Home Blog Page 6272

அமெரிக்காவில் மீண்டும் இந்துக் கோவில் மீது தாக்குதல் : ஜன்னல் உடைப்பு

hindu-temple-america நியூ யார்க்: அமெரிக்காவில் மேலும் ஒரு சனாதன தர்ம கோவில் மீது தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. அதன் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள கெண்ட் நகரில் உள்ள சனாதன தர்ம கோவிலின் ஜன்னல்கள் மர்ம நபர்களால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. கோவில் சுவரில் ஃபியர் (பயம்) என ஸ்ப்ரே பெயிண்டிங்கால் எழுதிவைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை கோயிலுக்கு வந்தவர்களுக்கு இது அதிர்ச்சியை அளித்துள்ளது. சனிக்கிழமை அன்று அந்தக் கோவிலில் அமலகி ஏகாதசி கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப் பட்டதால், பக்தர்கள் கோயிலுக்கு அதிகம் வந்திருந்தனர். இது குறித்து, கிங்க்ஸ்-5 டிவி செய்தியை ஒளிபரப்பியது. இத்தாக்குதல் சம்பவம் குறித்து அமெரிக்க உளவுத்துறை, மற்றும் கெண்ட் நகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். முன்னதாக, கடந்த 15-ம் தேதி சியாட்டில் நகரில் உள்ள போத்தல் இந்து கோவில் சுவரில் ‘வெளியே போ’ என்று எழுதப்பட்டிருந்தது. தற்போது இரண்டாவது முறையாக மற்றொரு கோவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தொடரும் இந்த கோவில் தாக்குதல் சம்பவங்களுக்கு அகில உலக இந்து சமுதாய அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ராஜன் ஸேத் இந்துக்கள் தேச அளவில் அதிகம் இதனை உன்னிப்பாகக் கவனிக்கின்றனர் என்றார்.

கடவுள் நம்பிக்கையாளர் ரத்தம் நம்பிக்கையில்லாதவர்களை வாழவைக்கிறது: மு.க.ஸ்டாலின்

சென்னை:

கடவுள் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் தரக்கூடிய ரத்தம் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்களை வாழவைக்கிறது. அதேபோல கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தரக்கூடிய ரத்தம் கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்களை வாழவைக்கிறது. எனவே பாகுபாடு காட்டாத ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை ஒட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் அவர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது அவர்… மார்ச் 1-ந் தேதி என்பது பாகுபாடு ஒழிக்கக்கூடிய தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்து இன்றைக்கு இந்த நாளை கொண்டாடுகிறது. எனவே, கருணாநிதியின் வழிகாட்டுதலோடு அதை மனதிலே வைத்துக் கொண்டு நாம் பாடுபடவேண்டும். அந்தப் பாகுபாடுகளை ஒழிப்பதற்கு நாம் உறுதி எடுக்க வேண்டும். அப்படிப்பட்ட உறுதியை அந்த சபதத்தை நீங்கள் எல்லாம் ஏற்றால்தான் உள்ளபடியே நீங்கள் எனக்கு சொல்லக்கூடிய வாழ்த்துகள் மகிழ்ச்சிகரமாக அமையும். நம்மைப் பொறுத்தவரையில் இந்த சமுதாயம் வாழவேண்டும்.

இந்த நாடு வாழ்ந்திட வேண்டும். இந்த சமுதாயத்தை, இந்த நாட்டை வாழ வைக்கக் கூடிய வகையில் நம்முடைய பணி அமைந்திட வேண்டும் என்று சொன்னால், நம்முடைய இயக்கம் தொடர்ந்து கருணாநிதி தலைமையில் பீடுநடை போடவேண்டும். இதை நான் என்னுடைய பிறந்த நாள் செய்தியாகத் தெரிவிக்க விரும்புகிறேன். சாதி, மதம், இனம், மொழி இவைகளைப் பொறுத்தவரையிலே யாருக்கும் பாகுபாடு இருக்கக்கூடாது.

நம்முடைய தலைவர் கருணாநிதியின் தொலை நோக்கு தான் நம்மை போன்ற இளைஞர்களை இன்றைக்கு ஓரளவுக்கு பக்குவப்படுத்தி, தொடர்ந்து நாம் ஆற்றக்கூடிய பணிகளுக்கு உரமூட்டக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நாம் அனைவரும் ஒன்றுதான் என்பதை நினைவுபடுத்தக்கூடிய வகையில் இந்த மார்ச் 1-ம் நாள் இருந்திட வேண்டும்.

பாகுபாடு காட்டாத ஒரு சமுதாயத்தை உருவாக்கிடவேண்டும். பாகுபாடு ஒழிப்பு கொள்கை என்பதை நம்முடைய உடம்பில் ஓடக்கூடிய ரத்தத்தோடு நிச்சயமாக நாம் ஒப்பிட முடியும். நம் அனைவருடைய நரம்புகளில் ஓடுவது ஒரே ரத்தம்தான் என்பதை நாம் மறந்துவிட முடியாது. எனவே, ரத்தத்தை பொறுத்தவரையிலே பாகுபாடு கிடையாது. இன்னும் நான் வெளிப்படையாக சொல்ல விரும்புகிறேன்.

கடவுள் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் தரக்கூடிய ரத்தம் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்களை வாழவைக்கிறது. அதேபோல கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தரக்கூடிய ரத்தம் கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்களை வாழவைக்கிறது. அதனால்தான் உங்களை எல்லாம் நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

மார்ச் 1-ந் தேதியிலிருந்து இந்த மாத இறுதி வரையிலே தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய இளைஞர்கள், நம்முடைய தொண்டர்கள், ரத்தம் வழங்கக்கூடிய நிகழ்ச்சியை நடத்திட வேண்டும். எனவே, இந்த மாத இறுதிக்குள்ளாக 1 லட்சம் யூனிட் ரத்தம் நம்முடைய இளைஞர் அணியின் சார்பில் வழங்கப்பட்டிருக்கிற இந்த செய்தி வந்தாக வேண்டும்.

இந்த மார்ச் 1-ந் தேதியை இளைஞர் எழுச்சி நாளாக மட்டுமல்ல, பாகுபாடு ஒழிப்பு தினமாகவும் நாம் இன்றைக்கு இதை நடத்துகிறோம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு ரத்ததானம் வழங்குவதற்கு அனைவரும் உறுதி எடுப்போம். சபதம் ஏற்போம். இதுதான் என்னுடைய பிறந்த நாள் செய்தி.

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக அரசு செயல்படாது: அமைச்சர் அனந்தகுமார்

ananth-kumarசென்னை: நிலம் கையகப் படுத்தும் சட்ட விவகாரத்தில், விவசாயிகளின் நலனுக்கு எதிராக அரசு செயல்படாது என்று கூறினார் மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் அனந்தகுமார். புது தில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டவர். அவர் விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறுவது தவறு. இந்த முறை பட்ஜெட்டில், மத்திய ரசாயன மற்றும் உரத்துறைக்கு கூடுதலாக ரூ.2,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை ஒதுக்கித் தந்த பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் அருண்ஜேட்லிக்கு நன்றி. எனவே, விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்களுக்கான மானியம் குறைக்கப்படாது. உர ஏற்றுமதி 10 சதவீத அளவு உயர்ந்து இருந்தாலும், உரங்களுக்கான மானியங்களை குறைக்காமல் அதன் விலை உயராமல் கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் மூலம் விவசாயிகளின் நலனுக்கு எதிராக மத்திய அரசு செயல்படாது. விவசாயிகளின் ஒப்புதல் இன்றி யாரும் நிலங்களைக் கையகப்படுத்த முடியாது. – என்று கூறினார்.

நெல்லையில் பயங்கரம்: ஓய்வு பெற்ற எஸ்.ஐ. வெட்டிக்கொலை

நெல்லை: பாளையங்கோட்டை சாந்திநகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 61). ஓய்வுபெற்ற சிறப்பு எஸ.ஐ. இவருக்கு வள்ளிக்கண்ணு உள்ளிட்ட 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். . நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆறுமுகம் தனது ஒரு மகனை நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு கொண்டு விட்டு காரில் வீட்டிற்கு திரும்பினார். பாளையங்கோட்டை செஞ்சிலுவை சங்க அலுவலகம் அருகே வரும்போது காரை வழிமறித்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். குடும்பத்தகராறு காரணமாக ஆறுமுகம் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. ஓய்வு பெற்ற எஸ்.ஐ. கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலப்புரவி வீரன் பகுதி 2

மங்கையை தூக்கிச் சென்ற மாயவன் வெகுதூரத்தில் விடிவெள்ளி வேகமாக மேலே வந்து விடிவதற்கு இன்னும் சற்றுநேரம்தான் இருக்கிறது என்பதை உணர்த்தியது. பஞ்சனையில் படுத்திருந்த திருவாங்கூர் மகாராஜா வீர ரவிவர்மாவின், உடன்பிறவா சகோதரியின் மகளான மீனாளின் கண்களில் விடிவெள்ளியின் ஒளி விழுந்தது. அவள் மனது என்னமோ இரவிலிருந்தே துடித்துக் கொண்டிருந்தது. மனது மட்டுமல்ல. அவளது இடதுகண்ணும் சேர்ந்து துடித்தது. பத்மநாதபுர அரண்மனையிலிருந்து சற்றுத்தள்ளி அமைந்திருந்த ராஜகுலமகளீருக்கு என்று அமைக்கப்பட்டிருந்த குளத்துக்குச் சென்று நீராடிவிட்டு, சுவாமியையும் தரிசித்து விட்டால் மனது சற்று அமைதி கிட்டும் என்று மீனாள் நினைத்தாள். அரண்மனையில் அவளுக்கு செல்லம் அதிகம்தான். அவளின் புத்திசாலித்தனமான யோசனைகள் மகாராஜாவுக்கு மிகவும் பிடித்துப் போனதால் அவளின் முக்கியத்துவம் நாளுக்குநாள் அதிகமானது. அவள் கேட்ட எதுவும் உடனே கிடைத்தது. மீனாளுக்கும், அவளது தாயாருக்கும் தனிப்பல்லக்குகள் இருந்தன. மீனாளின் தந்தை இறந்த பிறகு அவளுக்குத் தாயிடம் பாசம் அதிகமிருந்தது. தூங்கிக்கொண்டிருந்த தாயை எழுப்பி சொல்லிவிட்டு, நீராடும் குளத்துக்கு பல்லக்கில் சென்றாள். அவளுக்கு பாதுகாப்பிற்கு இரண்டு காவலர்களும் கைகளில் வாளுடன் பல்லக்கின் பின்னால் வந்தார்கள். அதிகாலையில் தாடாகம் மிகவும் ரம்மியமாக இருந்தது. சற்றுத் தொலைவில் நீண்டமலைத்தொடர் தெரிந்தது. குளத்தில் இறங்கியவள் வெகுதூரத்தில் நீலப்புரவி ஒன்று வருவதைக் கவனித்தாள். இது போன்ற புரவி இங்கு கிடையாதே? வருவது யார்? மீனாள் இன்னும் உற்றுப்பார்த்தாள். புரவியில் இருந்தவனுக்கு இருபது பிராயம் கூட இருக்காது. உயரமாக இருந்தான். நன்றாக சிவந்து இருந்தான். இவன் இங்கு உள்ளவன் போல இல்லையே? யாராக இருக்கும்? என்று எண்ணிணாள். அதற்குள் நீலப்புரவி அவள் குளித்துக் கொண்டிருந்த தடாகம் அருகே வந்தது. தடாகத்தின் அருகே வரக்கூடாதே. இவன் ஊருக்குப் புதிதானதால் தெரியாமல் வருகிறான் போலும். உள்ளே வந்தால் அவன் இறப்பது உறுதி. விவரம் அறியாமல் வருகிறான். அவனை எப்படி தடுப்பது? காவலனிடம் ஏதோ அவன் சொல்வது அவள் காதில் விழுந்தது. என்ன மொழியில் பேசுகிறான்? புரியவில்லையே? மீனாள் தடாகத்திலிருந்து வேகமாக வெளியே வந்தாள். அவள் ஆடையிலிருந்து நீர்வடிந்து கொண்டிருந்தது. அவள் வெளியே வருவதற்குள் சிவந்து உயரமாக இருந்தவனுக்கும், காவலர்களுக்கும் வாட்சண்டை ஆரம்பித்திருந்தது. பொழுது புலராத நேரத்தில் வாட்கள் மோதியதில் நெருப்புப் பறந்தது. அவனின் தாக்குதல் திருவாங்கூர் தாக்குதலில் இருந்து வேறுபட்டிருந்தது. சற்றுநேரத்தில் காவலர்கள் இருவரும் விழுந்தார்கள். பல்லக்கு தூக்கிகள் அவனை தாக்கவந்தார்கள். அவனின் வாள், அவர்களையும் வீழ்த்தியது. அவள் அருகில் வந்தவன் சொன்னது அவளுக்குப் புரியவில்லை. இது கேரளத்தமிழ் இல்லை. ஆனால் அவன் பேச்சு அவனை என்னமோ செய்தது. “யார் நீ? எதற்கு இவர்களைத் தாக்கினாய்?” என்றாள் மீனாள் தமிழில். அவள் சொன்னது அவனுக்குப் புரியவில்லை. அதற்குள் கீழேவிழுந்த காவலன் ஒரு குறுவாளை அவன் மீது வேகமாக எறிந்தான். அதை ஒரு விநாடி மீனாள், புரவியில் வந்தவனை சட்டென்று தள்ளினாள். குறுவாள் அவனைத் தொட்டுக்கொண்டு சென்றது. அவளை நன்றியுடன் பார்த்தவன், சட்டென்று அவளைத் தூக்கினான். அவளை இருக்கிப் பிடித்தபடி புரவியில் ஏறியவன், அதன் கழுத்தைத் தொட நீலப்புரவி பறந்தது. இதுவரை எந்த ஆண்மகன் அருகிலும் இத்தனை அருகில் மீனாள் இருந்தவளல்ல. அவனின் அணைப்பு அவளுக்குப் பிடித்துதானிருந்தது. இத்தனைக்கும் அவன் அவளை இருக்கிப் பிடித்திருக்கவில்லை. மீனாள் நினைத்திருந்தால் புரவியிலிருந்து இறங்கியிருக்கலாம். ஆனால் மீனாள் இறங்கவில்லை. அவனது அன்பான அனைப்பு அவளை இறங்க அனுமதிக்கவில்லை. நெய்யாற்றங்கரை வந்ததூம் நீலப்புரவியின் வேகம் குறைந்தது. மீனாளைத் தூக்கி வந்தவன் ஆற்றின் கரையில் புரவியை நிறுத்தினான். “பெண்ணே, நான் செய்தது தவறுதான். காவலர்களை வீழ்த்தி உன்னை புரவியில் கொண்டு வந்தது தவறுதான்” என்றான் வேற்று மொழியில். மீனாள் புரியாமல் விழித்தாள். ஆனால் அவன் அவளைத் திரும்பிச் செல்லும்படி கைகளைக் காட்டினாள். மீனாளுக்கு புரிந்தது. தன்னை திரும்பிப் போகச் சொல்கிறான் போலும். எப்படிச் செல்லமுடியும்? அப்படிச்சென்றால் பல கேள்விகள் பிறக்கும். காவலர்கள் தான் தூக்கிச் செல்லப்பட்டதைச் சொல்வார்கள். அதன் பிறகு தன்னை யார் ஏற்று கொள்வார்கள்? அதுமட்டுமல்ல அந்த வாலிபனின் நெருக்கம் மீனாளுக்கு பிடித்திருந்தது. தாயை நினைத்தால்தான் கவலையாக இருந்தது. “யார் நீ? என்னை ஏன் தூக்கி வந்தாய்?” என்றாள் மீனாள். அவள் பேசியது அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அவள் போகப் பிரியப்படவில்லை என்று அவனுக்குப் புரிந்தது. அது அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. வந்த வாலிபன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இது போன்ற அழகியை இதுவரை அவன் பார்த்ததில்லை. அவள் கண்கள் கயலைப் போலிருந்தன. அவை எத்தனையோ கதைகளைச் சொன்னது. அந்தக் கதைகளில் அவளும் அவனும் எத்தனை எத்தனை ஜென்மமாக சேர்ந்து இருந்ததை அவனுக்கு ஞாபகமூட்டின. அவள் உடலிலிருந்து மல்லிகை மனம் வந்து கொண்டிருந்தது. இந்த வாசனையை நாம் எப்பொழுது முகர்ந்திருக்கிறோம் என்று அவனுக்கு நினைவில் கொண்டு வரமுடியவில்லை. ஆனால் பிறவிபிறவியாக இந்த வாசனை அவனுடன்தான் இருக்கிறது என்பது புரிந்தது. எத்தனை ஜென்மம் கழித்து இவளைப் பார்க்கிறோம் என்று அவன் மனது ததும்பியது. “நான் கேட்டதற்கு இன்னும் பதில் சொல்லவில்லை” என்றாள் மீனாள் மீண்டும். அவன் சொன்னாலும் தனக்குப் புரியாது என்பது அவளுக்கு புரிந்தது. நெய்யாற்றங்கரையில் இருவரும் சற்று தள்ளியே அமர்ந்திருந்தார்கள். இந்த ஆற்றை எப்படிக் கடப்பது என்று அவன் யோசித்தான். வெகு தொலைவில் பரிசல் ஒன்று வருவது தெரிந்தது. அவனை கைகளைக் காட்டி அழைத்தான். முதலில் புரவியை பரிசலில் ஏற்றி அனுப்பினான். எதிர்கரையில் புரவியை விட்டுவிட்டு வந்த பரிசல் அவர்களை ஏற்றிக் கொண்டு சென்றது. எதிர்கரையில் அவர்கள் இறங்கியதும் பரிசல்காரனுக்கு கொடுத்த தங்ககாசுகளை அவன் ஆச்சரியத்துடன் பார்த்தபடியே வாங்கிக்கொண்டான். மீனாள் அவனிடம் எழுதாத இரண்டு ஓலைகளை வாங்கினாள். தனது தாய்க்கும், ராஜா வீரரவிவர்மாவுக்கும்  தன் மனம் கவர்ந்தவனுடன் செல்லப்போவதாக இருகடிதம்  எழுதினாள். அதை அரண்மனையில் சேர்த்துவிடும்படி பரிசல்காரனிடம் சொன்னாள். அவனுக்கு படிக்கத் தெரியாது.  படித்தாலும் பாதகமில்லை என்று நினைத்தாள். தயாராக இருந்த புரவியில் இருவரும் ஏறினார்கள். அவன் மீண்டும் புரவியின் கழுத்தைத் தொட அது மீண்டும் விரைந்தது.     விரைவில் அவர்கள் திருவாங்கூர் ராஜ்யத்தைக் கடந்தார்கள். எல்லையிலிருந்த காவலர்கள் புரவியை நிறுத்தினார்கள். மீனாள் அவர்களிடம் பேசியதும் இருவரையும் செல்ல அனுமதித்தார்கள். இனி கவலையில்லை என்று இருவரும் நினைத்தார்கள். நீலப்புரவி விரைந்து சென்று கொண்டிருந்தது. தொடரும்….

ஸ்டாலின் ஒரு துளசி செடி: ஜெகத்ரட்சகன்

song-releaseசென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டி புதிய பாடல் கேசட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகன், ஸ்டாலின் ஒரு துளசிச் செடி என்று பாராட்டினார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 63வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஸ்டாலினைப் பாராட்டி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர் பாபுவும், இளைஞர் அணி அசன் முகமது அலி ஜின்னாவும் புதிய பாடல் சி.டி. ஒன்றைத் தயார் செய்துள்ளனர். கவிஞர்கள் பா.விஜய், விவேகா, பழனி பாரதி, யுகபாரதி, நெல்லை ஜெயந்தா உள்ளிட்டோர் எழுதியுள்ள இந்தப் பாடலுக்கு தாஜ்னூர் இசையமைத்துள்ளார். இந்த பாடல் சி.டி. வெளியீட்டு விழா மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி பெரியார் திடலில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ஜெகத்ரட்சகன் “மு.க.ஸ்டாலின் தமிழ் இளைஞர்களை தட்டி எழுப்பக்கூடியவர். அவர் ஒரு துளசி செடி. 8 கோடி தமிழர்களை இணைக்கும் பாலமாக செயல்படுகிறார்” என்றார்.

ஜிம்பாப்வேயை 20 ரன்னில் வென்றது பாகிஸ்தான்

icc-wc-2015உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் 23 வது லீக் சுற்று ஆட்டம் இன்று பிரிஸ்பென் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்யத் தீர்மானித்து களத்தில் இறங்கியது. அந்த அணியின் துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தபோதும், நடு வரிசையில் மிஸ்பா உல் ஹக் 121 பந்துகளில் 73 ரன் எடுத்து ஓரளவு ரன் சேர்க்கக் காரணமாக அமைந்தார். கடைசையில் வஹாப் 46 பந்துகளில் 54 ரன் எடுத்து அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 235 ரன் எடுக்கக் காரணமாக அமைந்தார். 236 என்ற இலக்குடன் ஆடத் துவங்கிய ஜிம்பாப்வே அணி, துவக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்களைப் பறிகொடுத்தது. நடுவரிசையில் டெய்லர் மட்டும் 50 ரன் சேர்த்தார். வில்லியம்ஸ் 33 எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க அந்த அணி 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 215 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல்வர் பதவி ஏற்றார் முஃப்தி முகமத் சயீத்: முதல் நாளிலேயே சர்ச்சை!

modi-miftiஸ்ரீநகர்: இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநில முதலமைச்சராக முஃப்தி முகமது சயீத் இன்று பதவியேற்றுக் கொண்டார். பாஜக., கூட்டணியில் இன்று அவர் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பலதரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்தன. காஷ்மீரில் பாஜக – மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் முஃப்தி முகம்மது சயீத் காஷ்மீரின் புதிய முதல்வராகவும், பாஜகவைச் சேர்ந்த நிர்மல்சிங் துணை முதல்வராகவும் பதவியேற்றுள்ளனர். காஷ்மீர் முதல்வராகப் பதவியேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்தார் முப்தி முகமது. அப்போது பேசிய அவர்… ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறந்த வெளிப்படையான ஆட்சி இருக்கும். தற்போது ஏற்பட்டுள்ள கூட்டணி, மாநிலத்தில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் வகையில் செயலாற்றுவோம். எங்களுக்கு கல்வியும், வேலைவாய்ப்பும்தான் மிகப் பெரிய சவால். முரண்பாடுகள் இருந்தாலும் சாதகமான முறையில் அதை மாற்றிக் கொள்வதே அரசியல். 2002ல் காங்கிரஸுடன் இணைந்திருந்தோம். அப்போது ஜம்மு காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவ பாடுபட்டோம். அப்போது நடந்த தேர்தல் அருமையானது. 2008ல் 21 உறுப்பினர்கள் எங்களுக்கு இருந்தனர். ஜம்மு காஷ்மீர் மக்களுடன் பேச்சுவார்த்தைகளை தொடங்குமாறு இந்த நேரத்தில் மத்திய அரசுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். கடந்த காலத்தைத் தோண்டிப் பார்க்க நான் விரும்பவில்லை. எதிர்காலம் குறித்து மட்டுமே பார்க்கிறேன். வட முனையோ அல்லது தென் முனையோ, ஏதாவது ஒன்றுடன் நான் இணைய வேண்டிய நிலை. குஜராத் போல ஜம்மு காஷ்மீரையும் வளர்ச்சி அடைந்த மாநிலமாக்க பாடுபடுவேன். இந்த மாநிலத்தில் அமைதி தவழ வேண்டும். இங்குள்ள அனைவருக்கும் அமைதி, நிம்மதி, நியாயம் கிடைக்க வேண்டும். இன்று புதிய அத்தியாயம் மலர்ந்துள்ளது. நாட்டில் உள்ள ஒரே முஸ்லீம் மாநிலம் ஜம்மு காஷ்மீர் மட்டும்தான். இங்குள்ள நிகழ்வுகள் மூலம் நாடு முழுமைக்கும் செய்தி கிடைத்துள்ளது. எங்களால் எவ்வளவு செய்ய முடியும் என்று தெரியவில்லை. ஆனால் ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுத்து செயல்படுவோம். 1947ம் ஆண்டு முதல் ஒவ்வொரு பிரதமருக்கும் காஷ்மீர் பிரச்சினையாகவே இருந்து வருகிறது. பேச்சுவார்த்தைகளில் ஹூரியத்துகளையும், பிரிவினைவாதிகளையும்கூட சேர்க்கலாம் என்பதே எனது கருத்து. அவர்களுடைய கருத்தையும் கேட்போம். பாகிஸ்தானுடன் நாம் தோழமையாக இருப்போம் என்று பிரதமரிடம் கூறியுள்ளேன். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை குறித்த நடவடிக்கையில், முதல்கட்டமாக வெளியுறவுத்துறைச் செயலாளரை அங்கு அனுப்பி வைக்க உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி என்னிடம் உறுதி அளித்துள்ளார் என்று பேசினார் முப்தி முகமது. காஷ்மீர் முதல்வராக .இன்று பதவியேற்றுள்ள முப்தி முஹமது சையது பதவியேற்ற சிறிது நேரத்திலேயே பிரிவினைவாதிகளுக்கு அழைப்பு விடுத்தும், பாகிஸ்தான் குறித்தும் சர்ச்சையைக் கிளப்பும் வகையில் பேசியிருக்கிறார். இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுக்காக உழைத்து வரும் பாரதீய ஜனதா அரசில் உள்ள ஒரு முதல்வரே இப்படிக் கூறும்போது காஷ்மீர் தேர்தலில் இந்திய ராணுவம் மற்றும் தேர்தல் பணியாளர்களின் பங்களிப்பு என்ன என்பதை உடனடியாக விளக்க வேண்டும். முஃப்தியின் கருத்துக்கு பாரதீய ஜனதாவின் நிலைப்பாடு என்ன என்பதையும் தெரிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

எம்.ஆர்.எஃப். தொழிலாளர்களின்  சிக்கலை அரசு தீர்க்க வேண்டும்: ராமதாஸ்

எம்.ஆர்.எஃப். தொழிலாளர்களின் சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக்  கொண்டுள்ளார். 
இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
சென்னை திருவொற்றியூரில் உள்ள எம்.ஆர்.எஃப். தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களுடன் புதிய ஊதிய ஒப்பந்தத்தில் ஆலை நிர்வாகம் கையெழுத்திட வேண்டும், தொழிலாளர்களை பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எம்.ஆர்.எஃப். தொழிற்சாலை நிர்வாகத்திற்கும், தொழிற்சங்கத்திற்கும் இடையிலான ஊதிய ஒப்பந்தம்  ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகிவிட்டது. அதற்கு பதிலாக, புதிய ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டிய ஆலை நிர்வாகம், இல்லாத காரணங்களைக் கூறி தட்டிக் கழித்து வருகிறது. இதுதொடர்பாக இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுக்களின் போது, தொழிற்சாலையின் இரு முக்கியத் துறைகளின் அனைத்துப் பணிகளையும் கவனித்துக் கொள்ளும் உரிமையை வேறு ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப் போவதாகவும், அதை தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டால் தான்  புதிய ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என்றும் நிர்வாகம் கூறிவிட்டதால் அதை எதிர்த்து தொழிலாளர் நல நீதிமன்றத்தில் தொழிற்சங்கங்கள் வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கு முடிந்தால், புதிய ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டியிருக்கும் என்பதால், இந்த வழக்கை முடிவடையாமல் இழுத்தடிக்கும் பணியில் ஆலை நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. இதை எதிர்த்து குரல் கொடுக்கும் தொழிலாளர்களுக்கு ஊதியத்தைக் குறைப்பது, தற்காலிக பணி நீக்கம் செய்வது, நிரந்தர பணி நீக்கம் செய்வது உள்ளிட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை ஆலை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
தொழிலாளர்களுக்கு எதிரான ஆலை நிர்வாகத்தின் இந்த போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஆலை நிர்வாகத்தின் இந்த செயல்பாடுகளைக் கண்டித்து தொழிற்சங்க நிர்வாகிகளான வெங்கடேசன், விஜயகுமார் ஆகிய இருவரும் கடந்த 02.02.2015 முதல் தொழிற்சாலை வளாகத்துக்கு அருகில் தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இதேகோரிக்கைகளை வலியுறுத்தி  அனைத்துத் தொழிலாளர்களும் கடந்த 21.02.2015 அன்று சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அறப்போராட்டம் நடத்தினார்கள். இவர்களின் போராட்டத்திற்கு வட சென்னையில் செயல்படும் அனைத்து  தொழிற்சாலைகளிலும் பணியாற்றும் தொழிலாளர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இவ்வளவுக்குப் பிறகும் தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக அவர்களுடன் பேச்சு நடத்த ஆலை நிர்வாகம் மறுத்து வருகிறது. எம்.ஆர்.எஃப். தொழிற்சாலையில் மொத்தம் 1100 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்காக ஆண்டுக்கு ஓரிரு கோடிகள் மட்டுமே செலவாகும். ஆனால், ஆண்டுக்கு ரூ.1000 கோடிக்கும் அதிகமாக லாபம் ஈட்டி, அதில் ரூ.500 கோடியை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான விளம்பரதாரர் கட்டணமாக வழங்கியுள்ள எம்.ஆர்.எஃப். நிர்வாகம் தொழிலாளர்களுக்கு உரிமைகளை வழங்க மறுப்பது கண்டிக்கத்தக்கது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10 ஆயிரம் முதலீட்டில் பலூன் தொழிற்சாலையாக தொடங்கப்பட்ட எம்.ஆர்.எஃப். நிர்வாகம், இப்போது ஆண்டுக்கு ரூ.15,000 கோடி வருவாய் ஈட்டும் அளவுக்கு வளர்ந்திருப்பதற்குக் காரணம் அதன் தொழிலாளர்கள் தான் என்பதை மறந்து விட்டு, அவர்களை கொத்தடிமைகளைப் போல நடத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
இந்தப் பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டிய தமிழக அரசு, வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது சரியல்ல. 2008 ஆம் ஆண்டு இதேபோன்ற சிக்கல் ஏற்பட்ட போது தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் கதவடைப்புச் செய்வதாக ஆலை நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து அப்பிரச்சினையில் தலையிட்ட தமிழக அரசு, ஒரு வாரத்திற்குள் கதவடைப்பை நீக்காவிட்டால்,  ஆலையை அரசே ஏற்று நடத்தும் என எச்சரித்தது. அதன்பிறகே எம்.ஆர்.எஃப். நிர்வாகம் பணிந்தது. அதேபோல், இப்போதும் இப்பிரச்சினையில் தலையிட்டு எம்.ஆர்.எஃப். ஆலை நிர்வாகத்தையும், தொழிற்சங்கங்களையும் அழைத்துப் பேசி சிக்கலுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மு.க.ஸ்டாலினின் 63–வது பிறந்த நாள்: கருணாநிதி முத்தம் கொடுத்து ஆசி

Karunanidhi attends a meeting besides his son Stalin at party headquarters in Chennaiசென்னை: தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது 63–வது பிறந்த நாள் விழாவை இன்று கொண்டாடினார். இதையொட்டி அதிகாலை 6 மணி அளவில் அவர் தனது மனைவியுடன் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் தனது தந்தையும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார். ஸ்டாலினை கட்டித் தழுவி முத்தமிட்டு கருணாநிதி வாழ்த்தினார். பின்னர் குடும்பத்தினருடன் சேர்ந்து, மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கேக் வெட்டினார். மெரினாவில் உள்ள அண்ணா சமாதியில் மலர் வளையம் வைத்தும், வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மாலை அணிவித்தும் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். காலை 8.30 மணி அளவில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தொண்டர்களை சந்தித்தார். இதற்காக அங்கு அலங்கார மேடை அமைக்கப்பட்டிருந்தது. மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்க மைதானத்தில் ஏராளமான தொண்டர்கள் குவிந்திருந்தனர். ஸ்டாலின் வந்ததும் அவர்கள் வரிசையாக சென்று அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். சிலர் பழங்கள், சீர்வரிசை தட்டுகள், ரூபாய் நோட்டு மாலை என அணிவித்து ஸ்டாலினை வாழ்த்தினர். தனக்கு வாழ்த்து தெரிவித்த மூத்த நிர்வாகிகளை ஸ்டாலின் பக்கத்தில் அழைத்து நிறுத்தி புகைப்படம் எடுத்து கொண்டார். மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், முன்னாள் அமைச்சர் பொன்முடி, ஏ.வ.வேலு, சுரேஷ்ராஜன், ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர், ராமச்சந்திரன், கே.என்.நேரு, முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம், நிர்வாகிகள் கே.கே.நகர் தனசேகரன், முத்துவேல், மாவட்ட பிரதிநிதி கொடுங்கையூர் அன்பழகன், பல்லாவரம் நகர செயலாளர் இ.கருணாநிதி, பெருங்குடி ரவிச்சந்திரன், சேப்பாக்கம் பகுதி துணை செயலாளர் சிதம்பரம், பாண்டிபஜார் பாபாசுரேஷ், மேட்டுக்குப்பம் கமலக்கண்ணன், முத்துராமன், திருச்சி தொழில் அதிபர் ஜான்சன் குமார் உள்பட பலர் அவரை நேரில் வாழ்த்தினார்கள்.