காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி 16 கி.மீ. தொலைவு மலையில் நடந்து சென்று கேதார்நாத் கோவிலில் தரிசனம் செய்தார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி இரு தினங்களுக்கு முன்னர் உத்தரகாண்ட் மாநிலம் இமய மலைப் பகுதியில் உள்ள புகழ்பெற்ற தலமான கேதார்நாத்துக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டார். சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கத் தலங்களில் 11ஆவது தலம் இது. டேராடூன் விமான நிலையத்தில் இருந்து நேற்று முன் தினம் மாலை ஹெலிகாப்டர் மூலம் கவுரிகுண்ட் பகுதிக்கு வந்தவர், அங்கிருந்து மலைப்பகுதி வழியாக தனது பயணத்தைத் தொடர்ந்தார். லிங்கோலி வரையுள்ள 10 கி.மீ. தொலைவு கரடு முரடான மலைப்பகுதியில் நடந்தே சென்று, நேற்று முன்தினம் இரவு அங்கே அனைவரும் ஓய்வெடுத்தனர். பின்னர் நேற்று காலை லிங்கோலியில் இருந்து கேதார்நாத் வரையுள்ள 6 கி.மீ. தொலைவு அவர்கள் நடந்தே சென்று கோவிலை அடைந்தனர். நேற்று அதிகாலை 4.50க்கு பக்தர்கள் தரிசனத்துக்காக கேதார்நாத் கோவில் திறக்கப்பட்டது. கோவிலின் தலைமை பூசாரி ரவால் சம்பிரதாய முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க, ருத்ர பிரயாக் மாவட்ட அதிகாரிகள் மற்றும் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் முன்னிலையில் கருவறையைத் திறந்தார். மாநில ஆளுநர் கே.கே.பால், முதல்வர் ஹரீஷ் ராவத், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, சூஃபி பாடகர் கைலேஷ் கெர், மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலில் இருந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, கேதார்நாத் கோவிலுக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்தால் அது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அவமரியாதை செய்வதுபோல் ஆகும். எனவே பக்தர்கள் கேதார்நாத் கோவிலுக்கு நடந்த செல்லும் அதே பாதையில்தான் நானும் இன்று வந்தேன். இந்த மலைப்பாதையில் நாம் நடந்து வந்தால், இங்கே வந்திருக்கும் நமது சகோதரர்களுக்கும் இது நன்மை பயப்பதாக அமையும் என்பதால் நடந்தேன். மேலும் இனி இங்கே மக்கள் தாராளமாக வருவார்கள். அவர்களுடைய பயமும் கொஞ்சம் குறைய வாய்ப்பு ஏற்படும் என்றார் அவர் கேதார்நாத் கோவிலில் என்ன வேண்டிக் கொண்டீர்கள்? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “கோவிலில் எந்த வேண்டுதலையும் வைக்கவில்லை. இந்தக் கோவிலுக்குள் நுழைந்த உடனேயே எனக்குள் ஒரு சக்தி கிடைத்தது போன்ற உணர்வைப் பெற்றேன்” என்று கூறினார்.
16 கி.மீ. தொலைவு மலையில் நடந்து கேதார்நாத் கோவிலில் ராகுல் காந்தி தரிசனம்
பல்லடம் அருகே சாலை விபத்து: திருமண நிகழ்ச்சிக்கு வந்த 6 பேர் பலி
கோவை: பல்லடம் அருகே இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். நீலகிரி மாவட்டம் உதகையில் இம்மாதம் 27ஆம் தேதி நடைபெறவிருந்த உறவினர் இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வந்திருந்தனர். அவர்கள் இன்று கொடைக்கானல் செல்ல தனியார் சுற்றுலா வேனில் புறப்பட்டனர். அவர்கள் பயணம் செய்த வேன், பல்லடம் லட்சுமி மில் அருகே வந்தபோது தாராபுரத்தில் இருந்து கோவை நோக்கி வந்த தனியார் பார்சல் லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இந்தக் கோர விபத்தில் வேன் ஓட்டுனர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து பல்லடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தில்லி பகுதியில் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்
புது தில்லி: தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பரவலாக நில அதிர்வு இன்று உணரப்பட்டது. தில்லி, ராஞ்சி, ஜெய்ப்பூர், லக்னோ உள்ளிட்ட மாநிலத் தலைநகரங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 அலகுகளாகப் பதிவானது. சுமார் 20 வினாடிகள் வரை இந்த நடுக்கம் நீடித்தது. தில்லி, பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பதிவான இந்த நில நடுக்கத்தால், பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். வடகிழக்குப் பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. வடகிழக்கே 7.2 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால், பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து, வீதிகளில் நின்றனர். நில அதிர்வால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் உடனடியாக எதுவும் வெளியாகவில்லை.
மெட்ரோ ரயிலில் மோடி பயணம்: ஸ்ரீதரனுக்கு வாழ்த்து
புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி, தவுலா குவான் பகுதியில் இருந்து துவாரகாவுக்கு தில்லி மெட்ரோ ரயிலில் இன்று பயணம் செய்தார். அவருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருந்தார். இது குறித்து பிரதமர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்த போது மெட்ரோ ரயில் பயணம் மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. தில்லி மெட்ரோவுக்கும், மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் ஸ்ரீதரனுக்கும் எனது நன்றிகள் என்றார்.
Really enjoyed the ride. Thanks Delhi Metro. Thanks Sreedharan ji! pic.twitter.com/U92R4iTQL8
— Narendra Modi (@narendramodi) April 25, 2015
இந்தியாவை ’பாரத்’ என அறிவிக்கக் கோரி வழக்கு: நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
புது தில்லி: இந்தியாவை பாரத் என அறிவிக்கக் கோரி உத்தரவிடுமாறு பொது நல வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதை அடுத்து இது குறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி, மத்திய மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
சரக்கு, சேவை வரி மசோதா மக்களவையில் தாக்கல்
புது தில்லி: சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இது நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்தது. இதற்கு பல்வேறு கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்த போதிலும் அந்த மசோதா பரிசீலனைக்காக தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பேசிய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி…இந்த மசோதா குறித்து மாநிலங்கள் அச்சப்படத் தேவையில்லை;இந்த மசோதா மத்திய அரசு, மாநிலங்கள் ஆகிய இரு தரப்புக்குமே இழப்பு ஏற்படுத்தாது. இது இந்தியாவின் மொத்த உற்பத்தி அளவை அதிகரிக்கும். எனவே இந்தியாவின் வருவாய் அதிகரிக்கும். எனவே பரிசீலனைக்கு இதை ஏற்க வேண்டும் என்றார். இந்த சட்டத் திருத்த மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று காங்கிரஸ், மற்றும் திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கை ஏற்கப்படாததால் அவர்கள் வெளிநடப்பில் ஈடுபட்டனர் இந்த மசோதா பரிசீலனைக்காக தாக்கல் செய்யப்பட்டதற்கு அதிமுக, பிஜு ஜனதா தளம் ஆகியவை ஆட்சேபம் தெரிவித்தபோதிலும் வெளிநடப்பு செய்யவில்லை.
டண்டணக்கா விவகாரம்: ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு டி.ராஜேந்தர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை: தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ள ‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் பாடலுக்கு தடை விதிப்பதுடன், ரூ.1 கோடி இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என்று கோரி டி.ராஜேந்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தமிழ்த் திரையுலகில் நான் நடித்துள்ள பல படங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. இதனால் மக்கள் மத்தியில் எனக்கு நற்பெயர் உள்ளது. இந்நிலையில்,ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்துள்ள ‘ரோமியோ ஜூலியட்’ என்ற திரைப்படத்தை நந்தகோபால் என்பவர் தயாரித்துள்ளார். இந்த படத்தில், ‘டண்டணக்கா நக்கா நக்கா…’ என்ற பாடலை ரோகேஷ் என்பவர் எழுதியுள்ளார். டி.இமான் இசையமைத்த அந்தப் பாடலை அனிருத் பாடியுள்ளார். இப்பாடலுக்கு இடையிடையே என்னுடைய பேச்சுக்கள், என்னுடைய உச்சரிப்புக்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றை பயன்படுத்துவது தொடர்பாக என்னிடம் அவர்கள் எந்த அனுமதியையும் பெறவில்லை. இந்தப் பாடல் குறித்து நடிகர் ஜெயம் ரவி பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், தான் டி.ராஜேந்தரின் ரசிகனாக படத்தில் நடித்துள்ளதாகக் கூறியுள்ளார். இதனால், படம் முழுவதும் என்னைப் பற்றி அவதூறான காட்சிகள் இடம் பெறலாம். எனவே, ரோமியோ ஜூலியட்’ படம் வெளியாவதற்கு முன்பு வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமித்து, படத்தைப் பார்த்து அதில் இடம்பெற்றுள்ள காட்சிகள், வசனங்கள் குறித்த அறிக்கையை இந்த நீதிமன்றம் பெறவேண்டும். மேலும், ‘டண்டணக்கா நக்கா நக்கா’ பாடலுடன், ‘ரோமியோ ஜூலியட் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். மேலும், என்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக ரூ.1 கோடி இழப்பீடு வழங்க ரோமியோ ஜூலியட்’ படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பின்னணி பாடியவர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும். என்று, அதில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
நடிகர் சாந்தனு, தொகுப்பாளினி கீர்த்திக்கு ஆக.21ல் திருமணம்
சென்னை: நடிகர் சாந்தனுவுக்கும், நிகழ்ச்சித் தொகுப்பாளினி கீர்த்திக்கும் வரும் ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இதை இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதுகுறித்து பாக்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”எங்கள் மகன் சாந்தனு என்கிற சோனுவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. எங்கள் மகள் சரண்யா சற்று பொறுத்திருந்து திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னதால், வீட்டின் முதல் திருமணம் சாந்தனுவுக்கு நடக்கவுள்ளது. நடன இயக்குநர் ஜெயந்தி – விஜயகுமார் மகள் கீர்த்தியே மணப்பெண். வரும் ஆகஸ்ட் 21ஆம் நாள் கோவிலில் திருமணம் நடைபெற உள்ளது. 22ஆம் நாள் மாலை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் வரவேற்பு நிகழ்வும் நடைபெற உள்ளது” என்று கூறியுள்ளார்.
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ கோரிக்கை
சென்னை: கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை முறையாக செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆண்டு வரை, மூன்று ஆண்டுகளில் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்விக் கட்டண நிலுவைத் தொகை ரூபாய்150 கோடியை, தமிழக அரசு உடனடியாக மே மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும். இல்லையேல் வரும் கல்வி ஆண்டில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு மாணவரைக்கூட சேர்க்க மாட்டோம்” என்று தனியார் பள்ளிகள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தாமலும், உரிய கண்கhணிப்பு இல்லாமலும் இச்சட்டத்தின் நோக்கத்தையே அ.தி.மு.க. அரசு சீரழித்துவிட்டது. 2010 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், “6 முதல் 14 வயதுக் குழந்தைகள் அனைவருக்கும் கல்வி அடிப்படை உரிமை என்பதால், அவர்களுக்குக் கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட வேண்டும்” என்று வரையறுக்கிறது. “போதுமான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லாத பள்ளிகளின் அங்கீகhரத்தை இரத்து செய்ய வேண்டும்; குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தல் நடைமுறை எளிமை ஆக்கப்பட வேண்டும்; வயது சான்றிதழ், மாறுதல் சான்றிதழ் ஆகியவை பள்ளிச் சேர்க்கையின் போது வலியுறுத்தப்படக்கூடாது; மூன்று முதல் ஆறு வயதுக் குழந்தைகளுக்கு இலவச முன் பருவக் கல்வி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்; பள்ளி நிர்வாகம் என்பது உள்ளாட்சி உறுப்பினர்கள், பெற்றோர் ஆகியோர் இடம்பெற்றுள்ள நிர்வாகக் குழுவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இவற்றோடு, தனியார் பள்ளிகளில் 25 விழுக்கhடு இடங்கள் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு ஒதுக்கப்பட வேண்டும். இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்படும் ஏழைக் குழந்தைகளுக்கhன கல்விக் கட்டணத்தை பள்ளிகளுக்கு அரசே செலுத்த வேண்டும்” என்று இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் வலியுறுத்துகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் கல்வி அமைச்சர்கள் அடிக்கடி மாற்றப்பட்டு, மற்ற துறைகளைப் போன்று கல்வித்துறையும் சீர்குலைந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாகக் கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக செயல்படுத்த அ.தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 விழுக்கhடு இடங்கள் ஒதுக்கீடு செய்வதை உறுதி செய்திட பள்ளிக் கல்வித்துறை எடுத்த நடவடிக்கை என்ன? கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை ஏற்க மறுத்து, அதன் பரிந்துரைகளை செயல்படுத்த முன்வராத தனியார் பள்ளிகள் மீது அ.தி.மு.க. அரசு இதுவரை என்ன நடவடிக்கை மேற்கொண்டது? என்று கல்வி அமைச்சர் விளக்கம் அளிப்பாரா? கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி கடந்த மூன்று ஆண்டுகளில் ஏழைக் குழந்தைகளுக்கhன 25 விழுக்கhடு இடங்கள் ஒதுக்கீட்டின் கீழ் ஒரு இலட்சத்து 43 ஆயிரம் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2013-2014 கல்வி ஆண்டு வரை மொத்தம் 16,194 குழந்தைகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 6 வயது முதல் 14 வயது வரை இந்தியா முழுவதும் குழந்தைகள் சேர்க்கை விகிதம் 29 விழுக்கhடு. ஆனால், தமிழ்நாட்டில் வெறும் 11.3 விழுக்கhடு என்பது வருத்ததிற்குரியது. இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அ.தி.மு.க. அரசு வரும் கல்வி ஆண்டில் முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுத்து, தனியார் பள்ளிகளில் நலிந்த பிரிவைச் சேர்ந்த 25 விழுக்கhடு குழந்தைகள் சேர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு வழங்க வேண்டிய நிலுவைக் கல்விக் கட்டணத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்
42-ஆவது பிறந்த நாளை எளிமையாகக் கொண்டாடிய சச்சின்: ட்விட்டரில் குவிந்த வாழ்த்து
மும்பை: இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயமாகவும், இந்திய கிரிக்கெட்டின் இமயமாகவும் திகழும் சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கருக்கு 42-வது வயது பிறந்தது. அவர் தனது பிறந்த நாளை மும்பையில் தனது குடும்பத்தினருடன் எளிமையாகக் கொண்டாடினார். 2013-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றாலும், அவரது சாதனைகளின் தாக்கம் இன்னும் ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை ஆலோசகராக செயல்பட்டு வரும் டெண்டுல்கர், இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிக்கான கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் உரிமையாளராகவும் உள்ளார். அவரது பிறந்த நாளையொட்டி சச்சினுக்கு, உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். தனது பிறந்த நாளின் போது புதிதாக இன்ஸ்டாக்ராம் சமூக வலைத்தளப் பக்கம் உருவாக்கியிருந்தார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்திலும் செய்தியைப் பகிர்ந்து கொண்டிருந்தார். அவரது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் குவிந்தன. அவரும் தன்னை வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
Thank you all for your wishes and blessings. — sachin tendulkar (@sachin_rt) April 24, 2015

