புது தில்லி: தலபிரா 2 நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு விசாரணை ஜூலை 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தின் தலபிரா–2 நிலக்கரி சுரங்கத்தை 2005ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்தது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., கடந்த டிசம்பரில் இந்த வழக்கை கைவிடுவதாக சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. எனினும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராசர் இதை ஏற்க மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து துணை இறுதி அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிபிஐ. இதன் அடிப்படையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குமாரமங்கலம் பிர்லா, முன்னாள் நிலக்கரித் துறைச் செயலாளர் பி.சி.பராக், ஹிந்தால்கோ நிறுவனத்தினர் மற்றும் அதன் அதிகாரிகள் சுபேந்து அமிதாப், பட்டாச்சாரியா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப சி.பி.ஐ. நீதிமன்றம் கடந்த மாதம் 11ஆம் தேதி உத்தரவிட்டது. தனக்கு அனுப்பப்பட்ட சம்மனை எதிர்த்து மன்மோகன் சிங் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ. நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தலபிரா–2 நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்றம் விதித்த தடையை குறிப்பிட்டு, சிறப்பு நீதிபதி பரத் பராசர் வழக்கின் மீதான விசாரணையை ஜூலை 15ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
தலபிரா-2 சுரங்க ஒதுக்கீடு விசாரணை ஜூலை 15க்கு ஒத்திவைப்பு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari