Home Blog Page 6273

நீலப்புரவி வீரன் – பகுதி 1

பகுதி 1

நடுஇரவு யுத்தகள மங்கை

                   சற்று மனவேதனையுடன்தான் ஜெய்ப்பூர் வந்தேன். ஜெய்ப்பூர் வரும்வழியில் இருந்த மலைத்தொடரையும் அதன் மேலிருந்த கோட்டைகளையும், கொத்தளங்களையும் பார்த்தவுடன் மனச்சோர்வு அகன்றது. அருமையான சரித்திரக்கதை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையும் வந்தது.  நான்குபுறம் மலைசூழ்ந்த குறிஞ்சி நிலம். நடுவில் அழகான நீர்நிலை. மனது மகிழ்ந்து புரவியின் வேகத்தில் ஓட ஆரம்பித்து, நானுற்றி நாற்பது வருடத்துக்கு முன்பு சென்று நின்று போனது.


இன்னும் விடியவில்லை. ஆரவல்லி மலைத்தொடர்களில் எப்பொழுதும் பிரகாசமாகத் தெரியும் சந்திரனும், நட்சித்திரங்களும் முந்தியநாள் நடந்த கடும் யுத்தத்தைக் கண்டு உள்ளம் அஞ்சி மெல்லிய மேகப் போர்வைக்குள் மறைந்து கொண்டது. விடிவெள்ளியும், தெற்கு மூலை சுவாமி நட்சித்திரமும் கூட அன்று தனது முகத்தை மூடிக்கொண்டது. காற்றுக்கு கூட அச்சமா என்ன? எப்பொழுதும் மெல்லிய பூங்காற்று வீசும் அந்த இடத்தை விட்டு வாயுபகவான் ஓடிப்போயிருந்தான். அந்தக் கொடுமையான இரவில் தனது மெல்லிய பாதங்கள் பூமிதேவியின் மேல் பட்டும், படாமல் ஒரு வாலிப வயதுப்பெண் ஒருத்தி நடந்து சென்று கொண்டிருந்தாள். எங்கும் இருள். அவள் கைகளில் வாள் ஒன்று இருந்தது. அவள் சென்ற இடத்தில் ஹல்டிகாடியின் புதர்கள் மண்டி கிடந்தது தெரிந்தது. அந்தப் புதர்செடிகள் நேற்று பகலில் அபூர்வமாக கிடைத்த மனித ரத்தத்தைக் குடித்தும் அவற்றின் தாகம் தீரவில்லை. அதை உணர்ந்த வருணபகவான் அவற்றின் தாகத்தை தீர்க்கலாமா என்று தனது படைகளான நீர் மேகத்தை அனுப்பினான். நீர் மேகத்திரளகள் தனது கைகளில் இருந்த மின்னல் வாட்களை எடுத்து சப்தத்துடன் தங்களுக்குள் தாக்க ஆரம்பித்தன. புதர்களின் நடுவே செல்ல சிறிய ஒற்றைப் பாதை தெரிந்தது. அந்தப்பாதையில் கவலையுடன் புதர்களை வாளால் விலக்கியபடி சென்றாள். அவள் கண்களில் நீர்வடிந்து கொண்டிருந்தது. ஆகா! அங்கு என்ன? அந்தக் கோரத்தை சொல்ல எனது மனது தயங்குகிறது. எனது எழுதுகோலில் இருக்கும் மையும் காய்ந்து போய்விட்டது. என்ன கோரம்! ஆயுதம் தரித்து அழகான இருந்த வாலிபர்கள் இறந்து கிடந்தார்கள். சில இடங்களில் ஒருவர் மீது ஒருவர் வீழ்ந்தும் கிடந்தார்கள். விடாது இடித்த இடியின் நடுவில் வந்த மின்னலில் அந்த அழகுமங்கை யுத்தத்தில் இறந்து கிடந்தவர்களை ஒவ்வொருவராகப் பார்த்துக் கொண்டு வந்தாள். மனம்தளராது பார்த்துக்கொண்டு அவள் மனதில் வைராக்கியமும், உறுதியும் இருக்க வேண்டும் என்பது புரிந்தது. ஆகா இதோ! என்று அவள் உதடு மெல்ல சொன்னது. தனது முயற்சியில் வெற்றி பெற்றத் திருப்தி ஆகாயத்தில் மின்னிய வெளிச்சத்தில் அந்த மங்கையின் முகத்தில் தெரிந்தது. யுத்தத்தில் வீழ்ந்தவர்களில் ஒருவனை எடுத்துக் கொண்டு, யுத்தபூமியை விட்டு மெல்ல நகன்றாள். நாமும் அவர்களைத் தொடர்வோம். யுத்தகளத்திலிருந்து அரைகாத தூரம் சென்ற பிறகு, அங்கு வட்டமாக இருந்த ஒரு சிறிய குடிசைக்குள் அவள் சென்றாள். அவள் குடிசைக்குள் சென்றதும் ஆகாயம் பொத்துக் கொண்டதோ என்று எண்ணும்படி மழைபொழிய ஆரம்பித்தது. எளிதாக கிடைக்கக் கூடிய புற்களையும் மற்ற பொருட்களையும் வைத்து கூரையை அமைத்திருந்தார்கள். ஆனால் உள்ளே மழை நீர் அதிகம் வரவில்லை. இது போன்ற இடியும், மழையும் ஆரவல்லி மலைத்தொடர்கள் இதுவரை பார்த்ததில்லை. உள்ளே சென்ற அவள், எப்பொழுது அணைவோமா என்று படபடத்துக்கொண்டிருந்த விளக்கை தூண்டினாள். அந்த குடிசையில் ஒரு வயதானவர் ஒருவர் அவளின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அந்த முதியவரைப் பார்த்தால் வைத்தியர் போலத் தோன்றியது. அவனின் கைகளை தொட்டு நாடி பார்த்தார். “மீனா, சரியான நேரத்தில் கொண்டு வந்தாய். நாடி மெல்லத் துடித்துக் கொண்டிருக்கிறது. இங்கு படுக்க வை. கொஞ்சம் சுடுதண்ணியும் வை” என்றார். மீனா என்று அழைக்கப்பட்ட அந்த தைரியமங்கை அவர் சொன்னபடி செய்தாள். கீழே படுக்கவைக்கப்பட்ட வாலிபன் வாயில் கஷாயத்தை ஊற்றினார். அதற்குள் சுடுநீர் தயாராக அவனது வேதனையைப் போக்க மருந்தினை அதனுடன் கலந்து அவன் வாயில் புகட்டினார். அவனை திரும்பிப் படுக்க வைத்தார். விக்கிரமனின் முதுகில் பட்டகாயத்தில் மருந்து பூச அவன் முனகினான். வைத்தியரின் வெண்தாடிக்குள் தெரிந்த முகம் சற்று மலர்ந்தது. “இனி பிழைக்க வைத்துவிடலாம். நாளை காலைதான் விழிப்பான். அவனைத் தாக்கிய வாளில் ஏதேனும் விஷம் கலந்து இருப்பார்களோ என்று அவருக்கு சந்தேகம் வந்தது. வாளினால் தாக்கபட்ட இடத்தில் சதையை எடுத்து, கண்ணாடிக் குடுவையில் இருந்த திரவத்துடன் சேர்த்து ஒரு சிறிய குடுவையில் போட்டார். சற்று நேரத்தில் பொங்கியது விளக்கின் வெளிச்சத்தில் தெரிந்தது. ஆகா! இது கொடிய நல்லபாம்பின் விஷம் அல்லவா? உடனே முறிக்க வேண்டுமே என்று எண்ணியவர், மருந்து குப்பியை எடுத்து அதிலிருந்த களிம்பை எடுத்து காயம்பட்ட இடத்தில் தடவினார். இனிக் கவலையில்லை என்ற நிம்மதி அவர் முகத்தில் தெரிந்தது. இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த மீனாள், “என்னவாகியது?” என்றாள். “நல்லபாம்பு விஷத்தை வாளில் தடவி அதைக்கொண்டு தாக்கியிருக்கிறார்கள். இவனின் நல்லநேரம் வாள் மிக ஆழமாக இறங்கவில்லை. வாளின் தாக்கம் நரம்பில் பட்டதால் விழுந்து விட்டான். காப்பாற்றி விடலாம்” என்றார். “இந்தக் களிம்பு, நல்லபாம்பு விஷத்தை முறியடிக்குமா?” என்ற மீனாள் அதை எடுத்தாள். “நீயே வைத்துக் கொள். பாம்புக்கடி கண்டு பன்னிரண்டு மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும். ஆனால் இது ராஜநாகத்தின் விஷத்தை முறிக்காது” “அதற்கு? “வேறு இருக்கிறது. ஆனால் கடித்தவுடன் இட வேண்டும்” “அது எங்கே?” “அங்கே வைத்திருக்கிறேன். அது வேண்டுமானால் எடுத்துக் கொள்” என்றார். “இவருக்கு எப்பொழுது குணமாகும்?” “நாளை காலை எழுந்துவிடுவான். ஆனால் இரண்டுநாள் அசதி இருக்கத்தான் செய்யும். நான் வரவா?” என்றபடி வெளியில் சென்றார். அவர் செல்வதை பார்த்துக் கொண்டிருந்தாள். இன்னும் மழையும் மின்னலும் குறையவில்லை. சற்றுநேரத்தில் அவர் மறைந்தார். குடிசையின் கதவைச் சாத்தினாள். அந்த வாலிபனை எடுத்து தனது மடியில் படுக்க வைத்தாள். பாதுகாப்பான இடத்துக்கு வந்த நிம்மதி அவன் முகத்தில் தெரிந்தது. மறுநாள் காலை விழித்த அந்த வாலிபன் எங்கிருக்கிறேன்? என்று கேட்டான். மீனாளில் மடியில் படுத்து இருப்பது தெரிந்ததும், மீண்டும் தூங்கினான். மீனா என்று அழைக்கப்பட்ட இந்தக் கதையின் நாயகி, அவனை கவலையுடன் பார்த்தாள். அவள் மனது ஹல்டிகாடி யுத்தகளத்திலிருந்து இரண்டாயிரம் மைல்கள் தள்ளி இருக்கும் திருவாங்கூர் தலை நகரமான பத்மநாதபுரத்திற்கு சென்றது ஒரு வருடத்துக்குள் என்னவெல்லாம் நடந்து விட்டது என்று எண்ணினாள். இந்தக் கதையை ஆர்வமாக படிக்கும் எனது எஜமானர்களே, யார் அந்த தைரியமங்கை?, அவள் யாரை யுத்தகளத்திலிருந்து காப்பாற்றினாள்? எதற்கு காப்பாற்ற வேண்டும்? என்றெல்லாம் உங்களுக்கு தோன்றும். என்று உங்களுக்கு தோன்றும். அவசரம் வேண்டாம். பொறுமை, பொறுமை. சொல்கிறேன்.     தொடரும்

ஜி மெயிலுக்கு தடை: மத்திய அரசு அலுவலகங்களில் பயன்படுத்தக் கூடாது என அரசு அறிவிப்பு

புது தில்லி: மத்திய அரசு அலுவலகங்களில் தனியார் நிறுவனங்களான ஜி மெயில் மற்றும் யாஹு மெயில் போன்ற நிறுவனங்களின் மெயில் சேவையை பயன்படுத்தக்கூடாது என்று கடந்த பிப்ரவரி 18-ந் தேதியன்று அனைத்து துறைகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்திய அரசின் இ-மெயில் கொள்கை என்று பெயரிடப்பட்ட அந்த நோட்டீசில், நாட்டின் தொழில்நுட்ப வளங்களை பயன்படுத்துவது குறித்து எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளின் படி, அரசு தொடர்பான எந்த ஒரு தொடர்புகளையும் ‘நிக்’ வழங்கும் இ-மெயில் சேவையை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய அரசு நிறுவனங்களின் கணிணிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. தனியார் இ-மெயில்களான ஜி மெயில் மற்றும் யாஹு மெயில் போன்றவற்றின் சர்வர்கள் வெளிநாடுகளில் உள்ளதால், அதை பயன்படுத்தி அமெரிக்க அரசு இந்திய அரசின் செயல்பாடுகளை வேவு பார்த்தது. இந்த வேவு பார்த்தலை தடுக்கவே தனியார் இ-மெயில்களை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது.

பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தவர் மு.க.ஸ்டாலின்: கனிமொழி பேச்சு

KANIMOZHI_MPசென்னை: இளைஞர் எழுச்சி தினத்தையொட்டி நடைபெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில், பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தவர் மு.க.ஸ்டாலின் என கனிமொழி எம்.பி. பேசினார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினின் 63-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தை தி.மு.க.வினர் இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடுகின்றனர். இதையொட்டி, நேற்று தி.மு.க. தலைமை அலுவலகம் அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில், தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் 63 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் கனிமொழி எம்.பி. பேசியது:- இந்த விழாவை மகளிர் அணி நடத்துவதால் பெண் குழந்தைகளுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதாக நினைக்க வேண்டாம். இது மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில், எனது பிறந்த நாள் விழாவுக்கு விளம்பர பதாகைகள் வைப்பதை விட, பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு சொல்லி உள்ளதால் தான் பெண் குழந்தைகளுக்கு மட்டும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. பெண் கல்வி என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. ஒரு ஆணை படிக்க வைப்பது என்பது தனி நபரை படிக்க வைப்பதாகும். இதுவே ஒரு பெண்ணை படிக்க வைப்பது என்பது ஒரு தலைமுறையை படிக்க வைப்பது என்பதாகும். எனவே பெண் கல்வியின் முக்கியத்துவத்தை பெற்றோர் உணராத காலத்தில், அதனை உணர்த்தும் வகையில் கலைஞர் திருமண உதவி திட்டத்தை கொண்டு வந்தார். அந்த வகையில், அண்ணன் ஸ்டாலினும், தனது அறிக்கையில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து இருந்தார். 1996-ல் ஸ்டாலின் சென்னை நகர மேயர் பதவியில் இருக்கும்போது, எத்தனையோ பாலங்களை கட்டியதோடு அல்லாமல், கல்வி துறையிலும் புரட்சியை கொண்டு வந்தார். மாநகராட்சி பள்ளி மாணவர்களும் மற்ற பள்ளி மாணவர்களுக்கு இணையாக படிக்கும் வகையில் ‘மல்டி மீடியா’ படிப்பை முதல் முறையாக அரசு பள்ளிகளில் கொண்டு வந்தார். அதுவரை 55 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதத்தை 78 சதவீதமாக மாற்றினார். மாநகராட்சி பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை 30 சதவீதம் உயர்த்தியதோடு, 2 ஆயிரத்து 20 ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பினார். இதன் மூலம் கல்விக்கு ஸ்டாலின் எவ்வளவு முக்கியத்துவம் வழங்கினார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக முத்தரசன் தேர்வு

கோவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக முத்தரசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ் கட்சியின் மாநில மாநாடு கோவையில் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வந்தது. இறுதி நாளான நேற்று புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் பிற்பகலில் மாநில செயலாளருக்கான தேர்தல் நடைபெற்றது. இப்பதவிக்கு மாநில துணை செயலாளராக உள்ள மகேந்திரனும், விவசாய தொழிலாளர் அணி செயலாளராக உள்ள முத்தரசனும் போட்டியிட்டனர். இதனால் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் முத்தரசனுக்கு ஆதரவாக 63 ஓட்டுக்களும், மகேந்திரனுக்கு ஆதரவாக 61 ஓட்டுக்களும் விழுந்தன. எனவே 2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முத்தரசன் புதிய மாநில செயலாளராக அறிவிக்கப்பட்டார். மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முத்தரசன் (வயது 65) திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர். இவர் மாநில விவசாய தொழிலாளர் சங்க செயலாளராக இருந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்

நான் கண்ட பெரியவர்கள்: அ.ச.ஞானசம்பந்தனின் ஏ.என்.சிவராமனுடனான அனுபவம்!

A.N.Sivaraman
ஏ.என்.சிவராமன்
(மார்ச் 1 – ஏ.என்.சிவராமன் பிறந்த தினம்) “நான் கண்ட பெரியவர்கள்’ நூலில் அமரர் அ.ச.ஞானசம்பந்தன் தம் வாழ்க்கைச் சுவடுகளைப் பதித்து வைத்துள்ளார். அவர் கண்ட மாமனிதர்கள், அவர்களைப் பற்றிய செய்திகள், தாம் கற்றுக் கொண்ட வித்தைகள் என பலவற்றைப் பதிவு செய்துள்ளார். அந்த நூலில் இருந்து ஒரு சிறு பகுதி இது … தினமணியின் ஆசிரியராக இருந்த ஏ.என். சிவராமனுடனான அனுபவங்கள் இங்கே! “நான் கண்ட பெரியவர்கள்’ நூலில் அமரர் அ.ச.ஞானசம்பந்தன் தம் வாழ்க்கைச் சுவடுகளைப் பதித்து வைத்துள்ளார். அவர் கண்ட மாமனிதர்கள், அவர்களைப் பற்றிய செய்திகள், தாம் கற்றுக் கொண்ட வித்தைகள் என பலவற்றைப் பதிவு செய்துள்ளார். அந்த நூலில் இருந்து ஒரு சிறு பகுதி இது … தினமணியின் ஆசிரியராக இருந்த ஏ.என். சிவராமனுடனான அனுபவங்கள் இங்கே! வெளியீடு: கங்கை புத்தக நிலையம், 13, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17. விலை: ரூ.50/ பக்கங்கள்: 256


தாம் சிரிக்காமல் பிறரைச் சிரிக்கவைக்கும் நகைச்சுவை சிவராமனிடம் நிரம்ப உண்டு. கம்பன் விழா நடைபெறும்பொழுது ஏதோ ஒரு நாளில் திருப்பெருந்துறை சென்று வழிபட்டு வரவேண்டும் என்று சிவராமன் நினைத்தார். முன்னர்ப் போய்வந்தவன் ஆதலால் எனக்கு ஓரளவு வழி தெரியும். ஒரு ரெயில்வே கேட்டிலிருந்து ஏழு மைல் சென்றால் “திருப்பெருந்துறை அடையலாம்’ என்று நான் கூறினேன். பக்கத்தில் கணேசன் இருந்தார். “சிவராம்ஜி இவன் கிடக்கிறான். இவனுக்கு என்ன தெரியும்? நான் சொல்கிறேன். அந்த ரெயில்வே கேட்டிலிருந்து ஒரு மைல் போனவுடன் திருப்பெருந்துறையைக் காணலாம்’ என்றார். நாங்கள் புறப்பட்டோம். ரெயில்வே கேட் வந்தது. “அடே குப்புசாமி! சரியாக ஒரு மைல் போனவுடன் வண்டியை நிறுத்து’ என்றார் ஏ.என்.எஸ். ஒரு மைல் போனவுடன் நட்ட நடு ரோட்டில் வண்டி நின்றது. சுற்று வட்டாரத்தில் எந்த ஊரும் இல்லை. சிவராமன் வண்டியிலிருந்து இறங்கினார். “எல்லோரும் இறங்குங்கள்’ என்றார். ஒன்றும் புரியாமல் எல்லோரும் இறங்கினோம். “சா.க. (கணேசன்) சொன்னால், அது எப்படித் தப்பாக இருக்கமுடியும்? திருப்பெருந்துறை பூமிக்குள் போய்விட்டது. இப்பொழுது வண்டியைச் சுற்றி வந்து திருப்பெருந்துறை ஈசனுக்கு வணக்கம் செலுத்துவோம்’ என்றார். அப்படியே அனைவரும் செய்தோம். பிறகு வண்டியில் ஏறிக்கொண்டு “டேய் சம்பந்தா, நீ சொன்ன திருப்பெருந்துறைக்கு இனிமேல் போகலாம்’ என்றார். பிறகு திருப்பெருந்துறை சென்று வழிபட்டுவிட்டு, காரைக்குடி திரும்பினோம். மிக்க ஆவலோடு கணேசன் “என்ன சிவராம்ஜி! நான் சொன்னபடி திருப்பெருந்துறை சென்றீர்களா, தரிசனம் செய்தீர்களா?’ என்று கேட்டார். ஒரு சிறிதும் சிரிப்பில்லாமல் “நீ சொன்ன திருப்பெருந்துறைக்கும் சென்றோம். இந்தப் பயல் ஏழு மைல் தூரத்தில் உள்ள திருப்பெருந்துறைக் கோயிலைக் காட்டினான். அந்தத் திருப்பெருந்துறையையும் தரிசனம் செய்தோம்.’ ஒரு சின்ன வித்தியாசம். நீ சொன்ன இடத்தில் இருந்த அத்திருப்பெருந்துறை முழுவதும் பூமிக்கு அடியில் போய்விட்டது. நீ தவறு சொல்லமாட்டாய் என்ற நம்பிக்கை வலுவாக இருப்பதால் அந்த இடத்தில் இறங்கி சுற்றிவந்து வழிபட்டோம். இந்தப் பயல் காட்டிய புதிய திருப்பெருந்துறையையும் தரிசனம் செய்துவந்தோம்.’ இத்தனைக்கும் ஒரு புன்சிரிப்புக்கூட இல்லால் பேசினார் சிவராமன். அந்த மாமனிதரின் மற்றொரு பக்கம் இது. இவையனைத்தும் ஒரு புறமிருக்க, சிவராமன் அவர்கள் மூலமாக இறைவனே எனக்கொரு பேருதவி செய்தான். அதை விவரிப்பது இன்றியமையாததாகும். அமரர் கிருஷ்ணசாமிப் பிள்ளை திருமதி ருக்குமணி அம்மாள் என்ற தம்பதியர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை தந்து “பன்னிரு திருமுறைக் கட்டில்’ என்ற ஒன்றை நிறுவினர். அதன் சார்பில் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்காக அந்த அமைப்பின் கிளையாகக் காஞ்சியில் நிறுவிய தத்துவத் துறையில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தேன். பெரிய புராணத்தைப் பற்றிய ஓர் ஆய்வை மேற்கொண்டிருந்தேன். அமரர் டாக்டர் நஞ்சுண்டன் என்னுடன் பணிபுரிந்தார். அவரிடம் ரிக்கு வேதம், கிருஷ்ண யசுர் வேதம் ஆகியவற்றை ஓரளவு பயின்றுவந்தேன். கிருஷ்ண யசுர் வேதத்தின் நான்காவது பிரபாடகத்தின் இறுதியில் அமைந்துள்ள ஸ்ரீருத்ரம்பற்றி ஒரு நெடிய ஆய்வை மேற்கொண்டேன். அந்த மூன்று ஆண்டுகள் உழைப்பின் பயனாகப் “பெரிய புராணம் ஓர் ஆய்வு’ நூலை எழுதி முடித்தேன். ஸ்ரீருத்ரம் பற்றிய ஆய்வு அந்த நூலில் இடம்பெற்றாலும், இது எந்த நேரத்தில் யாரால் எப்படி யாகமாகச் செய்யப்பெற்றது என்பதை அறிந்து கொள்ள வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. எனவே, 1985 இல் “பெரியபுராணம் ஓர் ஆய்வு’ 800 பக்கங்களுக்கு மேல் உள்ள பெருநூலாக வெளிவந்தாலும் ஸ்ரீருத்திரத்தின் அடிப்படையென்ன என்பதுபற்றி அப்பதிப்பில் ஒன்றும் எழுத முடியவில்லை. இக்குறை என்மனத்தை உறுத்திக் கொண்டேயிருந்தது. ஏ.என். சிவராமன் அவர்கள் கிருஷ்ண யசுர் வேதத்தைப் பெரிய ஒலி நாடாக்களில் பதிவு செய்து, எங்குச் சென்றாலும் அதை எடுத்துச் செல்வது வழக்கம். ஓய்வு நேரங்களில் அதை இயந்திரத்தில் ஏற்றித் தன் காதுகளுக்கு மட்டும் கேட்கும்படியாக “இயர் போனைப் பயன்படுத்திக் கேட்டுக் கொண்டேயிருப்பார். ஒரு முறை கம்பன் விழாவிற்காகக் காரைக்குடியில் கம்பன் மணிமண்டபத்தில் நாங்கள் தங்கியிருந்தபோது “யசுர் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்களே, ஸ்ரீருத்திரம் எங்கே எப்பொழுது செய்யப்பெற்றது என்பதைக் கண்டுபிடித்துச் சொல்ல முடியுமா?’ என்று கேட்டேன். புன்சிரிப்புடன் “”சம்பந்தா! ஒவ்வொரு ஒலி நாடாவும் 1200 அடிநீளமுள்ள ஒலிநாடாக்கள். இதுபோல் பத்தொன்பது ஒலிநாடாக்கள் உள்ளன. இதில் எங்கே போய்க் கண்டு பிடிப்பது” என்றார். “எப்படியாவது தாங்கள்தான் உதவி செய்யவேண்டும்’ என்றவுடன், ஒரு விநாடி கண்ணை மூடிக்கொண்டிருந்து விட்டு, “”சம்பந்தா! நீயும் கண்ணை மூடிக்கொண்டு ஒலிநாடாக்கள் வரிசையாக இருக்கும் இந்தப் பெட்டியில் கையை வைத்து ஒன்றை எடு” என்றார். ‘சிவராமா இது என்ன கொடுமை! நீங்கள் கிளிஜோசியக்காரனும் அல்லர். நான் ஜோசியம் கேட்க வந்தவனும் அல்லன்’ என்று சொல்லிச் சிரித்தேன். இதற்குள் எங்களைச் சுற்றி ஐம்பது பேருக்குமேல் கூடிவிட்டனர். அதுபற்றியே கவலைப்படாத சிவராமன் அவர்கள் “”சம்பந்தா! நான் சொல்லுகிறபடி செய். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்” என்றார். வேறு வழியில்லாமல், ஆண்டவனை மனத்தில் நினைத்துக் கொண்டு, கண்களை மூடிக்கொண்டு ஒரு ஒலிநாடாவை எடுத்து அவரிடம் தந்தேன். ஒலிபெருக்கியை காதில் மாட்டிக் கொண்டு நாடாவை இயந்திரத்தில் சுழலவிட்டார். அவர் முகம் மலர்ந்துவிட்டது. “”சம்பந்தா! நீ அதிர்ஷ்டக்காரன். நீ கேட்டது கிடைத்துவிட்டது” என்று விளக்கம் சொல்ல ஆரம்பித்தார். சற்றும் எதிர்பாராத ஓர் அதிசயம் அன்று காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் காலை எட்டுமணியளவில் நடைபெற்றுவிட்டது. பல ஆண்டுகளாக நான் தேடிய வேதத்தின் ஒரு பகுதி இப்பொழுது கைமேல் கிடைத்துவிட்டது. கருட சயனம் என்ற ஒரு யாகம் ஆயிரத்தெட்டு (1008) செங்கற்களைக் கருட வடிவில் புதைத்து அதன் வயிற்றுப் பகுதியில் இருந்துகொண்டு செய்யப் பெறுவதாகும். யாகத்தைப் புரியும் ஆச்சாரியன் வயிற்றுப் பகுதியில் அமர்ந்துவிட்டான். பணம் தந்து யாகம் நடத்தும் தலைவன் வெளியே இருந்துகொண்டு “யாகத்தைத் தொடங்கலாமா?’ என்கிறான். அப்பொழுது ஆச்சாரியன் பின்வருமாறு விடைகூறுகிறான். “”ஏனைய யாகங்களில் உருத்திரனுக்கு அவிஸ் இல்லாததுபோல இந்த யாகத்திலும் அவனுக்கு அவிஸ் கிடையாது. ஆனால் மிகக் கொடியவனாகிய ருத்திரன் இந்த யாகம் நிறைவேறாமல் ஏதாவது குழப்படி செய்துவிடுவான். எனவே, அவனைத் திருப்திப்படுத்தும் முறையில் இந்தக் கருடப் பறவையில் இடது இறக்கைக்கு வெளியே அவனுக்கு ஒரு ஹோமம் செய்ய வேண்டும். இந்த யாகத்தில் பயன்படுத்தக் கூடாத பொருள்களைக் கொண்டே அந்த ஹோமத்தைச் செய்யவேண்டும். இந்த யாகத்தில் செப்புப் பாத்திரத்தைப் பயன்படுத்துகிறோம். மண் சட்டியைத் தொடவே கூடாது. இந்த யாகத்தில் காராம்பசுவின் பாலைப் பயன்படுத்துகிறோம். ஆட்டுப்பால் பக்கத்தில் கூட வரக்கூடாது. இந்த யாகத்தில் பாலை நெருப்பில் எடுத்துச் சொரியும் “சுரு’ என்ற கரண்டிபோல மாவிலையைப் பயன்படுத்துகிறோம். எருக்கிலையைத் தொடவே கூடாது. இப்பொழுது இடப்புற இறக்கைக்கு வெளியே அமர்ந்துகொண்டு, ருத்திரனுக்கு ஒரு ஹோமம் செய்யப் போகிறேன். மண்சட்டியில் ஆட்டுப்பாலை நிரப்பிக் கொண்டு, மாவிலைக்குப் பதிலாக எருக்கிலையைப் பயன்படுத்தி, ஸ்ரீருத்திர மந்திரங்களைச் சொல்லி உருத்திரனுக்கு இதைச் செய்துவிட்டால் அவன் திருப்தியடைந்துவிடுவான். எனவே, அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள்” என்று கட்டளையிட்டான் ஆசாரியன் என்ற பகுதி ஸ்ரீருத்திரத்தின் அநுவாகமாக உள்ளது என்பதை அன்று எனக்குத் தெளிவுபடுத்தியவர் ஏ.என். சிவராமன் அவர்களேயாவார். அவர் தந்த விளக்கத்தைச் சற்று விரிவாக எழுதிப் “பெரிய புராணம் ஓர் ஆய்வு’ என்ற நூலின் இரண்டாம் பதிப்பின் பிற்சேர்க்கை என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளேன். இந்தப் பேருபகாரத்தைச் செய்தவர் ஏ.என். சிவராமன் என்ற மாமனிதரேயாவார்.

மணிரத்தினத்தின் ஓ காதல் கண்மணி

o kathal kanmani
மிக விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் “ஒ காதல் கண்மணி”
இயக்கம் மற்றும் துல்லியமான திரைக்கதை மூலம் அனைவரையும் வசீகரித்த மணிரத்னம், தற்போது  ‘ஒகாதல் கண்மணி’ படத்தின் மூலம் நமது மனதைக் மீண்டும் கொள்ளை கொள்ள இருக்கிறார்.
‘ஒ காதல் கண்மணி’ படத்திற்காக ஒளிப்பதிவில் தனிமுத்திரை பதித்த பி.சி.ஸ்ரீராம் உடன்கைகோர்த்திருக்கிறார் மணிரத்னம்.   ‘மெளனராகம்’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘நாயகன்’, ‘கீதாஞ்சலி’ மற்றும்’அலைபாயுதே’ உள்ளிட்ட படங்களில் இந்த வெற்றிக் கூட்டணி இணைந்து பணியாற்றி இருக்கிறது.
‘ரோஜா’ முதல்  தொடர்ச்சியாக தனித்துவமான இசையை விருந்தாக்கி வரும் ஏ.ஆர்.ரஹ்மான் – மணிரத்னம்கூட்டணி இப்படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.    இக்கூட்டணி இணைப்பில் வெளியாகும்12வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஒ காதல் கண்மணி’ பாடல்களை மணிரத்னத்துடன் எப்போதும் இணைந்து பணியாற்றி வரும்வைரமுத்து எழுதி இருக்கிறார்.
துல்கர் சல்மான் மற்றும் நித்யா மேனன் இப்படத்தில் நாயகன் மற்றும் நாயகியாக நடித்திருக்கிறார்கள்.     பிரகாஷ் ராஜ், லீலா சாம்சன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து வரும் ‘ஒ காதல் கண்மணி’ படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் மார்ச் 1ம்தேதி (இன்று) சமூக வலைத்தளத்தில் வெளியாக இருக்கிறது.  இந்த டிரைலர் ஒரு நிமிடம் இருபது வினாடி….
திரை அரங்குகளில் படத்தின் டிரைலர் மார்ச் 6ம் தேதி வெளியாகும்.
படத்தின் இதர தொழில்நுட்ப கலைஞர்கள்:
எடிட்டிங்: ஸ்ரீகர் பிரசாத்
கலை : சர்மிஷ்தா ராய்
நடனம்:  பிருந்தா
ஆடை வடிவமைப்பு : ஏகா லகானி
தயாரிப்பு நிர்வாகம் – மாலா மன்யன்
தயாரிப்பு : மெட்ராஸ் டாக்கீஸ்
மக்கள் தொடர்பாளர் :   நிகில்
[su_youtube url=”https://youtu.be/2mBG4vlhcCc” autoplay=”yes”]

இங்கிலாந்துடன் மோதல்: இலங்கை 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

வெலிங்க்டன்:sangakara-srilanka உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து, இலங்கை அணிகள் மோதிய 22வது லீக் சுற்றுப் போட்டி இன்று நியூசிலாந்து தலைநகர் வெலிங்க்டன் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ்வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்து களம் இறங்கியது. துவக்க வீரர் அலி 15 ரன் எடுத்தார். பெல் 49 எடுத்தார். பாலன்ச் 6 ரன் எடுத்த போதும், பின்னர் வந்த ரூட் நின்று நிலைத்து ஆடி 121 ரன் எடுத்து அணியின் ஸ்கோர் அதிகரிக்க உதவினார். மோர்கன் 27ம், டெய்லர் 25ம் எடுத்தனர். 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 309 ரன் எடுத்தது. இலங்கை தரப்பில் பந்துவீச்சாளர்கள் 6 பேரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். பின்னர் 310 ரன் என்ற இலக்கை நோக்கி இலங்கை ஆடத் தொடங்கியது. அந்த அணியின் துவக்க வீரர் தில்ஷன் 44 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால் திரிமன்னேயுடன் ஜோடி சேர்ந்த சங்ககரா அதிரடியாக ஆடினார். இருவரும் சேர்ந்து மேலும் விக்கெட் இழக்காமல் வெற்றிக்குத் தேவையான ரன்னை சேர்த்தனர். திரிமன்னே ஆட்டமிழக்காமல் 139 ரன் எடுத்தார். சங்ககரா ஆட்டம் இழக்காமல் 117 ரன் எடுத்தார். 47.2 ஓவர் முடிவில் இலங்கை அணி 1 விக்கெட் இழந்து 312 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கரூர் தோகைமலை அருகே சுனையில் மூழ்கி சிறுமிகள் 4 பேர் உயிரிழப்பு

girls1-horz கரூர்: கரூர் மாவட்டம், தோகைமலை அருகே மாரிப்பாறைபட்டி என்ற இடத்தில் உள்ள கோயில் சுனையில் மூழ்கி சிறுமிகள் 4 பேர் சனிக்கிழமை உயிரிழந்தனர். தோகைமலை ஊராட்சி ஒன்றியம், கழுகூர் ஊராட்சி அ. உடையாப்பட்டியைச் சேர்ந்தவர்கள் துரைசாமி மகள் வனிதா (13), மாணிக்கம் மகள் பாண்டிமீனா (13), ரவி மகள் சந்தியா (13), மூர்த்தி மகள் சரோஜினிதேவி (13). இவர்கள் அனைவரும் இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் 4 பேரும், சக மாணவர், மாணவிகள் 9 பேருடன் மாரிப்பாறைப்பட்டியில் மலைமேல் உள்ள சுயம்பு பெருமாள் கோயிலுக்கு வழக்கம்போல் செல்வது போலவே சனிக்கிழமை காலையும் சென்றனர். அப்போது, இவர்கள் அனைவரும் வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவை சாப்பிட்டுவிட்டு, கைகழுவுவதற்காக கோயிலில் உள்ள சுனையில் இறங்கியுள்ளனர். அப்போது பாறையில் கால் வழுக்கி வனிதா நீருக்குள் விழுந்துள்ளார். அவரைக் காப்பாற்றும் நோக்கில், பாண்டிமீனா, சந்தியா, சரோஜினிதேவி ஆகியோர் திடீரென ஒருவன்பின் ஒருவராக நீரில் இறங்கியுள்ளனர். இதைக் கண்ட மற்ற மாணவிகள் ஓடிச்சென்று மலையடிவாரத்தில் இருந்த பொதுமக்களை உதவிக்கு அழைத்தனர். அவர்கள் வந்து சேர்வதற்குள், 4 மாணவிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்த மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள் கோயிலில் குவிந்தனர். மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி, வருவாய் அலுவலர் மு.அருணா, மாவட்டக் கண்காணிப்பாளர் ஜோஷி நிர்மல்குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் விசாரணை செய்தனர். பின்னர், மாணவிகளின் உடல்கள் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. இந்தச் சம்பவம் குறித்து தோகைமலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

3வது நாளாகத் தொடரும் கவிஞர் தாமரையின் போராட்டம்: தமிழ் ஆர்வலர்கள் ஆதரவு

thamarai சென்னை: தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்னையான, தன் கணவர் தியாகுவுடன் சேர்த்து வைக்கக் கோரி திரைப் படப் பாடலாசிரியர் கவிஞர் தாமரை கடந்த வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் தர்ணா போராட்டத்தைத் தொடங்கினார். மூன்றாவது நாளாக இன்றும் தனது போராட்டத்தை அவர் தொடர்கிறார். இந்நிலையில், தமிழ் ஆர்வலர்கள் அவருக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். சென்னை அம்பத்தூரில் உள்ள தாய் உயர்நிலைப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியை கவிஞர் தாமரையுடன் போராட்டத்தில் நேற்று முதல் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தொடர்புடைய செய்திகள்: [su_permalink id=”3275″ target=”blank”][/su_permalink][su_divider] [su_permalink id=”3273″ target=”blank”][/su_permalink][su_divider] [su_permalink id=”3206″ target=”blank”][/su_permalink][su_divider]

சீன நீர்மூழ்கி கப்பல்களுக்கு இனி அனுமதியில்லை: இலங்கை திடீர் அறிவிப்பு

submarine பீஜிங்: சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கைத் துறைமுகத்துக்கு வருவது எங்கள் அரசின் காலத்தில் நடக்காது என்று கூறியுள்ளார் இலங்கை அமைச்சர் சமரவீர. சீனாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார் இலங்கை அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர. இலங்கை அதிபராக சிறீசேன பொறுப்பேற்ற பின்னர், தனது முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா வந்தார். அவரின் இரண்டாவது வெளிநாட்டுப் பயணம் சீனா என முடிவாகியுள்ளது. இதை ஒட்டி அவர் இந்த மாதத்தில் சீனா செல்கிறார். அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதற்காக இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர சீனா சென்றுள்ளார். சீனத் தலைநகர் பீஜிங்கில் சனிக்கிழமை நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது, சீன நீர்மூழ்கி வந்தது எப்படி என எனக்குத் தெரியவில்லை. அப்போது, ராஜபட்ச அரசு ஆட்சியில் இருந்தது என்பதால், அதுகுறித்த விவரங்கள் எனக்குத் தெரியவில்லை. ஆனால், அது போன்ற சம்பவங்கள், எங்கள் ஆட்சிக் காலத்தில் நடைபெறாது என உறுதியளிக்கிறேன்… என்றார் சமரவீர. இலங்கையில் கடந்த பத்தாண்டுகளாக அதிபராக இருந்த ராஜபட்ச, இலங்கையின் உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள சீனாவுக்கு ஒப்பந்தங்களை அதிகம் வழங்கினார். அம்பந்தோட்டாவில், செயற்கை துறைமுகம், கொழும்பு துறைமுக மேம்பாட்டுப் பணிகள் என பல ஒப்பந்தங்களை ராஜபட்ச சீனாவிடம் வழங்கினார். பல பிரமாண்ட திட்டங்களில் சீனா இலங்கையில் முதலீடு செய்துள்ளது. ஆனால், சீனாவுக்கு இலங்கை அதிக இடம் அளிப்பதும், முக்கியத்துவம் கொடுப்பதும் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளுக்கு பெரும் தலைவலியாக இருந்தது. இருப்பினும், சீனாவை வைத்து இந்தியாவை மிரட்ட ராஜபட்ச காய் நகர்த்தினார். இந்நிலையில், இலங்கைத் தேர்தலில் ராஜபட்ச படுதோல்வி அடைந்தார். இதை அடுத்து புதிய அதிபராகப் பொறுப்பேற்ற சிறீசேனாவிடம், இந்திய பிரதமர் மோடி, சீன விஷயத்தில் காட்டும் நெருக்கம் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும், ஆப்ரிக்க நாடுகள் பலவற்றில் சீனா தனது ராணுவ முகாம்களை அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. சீனாவிலிருந்து அந்த இடங்களுக்குச் செல்லும் வழியில் எரிபொருள் நிரப்பிக் கொள்ளவும், வீரர்கள் ஓய்வெடுக்கவும், இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள சில தீவுகளை சீனா பயன்படுத்திக் கொள்கிறது. இதை இந்தியாவும், அமெரிக்காவும் எதிர்த்து வருகின்றன. சீனாவுக்கும், ஜப்பானுக்கும் சுமுக உறவு இப்போது இல்லை. அண்மையில் ஜப்பான் பிரதமர், இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, சீன நீர்மூழ்கிக் கப்பல்கள், கொழும்பு துறைமுகத்தில் தங்கிச் சென்றது, ஜப்பானுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இந்நிலையில் சீனாவுடனான உறவு மற்றும் முதலீட்டு திட்டங்கள் குறித்து மறுபரிசீலனை செய்யும் முடிவில் இலங்கை இருப்பதாக, இலங்கை வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளதாக இலங்கை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன் ஒரு கட்டமாகத்தான், இலங்கை வெளியுறவு அமைச்சர், ‘இலங்கைத் துறைமுகங்களில், சீன நீர்மூழ்கிகளுக்கு இனி இடமில்லை’ என சீனாவில் வைத்தே கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.