அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் போருக்கு எந்நேரத்திலும் தயாராக இருங்கள் என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் அந்நாட்டு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். வடகொரியாவுடன் பகை பாராட்டி, அதன் எதிரி நாடாகத் திகழும் தென்கொரியாவுடன் அமெரிக்கா நெருங்கிய நட்பு பாராட்டி வருகிறது. தென்கொரியாவுக்கு ராணுவ ரீதியான உதவிகளைச் செய்வதுடன், அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 30 ஆயிரம் ராணுவ வீரர்கள் தென்கொரியப் பகுதியிலும் தங்கியுள்ளனர். தென் கொரியாவைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் ராணுவ வீரர்களுடன் சேர்ந்து, வரும் 3-ம் தேதி அமெரிக்க வீரர்கள் 8 வார கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில், வட கொரியத் தலைநகர் பியாங்யாங்கில் போர் நினைவு அருங்காட்சியக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரங்கத்தை அவர் திறந்து வைத்தார். அதன்பின்னர் கிம் ஜாங்-உன், ராணுவ வீரர்களிடையே வீர உரை நிகழ்த்தினார். அப்போது அவர்… “நாட்டை மீண்டும் (தென் கொரியா-வட கொரியா) ஒன்றிணைக்க வேண்டிய சூழல் தற்போது நிலவி வரும் இந்த நேரத்தில் ஒட்டுமொத்த ராணுவமும் சித்தாந்தப்படியும், அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் முழுமையாகத் தயாராக இருக்க வேண்டும். கடின பயிற்சியில் ஈடுபட்டு ‘பட்டை மற்றும் நட்சத்திரத்தை’ (அமெரிக்க கொடியில் உள்ள சின்னங்கள்) துண்டுதுண்டாகக் கிழித்தெறிய வேண்டும்”. – என்றார்.
அமெரிக்காவுடன் போர்?: ராணுவத்தினர் தயாராக இருக்குமாறு வட கொரிய அதிபர் உத்தரவு
குஜராத்தைப் போல் நாடு முழுவதும் பூரண மது விலக்கு தேவை: குமரி அனந்தன்
சென்னை: குஜராத்தில் உள்ளதைப் போன்று நாடு முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வேண்டுகோள் விடுத்தார். அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் -ஏவிபிவி சார்பில், “மதுவில்லா தமிழகம்’ உருவாக வேண்டி, மாணவர்களின் மாநில மாநாடு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் குமரி அனந்தன் பேசியபோது, இப்போதைய புள்ளி விவரப்படி, 15 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களில் 40 சதவீதம் பேர் குடிப்பதாவும், பெண்களில் 13 சதவீதம் பேர் குடிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் ஆட்சி செய்த காலங்களிலும், ராஜாஜி, காமராஜர், அண்ணா ஆட்சி காலங்களிலும் தமிழகத்தில் மதுக்கடைகள் இல்லை. அதற்குப்பின் ஆட்சிக்கு வந்தவர்கள் மதுவிலக்கை விலக்கி, மதுவைக் கொண்டுவந்தனர். மோடி முதல்வராக இருந்த குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மது விற்பனை என்பது தற்போது மாநிலத்தின் அதிகாரத்துக்கு உள்பட்டதாக இருக்கிறது. தற்போது அவர் நாட்டின் பிரதமராக இருக்கிறார். எனவே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மதுவைக் கொண்டுவர மசோதா நிறைவேற்ற வேண்டும். பின்னர் நாடு முழுவதும் பூரண மது விலக்கை அமல்படுத்த மோடி தீர்மானம் கொண்டுவர வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
சேது சமுத்திர திட்டம்- தமிழக அரசுடன் பேசி முடிவு எடுக்கப்பட்டும்: அருண் ஜேட்லி
புது தில்லி: சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றுவது குறித்து, தமிழக அரசுடன் பேசி ஒரு முடிவு எடுக்கப் படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். நேற்று மத்திய நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்த பின்னர் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த்தார். அப்போது, சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து தமிழக அரசுடன் பேசி முடிவு எடுக்கப்படும். வரும் நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கிறோம். வசதி படைத்தவர்கள் மானியத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஏழைகள் மட்டுமே மானியம் பெறவேண்டும். வரி ஏய்ப்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும். வரி செலுத்துவோரிடம் அதிக பணம் இருப்பதையே அரசு விரும்புகிறது. ராணுவத்தில் ஒரு பதவிக்கு ஒரே ஓய்வூதியம் என்ற திட்டத்தை செயல்படுத்துவோம். – என்றார்.
அதிமுக., ஊராட்சித் தலைவர் கொலை வழக்கில் 10 பேர் மீது வழக்கு
மதுரை: மதுரை அருகே ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர் கருப்பசாமி (56) கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். மதுரை அருகே உள்ள சிலைமானை அடுத்துள்ள கார்சேரி கிராம பஞ்சாயத்துத் தலைவராக இருந்தவர் கருப்பசாமி (62) அ.தி.மு.க.க் காரரான அவர், அந்தப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். சில நாட்களுக்கு முன்பு கார்சேரியில் பொது நடைபாதையில் கட்டப்பட்ட வீடு குறித்து பிரச்னை எழுந்தது. இதுகுறித்து வழக்கு தொடரப்பட்டது. அதில், அந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்வதற்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் கடந்த 26ஆம் தேதி கிராம அதிகாரி மற்றும் வருவாய் ஊழியர்கள் முன்னிலையில் அந்த வீடுகள் அகற்றப்பட்டன. வீடு அகற்றப்பட்டதற்கு பஞ்சாயத்து தலைவர் கருப்பசாமி தான் காரணம் என்று பாதிக்கப்பட்ட தரப்பினர் நினைத்தனர். இதனால் அவரை தீர்த்துக்கட்ட அவர்கள் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை கருப்பசாமியின் வீடு அருகே பதுங்கியிருந்த 6 பேர் கொண்ட கும்பல் கருப்பசாமியை சரமாரியாக வெட்டியது. மேலும், கருப்பசாமியின் மகன் வீரமணியையும் அந்த கும்பல் கொல்ல முயன்றது. ஆனால் அவர் தப்பிவிட்டார். பலத்த வெட்டுக் காயங்களுடன் உயிருக்குப் போராடி கருப்பசாமி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை நேற்று காலை உயிரிழந்தார். இதுதொடர்பாக சிலைமான் போலீஸார் விசாரணை நடத்தி, கார்சேரி முன்னாள் ஊராட்சித் தலைவர் முனியசாமி, அவரது ஆதரவாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து,தமிழ்ச்செல்வனைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கிடையில்,கொலையாளிகளை கைது செய்யக்கோரி கார்சேரி பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
காஷ்மீர் முதல்வராக இன்று பதவியேற்கிறார் முஃப்தி முகமது சயீத்
பாஜக., கூட்டணியுடன் ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வராக முஃப்தி முகமது சயீது ஞாயிற்றுக்கிழமை இன்று பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடி வருகை தருகிறார். இதையொட்டி, விழா நடைபெறும் ஜம்முவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு பல்கலைக்கழகத்தில் உள்ள ஜோராவர் சிங் அரங்கில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மூத்த காவல் துறை கண்காணிப்பாளர் உத்தம் சந்த் கூறியபோது, அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க ஜம்மு நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா நடைபெற உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். பதவியேற்பு விழாவின்போது, பாஜக, மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர். துணை முதல்வராக பாஜகவைச் சேர்ந்த நிர்மல் சிங் பதவியேற்பார் என்று தெரிகிறது.
இலங்கைக்கு 310 ரன் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து, இலங்கை அணிகள் மோதும் 22வது லீக் சுற்றுப் போட்டி இன்று நியூசிலாந்து தலைநகர் வெலிங்க்டன் நகரில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ்வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங் செய்யத் தீர்மானித்து களம் இறங்கியது. துவக்க வீரர் அலி 15 ரன் எடுத்தார். பெல் 49 எடுத்தார். பாலன்ச் 6 ரன் எடுத்த போதும், பின்னர் வந்த ரூட் நின்று நிலைத்து ஆடி 121 ரன் எடுத்து அணியின் ஸ்கோர் அதிகரிக்க உதவினார். மோர்கன் 27ம், டெய்லர் 25ம் எடுத்தனர். 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 309 ரன் எடுத்தது. இலங்கை தரப்பில் பந்துவீச்சாளர்கள் 6 பேரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். பின்னர் 310 ரன் என்ற இலக்கை நோக்கி இலங்கை ஆடத் தொடங்கியது.
பிறந்து 3 நாளில் கடத்தப்பட்ட பெண் 17 வருடத்துக்குப் பின் பெற்றோருடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்
தென்ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரைச் சேர்ந்த தம்பதி செலஸ்ட்–மோர்னே நர்ஸ். இவர்களுக்கு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 1997 ஏப்ரலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஷெபானி என பெயரிட்டனர். பிறந்து 3 நாட்களே ஆன நிலையில் தாயின் அருகில் அக்குழந்தை தூங்கிக் கொண்டிருந்தபோது யாரோ குழந்தையை கடத்திச் சென்று விட்டனர். பல இடங்களில் தேடியும் அக்குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் லெஸ்ட்–மேர்னே நர்ஸ் தம்பதிக்கு அதன் பின்னர் 3 குழந்தைகள் பிறந்தன. இருந்தாலும் காணாமல் போன ஷெபானியின் பிறந்த நாளை அந்தத் தம்பதி விடாமல் கொண்டாடி வந்தது. இதற்கிடையே ஷெபானி படிக்கும் பள்ளியில் இவர்களது இளைய மகள் காசிடி நர்ஸ் சேர்க்கப்பட்டாள். இருவரின் முகச் சாயலும் ஒன்றாகவே இருந்ததைப் பார்த்த பலருக்கும் ஆச்சரியம். மாணவிகள் அது குறித்து ஆச்சரியமாகப் பேசினர். இது குறித்து விசாரிக்கப்பட்ட போது, ஷெபானி கடத்தப்பட்டு பல இடங்களில் வேறு பல பெண்களால் வளர்க்கப்பட்டு வருவது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து 17 வருடத்துக்கு பிறகு செலஸ்ட் தம்பதியினர் ஷெபானியை மீட்டனர். டி.என்.ஏ. சோதனை நடத்தியதில் அவள் இவர்களது குழந்தை என உறுதி செய்யப்பட்டது. பின்னர் ஷெபானியை குழந்தையாக இருந்தபோது கடத்தியதாக 55 வயதுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டாள்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்: ராமதாஸ்
சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களில் 2&வது முறையாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியிருக்கின்றன. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.18 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.09 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இவற்றுடன் உள்ளூர் வரிகளும் சேர்க்கப்படும்போது, டீசல் விலை லிட்டருக்கு ரூ.53 என்ற அளவுக்கும், பெட்ரோல் விலை ரூ.63.50 என்ற அளவுக்கும் உயரும். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருப்பதைக் காரணம் காட்டி இந்த விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிப்பதில் அரசும், எண்ணெய் நிறுவனங்களும் நேர்மையான அணுகுமுறையை கையாளவில்லை என்பதுதான் உண்மை. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு டாலர் குறைந்தால், பெட்ரோல், டீசல் விலைகளை எந்த அளவுக்கு குறைக்கவேண்டுமோ அதைவிட குறைந்த அளவில்தான் எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தன. அதே நேரத்தில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு டாலர் உயர்ந்தால், எந்த அளவுக்கு விலையை உயர்த்தவேண்டுமோ அதைவிட அதிகமாக விலையை உயர்த்துவதை எண்ணெய் நிறுவனங்கள் வழக்கமாக வைத்திருக்கின்றன. இது மிகவும் மோசமான வணிக நோக்கம் கொண்ட செயல். இது கடுமையாக கண்டிக்கத் தக்கது. அதேபோல், கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, அதன் முழு பயனையும் மக்களுக்கு அளிக்காமல், பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 7 ரூபாய் 75 பைசாவும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 6 ரூபாய் 50 பைசாவும் உயர்த்திக்கொண்ட மத்திய அரசு, இப்போது கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள பட்சத்தில், கலால் வரியை குறைத்துக்கொண்டு எரிபொருள் விலை உயராமல் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசும் அதன் வருவாயை மட்டுமே கருத்தில் கொண்டு, பொதுமக்களின் நலனை காவு கொடுத்திருக்கிறது. கச்சா எண்ணெய் விலை குறைவால் ஏற்படும் பயன்களை அரசும், எண்ணெய் நிறுவனங்களும் அனுபவிக்க வேண்டும்; விலை அதிகரிப்பால் ஏற்படும் சுமையை மக்கள் தாங்க வேண்டும் என்பது மனிதநேயமற்ற கொள்கை. கடந்த 15 நாட்களில் டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய்க்கு மேல் உயர்ந்திருப்பதால், சரக்குந்து வாடகை உயர்ந்து, அதன் விளைவாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது தேவையில்லாத சுமையை சுமத்தும் என்பதால், பெட்ரோல் & டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்
வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஜேட்லிக்கு கருணாநிதி கோரிக்கை
தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பில் அருண் ஜேட்லி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி. மத்திய பா.ஜ.க. அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: பிரதமர், திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசின் முழுமையான முதல் நிதி நிலை அறிக்கை நிதியமைச்சர் திரு. அருண்ஜேட்லி அவர்களால் இன்று நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. நிதிப்பற்றாக்குறை 4.36 சதவிகிதத்திலிருந்து 3.5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது என்றும்; இந்திய ரூபாயின் மதிப்பு 6.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்றும்; ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 7.4 சதவிகிதமாக இருக்குமென்றும் நிதி அமைச்சர் அறிவித்திருப்பது ஆறுதலைத் தருகிறது. இருந்தாலும், தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் எந்த மாற்ற மும் இல்லை என்று அறிவிக்கப்பட்டிருப்பது இந்தியாவில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பரவலாக பெருத்த ஏமாற்றத்தைத் தரும் என்பதில் ஐயமில்லை. ஏற்கனவே கடந்த ஆண்டிலும் கூட இந்த வருமான வரி விலக்கு உச்சவரம்பு மிக அதிக அளவில் உயருமென்று எதிர்பார்த்து, இறுதியில் வெறும் ஐம்பதாயிரம் ரூபாய் அளவுக்கு மட்டுமே, அதாவது இரண்டு இலட்சம் ரூபாய் என்பது இரண்டரை இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. அந்த இரண்டரை இலட்சம் ரூபாய் தற்போது மூன்றரை இலட்சம் ரூபாயாகவாவது உயருமென்று நாடு முழுதும் எதிர்பார்க்கப்பட்டது; ஏடுகளும் எழுதின. எனினும் நிதி அமைச்சர் தனது பதிலுரையிலாவது மக்களின் ஏமாற்றத்தை ஓரளவுக்கேனும் போக்கிடும் வகையில் தனது முடிவினை மறு பரிசீலனை செய்து அறிவிப்பார் என்று நம்புகிறேன்; அறிவிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். வேளாண் வருவாய்க்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற இயத எட்டு மாதங்களில் இதற்கான அறிகுறி எதுவும் தென்படாத நிலையில், நெருக்கடியில் சிக்குண்டிருக்கும் இந்திய விவசாயிகளைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட வேண்டுமென்று அனைவரும் எதிர்பார்ப்பது இயல்பான ஒன்று தான். கல்வித் துறையைப் பொறுத்தவரை இந்தி மயமாக்கல், சமஸ்கிருதமயமாக்கல் போன்ற குறுகிய அணுகுமுறைகளைக் கை விட்டு, இந்திய மொழிகள் அனைத்துக்கும் சமமான பங்களிப்பை அனுமதித்து கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை பா.ஜ.க. அரசு மேற்கொள்ளுமானால் அனைவரும் அதனை வரவேற்கவே செய்வார்கள். 2020ஆம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் வீடு என்பது நல்ல இலட்சியம். இது வெறும் காகித இலட்சியமாக இல்லாமல், நெடுங்காலமாக மத்திய அரசால் எடுத்துரைக்கப்படும் கொள்கை அறிவிப்பாகஇருந்து வருவதால், அதனை இனியாவது நிறைவேற்றுவதற்கான செயல் திட்டங்களை வகுத்து முறையாக நடைமுறைப்படுத்திட வேண்டும். வளர்ச்சிக்கும், முதலீட்டுக்குமான நிதி நிலை அறிக்கை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவின் கதவுகளைத் தாராளமாகத் திறந்து விடும் மனப்பான்மையை ஓர் எல்லைக் கோட்டுக்குள் நிறுத்திக் கொண்டு, ஆரோக்கியமான முதலீட்டுக்கும் அதன் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் மட்டுமே வழி காண வேண்டும். மின்சாரத்தின் தேவை அதிகமாகிக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் இந்த நிதி நிலை அறிக்கையில் தலா நான்காயிரம் மெகாவாட் திறன் கொண்ட 5 மின் உற்பத்தித் திட்டங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருப்பது தேவையை நிறைவு செய்வதாக இல்லை. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் தொழில் மேம்பாட்டிற்காக புதிதாக “முத்ரா” வங்கித் திட்டம், சிறுபான்மைப் பிரிவு இளைஞர்கள் நலனுக்காக “நயிமன்சில்” திட்டம், சுற்றுலா தலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள் அளிக்கும் திட்டம், அரசு ஊழியர்களுக்கான போக்குவரத்துப் படியை இரட்டிப்பாக உயர்த்துதல், குழந்தைகள் மேம்பாட்டுக்கு 1,500 கோடி ரூபாயில் புதிய திட்டம் போன்றவை வரவேற்கப்பட வேண்டிய திட்டங்களாகும் எனினும், அயதத் திட்டங்கள் எந்த அளவுக்கு ஆக்கப் பூர்வமாக செயல்படுத்தப்படப் போகின்றன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஐந்து மாநிலங்களில் “எய்ம்ஸ்” மருத்துவ மனை அறிவிக்கப் பட்டிருப்பதில், தமிழ்நாடும் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக் குரிய ஒன்றாகும்.

