சென்னை: தமிழக அரசின் 2015-2016 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கை, வளர்ச்சிக்கு உதவாத, கடனில் மூழ்கடிக்கும் வெற்று அறிக்கை என்று கூறியுள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ். அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டப்பேரவையில் 2015&16 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை முதலமைச்சரும், நிதிநிலை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருக்கிறார். நிதிநிலை அறிக்கையைக் கூட ஜெயலலிதாவின் புகழ்பாடும் அறிக்கையாக மாற்ற முடியும் என்பதை அவர் நிரூபித்திருக்கிறார். ‘அம்மா’ இருந்தால் போதும் வேறு எதுவும் தேவையில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் நினைத்ததாலோ என்னவோ, இந்த நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்கள் ஒன்று கூட அறிவிக்கப்படவில்லை. தமிழகத்தை கடுமையாக பாதிக்கக்கூடிய விவசாயம், தொழில் உற்பத்தி, மின்வெட்டு, வறுமை, வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண எந்த அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவில்லை. தமிழகத்தில் சுமார் 85 லட்சம் இளைஞர்கள் படித்து விட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கிறார்கள். தமிழக அரசுத் துறைகளில் சுமார் 5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இத்தகைய சூழலில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. வழக்கம் போல் இரண்டு லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என்று மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. புதிய மின்திட்டங்களையும் அறிவிக்காமல், அறிவிக்கப்பட்ட மின் திட்டங்களையும் செயல்படுத்தாமல் மின்வெட்டைப் போக்கப் போவதாக ‘வெறும் கையால் முழம் போடும்’ வேலையைத் தான் அரசு செய்திருக்கிறது. ஊழலை ஒழிப்பதற்காக லோக் அயுக்தாவை ஏற்படுத்தவும், சேவை பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், அதற்கான எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. ஒரு மாநிலம் வளர்ச்சியடைய விவசாயம், கல்வி, சுகாதாரம் ஆகிய 3 துறைகளும் செழிக்க வேண்டியது அவசியம் ஆகும். சுகாதாரத்துறைக்கு மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2 % அதாவது சுமார் ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வெறும் ரூ.8245 கோடி (0.8%) மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 62,000 கோடி ஒதுக்குவதற்கு பதிலாக ரூ.20,936 கோடி (2.04%) மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. முதன்மைத் துறையான வேளாண்துறைக்கு ரூ.6613 கோடி (0.65%) மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான 3 துறைகளுக்கும் மொத்தமாக ரூ.35,794 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இதைவிட 70 % அதிகமாக இலவசங்கள் மற்றும் மானியங்களுக்கு ரூ. 59,185 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்தே தமிழக அரசு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தருகிறதா…. அல்லது இலவசங்களுக்கு முக்கியத்துவம் தருகிறதா? என்பதை உணர்ந்து கொள்ளலாம். தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டம் 2023&ல் அறிவிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்த ரூ.15 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட வேண்டும். திட்டம் அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை 5 விழுக்காடு அளவுக்குக் கூட நிதி ஒதுக்கப்படவில்லை. இதற்கெல்லாம் மேலாக தமிழக அரசின் நிதிநிலை மிக மோசமான நிலையில் இருப்பதை இந்த நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது. 2014&15 ஆம் ஆண்டில் தமிழக அரசின் மொத்த வரி வருவாய் ரூ. 91,835 கோடியாக இருக்க வேண்டும்; ஆனால், இது 85,772 கோடியாக குறைந்து விட்டது. வணிக வரி வருவாய் ரூ.68,724 கோடி என்ற இலக்கை எட்ட முடியாமல் ரூ.65 ஆயிரம் கோடிக்கும் கீழ் குறைந்து விட்டது. முத்திரைத் தாள் வருவாய் ரூ. 10,470 கோடி என்ற இலக்கை விட குறைவாக ரூ.9,330 கோடி என்ற அளவில் தான் உள்ளது. மோட்டார் வாகன வரி வருவாயும் ரூ.8083 கோடி என்ற இலக்கில் பாதியாக, அதாவது ரூ.4279 கோடியாக குறைந்து விட்டது. அதேநேரத்தில் அரசின் செலவுகள் மட்டும் கணிக்கப் பட்டதை விட அதிகமாக ரூ. 1.37 லட்சம் கோடியாக அதிகரித்து விட்டது. தமிழக அரசின் நிதி நிர்வாகம் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது. தமிழ்நாட்டில் வளர்ச்சியை எட்டியுள்ள ஒரே விஷயம் மது விற்பனை தான். மற்ற அனைத்து வரிகளும் இலக்கை எட்ட முடியாத நிலையில் ஆயத்தீர்வை வருவாய் மட்டும் ரூ.6,483 கோடி என்ற இலக்கைத் தாண்டியிருக்கிறது. அதுமட்டுமின்றி, மதுவிற்பனை வருவாயும் கிட்டத்தட்ட இலக்கைத் தொட்டு ரூ.26,188 கோடி என்ற அளவை எட்டியுள்ளது. மேலும் 2015&16ஆம் ஆண்டில் ரூ.29,627 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்திருப்பது தான் அ.தி.மு.க. அரசின் சாதனையாகும். 2015&16 ஆம் ஆண்டில் தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை ரூ. 28,578 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், அது ரூ.31,829 கோடியாக அதிகரித்திருக்கிறது. இதை சமாளிக்க ரூ.30,446 கோடி கடன் வாங்க அரசு முடிவு செய்திருப்பதால் நடப்பாண்டின் இறுதியில் தமிழக அரசின் நேரடி கடன் சுமை ரூ.2,11,483 கோடியாகவும், மொத்த கடன் சுமை ரூ.4,12,500 கோடியாகவும் இருக்கும். இது ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்ததை விட ரூ.5,000 கோடி அதிகம் ஆகும். அரசின் நேரடிக் கடனுக்கான வட்டியாக மட்டும் ஆண்டுக்கு ரூ.17,856 கோடியை தமிழக அரசு செலுத்த விருக்கிறது. தமிழக அரசு வாங்கிக் குவிக்கும் கடன் காரணமாக தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் தலையிலும் ரூ.57,053 கடன் சுமத்தப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால் அக்குடும்பத்தின் கடன் சுமை ரூ. ரூ.2.85 லட்சமாக இருக்கும். நம்பி வாக்களித்த மக்களுக்கு அ.தி.மு.க. அரசு செய்த கைம்மாறு மாநிலத்தையும், மக்களையும் மீளமுடியாத கடன் வெள்ளத்தில் மூழ்கடித்தது தான். மக்களுக்காக சில சலுகைகளை அறிவிக்க வேண்டும் என்பதற்காக கொசுவலை, எல்.இ.டி பல்பு உள்ளிட்ட சில பொருட்களுக்கு வரிச்சலுகைகளை அறிவித்திருக்கிறார்.இது மொத்த பட்ஜெட் மதிப்பில் 0.40 விழுக்காட்டிற்கும் குறைவாகும். மொத்தத்தில் இந்த நிதி நிலை அறிக்கை வளர்ச்சிக்கு உதவாத, தொழில் வளர்ச்சியை பெருக்காத, வேலைவாய்ப்பை உருவாக்காத, பொருளாதாரத்தை அதல பாதாளத்தில் தள்ளக்கூடிய, தமிழக மக்களை கடனாளியாக்கும் வெற்று வரவு& செலவு காகித அறிக்கை ஆகும்.
இந்திய வீரர்களைச் சீண்டி வம்பிழுப்பேன்: ஆட்டத்தில் ’த்ரில்’ வேண்டும் என்கிறார் மிச்சல் ஜான்சன்
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர்களைச் சீண்டி அவர்களிடம் வம்பிழுப்பேன் என்று ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் மிச்சல் ஜான்சன் கூறியுள்ளார். எப்போதுமே முக்கியமான போட்டிகளில் எதிரணியைச் சீண்டி, அவர்களை மன ரீதியாக நிலைகுலைய வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது ஆஸ்திரேலிய அணி. அந்த அணிக்கு இது ஒன்றும் புதிதல்லதான்! அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய முத்தரப்பு போட்டிகளில் மிட்செல் ஜான்சன், இந்திய வீரர் ரோஹித் சர்மாவை வம்புக்கு இழுத்தார். இதன் பின்னர் சக வீரர் டேவிட் வார்னரும் தகராறில் ஈடுபட்டார். ரோஹித் சர்மாவிடம், இங்க்லீஷில் பேசுங்கள் என்று வார்னர் நக்கலடித்ததாகவும், அதனால் வார்த்தைத் தகராறு முற்றி, நடுவர் வந்து தலையிட்டு, வார்னருக்கு அபராதம் விதிக்கப்பட்டதும் நடந்தது. இந்நிலையில் நாளை சிட்னியில் நடைபெறவுள்ள போட்டியில் இந்திய வீரர்களை வம்புக்கு இழுத்து சீண்டப் போவதாக மிட்செல் ஜான்சன் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸ் மற்றும் வாட்சன் இடையே நடந்த ஸ்லெட்ஜிங் பிரச்னை ஆட்டத்தையே சுவாரஸ்யமாக மாற்றியது. அதுபோன்ற ஆட்டத்தையே நான் விரும்புகிறேன். விளையாட்டில், இதுபோல ஸ்லெட்ஜிங் செய்வது சகஜமானது. அப்போதுதான், விளையாட்டில் ஒரு திரில் இருக்கும். இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், இதுபோன்ற சுவாரசியத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம். ஒருவேளை இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வார்னர் எதுவும் பேசாமல் இருந்தாலும், நான் சீண்டத்தான் போகிறேன். ஸ்லெட்ஜிங் செய்யும் முதல் ஆளாக நான் இருப்பேன் என்று கூறியுள்ளார்.
ராகுலைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் பரிசு: அமேதி தொகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்!
காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தியை காணவில்லை; அவரை கண்டுபிடித்துக் கொடுத்தால் பரிசு என்று அவரது அமேதி தொகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைக் காலமாக ராகுல் காந்தியைக் காணவில்லை என்று செய்திகள் வெளிவருவது வழக்கமாகிவிட்டது. அதற்கு பதிலளிக்கும்வண்ணம், அவர் வருவார் வருவார் என காங்கிரஸ் தலைவர்கள் விளக்கம் அளிப்பதும் வழக்கமாகி விட்டது. இந்நிலையில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமேதி தொகுதி மக்கள், ராகுல் காந்தியைக் காணவில்லை, அவரைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் பரிசு என்ற போஸ்டர்களை தொகுதி முழுவதும் ஒட்டியுள்ளனர். அமேதி தொகுதி மட்டுமல்லாது உத்தரப் பிரதேசத்தில் பல பகுதிகளிலும் இது போன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அவற்றில், ‘தலைவர் இல்லாத அமேதி’ என்ற தலைப்புடன் இந்தி திரைப்பட பாடல் ஒன்றும் காணப்படுகிறது. மேலும், அமேதியில் சாலைகள் மோசமாக உள்ளன என்றும், மட்டமான சுகாதார சேவைகள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் எழுதி, இப்படிக்கு அமேதி மக்கள் என்று கீழே இறுதியாகக் கூறப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் முன்னர் ஒட்டப்பட்ட போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரே இந்தில் ஈடுபட்டார் என்ற காரணம் காட்டி அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், இவ்வாறு ஒட்டப் பட்டுள்ள போஸ்டர்கள் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளன.
வினாத்தாள் வெளியானதால் மறுதேர்வு தேவை: மாணவி தொடர்ந்தார் வழக்கு
சென்னை : தற்போது நடந்து வரும் ப்ளஸ் 2 பொதுத் தேர்வில், கணிதத் தேர்வு வினாத்தாள் வாட்ஸ்அப்பில் வெளியானது. ஆசிரியர் சிலர் அந்த வினாத்தாளை உலவ விட்டதால், கணிதத் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என மாணவி ஒருவரின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கரடி தாக்கிய மேலும் ஒருவர் மரணம்: இன்னொரு கரடியைப் பிடிக்க தீவிரம்
உதகை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்தில் கரடி தாக்கியதில், மாதி என்ற பெண் உயிரிழந்தார். அவரைக் காப்பாற்றச் சென்ற அவரது கணவர் ஹாலன் கரடியால் மோசமாகத் தாக்கப்பட்டார். படுகாயம் அடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனால் கரடி தாக்கி கணவன் – மனைவி இருவருமே உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து, அந்த ஆட்கொல்லி கரடியைப் பிடிக்க, வனத்துறை மயக்க ஊசியுடன் தேடியது. ஆனால், மயக்க ஊசிக்கு கரடி அகப்படாமல் தப்பியதால், கரடி நேற்று சுட்டுக் கொல்லப்பட்டது. இதனிடையே அந்தக் கரடி உலவிய கோத்தகிரி தேயிலைத் தோட்டப் பகுதியில் மேலும் ஒரு பெண் கரடி உலவுவதாக கிராமத்தினர் தகவல் தெரிவித்தனர். அதனைப் பிடித்து வெளியே கொண்டு செல்ல தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. இதை அடுத்து, கரடியை உயிரோடு பிடிக்க 3 இடங்களில் வனத்துறையினர் கூண்டுகளை வைத்துள்ளனர். இருப்பினும் கரடி இன்னும் அவற்றில் அகப்படவில்லை. இதனால் கோத்தகிரி – குன்னூர் சாலையில் பொதுமக்கள் பயத்துடனேயே நடமாடுகின்றனர்.
பெரிய போட்டிகளில் எப்படி விளையாடுவது என்று தெரியும்: ரோஹித் சர்மா
உலகக் கோப்பை கிரிக்கெட்டில், வியாழக்கிழமை நாளை இந்திய அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் அரையிறுதிப் போட்டி சவால் காத்திருக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற இரு அணிகளுமே முனைப்புடன் உள்ளன. மிகவும் புகழ்பெற்ற பழைமையான சிட்னி மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுவதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்று புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா, நிச்சயம் நாங்கள் வெல்வோம். அதில் என்ன சந்தேகம். அதில் கேள்வியே வேண்டாம். மிகப் பெரிய போட்டிகளை எப்படி ஆடுவது என்பது எங்களுக்குத் தெரியும். அந்தப் போட்டியில், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பெரிய பங்கு இருக்கிறது. நிச்சயமாக, துவக்க ஆட்டக்காரர்களுக்கும் பெரும் பொறுப்பு உள்ளது என்றார். ஆஸ்திரேலியாவுடனான ஆட்டத்தில் துவகத்தில் இருந்தே மிகச் சிறந்த ரன்ரேட் வேண்டும் என்று அணி எதிர்பார்க்கிறது. ஷிகர் தவானும், ரோஹித்தும் இணைந்து, அதிரடி காட்டினால் ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா 5வது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. அதுவும் இந்தியாவை வென்று, அவர்களின் மிகச் சிறந்த உள்ளூர் போட்டியாளரான நியூசிலாந்தை வெல்லும் முனைப்பில் உள்ளனர். இந்நிலையில், ஆடுகளத்தைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. எந்த விதமான ஆடுகளச் சூழலிலும் நாங்கள் ஆடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார் ரோஹித் சர்மா. இந்தப் போட்டித் தொடரில், இதுவரை நாம் 7 போட்டிகளில் 70 விக்கெட்களை எடுத்துள்ளோம். எப்படி எதிரணியை ஆட்டமிழக்கச் செய்வது என்பது அணிக்குத் தெரியும். எனவே எது தேவை என்பதும் அணிக்கு தெரியும் என்றார் ரோஹித். முன்னதாக, முத்தரப்பு தொடரில், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னருக்கும் ரோஹித்துக்கும் வார்த்தை மோதல் வெடித்தது நினைவிருக்கலாம். அப்போது ஆட்டத்தைத் துவக்கி விளையாடிக் கொண்டிருந்த ரோஹித்திடம் வார்னர் ஆங்கிலத்தில் பேசுமாறு கூறினார். இதனால் இருவருக்கும் வார்த்தை மோதல் வெடித்தது. நடுவர் தீர்த்து வைத்து வார்னருக்கு அபராதம் விதித்தார்.
ஆஞ்சநேயன் வந்தான்
சிருங்கேரியில் ஒரு வெள்ளிக்கிழமை அன்று ஜகத்குரு அபிநவ வித்யாதீர்த்த மஹா சந்நிதானம், தனது நித்திய பூஜைக்குப் பிறகு பிக்ஷை முடித்த பின், ஏகாந்தமாக அமர்ந்து மடத்துச் சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். திருநெல்வேலி, மதுரை. ராமநாதபுரம் ஊர்களில் வேதபாடசாலைகளில் படிக்கும் மாணவர்கள் பலர் சிருங்கேரி வந்து சாரதாம்பாளையும் ஜகத்குருவையும் தரிசிக்க வந்திருந்தனர். அவர்களைச் சில நாட்கள் தங்கிப் போகும்படி, ஸ்வாமிகள் கட்டளை இட்டிருந்தார். அந்த மாணவர்களும் ஸ்வாமிகளது உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தனர். பிரவசன (ஆன்மிக விளக்க உரை) உபன்யாசகர்களைப் பற்றி பேச்சு. மதுரை தல்லாகுளம் வேத பாட சாலையைச் சேர்ந்த சங்கர சுப்பிரமணியன் எழுந்து, ஜகத்குருவை நமஸ்கரித்து ”இந்த பிரவசனம் பற்றி மனசுல உள்ள ஒரு விஷயத்தை, குருநாதர்கிட்ட விக்ஞாபனம் (வேண்டுகோள்) பண்ணிக்க ஆசைப்படறேன்” என்றான். ஆச்சார்யாள், ”என்னது? சொல்லேன்!” எனப் பணித்தார். வேற ஒண்ணுமில்லே குருநாதா! இப்பல்லாம் கதா பிரவசனம் பண்ற சில உபன்யாசகர்கள், சாராம்சத்தை விட்டுட்டு, இதர விஷயங்களைத்தான் நிறைய பேசறா! இதனால… சாராம்சம் மறந்து போயிடறது. இதர விஷயங்கள் மட்டும் நன்னா ஞாபகத்தில் இருக்கு. ‘நல்ல பிரவசனம் கேட்டோம்’கிற திருப்தி ஏற்பட மாட்டேங்கறது! இது, பிரவசனம் பண்றவாளோட குறைபாடா அல்லது கேக்கறவாளோட குறைபாடா? மகா ஸ்வாமிகள்தான் தெளிவுபடுத்தி அனுக்கிரகிக்கணும்!” ஜகத்குரு புன்னகைத்தார். ”மொதல்ல, நீங்கள்லாம் போஜனம் பண்ணியாச்சா?” என்றார் அனைவரும் கைகூப்பி, ”பண்ணியாச்சு ஸ்வாமி” என்றனர். ”சந்தோஷம். எங்கே ப்ரவசனம் யார் சொல்லக் கேட்டாலும், அதுல இருக்கிற நல்ல சாராம்சத்தை மாத்திரம் நாம கிரகிச்சுண்டு, மத்ததை விட்டுடணும். இதுக்கு, நம்ம மனசை பரிபக்குவப்படுத்திக்கணும். அதுதான் ஒசத்தியான குணம். உபன்யாசம் பண்றவா, காலத்தையும் சபையையும் அனுசரிச்சுண்டு அதே நேரம், ‘சப்ஜெக்ட்’டையும் விட்டுடாமத்தான் பூர்த்தி பண்றா! நாமதான் அன்னபட்சி மாதிரி அதுலேர்ந்து கிரகிச்சுக்கணும்… என்ன புரியறதா?” என்றார் சூர்யநாராயணன் என்ற சிஷ்யன் பய பக்தியுடன் ”ஜகத்குருவிடம் ஒரு பிரார்த்தனை! நாங்கள்லாம் ஸ்ரீமத் ராமாயணம் கேக்கணும்னு ஆசைப்படறோம். ஜகத்குருதான் கிருபை பண்ணி…” ”அதுக்கென்ன… பேஷா ஏற்பாடு பண்ணிட்டா போறது. நன்னா வாசிச்ச பௌராணிகாளா (உபன்யாசகர்) மைசூர்லேர்ந்து வரவழைச்சு சொல்லச் சொல்றேன்” என்றார் ஸ்வாமிகள். யக்ஞநாராயணன் என்ற சிஷ்யன் ”ஜகத்குருவின் அம்ருத வாக்கால ஸ்ரீமத் ராமாயணம் சிரவணம் (கேட்டல்) பண்ணணும்னு எங்களுக்கு ரொம்ப நாளா ஆசை. குருநாதர் அனுக்கிரகிக்கணும்!” ”ஓஹோ… இதுக்குத்தான் இவ்வளவு பீடிகையா?! பார்ப்போம்… பார்ப்போம்…” என்றபடி எழுந்து உள்ளே சென்று விட்டார். நாட்கள் கடந்தன. அன்றும் வெள்ளிக்கிழமை; சந்தியாகால வேளை. சாரதாம்பாள் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. திடீரென… அம்பாளைத் தரிசிக்க வந்தார் ஸ்வாமிகள். அவர், தரிசனம் முடிந்து வெளியே வரும்போது மணி எட்டு இருக்கும்! அவர்களைப் பார்த்து புன்னகைத்தபடியே, ”ஏதேது, விடமாட்டேள் போல இருக்கே. சரி… சரி… நீங்க ஆசைப்பட்டபடியே நடத்திடலாம்! ஒரு நல்ல நாள் பார்த்து ப்ராரம்பம் (ஆரம்பம்) பண்ணுவோம்” என்றார். அந்த நல்ல நாளும் வந்தது. ஏழு நாட்கள் ஆச்சார்யாள் சுந்தரகாண்டம் சொல்வதென முடிவாயிற்று. ‘மஹா சந்நிதானமே பிரவசன அனுக்கிரகம் பண்ணப் போறார்’ என்ற செய்தி பரவ, ஏகக் கூட்டம். அன்று மழை வேறு தூறி ஓய்ந்திருந்தது! ஆசனத்தில் அமர்ந்த ஜகத்குருவை அன்று தரிசித்தவர்கள், சாட்சாத் வேத வியாஸ பகவானே வந்து அமர்ந்திருப்பது போல் உணர்ந்தனர். கணீரென்ற குரலில் பிரவசனம் ஆரம்பமானது. அரை மணி நேரம் கடந்திருக்கும். திடீரென பிரவசனத்தை நிறுத்திய ஸ்வாமிகள், மடத்தைச் சேர்ந்த ஒருவரை அழைத்தார். அவரிடம், ”ஆரம்பத்திலேயே சொல்லணும்னு இருந்தேன்… மறந்துட்டேன்! நீ என்ன பண்றே… என் பக்கத்துல கொஞ்சம் தள்ளி, ஒரு மனைப் பலகையைக் கொண்டு வந்து போடு. அதுமேல பட்டு வஸ்திரத்தை விரி. அப்புறம், ஒரு வெள்ளித் தட்டுல ரெண்டு பெரிய கொய்யாப் பழத்தை கொண்டு வந்து வை… சீக்கிரம்!” என்று கட்டளையிட்டார். உத்தரவு பூர்த்தி செய்யப்பட்டு, உபன்யாசம் தொடர்ந்தது. ஐந்தாம் நாள் உபன்யாசமும் பூர்த்தி அடைந்தது. மாணவர்களுக்கும் நன்கு புரிகிற மாதிரி விவரித்த ஸ்வாமிகள், இடையிடையே தர்மசாஸ்திர நுணுக்கங்களையும் விளக்கினார். திருநெல்வேலி வேத பாடசாலையைச் சேர்ந்த வேங்கடேசன் என்ற மாணவன் மெள்ள வந்து ஜகத்குருவை நமஸ்கரித்து, ”எனக்கு ஒரு சந்தேகம் குருதேவா” என்றான் தயங்கியபடி. ”என்ன சந்தேகம், கேள்!” என்றார் ஸ்வாமிகள். அவன் திக்கித் திணறியபடி ”குருநாதா! உபன்யாசம் ஆரம்பிச்ச நாள்லேர்ந்து… உங்க பக்கத்துல ஒரு பலகையைப் போட்டு, அதுக்கு முன்னால ஒரு தட்டுல கொய்யாப் பழத்தையும் வைக்கச் சொல்றேள்! அது எதுக்குனு புரியலை…” இதைக் கேட்டு கலகலவென சிரித்த ஆச்சார்யாள், ”சொல்றேன் கேளு… ‘யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்… தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்’னு… எங்கெல்லாம் ஸ்ரீ ராமனின் பெருமை பேசப்படறதோ, அங்கெல்லாம் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி வந்துடுவார்னு ஒரு நம்பிக்கை. இங்கே நாம ஸ்ரீமத் ராமாயணம்னா சொல்றோம். அதனால நிச்சயம் ஸ்வாமி வருவாரில்லையா? அவரை நாம நிக்க வைக்கலாமோ? அவர் ‘நவ வ்யாகரண’ பண்டிதராச்சே! அவர் உட்காரத்தான் ஆசனப் பலகை! அப்புறம்… நம்ம வீட்டுக்கு யாராவது ‘கெஸ்ட்’ வந்தா பழம்- பட்சணம், காபியெல்லாம் குடுத்து உபசாரம் பண்ற மாதிரிதான் இது! ஸ்வாமிக்கு கொய்யாப் பழம்னா ரொம்பவும் புடிக்கும். இப்ப புரிஞ்சுண்டியா?” என்று கேட்டார். தலையாட்டினான் வேங்கடேசன். அந்த இளம்பிஞ்சு இன்னும் தெளிவடைய வில்லை என்பது அந்த தெய்வத்துக்கு தெரியாதா என்ன! ஆறாம் நாளன்றும் நல்ல கூட்டம். அன்றைய உபன்யாசத்தை உருக்கமாகக் கூறி முடித்தார் ஜகத்குரு. அனைவரும் ஸ்வாமிகளை நமஸ்கரித்துச் சென்ற பின்னர், பாடசாலை மாணவர்களும் ஒருவர்பின் ஒருவராக நமஸ்கரித்து நகர்ந்தனர். கடைசியாக, முதல் நாள் சந்தேகம் கேட்ட திருநெல்வேலி பாடசாலை மாணவன் வேங்கடேசன் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து விட்டு, கைகூப்பி நின்றான். புன்முறுவலுடன் அவனை ஏறிட்ட ஸ்வாமிகள், ”ஒம் முழுப் பேரென்ன?” என்று வினவினார். ”பிரசன்ன வேங்கடேசன் குருநாதா!” ”பூர்வீகம் எது?” என்று கேட்டார். ”திருநெல்வேலி- கடையநல்லூர் பக்கம் ஒரு குக்கிராமம் குருநாதா” ”தகப்பனார் என்ன பண்றார்?” ”உபாத்தியாயம் (வைதீகத் தொழில்) குருநாதா!” உடனே ஆச்சார்யாள், ”பேஷ்… பேஷ்” என்று கூறிவிட்டு, அன்றைய தினம் ஆஞ்சநேய ஸ்வாமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இரண்டு கொய்யாப் பழங்களை தன் தங்கக் கைகளால் எடுத்து, அவனிடம் தந்தார். பிறகு, ”வேங்கடேசா! இவை ஆஞ்சநேயர் சாப்பிட்ட உச்சிஷ்ட (மீதி) பிரசாதம். நறுக்கி நீயும் வாயில போட்டுண்டு, எல்லாருக்கும் கொடு!” என்று விடைகொடுத்தார். ஆனால், பிரசன்ன வேங்கடேசன் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. ஆச்சார்யாள் அளித்த இரு கொய்யாப் பழங்களையும் கைகளால் உருட்டி உருட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தான்! அவனது எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட ஆச்சார்யாள் தனக்குள் சிரித்தபடி, ”என்ன பிரசன்ன வேங்கடேசா! பழங்களைக் கையில் வெச்சுண்டு அப்டி என்ன யோசனை? கொஞ்சம் சொல்லேன், நானும் தெரிஞ்சுக்கறேன்!” என்றார். அவன் தயங்கினான். ”சொல்லு”- தைரியப்படுத்தினார் ஜகத்குரு. ”வேற ஒண்ணுமில்லே குருநாதா! அந்த ஆசனத்துல ஆஞ்சநேய ஸ்வாமி வந்து ஒக்காந்து ஸ்ரீமத் ராமாயணம் கேட்டுட்டு, அவருக்கு அர்ப்பணிச்ச கொய்யாப் பழங்களையும் சாப்டுட்டுப் போறதா…” என்று அவன் முடிப்பதற்குள் ஸ்வாமிகள் இடைமறித்தார். ”இத நான் சொல்லலே! பரம்பரை பரம்பரையா நம்ம தேசத்துல ஸ்ரீமத் ராமாயண பிரவசனம் பண்ணிண்டு வர பெரியவாள்லாம் பூர்ண நம்பிக்கையோட கடைப் பிடிக்கிற வழக்கம். இது சத்தியமும் கூட! இதுல, உனக்கு என்ன சந்தேகம்?” என்று கேட்டார் ஞானகுரு. பிரசன்ன வேங்கடேசன் பேசத் தயங்கினான். அவனை அருகில் வரச் சொன்ன ஆச்சார்யாள், ”எதுவா இருந்தாலும்… மனசுல பட்டதை தைரியமா சொல்லு!” என்றார் . ”நானும் பிரவசனம் கேக்கறச்சே அந்தப் பலகையையே அடிக்கடி பார்த்துண்டிருந்தேன்… என் கண்ணுக்கு ஆஞ்சநேய ஸ்வாமி வந்து ஒக்காந்ததா தெரியவே இல்லியே! பக்கத்துல இருந்த சகாக்களையும் கேட்டேன். அவாளும் ‘தெரியலே’னுட்டா. அதான்…” மென்று விழுங்கினான் வேங்கடேசன். ”சரி… சரி. இது உன்னோட முதல் சந்தேகம்! ‘ரெண்டு கொய்யாப் பழமும் வெச்சது வெச்சபடி அப்படியே இருக்கே! ஆஞ்சநேய ஸ்வாமி சாப்பிட்டிருந்தா, குறைஞ்சிருக்கணுமே’ங்கறதுதானே ரெண்டாவது சந்தேகம்?” என்று கேட்டார். ”ஆத்மார்த்தமான பக்தியும், சிரத்தையும் இருந்தா ஆஞ்சநேய ஸ்வாமி பவ்யமா, பக்தியோடு அமர்ந்து ஸ்ரீமத் ராமாயண சிரவணம் பண்றத நாமும் தரிசிக்கலாம்! ஆஞ்சநேயர் விஸ்வரூபியா வந்து உட்கார்ந்துட்டார்னா அத பார்த்துட்டு, தாங்கிக்கிற சக்தி எல்லோருக்கும் இருக்குமா? அதனால அவர், சூட்சுமமா வந்து கேட்டுட்டுப் போவார்!” என்று விளக்கம் அளித்தார். , ”உனக்கு கிரந்த எழுத்து வாசிக்கத் தெரியுமா?” என்று வேங்கடேசனிடம் கேட்டார். ”தெரியும் குருநாதா” என்றான் அவன். உள்ளேயிருந்து உபநிஷத் சம்பந்தமான ஒரு கிரந்த புத்தகத்தைக் கொண்டு வரச் செய்தார் ஆச்சார்யாள். அதில் ஒரு பக்கத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு, ஒரு சிறு பகுதியை சுட்டிக் காண்பித்து, ”இதை, ஐந்து நிமிஷத்தில் மனப்பாடம் செய்து அப்டியே என்னிடம் ஒப்புவிக்க வேண்டும். முடியுமா பார்” என்றார் சிரித்தபடி! புத்தகத்துடன் சற்றுத் தள்ளிப் போனான் பிரசன்ன வேங்கடேசன். சரியாக ஐந்து நிமிடம் ஆயிற்று. ஆச்சார்யாளிடம் வந்தவன், அவர் குறிப்பிட்ட பகுதியை அட்சர பிசகின்றி ஒப்பித்தான். ஆச்சார்யாள் முகத்தில் பரம சந்தோஷம். புத்தகத்தைக் கையில் எடுத்தார். தான் உருப்போடச் சொன்ன அந்தப் பகுதியை எடுத்து வைத்துக் கொண்டு, ”வேங்கடேசா, நான் சொன்னபடி அஞ்சே நிமிஷத்துல படிச்சு ஒப்பிச்சுட்டே! நீ அந்த புஸ்தகத்திலேர்ந்து குறிப்பிட்ட அட்சரங்களை கிரகிச்சுட்டதால… அவை, அந்த இடத்திலேருந்து மறைஞ்சு போயிடலையே! கிரந்த எழுத்துக்கள்லாம் இருந்த இடத்துல அப்படியே இருக்கோல்லியோ? அதுமாதிரிதான் இதுவும்! தெய்வத்துக்கு நாம எதை அர்ப்பணிச்சாலும், அதுல இருக்கிற பக்தி சிரத்தையுடன் கூடின ருசியை மாத்திரம் ஸ்வீகரிச்சுண்டு, பதார்த்தங்களைப் பரம கருணையோடு நமக்கே விட்டுடுறார். வெச்ச கொய்யா ரெண்டும் வாடாம- வதங்காம, முழுசா அப்படியே இருக்கிற ரகசியம் இப்ப புரியறதா உனக்கு?” பிரசன்ன வேங்கடேசன் பிரமித்தான். அங்கு, சற்று நேரம் அமைதி நிலவியது. அனைவரும் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தனர். பிரவசன பூர்த்தி நாள்! மதியம் மூன்று மணிக்கே மேடைக்கு ஆச்சார்யாள் வந்து விட்டார். உபன்யாசம், மிக உருக்கமாகப் போய்க் கொண்டிருந்தது. பூர்த்தி கட்டம். அனைவரும் மெய்ம்மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது! பெரிய வானரம் ஒன்று தாவித் தாவி அந்த உபன்யாச கூடத்துக்கு வந்தது. ஒருவரையும் லட்சியம் பண்ணாமல் மேடையில் பாய்ந்து ஏறி, ஆஞ்சநேய ஸ்வாமிக்காக போடப்பட்டிருந்த பலகையில், ஆச்சார்யாளைப் பார்த்தபடி- சாதுவாக அமர்ந்து கொண்டது! ஜகத்குரு சற்று நேரம் வைத்த கண் வாங்காமல் அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். எதிரிலிருந்த கொய்யாப் பழங்களை ‘அது’ ஏறெடுத்தும் பார்க்கவில்லை! கூட்டம் இதைப் பார்த்து வியந்தது! மாலை ஐந்து மணி. அதுவரை, அந்த வானரம் அப்படி இப்படி அசையவே இல்லை! பழங்களையும் தொடவில்லை. ஆச்சார்யாள் உபன்யாசத்தைப் பூர்த்தி செய்து, ‘பலசுருதி’ (பலன்) சொல்லி முடித்தார். பிறகு வலப் புறம் திரும்பி வானரத்தைப் பார்த்து, ”ஆஞ்சநேய ஸ்வாமி! ஸ்ரீமத் ராமாயணம் கேக்கறதுக்காக நீங்க வந்து உக்காந்திருக்கறதுல ரொம்ப சந்தோஷம்! அந்த ரெண்டு கொய்யாப் பழங்களும் உங்களுக்குத்தான்… ஸ்வீகரிச்சுக்கணும்” என்று கேட்டுக் கொண்டார்.கூட்டத்தை ஒருமுறை நோட்டம் விட்ட வானரம், பழங்களை எடுத்துக் கொண்டு, ஆச்சார்யாளையே வாஞ்சையுடன் சற்று நேரம் உற்றுப் பார்த்தது. கூட்டத்திலிருந்து குரலொன்று, ”ஆஞ்சநேயா… ராமா… ராமா!” என்று முழங்கியது. அனைவரும் குரல் வந்த திசையை ஆர்வத்துடன் பார்த்தனர். அங்கே பிரசன்ன வேங்கடேசன், கண்களில் நீர் மல்க கைகூப்பி நின்றிருந்தான்! இந்த நேரத்தில், மெள்ள மேடையை விட்டுக் கீழிறங்கிய வானரம், ராஜநடை போட்டபடி நடந்து சென்று மறைந்தது. கண்களில் நீர் முட்ட ஜகத்குருவிடம் வந்த பிரசன்ன வேங்கடேசன், ”குருதேவா! ஒங்க பக்கத்துல பலகையில வந்து ஒக்காந்துட்டுப் போனது, என் கண்ணுக்கு வானரமா தெரியலே. சாட்சாத் ஆஞ்சநேய ஸ்வாமி, ஆஜானுபாகுவான சரீரத்தோட கம்பீரமா உட்கார்ந்திருந்ததைப் பார்த்தேன்! ஆச்சார்யாளோடு ஸ்வாமி ஏதோ பேசியதையும் பார்த்தேன்! நீங்க சொன்ன தாத்பர்யம் இப்ப எனக்குப் புரிஞ்சுடுத்து குருநாதா!” என்று ஜகத்குருவின் பாதார விந்தங்களில் விழுந்தான். எத்தனையோ பேர் தேற்றியும் அவனது கண்ணீரை மட்டும் எவராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த பரப்பிரம்மம் கரம் உயர்த்தி வேங்கடேசனை ஆசீர்வதித்தது!
செல்போனில் படம் காட்டி ஆபாசப் பேச்சு: மாணவிகளின் புகாரால் ஆசிரியர் கைது
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள கொளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு செல்போனில் ஆபாசப் படம் காட்டி ஆபாசமாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வரும் கொளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தாராபுரம் தெற்குத் தெருவைச் சேர்ந்த காளிமுத்து (வயது 45) என்பவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் 2 ஆண்டுக்கு முன்னர் தளவாய்ப்பட்டினத்தில் இருந்து மாற்றலாகி வந்தாராம். ஆசிரியர் காளிமுத்து சில நாட்களாக 7, 8–ம் வகுப்பில் படிக்கும் மாணவிகளிடம் தனது செல்போனில் உள்ள ஆபாசப் படங்களைக் காட்டி அவர்களிடம் ஆபாசமாகப் பேசியுள்ளார். இதனால் அந்த மாணவிகள் வெறுப்படைந்துள்ளனர். ஒரு கட்டத்தில், பொறுமையிழந்த மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் ஆசிரியர் குறித்து புகார் தெரிவித்துள்ளனர். அதற்கு அவர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்ய வேண்டியதுதானே என்று கூறியுள்ளனர். ‘தலைமை ஆசிரியர் தேர்வு கண்காணிப்பு பணிக்காக சென்றிருப்பதால், அவர் வந்தவுடன் புகார் செய்வதாகக் கூறினர். ஆனால் ஆசிரியரின் தொடர் அத்துமீறலால் கோபமுற்ற மாணவிகளின் பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தனர். அதன் பின்னர் தாராபுரம்–கரூர் சாலையில் பள்ளியின் முன்பு மறியலில் ஈடுபட்டு ஆசிரியரைக் கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். அந்த நேரத்தில் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் குணசேகரன் ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் அந்த வழியில் சென்றனர். அவர் வந்த காரை பொதுமக்கள் முற்றுகையிட்டு. ஆசிரியரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தனர். அதைத் தொடர்ந்து அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார் சிங்கை தொடர்பு கொண்டு பேசியதன் பேரில், போலீஸ் உயரதிகாரிகள் ஆசிரியர் காளிமுத்துவை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடந்த விசாரணையின் அடிப்படையில் ஆசிரியர் காளிமுத்து கைது செய்யப்பட்டார். அவர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விடுதலையான தமிழக மீனவர்கள் இன்று மண்டபம் வருகிறார்கள்
ராமேசுவரம்: இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் இன்று மண்டபம் வருகிறார்கள் கடந்த 20–ந் தேதி ராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 33 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்று அங்குள்ள சிறையில் அடைத்தனர். இதேபோல் கடலில் எல்லை தாண்டி வந்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 21 மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறைப்பிடித்து சென்றது. இதை கண்டித்தும் தமிழக மீனவர்கள் 54 பேரை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இலங்கை அதிபர் சிறிசேனா சிறை பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு மன்னார், ஊர்க்காவல்துறை ஆகிய நீதிமன்றங்களுக்கு பரிந்துரைத்தார். அதன்படி 54 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து நேற்று உத்தரவிட்டது. அவர்களை இன்று பிற்பகல் இலங்கை கடற்படை இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கிறார்கள். பின்னர் மாலையில் அவர்கள் மண்டபத்துக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

