வேலுர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இன்று நடைப்பெற்ற உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என கூறி தனது நாக்கை துண்டித்து வேடியப்பன் சாமிக்கு காணிக்கை செலுத்தி கிரிகெட் ரசிகர் ஒருவர் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வாணியம்பாடி அடுத்த மிட்னாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றிவருகிறார்.
இந்நிலையில் இன்று இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி நடைபெற்றதை யொட்டி சுதாகர் வேலைக்கு செல்லாமல், பொன்னேரியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்க்கு சென்று தொலைகாட்சியில் கிரிகெட்டை பார்க்க முடிவு செய்துள்ளார். அங்கு சென்ற அவர், இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா வெற்றியடைய வேண்டும் என்பதற்க்காக பாட்டி வீட்டின் அருகே உள்ள வேடியப்பன் கோவிலுக்கு கத்தியுடன் சென்று தனது நாக்கை வெட்டி வேடியப்பனிடம் வைத்து போட்டியில் இந்தியா வெற்றிபெற வேண்டும் என்று வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் அவர் வாயில் ரத்ததுடன் வருவதை பார்த்து அவரது உறவினர்கள் உடனடியாக வேலூர் தலைமை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து அனுமதித்தனர். தற்போது அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்திய அணி வெற்றிபெற நாக்கை அறுத்த ரசிகர்
லீ குவான் யூ உடலுக்கு அஞ்சலி செலுத்த சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் அலுவலகம் அனுமதி மறுப்பு
புது தில்லி: திங்கள் அன்று மரணமடைந்த சிங்கப்பூரின் தந்தை என்று அழைக்கப்பட்டவரும் முன்னாள் பிரதமருமான லீ குவான் யூ உடலுக்கு அஞ்சலி செலுத்த சிங்கப்பூர் செல்வதற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் அலுவலகம் அனுமதி மறுத்துள்ளது. லீயின் உடல் அடக்கம் மார்ச் 29 ஆம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக, லீ குவான் யூ உடலுக்கு அஞ்சலி செலுத்த சந்திரபாபு நாயுடு புதன் கிழமை இரவு சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டார். மாநில முதல்வர் வெளிநாடு செல்ல வேண்டும் எனில் மத்திய வெளியுறவுத் துறையிடம் அனுமதி பெறவேண்டும். அதன்படி, ஆந்திர அரசு அனுமதி கோரி கடிதம் அனுப்பியது. அந்தக் கடிதம் பிரதமர் அலுவலகத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் சந்திரபாபு நாயுடு சிங்கப்பூர் செல்ல பிரதமர் அலுவலகம் அனுமதி மறுத்து விட்டது. லீ குவான் யூ உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி சிங்கப்பூர் செல்ல இருக்கிறார். நாட்டின் பிரதமர் செல்வதற்கு முன்பாக அரசு சார்பில் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. பிரதமர் அனுமதி அளித்தால் நீங்கள் பிரதமர் மோடியுடன் சிங்கப்பூர் செல்லலாம்’’ என்று பிரதமர் அலுவலகச் செயலாளர் பதில் அனுப்பியுள்ளார். இதனால் சந்திரபாபு நாயுடுவின் சிங்கப்பூர் பயண திட்டம் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் அவர் பிரதமர் மோடியுடன் சிங்கப்பூருக்குச் செல்வாரா? என்பது குறித்து தகவல் இல்லை. மேலும், உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இந்தக் காரணத்தால் சிங்கப்பூருக்கு வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். எனவே உலக தலைவர்கள் மற்றும் அரசு பிரதிநிதிகள் தவிர வேறு யாருக்கும் சிறப்பு அனுமதி வழங்க முடியாது என்று சிங்கப்பூர் அரசு முன்னர் தெரிவித்திருந்தது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு
சென்னை : தங்கம் விலை வியாழக்கிழமை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வௌ்ளி சந்தையில் மாலை நிலவரப்படி 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,542-க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.20,336-க்கும், 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.540 உயர்ந்து ரூ.27,190-க்கும் விற்பனையானது. வௌ்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் சில்லரை வௌ்ளியின் விலை 90 காசு உயர்ந்து ரூ.41.80-க்கும், பார் வௌ்ளி கிலோவுக்கு ரூ.890 உயர்ந்து ரூ.39,100-க்கும் விற்பனையாகிறது.
நைஜீரியா: 500 பேரைக் கடத்தியது போகோ ஹராம்!
டமாஸாக்: நைஜீரியா நாட்டில்,பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வரும் போகோ ஹராம் அமைப்பு, அங்கே தொடர்ந்து அரசுக்கு எதிராக பல்வேறு வன்முறைகளை நிகழ்த்தி வருகின்றனர். பெண்கள் குழந்தைகள் என பலரை ஆயுத முனையில் கடத்திச் சென்று விடுகின்றனர். இந்நிலையில் நைஜீரியாவின் டமாஸாக் நகருக்குள் செவ்வாய்க்கிழமை புகுந்த போகோ ஹராம் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 50 பேர் பலியாயினர். அதன் பின்னர் இளம்பெண்கள், குழந்தைகள் சிறுவர் சிறுமியர் என சுமார் 500 பேரை அவர்கள் கடத்திச் சென்றனர். இது குறித்து, அரசின் செய்தித் தொடர்பாளர் மைக் ஒமேரி, இந்த எண்ணிக்கை குறைவாகவும் இருக்கலாம், ஆனால் துல்லியமாக எத்தனை பேர் கடத்தப் பட்டனர் என்று தெரியவில்லை என்றார். இந்தப் பகுதியை இந்த மார்ச் மாதத் துவக்கத்தில்தான், நைஜர் மற்றும் சாத் ராணுவத்தினர் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டனர். மீண்டும் பயங்கரவாதிகள் இப்பகுதியினரைக் கடத்திச்சென்றுள்ளனர். போர்னோ மாநிலத்தில் நைஜர் எல்லையில் அப்பகுதியின் முக்கிய நகரான மைடுகுரியில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த டமாஸாக் நகரம். கடத்தப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
நியூட்ரினோ ஆய்வு மையம்: மத்திய அரசு திரும்பப்பெற உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை: மத்திய அரசு மேற்கொண்டுள்ள நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்தைத் திரும்பப் பெறுமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவு பிறப்பித்தது. தேனி மாவட்டம் பொட்டிப்புரத்தில் ஐ.என்.ஓ., எனப்படும் இந்திய நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு முயற்சி செய்து வந்தது. இதற்கு தமிழ்நாடு அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற்று வருமாறு மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, நியூட்ரினோ ஆய்வு மையத்தால், சுற்றுச் சூழல் பாதிக்கப்படும், தேனி மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், எனவே மத்திய அரசு இந்த முயற்சியை திரும்பப் பெற வேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், விஎஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு இது குறித்து இன்று உத்தரவு வழங்கியபோது, தமிழ்நாடு மாசு கட்டுப் பாட்டு வாரியமும், மத்திய அரசும் அளித்த பதிலில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்த திட்டத்தை தொடங்குவதற்கான அனுமதி கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதை வைத்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் முறையான அனுமதி பெற்றுக் கொள்ளும் வரை மத்திய அரசு இந்தத் திட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது.
இன்னும் சிறப்பாகப் பந்து வீசியிருக்கலாம்: தோனி
இன்றைய உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி ஆஸ்திரெலிய அணியிடம் 95 ரன் வித்தியாசத்தில் தோற்றது. ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 328 ரன் என்ற இலக்கை இந்திய அணி பேட்ஸ்மென்களால் எட்ட இயலவில்லை. இந்நிலையில் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த இந்திய கேப்டன் தோனி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு அதிக ரன்கள் விட்டுக் கொடுத்திருக்கக் கூடாது. இந்திய பந்துவீச்சாளர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். இன்னும் சிறப்பாக பந்து வீசியிருக்க வேண்டும் என்று கூறினார். மேலும், தாம் இப்போதைக்கு ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை என்றும் கூறினார்.
சோனியா மருமகனுக்கு விதிகளை மீறிய சலுகை: முந்தைய ஹரியானா அரசு தாராளம்
சண்டிகர்: சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு விதிகளை மீறி சலுகை காட்டியதாக முந்தைய ஹரியானா அரசுக்கு கணக்குத் தணிக்கை அமைப்பு சிஏஜி அறிக்கை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின் போது அக்கட்சித் தலைவர் சோனியா காந்தியின் மருமகனான ராபர்ட் வதேராவுக்கு முறைகேடான வகையில் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது என்றும், ஹரியானா அரசுக்கு சிஏஜி கண்டனம் தெரிவித்துள்ளது. 2013-14-ஆம் ஆண்டுக்கான கணக்குத் தணிக்கை அறிக்கை, ஹரியானா மாநில சட்டமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஸ்கைலைன் ஹாஸ்பிடாலிட்டி உள்ளிட்ட 5 நிறுவனங்களுக்கு முறைகேடான வழிகளில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்கைலைன் நிறுவனம் வதேராவுக்குச் சொந்தமானது. அரசு நிலத்தை விற்பனை செய்து தருவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ளும்போது, நிலத்தின் மதிப்பில் 15 சதவீதத்துக்கும் மேல் கிடைக்கும் நிகர லாபத்தை அரசுக் கருவூலத்திலேயே ஒப்படைக்க வேண்டும் என்ற விதிமுறையை ஹரியாணா அரசு கொண்டு வரவில்லை. இந்த விதியை மீறி, நிலங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, மிக அதிக லாபத்தில் விற்று ஒப்பந்ததாரர்கள் பயனடைந்தனர். ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்குப் பெரிய விலைக்கு விற்று ஆதாயம் அடைந்துள்ளனர். குர்கான் மாவட்டத்தில் மிக முக்கியமான இடத்தில் இருந்த 3.5 ஏக்கர் நிலத்தை ஸ்கைலைன் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம், டி.எல்.எஃப் நிறுவனத்துக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு ரூ.58 கோடிக்கு விற்பனை செய்தது. ஆனால், வெறும் ரூ.7.5 கோடிக்கு ஹரியானா அரசிடம் அந்த நிலத்தை வாங்கி, அதனை ரூ.58 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர். இதன் மூலம் ஸ்கைலைன் நிறுவனத்துக்கு ரூ.50.5 கோடி லாபம் கிடைத்துள்ளது. மிகக் குறுகிய காலத்தில் இதுபோல விற்பனை செய்து மொத்தமாக ரூ. 267.47 கோடி வரை ஆதாயம் ஈட்டியுள்ளனர். ஆனால் நகராட்சி நிர்வாகத்துக்குச் செலுத்த வேண்டிய வரியை உரிய முறையில் செலுத்தாமல் விட்டுள்ளனர்… என்று சிஏஜி அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் வதேராவின் நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தை டி.எல்.எஃப் நிறுவனத்துக்கு விற்பனை செய்ததில் எந்த விதிமீறலும் இல்லை என்று முந்தைய காங்கிரஸ் அரசு கூறியிருந்தது. இந்நிலையில், சிஏஜி அறிக்கையில் வதேராவுக்குச் சொந்தமான நிறுவனத்தின் மீது மோசடி புகார் கூறப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை: இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா
உலகக் கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியன் இந்திய அணியை ஆஸ்திரேலியா 95 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 328 ரன் குவித்தது. பின்னர் 329 ரன் என்ற இலக்குடன் ஆடத் துவங்கிய இந்திய அணி, 46.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 233 ரன் மட்டுமே எடுத்தது. இதை அடுத்து, ஆஸ்திரெலிய அணி 95 ரன் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா மோதுகிறது.
உலகக் கோப்பையை வெட்டோரிக்கு சமர்ப்பணம் செய்வோம்: மெக்கலம்
உலகக் கோப்பையை வென்று எங்கள் சுழல் மன்னன் வெட்டோரிக்கு சமர்ப்பணம் செய்வோம் என்று கூறியுள்ளார் நியூசிலாந்து கேப்டன் மெக்கலம். நியூசிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் வெட்டோரி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரை இறுதிப்போட்டியில் கடைசி ஓவரில் பவுண்டரி அடித்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார். இந்நிலையில் இந்த உலகக் கோப்பைத் தொடருடன் வெட்டோரி ஓய்வு பெறப் போவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் மெக்கல்லம் கூறும்போது அணியின் வெற்றிக்காக வெட்டோரி பல விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனவே உலகக் கோப்பையை வென்று அவருக்கு சமர்ப்பணம் செய்வோம். வெட்டோரியின் கடைசி ஆட்டம் மிகக் கோலாகலமாக இருக்க வேண்டும். முதல் முறையாக வெட்டோரி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்கிறார் என்பது சிறப்பு என்றார்.

