சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசின் நிதி அமைச்சக செலவு கணக்கு துறை சார்பு செயலாளர் பட்டாச்சார்யா பெயரில் 30–ந்தேதி ஒரு சுற்றறிக்கை வெளியானது. அதில் இந்த அகவிலைப் படி உயர்வு 1–1–2015 முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். எதிர்பார்த்ததை விட கூடுதலாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதே என தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் பல்வேறு துறை ஊழியர்கள் வியப்பும் அடைந்த நிலையில் அந்த சுற்றறிக்கை போலியானது என்று தெரிய வந்துள்ளது. அது போன்ற சுற்றறிக்கை செலவுக் கணக்குத் துறையால் அனுப்பப்படவில்லை என்றும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செலவு கணக்கு துறை இயக்குனர் சுபாஷ்சந்த், மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளுக்கு 1–ந்தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், மார்ச் 30–ந்தேதியிட்டு மத்திய அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை போலியானது. அதன் அடிப்படையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் எனக் கூறியுள்ளார். மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 107 சதவீத அக விலைப்படி உயர்வு பெறுகின்றனர். 1.1.2015 முதல் மேலும் 6 சதவீத டி.ஏ. வழங்கப்பட வேண்டும். வழக்கமாக ஜனவரி 1–ந்தேதி முதல் வழங்க வேண்டிய கூடுதல் டி.ஏ. ஏப்ரல் முதல் வாரத்தில் கிடைக்கும் வகையில் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். இந்த நிலையில், 30–ந்தேதி இந்த சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை வெளியானது. 6 சதவீதம் மட்டுமே டி.ஏ. உயர்வு வர வேண்டிய நேரத்தில் 8 சதவீத உயர்வு என அதில் கூறப்பட்டு இருந்ததால் ஊழியர்கள் பலருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் 1ம் தேதியில் இருந்து முன் தேதியிட்டு வழங்க வேண்டும் என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. மத்திய அரசின் பெயரில் போலி சுற்றறிக்கை அனுப்பி விஷம பரீட்சையில் யாரோ ஈடுப்பட்டுள்ளனர். இது அரசு நிர்வாகத்தில் உரிய பாதுகாப்பு இல்லாததை காட்டுகிறது. இந்த பாதுகாப்பு குறைபாடு உடனே களையப்பட வேண்டும் என்று அரசு ஊழியர்களே கூறுகின்றனர். இவ்வாறு போலி சுற்றறிக்கை மத்திய அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து முறையான விசாரணை நடத்தப் பட வேண்டும் என்று ஊழியர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
8 சத அகவிலைப்படி உயர்வு: போலி சுற்றறிக்கை கண்டு ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை
விராலிமலை அருகே அதிசயம்: பசு ஒரே நேரத்தில் ஈன்ற இரண்டு கன்றுகள்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள நாங்குப்பட்டியில் விவசாயி வளர்த்த பசு ஒன்று வியாழக் கிழமை இரவு ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்றது. இதை அதிசயத்துடன் மக்கள் பார்த்துச் செல்கின்றனர். நாங்குபட்டியைச் சேர்ந்த விவசாயி அய்யாக்கண்ணு வளர்த்து வந்த பசு மாடு இரண்டு ஆண் கன்றுகளை ஈன்றுள்ளது. இரண்டு கன்றுகளும் நல்ல நிலையில் துள்ளிக்குதித்து விளையாடுகிறது. இரண்டு கன்றுகளை ஈன்ற பசுவையும், கன்றுகளையும் நாங்குப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
காவல் நிலையம் அருகிலேயே கொல்லப்பட்ட ஸ்ரீவைகுண்டம் விவசாயி: 5 பேர் சுற்றிவளைப்பு
ஸ்ரீவைகுண்டம்: காவல் நிலையம் அருகிலேயே வெட்டிக் கொல்லப்பட்ட ஸ்ரீவைகுண்டம் விவசாயி கொலை தொடர்பாக 5 பேரை போலீஸார் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நவ்வலடியூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகராஜா (45) ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையம் அருகே உள்ள அரசு நெல் கொள்முதல் குடோனுக்குச் சென்றார். பின்னர் குடோனில் இருந்து வெளியே வந்தபோது அங்கே பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல் ஒன்று திடீரென ஆறுமுகராஜாவை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. இதில் அவருக்கு கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு விழுந்தது. ஆறுமுகராஜா அந்த கும்பலிடம் இருந்து தப்பி, போலீஸ் நிலையத்தை நோக்கி ஓடினார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது. ரத்தக் காயங்களுடன் உயிருக்குப் போராடிய அவரை போலீசார் மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி ஆறுமுகராஜா உயிரிழந்தார். போலீஸ் நிலையம் அருகிலேயே விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது குறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினார். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்த தகவல்… கொலை செய்யப்பட்ட ஆறுமுகராஜா டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துள்ளார். மனைவியை விவாகரத்து செய்தவர். ஆறுமுக ராஜாவுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதன் காரணமாக கடந்த 2013ம் ஆண்டு ஆறுமுகராஜாவின் வாழைத்தோப்புக்குள் புகுந்த எதிர்த் தரப்பினர் அங்கிருந்த வாழைகளை வெட்டி சாய்த்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. எதிர் தரப்பினர் ஆறுமுகராஜாவை கொலை செய்யவும் முயற்சி செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வெள்ளூர் மற்றும் மங்கலக்குறிச்சியை சேர்ந்த 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கை வாபஸ் பெறுமாறு 7பேரும் ஆறுமுகராஜாவை மிரட்டி வந்துள்ளனர். இந்நிலையில், ஆறுமுகராஜாவின் தாய் ருக்மிணி, தனது மகன் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றமும் பாதுகாப்பு கொடுக்க உத்தரவிட்டது. மேலும் ஆறுமுகராஜா வழக்கை வாபஸ் பெறவும் மறுத்துவிட்டார். இதன் காரணமாக எதிர் தரப்பினர் ஆறுமுகராஜாவை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்தக் கொலையில் வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இக்கொலை தொடர்பாக 5 பேர் போலீசில் சிக்கியுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மாயமான விவகாரம்: பேராசிரியர் உள்பட 6 பேர் கைது
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலை தூரக் கல்வி மாணவர்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்வின் விடைத்தாள்கள் பல்கலைக்கழகத்தில் உள்ள தேர்வு துறை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் டிசம்பர் 16–ஆம் தேதி விடைத்தாள் திருத்தும் பணிக்காக ஆய்வு செய்தபோது எம்.எஸ்.சி. கணித பாடத்தின் 1,111 விடைத்தாள்கள் மாயமானது தெரியவந்தது. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ரகுபதி தலைமையில் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இது தொடர்பாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ரகுபதி, அண்ணாமலை நகர் போலீஸில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தொலை தூரக் கல்வி இயக்கக வரலாற்றுத் துறை உதவி பேராசிரியர் பாஸ்கர் (வயது35), தேர்வுத் துறை உதவியாளர்கள் ராமசாமி (32), சங்கர் (41), கார்த்திகேயன் (30), ஆனந்த் (33), நூல் வெளியீட்டுத் துறையைச் சேர்ந்த அலுவலக உதவியாளர் மாரிமுத்து (33) ஆகிய 6 பேரும் விடைத்தாள்களை கள்ளச்சாவி மூலம் பல்கலைக்கழக பாதுகாப்பு அறையில் இருந்து எடுத்தது தெரியவந்தது. மாயமான விடைத்தாள்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து 6 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிதம்பரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். விடைத்தாள் மாயமான விவகாரத்டில் மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
10 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் எப்போது?
புது தில்லி: புதுச்சேரி உட்பட 10 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு எப்போது நியமிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசு இது குறித்து தற்போது தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது பாஜக., தலைமையிலான அரசு மத்தியில் பொறுப்பேற்ற பிறகு தில்லி, மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், குஜராத், கர்நாடகம், மேற்கு வங்கம், கேரளம், சத்தீஸ்கர், கோவா, ராஜஸ்தான், ஹரியாணா, மிஸோரம் ஆகிய மாநிலங்களுக்கு புதிதாக ஆளுநர்களை நியமித்தது. அண்மையில் மிஸோரம் ஆளுநர் அஜீஸ் குரோஷியை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்தது. இதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்நிலையில் அஸ்ஸாம், ஹிமாசலப் பிரதேசம், மேகாலயம், மிஸோரம், மணிப்பூர், பீகார், திரிபுரா, தெலுங்கானா, பஞ்சாப் ஆகிய 9 மாநிலங்களில் ஆளுநர் பதவிகள் காலியாக உள்ளன. இதைத் தவிர யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் துணை நிலை ஆளுநர் பதவி காலியாக உள்ளது. இந்த பதவிகளுக்குத் தனியாக எவரும் நியமிக்கப்படாததால் வேறு மாநிலங்களின் ஆளுநர்கள் சிலர் அங்கு கூடுதல் பொறுப்பு வகித்து வருகின்றனர். மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதி, பீகார், மேகாலயம், மிஸோரம் உள்ளிட்ட மாநிலங்களில் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். நாகாலாந்து ஆளுநர் பத்மநாப பாலகிருஷ்ண ஆச்சார்யா, அஸ்ஸாம், திரிபுரா மாநிலங்களுக்கு கூடுதல் பொறுப்பேற்றுள்ளார். ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரகாண்ட் மாநில ஆளுநர்களும் சில மாநிலங்களுக்கு கூடுதல் பொறுப்பு வகித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த 9 மாநிலங்களுக்கு ஆளுநர்களையும், புதுச்சேரிக்கு துணைநிலை ஆளுநரையும் மத்திய அரசு அறிவிக்கும் நாளை அரசியல் வட்டாரத்தில் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.
தேர்வுக் குழு நிராகரிப்பு: ஜுவாலா கட்டா ஏமாற்றம்
புதுதில்லி: வரும் 2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்காக, ஒவ்வொரு துறையிலும் சிறப்பாகச் செயல்படும் வீரர், வீராங்கனைகளை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் தேர்வு செய்து வருகிறது. அவர்களின் திறமையை மேம்படுத்த நிதி உதவி, உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. அவ்வகையில், பேட்மின்டன் விளையாட்டில் சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தேர்வு செய்யப்படாத ஜுவாலா கட்டா, தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்துக் கூறியபோது, ‘தேர்வுக்குழு என்னை நிராகரித்தது எனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. அரசை நம்பி நாங்கள் இருக்கிறோம். ஆனால், ஏற்கெனவே பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களின் ஸ்பான்சர்களைப் பெற்ற வீரர், வீராங்கனைகளையே தேர்வு செய்துள்ளனர். இன்னும் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது புரியவில்லை’ என்றார் ஏமாற்றத்துடன்.
அமலாக்கத்துறை யாருடைய கைப்பாவையாகவோ செயல்படுகிறது: சொத்து முடக்கம் குறித்து தயாநிதி மாறன்
சென்னை: யாருடைய கைப்பாவையாகவோ அமலாக்கத்துறை செயல்படுகிறது; அரசியல் காரணங்களுக்காக சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மத்திய அமலாக்கத்துறை நேற்றுமுன்தினம் பத்திரிகைகளுக்கு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக சொத்துகள் முடக்கம் குறித்து ஒரு நீண்ட பட்டியல் வெளியிட்டுள்ளது. இது முற்றிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக யாருடைய தூண்டுதல் பெயரால், அவப்பெயர் உருவாக்க நடத்தப்பட்ட விவகாரமாகவே தோன்றுகிறது. சட்டவிதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டிய அமலாக்கத்துறை இந்த சொத்து முடக்க விவகாரத்தில் சட்டவிதிகள் அனைத்தையும் மீறி அவசர அவசரமாக செயல்பட்டுள்ளது என்பதே யாரோ பின்னணியில் இருப்பதை தெளிவாக்குகிறது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சம்பந்தப்பட்ட கம்பெனிகள் எதிலும் எனக்கு பங்கோ, பாத்தையோ இல்லாதது மட்டுமல்ல, அவைகளிடமிருந்து எனக்கு எந்தவித பணப்பரிமாற்றமோ நடைபெறவில்லை என்பதை நன்கு அறிந்தும், சன் டைரக்ட் டி.வி. பிரைவேட் லிமிடெட் மற்றும் சவுத் ஏசியன் எப்.எம். லிமிடெட் கம்பெனிகளில் எனக்கு எந்தவித உரிமையும், தொடர்பும் இல்லாதபோது தொழில் ரீதியாக மேலே குறிப்பிட்ட நிறுவனங்களிடையே நடைபெற்றுள்ள பண முதலீட்டை திசை திருப்பியிருப்பது இதன் பின்னணியினை தெளிவாக்கும். இரு கம்பெனிகளுக்கிடையே வெளிநாட்டில் இருந்து பணம் முதலீடு என்றால் அதற்கு மத்திய அரசிடம் உரிய அனுமதி பெறாமல் செய்ய முடியாது என்பது சாதரண அறிவு படைத்தவர்களுக்கு தெரிந்த விவகாரம். அப்படி வியாபார ரீதியாக மத்திய அரசின் அனுமதி பெற்று நடைபெற்ற பண முதலீட்டுக்கு வண்ணம் பூசுவது அரசியல் இல்லாமல் வேறாக இருக்க முடியாது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை சட்டவிதிகளை புறந்தள்ளி நடவடிக்கை எடுத்துள்ளது என்பதும் சட்டவிதிகளை அறிந்தவர்களால் நன்கு உணரமுடியும். அமலாக்கத்துறை சட்டவிதி என்ன சொல்கிறது? ஒரு சொத்தை முடக்க வேண்டுமென்றால் அந்த சொத்து குறிப்பிட்ட குற்றச்சாட்டின் விளைவாக பெற்றதாக இருந்ததால்தான், அதனை முடக்க வேண்டும் என தெளிவாக குறிப்பிட்டுள்ள நிலையில், சம்பந்தமே இல்லாத சொத்துக்களை முடக்கி நீண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது ஒன்றே யாருடைய நோக்கத்தையோ செயலாக்க அமலாக்கத்துறை திட்டமிட்டு செயல்பட்டுள்ளது என்பதை தெளிவாக காட்டவில்லையா? முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சொத்துகளை எல்லாம் ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் முதலீட்டுக்கு முன் பல ஆண்டுகளுக்கு முன்பே வாங்கப்பட்டவை என்பது தெரிந்தும், முடக்கும் இந்த முயற்சியில் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது ஆச்சரியத்தைத்தான் தருகிறது. அமலாக்கத்துறை ஏடுகளுக்குத் தந்த செய்திக்குறிப்பில், தயாநிதி மாறனுக்கு கொடுக்கப்பட்ட சட்டவிரோத கைமாற்றுக்குப் பெறப்பட்ட தொகையைக் கொண்டு வாங்கிய சொத்துக்களை முடக்குவதாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆஸ்ட்ரோ கம்பெனி, சன் டைரக்ட் டி.வி.யிலும், சவுத் ஏசியா எப்.எம்.மிலும் முதலீடு செய்யத் தொடங்கியது 2007 ஆம் ஆண்டு இறுதியில் இருந்துதான் என்பதை அந்த நிறுவனங்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளன. உண்மை அப்படியிருக்க அதற்கு முன்பாக பல ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட சொத்துக்களை இப்போது அமலாக்கத்துறை முடக்க முன்வந்துள்ளதாகக் கூறுவது விதிமுறைகளுக்கு எதிரானது அல்லவா. தவறான முறையில் வந்த பணத்தில் வாங்கிய சொத்துக்களைத்தான் முடக்க வேண்டும் என சட்டவிதி தெளிவாக தெரிவிக்கிறது. 2007 ஆம் ஆண்டு மார்சில் நான் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகிவிட்டேன். ஆனால், 2007 ஆம் ஆண்டு இறுதியில் ஆஸ்ட்ரோ நிறுவனம் முதலீட்டைத் தொடங்கியதாக கூறப்படும்போது, அந்த கால கட்டத்தில் நான் அமைச்சராகவே இல்லை. 2007 ஆம் ஆண்டுக்கு முன் வாங்கப்பட்ட சொத்துக்களை முடக்குவதாக அறிவித்துள்ளது சட்டத்தை மீறி அமலாக்கப்பிரிவு யாரையோ திருப்திப்படுத்த செயல்படுவதை தெளிவாகக் காட்டவில்லையா? மேலும், ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் இரு நிறுவனங்களுக்கு இடையே முழுமையாக நடத்தி முறைப்படி நடைபெற்ற ஒப்பந்த விவகாரம். அதிலே எந்தவித குற்றவியலும் இருக்க முடியாது என இரு உச்ச நீதிமன்ற நீதிபதிகளான காரே, கபாடியா ஆகியோர் கருத்து தெரிவித்து அது ஏடுகளிலும் வெளிவந்துள்ளதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சிங்கப்பூர் நடுவர் தீர்ப்பாயத்தில், சிவசங்கரனுக்கும், மேக்சிஸ் நிறுவனத்துக்கும் இடையே நடைபெற்ற இதன் தொடர்பான வழக்கில், சிவசங்கரன் மேக்சிசுடன் செய்து கொண்ட ஒப்பந்தம், சட்டபடி நடந்த ஒன்று என்றும், அதில் எந்த தவறும் நடைபெறவில்லை என தீர்ப்பு வழங்கியதும் இங்கு குறிப்பிடத்தக்கது. சிவசங்கரனும், அதனை ஏற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில் அமலாக்கத்துறையில் சொத்து முடக்கும் முயற்சி என்பது சட்டவிதிகளை மீறி யாருடைய கைப்பாவையாகவோ அமலாக்கத்துறை செயல்படுகிறது என்பதை தெளிவாக்குகிறது. இதனை சட்டரீதியாக எதிர்கொண்டு அதிலே வெற்றி பெறுவேன் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறி உள்ளார். தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவனம் கேட்டுக்கொண்ட அலைக்கற்றை உரிமத்தை நிறுத்தி, தொழிலதிபர் சிவசங்கரனை நிர்பந்தம் செய்து ஏர்செல் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு விற்கச் செய்ததாகவும், அதன் மூலம் மேக்சிஸ் நிறுவனத்திலிருந்து வேறொரு நிறுவனம் மூலம் மாறன் சகோதரர்களுக்குச் சொந்தமான சன் நெட்வொர்க் குழுமத்தில் முதலீடு என்ற வகையில் ஆதாயம் அடைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. மாறன் சகோதரர்கள் மீது, ரூ.742 கோடி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்த நிலையில், முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அவரின் மனைவி காவேரி கலாநிதி உள்ளிட்டவர்களுக்கு சொந்தமான ரூ.742.54 கோடி அளவிலான சொத்துகளை மத்திய அமலாக்கத்துறை முடக்கி அறிவித்துள்ளது.
குழந்தைகளின் நுண்ணூட்டச் சத்துக் குறைவைப் போக்க நிதி ஒதுக்கீடு அதிகம் தேவை: ராமதாஸ்
சென்னை: நுண்ணூட்டச் சத்துக் குறைவை போக்கி ஏழைக் குழந்தைகளைக் காக்க வேண்டும்; இதற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: மராட்டிய மாநிலத்திலுள்ள தானே, நந்துர்பர், பால்கர் ஆகிய 3 மாவட்டங்களில் மட்டும் கடந்த 10 மாதங்களில் 1274 குழந்தைகள் நுண்ணூட்டச் சத்துக் குறைபாட்டால் உயிரிழந்துள்ளன என்ற செய்தியை படித்ததும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். விண்வெளி ஆராய்ச்சியிலும், ஏவுகணை மற்றும் அணுசக்தி தயாரிப்பிலும் வல்லரசாகி விட்டதாக உலக அரங்கில் இந்தியா பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், சத்து நிறைந்த உணவுக்கு வழியின்றி குழந்தைகள் உயிரிழப்பது பெரும் அவலம் ஆகும். இந்தியாவின் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றான மராட்டியத்திலேயே இந்த நிலை என்றால் மற்ற மாநிலங்களின் நிலையை எண்ணிப் பார்க்கவே அச்சமாக உள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் செயலாக்கத்தால் ஏற்பட்டுள்ள தாக்கம் பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா முழுவதும் உள்ள 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 2.30 கோடி குழந்தைகள் நுண்ணூட்டச் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. பெரிய மாநிலங்களில் பீகாரில் தான் 50% குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நுண்ணூட்டச்சத்துக் குறைபாட்டால் குறைவாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் மராட்டியம் தான். அம்மாநிலத்தில் 11% குழந்தைகள் மட்டுமே நுண்ணூட்டச் சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இத்தகைய சூழலிலேயே அங்கு இவ்வளவு அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் உயிரிழந்தால், மற்ற மாநிலங்களின் நிலை எப்படியிருக்கும் என நினைக்கவே நடுங்குகிறது. தமிழகத்தில் நுண்ணூட்டச் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கும் அளவில் இல்லாவிட்டாலும், மராட்டிய மாநிலத்தின் சராசரியான 11 விழுக்காட்டை விட அதிகமாகும். தமிழகத்தில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 18 விழுக்காட்டினர் நுண்ணூட்டச் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் தாக்கம் குறித்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இதுதவிர அண்மையில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப நல ஆய்வின் படி தமிழகத்தில் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 31 விழுக்காட்டினர் வளர்ச்சிக் குறைபாட்டாலும், 23 விழுக்காட்டினர் உடல் இளைப்பு குறைபாட்டாலும், 26 விழுக்காட்டினர் எடை குறைவாலும், 73 விழுக்காட்டினர் சத்துக்குறைவாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்திருக்கிறது. குழந்தைகள் மட்டுமின்றி, இளம் தாய்மார்களில் பலருக்கும் இந்தக் குறைபாடுகள் காணப்படுகின்றன. அண்மையில் தருமபுரியிலும், சேலத்திலும் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த நிகழ்வுகள் படம் பிடித்து காட்டுவது என்னவென்றால், தமிழகத்தில் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டோர் அளவு திருப்தியளிக்கும் நிலையில் இருக்கும் போதிலும், ஒரு சில மாவட்டங்களில் இதன் தாக்கம் மிக மோசமான அளவில் உள்ளது என்பதைத் தான். ஓர் அரசின் முதன்மையான கடமை மக்களின் நுண்ணூட்டச் சத்து, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை உயர்த்துவதும், பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதும் தான் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு விதிமுறைகளின் 47 ஆவது பிரிவில் கூறப்பட்டிருக்கும் போதிலும், தமிழக அரசு அதைச் செய்யாமல், அதற்கு நேர் எதிராக மது விற்பனை செய்வதில் தான் தீவிரம் காட்டி வருகிறது. குடும்பத் தலைவர்களில் பலர் தங்களின் வருவாயில் பெரும் பகுதியை மது அருந்துவதற்காக செலவிடுவதால், குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்க முடியாதது தான் நுண்ணூட்டச் சத்துக் குறைபாட்டுக்கான காரணங்களில் முதன்மையானது ஆகும். எனவே, தமிழகத்தில் நுண்ணூட்டச்சத்து குறைபாட்டை போக்க வேண்டுமானால், முதல் நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும். அதுமட்டுமின்றி, இளம் தாய்மார்கள், குழந்தைகளின் நுண்ணூட்டச் சத்துக் குறைபாட்டை போக்குவதற்காக தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் தாக்கம் குறித்து, ஆய்வு செய்து அவற்றை நிகழ்கால தேவைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும். இதற்கானத் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியின் அளவை பல மடங்கு உயர்த்த வேண்டும். இதன்மூலம் மராட்டியத்தில் ஏற்பட்டது போன்ற சோகம் தமிழகத்தில் நடக்காமல் தடுக்க வேண்டும்.
திண்டுக்கல் அருகே கார்-பால் டேங்கர் மோதல்: 9 பேர் பலி
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கார்-பால்டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புதிய ஹோட்டல் துவக்க விழாவிற்கு துவா செய்து திரும்பிய ஹஜ்ரத்கள் உட்பட 9 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர்கள் தமீமுல் அன்சாரி அலி, சையது இப்ராஹிம், சேலத்தைச் சேர்ந்தவர் கலீல் ரஹ்மான், பொள்ளாச்சியைச் சேர்ந்த அப்துல் சாலி உட்பட 10 பேர் நேற்று கொடைக்கானலில் ஒரு புதிய ஹோட்டல் திறந்து வைத்து துவா செய்வதற்கு காரில் புறப்பட்டுச் சென்றுள்ளனர். காரை அரவக்குறிச்சி அருகே உள்ள குமராண்டவலசு பகுதியைச் சேர்நத டிரைவர் மோகன் ஓட்டியுள்ளார்;. ஓட்டல் திறந்து வைத்து முடித்து நேற்று இரவு கொடைக்கானலில் இருந்து பள்ளப்பட்டி செல்வதற்காக காரிலேயே திரும்பியுள்ளனர். செம்பட்டி அருகேயுள்ள பாளையங்கோட்டை பிரிவு வளைவில் இவர்கள் சென்ற கார் திரும்பிய போது, எதிரே வத்தலக்குண்டு சென்று கொண்டிருந்த பால் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் பயணம் செய்த 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாயினர். தலையில் பலத்த காயம் அடைந்த ஒருவர் மதுரைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பலியான 9 பேரின் உடல்களை கைப்பற்றி திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்குக் கொண்டு சென்றனர். விபத்து குறித்து செம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
“பால்காரியின் கோரிக்கை”
“பால்காரியின் கோரிக்கை” தொகுத்தவர்-ரா.வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன். ஒரு வயதான பால்காரம்மா. கஞ்சிபுர நகர்வாசி. அவருக்கு எல்லாமே காஞ்சி மகான்தான். ஒரு தடவை பால் வியாபாரத்திற்காக அவள் ஒரு புது பசுவை வாங்கினாள். அதிகமாகப் பால்தரும் பசு அது. வாங்கின தினம். மாட்டிற்குச் செய்யவேண்டிய பூஜைகளை எல்லாம் ஒழுங்காகச் செய்த பின்னர் முதன் முதலாக அந்த மூதாட்டி பாலைக் கறந்தாள் பால் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்தது. புதிய பாத்திரத்தில் பாலை நன்றாகக் காய்ச்சி, இன்னொரு புதிய பாத்திரத்தில் ஊற்றி எடுத்துக் கொண்டு நேராக மடத்திற்கு வந்தாள்.மகானுக்குக் கொடுக்க வரிசையில் நின்ற அவளைக் கவனித்த சிப்பந்திகள் அவளை எச்சரித்தார்கள். “மகான் இதையெல்லாம் சாப்பிட மாட்டார்” என்று அவளிடம் சொன்னார்கள். அதையெல்லாம் அவள் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. தான் வணங்கும் தெய்வத்திற்கு பாலை எப்படியாவது கொடுத்துவிட வேண்டும் என்பது அவளது பிடிவாதம். மகானின் அருகில் இருந்த சங்கர மடத்து ஊழியர்களும் பேசாமலேயே சைகையில் அவளை விரட்டினார்கள். அப்போதும் அசையவில்லை. மகான் முன் வந்து பாலை வைத்தாள். மகான் அவளை நிமிர்ந்து பார்த்தார். அவள் முகத்தில் தெரிந்த பக்தி உயர்வு அவருக்குப் புரிந்தது. “வேண்டாம்” என்று கை பிசைத்த ஊழியர்களையும் ஒரு தடவை பார்த்தார். பிறகு செம்பை எடுத்துப் பாலை பருகுகிறார். பிறகு “ரொம்ப ருசியா இருக்கு” என்றார். பால்காரியின் கோரிக்கை நிறைவேற, அவள் சாஷ்டாங்கமாக விழுந்து பகவானை வணங்குகிறாள்.

