Home Blog Page 6060

42-ஆவது பிறந்த நாளை எளிமையாகக் கொண்டாடிய சச்சின்: ட்விட்டரில் குவிந்த வாழ்த்து

மும்பை: இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயமாகவும், இந்திய கிரிக்கெட்டின் இமயமாகவும் திகழும் சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கருக்கு 42-வது வயது பிறந்தது. அவர் தனது பிறந்த நாளை மும்பையில் தனது குடும்பத்தினருடன் எளிமையாகக் கொண்டாடினார். 2013-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றாலும், அவரது சாதனைகளின் தாக்கம் இன்னும் ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை ஆலோசகராக செயல்பட்டு வரும் டெண்டுல்கர், இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிக்கான கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் உரிமையாளராகவும் உள்ளார். அவரது பிறந்த நாளையொட்டி சச்சினுக்கு, உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். தனது பிறந்த நாளின் போது புதிதாக இன்ஸ்டாக்ராம் சமூக வலைத்தளப் பக்கம் உருவாக்கியிருந்தார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்திலும் செய்தியைப் பகிர்ந்து கொண்டிருந்தார். அவரது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் குவிந்தன. அவரும் தன்னை வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். sachin-tendulkar-birthday

மல்லி மஸ்தான் பாபு உடல் சென்னை வந்தது; சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலி

Mastan-Babu-dead சென்னை: அர்ஜெண்டினாவில் உயிரிழந்த மலை ஏற்ற வீரர் மல்லி மஸ்தான் பாபு உடன் நேற்று சென்னை வந்தது. பின்னர் அவரது உடல் அங்கிருந்து சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் மல்லி மஸ்தான் பாபு. மலை ஏற்ற வீரரான இவர், கடந்த மாதம் அர்ஜெண்டினாவில் மலை ஏறும் போது திடீரென மாயமானார். அவரை தீவிரமாகத் தேடிய போது, அவரது உடல் கிடைத்தது. இதையடுத்து அவரது உடல் நேற்று காலை அர்ஜெண்டினாவில் இருந்து விமானம் மூலம் தோகா வழியாக தில்லிக்கு வந்தது. பின்னர் நேற்று பகல் தில்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்டது. அவரது உடலை நெல்லூர் அரசு அதிகாரி மற்றும் அவரது சகோதரி டாக்டர் மல்லிதுரை சான்மா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பின்னர் மல்லி மஸ்தான் பாபு உடல் வேனில் ஏற்றப்பட்டு, அவரது சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தப் படுகிறது.

ஏப்.29ல் சுஷ்மா ஸ்வராஜை சந்திக்கின்றனர் தமிழக மீனவப் பிரதிநிதிகள்: முரளிதர் ராவ் தகவல்

சென்னை: மீன்வர் பிரச்னைக்கு தீர்வு காணும் விதத்தில், ஏப்.29ல் தமிழக மீனவப் பிரதிநிதிகள் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்திக்கின்றனர் என்று கூறினார் பாஜக தேசிய பொதுச் செயலர் முரளிதர் ராவ். சென்னையில் நேற்று அக்கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முரளிதர் ராவ், தமிழக மீனவர்கள் பிரச்னையை பா.ஜ.க. உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. மீனவர்கள் கொல்லப்படுவதைத் தடுக்கவும், கைது செய்யப்பட்ட மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில், தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். தமிழக மீனவர் பிரச்னை தொடர்பாக, தமிழக பா.ஜ.க. சார்பில் தில்லியில் 27-ஆம் தேதி கருத்தரங்கம் ஒன்று நடைபெறுகிறது. இதில், தமிழக மீனவ பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர். இறுதியில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, 29-ஆம் தேதி மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜை மீனவ பிரதிநிதிகள் சந்தித்து பேசுகின்றனர்.. என்று கூறினார்.

ஆந்திர என்கவுண்டரில் போலீஸார் கூறுவது நம்பும்படியாக இல்லை: முரளிதர் ராவ்

சென்னை: ஆந்திர என்கவுண்டரில் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில், போலீசார் கூறுவது நம்பும்படியாக இல்லை என்று கூறியுள்ளார் பாஜக பொதுச் செயலர் முரளிதர் ராவ். பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ், சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம், ஆந்திராவில் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து…? பாஜக கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, அந்த சம்பவத்திற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆந்திர போலீசார் தற்காப்புக்காக கொலை செய்ததாகக் கூறுவது நம்பும்படியாக இல்லை. உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதாக நாங்கள் நினைக்கவில்லை. இந்த விஷயத்தில் ஆந்திர அரசு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றார். மேகதாது குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முயன்று வருவது குறித்துக் கேட்டபோது, மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் எந்த அனுமதியும் பெறவில்லை என்றும், இது தொடர்பாக, தமிழக விவசாயிகள் கொண்டுள்ள கவலையில் நியாயம் உள்ளது. பா.ஜ.க. இந்த விவகாரத்தில் சரியான நிலைப்பாட்டை எடுக்கும் என்றும் கூறினார். . நிலம் கையகப்படுத்தும் மசோதாவை பா.ஜ.க.வில் உள்ள கூட்டணி கட்சிகளே எதிர்த்த நிலையில் அ.தி.மு.க. ஆதரித்துள்ளதே? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த முரளிதர் ராவ், இந்த மசோதாவில் உள்ள நன்மையை கருதி அ.தி.மு.க. ஆதரித்தது. பா.ஜ.க. கூட்டணியில் உள்ள சிவசேனா உள்ளிட்ட கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அ.தி.மு.க. ஆதரித்தது. என்றாலும், அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையே நட்பு எதுவும் கிடையாது. எங்கள் கூட்டணியிலும் அவர்கள் இல்லை என்றார்.

அதிகாரிகள் நெருக்கடி: ரேஷன் கடை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: அதிகாரிகள் கொடுத்த நெருக்கடியால், மன உளைச்சல் தாளாமல், சென்னை வண்ணாரப்பேட்டையில் நியாயவிலைக் கடை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் கூறியது…. சென்னை வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் மாடர்ன் லைன் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த வே.இளங்கோவன்(50) எர்ணாவூர் ஜெ.ஜெ.நகரில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் எடையாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், இளங்கோவன் வியாழக்கிழமை திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வந்தனர். அப்போது இளங்கோவன் எழுதியதாக ஒரு கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில் சில தகவல்கள் தெரியவந்ததாக் போலீஸார் கூறினர். சில நாட்களுக்கு முன் இளங்கோவன் பணிபுரியும் கடையில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியபோது, அங்கே பொருள்களின் இருப்பு குறைவாக இருப்பதும், பொருள்கள் வாங்க வந்த பலருக்கு இளங்கோவன் ரசீது வழங்காமல் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து இளங்கோவன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இதனிடையே அதிகமாக மது அருந்தும் பழக்கம் கொண்டிருந்த இளங்கோவன் குடும்பப் பிரச்னை காரணமாக மனைவி, குழந்தைகளைப் பிரிந்து தனது தம்பி கௌதமனோடு வசித்து வந்தார். இந்நிலையில் மன அழுத்தம் தாளாமல் இளங்கோவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இளங்கோவன் எழுதியதாகக் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையைத் தொடர்ந்து, அவர்கள் கொடுத்த நெருக்கடியால் மன உளைச்சல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இளங்கோவனை பணியிடைநீக்கம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நியாய விலைக் கடை ஊழியர்கள் வெள்ளிக்கிழமை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநங்கைகளுக்கு சம உரிமை வழங்கும் தனி நபர் மசோதா: மாநிலங்களவையில் ஒப்புதல்

புது தில்லி: திருநங்கைகளுக்கு சமூகத்தில் சம உரிமை அளிக்கும் தனி நபர் மசோதாவுக்கு நேற்று மாநிலங்களவை ஒப்புதல் அளித்தது. மாநிலங்களவையில் கடந்த மார்ச் மாதத்தில் திருநங்கைகளுக்கு சம உரிமை வழங்கும் தனிநபர் மசோதாவை திருச்சி சிவா தாக்கல் செய்தார். அப்போது நடைபெற்ற விவாதத்தில் பல உறுப்பினர்களும் இந்த மசோதாவை ஆதரித்தனர். சமூகத்தில் சுமுகமான முறையில் திருநங்கைகளும் தங்கள் வாழ்வை மேற்கொள்ளும் வகையில், ஆண்கள் மற்றும் பெண்களை போலவே திருநங்கைகளுக்கும் சமூகத்தில் சம உரிமை வழங்க வேண்டும். அவர்களின் வாழ்க்கைக்கான உரிமை, தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றை பாதுகாத்தல், உடல் மற்றும் மனரீதியான கொடுமைகளில் இருந்து அவர்களைப் பாதுகாப்பது, அவர்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பது, கவுரவமான வசிப்பிடங்கள் மற்றும் அவர்களுக்கான குடும்பங்களை அமைப்பதற்கான உரிமை, கருத்து சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் இந்த மசோதா அமைந்துள்ளது. இந்த தனி நபர் மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையின் நேற்று நடைபெற்றபோது, சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட், ‘‘இந்தப் பிரச்னையில் பல்வேறு அமைச்சகங்களில் விளக்கத்தையும், உச்ச நீதிமன்றத்தின் கருத்தையும் கேட்க வேண்டியுள்ளது. அரசு இதற்கு ஆதரவாகவே உள்ளது. எனவே இதுதொடர்பாக ஒரு விரிவான சட்டத்தை கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்கும். எனவே இப்போது இந்த தனிநபர் மசோதாவை உறுப்பினர் திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்’’ என்றார். ஆனால் திருச்சி சிவா, ‘‘இதுதான் சரியான நேரம், எனவே அரசு பெருந்தன்மையுடன் இதை ஆதரிக்க வேண்டும்’’ என்றார். அப்போது நிதி அமைச்சர் அருண்ஜெட்லி குறுக்கிட்டுப் பேசிய போது, ‘‘இது முக்கியமான பிரச்னை. இதில் அவையில் கருத்து வேறுபாடு வேண்டாம். இந்த விவகாரத்தில் தொடர்புடைய அமைச்சர் இது தொடர்பாக சில அரசு சார் கொள்கைகளும், சட்டமும் கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார். இந்த அவை ஒப்புதல் கொடுப்பதால் இது சட்டமாகிவிடாது. இப்போதைக்கு இது ஒரு தீர்மானம் நிறைவேற்றுவது போலத்தான். இதில் 2 வழிகள் இருக்கிறது, ஒன்று அமைச்சர் கூறியதை சிவா ஒப்புக்கொள்வது, மற்றொன்று குரல் வாக்கெடுப்பு மூலம் சிவாவின் உணர்வுகளை எதிரொலிப்பது’’ என்றார். அதைத் தொடர்ந்து இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ‘திருநங்கைகள் உரிமைச் சட்டம் 2014’ என்ற பெயரிலான இந்தச் சட்டம் இனி நாடாளுமன்ற விவாதத்துக்கும் வாக்கெடுப்புக்கும் அனுப்பிவைக்கப்படும். நாடாளுமன்றத்திலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் இது அமலுக்கு வரும்.

மருந்துகளின் விலை ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் ஏறுதா?

மருந்துகளின் விலை ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் ஏறுதா? சுருக்கமான பதில்: இல்லை. அத்தியாவசிய மருந்துகள் என 652 மருந்துகள் அறிவிக்கப்பட்டு உள்ளன அவைகள் விலை எப்பவும்அரசால் கட்டுப்படுத்தப்படும். பார்க்க https://www.nppaindia.nic.in/DPCO2013.pdf இன் இணைப்பு. ஜூலை 2014 இல் மேலும் 108 மருந்துகள் அத்தியாவசிய மருந்துகள் என அறிவிக்கப்பட்டன. இது அறிவித்தவுடன் மருந்துகம்பெனிகள் மும்பை உயர் நீதிமன்றத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் இதை நீக்க கோரி அணுகின. செப்டம்பர் 2014 இல் மேற்கண்ட உத்தரவுக்கு அரசு ஒரு விளக்கம் அளித்தது. இதிலே ஜூலை 2014 உத்தரவு அப்படியே இருக்கும் ஆனால் மேற்கொண்டு உத்தரவுகள் ஏதும் வராது. எனவே ஏற்கனவே விலை குறைக்கப்பட்ட மருந்துவிலைகள் அப்படியே இருக்கும்.

லட்சரூபாய் எல்லாம் ஏறவில்லை. ஏறவும் ஏறாது. அது கடைந்தெடுத்த டுப்பாக்கூர். இதைப்பற்றி தெரிந்துகொள்ள விரிவான பதிலை படிக்கவும். விரிவான பதில்: தேசிய மருந்து விலைகள் கட்டுப்பாட்டு ஆணையம் என்பது 29 ஆகஸ்ட் 1997 இல் அமைக்கப்பட்டது. இதன் வேலை அத்தியாவசிய மருந்துகள் என்பது எவை என தீர்மானிப்பதும் அதன் விலையை நிர்ணையிப்பதும் ஆகும். இது மத்திய கெமிக்கல் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறையின் கீழ் வருகிறது. இது தேசிய அத்தியாவசிய மருந்துகளின் பட்டியல் என்பதை அவ்வப்போது வெளியிடும். மருந்து தயாரிப்பவர்களும் விற்பவர்களும் தங்களுடைய விற்பனையை இந்த ஆணையத்திடம் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை அளிக்கவேண்டும் அதைப்பொறுத்து ஆணையம் மருந்து விலையில் தலையிடலாமா என்பதை முடிவு செய்யும். பார்க்க https://www.medindia.net/…/pharm_indust…/ph_orgainisation.asp https://www.nppaindia.nic.in/index1.html மே 15 2013 அன்று கடைசியாக 652 மருந்துகளை அத்தியாவசிய மருந்துகள் என அறிவித்தது. இந்த மருந்துகளை பார்க்கhttps://www.nppaindia.nic.in/DPCO2013.pdf போய் NLEM என தேடினால் 24 ஆம் பக்கத்தில் இருந்து ஆரம்பிக்கும். டிபி வியாதிக்கு 6 மருந்துகளையும் நீரிழிவு வியாதிக்கும் 7 மருந்துகளையும் கேன்சர் வியாதிக்கு 31 மருந்துகளையும் உள்ளடக்கியது. ஜூலை 2014 இல் இன்னோர் உத்தரவு மூலம் இன்னும் 108 மருந்துகளை இந்த அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் சேர்க்கிறது. அவை என்னென்ன என்பதை இந்த லிங்கில் பாருங்கள்https://www.nppaindia.nic.in/wh-new-2014/wh-new-44-2014.html (இதிலே 50 தான் இருக்கு மிச்சம் 58 எங்கேன்னா அது ஒவ்வொரு மருந்து அளவையும் சேர்த்து கணக்கிட்டு இருக்காங்க) இந்த உத்தரவை எதிர்த்து மருந்து கம்பெனிகள் நீதிமன்றத்தை அணுகுகிறார்கள். காரணம் மருந்து கட்டுப்பாடு சட்டம் 2013 இன் 19 ஆம் பிரிவு அவரச கால நிலையிலுமோ அல்லது ஒரே கம்பெனி மருந்துவிலையை கட்டுப்படுத்தும் நிலையிலுமோ(monopoly) மட்டுமே மருந்து விலை கட்டுப்பாடு ஆணையம் விலைய கட்டுப்படுத்த முடியும் என சொல்கிறது. ஆனால் ஜூலை உத்தரவில் அப்படி ஏதும் சொல்லப்படவில்லை என. பதிலுக்கு கட்டுப்பாட்டு ஆணையம், மருந்துவிலைகளில் இருக்கும் வித்தியாசத்தை சொல்கிறது. எ.கா. Gliclazide எனும் மருந்து 29.5 ரூபாயில் இருந்து 44.25 ரூபாய் வரைக்கும் கிடைக்கிறது. அதெப்படி 15 ரூபாய் வித்தியாசம் என கேட்கும் முன் ஜெனிரிக் மருந்து என்றால் என புரிந்து கொள்ளவேண்டும். காப்புரிமையால் கட்டுப்படுத்தப்படாத மருந்துகள் ஜெனிரிக் மருந்துகள் என அழைக்கப்படுகின்றன. அவற்றை யார் வேண்டுமானாலும் தயாரிக்கலாம். மேலும் பார்க்கhttps://en.wikipedia.org/wiki/Generic_drug Gliclazide மருந்து விலைகள் https://www.medindia.net/drug-pr…/gliclazide/glycor-80-mg.htm – 44.25 https://www.medindia.net/drug-pri…/gliclazide/apdeb-80-mg.htm– 29.50 https://www.medindia.net/drug-pri…/gliclazide/aliza-80-mg.htm – 32.00 மொத்த விலைகளும் https://www.medindia.net/drug-price/gliclazide.htm இது பற்றி தெரிவதற்கு முன்னர் நானும் ஏமாந்திருக்கேன். ஒரு ஆன்டிபயாட்டிக் மருந்துக்கு 320 கொடுத்து வாங்கினேன். ஆனால் அதே மருந்து 120க்கும் கிடைக்கிறது. அதிலிருந்து மருத்துவர் எழுதிக்கொடுத்தாலும் அங்கிருக்கும் மருந்துக்கடையில் வாங்காமல் வேறு மருந்துக்கடையில் ஜெனிரிக் இருக்கா என கேட்டு குறைந்த விலை மருந்தை வாங்குவது. எல்லாம் அதே தான் ஆனால் விலை மட்டும் தான் வித்தியாசம். சரி இன்னும் அந்த லட்ச ரூபா மேட்டருக்கு வரலையேன்னு கேக்குறது புரியது அதுக்கு வர்றேன். இந்த லட்ச ரூபா ஆளுங்க எல்லோரும் இந்த https://www.dnaindia.com/…/report-cancer-drug-price-goes-up-… சுட்டியை அடிப்படையாக கொண்டு தான் பொங்கல் வடை எல்லாம் சுடுகிறார்கள். இதிலே சொல்லப்பட்டிருக்கும் Glivec என்பது 8500 இல் 1,08,000 ஆக ஏறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது Gleevec அல்லது Imatinib எனவும் விற்கப்படுகிறது. இதன் விலை ரூ 900 ஆம் தான். 8500 அல்ல. பார்க்க https://www.medindia.net/drug-price/imatinib/celonib.htm இதன் முழு விலைகளையும் பார்க்க https://www.medindia.net/drug-price/imatinib.htm மொத்தம் 18 கம்பெனிகளை இதை தயாரிக்கின்றன. இந்த Glivec என்பதற்கு இன்னோர் கதை இருக்கிறது. இந்த மருந்தை தயாரித்த நோவாட்டிஸ் நிறுவனம் சுப்ரீம் கோர்ட் வரை இதற்கு காப்புரிமை கேட்டு சுப்ரீம் கோர்ட் இதை மறுத்துவிட்டது. எனவே இது ஜெனிரிக் ஆக விற்கப்படுகிறது. பார்க்க https://en.wikipedia.org/…/Novartis_v._Union_of_India_%26_Ot… https://en.wikipedia.org/wiki/Imatinib ஜெனிரிக் ஆக விற்கும் மருந்தை யார் வேண்டுமானாலும் தயாரிக்க முடியும் என்று இருக்கும் மருந்தை விலை ஏறிவிடும் என பூச்சாண்டி காட்டுவது என்ன விதமான டுபாக்கூர்த்தனம் என தெரியவில்லை. அதுவும் சுப்ரீம் கோர்ட்டே காப்புரிமை தரமறுத்த பிரபலமான மருந்துக்கே இப்படி அண்டப்புளுகு ஆகாசபுளுகு புளுகவேண்டிய அவசியம் என்ன என தெரியவில்லை. இதற்கு மறுப்பு தெரிவித்து கடிதம் எழுதியும் டிஎன்ஏ பத்திரிக்கை ஏற்க மறுத்துவிட்டது. பார்க்கhttps://dnasyndication.com/…/Cancer_drug_price_g…/DNMUM316965 இதை விரிவாக விளக்கும் சுட்டிகள். முழுதாக படித்தால் புரியும். https://spicyip.com/…/cancer-drug-price-is-not-going-from-80… https://spicyip.com/…/govt-withdraws-nppa-powers-to-cap-pric… தேசிய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அவ்வப்போது வெளியிடும் அறிக்கைகள் https://www.nppaindia.nic.in/…/pre…/workingsheet-15-9-14.html https://www.nppaindia.nic.in/wh-new-2014/wh-new-65-2014.html https://www.nppaindia.nic.in/wh-new-2014/wh-new-64-2014.html சரி இப்போ என்ன நடக்கும்? இப்படி மருந்துவிலையை கட்டுப்படுத்த வழியே இல்லையா அப்படீன்னா இருக்கு. அது அரசே மருந்துகளை அதிகளவில் கொள்முதல் செய்து ஏழைகளுக்கு கொடுப்பது தான். மருந்து கண்டுபிடிப்பவர்கள் குறைந்த பட்சம் 10-20 வருடமும் கோடிக்கணக்கான ரூபாய்களை செலவழித்தும் தான் மருந்து கண்டுபிடிக்கிறார்கள். அந்த செலவை யாரேனும் ஒருவர் ஏற்றுக்கொண்டு தானே ஆகவேண்டும். திருட்டுவிசிடியில் படம் பார்க்கிறார்கள் என படம் தயாரிப்பை நிறுத்திவிட்டால் யாரும் சாகப்போவதில்லை ஆனால் மருந்து கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகள் செய்தால்? எனவே உழைப்பும் பணம் செலவு செய்வதையும் யாரேனும் ஒருவர் ஏற்றுத்தான் ஆகவேண்டும். ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் ஏற்கனவே இதை செயல்படுத்தி வருகின்றன. அம்மா மருந்தகம் ஞாபகம் வருகிறதா? மத்திய அரசும் இதை செயல்படுத்த ஆரம்பித்து உள்ளது. அதுவே தீர்வாக இருக்கும். எனவே லட்ச ரூபாய் ஏறுகிறது, ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது என்பதெல்லாம் பொய். யார் வேண்டுமானாலும் தயாரிக்கும் மருந்துகளின் விலை லட்சக்கணக்கில் ஏறும் என்பதெல்லாம் கடைந்தெடுத்த புளுகுகள். கூடவே மோடி அமெரிக்கா போனார் மருந்துவிலை ஏறிவிட்டது எல்லாம் தமிழ் சினிமா கதைக்கு நல்லாயிருக்கலாம் ஆனால் அதுவும் சுத்த பொய். காரணம் இந்த மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் எல்லாம் ஐரோப்பிய கம்பெனிகள். நோவாரிட்டிஸ் கம்பெனி சுவிட்சர்லாந்து கம்பெனி. சுவிட்சர்லாந்து கம்பெனிக்கு மோடி அமெரிக்காவில் ஒப்பந்தம் போட்டு வர்றார் என யோசிக்க மிகவும் அபாரமான டுபாக்கூர்த்தனம் வேண்டுமல்லவா?  கட்டுரை: ராஜா சங்கர்

‘ஒற்றுமையும் அன்பும்’

1234201_315112848661397_4724600860700186658_nபொதுக் காரியங்களை எடுத்துப் போட்டுக் கொண்டு எல்லாரும் சேர்ந்து அவற்றைச் செய்தாலே தன்னால் ஒற்றுமையும் அன்பும் ஸௌஜன்யமும் உண்டாகிவிடும்.” ( கல்கியில் வந்த அருள் வாக்கு) இப்போது ஊருக்கு ஊர், பேட்டைக்குப் பேட்டை பஜனை கோஷ்டி இருக்கிறது. இந்த கோஷ்டிக்காரர்களே வார வழிபாட்டையும் மற்ற பரோபகார காரியங்களையும் எடுத்து நடத்த வேண்டும். ச்ரத்தையாக உழைக்க கூடியவர்கள், பண விஷயத்தில் நாணயமாக இருக்கக் கூடியவர்கள், ‘இவர்கள் சுத்தமானவர்கள்’ என்று ஸமூஹத்துக்கு நம் பகமாக இருக்கிறவர்கள் ஒரு பத்து பேர் அங்கங்கே சேர்ந்துவிட்டால் போதும். ஊர் உலகத்தில் ஒரு குறைவில்லாமல் பொதுநலக் காரியங்கள் ஜாம்ஜாம் என்று நடந்துவிடும். பணியில் சேர்கிறவர்கள், பணியால் பயனடைகிறவர்கள் (Benefi-ciaries) இரண்டிலும் ‘ஜாதி’ என்ற அம்சமே இருக்கக் கூடாது. பணக்காரன் ஏழை, படித்தவன்-படிக்காதவன் எல்லோரும் ஒன்றுசேர்ந்து செய்கிற முறையில் இது ஒன்றிலாவது நேராகவோ, மறைமுகவோ ‘கம்யூனல் ரெப்ர ஸென்டேஷன்’ (ஜாதிவாரிப் பிரதிநிதித்வம்) இல்லாமல் காரியம் நடக்க வேண்டும். ஜாதிகளையெல்லாம் ஒன்றாக்க வேண்டும் என்று ஆரம்பித்தால்தான் சண்டை ஜாஸ்தியாகிறது! ஆரியன்-திராவிடன் பேதமில்லை என்று சொல்லி ஸௌஜன்யத்தை உண்டாக்க வேண்டும் என்று நல்லெண்ணத்தோடு ஆரம்பித்தால் கூட, உடனே இதற்கு ஹிஸ்டாரிகலாக (சரித்திரபூர்வமாக), எத்னாலாஜிகலாக (இன-இயல்-ரீதியில்) ஆக்ஷேபணைகள் வந்து ஒரே வாதச் சண்டையாகிறது! ஆனதால் வர்தத்தால் ஒற்றுமையை ஸ்தாபிக்க யத்தனம் செய்யமால், ஒற்றுமைக்காகப் பாடுபடுகிறோம் என்றுகூட இல்லாமல், இப்படிப் பல பொதுக் காரியங்களை எடுத்துப் போட்டுக் கொண்டு எல்லாரும் சேர்ந்து அவற்றைச் செய்தாலே தன்னால் ஒற்றுமையும் அன்பும் ஸௌஜன்யமும் உண்டாகிவிடும்

அஜித்திற்கு வில்லன் கிடைச்சாச்சு

ajith79தல 56வது படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. வீரம் சிவா இயக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளார். லட்சுமி மேனன் அஜித்துக்கு தங்கையாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் அஜித்திடம் அடி வாங்குவதற்கு(வில்லன்) ஏற்ற நடிகரை தேடி வந்தனர். தற்போது அந்த கதாபாத்திரத்திற்கு கபீர் சிங் தேர்வாகியுள்ளார். இவர் சமீபத்தில் வெளியான ‘ஜில்’ என்ற தெலுங்கு படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் மிரட்டியவர். ஜுன் மாதம் முதல் கபீர் சிங் அஜித் படத்தின் படப்பிடிப்பில் கலந்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது.

அஜித்தை கீழே தள்ளிய துல்கர் சல்மான்

ajith63 தொடர் தோல்வியால் துவண்டு போயிருந்த மணிரத்னத்திற்கு ஓ காதல் கண்மணி படத்தின் வெற்றி தெம்பை கொடுத்துள்ளது. இளம் ரசிகர்களை கவரும் வண்ணம் இருப்பதால் அமெரிக்காவிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் நான்கு நாள் வசூலே என்னை அறிந்தால் படத்தை கீழே தள்ளிவிட்டது. வெளியான நாளிலிருந்து இப்போது வரை ஓ காதல் கண்மணி படம் அமெரிக்காவில் மட்டும் 5,20,084 டாலர் வசூலித்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் இப்படம் மேலும் பல தமிழ் படங்களை முந்தி விடலாம் என்று கூறப்படுகிறது. என்னை அறிந்தால் படம் அமெரிக்காவின் டாப் 10 பாக்ஸ் ஆபிஸில் 9வது இடத்தில் இருந்தது. தற்போது ஓ காதல் கண்மணி அந்த இடத்தை பிடித்துள்ளது. இதனால் அஜித் படம் கடைசி இடத்திற்கு சென்றுள்ளது.