சென்னை: சென்னையில் நோக்கியா ஆலையை மீண்டும் திறப்பதில் சிக்கல் நீடிக்கிறது. ஆலையை குறைந்த தொகைக்கு வாங்க முன்வந்ததால் அதுகுறித்த விற்பனை நடவடிக்கை நிராகரிக்கப்பட்டதாக தில்லி உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. நோக்கியா ஆலையை வாங்க சரியான வர்த்தக நிறுவனம் கிடைத்துள்ளதால், சென்னையில் உள்ள சொத்துக்களை விற்பனை செய்ய அனுமதிக்கும்படி தில்லி உயர் நீதிமன்றத்தில் நோக்கியா நிறுவனம் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் பதார் துரேஸ் அகமது, சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து இன்று விசாரிக்க இயலாது என தெரிவித்த நீதிபதிகள், செப்.7ஆம் தேதிக்குப் பின்னர் இந்த மனுவை விசாரிக்க விரும்பினால் வருமான வரித்துறை சார்பில் பதில் தெரிவிக்கும்படி உத்தரவிட்டனர்.
திருமணப் பந்தலுக்குள் லாரி புகுந்து 5 பேர் பலி; பலர் காயம்
ரேபரேலி: உத்தரப் பிரதேச மாநிலம், ரேபரேலி பகுதியில் நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த தனியார் கூரியர் நிறுவன லாரி ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, திருமணப் பந்தலுக்குள் புகுந்தது. இந்த விபத்தில் பந்தல் சரிந்து விழுந்தது. அதில் சிக்கி 5 பேர் பலியாயினர்; பலர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டு, கிரேன் மூலம் பந்தலுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
அமெரிக்க மருத்துவத் துறை தலைவராக இந்திய வம்சாவளி இளைஞர் பொறுப்பேற்பு
விர்ஜீனியா: அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளி இளைஞரான இளம் வயது விவேக் மூர்த்தி, அமெரிக்க நாட்டின் மருத்துவத்துறை தலைவராகப் பொறுப்பேற்றார். 2010 டிசம்பரிலேயே விவேக் மூர்த்தி இப்பதவியில் நியமிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. 2013 முதல் அந்நாட்டின் பொது சுகாதாரத்துறை தலைவராக இருந்த விவேக் மூர்த்தியை இப்பதவியில் அமர்த்த அதிபர் ஒபாமா முடிவு செய்த போதும் துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு ஆதரவாக விவேக் மூர்த்தி கையெழுத்திட்டதால் அந்நாட்டு செனட் சபை அவரது நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செயதது. எனினும் 2014 ஆம் ஆண்டு குடியரசுக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒரமனதாக விவேக் மூர்த்தி இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று அவர் தனது புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்டார். தனது பதவியேற்பு நிகழ்ச்சியில் அவர் பேசியபோது; நாடு சந்தித்து வரும் சுகாதார பிரச்னைகளை, தலைவர்களின் ஒத்துழைப்புடனும், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவத் துறை ஊழியர்கள், பள்ளிகள், நம்பிக்கையூட்டும் அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் களைய தீவிர முயற்சிகள் எடுக்கப்படும். உடல் பருமன் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மருத்துவர் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வளித்துவிட முடியாது. பல தரப்பட்டவர்களின் பங்களிப்பின் மூலம் உரிய தீர்வு காண முடியும் என்றார்.
கல்வி கட்டணப் பிரச்னைக்கு தீர்வு காண அரசுக்கு மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: தனியார் பள்ளி சங்க நிர்வாகிகளுடன் மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தி, கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கல்விக் கட்டணப் பிரச்னைக்கு உடனடித் தீர்வு காண வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் முகநூல் பதிவில் தெரிவிக்கையில்…. ”கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் கல்விக்கட்டணம் இல்லாமல் 25 சதவீத மாணவர்களை சேர்க்க வேண்டும். ஆனால் இந்த வருடம் அந்த 25 சதவீத மாணவர்களைக் சேர்க்கப் போவதில்லை என்று நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன்,மேல்நிலைப் பள்ளி மற்றும் சிபிஎஸ்இ தனியார் பள்ளிகளின் சங்கத்தினர் திடீரென்று அறிவித்துள்ளார்கள். ஏற்கெனவே இந்த சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்குரிய கட்டணத்தை அதிமுக அரசின் கல்வித்துறை கடந்த மூன்று வருடங்களாக செலுத்தவில்லை என்பதையே தனியார் பள்ளி சங்கத்தினர் இந்த முடிவிற்கான காரணமாகக் கூறியிருக்கிறார்கள். சமுதாயத்தில் நிலவும் சமூக -கல்வி அந்தஸ்தை பாதிக்கும் வகையில் தனியார் பள்ளிகளின் இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதும், கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டணத்தைக் கொடுக்காமல் அதிமுக அரசு இழுத்தடிப்பதும் முற்றிலும் நியாயமற்றது. கல்வி பெறும் உரிமைச் சட்டம் சமுதாயத்திற்கு மிகவும் தேவையான ஒரு உன்னதமான சட்டம். ஆகவே அதிமுக அரசின் நிர்வாக குறைபாடுகளைக் காரணம் காட்டி தனியார் பள்ளிகள் இப்படியொரு முடிவினை எடுக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். நாட்டின் நாளைய தலைமுறையாகப் போகும் குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடாமல், சம்பந்தபட்ட தனியார் பள்ளி சங்க நிர்வாகிகளுடன் அதிமுக அரசு பேச்சுவார்த்தை நடத்தி, இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். சமுதாயத்தில் உள்ள பல்வேறு தரப்பட்ட மாணவர்களும் பயனடையும் விதத்தில் கல்வி உரிமை பெறும் சட்டம் இருக்கிறது. இதன்படி சேர்க்க வேண்டிய 1.43 லட்சம் மாணவர்களில் 11 சதவீதம் பேர்தான் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்று அகமதாபாத் ஐஐஎம் ஆய்வு கூறியிருப்பது பெருத்த ஏமாற்றத்தைத் தருகிறது. குழந்தைகளின் எதிர்காலம் பற்றி இப்படி அலட்சியமாக இருந்தால், பிரகாசமான, செழிப்பான தமிழகத்தை உருவாக்க முடியாது என்பதை அதிமுக அரசு உணர வேண்டும்” என்று கூறியுள்ளார்.
தேர்தலுக்கு தயாராகுங்கள்: ஜி.கே.வாசன் தொண்டர்களுக்கு அழைப்பு
சென்னை: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு தயாராகும்படி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கட்சித் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முதல் மாநில பொதுக் குழுக் கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்றது. அதில், கட்சியின் தலைவராக ஜி.கே.வாசன் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது பேசிய அவர், சிறுபான்மையினருக்கு எதிராகப் பேசுபவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; நரேந்திர மோடி தலைமையிலான அரசு 11 மாதங்களில் சாதனை எதுவும் புரியவில்லை; பல்வேறு அவசர சட்டங்களைக் கொண்டு வந்ததே அதன் சாதனை. இந்த ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் சாமானியர்களைச் சென்று சேரவில்லை, முக்கிய திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன என்று ஜி.கே.வாசன் குற்றம் சாட்டிப் பேசினார் மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும், விவசாயிகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட வேண்டும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப ஆவன செய்ய வேண்டும் என்று கூறிய ஜி.கே.வாசன், அடுத்து வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்கு தொண்டர்கள் தயாராக வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (ஏப்.24) முதல் விண்ணப்பிக்கலாம்
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (ஏப்.24) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு மே 31-ஆம் தேதி நடைபெறுகிறது.
மும்பை மாடலிங் பெண் பலாத்காரம்: 3 போலீஸார் உள்பட 6 பேர் கைது
மும்பை: மும்பையில் மாடலிங் பெண்ணை பலாத்காரம் செய்து, பணம் பறித்தது தொடர்பாக 3 போலீஸ்காரர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பையில் சகி நிகா பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் பாலியல் தொழில் நடப்பதாக ஏப். 3ஆம் தேதி தகவல் கிடைத்தது. இதை அடுத்து உதவி ஆய்வாளர்கள் சுனில் கப்தே, சுரேஷ் சூர்யவன்ஷி, தலைமைக் காவலர் கோடே ஆகியோர் அந்த ஹோட்டலுக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த சாகர், இப்ராகிம் மற்றும் ஒரு பெண் ஆகியோரும் அவர்களுடன் இருந்தனர். ஆனால், அந்தச் சோதனையின்போது பாலியல் தொழிலாளர்கள் யாரும் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. இந்நிலையில் ஓட்டலில் உள்ள ஒரு அறையில் தங்கியிருந்த 28 வயது மாடலிங் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர், 3 போலீஸ்காரர்கள் மற்றும் அவர்களுடன் வந்த 2 பேர், அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவரிடம் இருந்த ரூ.5 லட்சத்தை பறித்துக் கொண்டனர். இதையடுத்து, அந்தப் பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று, அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். சம்பவம் நடந்து சுமார் 20 நாட்கள் ஆன நிலையில், மும்பை காவல்துறை ஆணையர் ராகேஷ் மரியாவை இரு தினங்களுக்கு முன்னர் அந்தப் பெண் சந்தித்து நடந்தவற்றை அவரிடம் தெரிவித்து புகார் அளித்தார். இது குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி போலீஸ்காரர்கள் சுனில் கப்தே, சுரேஷ் சூர்யவன்ஷி, கோடே உள்ளிட்ட 6 பேரை நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது பலாத்காரம், பாலியல் தொந்தரவு, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்திரபாபு நாயுடுவைக் கொல்ல செம்மரக் கடத்தல்காரர்கள் சதித்திட்டம்?
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைக் கொல்ல செம்மரக் கடத்தல்காரர்கள் சிலர் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக காவல்துறைக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது என்று ஆந்திர மாநில வனத் துறை அமைச்சர் கூறியுள்ளார். ஆந்திர மாநில வனத் துறை அமைச்சர் பொஜ்ஜல கோபாலகிருஷ்ண ரெட்டி இது குறித்துக் கூறியபோது…. காவல்துறைக்கும், சிஐடி அலுவலகத்துக்கும் மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. எனவே சந்திரபாபு நாயுடுவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
ஆந்திர படுகொலையில் இதுவரை கைது எதுவும் இல்லையே ஏன்?: நீதிமன்றம் கேள்வி
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் தமிழர்கள் 20 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை யாரையும் கைது செய்யாதது ஏன்? என்று ஆந்திர உயர் நீதிமன்றம் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. ஆந்திர வனப்பகுதியில் தமிழர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு வெள்ளிக் கிழமை இன்று ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது சம்பவம் நடந்து 17 நாட்கள் கடந்தும் இதுவரை ஏன் யாரையும் கைது செய்யவில்லை என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த வழக்கில் ஆந்திர அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என நீதிமன்றம் கேட்டபோது, வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்துள்ளதாகவும் இதில் சிபிஐ விசாரணை தேவை இல்லை என்றும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இது தொடர்பாக எத்தனை பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்று நீதிபதி கேள்வி எழுப்ப, அரசு வழக்கறிஞர் பதில் அளிக்கத் திணறினார். மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு கூறியும் இதுவரை ஏன் சமர்ப்பிக்கவில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். வரும் 28 ஆம் தேதிக்குள் விசாரணை தொடர்பான ஆவணங்களை கண்டிப்பாகத் தாக்கல் செய்யவேண்டும் என்று கூறிய நீதிபதிகள் வரும் திங்கட்கிழமைக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
வார ராசிபலன் : மே.1 – மே.15
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) சொந்த முயற்சியாலும், மனதுணிவுடனும் செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேறும் மேஷ ராசியினரே இந்த காலகட்டத்தில் ராசியில் பஞ்சம பூர்வ புண்ணீயாதிபதி சூரியன் உச்சமாக இருக்கிறார். ராசிநாதன் செவ்வாய் ராசியில் ஆட்சியாக இருக்கிறார். எனவே எந்த ஒரு காரியங்களிலும் அவசரமாக செயல்படச் செய்யும். நிதானத்தை கடைபிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். தன வாக்கு குடும்பாதிபதி சுக்கிரன் தனஸ்தானத்தில் ஆட்சியாக இருப்பதால் பேச்சில் கோபம் தெரியாவிட்டாலும் அழுத்தம் இருக்கும். சில சிக்கலான பிரச்சனைகளில் சுமுகமான முடிவை காண முற்படுவீர்கள். அஷ்டமஸ்தானத்தில் இருக்கும் வக்ர சனி பகவானால் மனதடுமாற்றம் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம். எல்லோரையும் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நன்மை தரும். உறவினர் வகையில் மனவருத்தம் ஏற்படலாம். தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். பணவரத்து எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவை பூர்த்தியாகும். புதிய ஆர்டர்கள் பற்றி உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றமான நிலை உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. பத்தாமிடத்தைப் பார்க்கும் குரு பகவானால் பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். அலுவலகத்தில் உங்கள் மரியாதை உயரும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அதேநேரம் எவரைப் பற்றியும் புறம் பேசாமல், சக ஊழியர்களின் நட்பைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். பெண்கள் சிக்கலான விஷயங்களை கூட சுமுகமாக முடித்து விடுவீர்கள். மனதடுமாற்றம் இல்லாமல் நிதானமாக செயல்படுவது நன்மைதரும். குடும்பத்திலுள்ள சிக்கலான பிரச்சனைகளையும் சுலபமாக தீர்ப்பீர்கள். அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். பண வரவு அமோகமாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். மாணவர்கள் கல்விக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது பற்றிய கவலை நீங்கும். படிப்பில் ஆர்வம் உண்டாகும். பரிகாரம்: முருகனை செவ்வாய்கிழமைதோறும் வணங்கி வர பல நாட்களாக இழுபறியான காரியம் வெற்றிகரமாக முடியும். மனகவலை நீங்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: வியாழன், வெள்ளி; தேய்பிறை: வியாழன், வெள்ளி; ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்) இனிய சுபாவமும், மென்மையான பேச்சும் உடைய ரிஷபராசியினரே இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சுக்கிரன் ராசியிலேயே ஆட்சியாக இருப்பதால் பொன்பொருள் சேர்க்கையை உண்டாக்கும். ஆனால் அதே வேளையில் ராசியை சனி பகவான் பார்ப்பதால் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் வில்லங்கம் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. யாருக்கும் ஜாமின் கையெழுத்து போடுவதோ தவறான நபர்களுக்காக பரிந்து பேசுவதோ கூடாது. மனதில் ஏதாவது குறை இருக்கும். புதிய நபர்கள் எதிர்பாலினத்தவர் ஆகியோருடன் பேசும் போது கவனமாக பேசி பழகுவது நல்லது. விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி வரலாம். குடும்பத்தில் சண்டைகள் அவ்வப்போது நிகழும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நல்ல வரன் கிடைக்கும். சந்தாண பாக்கியம் கிட்டும். வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் சேர்க்கை பெறுவர். மின்சாரப் பொருட்களை இயக்கும்போது கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். பரமப்ரை சொத்தில் பிரச்சனைகள் வரலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் காண்பிப்பார்கள். போட்டிகள் விலகும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். தொழில் நிமித்தமாக சிலர் வெளிநாடு பயணங்கள் செல்ல நேரிடலாம். கூட்டுத்தொழில் புரிபவர்கள்: நல்ல லாபம் காணலாம். கூட்டாளிகளிடம் எந்த விதமான ஒளிவுமறைவும் வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு சிறந்த வேலை கிடைக்கும். சிலருக்கு பணி இடமாற்றம் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வும் உங்களை வந்து சேரும். பணவிஷயத்தில் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்ளவும். பெண்கள் எதைபற்றியாவது நினைத்து கவலைபடுவீர்கள். வாக்குறுதிகள் கொடுக்கும் போது கவனம் தேவை. விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். அனாவசிய செலவினைக் குறைத்துக் கொள்ளவும். குழந்தைபாக்கியம் பெற்று மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். கணவர் மற்றும் குடும்பத்தினரின் அன்பு கிடைக்கும். உங்கள் குடும்பத்தின் நலனுக்காக விட்டுக் கொடுத்துப் போகவும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அரசியலில் உள்ளவர்கள் பணவரவு காண்பார்கள். ஆனால் பதவி கிடைப்பதில் தாமதம் ஆகும். சுயநலம் விடுத்து பொதுநலம் கருதி பாடுபடவும். நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் நடக்கத் துவங்கும். உங்கள் பொதுப்பணியில் ஏற்பட்டு வந்த தடைகள் மற்றும் தோல்விகள் இருக்காது. சிலர் கௌரவப் பதவி கிடைக்கப் பெறுவர். கலைத்துறையினருக்கு நீண்ட காலமாக நீங்கள் கண்ட கனவு பலிக்கும். ஆடம்பரப் பொருட்களைச் சேர்ப்பீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு படிக்க முற்படுவீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பரிகாரம்: பவுர்ணமியில் பூஜை செய்து அம்மனை வணங்க எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும் மனகவலை நீங்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: புதன், வியாழன், வெள்ளி; தேய்பிறை: புதன், வியாழன் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்) காலம் தாழ்த்தாமல் எதையும் உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டும் என்ற வேகம் கொண்ட மிதுன ராசியினரே இந்த காலகட்டத்தில் ராசிநாதனின் பாதசார சஞ்சாரத்தால் திடீர் கோபம் ஏற்படலாம். ராசிநாதன் புதனே சுகஸ்தானத்திற்கும் அதிபதி. அவர் அந்த ஸ்தானத்திற்கு மறைந்து இருப்பதால் எல்லாவற்றிலும் நெருக்கடி நிலை காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தள்ளி போடுவது நன்மை தரும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபமாக பேசுவதை தவிர்த்து இதமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். குழந்தைகள் எதிர்கால நலன்பற்றி சிந்திப்பீர்கள். உங்களது உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வதுநல்லது. தொழில் வியாபாரம் வழக்கம் போல் நடக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. லாபம் குறைவது போல் இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். புதியவர்களின் நட்பால் கைப்பொருளை இழக்க நேரிடும் என்பதால் அதிக அறிமுகமில்லாதோரிடம் கவனமாக இருக்கவும். சுக போக வசதிகளை அனுபவிப்பீர்கள். பொருளாதார வளமும், சேமிப்பும் உயரும். அரசாங்க உதவிகளும் கிடைக்கும். உங்களின் ஆசைகள் ஒன்றன் பின் ஒன்றாகப் பூர்த்தியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு வீணாகும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. அலுவலகப் பணிகள் சிறப்பாக முடியும். எதிர்பார்த்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பெறுவீர்கள். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவாலும், நட்பாலும் அலுவலகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். சில முக்கியப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பீர்கள். மற்றபடி உங்கள் வேலைகளை முன் கூட்டியே யோசித்துச் செய்தால் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். பெண்களுக்கு எந்த காரியத்திலும் நெருக்கடியான நிலை உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படும். பணவரத்து திருப்தி தரும். அரசியல்வாதிகள், மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப் பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும். எனினும் மனம் தளராமல் எதிரிகளைச் சமாளிப்பீர்கள். கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். பயணங்களால் நன்மைகள் உண்டாகும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையில் செல்லும். புதிய நட்புகளால் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சக கலைஞர்களும், ரசிகர்களும் உங்களுக்கு நிறைவான ஆதரவு தருவார்கள். கடினமாக உழைத்து, உங்கள் முழுத் திறமையையும் வெளிக்கொணர்வீர்கள். மாணவர்களுக்கு பாடங்களை படிக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும். ஆசிரியர் மற்றும் சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. பரிகாரம்: தாயாருடன் இணைந்துள்ள பெருமாளை வணங்க முன் ஜென்ம பாவம் நீங்கும். குடும்பம் சுபிட்சமடையும். அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி தேய்பிறை: ஞாயிறு, புதன், வெள்ளி ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) அன்பும் பாசமும் கருணையும் ஒருங்கே அமையப்பெற்ற கடகராசியினரே இந்த காலகட்டம் ராசியில் குரு இருந்தாலும் ராகு பார்ப்பதால் உடல் அசதியை தரலாம். மனதில் ஏதாவது கவலை இருந்து கொண்டே இருக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதில் பின்னடைவு ஏற்படலாம். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். பயணங்களில் தடங்கல் ஏற்படலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள். குடும்பத்தில் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து மன நிறைவு அடைவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான சிக்கல்கள் தீரும். பணவரத்து திருப்திதரும். வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதங்கள் தரும்போது கவனமாக இருப்பது நல்லது. உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். புத்திசாலிகளின் நட்பைப் பெற்று பலனடைவீர்கள். மன உறுதி உண்டாகும். கவலைகள் மறைந்து மகிழ்ச்சி பிறக்கும். ஏற்றுமதி – இறக்குமதி வியாபாரங்கள் சூடுபிடிக்கும். தூர தேசத்திலிருந்து மகிழ்ச்சி தரும் செய்திகளைக் கேட்பீர்கள். வெளிநாட்டுப் பயணங்களைச் செய்வீர்கள். சேமிப்பு விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு இருப்பது போல் உணர்வார்கள். மேல் அதிகாரிகள் உங்கள் செயல்களில் குறை காணலாம் கவனமாக இருப்பது நல்லது. பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்கும் உங்களின் வேலைத் திறனைக் கூட்டிக்கொள்ள புதிய அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு காரியங்களில் பின்னடைவு ஏற்படலாம். மற்றவர்களிடம் சில்லறை சண்டைகள் ஏற்படாமல் இருக்க கவனமாக பேசி பழகுவது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியூர் மற்றும் வெளிநாட்டிலிருந்து இன்பகரமான செய்திகள் வந்து சேரும். கணவரிடம் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். கணவரின் உறவினர்களோடு வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். அரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் கௌரவம் உயரும். சமுதாயத்தில் அந்தஸ்து உண்டாகும். உங்களின் முயற்சிகள் உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும். கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்காகச் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மெத்தன போக்கு மாறும். புத்தகம் நோட்டுகளை மற்றவர்களிடம் வாங்கும் போதும் கொடுக்கும் போதும் கவனம் தேவை. பரிகாரம்: துர்க்கையை வணங்க பிரச்சனைகள் சுமுகமாக முடியும். மனக்குறை நீங்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி தேய்பிறை: புதன், வெள்ளி ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு தனித்தன்மையுடன் செயலாற்றும் குணமுடைய சிம்மராசியினரே இந்த காலகட்டத்தில் உடல்நிலை தேறும். செலவு கட்டுக்குள் இருக்கும். காரிய தடைகள் நீங்கும். தந்தையாரின் நலனில் அக்கறை தேவை. கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். உறவினர்களுக்காக விருப்பம் இல்லாத காரியத்தில் தலையிட வேண்டி இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும். வீட்டில் வசதி வாய்ப்புகள் பெருகும். தம்பதிகளிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் தேவை.ச் தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்பட்டாலும் பணவரத்து சுமாராக இருக்கும். சரக்குகளை கவனமாக கையாள்வது நல்லது. எல்லோரையும் அனுசரித்துச் செல்லவும். உங்களைப் பற்றி நீங்களே தாழ்வான எண்ணம் கொண்டிருந்தால் அதனை மாற்றிக் கொள்ளவும். மற்றவர்களிடம் கடனோ அல்லது பொருளோ ஏதேனும் வாங்கியிருந்தால் அதனை உடனடியாக பைசல் செய்வதற்குண்டான வழிமுறைகளைப் பின்பற்றவும். புதியதாக வாகனங்கள் ஏதேனும் வாங்கும் எண்ணமிருந்தால் நன்கு ஆராய்ந்தும், ஆலோசனைகள் செய்தும் வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம். அதிகமான உழைப்பினை கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது. ஓட்டுனர்கள், இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளில் வேலை செய்வோருக்கு மிக நல்ல காலகட்டமிது. உங்களது திறமையினை நிர்வாகம் சரியாக பயன்படுத்திக் கொள்ளும். உங்கள் பணி நிரந்தமாகும். மேல் அதிகாரிகள் மற்றும் உடன் பணி செய்வோரிடம் வீணான வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பெண்களுக்கு தடைபட்ட காரியங்கள் நடந்து முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து குறையலாம். கூடுதல் சுமைகள் வந்து சேரும். வேலையில் எரிச்சல் மற்றும் சோம்பேறித்தனத்தை முற்றிலும் விடுவது நல்லது. உங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் உடல்நலனில் கவனமும் கடின வேலைகளைத் தவிர்த்தலும் வேண்டும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கில் சிறிது சரிவு ஏற்படலாம். அதே வேளையில் பதவியும், பொறுப்பும் வந்து சேரும். பணம் வந்த வழி தெரியாமல் செலவழியும். வீண் அலைச்சலும், வாக்குவாதமும் அவ்வப்போது வாட்டி வதைக்கும். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு தங்களது முழுத்திறமைகளையும் காட்டினால் மட்டுமே வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் வந்து சேரும். ஒரே நேரத்தில் பலவிதமான வாய்ப்புகள் வந்து சேரும்போது தகுந்த ஆலோசனைகளை மேற்கொண்டு முடிவுகளை எடுப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் உண்டாகும். போட்டிகள் நீங்கும். சக மாணவர்களுடன் இருந்த மனகசப்பு மாறும். பரிகாரம்: பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரையும், சிவபெருமானையும் வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் திருப்திகரமாக நடக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வியாழன் தேய்பிறை: திங்கள், புதன், வியாழன் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்) எதையும் ஒருமுறை பார்த்தாலே அதை பற்றி கிரகித்துக் கொள்ளும் திறமை உடைய கன்னி ராசியினரே இந்த காலகட்டம் நெருக்கடியான பிரச்சனைகள் நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள். மற்றவர்கள் மேல் இரக்கம் ஏற்படும். நீண்டநாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை சேரும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். வீடு கட்டும் வாய்ப்பு கூடி வரும். இதுவே அதற்கு ஏற்ற காலமாகும். புதியதாக வீடு, வாகனம் வாங்கலாம். பழைய வீட்டைப் புதுப்பிப்பதற்கும் சிறந்த காலமாகும். பிறருடைய மனம் நோகும்படி வார்த்தைகளை வாங்கிக் குவிப்பீர். பொழுதுபோக்கான விழாக்களில் கலந்து கொள்வீர்கள். உங்களை விட்டுப் பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்வார்கள். தொழில் வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கலாம். கூட்டுத்தொழிலில் லாபம் கிடைக்கும். நம்பிக்கை உகந்தவர்களாக பழகுவார்கள். வரவுக்குத் தகுந்த செலவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். வரி செலுத்துவதில் முறைகளைப் பின்பற்றுங்கள். வேலையாட்கள் சில பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைவால் மகிழ்ச்சியுடன் காணப் படுவார்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். வேலை பார்த்து கொண்டே உபதொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். இடமாற்றம் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் உழைப்புக்கு தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். மேல அதிகாரிகளிடம் அனுசரனையாக நடந்து கொள்ளவும். பெண்கள் திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடித்து மன நிம்மதி அடைவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் மேல் இரக்கம் உண்டாகும். அரசியலில் உள்ளவர்களுக்கு பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவீர்கள். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். உங்களின் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு அதிகரித்து மிளிரும். கலைத்துறையினர் சார்ந்தவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டு. இசைத் துறைகளைச் சார்ந்தவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் வந்து சேரும். வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூருக்கும் வெள்நாட்டிற்கும் செல்ல வேண்டி வரும். உங்களது உடமைகளை கவனமுடன் பார்த்துக் கொள்ளவும். பணம் மற்றும் புதிய நண்பர்கள் சேர்க்கை கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண திட்டமிட்டு படித்து வெற்றி பெறுவீர்கள். மன மகிழ்ச்சி ஏற்படும் சம்பவங்கள் நிகழும். பரிகாரம்: சாஸ்தாவை வணங்கி வர சகலதோஷங் களும் நீங்கும். இழந்த சொத்து மீண்டும் கைக்கு வந்து சேரும். அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, திங்கள், வியாழன் தேய்பிறை: ஞாயிறு, திங்கள், வெள்ளி ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்) காரியத்தை கச்சிதமாக முடிக்கும் திறமையும் சாதித்தே தீர வேண்டும் என்ற பிடிவாதமும் கொண்ட துலா ராசியினரே இந்த காலகட்டம் தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நன்றாக நடந்து முடியும். வாக்குவன்மையால் நன்மைகள் ஏற்படும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். பண பிரச்சனை நீங்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுக்கும் மனப் பான்மை அதிகரிக்கும். பிள்ளைகள் எதிர்காலத்திற்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். தேவையான வசதி வாய்ப்புகள் வந்து சேரும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சற்று இழுபறிக்குப் பின்னே நடைபெறும். கொஞ்சம் சிரமம் எடுத்தால் மிக சிறப்பாக நடந்தேறும். முக்கிய முடிவுகளை குடும்பப் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு எடுக்கவும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி பெறும் பழைய பாக்கிகள் வசூலாகும். நீண்ட நாட்களாக நடந்து முடியாத காரியம் ஒன்று நடக்கும். எதிலும் திட்டமிடல் அவசியம். பலன்கள் சற்று தாமதமாகி கிடைக்கும். மற்றவர்களின் பிரச்சனைகளில் வீண் தலையீடு வேண்டாம். நண்பர்களாக இருப்பவர்கள் கூட விரோதிகளாக மாறும் காலகட்டம் என்பதால் கவனம் தேவை. கூட்டுத்தொழில் புரிபவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள் உயர்வு, மேல் அதிகாரிகளின் அனுசரனையும் கிடைக்கும். தனியார் ஊழியர்களுக்கு நல்ல நிலைமை வந்து சேரும். குறிப்பாக சேவைத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு சிறப்பான காலகட்டமிது. வேலை இல்லாமல் காத்திருந்தவர்களுக்கு சரியான வேலை அமையும். புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு சிறப்புடன் பணியாற்றுவதற்கு பொன்னான காலகட்டமிது. பெண்களுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த காரியம் நன்கு நடந்து முடியும். அரசியல், பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு நல்ல நிலை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கும். பணத்தை இழக்க நேரிடலாம். நம்பிக்கையானவர்களிடம் மட்டும் பணத்தைக் கொடுப்பது நல்லது. உயர்பதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல நிலை வந்து சேரும். உடனிருப்பவர்களால் அவ்வப்போது உங்கள் வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போகலாம். கலைத்துறையினருக்கு வம்புதும்புகள் வந்து சேரலாம். கவனம்தேவை. அதற்காக வீணான கோபமும் ஆத்திரமும் கொள்ள வேண்டாம். அதை சமாளிக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் உங்களிடத்தில் உண்டு என்பதனை உணருங்கள். உடல்நலத்தைப் பொறுத்தவரையில் சுமாராக இருக்கும். வெளிநாட்டிற்கு செல்ல வேண்டி வரலாம். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். மற்றவர் பாராட்டும் கிடைக்கும். பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சனை தீரும். பணவரத்து அதிகரிக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, புதன், வியாழன் தேய்பிறை: புதன், வியாழன் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) நியாயத்தின் பக்கம் நிற்கும் விருச்சிக ராசியினரே நீங்கள் அநியாயத்தை எதிர்க்கும் குணமுடையவர். இந்த காலகட்டம் எதிலும் கவனமாக செயல்படுவதும் எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது. எதையும் நிர்ணயிக்கும் திறன் குறையும். பணவரத்து தாமதப்படும். கையிருப்பு கரையும். மற்றவர்களுக்காக உதவி செய்யும் போது வீண்பழி சொல் கேட்க நேரலாம். கவனமாக இருப்பது நல்லது. உடல் சோர்வும் ஏற்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் நன்மைகள் உண்டாகும். பிள்ளைகளிடம் அன்புடன் நடந்து கொள்வது நல்ல பலன் தரும். பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள மூன்றாம் நபர் தலையீடு வேண்டாம். திசைபுக்தி அனுகூலமிருப்பின் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும். பரம்பரைச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். பெண் நண்பர்களிடம் மிகவும் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் பழகுங்கள். அவர்களால் சில பிரச்சனைகள் எழலாம். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் இழுபறியான நிலை காணப்படும். உங்கள் மேல் முழு நம்பிக்கை கொண்டு உங்கள் வேலைகளை நீங்களே செய்யுங்கள். எவ்வளவுதான் கஷ்டம் வந்தாலும் நீங்கள் வேலையை விடுவது நன்மையில்லை. உப தொழில் செய்யும் விருப்பமுடையவர்கள் தாராளமாக செய்யலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீணாக உழைக்க நேரிடும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதற்குள் பல தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு உங்கள் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற சிறந்த வேலை கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களும் மேலதிகாரிகளும் உங்களுக்கு சில சங்கடங்களை ஏற்படுத்தினாலும் பொதுவில் நன்மையே நடக்கும். பெண்களுக்கு எதிலும் நல்லது கெட்டதை நிர்ணயிக்கும் திறமை குறையும். அடுத்தவர் பிரச்சனை தீர்க்க உதவி செய்வதை தவிர்ப்பது நல்லது. அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு, நீங்கள் உழைத்த அளவுக்கு பதவிகள் எதிர்பார்த்த அளவிற்குக் கிடைக்காமல் போகலாம். பொறுமையாக உங்கள் கடமைகளைச் சரியாக செய்யவும். உடன் பணிபுரிவோரால் மிகுந்த நன்மைகள் உண்டாகும். உங்களின் மனதிடமும் நன்றாக இருந்தால்தான் அரசியல் சூழ்நிலையும் சிறப்பாக இருக்கும். கலைத்துறையினருக்கு வேலைப்பளு அதிகரிக்கும். ஆனாலும் வாய்ப்புகள் வந்து குவியும். ஆரம்பரச் செலவை குறைக்கவும். அவ்வப்போது ஒருவித சோர்வு ஏற்படலாம். அதை தகுந்த நபர்களிடம் திட்டமிட்டு சரிசெய்யவும். எந்தப் பிரச்சனையானாலும் பொறுமையுடனும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடனும் செயல்படுங்கள். மாணவர்கள் மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது நல்லது. அடுத்தவரை நம்பி காரியங்களை செய்வதை தவிர்ப்பது நன்மை தரும். பரிகாரம்: சஷ்டி விரதம் இருந்து முருகனை வணங்க குடும்ப பிரச்சனைகள் தீரும். மனகவலை அகலும். அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வியாழன் தேய்பிறை: திங்கள், புதன் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) யாருடைய அதிகாரத்துக்கும் கட்டுப்படாமல் தனித்தன்மையுடன் விளங்கும் தனுசு ராசியினரே இந்த காலகட்டத்தில் எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். தடைபட்ட பணம் வந்து சேரும். பயணங்கள் உண்டாகும். அதனால் நன்மையும் ஏற்படும். உங்களது செயல்கள் மற்றவர்களை கவரும் விதத்தில் இருக்கும். ஆனால் மனதில் ஏதாவது கவலை இருந்து கொண்டிருக்கும். மற்றவர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் உங்களது சொல்படி நடப்பது மனதுக்கு இதம் அளிக்கும். செயல்திறன் அதிகரிக்கும். சில நேரங்களில் உங்கள் வார்த்தைகளால் பிரச்சனை வரலாம். எனவே பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். யாருக்காவது ஏதேனும் வாக்குறுதிகள் கொடுத்திருந்தால் அவைகளை உடனடியாக நிறைவேற்றுங்கள். திருமணம் நல்ல வரனாக அமையும். தொழில் வியாபாரம் சுறுசுறுப்படையும். வியாபார விரிவாக்கம் செய்வது பற்றி ஆலோசனை மேற்கொள்வீர்கள். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். முதலீடு செய்வதற்குண்டான பணவசதி வந்து சேரும். அதனால் கடன் தொல்லை கொஞ்ச கொஞ்சமாக குறையும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் தங்கள் பங்காளிகளிடம் பரிவுடன் நடந்து கொள்ளவும். எந்த நேரத்திலும் பதட்டம் அடையவே கூடாது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் காரிய அனுகூலம் கிடைக்க பெறுவார்கள். புத்திசாதூரியத்தால் காரிய நன்மை பெறுவார்கள். பணம் கொடுத்து உதவி செய்வதற்கு முன் தகுந்த ஆலோசனை வாழ்க்கைத்துணையுடன் செய்யுங்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மேலிடத்தில் உங்களது கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். பெண்களுக்கு உங்களது செயல்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். பயணங்கள் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். அரசியல், சமூக பொறுப்பில் உள்ளவர்கள் சுயநலம் பாராமல் உழைக்க வேண்யதிருக்கும். அதனால் உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் வந்து சேரும். பதவியையோ, பணத்தையோ எதிர்பாராமல் உங்களால் முடிந்த அளவிற்கு பிறருக்கு நன்மை செய்யுங்கள். நீங்கள் எடுக்கும் காரியங்களில் அவ்வப்போது தடைகள் வந்தாலும் கவலை கொள்ளாதீர்கள். எல்லாம் தாமதமானாலும் நல்லபடியாகவே நடக்கும். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு நடனம் மற்றும் சண்டைப் பயிற்சியாளர்கள் சிறந்த நிலைக்கு வரலாம். வேலை விஷயமாக பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வாய்ப்புகள் வந்து குவியும். எந்த ஒரு வாய்ப்பையும் நிராகரிக்க வேண்டாம். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். ஆசிரியர்கள் பாராட்டுவார்கள். சக மாணவர் மத்தியில் மதிப்பு கூடும். பரிகாரம்: விநாயகரை அருகம்புல் மாலை போட்டு வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி தேய்பிறை: திங்கள், வெள்ளி ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்) பார்த்தால் கடுமையானவர் போல் தோற்றமளிக்கும் ராசியினரே நீங்கள் பழகினால் இனிமையானவர். இந்த காலகட்டம் காரிய தடைகள் ஏற்பட்டாலும் தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வீண் அலைச்சல் ஏற்படலாம். சில நேரங்களில் நிர்பந்தத்தின் பேரில் விருப்பமில்லாத வேலை செய்ய நேரலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் திடீர் மனஸ்தாபங்கள் உண்டாகும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நன்மை தரும். நல்ல விஷயங்கள் நிகழும். நீண்ட நாட்களாக இருந்து வந்த கடன் தொல்லை ஒழியும். தம்பதிகளிடையே அன்பு மலரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை சேர்ப்பீர்கள். தடைபட்ட திருமணம் கைகூடி வரும். மனப்பிரச்சனைகள் விலகும். உங்களின் குழந்தைகளால் உங்களுக்குப் பெருமை கிடைக்கும். காதல் விஷயத்தில் வெற்றி அடையலாம். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர் விவகாரங்களில் கவனம் தேவை. ஆர்டர்கள் கிடைப்பது திட்டமிட்டபடி இல்லாமல் தாமதமாகும். வேலையாட்களிடம் கவனமாக இருப்பது நல்லது. நல்ல முன்னேற்றம் காணலாம். வீண் அலைச்சல் மற்றும் வீண் விரையம் இனி ஏற்படாது. நல்லவர்களுடன் பழகும் வாய்ப்பு ஏற்படும். முடிந்தவரை அடுத்தவருக்கு உதவி செய்யும் முன் நண்பர்களுடன் கலந்தாலோசிக்கவும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன்கள் இனி கொஞ்ச கொஞ்சமாக வசூலாகும். நீங்கள் திட்டமிட்டு செய்த காரியங்கள் இனி மெல்ல நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நினைத்தபடி பணிகளை செய்ய முடியாத நிலை உருவாகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பிற இடங்களுக்கு மாற்றலும் கிடைக்கும். உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையும் உயரும். உங்களது கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு முயற்சிகள் எடுத்தபின் நல்ல வேலை கிடைக்கும். வேலையினால் ஏற்பட்ட சோர்வும், மனஅழுத்தமும் இனி இருக்காது. பெண்கள் எதிலும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது. மனதடுமாற்றம் உண்டாகலாம். செலவு கூடும். நீண்ட நாட்களாக சந்தாணபாக்கியம் இல்லாதவர்களுக்கு தெய்வ அனுகூலத்தில் குழந்தைகள் பிறக்கும். வாழ்க்கைத்துணை அன்புடன் இருப்பர். பிறமொழி பேசுபவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். நீங்கள் பறிகொடுத்த பொருட்கள் மீண்டும் திரும்ப உங்களிடமே வந்து சேரும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்ள தகுந்த காலகட்டம் இது. நீங்கள் இழந்த பதவி, நற்பெயர் மீண்டும் கிடைக்கும். எந்த முடிவையும் அவசரப்படாமல் நிதானமாக எடுக்க வேண்டும். சில வேண்டாத பிரச்சனைகள் உங்களைத் தேடி வரலாம். அது போன்று வருவதற்கு வாய்ப்புகளைக் கொடுக்காதீர்கள். கலைத்துறையினருக்கு ஒப்பனையாளார்கள், ஆடை வடிவமைப்பாளர்கள், பாடல் சம்பந்தப்பட்டவர்கள், நடனக் கலைஞர்கள் போன்ற துறைகளில் உள்ளவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். நீங்கள் இதுவரை பட்ட கஷ்டங்கள் விலகி நன்மையே நடக்கும். வீண் கவலைகளை விடுத்து உங்கள் கடமைகளை சரியாகச் செய்யுங்கள். நீங்கள் முயற்சி எடுத்து செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும். நல்ல காலமாக இது அமையும். மாணவர்கள் அதிக நேரம் பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து கவனத்தில் வைத்துக் கொள்வது நல்லது. பரிகாரம்: ஸ்ரீநரசிம்மரை வணங்க உடல் ஆரோக்கியம் பெறும். மனக்கவலை நீங்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, புதன், வியாழன் தேய்பிறை: திங்கள், வியாழன் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்) தன்னலம் கருதாமல் பிறர் நலத்தை மனதில் கொண்டு செயல்படும் கும்ப ராசியினரே, இந்த காலகட்டம் எல்லாவகையிலும் லாபம் கிடைக்கும். வாக்கு வன்மையால் எதுவும் சாதகமாக நடக்கும். நல்ல சிந்தனை உண்டாகும். அறிவுதிறன் அதிகரிக்கும். சில நேரங்களில் மற்றவர்கள் பேசுவதை தவறாக புரிந்து கொள்ள நேரிடும், மனோதைரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும் உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். பிரச்சனைகள் இருந்தாலும் அமைதிக்கு குறைவு இருக்காது. சிலர் வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி வரலாம். கடன் தொல்லை கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். பயணம் செய்யும் போது உங்களது உடமைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். தொழில் ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். உணவு சம்பந்தப்பட தொழில் செய்பவர்கள் சிறப்பான லாபம் அடையலாம். மீன்கள் சம்பந்தப்பட்ட உணவிற்கு கிராக்கி என்பதால் அது சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு பொன்னான காலம் இது. புதிய தொழில் ஆரம்பிப்பவர்களுக்கு உங்களின் குழந்தைகள் பெயரில் தொழில் ஆரம்பித்தால் நல்ல வளர்ச்சியும், அனுகூலமும் கிடைக்கும். உங்களிடம் வேலை செய்பவர்களிடம் கூடுதல் அன்பு செலுத்தவும். கடன் வாங்கியிருந்தால் சரியான முறையில் திருப்பிக் கொடுக்க ஏற்பாடுகள் செய்யவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். மேல் அதிகாரிகள் கூறிய படி காரியங்களை செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பெற்றோரின் மூலமாக வேலை கிடைக்கும். உங்களுடன் வேலை செய்பவர்களிடம் அனுசரனையாக செல்லவும். வீணான பிரச்சனைகளும் மனக்குழப்பங்களும் வேண்டாம். விரும்பிய பதவி உயர்வு, பணிஇடமாற்றம், சம்பள உயர்வு ஆகியவைகளைக் கிடைக்கப் பெறுவீர்கள். மேலதிகாரிகளிடம் அனுசரனையுடன் நடந்து கொ பெண்களுக்கு நல்ல சிந்தனை ஏற்படும். மனோ பலம் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சால் எளிதாக எதையும் செய்து முடிப்பீர்கள். உங்களின் நற்பெயருக்கு பங்கம் வரலாம். தைரியத்தை மட்டும் எப்போதுமே இழக்கக் கூடாது. சகோதரர்கள் வகையில் பகை வரலாம். ஆகவே அவர்களுக்காக விட்டுக் கொடுத்து வாழ்தல் நலம். அரசியலில் உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும். போட்டிகளை சமாளிப்பீர்கள். உங்களுக்கு எதிர்பார்க்காத பதவி கிடைக்கும். உங்கள் தொண்டர்கள் உங்களுக்காக உழைப்பார்கள். எந்த சவாலையும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் சமாளியுங்கள். எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். திட்டமிட்டு எதையும் செய்யுங்கள். எதிலும் கவனமாக செயல்படுங்கள். கலைஞர்களுக்கு, விளம்பரத்துறை, திரைத்துறை டெக்னிக்கல் மற்றும் சின்னத்திறை சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரிபவர்கள் சீரான பலனைக் காண்பார்கள். ஆனாலும் இரவு பகல் பாராமல் அதிகமான உழைப்பு தேவைப்படும். வரவு அதிகமாக இருக்கும். சிக்கனமாக செலவழிக்கவும். மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து கல்வியில் வெற்றி பெற நன்கு படிப்பீர்கள். பரிகாரம்: சனி பகவானை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்க எல்லா காரியங்களும் வெற்றிபெறும். துன்பங்கள் விலகும். அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வியாழன் தேய்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்பட்டு வரும் மீன ராசியினரே நீங்கள் காலத்தை வீணாக்க மாட்டீர்கள். இந்த காலகட்டத்தில் பணதேவை உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் அவப்பெயர் உண்டாகலாம். பயணங்கள் மூலம் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். திடீர் மன குழப்பம் ஏற்படும். முக்கிய முடிவு எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கசப்பு மறைந்து சந்தோஷம் ஏற்படும். பெற்றோரின் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் தாமதமானாலும் சிறப்பாக நடக்கும். புதிய வீடு, நிலம் வாங்கலாம். பழைய வீட்டை பழுது பார்க்கலாம். பணப்புழக்கம் சரியாக இருக்கும். தொழில், வியாபாரம் பற்றிய கவலை உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். முயற்சிகளுக்குத் தகுந்த லாபம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அனைத்துச் செயல்களிலும் வெற்றியடைவீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர, புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தினாலும் கடன் சுமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். வேலை மாறுதல் பற்றிய எண்ணம் உண்டாகும். அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கு சாதனைகள் செய்யும் காலமிது. பணத்தை பாதுகாப்பது சம்பந்தப்பட்ட வேலைகளில் இருப்பவர்கள் கவனமுடன் கையாளவும். மேலதிகாரிகளிடம் சுமூகமான உறவை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வேலைகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். மனிதர்களை இனம் கண்டு கொள்வீர்கள். தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பீர்கள். பெண்களுக்கு பண தேவை அதிகரிக்கும். எதிலும் உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். வேலை பளு அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிறந்த வீட்டினில் இருந்து நீங்கள் விரும்பிய பொருட்கள் வந்து சேரும். கர்ப்பிணிப் பெண்கள் மன உளைச்சலும், சோர்வுக்கும் ஆளாகலாம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு விரும்பியது கிடைக்கும். இந்த நேரத்தில் உங்களது கோரிக்கைகளும் ஆசைகளும் நிறைவேறும். அரசியலில் உள்ளவர்களுக்கு அலைச்சல் அதிகமாக இருக்கும். எந்த வேலையானாலும் நீங்களே நேரிடையாக செயல்படுவது நல்லது. புதிய பதவி கிடைக்கும். அறிமுக இல்லாதவர்களிடம் வரவு, செலவு வைத்துக் கொள்ள வேண்டாம். பழைய பாக்கி வசூல் ஆகும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். கலைத்துறையினருக்கு உங்களுடைய வேலைகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். மனிதர்களை இனம் கண்டு கொள்வீர்கள். தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பீர்கள். அதேநேரம் சில சமயங்களில் காரணமில்லாமல் மனதில் தைரியம் குறையும். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பதில் மெத்தனம் காணப்படும். கல்வியில் வேகம் காட்டுவது வெற்றிக்கு நல்லது. பரிகாரம்: வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தி பகவானை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி

