும் உறுதிதன்மைக்கு நுண் பொருளாதார ஸ்திரத்தன்மையை முக்கிய காரணம். ஆசிய நாடுகளுக்கு என் தலைமையையும் மற்றும் எம் மக்களையும் பரிசளிக்கிறேன். இந்தியாவில் என் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 18 மாதங்கள் நிறைவடைந்து விட்டன. இந்த நேரத்தில் ஏராளமான சவால்களை இந்தியா சந்தித்துள்ளது. நாங்கள் எங்களையே ஒரு ஒரு கேள்வி கேட்டுக் கொண்டோம் – என்ன மறுசீரமைப்பு என்றால் என்ன..?

சீர்திருத்தத்தின் நோக்கம் என்ன? இந்த கேள்விகளுக்கு எங்களுக்கு கிடைந்த தெளிவான பதில்தான்.. எங்களின் உருமாற்றமே சீர்திருத்தம்..அதுவே இப்போதை முழுமையான எங்களின் தேவை. சீர்திருத்தம் என்பது நீண்ட பயணம். இந்த பயணத்தின்முடிவில் இந்தியா தன்னை முழுமையாக

உருமாற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்பதே இலக்கு. இந்தியாவின் மாற்றம் எனும் காற்றை சுவாசிக்க நான் உங்களை அழைக்கிறேன். காற்று எல்லையை கடக்க காலம் எடுத்துக்கொள்ளும். நான் உங்களை அழைக்கவே இங்கு வந்திருக்கிறேன். மேலும் இந்தியாவின் அறிவியலாளர்கள், அறிவுசார் சொத்துரிமை அனைத்தையும் பாதுகாக்க நான் உறுதி அளிக்கிறேன்.ஆசியான் வணிக மற்றும் முதலீட்டாளர்களுக்கு இந்தியாவில் மகத்தான வாய்ப்புகள் உள்ளன என்பதை இந்த மாநாட்டில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்தியாவில் பண மதிப்பு நிலையாக உள்ளது , நடப்புக்கணக்கு பற்றாக்குறை குறைந்துள்ளது, அன்னிய முதலீடு அதிகரித்துள்ளது, பண வீக்கம் குறைந்துள்ளது, பிற பெரிய நாடுகளை விட இந்தியா பொருளாதார வளர்ச்சி நன்றாக உள்ளது என உலக வங்கி கூறியுள்ளது. உலகம் முழுவதும் இந்தியா மீதான நம்பிக்கை வளர்ந்துள்ளது.இன்சூரன்ஸ் திட்டம் துவக்கியுள்ளோம், அனைவருக்கும் வங்கி கணக்கு துவக்கி கொடுத்துள்ளோம் , அனைவருக்கும் வீடு, மண் வள கார்டு விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம்.இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதே எங்களின் நோக்கம், இதற்கென மேக் இன் இந்தியா கொள்கை வகுத்துள்ளோம், இதன் மூலம் உற்பத்தி பெருகுவதுடன் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்க வழி ஏற்படுகிறது இந்தியாவில் வர்த்தகம், பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது. வர்த்தகம், பொருளாதாரம் முன்னேற்றமே எங்களின் இலக்கு என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி, மாமியார் உட்ப்பட 6 பேர் கைது

 

குடித்துவிட்டு வந்து சித்ரவதை செய்த கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி மாமியார் உட்ப்பட 6பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பேசின்பிரிட்ஜில் கார் ஓட்டுநர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி, மாமியார்
இது குறித்து காவல் துறையினர் தரப்பில் செய்தியாளர்களிடம் கூறப்பட்டதாவது :-

பேசின்பிரிட்ஜ் தட்டான்குளத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (35). இவர் வாடகை கார் ஓட்டி வந்தார். சீனிவாசன், பேசின்பிரிட்ஜ் மோதிலால் தெருவில் வியாழக்கிழமை இரவு நடந்து வந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், சீனிவாசனை திடீரென வழிமறித்து அரிவாளால் வெட்டியது.

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே சிறிது நேரத்தில் இறந்தார். இது குறித்து பேசின்பிரிட்ஜ் காவல் நிலையத்தினர். வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். விசாரணையில், சீனிவாசன் மனைவி நாகஜோதி (32), மாமியார் மல்லேஸ்வரி (62) ஆகிய இருவரும்தான் கூலிப்படையை ஏவிவிட்டு கொலை செய்திருப்பது தெரியவந்துள்து.

இதையடுத்து காவல் துறையினர் அவர்கள் இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சீனிவாசன் தினமும் மது அருந்திவிட்டு வந்து நாகஜோதியை சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தியதும், இதனால் ஆத்திரமடைந்த நாகஜோதியும், மல்லேஸ்வரியும் சீனிவாசனை கொலை செய்ய அந்தப் பகுதியைச் சேர்ந்த கூலிப்படையை நாடியதும், அவர்கள் இருவரும் ஏவிய கூலிப்படையினர் சீனிவாசனை கொலை செய்திருப்பதும் தெரியவந்தது.

சீனிவாசனை கொல்வதற்காக ரூ.50 ஆயிரம் பேரம் பேசப்பட்டது. முன்பணமாக ரூ.20 ஆயிரம் பெற்று கொண்ட அப்பு தனது கூட்டாளிகளான மதன் (27), கருப்பு என்கிற ரகு (25) ஆகியோருடன் சேர்ந்து நேற்றுமுன்தினம் இரவு சீனிவாசனை கொலை செய்ததும் போலீஸ் விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டது.

இதையடுத்து சீனிவாசனின் மனைவி நாகஜோதி, மாமனார் நாகேஷ்வரன், மாமியார் மல்லேஸ்வரி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து பேசின்பாலம் சுடுகாடு பகுதியில் பதுங்கியிருந்த ரவுடிகள் அப்பு, மதன், ரகு ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 6 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர் என்று காவல் துறையினர் கூறியுள்ளனர்

நட்சத்திர விடுதியில் பயங்கரவாத தாக்குதல் : 27 பேர் சுட்டுக்கொலை

ஆப்ரிக்க நாடான மாலி தலைநகர் பமாகோவில் நட்சத்திர விடுதிக்குள் புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த 30 பணியாளர்கள் உட்பட 170 பேரை சிறைபிடித்தனர். பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கிய நட்சத்திர விடுதி பல மணி நேர சண்டைக்குப் பின் மீட்கப்பட்டது. சண்டையில், 27 பேர் கொல்லப்பட்டனர்.

பிணைக்கைதிகளில் 20 பேர் இந்தியர்கள். ஆயுதங்களோடு வந்த பயங்கரவாதிகள் விடுதியின் காவலர்களை சுட்டுக்கொன்ற பிறகு உள்ளே நுழைந்து அங்கு தங்கியிருந்தவர்களையும், பணியாளர்களையும் சிறைப் பிடித்தனர்.

அமெரிக்கா – பிரான்ஸ் கூட்டுப்படையினர், மாலி பாதுகாப்புப் படையினருடன் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். நட்சத்திர விடுதிக்குள் அதிரடியாக நுழைந்த ராணுவத்தினர் பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே பயங்கர சண்டை மூண்டது. பல மணி நேர சண்டையில், 2 பயங்கரவாதிகளும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். நட்சத்திர விடுதியில் இருந்து 27 உடல்கள் மீட்கப்பட்டதாக மாலி அரசு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு அல் கய்தாவுடன் தொடர்புடைய அல்-மொராபிடோன் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மாலித் தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பயங்கரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து, மாலியில் பத்து நாட்களுக்கு அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம்

மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ரமணன் செய்தியாளர்களிடம்கூறியுள்ளதாவது :-.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

லட்சத்தீவு அருகே உருவாயிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நீடிப்பதால் தமிழகம், புதுச்சேரியில் மழை நீடிக்கும்.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கோவை, நீலகரி, தேனி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் கன மழையும், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்யும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று செய்தியாளர்களிடம் ரமணன் தெரிவித்துள்ளார்.

கனமழையால் மண் சரிவு ஏற்ப்பட்டு பாறைகள் விழுந்தால் ரயில் சேவை ரத்து

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூரில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை இடைவிடாது பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அத்துடன், தண்டவாளத்தில் பாறைகள் விழுந்து மலை ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சீரமைப்பு காரணங்களாலும், காலநிலையை கருதியும் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக நேற்றும் (நவ.20), இன்றும் 21-11-2015வரை மேட்டுப் பாளையம் முதல் உதகை வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக, ரயில்வே துறை அறிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக உதகை ஏரியில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.

வடகிழக்குப் பருவமழை மற்றும் தாழ்வு மண்டலம் காரணமாக, கடந்த 1-ம் தேதி முதல் தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்யத் தொடங் கிய மழை, நேற்று காலை வரை இடைவிடாது கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக உதகை, குன்னூர், குந்தா, கோத்தகிரி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை ஒரே இரவில் 914.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மழை நிவாரணப் பணிகளை ஆய்வு செய்துவரும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலர் பி.டபிள்யு.சி.டேவிதார், மீட்புப் பணிகளை பார்வையிட்டார்.

மேட்டுப்பாளையம் குன்னூர் மலை ரயில் பாதையில் ஹில் குரோவ் அருகே பெரிய அளவி லான பாறை விழுந்தது கண்டறியப் பட்டது. இதனால், மேட்டுப்பாளை யத்தில் இருந்து நேற்று காலை குன்னூர் புறப்பட்ட மலை ரயில், கல்லாறில் நிறுத்தப்பட்டது. சுற் றுலா பயணிகள், மீண்டும் மேட்டுப் பாளையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மாவட்ட ஆட்சியர் சங்கர் செய்தியாளர்களிடம்
தெரிவித்துள்ளதாவது :-
நீலகிரி மாவட்டத்தில் 194 தாழ்வான பகுதிகளும், 24 நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதி களும் உள்ளன. மழையால் 6 வீடு கள் முழுமையாகவும், 45 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.

ஆங்காங்கே மண் சரிவு மற்றும் மரங்கள் விழுந்துள்ளன. அவை, உடனடியாக அகற்றப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதி களில் வசிப்பவர்களை, பாதுகாப் பான இடங்களுக்குச் செல்ல அறி வுறுத்தப்பட்டுள்ளது. குன்னூர் மற்றும் கோத்தகிரி சாலைகள் ஒருவழிப் பாதைகளாக மாற்றப் பட்டுள்ளன என்று செய்தியாளர்களிடம் ஆட்சியர் சங்கர் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் மாயமான மாணவ மாணவியர்களை மீட்ட பெங்களூரு போலீசார்

 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, ஒரு மாணவர் மற்றும் ஐந்து மாணவியர்கள் திடீரென மாயமான நிலையில், அவர்களை ரயில்வே காவல் துறையினர் பெங்களூருவில் மீட்டு பாதுகாப்பில் வைத்துள்ளனர்.

கரூர் மாவட்டம்குளித்தலை அடுத்த, இரும்புதிப்பட்டி இலங்கை தமிழர் முகாமில், சந்தரலிங்கம் மகள் டிசாந்தினி, முருகையா மகள் நிவேதா ஆகியோர், அழகுரத்தினம் மகள் சரஸ்வதி, சுந்தரலிங்கம் பேத்திருவேணி, குளித்தலை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 படிக்கின்றனர். அதேபகுதியைச் சேர்ந்த ராசு மகள் நிவேதா, அய்யர்மலை அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தார்.

இந்த நிலையில் அவர்கள், நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றவர்கள், மீண்டும் அவரவர் வீட்டுக்கு திரும்பவில்லை. இதுதொடர்பாக, குளித்தலை காவல் நிலையத்தில் பெற்றோர் தனித்தனியாக புகார் அளித்தனர்.

குளித்தலை இணை காவல் கண்காணிப்பாளர் ஜமீம் தலைமையிலான போலீசார்,சம்பவ நாளன்று, மாணவியர் ஐவரும், பள்ளிக்கு செல்லவில்லை என்பதை உறுதிசெய்து பல இடங்களில் மாணவ மாணவியர்களை மீட்க தேடி வந்தனர்.மேலும் தமிழர் முகாமை சேர்ந்த சுதாகர் மகன் ஜான்சன், 20, என்பவரும் காணவில்லை. இவர், தொட்டியம் பகுதியில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் படித்து வருகிறார்.

ஒரே நாளில், ஐந்து மாணவியர் மற்றும் ஒரு மாணவர் மாயமானது குறித்து, மாயனூர் காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி தேடி வந்தனர்.

இந்த நிலையில் கர்நாடகா மாநிலம், ரயில்வே காவல் துறையினர் பெங்களூரு ரயில்வே ஸ்டேஷனில் சுற்றித்திரிந்த, ஆறு பேர் மீட்கப்பட்டதாக, மாயனூர் போலீசாருக்கு, நேற்று தகவல் கொடுத்துள்ளனர்.

மாயனூர் மாயனூர் காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான போலீசார் ஆறு பேரையும் அழைத்து வர பெங்களூரு விரைந்த்துள்ளனர்.

திருமண வீட்டாருக்கு அபராதம் விதிக்க இந்தியாவில் சட்டம் கொண்டுவர திட்டம் போடும் அரசாங்கம்

திருமண வீட்டாருக்கு அபராதம் விதிக்க இந்தியாவில் சட்டம்கொண்டு வர திட்டம் கர்நாடக மாநில அரசாங்கம் திட்டம் போட்டுள்ளது.

ஆடம்பர திருமணங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தனி நபர் சட்ட மசோதா ஒன்று கர்நாடக மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும் , முன்னாள் சபாநாயகருமான ரமேஷ்குமார் இந்த தனி நபர் மசோதாவை இன்று கர்நாடக மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

கர்நாடக மாநில திருமணங்கள் (பதிவு மற்றும் இதர) சட்டம்-2015 என்ற பெயருள்ள இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதாக, சபாநாயகர் காக்கோடு திம்மப்பா சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

திருமண மண்டபங்களுக்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்ச வாடகையாக ரூ.50 ஆயிரம் மட்டுமே நிர்ணயிக்க வேண்டும் என்று மண்டப உரிமையாளர்களுக்கு உத்தரவிட இந்த மசோதா வகை செய்கிறது. 300 அல்லது அதற்கும் குறைவான விருந்தினர்கள் வருகை தந்தால் மட்டுமே அது ஆடம்பரம் இல்லாத திருமணம் என்று இந்த சட்ட மசோதாவில், குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற விதிமுறைகள் மீறப்பட்டால், சம்மந்தப்பட்டவர்களிடம் அபராதம் வசூலிக்கலாம்.

ஆடம்பரமாக திருமணம் செய்ய வேண்டும் என்ற வேட்கையில், மக்கள் தங்கள் கையிருப்பை தொலைத்துவிடுவதாக முதல்வர் சித்தராமையா கடந்த ஆண்டு ஒரு கருத்து கூறி இருந்தார். மேலும் அரசாங்கமே ஆடம்பர திருமண தடை சட்டத்தை கொண்டுவர உள்ளதாக கூறினார்.அதற்க்கு மக்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியதால் அது கிடப்பில்போடப்பட்டது. இந்த நிலையில் ரமேஷ்குமார் தாக்கல் செய்த தனி நபர் மசோதா மீது விவாதம் நடந்து தேவைப்படும் மாற்றங்கள் செய்து சட்டமாக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் சட்டமாக்க எதிர்ப்பு கிளம்பினால் மசோதாவை சட்டமாக மாற்றாமல் இருக்கவும் வாய்ப்புள்ளது.

பெரும்பாலும் கர்நாடக மாநில அரசாங்கம் சட்டமன்றத்தில் ஆடம்பர திருமணங்களை கட்டுப்படுத்தும் சட்டத்தை இன்னும் சில நாட்களில் சட்டமாக்கிவிடும் என்றே கூறப்படுகின்றது.