Home Blog Page 5941

பாரிஸ் தாக்குதல்: மூளையாக செயல்பட்ட முக்கிய நபர் சுட்டுக் கொலை

பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் பதுங்கியிருந்த ஒரு வீட்டை இலக்குவைத்து பாரீஸின் வடக்கே பொலிஸாரும் இராணுவத்தினரும் சேர்ந்து நேற்று அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். தீவிரவாதிகள் 6 இடங்களில் நடத்திய தாக்குதல்களில் 129 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயங்களுக்கு இலக்காகியிருந்தனர். பயங்கரவாதக் குழுவிடம் பயிற்சி பெற்று பெல்ஜியம் நாட்டு போலீஸாரால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள அப்துல் ஹமீது அபாவுத்(28) என்று அண்மையில் தெரியவந்தது. மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த அபவுட், பெல்ஜியம் நாட்டு குடிமகனாவான்.

பாரிஸில் கடந்த வெள்ளிக்கிழமை (13) ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதப் பாசறையில் பயிற்சி பெற்ற இவன், பாரிஸ் தாக்குதலின்போது மனித வெடிகுண்டாக வெடித்துச் சிதறிய பிராஹிம் அப்டெசலாம் என்பவனுடனும், இந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மற்றும் தேடப்பட்டு வரும் பலருடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக பிரான்ஸ் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் சிரியாவுக்கு தப்பிச்சென்ற அப்துல் ஹமீது அபாவுத், அங்கிருந்தபடியே பாரீசில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த கொடூரத் தாக்குதலுக்கு திட்டம்தீட்டி தந்துள்ளான்.

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி, நேற்று செயின்ட் டெனிஸில் பிரெஞ்சுப் பொலிஸாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பீகார் முதல்வராக நிதீஷ் குமார் பதவி ஏற்றார்: லாலு பிரசாத்தின் 2 மகன்களும் பதவி ஏற்பு

பாட்னா:

பீகார் சட்டசபை தேர்த லில் ஐக்கிய ஜனதா தளம்- ராஷ்டிரீய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இந்த கூட்டணியின் முதல்- மந்திரியாக நிதிஷ்குமார் கடந்த 14-ந்தேதி தேர்வு செய்யப்பட்டார்.

இன்று பிற்பகலில் பாட்னாவில் காந்தி மைதானத்தில் நட்ந்த விழாவில் பீகார் முதல்-மந்திரியாக நிதிஷ் குமார் பதவி ஏற்று கொண்டார். அவருக்கு மாநில கவர்னர் ராம்நாத் குபிந் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.நிதிஷ்குமார் மந்திரிசபையில் லல்லு பிரசாத் யாதவின் மகன்கள் தேஜ் பிரதாப், தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் இடம் பெற்று உள்ளனர். அவர்களும் பதவி ஏற்று கொண்டார்கள்.

விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சார்பில் மத்திய மந்திரி வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டார். தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மற்றும் 9 மாநில முதல் மந்திரிகள், முன்னாலள் பிரதமர் எச்.டி தேவே கவுடா,தி.மு.க த்லைவர் கருணாநிதி சார்பில் மு.க ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மழைநீரை அகற்றக் கோரி காஞ்சிபுரத்தில் பெண்கள் சாலை மறியல்

காஞ்சீபுரம்: 

காஞ்சீபுரத்தில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருக்கும் மழை நீரை அகற்றக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்திலும் கனமழையால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். காஞ்சீபுரத்தில் உள்ள இந்திரா நகர், அண்ணாமலை நகர், செந்தமிழ் நகர், தேவி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரம் வீடுகளுக்கு மேல் உள்ளது. அங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். கனமழையால் அந்த பகுதிகள் வெள்ளக்காடாகின. அந்த பகுதியில் உள்ள கால்வாய்கள் தூர்வாராமல் இருப்பதால் மழை நீர் தேங்கிக் கிடக்கிறது.
தேங்கிக் கிடக்கும் நீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய ரயில் நிலையம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் தேங்கியுள்ள மழை நீரை அகற்றக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மழைநீரை அகற்றுவதாக வாக்குறுதி அளித்தனர். அதன் பிறகு பெண்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு சென்றனர். ஒரு மணிநேரம் நடந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

தருமபுரி கூட்டத்தில் முதலமைச்சர் பற்றி அவதூறாக பேசியதாக விஜயகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தர்மபுரியில் நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதாக, அரசு வழக்கறிஞர் அசோகன், மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 30ம் தேதி வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கில், விஜயகாந்த் வரும் 24ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக, நீதிபதி சுபாதேவி நேற்று உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இவ்வழக்கினை எதிர்த்து, தேமுதிக சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்லா ஸ்ரீபந்த் ஆகியோர் இன்று விசாரித்தனர். அப்போது அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்கவும் ஆணையிட்டனர்.

பமாகோவில் ஓட்டலில் ஜிகாதிகள் துப்பாக்கி சூடு: 175 பேரை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்தனர்

பமாகோ,

மாலி நாட்டின் தலைநகர் பமாகோவில் ஓட்டலில் ஜிகாதிகள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். ஜிகாதிகள் பொதுமக்களை பிணைக்கைதியாக பிடித்து வைத்து உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாரீஸ் தாக்குதல் அதிர்ச்சியில் இருந்து சர்வதேச நாடுகள் வெளியேறுவதற்கு முன்னதாக, மாலிநாட்டு தலைநகர் பமாகோவில் உள்ள ஓட்டலில் ஜிகாதிகள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர் என்று பாதுகாப்பு வட்டார மற்றும் செய்தியாளர்கள் தரப்பு செய்திகள் வெளியாகிஉள்ளது. தீவிரவாதிகள் ஓட்டலில் 175 விருந்தினர்கள் மற்றும் பணியாளர்களை பிணைக்கைதியாக பிடித்து வைத்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜிகாதிகள் தானியங்கி துப்பாக்கிகளை கொண்டு தாக்குதல் நடத்திய சத்தம் வெளியே கேட்கப்பட்டு உள்ளது. ஓட்டலின் 190 எண் கொண்ட அறையின் வெளியே முதலில் தாக்குதல் நடத்தப்பட்ட சத்தம் கேட்டதாக தகவல்கள் வெளியாகிஉள்ளது.

ஜிகாதிகள் துப்பாக்கி சூடு நடத்துவதை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்து உள்ளனர். அவர்களும் ஓட்டலை சுற்றி வளைத்து உள்ளனர். ஜிகாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகிஉள்ளது. “துப்பாக்கி சூடு சத்தம் ஓட்டலின் 7-வது மாடியில் கேட்கிறது, ஜிகாதிகள் 7-வது மாடியில் நடைபாதையில் துப்பாக்கி சூடு நடத்திஉள்ளனர்” என்றும் பாதுகாப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்க தூதரகம் தன்நாட்டு மக்களை பாதுகாப்பாக இருக்க கேட்டுக் கொண்டு உள்ளது. ஓட்டலில் அமெரிக்கர்களும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வடக்கு மாலியானது ஜிகாதிகள் பிடியில் உள்ளது. இந்த ஜிகாதி பிரிவுகள் அல்-கொய்தா தீவிரவாத இயத்துடன் தொடர்பு உடையவை. இங்கு பிரான்ஸ் தலைமையிலான ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாலியில் இப்போது பிரான்ஸ் படையை சேர்ந்த 1000 வீரர்கள் சண்டையிட்டு வருகின்றனர். பமாகோவில் கடந்த மார்ச் மாதம் இதேபோன்று பிரபலமான ஓட்டல் ஒன்றில் தாக்குதல் நடத்தப்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர். இதற்கு அனைத்து தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

9ஆம் வகுப்பு படித்த லாலுவின் மகன் பீகாரின் துணை முதல்வர்

9ஆம் வகுப்பு படித்த லாலு பிரசாத் யாதவின் இளைய மகன் தேஜ்ஸ்வி பீகாரின் துணை முதலமைச்சராக பதவியேற்றார்.

பிகாரில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், நிதிஷ் குமார் வெற்றி பெற்றார். அவருடன் லாலு பிரசாத் யாதவும் கூட்டணி அமைத்திருந்தார். லாலு தனது இரண்டு மகன்களையும் இந்த தேர்தலில் களமிறக்கினார். முடிவில் இருவருமே வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், அவரது இளைய மகன் தேஜஸ்வி துணை முதல்வராக பதவியேற்றார். தேஜஸ்வியின் வயது 24. வெறும் 9 ஆம் வகுப்பு வரைதான் படித்துள்ளார். இவரை லாலு பிரசாத் தனது கூட்டங்களுக்கு அழைத்துச் சென்று அவருக்கு அரசியலை கற்றுக் கொடுத்தார். இவர் ஒரு கிரிக்கெட் வீரரும் கூட. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இடம் பெற்று விளையாடி இருக்கிறார்.

லல்லுவின் மூத்தமகன் தேஜ்பிரதாப்(28). இருந்தாலும் தனது இளையமகன் தேஜஸ்வியையே லாலு தனது அரசியல் வாரிசாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிக்கி முதலமைச்சர் பதவியை இழந்த லாலு, உடனடியாக தனது மனைவி ராப்ரிதேவியை தேர்தலில் நிறுத்தி பீகாரின் முதலமைச்சர் அரியணையில் அமர வைத்து அழகு பார்த்தார். படிப்பாவது! அனுபவமாவது! செல்வாக்கும் இருந்து, இந்திய மக்களிடம் எப்படி அரசியல் செய்ய வேண்டும் என்ற கலையும் தெரிந்தால், யார் வேண்டுமானாலும், இந்திய அரசியலில் எந்த பதவிக்கும் வர முடியும் என்பதை லாலு பிரசாத் யாதவ் பலமுறை நிரூபித்து வருகிறார்.

அர்ஜுன் சந்திரா, கருணா டோக்ரா நடிக்கும் “நின்று கொல்வான்”

ஹம்ச ஹர்ஷா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் வழங்கும் VP ஷங்கர் எழுதி இயக்கும் “நின்று கொல்வான்”

பெரும் பொருட்செலவில் VP ஷங்கரின் பிரம்மாண்டமான இயக்கத்தில் ஹம்ச ஹர்ஷா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பாக B. ஜெயந்தி மற்றும் AN. திருமுருகன் தயாரிக்கும் படம் “நின்று கொல்வான்”.

அனைவரும் கவரும் வண்ணம் ஜனரஞ்சகமான முறையில் எடுக்கப்படும் இப்படத்தில் பிரபல கன்னட நடிகரான அர்ஜீன் சந்த்ரா கதாநாயகனாக நடிக்க மாடல் உலகில் முன்னனி அழகியாக திகழும் கருணா டோக்ரா கதாநாயகியாக நடிக்கின்றனர்.

உயர் ரக வகுப்பை சேர்ந்த நாயகன் சென்னையில் ஒரு கல்லூரியில் தங்கி படிக்கின்றான். உடன் பயிலும் நாயகி மீது காதல் வயப்படுகிறான். இருவரும் காதலித்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கையில் இருவரும் அதிர்ச்சியடைகின்றனர். இப்படி பட்ட வித்தியாசமான காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது.

ஆசிஷ் வித்யார்த்தி, யோகி பாபு, ராஜுவ் பிள்ளை, “நிழல்கள்” ரவி, கீதா, “மாஸ்டர்” அபிஷேக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

சென்னை, கோவா, உடுப்பி, மைசூர், பெங்களுர் பகுதிகளில் தொடர்ந்து படபிடிப்பு நடைபெற்று வருகிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

தயாரிப்பு – B. ஜெயந்தி, A.N. திருமுருகன்
எழுத்து இயக்கம் – VP ஷங்கர்
இசை – ஜீடா சாண்டி
பாடல்கள் – “கவிப்பேரரசு” வைரமுத்து
ஒளிப்பதிவு – G. பாலமுருகன்
படத்தொகுப்பு – NM. விஷ்வா
மக்கள் தொடர்பு – நிகில்

நான் தீவிரவாதி இல்லை; என்னை கட்டித் தழுவுவீர்களா?: இஸ்லாமிய இளைஞர் உருக்கம்

images paris - 2026பாரீஸ்:

நான் தீவிரவாதி இல்லை… என்னை கட்டித் தழுவுவீர்களா? என்ற கோரிக்கை பதாகையுடன் நின்றிருந்த இஸ்லாமிய இளைஞரைப் பார்த்து, பாரீஸ் மக்கள் சிலர் கண்ணீருடன் கட்டித் தழுவினர்.

பாரீஸ் நகரில் கடந்த வெள்ளிகிழமை தீவிரவாதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதில் பலர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ஒரு இஸ்லாமிய இளைஞர் தன் கண்களை கட்டியப்படி, ‘நான் தீவிரவாதி இல்லை, என்னை கட்டி அணைப்பீர்களா?’ என்ற கோரிக்கை பதாகையுடன் நின்றிருந்தார்.

இதைக் கண்ட பாரீஸ் மக்கள், கொஞ்சம் கூட யோசிக்காமல் அந்த இஸ்லாமிய இளைஞரை கட்டியணைத்தனர். இதில் பலர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தியபடியே அந்த இளைஞரை கட்டியணைத்தனர்.

அதன்பின், அங்கே கூடியிருந்த மக்களிடம் பேசிய அந்த இளைஞர், ”நான் ஒரு இஸ்லாமியன், ஆனால் நான் தீவிரவாதி இல்லை. நான் யாரையும் கொன்றது இல்லை. எந்தக் காரணமும் இல்லாமல் அப்பாவி மக்களை கொன்றால் அவன் தீவிரவாதிதான். அதில் மாற்றமில்லை. ஆனால் ஒரு இஸ்லாமியர் அதைச் செய்யமாட்டார்” என்று கூறினார்.

முதிர்ச்சி அடைய பாபா ராம்தேவ் ஆசிரமத்துக்கு ராகுல் சென்று வந்தால் நல்லது: முக்தார் அப்பாஸ் நக்வி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தன் மகன் ராகுல் காந்திக்கு கட்சியின் வரலாறு குறித்து சொல்லிக் கொடுக்க வேண்டும் என பா.ஜ.க தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சருமான முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.

மேலும் அவர் கூறும்போது ராகுல் காந்தி முதிர்ச்சி பெற யோகா குரு பாபா ராம்தேவ் ஆசிரமத்திற்கு ஒரு முறை சென்று வந்தால் நல்லது என்றும் கூறினார். முன்னதாக ராகுல் காந்தி, பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்பதை நிரூபிக்க சிபிஐ அல்லது அமலாக்கத் துறை விசாரணை நடத்த வேண்டுமென்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

பிரிட்டன் நிறுவனங்களுக்கான சட்டத் துறை அதிகாரிகளிடம் அளித்த ஆவணத்தில் தன்னை அந்நாட்டு குடிமகன் என்று ராகுல் காந்தி அறிவித்துள்ளார் என்று சுப்பிரமணியன் சுவாமி குற்றம் சாட்டியிருந்தார். தில்லியில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களிடையே நேற்று ராகுல் காந்தி பேசும் போது தன் மீதும் தன் குடும்ப உறுப்பினர்கள் மீதும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. பா.ஜ.க அரசுக்கு துணிச்சல் இருந்தால் என்னை கைது செய்து பார்க்கட்டும்.

நான் எந்த தவறும் செய்யவில்லை என கூறியிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக முக்தார் அப்பாஸ் நக்வி ராகுல் காந்தி முதிர்ச்சி பெற யோகா குரு பாபா ராம்தேவ் ஆசிரமத்திற்கு ஒரு முறை சென்று வந்தால் நல்லது என்று கூறினார்.

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குநர் படத்தில் இனி நடிக்க மாட்டேன்: நடிகை ஆனந்தி

images cinema actress kayal aanandhi - 2026‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குநரின் படத்தில் இனி நடிக்கமாட்டேன் என நடிகை ஆனந்தி கூறியுள்ளார்.

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் ஜி.வி. பிரகாஷ், ஆனந்தி, மனிஷா யாதவ், சிம்ரன் ஆகியோர் நடித்தார்கள். ஆதிக் ரவிச்சந்திரன் என்கிற அறிமுக இயக்குநர் இயக்கிய இந்தப் படம் தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றது. இந்தப் படத்தில் ஆனந்தி நடித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

இதுபற்றி ஆனந்தி ஒரு பேட்டியில் கூறியதாவது:

‘இயக்குநர் கதையை முதலில் சொன்னபோது அழகான இளம்பருவக் காதல் கதையாகத்தான் இருந்தது. ஆனால் படத்தின் இறுதிக் காட்சியைப் படமாக்கும்போது அது அடல்ட் காமெடி படம் என்று எனக்குத் தெரிந்தது. அதுவரை வசனங்கள் பற்றியும் எனக்குச் சரியாகத் தெரியவில்லை. படப்பிடிப்புக்கு முன்னால் எனக்குத் தெரிந்தது எல்லாம் நான் துணிச்சலான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்பதுதான். இது என்னுடைய முந்தைய படங்களில் இருந்து வித்தியாசமாக இருந்தது. ஆனால் கதை பற்றி முன்பே தெரிந்திருந்தால் நான் நடித்திருக்கமாட்டேன். அடல்ட் காமெடி படங்கள் எனக்குப் பிடிக்காது. ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குநரின் படத்தில் இனி நடிக்கமாட்டேன்’ என்று அவர் கூறியுள்ளார்.