புது தில்லி: தில்லியில் பாலியல் குற்றவாளி தினேஷ் சிங்கிடம் திகார் சிறையில் பிபிசி தொலைக்காட்சிக்காக பேட்டி எடுத்த பெண் லெஸ்லி உட்வின் திடீரென தலைமறைவாகிவிட்டார். அவர் லண்டனுக்கு யாருக்கும் தெரிவிக்காமல் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. தில்லி மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி முகேஷ் சிங்கிடம் எடுக்கப்பட்ட பேட்டி விவரங்கள், இந்த வார துவக்கத்தில், ஊடகங்களில் வெளியாகின. இதை அடுத்து .இந்த விவகாரம், பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. ‘டிவி’க்களில், இது குறித்து, காரசாரமாக பதிலளித்த, சிறைக்குள் சென்று பேட்டி எடுத்த பெண் நிருபர் லெஸ்லி உட்வின், தன் செயலை நியாயப்படுத்தினார். இந்நிலையில், இந்தியாவில், பி.பி.சி., ‘டிவி’யில் அந்தப் பேட்டி அடங்கிய, ஆவணப் படத்தை ஒளிபரப்ப மாட்டோம் என, உறுதியளித்த, பி.பி.சி., நிறுவனம், பிரிட்டன் மற்றும் பிற நாடுகளில் ஒளிபரப்பி விட்டது. அந்தக் காட்சிகள், இணையதளங்களில் வெளியாகி லட்சக்கணக்கானோர் அதை, பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு, பேட்டி எடுப்பதற்காக தவறான தகவல்களைக் கூறிய, உண்மை நோக்கத்தை மறைத்த, பேட்டி எடுத்த பெண் லெஸ்லி உட்வின் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. இந்நிலையில்,கடந்த பல நாட்களாக தில்லியில் தங்கியிருந்த அவர், நேற்று முன்தினம் இரவில் தகவல் எதுவும் தெரிவிக்காமல் லண்டன் புறப்பட்டுச் சென்று விட்டார்.
கச்சத்தீவை இந்திய அரசு ஒருபோதும் திரும்பக் கேட்காது; அது இலங்கையின் ஒரு பகுதி: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க
சென்னை: கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதி, அதை விட்டுக் கொடுக்க மாட்டோம், கச்சத் தீவு விவகாரத்தில் இந்திய அரசு ஒருபோதும் அதனை திரும்பப் பெறுவோம் என இலங்கையிடம் பேச்சுவார்த்தை நடத்தாது என்று கூறினார் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. சென்னையில் இருந்து செயல்படும் தந்தி டிவி தொலைக்காட்சிக்கு ரணில் விக்கிரமசிங்க அளித்த பிரத்யேகப் பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அந்தப் பேட்டியில் அவர் கூறியிருந்த கருத்துகள்….
கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதி: கச்சச்தீவு இலங்கையின் ஒரு பகுதி. இந்திய அரசும் அது இலங்கைக்குச் சொந்தம் என்றே கருதுகிறது. அதனால், கச்சத்தீவைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா குரல் எழுப்பாது. நாங்களும் கச்சத்தீவை விட்டுத் தரப்போவதில்லை. இந்த விவகாரம் இது தமிழக அரசியலில் ஒரு பகுதி என்பது எனக்கு நன்கு தெரியும். கச்சத்தீவில் மீன்பிடிக்கும் விவகாரத்தைப் பொருத்தவரை, அது எங்கள் வடக்குப் பகுதி மீனவர்களின் பாரம்பரிய உரிமை சார்ந்தது.
இந்திய மீனவர்களைச் சுட புலிகள் ஆயுதம் அளித்தனர்: எங்கள் தெற்குப் பகுதி மீனவர்கள் கூட, புத்தளம் உள்ளிட்ட பகுதிகளில் இந்திய மீனவர்கள் வந்து இழுவை மூலம் மீன் பிடிப்பதாகக் கூறுகின்றனர். இது எங்களுக்கு பெரிய பிரச்னையாக இருக்கிறது. இது எங்கள் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனை. போர்க் காலத்தில் எங்கள் மீனவர்களை நாங்கள் மீன் பிடிக்க அனுமதிக்கவில்லை. இல்லையெனில், அவர்கள் தொடர்ந்து மீன்பிடித்து வந்திருப்பர். ஒரு கட்டத்தில், இந்தியாவிலிருந்து வரும் மீனவர்களைச் சுட ஆயுதம் கூட விடுதலைப்புலிகள் கொடுத்தனர். நாங்கள் அப்படிச் செய்யவில்லை. தமிழக – இலங்கை மீனவர்களிடையேயான பிரச்னையை பேசித் தீர்க்க வேண்டும் என்று கருதுகிறேன்.
இப்போது மீனவர்களைச் சுடுவதில்லை: தமிழக மீனவர்களை கடந்த காலங்களில் சுட்டிருக்கலாம். சில அப்பாவி மீனவர்களை இலங்கைக் கடற்படை சுட்டு உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், இப்போது சுடுவது இல்லை. கச்சத்தீவு உடன்படிக்கை ஏற்பட்ட காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட அதே அளவு, அதே எண்ணிக்கை படகு வகைகளை தமிழக மீனவர்கள் பயன்படுத்தத் தயார் என்றால் அதுதொடர்பாக நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்.இந்திய மீனவர்கள் இழுவைமடி வலைகள் கொண்டு மீன் பிடிப்பதை அனுமதிக்க முடியாது. இது இலங்கையின் கடல் பரப்பு. இலங்கை மீனவர்கள் இந்திய கடல் பகுதியில் இப்படி மீன் பிடித்தால் என்ன செய்திருப்பீர்கள்?
13-ஆவது சட்டத் திருத்தம்: இலங்கையில் 13-ஆவது சட்டத்திருத்தத்தைச் செயல் படுத்தி வருகிறோம். அது எப்படிச் செயல்படும் என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். காவல் துறை செயல்பாடு அரசியலாக்கப்படுமோ என்ற சந்தேகத்தை சிலர் எழுப்பியுள்ளனர். சுதந்திர காவல் ஆணையம் இருந்தால் போதுமா அல்லது வேறு நடவடிக்கைகள் தேவையா என்று பார்க்க வேண்டும். முதல்வர்களின் தனிப்பட்ட ராணுவமாக காவல் துறை மாறிவிடக் கூடாது. இந்தியா போன்ற நிலைமை இங்கு இல்லை.
அகதிகள் விவகாரம்: தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகள் இலங்கைக்குத் திரும்ப ஏற்ற சூழல் இருக்கிறது. ஆனால், அவர்களுக்கு இன்னும் சந்தேகம் தீராமல், மேலும் காலஅவகாசம் தேவைப்படும்பட்சத்தில், அவகாசம் அளிக்கலாம். சூழல் படிப்படியாக மேம்பட்டு, இயல்பு நிலை திரும்புகிறது என்று தெரிய வந்தால், இலங்கை அகதிகள் தாயகம் திரும்பலாமே என்று தமிழக மக்களே கருதத் தொடங்குவர். ஆனால், யாரையும் நாங்கள் நிர்பந்திக்க மாட்டோம். உள்நாட்டில் உள்ள அகதிகளை மீள் குடியேற்றம் செய்வதில் சில தாமதங்கள் ஆகின்றன. விரைவில் அவர்கள் மீள் குடியேற்றம் செய்யப்படுவர்.
தமிழகத்தை அறிவேன்: நான் முன்பு பிரதமராக இருந்த போது, தமிழகத்துடன் தொடர்ந்து தொடர்பில்தான் இருந்தோம். அவர்களுடன் தகவல் பரிமாற்றம் நடந்தது. நாங்கள் இந்திய அரசுடன்தான் பேச வேண்டும். ஆனால், எனக்கு சென்னையை நன்றாகத் தெரியும். அங்கு அடிக்கடி சென்று வருகிறோம். எங்களுக்கு அங்கு நண்பர்கள் உள்ளனர்.
மோடியின் இலங்கை பயணம்: பிரதமர் மோடியை யாழ்ப்பாணத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளோம். தமிழர்களை மோடி யாழ்ப்பாணத்தில் சந்திக்க இருக்கிறார். இலங்கையின் இதர பகுதிகளுக்குச் செல்வது பற்றி அவர் தான் முடிவு செய்ய வேண்டும். அவர் கண்டிக்குச் செல்லக்கூடும். அங்கு ஸ்ரீதலதா ஆலயத்திற்கு சென்று வழிபடலாம். வட மாகாணத்துக்கும் செல்வார் என்றே கருதுகிறேன். இது நல்லெண்ணத்தின் அடிப்படையிலான பயணம். இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்தும் என்றார் அவர்.
திமுக.,வை அழிக்க வேறு யாரும் வேண்டாம்; அவர்களே துவங்கிவிட்டார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்
நாகர்கோவில்: ”தி.மு.க.,வை யாரும் அழிக்க முடியாது என கருணாநிதி கூறுவது உண்மை. காரணம் அந்தக் கட்சியில் இருப்பவர்களே அதை அழிக்கத் துவங்கி விட்டார்கள்,” என்றார் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். நாகர்கோவிலுக்கு வந்திருந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தி.மு.க.வை யாரும் அழிக்க முடியாது என கருணாநிதி கூறுவது 100 சதவீத உண்மை. தி.மு.க.வை அந்த கட்சியில் உள்ளவர்களே அழித்து விடுவர் . அது ஆரம்பித்து விட்டது. கடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தில் நல்ல முதல்வர் கிடைக்கவில்லை. 2016 தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து முதல்வர் வேட்பாளரை அறிவித்து தேர்தலை பா.ஜ. எதிர்கொள்ளும். மீனவர்களின் பாதுகாப்பில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்தி வருகிறது. இலங்கையில் இருந்து 554 மீனவர்களும் பிறநாடுகளில் இருந்து 124 மீனவர்களும் மீட்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் ரயில் பாதை வந்த காலம் முதல் மதுரை கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை கோரிக்கை இருந்து வருகிறது. மோடி அரசு பொறுப்பேற்ற பின் ரூ.2500 கோடி செலவில் திட்டம் தயாரிக்கப்பட்டு 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குளச்சல் வர்த்தக துறைமுகம் ஆய்வுப்பணி நடைபெறுகிறது. இதனால் விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.” என்று கூறினார்.
பிரபாகரனுக்கு ராஜபக்சவே பணம் கொடுத்தார்: ரணில் விக்ரமசிங்க குற்றச்சாட்டு
சென்னை: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ராஜபக்சவே பணம் கொடுத்தார் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பகீர் குற்றச்சாட்டைத் தெரிவித்தார். மேலும், விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தில் தமிழர் கட்சித் தலைவர்களையே கொலை செய்தனர். தமிழர் தலைவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என எங்களிடம் தஞ்சம் புகுந்திருந்தனர். பேச்சுவார்த்தை நடத்தி, சுமுக அரசு அமைய பாடுபட்டோம். அவ்வாறு அங்கே சுமுக சூழல் ஏற்பட்டிருந்தால், பிரபாகரனை அவர்களே பழி வாங்கியிருப்பார்கள். அதனால் நாங்கள் பிரபாகரன் உயிர் குறித்து அச்சப்பட்டோம் என்று கூறியுள்ளார் ரணில் விக்ரமசிங்க. சென்னையில் இருந்து செயல்படும் தந்தி டிவி தொலைக்காட்சிக்கு ரணில் விக்கிரமசிங்க அளித்த பிரத்யேகப் பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அந்தப் பேட்டியில் அவர் கூறியது… இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக இன அழிப்பு செய்தனர் என்று வடக்கு மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றியதை நான் ஏற்கவில்லை. வடக்கு மாகாண முதல்வரின் பேச்சு பொறுப்பற்றது. அவர் என்னை நேரில் சந்தித்து பேசியதில்லை. விக்னேஸ்வரன் இந்த விவகாரத்தில் பொய் சொல்கிறார். நான் யாழ் பகுதிக்குச் செல்லும்போது அவரை சந்திக்க மாட்டேன். அவருடன் தொடர்பு கொள்வதில் சிக்கலை ஏற்படுத்தும் தீர்மானம் அது. அதை அவர் திரும்பப் பெற்றால் ஒருவேளை சந்திப்பேன். இந்தியாவில் ஒரு மாநிலம், இந்திய அரசு இனஅழிப்பு நடத்துகிறது என்று தீர்மானம் நிறைவேற்றினால், இதேபோன்ற சிக்கல் தான் அங்கும் உருவாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சம்பந்தன் போன்றவர்களுடன் இதுபற்றிப் பேசி வருகிறேன். போர் நடந்த போது அனைத்துத் தரப்பிலும் மக்கள் கொல்லப்பட்டது உண்மை. தமிழர்கள் மட்டுமல்ல, முஸ்லிம்களும், சிங்கள மக்களும் கூட கொல்லபட்டனர். தமிழர்களில் ஒரு பகுதியினர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர் என்பதை மறக்கக் கூடாது. பொதுவாகச் சொன்னால், இலங்கை பாதுகாப்புப் படையினர், இந்திய அமைதிப் படை, விடுதலைப் புலிகள் என்று அனைத்துத் தரப்பினராலும் உயிரிழப்பு ஏற்பட்டது. இதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், இலங்கை அரசு மட்டும்தான் காரணம் என்று சொல்ல முடியுமா ? யாழ்ப்பாணத்தில் புலிகளின் அரசியல் தலைமை மிச்சம் இருந்திருந்தால், விக்னேஸ்வரன் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குச் சென்று முதல்வராகப் பதவி ஏற்றிருக்க முடியாது என்பதை அவரே அறிவார். 2005 தேர்தலில் யாழ்ப்பாண மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்தால், 2009-ல் நடந்த நிகழ்வுகளை என்னால் தடுத்திருக்க முடியும். ராஜபட்சவை அதிபராக்கியது யார்? தென் பகுதி மக்கள் அல்ல. 3 முதல் 4 லட்சம் தமிழர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பதில், ராஜபட்சவிற்கும் புலிகளுக்கும் ஓர் உடன்படிக்கை இருந்தது. ராஜபட்ச புலிகளுக்கு பணம் கொடுத்தார். பணத்தை எடுத்து சென்று கொடுத்த அமிர்காந்தன் இன்றும் மத்திய கிழக்கு ஆசியாவில் எங்கோ இருக்கிறார். இது தெரிந்த விஷயம் தான் என்றார் ரணில் விக்கிரமசிங்க.
திருச்சியில் சுங்கத்துறை அதிகாரிகள் 6 பேர் கைது: சிபிஐ நடவடிக்கை
திருச்சி: திருச்சியில் முறைகேடுகளில் ஈடுபட்ட சுங்கத் துறை அதிகாரிகள் உள்பட 6 பேர் சிபிஐ.,யால் கைது செய்யப்பட்டனர். ஒரு பயணி, சுங்கத்துறை அதிகாரிகள் 5 பேர் என கைது செய்யப்பட்ட 6 பேர் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டனர். அவர்கள் அனைவரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். திருச்சி விமான நிலைய சுங்கத் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை சிபிஐ அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கணக்கில் வராத ரொக்கம் ரூ. 3 லட்சம் சிக்கியதை அடுத்து, அங்கு பணியிலிருந்த சுங்கத்துறை பணியாளர்களிடம் விசாரணை நடைபெற்றது. திருச்சி விமான நிலையம் வழியாக அண்மைக்காலமாக தங்கம் கடத்துவது அதிகரித்துள்ளதாக் புகார்கள் வந்தன. மேலும், திருச்சி வரும் பயணிகளிடம் அவர்கள் கொண்டு வரும் பொருட்களுக்கு முறையாக வரிகள் விதிக்கப்படுவதில்லை எனவும், முறைகேடாக ரொக்கம் பெற்றுக்கொண்டு ஏராளமான பொருட்களை வெளியே எடுத்துச்செல்ல அனுமதிப்பதாகவும் சுங்கத் துறையினர் மீது புகார்கள் சென்றன. இதையடுத்து, வெள்ளிக்கிழமை அதிகாலை சுங்கத் துறையில் சிங்கப்பூர் மற்றும் மலேசிய நாட்டு விமானங்கள் வந்து சோதனை முடித்து பயணிகள் தங்கள் உடைமைகளுடன் வெளியே வந்த நேரத்தில், சிபிஐ உதவி ஆணையர் லாசர் தலைமையில், 10 பேர் கொண்ட குழுவினர் திடீரென திருச்சி விமான நிலையத்துக்குள் நுழைந்தனர். அவர்கள் சுங்கத் துறையில் அன்றையதினம் பயன்படுத்திய ரசீது புத்தகம், வசூலான வரி, அபராத தொகை ஆகியவற்றை எடுத்துக்கொண்டதோடு, ரூ. 3 லட்சம் ரொக்கத்தை கைப்பற்றியதாகவும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. கணக்குகளை ரசீது புத்தகத்துடன் ஒப்பிட்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதை அடுத்து இந்தக் கைது நடவடிக்கையை சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்டனர்.
கொழும்பு வந்தார் சுஷ்மா ஸ்வராஜ்: மோடி பயணத்துக்கான ஏற்பாடுகளில் கவனம்
கொழும்பு: பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யும் வகையில், இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வெள்ளிக்கிழமை வந்து சேர்ந்தார். அவர், இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனாவை சந்தித்துப் பேசினார். கொழும்பில் இரு நாள்கள் தங்கியிருக்கும் சுஷ்மா ஸ்வராஜ், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா ஆகியோரைச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் மாலத்தீவு பயணம் ரத்து
புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் மாலத்தீவு பயணத்தை அவர் ரத்து செய்துவிட்டதாகத் தெரிகிறது. செஷல்ஸ், இலங்கை, மோரீஷஸ் ஆகிய நாடுகளுடன் சேர்த்து மாலத்தீவிலும் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுதொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியுறவு அமைச்சகத்தின் அறிவிப்பில் வெளியிடப்படவில்லை. மாலத்தீவில் நிலவும் உள்நாட்டு அரசியல் குழப்பம் காரணமாக அந்நாட்டுக்கு பிரதமர் மோடி செல்ல விரும்பவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்தே, பிரதமர் நரேந்திர மோடியின் மாலத்தீவு பயணம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
நாகாலாந்து: கலவரத்தை அடக்க துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலி
தீமாபுர்: நாகாலாந்தில் பாலியல் பலாத்காரத்தில் குற்றம் சாட்டப்பட்ட கைதியை பொதுமக்கள் சிறையை உடைத்து வெளியே இழுத்து வந்து அடித்துக் கொன்ற சம்பவத்தை அடுத்து அங்கே வகுப்புக் கலவரம் வெடித்தது. இதில், கலவரத்தை அடக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். இது குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. கலவர சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி. மெரன் ஜாமீர் கூறியபோது… சிறைக்குள் புகுந்து பொதுமக்கள் தாக்கியபோது, சிறைக் காவலர்களைவிட அவர்கள் அதிகம் பேர் இருந்தனர். மேலும், அவர்களுடன் பள்ளிச் சிறார்களும் இருந்ததால், அவர்களைத் தடுக்க முடியவில்லை. எனினும், அந்தக் கும்பலின் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நான்கைந்து பேர் காயமடைந்தனர். அதில், படுகாயம் அடைந்த ஒருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார் என்றார்.
தீமாபுரில் இளைஞர் கொல்லப்பட்ட விவகாரம்: சிறை அதிகாரி உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்
தீமாபுர்: நாகாலாந்து மாநிலத்தில் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட இளைஞரை சிறைக்குள் புகுந்து பொதுமக்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக, மத்திய சிறைக் கண்காணிப்பாளர் உள்பட 3 அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பழங்குடியினப் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கைது செய்யப்பட்டு, தீமாபுர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஃபரீத் கான் என்பவரை, சிறைக்குள் புகுந்து பொதுமக்கள் தாக்கினர். இதில் அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக, தலைநகர் கோஹிமாவில், முதல்வர் டி.ஆர்.ஜீலியாங் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பணியிடை நீக்கம் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டன. ஃபரீத் கான் தாக்கப்பட்ட விவகாரத்தில், நிலைமையைக் கட்டுப்படுத்த தவறியதாக, மத்திய சிறை கண்காணிப்பாளர் சுபா போம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மெரன் ஜாமிர், மாவட்ட ஆட்சியர் வஜோப் கென்யி ஆகிய மூவரையும் பணியிடை நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அந்தத் தாக்குதலில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யவும் முடிவு செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி வெப்ரசா நைகா தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து முதல்வர் டி.ஆர்.ஜீலியாங் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் வகுப்புக் கலவரமாக மாறியுள்ளது. இரு மாநிலங்களில் இந்தச் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள சட்டப் பேரவையில் ஆளுநர் உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு
திருவனந்தபுரம்: கேரள சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளில் ஆளுநர் உரையைப் புறக்கணித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். கேரள சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. அதன்படி, மாநில ஆளுநர் சதாசிவம், பேரவையில் உரையாற்றத் தொடங்கினார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் இடைமறித்துப் பேச முயன்றார். ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மாநில நிதியமைச்சர் மணி, பதவி விலக வேண்டும் என்று மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி உறுப்பினர்கள் அனைவரும் குரலெழுப்பினர். இதுதொடர்பான வாசகங்கள் அடங்கிய பேனர்களை அவர்கள் உயர்த்திப் பிடித்தனர். மதுக்கூட விடுதி உரிமையாளர்களிடம் லஞ்சம் வாங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள மணி வரும் 13-ஆம் தேதி மாநில பட்ஜெட்டைத் தாக்கல் செய்யக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளிக்கு மத்தியிலும் ஆளுநர் சதாசிவம் தொடர்ந்து உரையாற்றினார். அதன் பின்னர், அச்சுதானந்தன் தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். பேரவையிலிருந்து வெளியேறி பேரவை வளாகத்துக்குள் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால், சிறிது நேரம் அங்கு கூச்சல், குழப்பம் நிலவியது.

