சென்னை: ஏப்.4 சனிக்கிழமையன்று நிகழ்ந்த சந்திர கிரகணத்தை சென்னையில் பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர். தாம்பரம் வானவியல் கழகம் சார்பாக முழுசந்திர கிரகணத்தை தொலைநோக்கியில் காண்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதில் சுற்றுவட்டார மாணவர்கள், பொதுமக்கள் ஆவலுடன் வருகைதந்து கிரகணத்தை கண்டு ரசித்தார்கள். சிவப்புநிறத்தில் தோன்றிய நிலவு கிரகணம் முடிந்தவுடன் வழக்கமாக வெண்ணிலவாக காட்சியளித்தது. தகவல்: பாலு. சரவண சர்மா, தாம்பரம் வானியல் கழகம் https://youtu.be/MRb4L15gWKg
சுனில் நரைன் பந்து வீச்சு குறித்து சென்னையில் ரகசியப் பரிசோதனை
சென்னை; கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் மேற்கு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுனில் நரைனின் பந்து வீச்சு முறை குறித்து சென்னையில் ரகசியமாக பரிசோதனை செய்யப்பட்டது. ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடுகிறார் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன். இவர் கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பட்டம் வெல்ல முக்கியப் பங்கு வகித்தார். ஆனால் கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் போது அவர் பந்து வீசும் முறையில் சர்ச்சை ஏற்பட்டது. அவர் பந்தை எறிவது போன்று இருப்பதாக நடுவர்கள் புகார் கூறினர். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து சர்வதேச போட்டிகளில் இருந்து விலகினார். உலகக்கோப்பை போட்டிகளிலும் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் குறைபாடுகளைக் களைந்து கடந்த மாதம் இங்கிலாந்தில் உள்ள ஐசிசி சோதனை மையத்தில் தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்தினார். இதில் அவரது பந்து வீச்சு விதிமுறைக்கு உட்பட்டிருப்பதாக நிரூபிக்கப்பட்டது. இருப்பினும் அவரது பந்து வீச்சு குறித்து முதன் முதலில் இந்தியாவில் இருந்துதான் பிரச்னை கிளம்பியது என்பதால், மீண்டும் ஒரு முறை, சென்னையில் உள்ள ஐசிசி பரிசோதனை மையத்தில் சோதனைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டது. இதை அடுத்து, நேற்று முன்தினம் சென்னைக்கு ரகசியமாக வந்த சுனில் நரைன், சென்னை ஐசிசி சோதனை மையத்தில் தன் பந்து வீச்சு முறையை சோதனைக்கு உட்படுத்தினார். இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீநாத் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு அவரது பந்து வீச்சை சுமார் 2 மணி நேரம் பல்வேறு கோணங்களில் பதிவு செய்தது. அவரது பந்து வீச்சு தொடர்பான அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு பிசிசிஐயின் துணைக்கமிட்டி அவரை ஐபிஎல் போட்டியில் விளையாட அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து முடிவு செய்யும்.
காணாமல் போன இந்திய மலையேற்ற வீரர் மஸ்தான் பாபு உடல் மீட்பு
ஐதராபாத்: காணாமல் போன இந்திய மலையேற்ற வீரர் மஸ்தான் பாபுவின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மலையேற்றத்தின்போது மஸ்தான் பாபு காணமல் போய், 11 நாட்களுக்குப் பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள உயரமான சிகரங்களை மிகக் குறுகிய காலத்தில் ஏறி சாதனை படைத்தவர். 2006 முதல் 2008 வரை இவர் புரிந்த சாதனை முறியடிக்கப்படவில்லை. இவர், 172 நாட்களில் ஏழு சிகரங்களிலும் ஏறி சாதனை படைத்தார். முன்னதாக, அர்ஜெண்டினா மற்றும் சிலி பகுதிகளுக்கு இடையேயான உயர்ந்த மலைப் பகுதியில் ஏறுவதற்காக மேற்கொண்ட பயணத்தில் இந்திய மலையேற்ற வீரர் மல்லி மஸ்தான் பாபு மரணம் அடைந்ததுள்ளார். இதனை அரசு அதிகாரிகள் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவித்ததாக, மஸ்தான் பாபுவின் சகோதரி தொரசனம்மா கூறியிருந்தார்.. ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (40). இரு வாரங்களுக்கு முன்பு மலையேற்றக் குழுவுடன் சென்றார். ஆனால், மோசமான வானிலை காரணமாக அவர் காணாமல் போய் விட்டதாக, நெல்லூர் போலீசார் தெரிவித்திருந்தனர். அவரது மரணத்தை அடுத்து, அவரது நண்பர்கள் மற்றும் அவரது நலம் விரும்பிகள் இணைந்து பேஸ்புக் பக்கம் ஒன்றை உருவாக்கி, அதில், தனது விருப்பமான குழந்தையை மலைகள் எடுத்து கொண்டன. அமைதியில் ஆழ்ந்திருக்கவும் மல்லி மதஸ்தான் பாபு என பதிவு வெளியிட்டுள்ளனர். மஸ்தான் பாபு மறைவிற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.
மாநாட்டில் பங்கேற்க தில்லி சென்றார் முதல்வர் பன்னீர்செல்வம்
சென்னை: முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் விமானம் மூலம் சென்னையில் இருந்து தில்லிக்கு பயணம் மேற்கொண்டார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் கலந்து கொள்ளும் மூன்று நாள் மாநாடு தில்லியில் தொடங்கியது. இந்த மாநாட்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து பங்கேற்றுப் பேசினார். இதில் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து மாநில தலைமை நீதிபதிகள் மற்றும் முதலமைச்சர்கள் மாநாடு ஞாயிறு காலை தில்லியில் நடைபெறுகிறது. தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் இந்த மாநாட்டில் அனைத்து மாநில நீதிபதிகள் மற்றும் முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமானம் மூலம் தில்லி புறப்பட்டுச் சென்றார்.
அதிமுக முன்னாள் எம்.பி., மலைச்சாமி பாஜகவில் ஐக்கியம்
சென்னை: அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., மலைச்சாமி பாஜகவில் இணைந்தார். பெங்களூரில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் அவர் பாஜக.,வில் இணைந்தார். கடந்த மே மாதம் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா மலைச்சாமியை கட்சியிலிருந்து நீக்கியிருந்தார். புதுச்சேரி தி.மு.க.,வை சேர்ந்த சுப்ரமணியமும் பாஜகவில் இணைந்தார். இத்தகவலை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும், தி.மு.க.,முன்னாள் எம்.எல்.ஏ., சோமசுந்தரம், கவிஞர் கண்ணதாசன் மகள் விஷாலி கண்ணதாசன் ஆகியோரும் பா.ஜ.க.,வில் இணைந்துள்ளனர்.
சென்னையில் தெரிந்த சந்திர கிரகணம்: கோளரங்கில் மாணவர்கள் உற்சாகம்
சென்னை: இன்று உலகின் பல பகுதிகளில் தெரிந்த சந்திர கிரகணத்தை, சென்னையிலும் கண்டு ரசித்தனர். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் பொதுமக்கள் சந்திர கிரணத்தை பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று தொலைநோக்கி மூலம் சந்திர கிரகணத்தை பார்வையிட்டு மகிழ்ந்தனர். பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் கிரணத்தை பார்வையிட்டனர். தமிழகம் முழுவதும் வெறும் கண்களாலும் இரவு, 8:30 மணி வரை ஏராளமானோர் இந்த சந்திர கிரகணத்தை கண்டு ரசித்தனர். இருப்பினும், சென்னையில் மேக மூட்டமாக இருந்ததால், தெளிவாகக் காண முடியவில்லை. மேலும், உலகின் பல்வேறு நாடுகளில் இன்று நிகழ்ந்த சந்திர கிரகணத்தை பல்லாயிரக்கணக்கான மக்கள் உற்சாகமாகக் கண்டுகளித்தனர். வட அமெரிக்கா, ஹாவாய் தீவுகள், ஜப்பான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, கிழக்கு ஆசியா என பல இடங்களில் மக்கள் இந்த சந்திர கிரகணத்தைப் பார்க்க முடிந்தது. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சந்திர கிரகணம் மாலை 3:45 மணிக்கு துவங்கி 7:14 மணி வரை நீடித்தது. மாலை 5.27க்குத் தொடங்கி முழு கிரகணம் சுமார் நான்கரை நிமிடம் நீடித்தது.
கடலூரில் கர்நாடக அரசு பட்ஜெட் நகலை எரிக்க முயன்ற விவசாயிகள் கைது
கடலூர்: கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றில் தடுப்பணை கட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியுள்ளதைக் கண்டித்தும், தடுப்பணை கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்தவும் வலியுறுத்தி காவிரி பாசன மாவட்டங்களில் கர்நாடக அரசின் பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டத்தை விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்தது. அதன்படி சனிக்கிழமை இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கடலூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் நகல் எரிப்புப் போராட்டத்தை நடத்த முயன்றனர். போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. எனவே, அங்கே குவிந்த விவசாயிகள் 36 பேரை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இந்திய கடல் பகுதியில் அத்துமீறி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது
சென்னை: இந்திய கடல் பகுதியில் அத்துமீறி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழக கடல் பகுதியில் சுமார் 158 கடல் மைல் தொலைவில் இந்திய கடலோர காவல் படையினர் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே இலங்கை மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை தாண்டி, இந்திய கடல் பகுதியில் விசைப் படகு ஒன்றில் மீன் பிடித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடலோர காவல் படையினர், அந்தப் படகில் இருந்த மீனவர்கள் 6 பேரைக் கைது செய்தனர். படகைப் பறிமுதல் செய்து, சென்னைக்குக் கொண்டு வந்து, சென்னை துறைமுக காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக துறைமுகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
ஸ்மிருதி இராணியிடம் மன்னிப்பு கோரியது ஃபேப் இண்டியா
பனாஜி: கோவா மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, அங்கே ஃபேப் இந்தியா என்ற ரெடிமேட் ஷோரூமில் துணிகள் வாங்கச்சென்றார். அப்போது உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்தக் கடையும் பூட்டி சீல் வைக்கப்பட்டு, அதன் மேலாளர் உள்பட ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஃபேப் இண்டியா நிறுவனம், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியிடம் நடந்த தவறுக்கு மன்னிப்புக் கோரியுள்ளது.
தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் தயாராகுங்கள்: தம்பிதுரை
திருச்சி: தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் சட்டப் பேரவைக்கு தேர்தல் வரலாம்; தொண்டர்கள் தயாராக இருங்கள் என்று நாடாளுமன்ற துணைத் தலைவர் தம்பிதுரை கூறினார். திருச்சி புறநகர் மாவட்ட அதிமுக ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சமயபுரம் டோல்கேட் பகுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தேர்தல் பொறுப்பாளரும் நாடாளுமன்ற துணைத் தலைவருமான தம்பிதுரை, ”மத்தியில் ஆளும் பாஜக ஆட்சி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் எந்த நலத் திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. ஆனால், தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா மக்களுக்குத் தேவையான அனைத்து தேவைகளையும் அறிந்து திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி வருகிறார். கட்சி நிர்வாகிகள் தேர்தலில், நீங்கள் போட்டியிட்டு வெற்றி பெறுவது முக்கியமல்ல. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சிறப்பாக பணியாற்றக் கூடியவர்களாக இருக்க வேண்டும். தமிழக சட்டமன்றத்துக்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம். அதனால், நீங்கள் கட்சித் தேர்தலில் வெற்றி பெறும்போதே, தேர்தலுக்கான பணிகளையும் தொடங்க வேண்டும்” என்று பேசினார்.

