சென்னை: லட்சக் கணக்கான தி.மு.க. தொண்டர்கள் இருக்கும் வரை திராவிட இயக்கத்தை யாரும் அழித்து விடலாம் என்று கனவு காண வேண்டாம் என்று தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் கருணாநிதி பேசினார். தி.மு.க. செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி பேசும்போது, ”இது எதற்காகக் கூட்டப்பட்ட செயற்குழு? புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள். நம்முடைய கடமைகளிலே ஒன்று, ஒரு கழகம், ஒரு இயக்கம் தன்னுடைய குழுக்களின் கூட்டத்தை அடிக்கடி கூட்ட வேண்டும் என்ற அந்த அடிப்படையில் கூட்டப்பட்ட செயற்குழு அல்ல இது. இந்தச்செயற்குழுவைக் கூட்டி, இதிலே எடுக்கப்படுகின்ற முடிவுகள், தமிழகத்திலே மட்டுமல்ல, இந்தியாவிலே மாத்திரமல்ல, ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்தக்கூட்டத்தை நாம் கூட்டியிருக்கிறோம். இந்தக்குழுவின் வெற்றிக்கு உங்களுடைய கருத்துகள், உங்களுடைய எண்ணங்கள் எல்லாம் துணை நிற்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. செயற்குழுவிலே 12 தீர்மானங்கள் என்ற இந்த விளைவைச் சந்தித்திருக்கிறோம். இந்த விளைவுகளுக்கு பயன் நாளைக்கே கிடைக்குமா அல்லது நாளை மறுநாள் கிடைக்குமா என்பதல்ல. உள்கட்சித் தேர்தலால் ஏற்பட்ட கோஷ்டிப் பூசல்களை மறந்து, தி.மு.க.வினர் என்ற உணர்வோடு அனைவரும் செயல்பட வேண்டும் என்று இந்த செயற்குழுவில் வலியுறுத்த விரும்புகிறேன். முதலில் தி.மு.க., பிறகுதான் நாம் என்ற உணர்வு அனைவருக்கும் வேண்டும். தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர்கள் என அனைவரின் முன்னேற்றத்துக்கும் தி.மு.க.வே காரணம். நாம் விழித்திருக்காவிட்டால், ஹிந்தி ஆதிக்கம் தமிழகத்தில் கோலோச்சியிருக்கும். சாதி மதமற்ற சமுதாயம் என்று இன்று முழக்கமிடும் கட்சிகள் அனைத்தும் நாம் அதைக் கூறியபோது, நம்மை எள்ளி நகைத்தவர்கள் தான். இன்றைக்கு நம்மை ஏற்றுள்ளனர். இந்த நாட்டில், குறிப்பாக தமிழகத்தில் உருவாகியுள்ள ஒரு ஆட்சி, நம்முடைய சமுதாய கருத்துகளுக்கெல்லாம் எதிரான ஒரு ஆட்சி. இப்போது தமிழகத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றால், அதை வரவிடுவதற்கு யார் காரணம் என்பதை அறிய வேண்டும். அந்தக் காரணத்தை அறிந்து, அடி வேரை, ஆணி வேரைக் கிள்ளியெறிந்தால், அந்த ஆட்சியினால் பரவுகின்ற நச்சுக்காற்று தடுக்கப்படும். அப்படித் தடுக்கப்படுவதற்கு எல்லோரும் ஒன்று சேருவோம் என்று தான் உங்களையெல்லாம் நான் அழைக்கிறேன். தமிழுக்கு ஏற்றம் தருவோம் என்று சொன்னால்தான், தமிழகத்தில் தங்கள் கட்சியை ஆட்சிப் பொறுப்புக்குக் கொண்டு வர முடியும் என்று கருதும் சில புத்திசாலிகள் வடக்கே (பா.ஜ.க.) இருக்கின்றனர். அவர்களுக்குத் துணையாக இங்கே ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்களின் முக்கியமான வேலை தி.மு.க.வை வீழ்த்துவது தான். தி.மு.க.வை வீழ்த்தினால் தான் தமிழகத்தில் தலைகாட்ட முடியும் என்று கருதுகின்றனர். ஆனால், அந்தக் கனவு பலிக்காது. தி.மு.க.வை எவனும் அழித்து விடலாம் என்று கனவு காணத் தேவையில்லை. அத்தகைய இரும்பு நெஞ்சம் கொண்டவர்கள், அத்தகைய கொள்கை உரம் வாய்ந்தவர்கள் நாங்கள். அப்படிப்பட்ட இயக்கம் இன்றைக்கு காலையிலே இங்கே சில நண்பர்கள் பேசியதைப் போல நாம் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்று சொன்னார்கள் என்றால், இப்போது எங்கே போய்விட்டது ஆட்சி? ஆட்சி நம்மிடம் தான் இருக்கிறது. நாம் சொன்னபடி செய்கின்ற ஆட்சி தான் இங்கே இருக்க முடியும். நாம் நினைக்கிறபடி நடக்கின்ற ஆட்சிதான் இங்கே இருக்க முடியும். அப்படிப்பட்ட ஆட்சியை தி.மு.க. ஏற்கனவே தந்து, அந்தக் கழகத்தின் சார்பில் ஆட்சி நடத்தி நாம் கொண்டு வந்த திட்டங்களை நாம் உருவாக்கிய கட்டடங்களை யாரும் தொட முடியாது, அந்தக் கட்டடங்கள் எல்லாம் திராவிடப் பாரம்பரியத்தை, திராவிட இன உணர்வை திராவிட சமுதாய எழுச்சியை பரப்பக் கூடியவை. அதை யாராலும் ஒன்றும் செய்து விட முடியாது. ஊருக்குப் போனதும், உள்கட்சித் தேர்தலை மனதிலே எண்ணி அதற்கு யாரையாவது பழி வாங்க வேண்டுமென்று யாரும் கருதாதீர்கள். பழிக்குப்பழி வாங்க வேண்டுமென்று கருதினால், நம்மீது தான் அந்த வாள் பாயும் என்பதை மறந்து விடாதீர்கள். இன்றைக்கு நாம் ஒருவரைப் பழி வாங்கினால், நாளைக்கு அவர் நம்மைப் பழி வாங்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்? ஆகவே இந்த பழி வாங்குகிற எண்ணம் கூடாது என்ற பரந்த மனப்பான்மை வேண்டும். ஒற்றுமையாக இருங்கள். தி.மு.க.விலே ஒற்றுமை என்ற நான்காவது சொல்லையும் சேர்த்து கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று கூறி, அந்த ஒற்றுமையைப் பேணிக்காப்போம் என்ற உறுதியை எடுங்கள்” என்றார்.
திராவிட இயக்கத்தை அழித்து விடலாம் என கனவு காண வேண்டாம்: கருணாநிதி
Popular Categories



