ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் முறைகேடு தொடர்பான வழக்கில், அந்நிறுவனத்தின் அப்போதைய தலைவர் ராமலிங்க ராஜு உட்பட 10 பேரும் குற்றவாளிகள் என ஹைதராபாத் சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை இன்று தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், அவர்களுக்கான தண்டனை குறித்த அறிவிப்பு இன்று பிற்பகல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளில் திருத்தம் செய்து, முறைகேடாக நிறுவன லாபத்தை மிகைப்படுத்திக் காட்டி முதலீட்டாளர்கள், பங்குதாரர்களை ஏமாற்றியதாக 2009 ஜனவரி 7ஆம் தேதி அப்போதைய சத்யம் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜு ஒருகட்டத்தில் தாமாக முன்வந்து தெரிவித்தார். இதையடுத்து ராஜு உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்கத் தொடங்கி 6 ஆண்டுகளில் 226 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி 3,000க்கும் மேற்பட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை முடிந்ததையடுத்து மார்ச் 9-ஆம் தேதி தீர்ப்பு வெளியிடப்படும் என நீதிபதி பி.வி.எல்.என். சக்ரவர்த்தி கடந்த டிசம்பரில் அறிவித்தார். பின்னர் ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஜாமீனில் உள்ள ராமலிங்க ராஜு உட்பட 10 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ராமலிங்க ராஜு உட்பட 10 பேர் குற்றவாளிகள்: நீதிமன்றம் தீர்ப்பு
நாகூர் ஹனீபா உடலுக்கு கருணாநிதி அஞ்சலி
சென்னை: திமுகவின் பிரசார பாடகர் நாகூர் ஈ.எம். ஹனிஃபா சென்னையில் புதன்கிழமை காலமானார். அவரது உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் ஹனிபா இரவு 8 மணியளவில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். ஹனீபா மரணம் குறித்து தகவல் அறிந்த திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஹனிபா மறைவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, எனது ஆருயிர் நண்பரும், எனது இளமைக் காலத்தில் இருந்து இந்த இயக்கத்திலே என்னோடு சேர்ந்து வளர்ந்தவருமான சகோதரர் ஹனீபா நம்மையெல்லாம் விட்டுப் பிரிந்து விட்டார் என்றார் கண்ணீர் மல்க.
இந்தியன் முஜாஹிதீன்கள் பிரிவினைவாதிகள்; பயங்கரவாதிகள் அல்லர்: காங். தலைவர்
பனாஜி: இந்தியன் முஜாஹிதீன்கள், நாட்டின் பிரிவினைவாதிகளே தவிர, அதன் உறுப்பினர்கள் பயங்கரவாதிகள் அல்லர் என்று, காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் குர்ஷித் அஹ்மத் சையீத் தெரிவித்துள்ளார். இந்திய, அமெரிக்க அரசுகளால், இந்தியன் முஜாஹிதீன்கள், பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. கோவா காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசிய சையீத், இவ்வாறு கூறினார். சையீத் குஜராத்தைச் சேர்ந்தவர். இந்திய முஸ்லீம்களிடம் அடிப்படை வாத எண்ணம் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவில் 10க்கும் மேற்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் இந்தியன் முஜாஹிதீன்கள் ஈடுபட்டிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். குறிப்பாக, புனே (2010), வாராணசி (2010), மும்பை (2011)களில் இந்தியன் முஜாஹிதீன்களின் தொடர் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்தும் கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு அவர், ஐ.மு.கூ. அரசு அவர்களை பிரிவினைவாதிகள் பிரிவின் கீழ்தான் நடவடிக்கை எடுத்தது என்று குறிப்பிட்டார்.
ஐ.பி.எல்-8: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றியுடன் துவக்கியது!
ஐ.பி.எல். சீஸன் 8 டி 20 போட்டியின் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்று, சீஸன் 8ன் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. ஐ.பி.எல் டி20 போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்று பந்து வீசிய கொல்கத்தா அணி மும்பை அணியை 20 ஓவர்களில் 168 ரன்களில் ஆட்டம் இழக்கச் செய்தது. மும்பை அணியில் ரோகித் சர்மா 98 ரன்களும், ஆண்டர்சன் 55 ரன்களும் எடுத்து அதிரடி காட்டினர். இறுதியில் அந்த அணி 168 ரன்களை எடுத்தது. பின்னர் பேட்டிங்கைத் துவக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் உத்தப்பா 9 ரன்களில் ஏமாற்றிய போதும், பாண்டே, கம்பீர் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தியது. 40 ரன்களில் பாண்டே ஆட்டமிழக்க கம்பிர் அரைசதம் கடந்தார். பின்னர் பதான்- யாதவ் இணை பொறுப்புடன் விளையாட 19 ஆவது ஓவரிலேயே கொல்கத்தா அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
ஆந்திரா வங்கி வாசலில் பெட்ரோல் விட்டு தீவைத்த வழக்குரைஞர்கள் 2 பேர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் ஆந்திரா வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கி முன்பு நேற்று காலை ஆந்திராவில் போலீஸாரால் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் 14 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் மதியம் 2.45 வரை தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அதன்பின்னர் மாலை வக்கீல்கள் ரசல், ஸ்டீபன்தாஸ் ஆகியோர் வங்கிக்கு வந்தனர். அங்கு வங்கி முன்பு இருந்த ஏ.டி.எம். மையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளியிடம் தகராறு செய்துள்ளனர். பின்னர் தாங்கள் கொண்டு வந்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை வங்கியின் வாசலில் ஊற்றி தீவைத்துள்ளனர். இதில் வங்கியின் வாசலில் போடப்பட்டிருந்த மிதியடி எரிந்தது. உடனடியாக வங்கியின் அருகே பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் 2 வழக்கறிஞர்களையும் மடக்கிப் பிடித்தனர். இதுகுறித்து வங்கி மேலாளர் பாலசுப்பிரமணியன் தூத்துக்குடி மத்தியபாகம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் வக்கீல்கள் இருவரையும் கைது செய்தனர். அப்போது, வழக்குரைஞர் ஸ்டீபன்தாஸ் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் தங்களை மிரட்டிய வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செம்மர படுகொலை: நாளைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ஹைதராபாத்: திருப்பதி சீனிவாசமங்காபுரம் வனப் பகுதியில் தமிழக தொழிலாளர்கள் உள்பட 20 பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்த தகவல்களை வெள்ளிக்கிழமை நாளைக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆந்திர மாநில அரசுக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. திருப்பதி வனப்பகுதியில் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ஆந்திர மாநில மனித உரிமை சங்கம், ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி கல்யாண்சிங் குப்தா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு, உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது ஆந்திர அரசு சார்பில் ஆஜரான அரசு வக்கீல், இன்னும் பிரேத பரிசோதனை நடைபெறாத நிலையில், விசாரணையை தள்ளி வைத்து கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மனித உரிமை சங்கம் சார்பில் ஆஜரான வக்கீல் கிராந்தி சைந்தன்யா, சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்களைப் பெற்றுக் கொள்ள ஆந்திர காவல்துறை காலக்கெடு விதித்துள்ளது, எனவே இந்த வழக்கை உள்ளூர் காவல்துறை விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து நீதிபதிகள், ஆந்திர மாநில அரசுக்குப் பிறப்பித்த உத்தரவில், என்கவுண்டரில் உயிரிழந்தவர்களின் மரணத்தை இயற்கைக்கு மாறான மரணமாகப் பதிவு செய்ய வேண்டும். அவர்களின் உடல்களை சரியான முறையில் பாதுகாத்து கௌரவமாக அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். அதுவரை உடல்களை அரசு மருத்துவமனையிலேயே பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். தடயவியல் நிபுணர்களைக் கொண்டு உடல்களை சோதனையிட வேண்டும். பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர்களின் விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். மேலும் இந்த என்கவுண்டர் தொடர்பான தகவல்களை ஆந்திர தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., சிறப்பு அதிரடிப்படைத் தலைவர் ஆகியோர் 10ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். -என்று கூறினர்.
கறுப்பரின அதிகாரியைக் கொன்ற அமெரிக்க வெள்ளையின போலீஸ்: அதிர்ச்சிச் சம்பவம்
அமெரிக்காவில் நிறவெறி தற்போதும் கூட தலைவிரித்தாடி வருவது கண்கூடாகத் தெரியவந்துள்ளது. வால்டர் ஸ்காட் என்னும் 50 வயது காவல்துறை அதிகாரியை வழி மறித்த வெள்ளை இன போலீஸ்காரர் ஒருவர் அவரை துப்பாக்கியால் 8 முறை சுட்டுள்ளார்.
5 குண்டுகள் வால்டர் மேல் பாய்ந்து அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஆனால் தனது துப்பாக்கியை வால்டர் எடுக்க முனைந்ததாகவும் , தற்காப்புக்காகவே தான் சுட்டதாகவும் வெள்ளை இன போலீஸ்காரரான மிச்சேல் தெரிவித்துள்ளார்.
அவ்வாறே, போலீஸார் சென்று பார்த்தபோது, கறுப்பின அதிகாரிக்கு அருகிலேயே துப்பாக்கி இருந்துள்ளது. ஆனால் சம்பவம் நடந்தபோது, மைதானத்துக்கு அருகில் இருந்த நபர் ஒருவர் தனது மொபைல் ஃபோனில் இந்தக் காட்சியை வீடியோ எடுத்துள்ளார். கேமராவில் அனைத்து காட்சிகளும் பதிவாகியிருந்தது.
அதில், வெள்ளை இன போலீஸ்காரர் , கறுப்பின அதிகாரியைத் துரத்தியதும், அவரைச் சுட்ட பின்னர் அவர் அருகே சென்று தனது துப்பாக்கியை அவர் அருகிலேயே வைத்து விட்டு வருவதும் தெளிவாகத் தெரிந்தது.
இந்த வீடியோ பதிவைப் பார்த்த போலீஸ் உயர் அதிகாரிகள் ஒரு நிமிடம் ஆடிப்போயினர். ஒரு அதிகாரியாக இருந்தும் அந்தக் கறுப்பின மனிதர் ஏன் அவரிடம் இருந்து தப்பி ஓடினார் என்பது அவர்களுக்கு மெதுவாகப் புரிந்தது.
அந்த கறுப்பின போலீஸ்காரர் தன்னை சுட்டுவிடுவார் என்ற அச்சத்திலேயே அவர் பந்து ஓடியுள்ளார். இருப்பினும், அவர் நினைத்தது போல் அவரைச் சுட்டுள்ளார்.
https://youtu.be/T3zkyOf3y0Y
கிரேன் விழுந்து தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழப்பு; 5 பேர் படுகாயம்
மத்தியப் பிரதேச மாநிலம், அன்னுபூர் மாவட்டத்தில், கிரேன் ஒன்று அருகில் இருந்த கடைகளின் மீது விழுந்து தொழிலாளர்கள் 6 பேர் பலியாயினர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் கடைகள் நசுங்கி சின்னாபின்னமாயின. புதன்கிழமை நேற்று மாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அமர்கன்டக் பகுதியில் ஜெயின் கோயில் ஒன்று கட்டப் பட்டு வந்துள்ளது. அந்தப்பணிக்காக கிரேன் பயன்படுத்தப் பட்டுள்ளது. கன மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக கிரேன் சரிந்துள்ளது.
தலபிரா-2 சுரங்க ஒதுக்கீடு விசாரணை ஜூலை 15க்கு ஒத்திவைப்பு
புது தில்லி: தலபிரா 2 நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு விசாரணை ஜூலை 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தின் தலபிரா–2 நிலக்கரி சுரங்கத்தை 2005ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்தது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., கடந்த டிசம்பரில் இந்த வழக்கை கைவிடுவதாக சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. எனினும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராசர் இதை ஏற்க மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து துணை இறுதி அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிபிஐ. இதன் அடிப்படையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குமாரமங்கலம் பிர்லா, முன்னாள் நிலக்கரித் துறைச் செயலாளர் பி.சி.பராக், ஹிந்தால்கோ நிறுவனத்தினர் மற்றும் அதன் அதிகாரிகள் சுபேந்து அமிதாப், பட்டாச்சாரியா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப சி.பி.ஐ. நீதிமன்றம் கடந்த மாதம் 11ஆம் தேதி உத்தரவிட்டது. தனக்கு அனுப்பப்பட்ட சம்மனை எதிர்த்து மன்மோகன் சிங் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ. நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தலபிரா–2 நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்றம் விதித்த தடையை குறிப்பிட்டு, சிறப்பு நீதிபதி பரத் பராசர் வழக்கின் மீதான விசாரணையை ஜூலை 15ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
முதலீட்டாளர் மாநாட்டில் இஸ்ரேல் பங்கேற்க முதல்வர் அழைப்பு
சென்னை: முதலீட்டாளர் மாநாட்டில் இஸ்ரேல் பங்கேற்க முதல்வர் அழைப்பு விடுத்தர். நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியாவுடன் கைகோத்து நிற்பதாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் டேனியல் கார்மோன் கூறினார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் டேனியல் கார்மோன், பெங்களூரில் உள்ள துணைத் தூதரக அதிகாரி மெனஹெம் கனாபி, துணை அதிகாரி ஜிவ் ஷால்வி ஆகியோர் சந்தித்துப் பேசினர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது…. முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழ்நிலை தமிழகத்தில் உள்ளது. பொருளாதார அளவில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில் சென்னையில் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டை வரும் மே 23,24–ந் தேதிகளில் தமிழக அரசு நடத்துகிறது. இதில் இஸ்ரேல் தொழிலதிபர்கள் பங்கேற்க வேண்டும் என்று முதல்–அமைச்சர் அழைப்பு விடுத்தார். இதற்கு பின்னர் பேசிய டேனியல் கார்மோன், தென் மாநிலங்களின் உறவுகளை வலுப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இஸ்ரேல் தொழில்நுட்பத்துடன் இயங்கும் நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை பார்வையிட்டேன். சுற்றுலா வளர்ச்சிக்காக இந்தியா–இஸ்ரேலுக்கும் இடையே நேரடி விமானப் போக்குவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

