சென்னை: பேரவை அவைக்காவலரைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில், தேமுதிக., எம்.எல்.ஏ.க்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்களின் விவாதம் கடந்த பிப்ரவரி 19-ந் தேதி நடைபெற்றது. அப்போது, தே.மு.தி.க. எம்.எல்.ஏ.வும், எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான மோகன்ராஜ் பேசும்போது கூறிய வார்த்தையால், அவையில் பிரச்னை ஏற்பட்டது. அதை அடுத்து, தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற அவைத்தலைவர் ப.தனபால் உத்தரவிட்டார். அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் அவைக் காவலர் விஜயன் ஈடுபட்டபோது தாக்கப்பட்டார். இது குறித்து கோட்டை காவல் நிலையத்தில் அவர் புகார் ஒன்றை அளித்தார். அதன் அடிப்படையில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் தினகரன், சேகர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர்கள் இருவரும் மனு தாக்கல் செய்தனர். இருவருக்கும் நிபந்தனையின் பேரில் முன்ஜாமீன் வழங்கப்பட்டது. அப்போது, இருவரும் திங்கள், வெள்ளிக்கிழமையில் கோட்டை காவல் நிலையத்தில் காலை 10.30க்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த நிபந்தனைப் படி, இருவரும் ஆஜராகி திங்கள் அன்றும், வெள்ளிக் கிழமையிலும் கையெழுத்திட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் தினகரன், சேகர் ஆகியோருக்கு எதிராக ஜார்ஜ் டவுண் 7-வது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் கடந்த 3 ஆம் தேதி கோட்டை போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். குற்றப் பத்திரிகையின் நகலை நீதிமன்றத்தில் ஆஜராகி பெற்றுக்கொள்ள, இருவருக்கும் போலீஸார் சம்மன் தயார் செய்தனர். கோட்டை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நேற்று இருவரும் ஆஜரானபோது அந்த சம்மனை அவர்களிடம் போலீசார் கொடுத்தனர். ஆனால், அதனை அவர்கள் வாங்க மறுத்தனர். முறைப்படி அதை வீட்டில் வந்து கொடுக்கும்படி கூறிச் சென்றுவிட்டனர்..
அவைக்காவலரை தாக்கியதாக வழக்கு: தேமுதிக., எம்.எல்.ஏ.க்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம்: ‘ஜாக்டா’ கோரிக்கை
சென்னை: தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் என்று சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனி பிரிவில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டா) கோரிக்கை மனு அளித்துள்ளது. இந்த மனுவில்,
- ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி மத்திய அரசில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம்போல், தமிழக அரசின் கீழ் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்கிட வேண்டும்.
- தன்பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (சி.பி.எஸ்.) ரத்து செய்துவிட்டு, பழைய திட்டத்தை (ஜி.பி.எப்.) நடைமுறைப்படுத்த வேண்டும். தொகுப்பூதிய அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட்ட அனைத்து நிலை ஆசிரியர்களையும் பணியில் சேர்த்த நாள் முதல் பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
- ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறையில் வழங்குவதுபோல, மாவட்ட அளவிலான கலந்தாய்வின் மூலம் பொதுமாறுதல் வழங்க வேண்டும். என்று கூறப்பட்டிருந்தது.
இதனிடையே நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இதே கோரிக்கையை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். அதில், தமிழக அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தையல், ஓவியம், உடற்கல்வி, இசை போன்ற தொழிற்கல்வி கற்பிக்கும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் 16,549 பேர் கடந்த 2012-ஆம் ஆண்டு தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்குப் போட்டித் தேர்வு நடத்தி பணி நியமனம் செய்யவிருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போட்டித் தேர்வு மூலம் 652 கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். போட்டித் தேர்வில் கேள்விகள் சரியாக இல்லை எனக் கூறி அவர்களைப் பணி நீக்கம் செய்துவிட்டனர். இப்போது அவர்களுடைய வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, தகுதித் தேர்வு மூலம் ஆசிரியர்களைத் தேர்வு செய்வதைத் தவிர்க்க வேண்டும். தமிழகப் பள்ளிகளில் தமிழ்ப் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும். தமிழக அரசு விலையில்லாமல் வழங்கும் மடிக் கணினி, புத்தகம், நோட்டுப் புத்தகம், புத்தகப் பை, சீருடைகள் போன்ற பொருள்களை உரிய நேரத்தில் வழங்க வேண்டும். மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர வேண்டும்; அரசுப் பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்; ஆசிரியர், அலுவலர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். அவர்களுடன் பேச்சு நடத்தி ஆசிரியர்களின் பிரச்னைகளுக்கு சுமுகத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
வருத்தம் தெரிவித்து தியாகு கடிதம்: தர்ணாவை முடித்துக் கொண்ட கவிஞர் தாமரை !
சென்னை: கணவர் தியாகு வருத்தம் தெரிவித்து கடிதம் அளித்ததைத் தொடர்ந்து கவிஞர் தாமரை தனது 8 நாள் தர்ணா போராட்டத்தை முடித்துக் கொண்டார். வெள்ளிக்கிழமை நேற்று இரவு 9 மணிக்கு தியாகு, கவிஞர் தாமரையுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அறிக்கை ஒன்றினை அளித்தார். ஆனால், வேறு எதுவும் பேசவில்லை. தியாகு எழுதியிருந்த கடிதத்தில், கவிஞர் தாமரை அவர்களுக்கு… ஓவியர் வீர.சந்தானம், வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோருக்கு 3/3 இலும் இன்று காலையும் எழுதிய மடல்களின் தொடர்ச்சியாக இதை எழுதுகிறேன். நீங்கள் கோரியிருந்தபடி, நடுநிலையான விசாரணைக் குழு அமைக்கும் பொறுப்பை ஓவியரும் வழக்கறிஞரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். சென்ற நவம்பர் 23 ஆம் நாள் நான் வீட்டை விட்டு வெளியேறியதற்கு அடிப்படையாகவும் உடனடியாகவும் அழுத்தமான காரணங்கள் இருப்பினும் (காண்க: 28/11 மின்ம அஞ்சல்) அந்த வெளிநகர்வினாலும் அடுத்து வந்த கிட்டத்தட்ட மூன்று மாத காலப் பிரிவினாலும், அனைத்துக்கும் உச்சமாக, கடந்த 7 நாள் தர்ணாப் போராட்டத்தாலும் உங்களுக்கும் சமரனுக்கும் ஏற்பட்டுள்ள உடன் துன்பத்துக்காகவும்ன் மன வேதனைக்காகவும் உளமார வருந்துகிறேன். நான் இவ்வாறு வருத்தம் தெரிவித்திருப்பதை ஏற்று உங்கள் போராட்டத்தைக் கைவிட்டு இல்லம் திரும்ப வேண்டுகிறேன். அன்புடன் தியாகு
- என்று அவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
மீனவர்களை விடுதலை கோரி காரைக்காலில் பெண்கள் ஒப்பாரி போராட்டம்
காரைக்கால்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தங்கள் பகுதி மீனவர்களை விடுதலை செய்யக் கோரி காரைக்காலில் மீனவப் பெண்கள் ஒப்பாரிக் போராட்டம் நடத்தினர். கடந்த மாதம் 22ந் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 57 மீனவர்களை அவர்களது 7 படகுகளுடன் கோடியக்கரை அருகே 26ந்தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க மத்திய–மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்கக் கோரி காரைக்கால்மேடு கடற்கரையில் மீனவ பெண்கள் பேரவை சார்பில் நேற்று ஒப்பாரி போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் கலந்து கொண்டு கடலில் இறங்கி ஒப்பாரி வைத்து அழுதனர்.
நிர்பயா- குற்றவாளியிடம் பேட்டி எடுக்க ரூ.40 ஆயிரம் கொடுத்தார்களாம்!
புதுதில்லி: நிர்பயா – குற்றவாளி முகேஷ் சிங்கிடம் பேட்டி எடுப்பதற்காக, ஆவணப் படத் தயாரிப்பாளர்கள் ரூ.40 ஆயிரம் கொடுத்தார்களாம். நவ்பாரத் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, லெஸ்லி உட்வின், முகேஷ் சிங்கிடம் பேட்டி எடுக்க பல முறை முயன்றார்களாம். ஆனால், அது முடியாமல் போகவே, குல்லர் என்ற நபர் மூலம் திகார் சிறை நிர்வாகம் மற்றும் உள்துறை அதிகாரிகளை சந்தித்தார்களாம். இந்தப் பேட்டிக்காக முகேஷ் சிங் 2 லட்ச ரூபாய் கேட்டானாம். ஆனால், இறுதியாக அந்த பேரம் ரூ.40 ஆயிரத்துக்கு படிந்துள்ளது. அந்தப் பணம் முகேஷ் சிங்கின் குடும்பத்துக்குச் சென்று சேர்ந்ததாக நவ்பாரத் டைம்ஸ் புலனாய்வு தெரிவிக்கிறது. இந்த ஆவணப் படம் இந்தியாவின் மகள் பிரிட்டிஷ் ஆவணப் படத் தயாரிப்பாளர் லெஸ்லீ உட்வினின் தயாரிப்பு. ஆனால், இந்தப் படத்துக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பும் சர்ச்சையும் எழுந்ததை அடுத்து ஒளிபரப்பு செய்ய தடை விதிக்கப்பட்டது.
நடிகைகளின் நிர்வாணப் படங்களை வெளியிடுவது கற்பழிப்பைவிட மோசமானது: ஹன்சிகா
நடிகைகளின் நிர்வாணப் படங்கள், ஆபாச வீடியோக்களை மோசடியாக உருவாக்கி வெளியிடுவது கற்பழிப்பை விட மோசமானது என்று கூறியுள்ளார் நடிகை ஹன்சிகா மோத்வானி. அண்மையில் ஹன்சிகாவின் குளியல் காட்சி வீடியோ என்ற பெயரில் வெளியான சில நிமிட ஆபாசப் படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குளியலறையில் கேமராவை மறைத்து வைத்து, ஹன்சிகா போன்ற பெண் குளிப்பதைப் படமாக்கியுள்ளனர். இந்த வீடியோவைப் பார்த்த பலரும் படத்திலிருப்பது ஹன்சிகாதான் என நம்பினர். இதுகுறித்து ஹன்சிகா தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போலீசிலும் அவர் இது குறித்து புகார் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அந்த வீடியோப் பதிவு குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், “இந்த மாதிரி வீடியோக்கள் வெளியாவது மிகவும் வருத்தப்பட வேண்டிய ஒன்று. சினிமாவில் நாங்கள் சொகுசு வாழ்க்கை வாழவில்லை. கஷ்டப்பட்டு உழைத்து, மற்றவர்களைச் சந்தோஷமாக வைக்கிறோம். ஆனால் எங்களை இழிவுபடுத்துவதற்கு எப்படி மனசு வருகிறது என்று புரியவில்லை. இது, கற்பழிப்பை விடக் கொடுமையானது. எங்கள் மனதை புண்படுத்துகிறவர்களை கடவுள்தான் தண்டிக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.. தான் ஏன் போலீஸில் புகார் செய்யவில்லை என்பதற்கு பதிலாக, “அந்த வீடியோ படத்திலிருப்பது நான் இல்லை. பிறகு ஏன் புகார் செய்ய வேண்டும்?,” என்று கேட்டுள்ளார்.
மன்மத வருட தணிகை பஞ்சாங்கம் வெளியீடு
ஸ்ரீதணிகை திருக்கணித வானவியல் – ஸ்ரீமன்மத வருட பஞ்சாங்கம் பெருந்துறையில் – ஜோதிட முழக்கம் மாநாட்டில் அஸ்வமேத யாகம் செய்த ஆகம பெரியார்கள் மற்றும் ஜோதிஷ அறிஞர்களின் திருக்கரங்களால் வெளியிடப்பட்டது. (படம்: வலமிருந்து திரு. அஸ்ட்ரோ செந்தில் குமார், திரு. சாய்குமார், மஹாஸ்ரீ காஞ்சி. இராஜப்பா சிவாச்சாரியார், மஹாஸ்ரீ.இலண்டன். இராமநாதன் பரமேஸ்வராச்சாரியார், திரு. ஜோதிட கலையரசு ஆதித்ய குருஜி, பாலு.சரவணசர்மா – படம் உதவி வேலூர் திரு. சக்தி வேல்)
திராவிட இயக்கத்தை அழித்து விடலாம் என கனவு காண வேண்டாம்: கருணாநிதி
சென்னை: லட்சக் கணக்கான தி.மு.க. தொண்டர்கள் இருக்கும் வரை திராவிட இயக்கத்தை யாரும் அழித்து விடலாம் என்று கனவு காண வேண்டாம் என்று தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் கருணாநிதி பேசினார். தி.மு.க. செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி பேசும்போது, ”இது எதற்காகக் கூட்டப்பட்ட செயற்குழு? புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள். நம்முடைய கடமைகளிலே ஒன்று, ஒரு கழகம், ஒரு இயக்கம் தன்னுடைய குழுக்களின் கூட்டத்தை அடிக்கடி கூட்ட வேண்டும் என்ற அந்த அடிப்படையில் கூட்டப்பட்ட செயற்குழு அல்ல இது. இந்தச்செயற்குழுவைக் கூட்டி, இதிலே எடுக்கப்படுகின்ற முடிவுகள், தமிழகத்திலே மட்டுமல்ல, இந்தியாவிலே மாத்திரமல்ல, ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்தக்கூட்டத்தை நாம் கூட்டியிருக்கிறோம். இந்தக்குழுவின் வெற்றிக்கு உங்களுடைய கருத்துகள், உங்களுடைய எண்ணங்கள் எல்லாம் துணை நிற்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. செயற்குழுவிலே 12 தீர்மானங்கள் என்ற இந்த விளைவைச் சந்தித்திருக்கிறோம். இந்த விளைவுகளுக்கு பயன் நாளைக்கே கிடைக்குமா அல்லது நாளை மறுநாள் கிடைக்குமா என்பதல்ல. உள்கட்சித் தேர்தலால் ஏற்பட்ட கோஷ்டிப் பூசல்களை மறந்து, தி.மு.க.வினர் என்ற உணர்வோடு அனைவரும் செயல்பட வேண்டும் என்று இந்த செயற்குழுவில் வலியுறுத்த விரும்புகிறேன். முதலில் தி.மு.க., பிறகுதான் நாம் என்ற உணர்வு அனைவருக்கும் வேண்டும். தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர்கள் என அனைவரின் முன்னேற்றத்துக்கும் தி.மு.க.வே காரணம். நாம் விழித்திருக்காவிட்டால், ஹிந்தி ஆதிக்கம் தமிழகத்தில் கோலோச்சியிருக்கும். சாதி மதமற்ற சமுதாயம் என்று இன்று முழக்கமிடும் கட்சிகள் அனைத்தும் நாம் அதைக் கூறியபோது, நம்மை எள்ளி நகைத்தவர்கள் தான். இன்றைக்கு நம்மை ஏற்றுள்ளனர். இந்த நாட்டில், குறிப்பாக தமிழகத்தில் உருவாகியுள்ள ஒரு ஆட்சி, நம்முடைய சமுதாய கருத்துகளுக்கெல்லாம் எதிரான ஒரு ஆட்சி. இப்போது தமிழகத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றால், அதை வரவிடுவதற்கு யார் காரணம் என்பதை அறிய வேண்டும். அந்தக் காரணத்தை அறிந்து, அடி வேரை, ஆணி வேரைக் கிள்ளியெறிந்தால், அந்த ஆட்சியினால் பரவுகின்ற நச்சுக்காற்று தடுக்கப்படும். அப்படித் தடுக்கப்படுவதற்கு எல்லோரும் ஒன்று சேருவோம் என்று தான் உங்களையெல்லாம் நான் அழைக்கிறேன். தமிழுக்கு ஏற்றம் தருவோம் என்று சொன்னால்தான், தமிழகத்தில் தங்கள் கட்சியை ஆட்சிப் பொறுப்புக்குக் கொண்டு வர முடியும் என்று கருதும் சில புத்திசாலிகள் வடக்கே (பா.ஜ.க.) இருக்கின்றனர். அவர்களுக்குத் துணையாக இங்கே ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்களின் முக்கியமான வேலை தி.மு.க.வை வீழ்த்துவது தான். தி.மு.க.வை வீழ்த்தினால் தான் தமிழகத்தில் தலைகாட்ட முடியும் என்று கருதுகின்றனர். ஆனால், அந்தக் கனவு பலிக்காது. தி.மு.க.வை எவனும் அழித்து விடலாம் என்று கனவு காணத் தேவையில்லை. அத்தகைய இரும்பு நெஞ்சம் கொண்டவர்கள், அத்தகைய கொள்கை உரம் வாய்ந்தவர்கள் நாங்கள். அப்படிப்பட்ட இயக்கம் இன்றைக்கு காலையிலே இங்கே சில நண்பர்கள் பேசியதைப் போல நாம் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்று சொன்னார்கள் என்றால், இப்போது எங்கே போய்விட்டது ஆட்சி? ஆட்சி நம்மிடம் தான் இருக்கிறது. நாம் சொன்னபடி செய்கின்ற ஆட்சி தான் இங்கே இருக்க முடியும். நாம் நினைக்கிறபடி நடக்கின்ற ஆட்சிதான் இங்கே இருக்க முடியும். அப்படிப்பட்ட ஆட்சியை தி.மு.க. ஏற்கனவே தந்து, அந்தக் கழகத்தின் சார்பில் ஆட்சி நடத்தி நாம் கொண்டு வந்த திட்டங்களை நாம் உருவாக்கிய கட்டடங்களை யாரும் தொட முடியாது, அந்தக் கட்டடங்கள் எல்லாம் திராவிடப் பாரம்பரியத்தை, திராவிட இன உணர்வை திராவிட சமுதாய எழுச்சியை பரப்பக் கூடியவை. அதை யாராலும் ஒன்றும் செய்து விட முடியாது. ஊருக்குப் போனதும், உள்கட்சித் தேர்தலை மனதிலே எண்ணி அதற்கு யாரையாவது பழி வாங்க வேண்டுமென்று யாரும் கருதாதீர்கள். பழிக்குப்பழி வாங்க வேண்டுமென்று கருதினால், நம்மீது தான் அந்த வாள் பாயும் என்பதை மறந்து விடாதீர்கள். இன்றைக்கு நாம் ஒருவரைப் பழி வாங்கினால், நாளைக்கு அவர் நம்மைப் பழி வாங்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்? ஆகவே இந்த பழி வாங்குகிற எண்ணம் கூடாது என்ற பரந்த மனப்பான்மை வேண்டும். ஒற்றுமையாக இருங்கள். தி.மு.க.விலே ஒற்றுமை என்ற நான்காவது சொல்லையும் சேர்த்து கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று கூறி, அந்த ஒற்றுமையைப் பேணிக்காப்போம் என்ற உறுதியை எடுங்கள்” என்றார்.
தீமாபுர் சம்பவம்: நாகா. அரசிடம் அறிக்கை கேட்கிறது மத்திய அரசு
நாகாலாந்தில் பாலியல் பலாத்காரக் குற்றவாளி ஒருவரை சிறையில் இருந்து வெளியில் இழுந்து வந்து அடித்துக் கொன்ற சம்பவம் குறித்து நாகாலாந்து அரசிடம் மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளது. வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வந்தவர் சையத் பரீத்கான்(35). இவர், நாகாலாந்தில் கார் விற்பனைத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவர் கடந்த 23, 24-ஆம் தேதிகளில் நாகா பழங்குடியின பெண் ஒருவரை பல்வேறு பகுதிகளுக்குக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து சையத்தை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சையத், திம்பூரில் பாதுகாப்பு நிறைந்த மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த பாலியல் பலாத்காரச் சம்பவத்தைக் கேள்விப் பட்ட நாகா பழங்குடியின மக்கள், சையத் மீது கடும் கோபத்தில் இருந்தனர். சையத்துக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தனர். இதை அடுத்து, ஆயிரக்கணக்கில் அவர்கள் சிறை முன்னே திரண்டனர். தீமாபுர் மத்தியச் சிறையை உடைத்து உள்ளே சென்ற அவர்கள், சையத்தை சிறைக்கு வெளியே இழுத்து, ஊர்வலமாக அழைத்துச் சென்று ஊரின் மையப் பகுதியில் வைத்து அடித்துக் கொன்றனர். அதன் பின்னும் ஆத்திரம் அடங்காமல், அங்கிருந்த வாகனங்களையும் தீ வைத்துக் கொளுத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு நிலையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தச் சம்பவத்தை அடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இச்சம்பவம் குறித்து விரிவான அறிக்கை அளிக்கும்படி நாகலாந்து அரசிடம் மத்திய அரசு கேட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும், சம்பவம் நடந்த பகுதியில் ஏற்பட்டுள்ள பதட்டத்தை தணித்து குற்றவாளிகளைக் கைது செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இது தவிர நாகாலாந்து எல்லைப் பகுதியில் உள்ள அசாமிலும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும்படி மத்திய அரசு எச்சரிக்கை செய்துள்ளது.

