சென்னை: கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதி, அதை விட்டுக் கொடுக்க மாட்டோம், கச்சத் தீவு விவகாரத்தில் இந்திய அரசு ஒருபோதும் அதனை திரும்பப் பெறுவோம் என இலங்கையிடம் பேச்சுவார்த்தை நடத்தாது என்று கூறினார் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. சென்னையில் இருந்து செயல்படும் தந்தி டிவி தொலைக்காட்சிக்கு ரணில் விக்கிரமசிங்க அளித்த பிரத்யேகப் பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அந்தப் பேட்டியில் அவர் கூறியிருந்த கருத்துகள்….
-
கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதி: கச்சச்தீவு இலங்கையின் ஒரு பகுதி. இந்திய அரசும் அது இலங்கைக்குச் சொந்தம் என்றே கருதுகிறது. அதனால், கச்சத்தீவைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா குரல் எழுப்பாது. நாங்களும் கச்சத்தீவை விட்டுத் தரப்போவதில்லை. இந்த விவகாரம் இது தமிழக அரசியலில் ஒரு பகுதி என்பது எனக்கு நன்கு தெரியும். கச்சத்தீவில் மீன்பிடிக்கும் விவகாரத்தைப் பொருத்தவரை, அது எங்கள் வடக்குப் பகுதி மீனவர்களின் பாரம்பரிய உரிமை சார்ந்தது.
-
இந்திய மீனவர்களைச் சுட புலிகள் ஆயுதம் அளித்தனர்: எங்கள் தெற்குப் பகுதி மீனவர்கள் கூட, புத்தளம் உள்ளிட்ட பகுதிகளில் இந்திய மீனவர்கள் வந்து இழுவை மூலம் மீன் பிடிப்பதாகக் கூறுகின்றனர். இது எங்களுக்கு பெரிய பிரச்னையாக இருக்கிறது. இது எங்கள் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனை. போர்க் காலத்தில் எங்கள் மீனவர்களை நாங்கள் மீன் பிடிக்க அனுமதிக்கவில்லை. இல்லையெனில், அவர்கள் தொடர்ந்து மீன்பிடித்து வந்திருப்பர். ஒரு கட்டத்தில், இந்தியாவிலிருந்து வரும் மீனவர்களைச் சுட ஆயுதம் கூட விடுதலைப்புலிகள் கொடுத்தனர். நாங்கள் அப்படிச் செய்யவில்லை. தமிழக – இலங்கை மீனவர்களிடையேயான பிரச்னையை பேசித் தீர்க்க வேண்டும் என்று கருதுகிறேன்.
-
இப்போது மீனவர்களைச் சுடுவதில்லை: தமிழக மீனவர்களை கடந்த காலங்களில் சுட்டிருக்கலாம். சில அப்பாவி மீனவர்களை இலங்கைக் கடற்படை சுட்டு உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், இப்போது சுடுவது இல்லை. கச்சத்தீவு உடன்படிக்கை ஏற்பட்ட காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட அதே அளவு, அதே எண்ணிக்கை படகு வகைகளை தமிழக மீனவர்கள் பயன்படுத்தத் தயார் என்றால் அதுதொடர்பாக நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்.இந்திய மீனவர்கள் இழுவைமடி வலைகள் கொண்டு மீன் பிடிப்பதை அனுமதிக்க முடியாது. இது இலங்கையின் கடல் பரப்பு. இலங்கை மீனவர்கள் இந்திய கடல் பகுதியில் இப்படி மீன் பிடித்தால் என்ன செய்திருப்பீர்கள்?
-
13-ஆவது சட்டத் திருத்தம்: இலங்கையில் 13-ஆவது சட்டத்திருத்தத்தைச் செயல் படுத்தி வருகிறோம். அது எப்படிச் செயல்படும் என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். காவல் துறை செயல்பாடு அரசியலாக்கப்படுமோ என்ற சந்தேகத்தை சிலர் எழுப்பியுள்ளனர். சுதந்திர காவல் ஆணையம் இருந்தால் போதுமா அல்லது வேறு நடவடிக்கைகள் தேவையா என்று பார்க்க வேண்டும். முதல்வர்களின் தனிப்பட்ட ராணுவமாக காவல் துறை மாறிவிடக் கூடாது. இந்தியா போன்ற நிலைமை இங்கு இல்லை.
-
அகதிகள் விவகாரம்: தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகள் இலங்கைக்குத் திரும்ப ஏற்ற சூழல் இருக்கிறது. ஆனால், அவர்களுக்கு இன்னும் சந்தேகம் தீராமல், மேலும் காலஅவகாசம் தேவைப்படும்பட்சத்தில், அவகாசம் அளிக்கலாம். சூழல் படிப்படியாக மேம்பட்டு, இயல்பு நிலை திரும்புகிறது என்று தெரிய வந்தால், இலங்கை அகதிகள் தாயகம் திரும்பலாமே என்று தமிழக மக்களே கருதத் தொடங்குவர். ஆனால், யாரையும் நாங்கள் நிர்பந்திக்க மாட்டோம். உள்நாட்டில் உள்ள அகதிகளை மீள் குடியேற்றம் செய்வதில் சில தாமதங்கள் ஆகின்றன. விரைவில் அவர்கள் மீள் குடியேற்றம் செய்யப்படுவர்.
-
தமிழகத்தை அறிவேன்: நான் முன்பு பிரதமராக இருந்த போது, தமிழகத்துடன் தொடர்ந்து தொடர்பில்தான் இருந்தோம். அவர்களுடன் தகவல் பரிமாற்றம் நடந்தது. நாங்கள் இந்திய அரசுடன்தான் பேச வேண்டும். ஆனால், எனக்கு சென்னையை நன்றாகத் தெரியும். அங்கு அடிக்கடி சென்று வருகிறோம். எங்களுக்கு அங்கு நண்பர்கள் உள்ளனர்.
-
மோடியின் இலங்கை பயணம்: பிரதமர் மோடியை யாழ்ப்பாணத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளோம். தமிழர்களை மோடி யாழ்ப்பாணத்தில் சந்திக்க இருக்கிறார். இலங்கையின் இதர பகுதிகளுக்குச் செல்வது பற்றி அவர் தான் முடிவு செய்ய வேண்டும். அவர் கண்டிக்குச் செல்லக்கூடும். அங்கு ஸ்ரீதலதா ஆலயத்திற்கு சென்று வழிபடலாம். வட மாகாணத்துக்கும் செல்வார் என்றே கருதுகிறேன். இது நல்லெண்ணத்தின் அடிப்படையிலான பயணம். இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்தும் என்றார் அவர்.



