Home Blog Page 6145

புதுவை பாஜக அலுவலகம் மீது தாக்குதல்

புதுச்சேரி: சோனியா காந்தி, ராகுல் குறித்து, மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, புதுச்சேரி இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களின் ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது. இதனால், புதுச்சேரி பா,.ஜ., அலுவலகம் சூறையாடப்பட்டது. கல், முட்டை, தக்காளி ஆகியவை அலுவலகத்தை நோக்கி வீசப்பட்டது. அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இந்த வன்முறை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளை 5 இடங்களில் கர்நாடக பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம்

திருச்சி: நாளை திருவாரூர், நாகை, தஞ்சை, திருச்சி, சிதம்பரம் ஆகிய 5 இடங்களில் கர்நாடக பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெறவுள்ளதாக காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்துள்ளது. இது குறித்து காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கூறியபோது… காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசின் பட்ஜெட்டில் முதல் கட்டமாக ரூ.25 கோடி ஒதுக்கி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டின் நகல் எரிப்புப் போராட்டம் நாளை திருவாரூர், நாகை, தஞ்சை, திருச்சி, சிதம்பரம் ஆகிய 5 இடங்களில் நடைபெறுகிறது. நான் திருவாரூரில் நடைபெறும் பேராட்டத்தில் கலந்து கொள்கிறேன். இந்திய அரசியலமைப்பு பாதுகாப்பை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் உள்ளது. அதன்படி உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தினை உடனடியாக அமைக்க வேண்டும். மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஒப்புதல் பெறாமல் மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு நிதி ஒதுக்கியிருப்பது மத்திய அரசுக்குரிய அதிகார வரம்பில் ஒரு மாநில அரசு தலையிடும் செயலாகும். எனவே இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 355 ன் கீழ் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அணைகட்ட ஒதுக்கப்பட்டுள்ள நிதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில், தமிழக எம்.பிக்கள் குழு பிரதமரை சந்தித்து முறையிட்டது வரவேற்கத்தக்கது. மத்திய அரசு சட்டவிதி 355 ஐ பயன்படுத்துவதற்கு தமிழக எம்.பிக்கள் ஒரு காலக்கெடுவை நிர்ணயித்து வலியுறுத்த வேண்டும். அதன் பின்னரும் மத்திய அரசு கர்நாடகம் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழக எம்.பிக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினார்.

கென்ய பல்கலை. தாக்குதல்: மோடி கண்டனம்

கென்யாவில் மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் செய்தி….  

பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம்: மோடி, அத்வானி ஒரே மேடையில்

modi-advani-amithshaபெங்களூரு: பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று காலை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த தேசிய செயற்குழுக் கூட்டத்தில், பிரதமர் மோடி, மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். நிலம் கையகப்படுத்தும் மசோதாவினால் அரசுக்கு மிகப் பெரும் நெருக்கடி எழுந்துள்ள நிலையில் இந்தக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், இந்தக் கூட்டம் தொடங்கும் முன்னதாக, எதிர்க்கட்சிகள் செய்துவரும் மோசமான பிரசாரத்தை முறியடிக்க, இது குறித்த பிரசாரத்தை பெரிய அளவில் மேற்கொள்ளப் போவதாகக் கூறியது பாஜக. மேலும், இந்த மசோதாவில் விவசாயிகள் விரும்பும் திருத்தத்தை மேற்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும், அதற்காக விவசாயிகளுடன் பேச அரசு அழைக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பாஜக பொதுச் செயலர் பி.முரளிதர் ராவ், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மாநாட்டில், நேற்றைய வதந்திகளை முறியடிக்கும் விதமாக எல்.கே.அத்வானி கலந்துகொண்டுள்ளார். மேலும், அவர் இன்று காலை, பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் அமர்ந்திருந்தார். இந்த இரண்டு நாள் மாநாட்டில் 111 தேசிய செயற்குழு உறுபினர்களும் கலந்து கொண்டுள்ளனர். முன்னதாக தேசிய செயற்குழுக் கூட்டம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. ஜனவரியில் அடுத்த கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வருகையை ஒட்டி, மோடி தன்னை அரசு தொடர்பான பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டதால், அந்தக் கூட்டம் ஒத்திப் போடப்பட்டு, இப்போது நடைபெறுகிறது. மேலும், தில்லி தேர்தலில் பாஜக அடி வாங்கிய பிறகு நடக்கும் கூட்டமும் இதுவே. எதிர்க்கட்சிகள் அதிகம் விமர்சனங்களை எழுப்பி, மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான் பிரசாரங்கள் பலமாகியுள்ள நிலையில் கூட்டப்பட்டுள்ள கூட்டமும் இதுவே. எனவே இந்த இரு நாட்கள் கூட்டத்தில், பாஜகவின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அலசப்படும் என்று தெரிகிறது.

திருக்குறளை அரபியில் மொழிபெயர்த்த கவிஞர்!

திருவள்ளுவரால்  இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறள் அரபு மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. 03-04-15 thirukural News photo 3உலகப் பொதுமறையான திருக்குறள் இந்தியாவில் தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, குஜராத்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. விரைவில் அரபு மொழியில் திருக்குறளை வெளியிட செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதுவரை 80க்கும் மேற்பட்டோர் ஆங்கிலத்தில் திருக்குறளை மொழி பெயர்த்திருக்கின்றனர். இவற்றில் சிறந்த 18 மொழி பெயர்ப்புகளை தேர்வு செய்து தொகுத்து அதை நூலாக்கியிருக்கிறது. இந்நிலையில் சவூதி அரேபிய கலை மற்றும் கலாச்சார மையம் சார்பில் தம்மாமில் நடைபெற்ற கவிஞர்கள் மாநாட்டில் அரபு மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் வெளியிடப்பட்டது. இந்த வியத்தகு சாதனையை நிகழ்த்தியிருப்பது மதரசாவில் கல்வி பயின்ற ஜாஹிர் ஹுசைன் பாகவி.  தமிழகத்தின் கடைகோடி பகுதியிலிருக்கும் குமரி மாவட்டத்திலுள்ள தக்கலையை சார்ந்த இவர், சென்னை பல்கலைக் கழகத்தின் அரபுத்துறையின் தலைவராக பணியாற்றுகிறார். இவ்வெளியீடு குறித்து தெரிவித்த கவிஞர் ஜாஹிர் ஹுசைன் பாகவி, “திருக்குறளை அரபு உலகிற்கு அறிமுகப்படுத்திய முதல் நிகழ்ச்சி இது. நம் தாய் நாட்டுச் சொந்தங்கள், நண்பர்கள் அதிக அதிக அளவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். அரபுக் கவிஞர்கள் வள்ளுவரின் வார்த்தைகளை மெய்மறந்து ரசித்தார்கள். இது ஓர் அற்புதமான அனுபவம்” என்று கூறியுள்ளார். 03-04-15 thirukural News photo 2 03-04-15 thirukural News photo

தற்கொலை செய்ய இணையத்தில் வழி தேடிய ஜெர்மன்விங்ஸ் துணை விமானி

german-airways பெர்லின்: அண்மையில் பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் விபத்துக்கு உள்ளான ஜெர்மன்விங்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தின் துணை விமானி வேண்டும் என்றே விமானத்தை விபத்துக்கு உள்ளாக்கினார் என்று கூறப்படும் நிலையில், அவர் குறித்து வெளியான அண்மைத் தகவல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஜெர்மன்விங்ஸ் விமானம் ஆல்ப்ஸ் மலையின் உச்சியில் மோதி விபத்துக்கு உள்ளானதில், விமானத்தில் இருந்த 152 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள், துணை விமானி ஆண்ட்ரூஸ் லுபிட்ஸ் வீட்டில் இருந்து அவரது கணினியை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது, அவர் தற்கொலை செய்து கொள்வதற்கான வழி முறைகளை இணையத்தில் தேடி இருப்பது தெரியவந்தது. மேலும், அது குறித்து விதமான இணைய தளங்களுக்குச் சென்று அவர் பார்த்திருப்பதும், விமானிகள் அறைக் கதவின் பாதுகாப்பு குறித்தும் அவர் இணையத்தில் தேடியுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதன் மூலம், அவர் கடும் மன அழுத்தத்தில் சிக்கியிருந்தார் என்றும், அவருக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் தொடர்பில்லை என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. விமானம் புறப்பட்ட 32வது நிமிடத்தில் விமானி வெளியே சென்று, மீண்டும் காக்பிட் அறைக்கு வந்தபோது, அந்தக் கதவைப் பூட்டிய துணை விமானி அதைத் திறக்கவில்லை என்பதும், அப்போது, ஒரு மலை முகட்டின் விமானத்தின் இடதுபுற இறக்கை மோதி விமானம் அதிர்ச்சிக்கு உள்ளானதும், தொடர்ந்து விமானம் மோதிச் சிதறியதும் ஒரு விடியோ உரையாடல் பதிவில் இடம்பெற்றிருந்தது.

சஸ்பெண்ட் ஆன தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் விடுதி, அலுவலகங்களுக்கு பூட்டு

சென்னை: பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட தேமுதிக எம்.எல்.ஏ.க்களின் விடுதி அலுவலகங்களுக்கு பூட்டு போட்டப்பட்டது. சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நடந்த விவாதத்தின் போது முன்னாள் முதல்வர் பற்றி தேமுதிக எதிர்க்கட்சி துணைத்தலைவர் அழகாபுரம் மோகன்ராஜ் விமர்சித்தார். அப்போது ஏற்பட்ட அமளியில் தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினர்களில் சிலர் பேரவைத் தலைவரை முற்றுகையிட்டனர். அப்போது அவைக் காவலர்களுடன் மோதல் ஏற்பட்டது. இதில் காவலர்கள் காயம் அடைந்தனர். இதனால் தேமுதிக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த விவகாரம் அவை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பப்பட்டது. இந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில், தேமுதிகவைச் சேர்ந்த வி.சி. சந்திரகுமார், அழகாபுரம் மோகன்ராஜ், சி.எச்.சேகர், வெங்கடேசன், தினகரன், பார்த்திபன் ஆகிய ஆறு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் அடுத்த கூட்டத்தொடரின் 10 நாட்கள் வரை இடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்தக் காலத்தில் அவர்கள் எம்.எல்.ஏ. என்ற முறையில் எந்தவிதமான ஆதாயத்தையும், ஊதியத்தையும், சலுகைகளையும் தகுதிகளையும் பெற முடியாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பேரவைத் தலைவர் தனபால் உத்தரவை செயல்படுத்தும் நடவடிக்கையில் சட்டப்பேரவை செயலகம் ஈடுபட்டுள்ளது. அதன்படி, சென்னை அரசினர் தோட்டத்தில் பேரவை உறுப்பினர்கள் விடுதியில் உள்ள 6 தேமுதிக பேரவை உறுப்பினர்களின் வீடுகளையும் காலி செய்யும்படி கூறினார். அதன் பிறகு இப்போது அந்த வீடுகளுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. இதேபோன்று அவரவர் தொகுதியில் உள்ள அலுவலகங்களுக்கும் பூட்டு போடப்பட்டுள்ளது. இதனால் 6 சட்டப் பேரவை உறுப்பினர்களும் விடுதி அறை மற்றும் அலுவலகங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கென்ய பல்கலையில் தாக்குதல்: சோனியா கண்டனம்

புது தில்லி: கென்ய பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 147 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற பயங்கரவாதத் தாக்குதல்களை யாரும் நியாயப்படுத்த முடியாது. கல்வி பயிலும் இடத்தில், அப்பாவி மாணவ, மாணவியர் மீது மனிதாபிமானமற்ற அமைப்பு இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளது. இது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்று சோனியா தெரிவித்துள்ளார்.

எல்லை தாண்டி மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதியில்லை: சிறீசேன

கொழும்பு: இலங்கை கடல் பகுதியில் எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதி இல்லை என இலங்கை அதிபர் மைத்ரீபால சிறீசேனா தெரிவித்துள்ளார். கொழும்பில் சிறிசேனா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களை, அவர்களது படகுகளுடன் சிறை பிடிக்கும்படி கடற்படையினருக்கு சிறீசேன உத்தரவிட்டதாக கூட்டத்தில் பங்கேற்ற மன்னார் மாவட்ட மீனவர் சம்மேளனத் தலைவர் ஜஸ்டின் சொய்சா தெரிவித்தார். அண்மையில் சென்னையில் நடைபெற்ற மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையின் போது, ஆண்டு ஒன்றுக்கு 83 நாட்கள் இலங்கைக் கடற்பரப்பினுள் வந்து மீன்பிடிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரியிருந்தனர். இந்நிலையில், இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

செல்போன் திருடிய இளைஞரின் கை எரிப்பு: விரல்களை பாதுகாக்க மருத்துவர்கள் முயற்சி

சென்னை: .தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த, வேலவெள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கிருஷ்ணன் எனபவரின் மகன் பவுன்ராஜ் 18. மூளை வளர்ச்சி குன்றியவர். இவர் செல்போன் ஒன்றைத் திருட முயன்றதாகக் கூறி அவரை மரத்தில் கட்டி வைத்து, அடித்து, அவரது கையை 3 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் ஊற்றி எரித்ததாம். இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பவுன்ராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனது மகன் பவுன்ராஜ் மூளை வளர்ச்சி குன்றியவர் என்றார் அவரது தந்தை. பவுன்ராஜின் தீக்காயத்தை ஆற்றுவதற்காக தொடர் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்ட ஆள்காட்டி விரலை அறுவை சிகிச்சை மூலம் வெட்டி எடுத்துள்ளனர். மேலும் விரல்கள் பாதிக்கப்படா வண்ணம் தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. தீக்காய சிகிச்சைப் பிரிவு தலைவர் நிர்மலா பொன்னம்பலம் கூறுகையில், ”பவுன்ராஜ் காய்ச்சல் குறைந்து, குணமாகி வருகிறார். கையில் தீப்புண்ணும் ஆறி வருகிறது. ரத்த ஓட்டம் இல்லாததால், விரல்கள் செயலிழந்து உள்ளன. தொற்று பாதிப்பால் ஆள் காட்டி விரலை அகற்றி உள்ளோம், மற்ற விரல்களை பாதுகாக்க முயற்சித்து வருகிறோம்” என்றார்.