சென்னை: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ராஜபக்சவே பணம் கொடுத்தார் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பகீர் குற்றச்சாட்டைத் தெரிவித்தார். மேலும், விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தில் தமிழர் கட்சித் தலைவர்களையே கொலை செய்தனர். தமிழர் தலைவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என எங்களிடம் தஞ்சம் புகுந்திருந்தனர். பேச்சுவார்த்தை நடத்தி, சுமுக அரசு அமைய பாடுபட்டோம். அவ்வாறு அங்கே சுமுக சூழல் ஏற்பட்டிருந்தால், பிரபாகரனை அவர்களே பழி வாங்கியிருப்பார்கள். அதனால் நாங்கள் பிரபாகரன் உயிர் குறித்து அச்சப்பட்டோம் என்று கூறியுள்ளார் ரணில் விக்ரமசிங்க. சென்னையில் இருந்து செயல்படும் தந்தி டிவி தொலைக்காட்சிக்கு ரணில் விக்கிரமசிங்க அளித்த பிரத்யேகப் பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அந்தப் பேட்டியில் அவர் கூறியது… இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக இன அழிப்பு செய்தனர் என்று வடக்கு மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றியதை நான் ஏற்கவில்லை. வடக்கு மாகாண முதல்வரின் பேச்சு பொறுப்பற்றது. அவர் என்னை நேரில் சந்தித்து பேசியதில்லை. விக்னேஸ்வரன் இந்த விவகாரத்தில் பொய் சொல்கிறார். நான் யாழ் பகுதிக்குச் செல்லும்போது அவரை சந்திக்க மாட்டேன். அவருடன் தொடர்பு கொள்வதில் சிக்கலை ஏற்படுத்தும் தீர்மானம் அது. அதை அவர் திரும்பப் பெற்றால் ஒருவேளை சந்திப்பேன். இந்தியாவில் ஒரு மாநிலம், இந்திய அரசு இனஅழிப்பு நடத்துகிறது என்று தீர்மானம் நிறைவேற்றினால், இதேபோன்ற சிக்கல் தான் அங்கும் உருவாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சம்பந்தன் போன்றவர்களுடன் இதுபற்றிப் பேசி வருகிறேன். போர் நடந்த போது அனைத்துத் தரப்பிலும் மக்கள் கொல்லப்பட்டது உண்மை. தமிழர்கள் மட்டுமல்ல, முஸ்லிம்களும், சிங்கள மக்களும் கூட கொல்லபட்டனர். தமிழர்களில் ஒரு பகுதியினர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர் என்பதை மறக்கக் கூடாது. பொதுவாகச் சொன்னால், இலங்கை பாதுகாப்புப் படையினர், இந்திய அமைதிப் படை, விடுதலைப் புலிகள் என்று அனைத்துத் தரப்பினராலும் உயிரிழப்பு ஏற்பட்டது. இதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், இலங்கை அரசு மட்டும்தான் காரணம் என்று சொல்ல முடியுமா ? யாழ்ப்பாணத்தில் புலிகளின் அரசியல் தலைமை மிச்சம் இருந்திருந்தால், விக்னேஸ்வரன் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குச் சென்று முதல்வராகப் பதவி ஏற்றிருக்க முடியாது என்பதை அவரே அறிவார். 2005 தேர்தலில் யாழ்ப்பாண மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்தால், 2009-ல் நடந்த நிகழ்வுகளை என்னால் தடுத்திருக்க முடியும். ராஜபட்சவை அதிபராக்கியது யார்? தென் பகுதி மக்கள் அல்ல. 3 முதல் 4 லட்சம் தமிழர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பதில், ராஜபட்சவிற்கும் புலிகளுக்கும் ஓர் உடன்படிக்கை இருந்தது. ராஜபட்ச புலிகளுக்கு பணம் கொடுத்தார். பணத்தை எடுத்து சென்று கொடுத்த அமிர்காந்தன் இன்றும் மத்திய கிழக்கு ஆசியாவில் எங்கோ இருக்கிறார். இது தெரிந்த விஷயம் தான் என்றார் ரணில் விக்கிரமசிங்க.
பிரபாகரனுக்கு ராஜபக்சவே பணம் கொடுத்தார்: ரணில் விக்ரமசிங்க குற்றச்சாட்டு
Popular Categories



